அதிகாரமும் வன்முறையும் கருத்தியல் மேலாண்மையும் மாற்றமும் – 1

ஃபூல்ஸும் ரோக்ஸும் பார்ப்பன சூழ்ச்சியைத் தகர்த்த கதை

1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் “தமிழன்பர் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அக்காலத்தில் “த இந்து” வின் தமிழ் பதிப்பாக வெளிவந்துகொண்டிருந்த சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியர் சி. ஆர். சீனிவாசன், 1920 களில் சென்னை மாகாண அட்வகேட் ஜெனரலாகப் பதவி வகித்தவரும், 1949 ஆம் ஆண்டு, ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் மீதான தடை நீக்கப்படுவதற்கு உதவியாக, அவ்வியக்கத்திற்கான அரசியல் சட்ட வரைவை எழுதித் தந்தவரும், கோல்வால்கரின் நெருங்கிய நண்பராக இருந்தவருமான டி. கே. வெங்கட்ராம சாஸ்திரி, கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவர் இம்மாநாட்டின் சூத்திரதாரிகள்.

அன்றைய சென்னை மாகாணக் கல்வித் துறை அமைச்சராக இருந்த திவான் பகதூர் எஸ். குமாரசாமி, மாநாட்டிற்குத் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கல்கியின் நெருங்கிய நண்பரான கம்பராமாயண ரசனாவாத விமர்சனப் புகழ் டி. கே. சிதம்பரநாத முதலியார், திரு. வி. கல்யாணசுந்தரனார், எஸ். வையாபுரிப் பிள்ளை, மாகாமகோபாத்யாய வே. சாமிநாதையர் போன்றச் சில “பெரிய தலைகளின்” பெயர்களும் அடிபட்டன. “அய்ந்து காத ஆழந்தோண்டித் தமிழைப் புதைப்பேன்” எனச் சூளுரைத்த “கனவான்” ஒருவர் (யாரென்று தெரியவில்லை) திடீர் தமிழன்பராகி மநாட்டில் கலந்து கொண்டது பற்றிய குறிப்பொன்றும் கிடைக்கின்றது.

அதிகார பலம் (கல்வி அமைச்சர்), பண பலம் – ஊடக பலம் (சுதேசமித்திரன் – த இந்து சீனிவாசன், கல்கி கிருஷ்ணமூர்த்தி), இலக்கியம் – மேடைப் பேச்சுக்கு டி. கே. சி – திரு. வி. க., கல்விப் புலத்தில் இருந்து வையாபுரிப் பிள்ளையும் உ. வே. சாவும், எல்லாவற்றுக்கும் மேலாகச் சநாதனத்தின் தூணாக விளங்கிய வெங்கட்ராம சாஸ்திரி ஆகியோரை உள்ளடக்கிய, பெரும் செல்வாக்கும் ஆதிக்கமும் பொருந்தியவர்கள், தமிழர் நலனுக்கு எதிராக அரங்கேற்றவிருந்தத் தந்திரத்தை அன்றைய சுயமரியாதை இயக்க இளைஞர்கள் முறியடித்த கதை இன்று சில மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

19.11.1933 தேதியிட்ட குடி அரசு தலையங்கத்தில் (பெரியார் எழுத்தும் பேச்சும், குடி அரசு 1933 – 2, தொகுதி 17, பக்: 233 – 8) மாநாடு குறித்த தகவல் காணக் கிடைக்கின்றது. இவ்விதழுக்கு முந்தைய வாரத்திற்கு முந்தைய இதழில் அ. இராகவன் என்பார் “தமிழ் அன்பர் மகாநாடு மற்றுமொரு பார்ப்பன சூட்சியே” என்ற தலைப்பில் எழுதியிருந்த நீண்ட கட்டுரையையும் இத்தலையங்கம் குறிப்பிடுகின்றது. மாநாட்டு அறிக்கையின் முதல் வாக்கியம் என கீழ்க்கண்ட மேற்கோளையும் தருகின்றது:

“தென் இந்திய மொழிகளிலே உள்ள இலக்கியங்கள் வளம் பெறுவதற்கும் பொது ஜனங்களிடையே கல்வி அறிவு பரவுவதற்கும் உயரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக “புத்தக ஆசிரியர்கள், பிரசுரகர்த்தாக்கள், புத்தக வியாபாரிகள், உபாத்தியாயர்கள், புத்தகாலய அதிகாரிகள், முதலியோர்களை சேர்த்து மகாநாடு ஒன்றைக் கூட்டுவிக்க வேண்டுமென்று புத்தகாலய பிரசுர சங்கம் உத்தேசித்திருக்கிறது.”

மாநாட்டைக் கூட்டியோர் யார், கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் யார் என்பவற்றை தோழர் இராகவன் கட்டுரையிலேயே எடுத்துக் காட்டப்பட்டிருப்பதாகவும், ஆகையால், அம்மாநாட்டின் உண்மையான நோக்கம், “புஸ்தகம் எழுதுவது, பிரசுரிப்பது, விற்பது, ஆகிய காரியங்கள் எப்படியாவது பார்ப்பனர்கள் கையிலும் அவர்களது ஆதிக்கத்திலும் சிக்கும்படியாகவும் அவர்களே நிர்வாகஸ்தார்களாகவும் இருக்கத்தக்க மாதிரிக்கு ஒரு தீர்மானம் செய்து பார்ப்பன வாழ்க்கைக்கு ஒரு பெரும் மான்யமாக செய்யப்படப் போகிறது” என்பதாகவும் சுட்டுகிறது.

அடுத்து, 10.12.1933 தேதியிட்ட துணைத் தலையங்கம் (மேற்குறித்த தொகுதி, பக்: 269 – 70), அம்மாநாட்டைப் புறக்கணிக்குமாறு இரண்டொரு சுயமரியாதை மாநாடுகளிலும், பல சுயமரியாதைச் சங்கங்களிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, என்றபோதிலும், “அம்மாநாட்டுக்குச்சென்று அங்கு நமது தீர்மானங்களை செய்ய முயற்சித்துப் பார்ப்பதால் அம்மகாநாட்டை நாம் பகிஷ்கரித்தது சரி என்று மக்களுக்கு எடுத்துக் காட்ட செய்த காரியமாயிருக்கலாம்” என்று  செய்யப்பட வேண்டிய நடவடிக்கையை கோடிட்டுக் காட்டுகின்றது.

மாநாடு குறித்த மேலதிகத் தகவல்கள் முற்றிலும் எதிர்பாராதச் சிறு நூலொன்றில் கிடைக்கின்றன. அந்நூல், குருவிக்கரம்பை சு. வேலு மற்றும் கழஞ்சூர் சொ. செல்வராஜி ஆகியோர் தொகுத்து, குத்தூசி குருசாமி பதிப்பகம் வெளியிட்டுள்ள “தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – உண்மை வரலாறு” (முதற் பதிப்பு, நவம்பர் 1989. திருவல்லிக்கேணி பேருந்து நிலையத்திற்கு அருகில் குணத்தொகையன் என்பார் நடத்தி வந்த பஃறுளிப் பதிப்பகம் என்ற சிறிய புத்தகக் கடையில் 1993 ஆம் ஆண்டு வாங்கியது).

நூலின் நோக்கம், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு குத்தூசி குருசாமி அவர்களின் பங்கை வலியுறுத்துவது. மேற்குறித்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பாகக் கலந்துகொண்டு குத்தூசி குருசாமி முன்மொழிந்த தீர்மானங்களில் ஒன்றாக எழுத்துச் சீர்திருத்தமும் இருந்த காரணத்தால் மாநாடு குறித்து எழுதப்பட்டச் சில கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. குடி அரசு இதழில் ம. சிங்காரவேலனார், கைவல்யம், குத்தூசி குருசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகளும், மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான “சுயமரியாதைச் சுடர்” எஸ். வி. லிங்கம் என்பார் 15 ஆண்டுகள் கழித்து 12.09.1949 தேதியிட்டத் திராவிட நாடு  இதழில் மாநாட்டுச் சம்பவங்களை விவரித்து எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் இருந்து நிகழ்ந்தச் சம்பவங்களை காண்போம்.

மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிய விரும்புவோர், அவற்றை முன்னதாகவே அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ஆலோசனைக்குரிய தீர்மானங்கள் அச்சிடப்பட்டு முன்னதாகவே வெளியிடப்படும் என்றும் மாநாட்டு வரவேற்புக் கமிட்டியால் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநாடு குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் அதன் நோக்கங்களை விமர்சித்தும், பின்னர் அதில் கலந்துகொண்டு பார்ப்பன சூழ்ச்சியை அம்பலப்படுத்துமாறும் குடி அரசு இதழில் மேலே குறித்த தலையங்கமும் துணைத் தலையங்கமும் வெளியாயின (இரண்டும் குத்தூசி குருசாமியால் எழுதப்பட்டவை என்று மேற்குறித்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது).

இதைத் தொடர்ந்து, குத்தூசி குருசாமி சென்னை சென்று கட்சியில் (சுயமரியாதை இயக்கம்) “பொதுவான அபிப்பிராய பேதம், சொந்தக் கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த”  அனைவரையும்  ஒன்று திரட்டுகிறார். சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்த நாத்திக மாநாடு ஒன்றிற்காக வசூல் செய்யப்பட்டிருந்த பணம் “தமிழன்பர் மாநாடு” எதிர்ப்பு வேலைகளுக்குத் திருப்பிவிடப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள நுழைவுச் சீட்டு வாங்கமுடியாதவர்களுக்கு வாங்கித் தரும் பொறுப்பை பூவாளூர் பொன்னம்பலம் ஏற்றுக் கொள்கிறார். வரவேற்புக் குழுவினருக்கு அனுப்ப வேண்டிய தீர்மானங்களைத் தயாரித்துப் பதிவுத் தபாலில் அனுப்பிப் பற்றுச்சீட்டை வாங்கி வைத்துக்கொள்ளும் பொறுப்பை குருசாமி ஏற்றுக்கொள்கிறார். அதன்படி, கே. எம். பாலசுப்பிரமணியம், ஆர். நடேசன், எஸ். குருசாமி, அ. பொன்னம்பலனார், அ. இராகவன் ஆகியோர் கையொப்பமிட்டு “தமிழன்பர் மாநாட்டு” நிர்வாக சபைத் தலைவர் “தோழர்” கே. வி. கிருஷ்ணசாமி ஐயருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஏழு தீர்மானங்கள் கொண்ட கடிதம் 10, டிசம்பர் 1933 தேதியிட்ட குடி அரசு இதழில் வெளியாகி இருக்கிறது.

இவை அனைத்தும் “தமிழரசு” மாசிலாமணியார் வீட்டில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன என்றும் இவற்றை கேள்விப்பட்ட “மைலாப்பூர்கள்” கோபப்பட்டன என்றும் நினைவு கூர்கிறார் எஸ். வி. லிங்கம்.

மாநாட்டில், குத்தூசி குருசாமி, எஸ். ராமநாதன், சு. பொன்னம்பலம், ஜோலார்பேட்டை பார்த்தசாரதி, கே. வி. அழகிரிசாமி, கே. எம். பாலசுப்பிரமணியம், ப. ஜீவானந்தம், குஞ்சிதம் குருசாமி, ஆர். நடேசன், என். தண்டபாணி, தாவுத்ஷா, மாசிலாமணியார், எஸ். வி. லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்தோரில் “மூன்று பங்கு அவர்களும், ஒருபங்கு நாங்களுமாக இருந்தோம். சுயமரியாதைக்காரர்கள் முட்டை வீசப்  போகிறார்கள் கலகம் செய்யப் போகிறார்கள் என்று அவர்கள் போலீசுக்குத் தெரிவித்திருந்தார்கள்” என்றும் எஸ். வி. லிங்கம் குறிப்பிடுகிறார்.

“ஒரு போலீஸ் கமிஷனர், 2 சப் இன்ஸ்பெக்டர், ஒரு சார்ஜெண்டு, 12 கான்ஸ்டேபிள்கள் அடங்கிய ஒரு போலீஸ் கட்சேரியாக” மாநாடு நடைபெற்றதாக 31.12.1933 தேதியிட்ட குடி அரசுத் தலையங்கம் (ஈ. வெ. கி. சம்பத் எழுதியது. மேற்குறித்த தொகுதி, பக்: 300 – 3) குறிப்பிடுகின்றது.

மாநாடு ஆரம்பிக்கும் முன்னரே, “வரவேற்புப் பிரதிநிதிகள் மட்டும்” என்று எழுதி ஒட்டப்பட்டு மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும், மாநாட்டுத் தலைவர், திறப்பாளர் ஆகிய இருவருக்கும் போடப்பட்டிருந்த சோபாக்களிலும் சுயமரியாதை இயக்க சார்பான “வரவேற்புப் பிரதிநிதிகள்” டி. வி. சுப்பிரமணியம், ஜோலார்பேட்டை பார்த்தசாரதி, நடேசன், ஜீவானந்தம், என். தண்டபாணி ஆகியோர் அமர்ந்துவிட்டனர்.

மாநாட்டுக் குழுவினர் “எதிர்பார்த்திருந்தபடி கலகம் இல்லாததாலும் உட்கார இடமில்லாது போனதைப் பெரிதுபடுத்தி வம்பு வளர்க்க விரும்பாததாலும், உட்கார்ந்து இருப்பவர்களும் அதற்குப் பயந்த ஆள்களாக இல்லாததாலும் மாநாட்டு ஆரம்ப விழா தொடங்கியது.” (எஸ். வி. லிங்கம்)

இராசா அண்ணாமலைச் செட்டியார் திறப்பு விழாவை செய்து முடித்ததும் வெங்கட்ராம சாஸ்திரியார் மாநாட்டுத் தலைவராக மந்திரி குமாரசாமி பெயரை முன்மொழிய சீனிவாச சாஸ்திரியும் சத்தியமூர்த்தியும் வழிமொழிந்தார்கள். உடனே மேடையில் அமர்ந்திருந்த டி. வி. சுப்பிரமணியம் எழுந்து மாநாட்டுத் தலைவர் பெயரை தாம் ஆட்சேபிப்பதாகவும், மாநாட்டுப் பிரதிநிதிகள் விரும்பும் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொல்ல ஜோலார்பேட்டை பார்த்தசாரதி அதை வழிமொழிந்தார்.

இதற்கு சீனிவாச சாஸ்திரியார், மாநாட்டுத் தலைவர் தேர்வை எதிர்ப்பது சரியில்லை என்றும், இது போன்று எங்கும் நடந்ததில்லை என்றும், இப்படிச் செய்வது பார்லிமெண்டரி முறைக்கு முரணானதென்றும் பேச, அதை மறுத்து சுப்பிரமணியம், மாநாட்டின் பிரதிநிதிகள் தலைவரை ஒப்புக்கொள்ளாமல் புதுத்தலைவரை தில்லி, பம்பாய், கல்கத்தா போன்ற இடங்களில் கூடிய இன்னின்ன மாநாடுகள் மாற்றியிருப்பதையும், தலைவர் மீது பிரதிநிதிகளுக்குச் சந்தேகம் எழுந்தால் புதுத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், வேண்டுமானால் பொது வாக்கெடுப்பிற்கு விட்டுப் பார்க்கலாம் என்றும் பேச,  அதற்குப் பயந்து சுயமரியாதைக்காரர்களைத் தனியாக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில், சுயமரியாதை இயக்க வரவேற்புப் பிரதிநிதிகள், தாம் அனுப்பிய தீர்மானங்கள் அச்சிட்ட புத்தகத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்பதையும், தீர்மானங்களை அனுப்பியதற்குப் பற்றுச்சீட்டு இருப்பதையும் குறிப்பிட்டு, தமிழன்பர் என்ற பெயரால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு உடந்தையாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். குற்றம் மாநாட்டைக் கூட்டியவர் தரப்பினுடையது என்று சாஸ்திரியாரும் ஒப்புக்கொள்ள நேரிட்டது.

இறுதியில், அமைக்கப்பட இருக்கும் விஷயாலோசனைக் கமிட்டியில் சுயமரியாதைக் கட்சியினர் சரிபாதியினராக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அக்கமிட்டியில் பேசப்பட இருக்கும் தீர்மானங்கள் மாநாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற இரு நிபந்தனைகளை அழகிரிசாமி முன்வைக்க அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மாநாடு மீண்டும் தொடங்கியது.

சோபாக்களில் இடம் பிடித்திருந்த சுயமரியாதை இயக்க தோழர்கள் உட்காரத் திட்டமிருந்தவர்களுக்கு இடம் கொடுத்து, அமைச்சர் குமாரசாமியையே மாநாட்டுத் தலைவராக முன்மொழிய சோபா முகங்களில் மகிழ்ச்சி குடியேறியது.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. பாட நூல்களில் “கடவுள் வாழ்த்து” கூடாது என்று சுயமரியாதை இயக்கத்தினர் மொழிந்த தீர்மானம் ஒன்றை அமைச்சர் குமாரசாமி, தலைவர் என்ற முறையில் தள்ளிவைத்து நிறைவேற்றப்படாமல் தடுத்தார். என்றாலும் இருதரப்பாரும் விவாதித்து ஏற்றுக்கொண்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டு அரங்கினுள் போலீசாரின் பிரவேசத்தை ஆட்சேபித்து டி. வி. சுப்பிரமணியம் பேச, போலீசார் வேளியேற்றப்பட்டனர். ஆனாலும், இரண்டாம் நாள், மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகளை வாசலில் நிறுத்தி வெற்றுத் தாளில் விபரங்கள் பதியப்பட்டன.

மாநாட்டைக் கூட்டியவர்கள் அமைக்க உத்தேசித்திருந்த சங்கம் குறித்த விஷயத்தை சுயமரியாதை இயக்கத்தவருக்குப் பயந்து விவாதத்திற்கு கொண்டு வராமலே விட்டுவிட்டனர். மாநாட்டில் பேசிய பழுத்த சநாதனியான வெங்கட்ராம சாஸ்திரி, “நீங்கள் யாவரும் ‘பூல்ஸ்’ ‘ரோக்ஸ்’ என்றே எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. இந்த இரண்டு நாள் நடவடிக்கைகளில் உங்கள் ஒவ்வொருவரின் பேச்சையும் விவாத முறையையும் நான் கவனித்தேன். ‘பூல்ஸ்’ம் ‘ரோக்ஸ்’ம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருந்தால் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க முடியாது,” என்று ஒப்புக்கொண்டார்.

மாநாட்டின் இறுதியில் பேசிய கல்கி, சுயமரியாதை இயக்கக்காரர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்று கேட்டு வெள்ளைக்காரர்களின் தாசர்கள் என்று பழித்தார். அவர் பேசி முடித்ததும் அனைவரும் கலைந்து சென்றுவிடுவதற்கு முன்பாக, குத்தூசி குருசாமி, எஸ். வி. லிங்கத்தைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி ஒலி பெருக்கி முன்பாக நிறுத்த, பயந்துகொண்டே பேச ஆரம்பித்த எஸ். வி. லிங்கம், “சர்க்கார்தாசனான இராமசாமி இன்று பத்து மணிக்குச் சட்டத்தில் எல்லாம் பெரிய சட்டமான 124 – ஈ யின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குப் போயிருக்கிறார்,” என்று பேசி கல்கியின் வாதத்தை அங்கேயே, அப்போதே தகர்த்தார்.

மாநாடு இவ்வாறாக நிகழ்ந்தேறியிருக்க, ஆனந்த விகடன் இதழ் அக்காலத்திலேயே அவற்றை மறைத்து எழுதியதைக் குறிப்பிட்டு அதன் போலிப் போக்கை “தமிழரசு” இதழ் (21.1.34) பதிவு செய்திருப்பது கவனத்திற்குரிய மற்றொரு விடயம்.

வன்முறைச் சம்பவம் ஏதும் நிகழாமல் மாநாடு நிறைவுபெற்றது. ஆனால், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக திருச்சியில் நடந்த மற்றொரு “தமிழர் மகாநாடு” வன்முறைச் சம்பவத்தோடு அரங்கேறியிருந்தது.

அது இன்னொரு கதை.

(தொடரும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: