உணர்ச்சியற்ற அரசியலும் உணர்ச்சி வியாபாரமும்

”இந்தியாவின் மனசாட்சி” என்று இரண்டு பக்கத்திற்கு மார்க்கண்டேய கட்ஜுவைப் பற்றி தகவல் தொகுப்பு “கட்டுரை” ஒன்றை எழுதிவிட்டு, மனச்சான்றே இல்லாமல் “இனி இலங்கை?” என்று மற்றுமொரு கட்டுரையை எழுதும் துணிச்சல் ஆனந்த விகடன் இதழில் பணிபுரியும் பாரதி தம்பிக்கு வாய்த்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை.

மூளைச் சலவை செய்யப்பட்ட இந்தப் “பத்திரிகையாளர்” எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்பிலேயே மனசாட்சி இல்லை.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், காங்கிரசைத் தவிர்த்த அனைத்து கட்சிகளுமே பாலச்சந்திரன் கொலைக்கு எதிராக ஓரணியில் திரண்டு நின்று, இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் நிகழ்ந்தேறியிருப்பது போர்க்குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலை என்றும், தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் பேசியது இந்தப் “பத்திரிகையாளரின்” கவனத்திற்கு வரவில்லை.

”இனி ஈழம்?” என்ற கேள்வியை அவரால் எழுப்ப முடியவில்லை. “இனி இலங்கை?” என எழுப்புகிறார். பரமார்த்த குருவின் மடத்தில் உருப்போடப்படும் ”ஒன்றுபட்ட இலங்கை” என்ற வாய்ப்பாட்டையே தீர்வாக அருளுகிறார்.

மனச்சான்றே இல்லாமல் தீர்மானகரமான கருத்துக்களை தெளித்து எழுத இவரைப் போன்ற மூளைச் சலவை செய்யப்பட்டவர்களால் தாராளமாக முடியும் என்பதற்குச் சிறந்த சான்றாக இருக்கிறது அக்கட்டுரை.

”கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்று விட்டிருக்கிறது. நாம் நிறைய பிணங்களைப் பார்த்து விட்டோம்!” என்று தொடங்குகிறது கட்டுரை.

யார் அந்த “நாம்”?!

பச்சிளம் குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், பெண்களும் ஆண்களும் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்து, எங்கு காணினும் பிணக்குவியலாய் இருக்க, உடலும் உள்ளமும் சிதைந்து உயிர் வாழ்வதற்கான அர்த்தம் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழ மக்களின் துயரங்களை யூ டியூபில் பார்த்து பழக்கப்பட்டுவிட்ட ”பத்திரிகையாளர்” பாரதி தம்பியும் அவரது சகாக்களுமே அந்த “நாம்”. அக்காட்சிகளைக் காண மனம் பொறாது, காண அச்சப்பட்டு, காண்பதைத் தவிர்த்து, மன உளைச்சலில் உழன்ற எண்ணற்றவர்கள் இந்த “நாம்” – இல் அடங்கமாட்டார்கள். அத்துயரங்களை அனுபவித்து, கடந்து, உயிரையும் உடலையும் காத்துக்கொள்ள அன்றாடம் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத்தில் வாழும் மக்கள் அந்த “நாம்” – இல் சேரமாட்டார்கள்.

ஈழ மக்களின் சொல்லான்னாத் துயரங்களை யூ ட்யூப்பில் பார்த்துப் பழக்கப்பட்டு விட்ட பாரதி தம்பி தொடர்ந்து எழுதுகிறார், “ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை…. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைமையே உலகை உலுக்கியிருக்கிறது”.

சடலங்களையும், சிதைந்த மார்பகங்களையும், பிதுங்கிய குடல்களையும், இன்னும் பலவற்றையும் யூ ட்யூப்பில் பார்த்துப் பார்த்து பழகிவிட்டதால், “அந்தப் பாலகனின் புகைப்படங்கள் கோரமானது இல்லை” என்பதால், பாரதி தம்பியின் மனசாட்சியை உலுக்கப் போதுமானதாக இல்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. உலகை உலுக்கியிருக்கும் அக்குழந்தையின் புகைப்படம் பாரதி தம்பி மற்றும் அவரது சகாக்களின் உள்ளத்தைத் தொட்டிருக்காது என்பதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லைதான்.

மேற்கத்திய நாடுகள் திடீரென்று இப்போது இலங்கை ஒரு போர்க் குற்றம் புரிந்த நாடு என்று பதறுகின்றன, தமிழர் ஆதரவு அரசியல் சக்திகள் இந்த ஆதரவை இலங்கைக்கு எதிராகத் திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா அதன் தலையில் செல்லமாகக் குட்டி வைக்க நினைக்கிறது, இலங்கையோ எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கின்றது என்று உலகத்திற்கே தெரிந்த விடயங்களை ”அக்கு வேறு ஆணி வேறாக” ”ஆராய்ச்சி” செய்து கண்டுபிடித்தது போன்ற தொனியில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் பாரதி தம்பி இறுதியாக என்ன தீர்வைத்தான் சொல்கிறார்?

பரமார்த்த குருவின் மடத்தில் ஒப்புவிக்கப்படும் வாய்ப்பாட்டைத்தான் தீர்வாகச் சொல்கிறார்: ”நமக்கான நீதியை யாரேனும் பெற்றுத் தருவார்கள் என நம்பிருக்காமல், இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்ற தீர்ப்பையே வழங்குகிறார்.

தமிழர் – இஸ்லாமிர் பகுதிகளில் 5 நபர்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கும் நிலை. சிங்கள மக்களோ இனவெறியில் திளைத்து ராஜபக்சேவுக்கு முழுமையான ஆதரவு நிலையில். நீதித்துறை தலையாட்டிகளால் நிரப்பப்பட்டுவிட்டது. பாராளுமன்றம் ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. இலங்கை அரசை விமர்சித்து விரலை அசைத்தாலும் – அது சிங்களவராக இருந்தாலும் – ”காணாமல் போகும்” பயங்கரம். மூச்சு விடவும் முக்கவும் முனகவுமே அனுமதி பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஒரு சமூகத்தில் “ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்று புத்திமதி சொல்பவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருக்க வேண்டும்!

இறுதியாக, மடத்தில் பயிற்றுவிக்கப்பட்டு, மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாட்டை நாக்கு குழறாமல் கச்சிதமாக ஒப்புவித்து கட்டுரையை முடிக்கவும் அவர் தவறவில்லை. அது என்ன?

“மனசாட்சியைத் தட்டி எழுப்பி நியாயம் பெறுவதற்கு இலங்கையையும் இந்தியாவையும் நியாயவான்கள் ஆட்சி செய்யவில்லை” என்பதே அது. அதாவது, பாலச்சந்திரன் புகைப்படத்தை வைத்து பல தரப்பினரும் உணர்ச்சி அரசியல் செய்கிறார்களாம். அது உதவாதாம்.

ஆனால், ஆனந்த விகடன் பத்திரிகை மட்டும் “ஒரு குழந்தைதானே செத்துப் போச்சு. இதற்கே இவ்வளவு பதறுகிறீர்களே! நாங்கள் எத்தனைப் பிணங்களைப் பார்த்திருக்கிறோம். பழக்கப்பட்டு இருக்கிறோம்” என்று தனது ”பத்திரிகையாளர்” எழுதும் கட்டுரையை வெளியிட்டு, ”உணர்ச்சி அரசியல் உதவாது” என்று சூசகமாக அவர் சொல்லும் புத்திமதியையும் உபதேசித்துவிட்டு, அதே மூச்சில், பாலச்சந்திரன் படத்தை அட்டையில் போட்டு, கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் “அய்யோ … தமிழா!” என்று பதறும் முழக்கத்தையும் பக்கத்தில் போட்டு உணர்ச்சி வியாபாரம் செய்யும் உரிமையை எடுத்துக் கொள்ளுமாம்!

அய்யோ! பரிதாபத்திற்குரிய தமிழகமே! இதுபோன்ற உணர்ச்சியற்ற  பத்திரிகையாளர்களிடம் இருந்தும், உணர்ச்சிகளை வைத்து வியாபாரம் செய்யும் பத்திரிகைகளிடம் இருந்தும் உன்னைக் காப்பாற்ற வழியே இல்லையா?

பின்குறிப்பாக:

தமிழ்த் தேசியம் குறித்து எழுதப்புகும்போது மட்டும் “உணர்ச்சி அரசியல்” செய்கிறார்கள் தேசியவாதிகள் என்ற ஒரு குற்றச்சாட்டை வைப்பது பரமார்த்த குருவின் வழமைகளில் ஒன்றாகிவிட்டது. உணர்ச்சி அரசியலில் மூழ்கி தர்க்கப்பூர்வமான, அறிவார்த்தமான, நடைமுறைக்கு உகந்த அரசியலை அவர்கள் செய்யத் தவறுகிறார்கள் என்பது இதன் உட்கிடை.

பின் நவீனத்துவம் குறித்து கோனார் நோட்ஸ் போடுகையில் பேசிய ”தர்க்கத்தின் வன்முறை” அவருக்கு ஏனோ நினைவுக்கு வருவதும் இல்லை. அது கிடக்கட்டும்.

இந்த “உணர்ச்சிவயப்படாது” என்பதைச் சற்றே நீட்டித்தால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இதையும் சற்றே நீட்டித்தால், உணர்ச்சிகளைத் துறந்து, மீண்டும் இதைச் சற்று நீட்டித்தால், உணர்ச்சியற்று அரசியலில் ஈடுபடுவது என்பது என்ன?

அறிவியல் பூர்வமான – தர்க்கப்பூர்வமான – நடைமுறைக்கு உகந்த அரசியல் என்பதாக அல்லாமல் அது வேறு எதுவாக இருக்க முடியும்?

இதற்கும் பிஸ்மார்க் மற்றும் நாஜிக்கள் வலியுறுத்திய Real Politik என்பதற்கும் என்ன உறவு?

இக்கேள்விகள் குறித்து நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கும்போது விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: