ஆம் ஆத்மி கட்சி – பட்டணத்து பூதம்

ஆம் ஆத்மி கட்சி இந்திய அரசியலில் அனைத்துக் கட்சியினரையும் கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கும் தருணம் இது. கட்சியை ஆரம்பித்த ஒரு வருடத்தில் ஒன்றிய ஆட்சிப் பகுதியான தில்லியின் ஆட்சியைக் கைப்பற்றி காங்கிரஸ், பி. ஜே. பி உட்பட பிற அனைத்துக் கட்சியினரையும் அதிர்ச்சியில் உறையவைத்த ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் களமிறங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தில்லி ஆட்சியைக் கைப்பற்றும் முன்வரை ஆம் ஆத்மி கட்சியை ஒரு குழந்தையைப் போலவும், அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலை ஒரு விடலைச் சிறுவனை போலவும் அசட்டையாகப் புறக்கணித்து வந்த கட்சிகள் இப்போது அவரது செல்வாக்கு பெருகும் வேகத்தைக் கண்டு திசை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.

காங்கிரசின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி என்ற நிலையில், நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்ற கணிப்பில் இருந்த ஊடகங்கள் அர்விந்த் கேஜ்ரிவால் அதற்கு ஒரு சவாலாக அமைவார் என்பதைப் புரிந்து கொண்டுள்ளன. அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது தாம்தான் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்த பி. ஜே. பி யும் தற்போது அர்விந்த் கேஜ்ரிவால் பெருநகரங்களிலும் மத்தியத் தர வர்க்கத்தினரிடையிலும் தமது வாக்கு வங்கியை கணிசமாகக் கவர்ந்து விடுவார் என்று மௌனமாகவேனும் ஒப்புக் கொள்ளத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜனவரி 15 நள்ளிரவு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தில்லி சட்ட சபையின் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி, தெற்கு தில்லியில் ஆஃப்ரிக்கர்கள் கணிசமான அளவில் வாழும் குடியிருப்புப் பகுதி ஒன்றில் நள்ளிரவில், ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களோடு நடத்திய அதிரடி விசாரணை கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியினர் சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்ள முற்படுகிறார்கள் என்றும், அமைச்சர் தமது அதிகார வரம்புகளை மீறுகிறார் என்றும் அதனினும் முக்கியமாக, ஆஃப்ரிக்கப் பெண்கள் மீது இனவெறி மனோபாவத்தோடு நடந்து கொண்டார் என்றும் கடும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. குற்றச் செயல்களுக்கு போலீசார் உடந்தையாக இருக்கின்றனர் என்றும், அங்கு வசிக்கும் ஆஃப்ரிக்கர்கள் பாலியல் தொழிலிலும் போதை மருந்துக் கடத்தலிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் பலகாலமாக புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலேயே, மக்களின் குறைகளுக்கு செவிசாய்த்து அமைச்சர் நேரடியாகக் களமிறங்கினார் என்று வலியுறுத்தி வருகிறது. அதோடு நிற்காது, அமைச்சருடைய உத்தரவை நிறைவேற்றாத மூன்று போலீசாரை இடை நீக்கம் செய்யுமாறும் கோரியது.

இதன் உச்ச கட்டமாக, அம்மூன்று போலீசாரை இடை நீக்கம் செய்யக் கோரி, முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கினார். அவரது போராட்டத்தை முடக்க அவசரமாக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி தில்லி இரயில்வே பவன் அலுவலகத்தின் முன்பாக இரண்டு நாட்கள் தர்ணா போராட்டத்தை நிகழ்த்தினார். தனது சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதியின் நடவடிக்கையை நியாயப்படுத்தியும் வருகிறார்.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கியது பலத்த சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது.
ஊடகங்களும் பிற கட்சியின் தலைவர்களும் உச்சநீதிமன்றமும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் சட்டத்தை மீறுவது (தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்துவது) முறையல்ல என்ற குற்றச்சாட்டை எழுப்பினர். “அர்விந்த் கேஜ்ரிவால் சட்டம் – ஒழுங்கை மதிக்காத அராஜகவாதி” என்ற குற்றச்சாட்டும் அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் எழுந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அவரது செல்வாக்கைக் குறைக்கும் முகமாக, ஆட்சி செய்யத் தெரியாதவர் என்ற விமர்சனமும் இந்தத் தருணத்தை முன்வைத்து எழுந்தது.

அர்விந்த் கேஜ்ரிவால் “அராஜகவாதி” தானா? சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சட்டத்தை மீறியது எந்த வகையில் சரியானது? காங்கிரஸ் – பி. ஜே. பி. – இடதுசாரிகள் என சொல்லப்படும் சி. பி. ஐ மற்றும் சி. பி. எம் இவற்றிலிருந்து வித்தியாசமாக ஆம் ஆத்மி கட்சி எந்தவிதமான அரசியல் போக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது?

கடைசிக் கேள்வியில் இருந்து தொடங்குவோம்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும் அதன் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவருமான யோகேந்திர யாதவ் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு ”அரசியல் என்பது இனி இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற கொள்கைகளின் அடிப்படையில் நடக்க முடியாது” என்று பல பேட்டிகளில் வலியுறுத்திக் கூறுகிறார். காங்கிரசுக்குப் பதிலீடாக பி. ஜே. பி என்ற நிலை மாறிவிட்டது. ”நாங்கள் பதிலீடு அல்ல மாற்று” “Alternative not a Substitute” என்ற முழக்கம் பி. ஜே. பி க்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தின் முக்கியமான புள்ளியாக இருக்கிறது.

ஆம் ஆத்மி வலியுறுத்தும் மாற்று எப்படியானது?

ஆயிரம் ஆண்டுகள் – இந்திய அரசியல் சூழலில் சொல்வதென்றால் 60 ஆண்டுகள் – கண்ணாடிக் குடுவையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பூதத்தைத் திறந்து விடுவதுதான் ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும் மாற்று.

அந்தப் பூதம் அரசியலில் வெகுஜனங்களின் நேரடியான பங்கேற்பு என்ற கருத்து – வெகுமக்கள் அரசியலின் (Popuist Politics) ஒரு வடிவம்.

வெகுமக்களின் பங்கேற்பு இல்லாமல் அரசியலே இல்லை என்பது நடைமுறை. ஏதாவது ஒரு வகையில் அரசியலில் வெகுமக்கள் தமது பாத்திரத்தை ஆற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிக்கும் உரிமையின் மூலமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது என்பதைத் தீர்மானிப்பவர்களாக வெகுமக்களே இருக்கிறார்கள். அந்தப் பொருளில் பார்த்தால் அரசியல் என்பதே வெகுமக்கள் அரசியல்தான்.

ஆனால், கடந்த 60 ஆண்டுகால அரசியலை ஒரு பருந்துப் பார்வையில் மீள நோக்கினால், அரசியலில் மக்களின் பங்கேற்பு எந்த அளவிற்கு மட்டுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது பளிச்சென்று தெரியும். 1990 களின் மத்தி வரையில் பல்வேறு கட்சிகள் தமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சொல்லி மக்களின் ஆதரவைப் பெற்று அரசியல் அரங்கில் செல்வாக்கைப் பெறுவது இயல்பான நடைமுறையாக இருந்தது. கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வது வாடிக்கையாக இருந்தது. கட்சிப் பேச்சாளர்கள், தலைவர் தரும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிப்பது நடைமுறையாக இருந்தது.

1990 களின் இறுதிகளில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. முக்கிய தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் கூட “ஈயடிக்க” ஆரம்பித்தன. முக்கிய தலைவர்களை வைத்து பொதுக்கூட்டங்கள் நடத்துவதையே கட்சிகள் படிப்படியாக குறைத்துக் கொண்டன. பொதுக்கூட்டங்களின் இடத்தை தொலைக்காட்சி விவாதங்கள் பிடித்துக் கொண்டன. பொதுக்கூட்டங்களுக்கு சென்ற வெகுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசியல் தலைவர்களின் வாதங்களை கவனித்து தமது முடிவுகளை – யாருக்கு ஓட்டு போடுவது என்ற முடிவை – எடுக்க ஆரம்பித்தனர். அரசியலிலும் ஜனநாயக ஆட்சியிலும் வெகுமக்களின் பங்கேற்பு புதிய வடித்தை எடுத்தது – பார்வையாளர் ஜனநாயகம் (Audience Democracy).

ஒரு கட்சி தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் நேருக்கு நேர் மக்களைச் சந்தித்து விளக்கி ஆதரவைக் கோரும் நடைமுறை படிப்படியாக மறைந்து, தொலைக்காட்சி விவாதங்களில் தமது தரப்பு நியாயத்தை வாதாடுபவர்களாக மக்களுடனான அரசியல் கட்சிகளின் தொடர்பு புதிய வடிவத்தை எடுத்தது. குறுக்குக் கேள்விகள் கேட்டு, மடக்கிப் பிடித்து அம்பலப்படுத்தி அல்லது வெளிச்சப்படுத்தி வெகுமக்களின் கருத்துக்களின் மீது செல்வாக்கு செலுத்தும் ஊடகமாக செய்தித் தொலைக்காட்சிகள் விஸ்வரூபம் எடுத்தன. செய்தித் தொலைக்காட்சிகளின் தேர்தலுக்கு முன்பான கணிப்புகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவிற்கு இந்தச் செல்வாக்கின் கை நீண்டது. பல சந்தர்ப்பங்களில் அவர்களது கணிப்பு தவறாகிப் போனது இத்தகைய “பார்வையாளர் ஜனநாயகத்திலும்” வெகுமக்கள் தமது சுயேச்சையான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்பதை செய்தித் தொலைக்காட்சிகளுக்கு சூடு வைத்து சொன்னது.

ஒட்டுமொத்தமாக, ஜனநாயக ஆட்சி முறையில் வெகுமக்களின் பங்கேற்பு என்பது குறைந்து கொண்டேயிருப்பது – வாக்களிக்கும் உரிமையோடு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்பதே இதில் கவனத்திற்கு உரிய விடயம். இந்தப் புள்ளியில்தான் ஆம் ஆத்மி கட்சி “மாற்று” என்ற புதிய விடயத்தை முன்வைக்கிறது. மக்களின் நேரடியான அரசியல் பங்கேற்பு கூடிய ஜனநாயக அரசாங்கத்தை மோகந்தாஸ் கரம் சந்த் காந்தியின் “சுயராஜ்யம்” என்ற கற்பனையை நடைமுறைக்கு கொண்டு வருவதாக நம்பிக்கை கொடுக்கிறது.

பொதுஜனம் – சாதாரண மனிதனின் கட்சியாக தன்னை வர்ணித்துக் கொள்கிறது. ”அன்னா ஹசாரே அரசியல் ஒரு சாக்கடை, நாம் அதில் இறங்கக்கூடாது என்றார். ஆனால், நாங்கள் அந்தச் சாக்கடைக்குள் இறங்கி அதைச் சுத்தப்படுத்தத் துணிந்து விட்டோம்” என்று அறிவித்து அரசியலில் குதித்தது ஆம் ஆத்மி கட்சி. அதன் குறியீடாகவே ”விளக்குமாற்றை” தனது தேர்தல் சின்னமாக தேர்வு செய்தது.

அரசியல் ரீதியான எந்தவிதமான விவாதத்திலும் ஆம் ஆத்மி கட்சியோ அதன் தலைவர்களோ இதுவரையில் தலையை கொடுத்ததில்லை என்பதோடு இணைத்துப் பார்க்க வேண்டிய புள்ளி இது. அரசியல் என்பது சாக்கடை – ஊழல் மண்டிய சாக்கடை என்பதால் ஊழல் என்ற ஒரு புள்ளியில் மட்டுமே தனது தாக்குதலை ஆம் ஆத்மி கட்சி தொடுத்து வருகிறது.

