பெங்களூர் குணாவின் வழித்தோன்றல்கள்

1990 களின் மத்தியில் பெங்களூர் குணா எழுதிய சிறு நூல் ஒன்று தமிழகத்தின் அரசியல் வட்டாரங்களில் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. நூலின் பெயர் “திராவிடத்தால் வீழ்ந்தோம்”.

பெரியாரின் சாதி ஒழிப்புத் தமிழ் தேசியம் என்ற வழிப்பட்டு இயங்கிக் கொண்டிருந்த பெரியாரின் கடைசித் துளியான “பெரியார் திராவிட இயக்கத்தின்” விடுதலை இராசேந்திரன் உட்படப் பலரும் அந்நூலைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அவ்விமர்சனங்களுக்குப் பதில் ஏதும் சொல்ல இயலாமல் பெங்களூர் குணா அமைதியானார்.

அதற்கு முன்வரை சிறு சிறு வெளியீடுகளைத் (அவற்றில் தொடர்ந்து விஷம் தோய்ந்த கருத்துக்களைப் பரப்பி வந்தார்) தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர் அதற்குப் பிறகு எழுதுவதும் குறைந்து போனது. அவரது சிறு நூல்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

பெங்களூர் குணாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” நூலை தொடக்கத்தில் வரவேற்ற மூத்தத் தமிழ் அறிஞர்கள் பலரும் பின்னர் படிப்படியாக பெங்களூர் குணாவின் கருத்துக்கள் தவறானவை என்பதை ஒப்புக்கொள்ளத் தலைப்பட்டனர்.

ஆனால், ஒரு சிறு இயக்கம் மட்டும் (தென்னிந்தியாவிலேயே வலுவான பொருளாதார வளம் பெற்ற நிறுவனமாக அது அப்போது இருந்தது) அவரது கருத்துக்களைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்தது. அவ்வியக்கம் அய்க்கஃப் AICUF (All India Catholic Youth Federation) என்று அறியப்பட்ட கிறித்தவத் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

அச்சமயம், அவ்வியக்கத்தினரோடு கடுமையான விவாதங்கள் நடந்திருக்கின்றன. அவ்வியக்கத்தில் இருந்த சில நட்புகளோடு கிட்டத் தட்ட முறித்துக்கொள்ளும் அளவிற்கு விவாதித்திருக்கிறேன் (நல்ல காலமாக அந்நட்புகள் இன்றும் தொடர்கின்றன).

அந்தக் கிறித்தவத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் பெங்களூர் குணாவின் கருத்துக்களை தமிழகமெங்கும் சலிக்காமல் பரப்பிக் கொண்டிருந்தது. ஆனால், பெருத்த விளைவு ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில தீவிர ஆதரவாளர்களைத் தவிர வேறு எவரும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக, “நாம் தமிழர்” கட்சி வெளியிட்ட கட்சி அறிக்கை முழுக்க முழுக்க பெங்களூர் குணாவின் கருத்துக்களைத் தாங்கிய ஆவணமாக வெளிவந்தது (நோம் சாம்ஸ்கி பற்றி ஆவணத்தில் இருக்கும் குறிப்பு பெங்களூர் குணாவின் நேரடியான காப்பி என்பது வெளிச்சம்). திராவிடம் எதிரி, தெலுங்கர்கள் ஆக்கிரமிப்பு – ஆதிக்கம் போன்ற பெங்களூர் குணாவின் அனைத்து விஷம் தொய்ந்த கருத்துக்களையும் அப்படியே நகல் செய்திருந்தது (ஆவணத்தை எழுதியது யார் என்று இதுவரையிலும் எவருக்கும் வெளிச்சமாக்கப்படவில்லை. எனது ஊகம், அய்க்கஃப் இயக்கத்தின் தொடர்ந்த பிரச்சாரத்தினால் சலவை செய்யப்பட்ட ஒரு கரடுதட்டிப்போன “அறிஞர்”ஆக இருக்கலாம் என்பதே).

போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசனின் மறைவிற்குப் பிறகு தமிழ் தேச அரசியல் பாரம்பரியத்தில் ஒரு பெருத்த இடைவெளி நிலவியது. த. தே. பொ. க. பின்னர் த. நா. மா. லெ. க போன்றவை தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்திருந்தாலும் வலுவான இயக்கங்களாகவோ, தோழர் தமிழரசனைப் போன்று உத்வேகமூட்டக்கூடிய தலைமையாகவோ இல்லாதிருந்ததால் விளைந்திருந்த இடைவெளி அது.

அந்த இடைவெளியில்தான் பெங்களூர் குணாவின் ஆபத்தான விஷம் தோய்ந்த தமிழர் நலனுக்கு எதிரான இனவெறிப்பாதையிலான ”தமிழ் தேசியம்” முளைவிட்டது. கடுமையான விமர்சனங்களால் அவரது கருத்துக்கள் பின்வாங்கினாலும், அதன் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்தது அய்க்கஃப் என்ற கிறித்தவத் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

ஒரு கிறித்துவத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு பெங்களூர் குணாவின் விஷம் தோய்ந்த அரசியலில் அவ்வளவு என்ன அக்கறை?

தமிழ் நாட்டில் எப்போதும் நீரு பூத்த நெருப்பாய் இருக்கும் தமிழ் தேசிய உணர்வலைகள் ஆரோக்கியமான திசைகளில் சென்றுவிடாமல் இனவெறிப்பாதையில் திரும்புவது ஏகாதிபத்தியங்களால் வழிநடத்தப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு வெல்லக்கட்டிதானே. அதைத் தான் அவர்கள் சலிக்காமல் செய்தார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் எழுந்த தமிழ் தேசிய உணர்வலைகள் ஆரோக்கியமான திசைகளில் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட மறக்கப்பட்டிருந்த பெங்களூர் குணாவின் கருத்துக்கள் திடீரென்று சூன்யத்தில் இருந்து முளைத்தது போன்று தலையெடுத்தன – ”நாம் தமிழர்” கட்சியின் ஆவணத்தின் வழியாகவும் அவர்களது இனவெறிப்பார்வைகளின் ஊடாகவும்.

அரசியல் கருத்துப் பரப்பில் அனாதையாகக் கைவிடப்பட்டிருந்த பெங்களூர் குணாவை “நாம் தமிழர்” கட்சி தத்தெடுத்துக் கொண்டது. தேசிய உணர்விற்கும் இனவெறிக்கும் இடையிலான நூலிழையிலான வித்தியாசம் குழப்பியடிக்கப்பட்டது. இனப்படுகொலையைக் கண்ணுற்று உணர்ச்சிப்பெருக்கோடு அரசியல் களத்திற்கு வந்த இளைஞர்களுக்கு தி.மு.க செய்த துரோகத்தின் மீதிருந்த கோபங்கள் “திராவிடம்” என்ற கருத்தியலின் மீது திசைதிருப்பட்டன.

பெரியார் மீதும் சேறு வாறியிரைக்கப்பட்டது. ஆனால், பெரியார் எனும் நெருப்பைத் தொட்டால் பொசுங்கிவிடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டுத் தந்திரமாக பெரியார் எதிர்ப்பு கைவிடப்பட்டது.

பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட திராவிடக் கருத்தியலின் அடிநாதமாக தமிழர் விடுதலை அரசியலாகவே இருந்தது. அவரது பார்ப்பன எதிர்ப்பின் அடிநாதமாக இருந்தது சாதி ஒழிப்பு மட்டுமன்று தமிழர் விடுதலை அரசியலும்தான். அரியணைக் கனவில் பெரியாரிடமிருந்து பிரிந்து சென்ற தி. மு. க படிப்படியாகத் தந்திரமாக பார்ப்பன எதிர்ப்பையும் தமிழர் விடுதலை அரசியலையும் கைவிட்டனர் என்பது வரலாறு. அ. தி. மு. க வை தி. மு. க வின் வாரிசாகக்கூட கருத இயலாது.

இந்த நுட்பங்கள் எவையும் உத்வேகம் கொண்ட இளைஞர்களுக்கு கற்பிக்கப்பட்டு வழிநடத்தப்படவில்லை. இந்த வரலாற்றையோ, அரசியல் பின்புலத்தையோ அறியாத தற்காலத்து இளைஞர்களுக்கு தி. மு. க வின் மீது இருக்கும் முற்றிலும் நியாயமான கடும் கோபங்களை ஒட்டுமொத்தமாக “திராவிடம்” என்ற கருத்தியலின் மீதாகவே திருப்பிவிட்ட தொண்டு நிறுவனத்தின் “திருப்பணியை” பெங்களூர் குணாவைத் தத்தெடுத்து செய்திருக்கிறது “நாம் தமிழர்” கட்சி.

அவ்வகையில், தமிழ் நாட்டில் எப்போதும் அடியாழத்தில் கனன்றுகொண்டிருக்கும் தமிழர் விடுதலை அரசியலை – பெரியார், தோழர். தமிழரசன் வழிப்பட்ட அரசியலை அழிக்கும் ஒரு அழிவுச் சக்தியாகவும் எழுந்திருக்கிறது.

இவ்வியக்கம், வைக்கும் மற்றுமொரு மோசமான “தெலுங்கர் ஆதிக்கம்” என்ற கருத்தியல் எவ்வாறு தவறானது என்பது வரலாற்று ஆதாரங்களோடு விரிவாக விளக்கப்பட வேண்டியது. முயற்சிக்கிறேன்.

Advertisements

2 பதில்கள் to “பெங்களூர் குணாவின் வழித்தோன்றல்கள்”

 1. ந.துரை முருகன் Says:

  தமிழ் தேசியம் எனறால் வட நாட்டான் குடியேற்றம், தொழில்&அரசியல் ஆதிக்கத்தைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டுமா?

  தெலுங்கு, மலையாள & கன்னட குடியேற்றம் பற்ற பேசினால் இந்த பெரியாரின் வாரிசுகள் பதறுவது ஏன்? அப்படிபேசுகிறவனஇனவாதஎன முத்திரை குத்துவது ஏன்?

  • Valarmathi Says:

   முதலாவதாக, எழுதப்பட்டிருப்பது தொடர்பான கேள்வியை கேட்கவேண்டும். கேள்வி கேட்க முதலில் தெரியவேண்டும்.

   இரண்டாவதாக, தமிழ் தேசியம் என்றால் வட நாட்டான் எதிர்ப்பு என்று நானும் வரையறுக்கவில்லை, பெரியாரும் வரையறுக்கவில்லை. அடியேன் எந்த “இஸ்ட்டும்” இல்லை.

   மூன்றாவதாக, தேசியத்திற்கும் இனவாதத்திற்கும் பாரிய வித்தியாசங்கள் உண்டு. தேசியம் தன்னை உள்முகமாக வரையறை செய்வது. நிலப்பரப்பு, வரலாறு, பண்பாடு, அரசியல் தொன்மங்கள் ஆகியவற்றில் வரையறுத்த எல்லைகள் கொண்டது. இதற்கு மாறாக, இனவாதம் சர்வதேச அளவில் விரிவது. தேசத்தை இனமாக வரையறுத்து அகில உலக உரிமை கொண்டாடுவது.

   அரசியல் கோட்பாடுகளையும் வரையறைகளையும் தேடி வாசித்து புரிந்துகொள்வது அரசியல் களச் செயல்பாட்டாளர்களுக்கு அடிப்படை நிபந்தனை. அதில் சுணக்கம் கொண்டால், மூட நம்பிக்கைகளிலும் வெறித்தனமான கருத்துக்களிலும் தலையை முட்டிக்கொள்ளவேண்டியதுதான்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: