வெகுமக்கள் அரசியல் – அடிப்படைப் புரிதல்களை நோக்கி (1)

தமிழகத்திலும் இந்தியத் துணைக்கண்ட அளவிலும் இடதுசாரிகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக – அவர்களது தத்துவார்த்த கோட்பாட்டு அரசியல் தவறுகளுக்கு அப்பாற்பட்டு – ஒரு புள்ளியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்,  அது வெகுமக்கள் அரசியலில் இருந்து  அந்நியப்பட்டு சிறு குழுக்கள் என்ற அளவில் தேங்கிவிட்டிருப்பது என்பது வெளிப்படை. இந்திய தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகளுக்கும், தமிழ் தேசிய விடுதலையை வரித்துக் கொண்டுள்ள பொதுவுடைமையாளர்களுக்கும், வலதுசாரி தமிழ் தேசியக் கருத்தியலுக்கு எதிராக பெரியாரிய – அம்பேத்கரிய மற்றும் பொதுவுடைமைச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு, இடதுசாரி நோக்கில் எழும் தமிழ் தேசியக் குரல்களுக்கும் இது பொருந்தும்.

வெகுமக்கள் அரசியல் எனும்போது, சாதிய, வர்க்கப் பிளவுகளுக்கு அப்பாற்பட்டு, அல்லது அவற்றை ஊடறுத்து, பெருந்திரள் ஊடகங்களின் (Mass media) கடும் தாக்கத்தின் விளைவாக உருவாக்கப்படும் அரசியல் அடையாளங்கள், அவை இயங்கும் அரசியல் வெளி என்று வரையறுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இந்திய தேசிய அடையாளம், அனைத்து தேசிய இன அடையாளங்கள், சாதிய – வர்க்க அடையாளங்கள், வேறுபாடுகள், மத மாறுபாடுகள் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டதாக பெருந்திரள் ஊடகங்களால் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு, இந்த அடையாளங்கள் அனைத்தும் அதற்குள் கரைந்து இயங்கக்கூடிய அரசியல் வெளி கட்டமைக்கப்படுவதைக் குறிப்பிடலாம்.

இத்தகைய வெகுமக்கள் அரசியலின் இயங்கு வெளி, பெரும்பாலும் நாடாளுமன்ற சனநாயக வடிவிற்கு உட்பட்ட தேர்தல் முடிவுகளால் தீர்மானிக்கப்படும் வெளியாக  வரையறுக்கப்பட்டிருப்பதும் வெளிப்படை. அதிதீவிரக் கம்யூனிஸ்டுகளாகத் தம்மைக் கருதிக் கொள்வோர் நாடாளுமன்றச் சனநாயக அரசியலை முற்றாகப் புறக்கணித்து வர்க்க அணித்திரட்சியையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், வெகுமக்கள் அரசியலில் இருந்து தாமாகவே விலகி நிற்கின்றனர். இதனால், வெகுமக்கள் அரசியல் வெளியில் இவர்களது தாக்கம் சிறிதளவும் இல்லாதது புரிந்து கொள்ளக்கூடியதே.

ஆனால், வெகுமக்கள் அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவ்வணித்திரட்டலை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கத் துணியும் பிற இடதுசாரித் தமிழ் தேசிய இயக்கத்தினர் பலருக்கும் அம்முயற்சி கைகூடாமல் இருப்பதே நடப்பு நிலை என்பதுவும் கண்கூடு. நாடாளுமன்ற சனநாயக நடைமுறைகளின் மீதான அவநம்பிக்கை என்பதற்கு அப்பாற்பட்டு, அதன் இயங்கு வெளியான வெகுமக்கள் அரசியலின் இயங்கு விதிகளைக் குறித்த அடிப்படைப் புரிதலின்மையே இதற்குக் காரணம் என்பது என் துணிபு. அப்புரிதலை நோக்கி நகர்த்துவதே இக்கட்டுரையின் இலக்கு.

அந்நோக்கில், வெகுமக்கள் அரசியல் என்பதைச் சற்று தெளிவாக – அதன் அடிப்படைக் கூறுகளை வரையறுத்துக் கொள்வதில் இருந்து தொடங்குவது நலம்.

வெகுமக்கள் அரசியல் எனப்படுவது முதலாவதாக, சாதிய, வர்க்க, பிற குறிப்பான மக்கள் பிரிவினர், அவர்களுடைய தனித்துவமான பிரச்சினைகள், கோரிக்கைகள் ஆகியவற்றுக்கு மேலாக அல்லது ஊடறுத்து எழும் அரசியல். இதன் பொருள் அக்குறிப்பான பிரிவினரின் குறிப்பான பிரச்சினைகளை முற்றிலுமாகவோ அல்லது பகுதியளவோ மறுத்து எழுவதே வெகுமக்கள் அரசியல் என்பதன்று. மாறாக, அவர்தம் குறிப்பான பிரச்சினைகளுக்கு உரிய கவனம் உண்டு என்பதை வலியுறுத்தி, அவற்றுக்கான தீர்வாக அவற்றுக்கு வெளியே இயங்கும் ஒரு புள்ளியை முன்னிறுத்துவது. அப்புள்ளி, ஒரு அரசுக் கொள்கையாக முன்னிறுத்தப்படலாம் (வளர்ச்சி, முன்னேற்ற பாதை), ஒரு அரசியல் அடையாளமாக முன்னிறுத்தப்படலாம் (சாதி ஒழிப்பு தமிழ் தேசியம்) அல்லது காந்தக் கவர்ச்சி மிக்க ஒரு தலைமையாக முன்னிறுத்தப்படலாம்/எழலாம்  (எடுத்துக்காட்டுகளுக்குக் குறைவில்லை). அப்புள்ளியின் பாற்பட்டு, சாதிய – வர்க்க, இன்னபிற குறிப்பான பிரிவினரின் தனித்துவமான பிரச்சினைகள், கோரிக்கைகள் அனைத்தும் ஒருங்கு குவியும் வெளியாக உருவாவதே வெகுமக்கள் அரசியல்.

அத்தகையத் திரட்சி, பெருந்திரள் ஊடகங்களின்றி சாத்தியமில்லை. அவ்வகையில், வெகுமக்கள் அரசியல் வெளி உருவாவதற்கான முன்நிபந்தனையாக பெருந்திரள் ஊடகங்கள் திகழ்கின்றன.

பெருந்திரள் ஊடகங்கள், நிலவும் ஆதிக்கக் கருத்தியலின் தூண்கள் என்பது வெளிப்படையென்றாலும், அவை, சாதி – வர்க்க, இன்னபிற பாகுபாடின்றி அனைத்துப் பிரிவினரையும் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய தன்மையவை. அத்தன்மையினாலேயே, அப்பாகுபாடுகளைக் கடந்த வெகுமக்கள் பண்பாட்டையும் அதன் இரசனைக்குரிய வெகுமக்கள் திரளையும், கவர்ச்சிகரமான தலைவர்களையும் அவர்களுக்கான மக்கள் திரளையும், வெகுமக்கள் அரசியல் இயங்குவெளியையும் உருவாக்குவதில் தீர்மானகரமான பங்காற்றுபவை.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுந்த முதல் பெருந்திரள் ஊடகம் வானொலி, தொடர்ந்தது திரைப்படம், இறுதியாக தொலைக்காட்சி என்பதையும் மனங்கொள்ளலாம்.

மூன்றாவதாக, வெகுமக்கள் அரசியல் “நாம் X அவர்கள்” என்ற எதிர்மையால் கட்டப்படுவது. சாதிய – வர்க்க, இன்ன பிற அடையாளங்களை மீறி அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான ஒரு எதிர்த் தரப்பை அடையாளம் காட்டுவது. இத்தகைய எதிர்மையைக் கட்டமைத்தாலன்றி வெகுமக்கள் அரசியல் வெளி சாத்தியமில்லை. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நீதிக் கட்சியால் கட்டமைக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் அரசியல் வெகுமக்கள் அரசியலாக இருக்கவில்லை. அந்நூற்றாண்டின் இடைப்பகுதியில், பெரியாரின் இடைவிடாத முயற்சியால், “திராவிடர் X ஆரியர்” என்ற எதிர்மை கட்டமைக்கப்பட்டது. அவ்வெதிர்மையை பெருந்திரள் ஊடகமான திரைப்படத்தின் ஊடாகத் திறம்பட கைக்கொண்டதன் வழியாகவே தி. மு. க தனக்கான வெகுமக்கள் அரசியல் திரட்சியை உருவாக்கிக் கொண்டது. கட்டமைக்கப்படும் எதிர்மையின் தன்மையைப் பொறுத்து எழுச்சி பெறும் வெகுமக்கள் அரசியல் இடதுசாரித்தன்மையதாகவோ, வலதுசாரித்தன்மையதாகவோ அமையும் என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது.

இறுதியாக, வெகுமக்கள் அரசியல் எப்போதும் கவர்ச்சி மிக்க ஒரு தலைமையின் கீழ் திரட்சி கொள்வது. திரட்சி கொள்ளும் மக்கள், அத்தலைமையின் பிரகடனங்கள், வாக்குறுதிகள், வீச்சுரைகளில் தமது வேட்கைகள், விருப்பங்கள், கோரிக்கைகள் ஆகியவை எதிரொலிப்பதாக அடையாளம் காணத்தக்கதாக அத்தலைமையின் கவர்ச்சி இருத்தல். மற்றுமொரு வகையில் கூறுவதென்றால், அத்தலைமை வெகுமக்களால் தம்மைப் போன்ற ஒருவராகத், தம்மில் இருந்து எழுந்தவராக அடையாளம் காணப்படுதல். வெகுமக்கள் அரசியல், எப்போதும், மக்களின் அதிகாரம், மக்களின் இறையாண்மையை மீட்டல், எளிய மக்களின் எழுச்சி, எளிய மக்களின் தலைவர் என்ற முழக்கங்களினடியாக எழுவது இதன்பற்பட்டேயாம்.

இந்நான்கு கூறுகளும் கீழிருந்து படிப்படியாகக் கட்டமைக்கப்படும் வெகுமக்கள் அரசியலின் அடிப்படைகள். அவ்வாறு உருவான அரசியல், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் கைக்கொள்ளும் நடைமுறைகள் பெரும்பாலும் கவர்ச்சிகரமானத் திட்டங்கள், இலவசங்கள், சலுகைகள் என்ற வடிவங்களை கையெடுப்பது வழமை. அது மேலிருந்து அரங்கேற்றப்படும் வெகுமக்கள் அரசியல் எனப் பெயர் பெறும்.

இவ்விளக்கத்தினடியாகச் சமீபகாலத் தமிழக வரலாற்றில் எழுந்த வெகுமக்கள் அரசியல் திரட்சிகளை ஒரு பருந்துப் பார்வையிலும், 2009 ஈழத் தமிழர் இனப்படுகொலையைத் தொடர்ந்து தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் வெகுமக்கள் அரசியலின் தன்மையையும் காண்போம்.

குறிப்பு: இவ்விளக்கம், கீழ்க்கண்ட இரு நூல்களில் இருந்து பெற்றது:

1. Ernesto Laclau, On Populist Reason, Verso, 2005.

2. Francisco Panizza (Ed.), Populism and the Mirror of Democracy, Verso, 2005.

(தொடரும் … )

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: