ஓடாத டப்பா காருக்கும் இந்தியப் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்? இதில் ம. க. இ. க வுக்கு என்ன சம்பந்தம்?
1920 களின் மத்தியில் தொடங்கிய இந்தியப் புரட்சி என்ற கற்பனையும் சரி, 1970 களின் பிற்பாதியில் இருந்து இயங்கத் தொடங்கிய ம. க. இ. க என்ற பெயரால் அறியப்படும் அமைப்பும் சரி, அந்த டப்பா காரைப் போலவே ஒரு இஞ்ச்சு கூட நகராமல், துருப்பிடித்து தூசு மண்டி, நிற்கின்றன என்பதே ஒப்புமையாம்.
முதலில், ம. க. இ. க என்ற பெயரால் அறியப்படும் அமைப்பின் சில “மர்ம முடிச்சுகளை” விடுவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பெயரால் அறியப்படும் அமைப்பு ஒரு மார்க்சிய லெனினியக் குழுவின் வெகுஜன இலக்கிய அமைப்பு மட்டுமே.
மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ) – State Organizing Committee CPI (M–L) என்பதே அந்த மார்க்சிய லெனினியக் குழுவின் பெயர். புரட்சிகர வட்டாரங்களில் SOC என்று சுருக்கமாக அழைப்பார்கள்.
1964 ஆம் ஆண்டு சிபிஐ கட்சி உடைந்து சிபிஎம் உருவானது. 1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி என்ற கிராமத்தில் (நக்சலைட்டுகள் என்ற பெயரால் மா – லெ பிரிவினர் அழைக்கப்படுவது இதனால்தான்) உருவான விவசாயிகளின் எழுச்சியைத் தொடர்ந்து சிபிஎம் கட்சி பிளவுற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1969 இல் சாரு மஜூம்தார் தலைமையில் சிபிஐ (மா-லெ) அறிவிக்கப்படுகிறது. கிராமங்களுக்குச் செல்லுங்கள், வர்க்க எதிரிகளை அழித்தொழியுங்கள் என்ற ”கொள்கையை” சாரு மஜூம்தார் பிரகடனப்படுத்துகிறார். அதாவது, நிலப்பிரபுக்களை கொல்லச் சொல்லி அறைகூவல் விடுக்கிறார். அவரது அறைகூவலை ஏற்று தஞ்சையின் ஒரு கிராமத்தில் ஒரு நிலச்சுவாந்தாரைக் கொன்று ஆயுள் தண்டனை பெற்றவரே தோழர் தியாகு.
1972 ஆம் ஆண்டு சாரு மஜூம்தார் காவல் நிலையத்தில் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே அவரது அழித்தொழிப்பு “கொள்கை” தவறானது என்பதை வலியுறுத்தும் போக்குகள் மார்க்சிய லெனினிய கட்சிக்குள் உருவாகின்றன. சாரு மஜூம்தாரின் மரணத்திற்குப் பிறகு, கட்சி பல்வேறு பிரிவுகளாக உடையத் தொடங்குகிறது. தமிழகத்திலும் மக்களை அணிதிரட்டி போராட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி உடைகிறது. அவ்வாறு உடைந்து பிரிந்து செல்லும் பிரிவினரில் ஒன்று 1976 ஆம் ஆண்டு, மாநில அமைப்புக் கமிட்டி (மா – லெ) என்ற பெயரில் தமிழ்நாடு அளவில் செயல்படத் தொடங்குகின்றனர். இவர்களுடைய சுருக்கமான வரலாறு இது.
தமிழ்நாடு அளவிலான குழு என்ற போதிலும், உடைந்து போன அகில இந்தியக் கட்சியின் ஒரு அங்கமாகவே இவர்கள் தம்மைக் கருதிக் கொண்டனர். அக்காரணம் பொருட்டே மாநில அமைப்புக் கமிட்டி என்று தம்மை அழைத்துக் கொண்டனர். தமது உடனடி இலக்குகளில் ஒன்றாக இவர்கள் அறிவித்துக் கொண்டது, உடைந்துபோன அகில இந்தியக் கட்சியின் குழுக்களை ஒன்றிணைத்து மீண்டும் அகில இந்திய மார்க்சிய லெனினியக் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். “அகில இந்தியப்” புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்பதே இன்று வரையிலும் இவர்களது கொள்கையும் ஆகும்.
ஆனால், அகில இந்தியக் கட்சியை ஒருங்கிணைப்பது தமது உடனடி வேலைகளில் ஒன்று என்று அறிவித்தவர்கள், 37 ஆண்டுகாலமாக அதற்காக என்ன முயற்சி எடுத்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். சில ஆண்டுகளுக்கு முன்பாக, பல்வேறு குழுக்களையும் இணைக்க மாவோயிஸ்டுகள் எடுத்த முயற்சியில் அடிப்படையான பேச்சுவார்த்தைகளுக்குக்கூட உடன்படாத ஒரே கட்சி என்ற பெருமை இவர்களை மட்டுமே சேரும். தமிழ்நாட்டிற்கு வெளியே செயல்பட்டு ஒரு அகில இந்தியக் கட்சியை உருவாக்க முயற்சிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. தமிழ்நாடு தவிர்த்து கேரளா, ஆந்திரா, கர்னாடகா, ஒரிசா, பீகார், மகாராஷ்ட்டிரா, உத்தரகாண்ட் என்று வேறு எங்கும் இந்தக் கம்பெனிக்கு கிளைகளும் இல்லை.
எனது அனுபவத்திலும், பிற அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து தோழர்களின் அனுபவத்திலும், சக தோழமை அமைப்புகளோடு, ஒரு பொது அரசியல் பிரச்சினையில் கூட்டாக இணைந்து செயல்பட இவர்கள் ஒருபோதும் முன்வந்ததே இல்லை. தமிழ்நாட்டில் இயங்கிய / இயங்கிக் கொண்டிருக்கும் பிற மார்க்சிய லெனினியக் குழுக்கள் மீது இவர்கள் காட்டும் காழ்ப்புணர்வுக்கு அளவே இருந்ததில்லை.
1976 ஆம் ஆண்டு, சாரு மஜூம்தாரின் அழித்தொழிப்பு “கொள்கை”யை நிராகரித்து, மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கி, மக்களைத் திரட்டி புதிய ஜனநாயகப் புரட்சியை இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்படுத்துவோம் என்று ”புரட்சிகரமாக” சூளுரைத்த இக்கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளில் ஒன்றுதான் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பெயரால் சுருக்கமாக, ம. க. இ. க என்று அறியப்படும் அமைப்பு. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய பிற “முன்னணி”கள் யாவும் இக்கட்சியின் “மக்கள் திரள் அமைப்புகள்”. 37 ஆண்டுகளாக களப்பணி ஆற்றியும் இவற்றில் எந்தவொரு முன்னணியும் மக்கள் திரளைத் திரளாக அணிதிரட்டியதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் ஒன்று (0.0001 %) சதவீதத்தினரைக் கூட இவர்களால் இதுவரையில் அணிதிரட்ட முடியவில்லை. இவர்களுடைய அத்தனை “முன்னணி”களும் பின்னணியிலேயே தேங்கிக் கிடக்கின்றன என்பதே நாட்டு நடப்பு.
இக்கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை மக்களிடம் பரப்ப நடத்தப்படும் இதழ்கள் இரண்டு. அரசியல் இதழாக “புதிய ஜனநாயகம்”, இலக்கிய இதழாக “புதிய கலாச்சாரம்”. இவை தவிர, கட்சிக்குள்ளாக, “தத்துவார்த்த கோட்பாட்டு” விவாதங்களை நடத்த “புரட்சிப் புயல்” என்று ஒரு இதழும் உண்டு. பாவப்பட்ட அப்பாவி ஜனங்களான பொதுமக்களுக்கு அந்த இதழ் வாசிக்கக் கிடைக்காது. அவ்வளவு பயங்கரமான “அண்டர் க்ரவுண்டு” பத்திரிகை. இந்த அண்டர் க்ரவுண்டு “புரட்சிப் புயல்” குறித்து சொல்ல அருவருப்பான சுவாரசிய விஷயம் ஒன்று உண்டு. அதற்குப் பிறகு வருகிறேன்.
இக்கட்சியினரின் உள்வட்டங்களில் பாவப்பட்ட அப்பாவி ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் சில பல “கலைச் சொற்கள்” சர்வ சாதாரணமாகப் புழங்கும். அவையாவன: தரகு முதலாளித்துவம், (இப்போது பன்னாட்டு தரகு முதலாளித்துவம் என்ற ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது), நீண்ட கால மக்கள் யுத்தம், அரைக் காலனியம், நவ காலனியம், அரை நிலப்பிரபுத்துவம், புதிய ஜனநாயகப் புரட்சி, பாராளுமன்றம் பன்றித் தொழுவம், தேர்தல் பாதை திருடர் பாதை. பட்டியல் நீளமானது. பாமர ஜனங்களுக்கு சொன்னால் பேயறைந்தது போல மிரண்டு விடுவார்கள் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.
இத்தகைய பயங்கரமான பரிபாஷைக் கலைச் சொற்களை ஆயுதமாகக் கொண்டு மக்களை அணிதிரட்டக் களம் இறங்கியவர்களுக்கு சில வருடங்களிலேயே எதிர்பாராத சோதனை ஒன்று வந்தது. இந்தப் பரிபாஷை கலைச் சொற்கள் தவறு என்றும், அதற்கு மாற்றாக வேறு ஒரு பரிபாஷைக் கலைச் சொற்கள்தாம் சரி என்றும் கட்சிக்குள்ளே குழப்பம். பரிபாஷைக் குழப்பத்தை ”விவாதிப்போம் விவாதிப்போம்” என்று சொல்லி வந்த கட்சித் தலைமை, குழப்பம் விளைவித்தவர்களின் விடாப்பிடியான கேள்விகளால் எரிச்சலுற்று திடீரென்று அவர்களைக் கட்சியில் இருந்து வெளியேற்றியது.
வெளியேற்றப்பட்ட குழு 1981 ஆம் ஆண்டு, “தற்காலிக அமைப்புக் குழு” – Adhoc Committee, ஒன்றை அமைத்துக் கொண்டு தனியாக கட்சி ஒன்றைக் கட்டி எழுப்ப ஆரம்பித்தனர். 1983 ஆம் வருடம் அவர்கள் தமது கட்சியின் பெயரை அறிவித்தனர். அது பின்வருமாறு: தமிழ் நாடு அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா – லெ) – Tamil Nadu Organizing Committee, CPI (M – L). த. நா. அ. க (மா – லெ) என்று புரட்சிகர வட்டாரங்களில் சுருக்கமாக அறியப்பட்ட கட்சி.
இக்கட்சியும் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றது. மக்கள் திரள் அமைப்புகளைக் கட்ட வேண்டும் என்றது. அகில இந்திய அளவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும் என்றது. அகில இந்திய அளவில் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்றது. அவ்வாறு ஒருங்கிணைக்கப்படப் போகும் அகில இந்தியக் கட்சியின் தமிழ்நாட்டுக் குழு என்று தன்னை அறிவித்துக் கொண்டது.
”கேடயம்” என்ற அரசியல் இதழும் “மனஓசை” என்ற இலக்கிய இதழும் இக்கட்சியால் வெளியிடப்பட்டன. “புரட்சிக் கனல்” இக்கட்சியின் “தத்துவார்த்த கோட்பாட்டுப்” பத்திரிகை. புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர விவசாயிகள் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர மகளிர் முன்னணி, மக்கள் உரிமைக் கழகம் (ம. உ. க) மக்கள் கலாச்சாரக் கழகம் (ம. க. க) இவை இக்கட்சியின் ”மக்கள் திரள் அமைப்புகள்”. ஒரே புரட்சிக(கா)ரம்தான். மக்கள்தான் எதிலும் திரளவில்லை.
மாநில அமைப்புக் கமிட்டியில் இருந்து மாறுபட்ட த. நா. அ. க வின் தனித்துவமான பரிபாஷைக் கலைச் சொல் பட்டியல்: சார்பு முதலாளியம், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி, பிராந்திய அளவிலான ஆயுதப் போராட்டம், பாராளுமன்றப் பங்கேற்பு, இன்னபிற. நிறைய மறந்துவிட்டது.
இவ்விடத்தில் ம. க. இ. க வினரின் கட்சியான மாநில அமைப்புக் கமிட்டி (மா – லெ) கட்சியினரோடு, அவர்களில் இருந்து பிரிந்த த. நா. அ. க வினரைப் பற்றியும் குறிப்பிடுவதற்கு காரணங்கள் உண்டு.
ஒன்று, த. நா. அ. க வில்தான் 1989 பிப்ரவரி முதல் 1991 மே வரையிலான காலப் பகுதியில் முழு நேர ஊழியனாக செயல்பட்டிருக்கிறேன். இரண்டாவது, தமது கட்சியில் இருந்து பிரிந்து போன த. நா. அ. க வினரை ம. க. இ. க வின் கட்சியான மாநில அமைப்புக் கமிட்டியினர் எப்படி நடத்தினார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி சில விடயங்களைப் புரிய வைக்க இயலும். மூன்றாவது, 1976 இல் தொடங்கப்பட்ட ”டப்பா கார்” எங்கேயும் நகராமல், இருந்த இடத்திலேயே துருப்பிடித்து கிறீச்சிட்டுக் கொண்டிருப்பதையும் இந்த ஒப்பீடு விளக்க உதவும்.
எப்படியோ! எங்கள் தெருவில் இருந்து காணாமல் போன ”டப்பா கார்”, இப்போது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு கொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது.
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்