ஊழல் என்ற ஒரு புள்ளியில் தனது தாக்குதலைக் குவிப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியால் இரண்டு விடயங்களைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்ள முடிகிறது. ஒன்று, காங்கிரஸ் – பி. ஜே. பி பிற மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஊழல் கறை படிந்தவையே என்ற உண்மையின் மூலமாக,  அன்றாடம் மருத்துவமனைகளிலும், போலீசாரிடமும் அரசாங்க அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுத்து அவதிப்படும் அடித்தட்டு மக்கள் மற்றும் மத்தியத் தர வர்க்கத்தினர் ஆகிய பெரும் மக்கள் கூட்டத்தின் செல்வாக்கைப் அள்ளிக் கொள்கிறது. இரண்டு, காங்கிரஸ் – பி. ஜே. பி. பிற அனைத்து மாநிலக் கட்சிகளையும் அக்கட்சியினரின் கொள்கை கோட்பாடுகளை விமர்சித்து அதற்கு மாற்றாக தமது அரசியல் கொள்கை என்ன கோட்பாடு என்ன என்ற விளக்கத்தைத் தருவதைத் தவிர்த்து அல்லது தள்ளிப் போட்டுக் கொண்டு அவர்களை வீழ்த்தும் உத்தியைக் கையாள்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தின் ஆணி வேரான பிரச்சினைகளான சாதி – இட ஒதுக்கீடு, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை, சிறுபான்மை சமூகத்தினர் – குறிப்பாக முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவது, தேசிய இன ஒடுக்குமுறைகள் – காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களின் இறையாண்மை, வெளியுறவுக் கொள்கை, அணுமின்சாரத் தயாரிப்பு (கூடங்குளம் போராட்டத்திற்கு மட்டும் ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு விதிவிலக்கு; மற்ற அணுமின்சாரத் தயாரிப்புத் திட்டங்கள் குறித்து அக்கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. யோகேந்திர யாதவ் வேட்பாளராக நிற்கப் போகும் ஹரியானா மாநிலத்தில் சமீபமாக புதியதொரு அணுமின் உற்பத்தி நிலையம் நிறுவப்படப் போவதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அது குறித்த அவரது நிலைப்பாடோ கட்சியின் கருத்தோ இதுவரையில் சொல்லப்படவில்லை), குடிநீர் மாசுபடுதல் – தட்டுப்பாடு, நாடு முழுக்க நடைபெறும் மணற்கொள்ளை போன்ற பிரச்சினைகளில் அக்கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. இது குறித்த எந்தவிதமான விவாதங்களில் ஈடுபடுவதையும் ஆம் ஆத்மி கட்சி கவனமாக தவிர்த்து வருகிறது. குறைந்தபட்சம், பி. ஜே. பி ஒரு மதவாதக் கட்சி என்று வெளிப்படையாக விமர்சித்து விவாத்ததில் இறங்குவதைக்கூட தவிர்த்து வருகிறது.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே பதிலாக ஆம் ஆத்மி கட்சி வைத்திருப்பது ”ஊழலை ஒழிப்போம்” என்ற ஒரு கோஷத்தை மட்டும்தான். நிர்வாகத்தை சீர்படுத்தினால் – அரசு எந்திரத்தை ஒழுங்குபடுத்தினால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற ஒரே பதில்தான் அக்கட்சியிடம் இருந்து கிடைக்கிறது. வேறு வகையில் சொல்வதென்றால் அரசியலின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து தவிர்த்து வருகிறது. அந்த வகையில் – அரசியலில் முக்கியமான பிரச்சினைகளைப் பேசுவதைத் தவிர்க்கும் வகையில் – அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அரசியலை – மிக ஆபத்தான ஒரு அரசியலை ஆம் ஆத்மி கட்சி முன்னிலைப்படுத்துகிறது. அதை “ஊழல்”  – ”அரசு எந்திரத்தின் செயலின்மை” என்ற இரு புள்ளிகளில் கவனம் குவிப்பதன் மூலமாக சாதிக்கிறது.

ஆனால், ஊழலை ஒழிப்பதோ, அரசு எந்திரத்தை ஒழுங்குபடுத்துவதோ அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதையும் அக்கட்சியின் தலைவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். அரசு எந்திரத்தின் பல்வேறு அங்கங்கள் – அதிகார வர்க்கம், சட்டம் மற்றும் நீதித்துறை, சட்ட சபை – நாடாளுமன்றம், நான்காவது தூணான ஊடகம் – ஒழுங்காக, நேர்மையாக செயல்பட முடியாத அளவிற்கு ஊழலால் கறை படிந்திருக்கின்றன என்ற யதார்த்தத்தை அக்கட்சி வெகுமக்களிடம் வெளிப்படையாக சொல்கிறது.

இந்த வகையில், மற்ற அனைத்து கட்சியினரிடம் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி தன்னை மாறுபட்ட ஒரு கட்சியாக – புதியதொரு ”மாற்றை” முன்வைக்கும் கட்சியாக அறிவித்துக் கொள்கிறது.

முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சட்டத்தை மீறியது எந்த வகையில் சரியானது என்ற இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

ஒழுங்காகச் செயல்படும் திறனை இழந்துவிட்ட இந்த நிறுவன அமைப்புகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, ஒழுங்காக செயல்பட வைப்பது என்ற கேள்விக்குப் பதிலாகவே வெகுமக்களின் நேரடியான பங்களிப்பு கூடிய நேரடியான ஜனநாயகம் (direct democracy) என்ற கருத்தை முன்வைக்கிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும் நேரடி ஜனநாயக வெகுமக்களின் நேரடி பங்களிப்பு கூடியதாக இருக்கவில்லை என்பதையே ஆட்சிக்கு வந்த 25 நாட்களில் அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து தில்லியின் ராம் லீலா மைதானத்தில் மத்தியத் தர வர்க்கத்தினரைப் பெரும் திரளாகக் கூட வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தை நிகழ்த்திய அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது குழுவினரால், கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து, இரு வாரங்களுக்குள்ளாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இரண்டு நாட்கள்கூட தாக்குப்பிடித்து நிற்கமுடியவில்லை. இத்தனைக்கும் மூன்று போலீசாரை இடைநீக்கம் செய்யக் கோரி அவர் நடத்திய தர்ணாவில் பெருமளவில் கலந்து கொண்டவர்கள், போலீசாரின் கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்படும் அடித்தட்டு உழைக்கும் மக்கள் பிரிவினர் – நடுத்தர வர்க்கத்தினர் அல்லர்.

தர்ணாவை அறிவித்த போது பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவித்தார் அர்விந்த் கேஜ்ரிவால். பின்னர். தில்லி மக்களே தர்ணாவில் கலந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக – தில்லி நடுத்தர மக்களுக்குப் பதிலாக அடிப்படை உழைக்கும் மக்களே தர்ணாவில் திரண்டனர். தர்ணா திரைகளுக்குப் பின்னான பேரங்களூடாகக் கைவிடப்பட்டது. வெகுமக்களின் அடிப்படைப் பிரிவினரான உழைக்கும் மக்களைப் போல தர்ணாவின் இரண்டு நாட்களிலும் நடுத்தெருவில் படுத்து உறங்கிய அர்விந்த் கேஜ்ரிவாலால் அம்மக்களுடைய போலீசாருக்கு எதிரான கோபங்களை இறுதிவரை கொண்டு செல்ல முடியவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் அரசாங்க அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான மனநிலையை மட்டும் அர்விந்த் கேஜ்ரிவாலால் பின் தொடர முடிகிறது என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மேலும், ஆம் ஆத்மி கட்சி, இதுவரையில் கிராமப்புற மக்களின் எந்த ஒரு பிரச்சினையையும் முன்னெடுக்கவில்லை. நகர்ப்புற மத்தியத்தர வர்க்கக்  கட்சியாகவே அது இருக்கிறது என்பதை அரசியல் நோக்கர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியியால் முன்வைக்கப்படும் ”நேரடி ஜனநாயகம்” என்ற கருத்தின் ”குட்டை” இந்த தர்ணா போராட்டம் என்ற முட்டை உடைத்துக் காட்டியிருக்கிறது. அடித்தட்டு மக்கள் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கும்போது பின்வாங்கிய அர்விந்த் கேஜ்ரிவால் “நேரடி ஜனநாயகம்” என்று சொல்வது அம்மக்களின் நேரடிப் பங்களிப்பை அல்ல. அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளான அவரது கட்சியினர் மற்றும் சாதாரண மனிதருள் ஒருவரான, அவர்களின் பிரதிநிதியான அவரும் அவரது கட்சியினரும் மட்டுமே இறுகிப் போன அரசாங்க நிறுவனங்களின் செயலின்மைக்கு எதிராக நேரடியாகத் தலையிட முடியும். சாதாரணன் நேரடியாகத் தலையிட முடியாது.

சாதாரணனின் பிரதிநிதியான ஆம் ஆத்மி கட்சி, சாதாரணின் பெயரால் சட்டத்தின் செயலின்மைக்கு எதிராக செயல்படும். சாதாரணனின் பிற்போக்கான கருத்துக்களையும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு அரசு எந்திரத்தின் பல்வேறு அங்கங்களிலும் தலையிடும். இதுதான் ஆம் ஆத்மி கட்சியின் புதியதொரு வெகுஜன அரசியலின் தன்மை.

இந்தத் தன்மைதான், தெற்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதிக்கு, சாதாரண மக்களின் கோரிக்கைகளின் பேரில் ஆஃப்ரிக்கப் பெண்கள் அனைவரும் பாலியல் தொழிலாளர்கள், ஆஃப்ரிக்கர்கள் அனைவரும் போதை மருந்து கடத்துபவர்கள், என்ற சாதாரணனின் கருத்தை சிரம் மேற்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் துணிச்சலைக் கொடுத்தது. சாதாரண மக்களிடம் படிந்து கிடக்கும் இனவெறியை கேள்வி கேட்காமல் அதை அப்படியே எடுத்துக் கொண்டு, அதற்கு முட்டுக் கட்டை போடும் போலீசாருக்கு எதிராக, சட்ட வரம்புகளுக்கு எதிராக, அடிப்படை ஜனநாயக நெறிகளுக்கு எதிராக வெகுமக்களின் பிரதிநிதி என்ற பெயரால் புதியதொரு வெகுமக்கள் அரசியலைச் செய்ய வழிகோலிட்டது.

இது பரந்துபட்ட ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது. சர்வாதிகார மனப்பான்மையை நோக்கி நகர்வதற்கே வழிவகுக்கும்.

அர்விந்த் கேஜ்ரிவால் “அராஜகவாதி”யா?

அராஜகவாதம் என்பது அனைத்துவிதமான அதிகாரத்திற்கு எதிரான ஒரு அரசியல் போக்கு. அரசு என்பதையே ஏற்றுக் கொள்ளாத ஒரு அரசியல் சிந்தனைப் போக்கு. அதற்கும் அர்விந்த் கோஜ்ரிவாலுக்குமான தொடர்பு என்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்றதுதான்.

அவரது அரசியல் ஜனநாயக அரசு எந்திரத்தின் பல்வேறு “தூண்களும்” செயலற்று அல்லது வெகுமக்களுக்கு செவிசாய்க்காமல் கரடு தட்டிப் போய்விட்டதால், வெகுமக்களுக்கு அந்நிறுவனங்களின் மீது ஏற்பட்டுள்ள வன்மத்தை மடைமாற்றும் அரசியல்.

ஜனநாயக மாண்புகளின் அடிப்படைப் பண்புகளையே வேரறுக்கும் புதியதொரு வலது சாரி அரசியல். அரசியல் கருத்துக்களையும் விவாதங்களையும் மறுக்கும் ”அரசியலற்ற அரசியல்”. ஆகையால்தான், ஆம் ஆத்மி கட்சி நாட்டை உலுக்கும் முக்கியமான அரசியல் பிரச்சினைகள் குறித்து எந்தவிதமான விவாதத்தில் இறங்குவதைக் கவனமாகத் தவிர்க்கிறது.

ஜனநாயக அரசியலமைப்பு வெகுமக்களின் பங்கேற்பையும் அவர்களது அடிப்படை கோரிக்கைகளையும் பல தசாப்தங்களாக நிறைவேற்றத் தவறும்போது, அந்த நிறுவனங்களின் மீதான அவர்களது கோபத்தைக் “கண்ணாடிக் குடுவைக்குள் அடைபட்டிருந்த பூதத்தை” திறந்து விட்டு, குளிர் காயும் அரசியலே ஆம் ஆத்மி கட்சியின் வலதுசாரி வெகுஜன அரசியல். தில்லியைத் தனது பெருமூச்சால் திணற அடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பெரும் பூதத்தின் கோரமான முகமே ஆம் ஆத்மி கட்சி.

————————————-

குறிப்பு: ”அந்தி மழை” பிப்ரவரி இதழுக்காக எழுதியது. இதழில் சற்றே எடிட் செய்யப்பட்டு வெளியாகியிருப்பதாக அறிகிறேன்.

இதை எழுதுகையில், ஆம் ஆத்மி கட்சியினரின் சார்பில் இடஒதுக்கீடு தொடர்பான நிலைப்பாடு தெளிவு செய்யப்படாமல் இருந்தது. ஆனால், பிப்ரவரி துவக்கத்தில், அக்கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவரான யோகேந்திர யாதவ், தமது கட்சி இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி அல்ல என்றும் அது தொடர்பான தமது அணுமுறை விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அவர் இவ்வாறு அறிவித்த ஒரு வாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் கல்வி அமைச்சர், தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பிரிவினருக்கு பள்ளிச் சேர்க்கைகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தினார். “பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை” என்ற கருத்தாக்கம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வாதமாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படும் கருத்து என்பதோடு இணைத்துப் பார்க்க வேண்டியது இது.

மேலும், தில்லி தேர்தலுக்கு முன்பான பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், இட ஒதுக்கீட்டால் ஒரு முறை பயன் பெற்ற ஒரு குடும்பத்தினருக்கு மறுபடியும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட மாட்டாது என்று வாக்களித்தார். இதுவும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழமையாக வைக்கப்படும் வாதங்களில் ஒன்றே.

காஷ்மீர் விடயத்திலும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் காஷ்மீரில் பிரிந்து போவதற்கான உரிமை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேட்டியளித்த போது, அது கட்சியின் கொள்கை அல்ல என்று அறிவித்தார் அர்விந்த் கேஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் பலவும் ஆதிக்க சாதிகளின் மேலாண்மையைத் தக்கவைப்பவையாகவும், இந்தியா என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்துவதாகவும் இருக்கும் என்பதற்கு இவை சில சான்றுகள்.

இத்தகைய வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்சி, தமிழகத்தில் காலுன்ற இடம் கொடுப்பது ஆபத்தானது என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

Advertisements

2 பதில்கள் to “ஆம் ஆத்மி கட்சி – பட்டணத்து பூதம்”

  1. saranvellimala Says:

    Reblogged this on கன்னியாரி and commented:
    ஆம் ஆத்மி கட்சி – பட்டணத்து பூதம் ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: