செய்யும் தொழிலே நோயாக

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நெருக்கமாகப் பழகிய இலக்கிய நண்பரொருவர் அவர் எதிர்கொண்டிருந்த பிரச்சினையைப் பகிர்ந்தது நினைவில் தங்கியிருக்கிறது. பழகும் நண்பர்கள் ஒவ்வொருவரையும் பல நேரங்களில் தனது அடுத்த நாவலின் கதாபாத்திரங்களாகக் கற்பனை செய்து பார்ப்பது குற்றவுணர்ச்சியைத் தருவதாக இருக்கிறது என்பதுதான் அவர் எதிர்கொண்டிருந்த பிரச்சினை. இதை அவர் சொன்னபோது எனக்கு எழுந்த முதல் சங்கடம், என்னையும் அவரது நாவல் ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக எங்காவது சொருகிவிடுவாரோ என்பதுதான்

யதார்த்தவாத நாவல் எழுதுவோர் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகளில் இது ஒன்று. சற்றே செறிவு கூடியதும் தாம் பழகிய பல நண்பர்கள், நபர்களின் பல குணாதிசயங்களை, குணாதிசயங்களில் சில கூறுகளைக் கலந்து, ஒரு நபரை மட்டும் அடையாளம் காட்டாத வகையில் கதாபாத்திரத்தை உருவாக்கும் செய்நேர்த்தியில் (craft) தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். ஆனால், அதையும் மீறி வாசகர்கள், ஒரு கதாபாத்திரம் தம்மை ஒத்திருப்பதாகவே கற்பிதம் செய்து கொள்வார்கள். அது யதார்த்தவாத இலக்கியத்தின் தலைவிதி.

யதார்த்தவாத இலக்கியத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவது இங்கு நோக்கமல்ல. ஒரு துறைக்குள் அல்லது தொழிலுக்குள் மூழ்கியிருப்பவர்கள் தம்மைச் சுற்றியிருக்கும் உலகை அத்தொழில் சார்ந்தே எந்நேரமும் அணுகும் ஒருவித நோய்க்கூறு (occupational servility) பற்றியே இங்கு பேச விழைவது.

ஒவ்வொரு தொழிலிலும் தொழில் சார்ந்த தொல்லைகள் (occupational hazard) உண்டு. தொழில் சார்ந்த நோய்கள் (occupational disease) உண்டு. பேராசிரியர்களாக இருப்பவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியோடு, அலுவலக கோப்புகளைத் துரத்திக் கொண்டிருப்பது ஒரு தொழில்சார் தொல்லை. பேருந்து ஓட்டுனர்களுக்கு பயணிகள் படிக்கட்டில் தொங்குவது தொழில்சார் தொல்லை. நடத்துனருக்கு நெரிசல் தொழில்சார் தொல்லை. ஆலைத் தொழிலாளிக்கு இயந்திரங்களின் பேரொலி தொழில்சார் தொல்லை.

தொழில்சார் தொல்லைகள் போக, தொழில்சார் நோய்கள் ஒரு தொகை உண்டு. பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நுரையீரல் நோய்கள் – முக்கியமாக ஆஸ்துமா. பேருந்து ஓட்டுனர்களுக்கு இதய நோய்கள். செவிலியர்களுக்கு நோய் தொற்று. ஐடி பணியாளர்களுக்கு எலும்புத் தேய்வு.

தொழில்சார் தொல்லைகளும், தொழில்சார் நோய்களும் குறித்த தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களின் வாழ்வை மட்டும்தான் பாழாக்குபவை. ஆனால், தொழில்சார் நோக்கை முற்ற முழுதான வாழ்க்கை பார்வையாக வரித்துக் கொள்ளும் நோய்கூறு, தொழில்சார் நோக்கிற்கு அடிமையாதல் (occupational servility) அடிமையானவரின் உலக நோக்கை குறுகியதாக்குவதோடு, ஆரோக்கியமான சமூக – அரசியல் – பண்பாட்டு நோக்குகள் உருவாவதற்கும் இடர்பாடாக அமைபவை.

இத்தகைய நோய்க்கூறு யாருக்கும் தெரியாத புதுப் பிரச்சினையுமல்ல. கோடம்பாக்கத்து திரைப்படங்கள் பலவற்றில் எள்ளி நகையாடப்பட்டிருக்கும் பிரச்சினைதான். சக மனிதர்களை மருத்துவர்கள் நோயாளிகளாக பார்ப்பது, வழக்குரைஞர்கள் கேஸ் கட்டில் ஒரு கோப்பாக பார்ப்பது, இன்ஷூரன்ஸ் ஏஜண்டுகள் பாலிசிதாரர்களாக பார்ப்பது, பல்பொருள் அங்காடி மேலாளர்கள் கஸ்டமர்களாக பார்ப்பது, என். ஜி. ஓ நடத்துபவர்கள் பிரச்சினைகளை பிராஜக்டுகளாக பார்ப்பது என்று ஒவ்வொரு தொழிலிலும் தமது தொழில் நோக்கிற்கு அடிமையானவர்கள் தம்மையும் அறியாமல் வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு நோய்க்கூறுதான்.

எனது பேராசிரிய நண்பர் ஒருவர் தனது துறையில் பழம் நூல்கள் சேகரிப்பு மையம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். பழம் நூல்களை சேகரிப்பதற்காக மிகுந்த சிரத்தை மேற்கொண்டிருக்கிறார். அவரது தொழில்முறை சார்ந்த அக்கறையை நான் மிகவும் வியப்பதுண்டு. பிறரிடம் சொல்லி பாராட்டுவதுண்டு. பிரச்சினை என்னவென்றால், அவர் பேசும் பழகும் நபர்களிடத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் பழைய நூல்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார். பொதுவில் பேராசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியத் தொழிலில் இருக்கும் நண்பர்களுக்கும் இருக்கும் நோய்க்கூறு உபதேசம் செய்தலாக இருப்பதை அவதானிக்க முடியும்.

கோடம்பாக்கத்து நண்பர்களைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சினிமாதான் மூச்சு. தெரு முக்கு தேநீர் கடையில் பொழுது போக பேசிக் கொண்டிருக்கையிலும்கூட, அங்கு நடக்கும் சிறு சம்பவங்களை தாம் வருங்காலத்தில் இயக்க இருக்கும் திரைப்படத்தின் “சீன்”களாக பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இலக்கியவாதிகள் பழகிக் கொண்டிருக்கும் நபர்களை கதாபத்திரங்களாக உருமாற்றிக் கொண்டிருப்பார்கள். இசைக் கலைஞர்கள் இந்தப் பிரபஞ்சமே இசையால் ஆனது என்று லயித்திருப்பார்கள்.

24 X 7 தொழில்முறைச் சிந்தையினால் விளையும் குறுகிய நோக்கு இது. இதில் விசேடமான இன்னொரு துறையினர் பத்திரிகையாளர்கள். அதிலும் குறிப்பாக எலக்ட்ரானிக் மீடியாவை சேர்ந்தவர்கள். சமூகத்தில் பற்றியெரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் இவர்களுக்கு செய்தியாக மட்டுமே தெரியும். குறித்த பிரச்சினைகளை எப்படி செய்தியாக வடித்துக் கொடுப்பது என்பதே இவர்களது நாடித் துடிப்பு.

பொதுமக்களின் ஒவ்வொரு பிரச்சினையும் ஊடகங்களுக்குத் தீனி மட்டுமே. அந்த தீனிக்குப் பெயர் செய்தி. தீனியை சேகரிப்பவர் செய்தியாளர் / பத்திரிகையாளர் / நிருபர் இன்னபிறர். செய்தியைத் தாமும் விழுங்கி மக்களின் வாயிலும் திணிப்பதே இவர்களது தொழில். பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த அலசல், பகுப்பாய்வு, தீர்வுகளை நோக்கியச் சுட்டல்கள் என்பனவற்றில் தமக்கு தொடர்பும் இல்லை பொறுப்பும் இல்லை என்பது இவர்களது அடிப்படை தொழில் தர்மம். ஆகையினாலேயே, ஒரு நாள் செய்தி, பொழுது விடிந்தால் பழைய செய்தி. அடுத்தென்ன புதிய செய்தி என்று கணப்பொழுதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

இதில், நேர்மையான பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உண்மையான செய்திகளை, மறைக்கப்பட்ட செய்திகளைத் தருவதன் மூலம் தமது தொழிலுக்கு நேர்மையாக இருப்பதாக நினைத்துக் கொள்வது அவர்களது சுயதிருப்திக்கும் சுய ஏமாற்றுக்கும் மேலாக எதையும் செய்துவிடப் போவதில்லை. சமூக நிகழ்வுகளை செய்திகளாக பார்க்கும் நோக்கில் – தமது தொழில் நோக்கில் மூழ்கியிருக்கும்வரை பத்திரிகையாளர்கள் சமூக ஒட்டுண்ணிகள் (social parasites) என்று கருதத்தக்கவர்களே.

இதன் பொருள், பத்திரிகையாளர்கள் அரசியல் செயல்பாட்டாளர்களாக மாறவேண்டும் என்பதல்ல. மாறாக, செய்திகளை அலசுபவர்களாக, அவற்றின் அரசியல் கோணங்களை வெளிப்படுத்துபவர்களாக, வாசகர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்பவர்களாக, அவர்களது பார்வைகளுக்கு செவிமடுப்பவர்களாக, அவற்றுக்கு இடமளிப்பவர்களாக மாறவேண்டும் என்பதுதான். வாசகர் கடிதம் என்பதில் இருந்து வாசகர் வட்டம் என்ற அடிவைப்பு ஒரு முன்னோக்கிய நகர்வாக இருக்கலாம்.

பத்திரிகை முதலாளி ஒப்புக்கொள்ள மாட்டாரே என்ற பிலாக்கணத்திற்கு பதில் என்ன சொல்வது? பத்திரிகைத் தொழிலை உயர்வானதாக காட்டிக் கொள்ளாதீர்கள். பொதுமக்களைக் காட்டிலும் மேலானவர்களாக பாவனை செய்யாதீர்கள். டிராஃபிக் கான்ஸ்டபிளிடம் மாட்டிக் கொள்ளும்போது அடையாள அட்டையை எடுத்துக் காட்டாதீர்கள். மற்ற சாதாரண குடிமக்களை போலவே தண்டத் தொகையைக் கட்டித் தொலையுங்கள்.

அவரவர் சோற்றுக்குப் படும்பாடு போல நாங்களும் பாடுகிறோம் என்று பாடிச் செல்லுங்கள். யாருக்கும் பாதகமில்லை.

 

Advertisements
சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: