இக்கட்டுரையை வெளியிட்ட மின்னம்பலம் இதழுக்கு நன்றி. மின்னம்பலம் இதழில் வெளியானபோது தலைப்பில் உள்ள “அபூர்வ” என்பதை மட்டும் நீக்கியிருந்தார்கள். முதல் பகுதி மட்டும் பத்திரிகையாளர், நண்பர் ராதிகா சுதாகருடன் கலந்து ஆலோசித்து எழுதப்பட்டது. பிற பகுதிகளில் குற்றம் குறைகள் ஏதும் இருப்பின் அவற்றுக்கு நான் மட்டுமே பொறுப்பு. தட்டச்சுப் பிழைகளை நீக்கியும், சில கருதுகோள்களின் மூல ஆசிரியர்கள் மற்றும் நூல்கள் குறித்த விவரங்களையும் இணைத்திருப்பதற்கு மேலாக வேறு திருத்தங்கள் ஏதும் செய்யாமல் இங்கு பதிவேற்றுகிறேன்.
https://minnambalam.com/k/1470441637
ஓட்டுனரின் நேர்காணல்: https://soundcloud.com/valar-mathi-1/driver-interview
கட்டையான சற்றே குள்ளமான உடல்வாகு. சிரித்தக் களையான முகம். நல்ல கருப்பு. பணிவு தொனிக்கும் உடல் மொழி. கிரிமினலாகவும் பொறுக்கியாகவும் முகத்தைப் படுபயங்கரமாக வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் சித்தரிக்கப்பட்ட அந்த ஓலா டாக்சி ட்ரைவரைச் சந்திக்கச் சென்றிருந்த எங்களைச் சிறு புன்னகையோடு தலை அசைத்து வரவேற்றார் 28 வயதே ஆன அந்த இளைஞர்.
டாக்சி ஓனர் திரு. காஜா செரிஃப் எங்களை வரவேற்று தேநீர் பரிமாறினார். அந்த இளைஞருக்கு தேநீர் அருந்தும் பழக்கமும் இல்லை. புகைப் பழக்கமோ வேறு எந்தப் பழக்கமோ இல்லாதவர் என்பதை ஓனரும் உறுதிப்படுத்தினார். அவருக்கு இருக்கும் ஒரே எண்ணம் தன் குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்பது மட்டும்தான்.
கடந்த மாதம் முகநூலில் விலாசினி என்ற பதிப்பாளர், தன்னை ஒரு ஓலா டாக்சி டிரைவர் ”கழுத்தை அறுத்துவிடுவேன்” என்று மிரட்டியதாக எழுதியது பரபரப்பை உருவாக்கியது. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றும் விலாசினியின் நண்பர் உடனடியாக அவரை பேட்டியெடுத்து செய்தி வெளியிட்டதும், ஆங்கில நாளிதழான “த இந்து”வில் இச்செய்தி வெளியானதும் “கொலை மிரட்டல்” குற்றச்சாட்டு பூதாகரமானது.
ஊடகங்களில் இச்செய்தி வெளியானதால் உருவான அழுத்தத்தைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, 14.07.16 அன்று டிரைவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிணையில் எடுக்கச் சரியான வழக்குரைஞரைக்கூட அமர்த்திக் கொள்ளத் தெரியாத நிலையில், 16 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, 30.07.16 அன்று பிணையில் விடுதலையாகி வந்த அந்த இளைஞரை 31.07.16 அன்று நாங்கள் சந்தித்து பேட்டி கண்டோம். அதற்கு முன்பாக, 25.07.16 அன்று டாக்சியின் ஓனர் காஜா செரீஃபை தாம்பரத்திற்கு அடுத்துள்ள முடிச்சூரில் அவரது இல்லத்திலும், 26.07.16 அன்று ஆலந்தூர் கோர்ட்டில் டிரைவரின் தாயாரையும் தம்பியையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம்.
பொறுக்கி என்றும் கிரிமினல் என்றும் பதிப்பாளர் விலாசினி தனது முகநூல் பதிவுகளில் கடுமையாகச் சாடியிருக்கும் அந்த இளைஞரின் பின்னணியை முதலில் விவரித்துவிடுகிறோம்.
வட மாவட்டத்துச் சிறிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவரான அந்த இளைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்றைச் சேர்ந்தவர். 5 கிமீ தொலைவில் இருந்த பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது, தினமும் குடும்பத்திற்குச் சொந்தமான மாட்டை 2 ½ கிமீ தள்ளியிருந்த அவர்களுக்குச் சொந்தமான வயல் வரை ஓட்டிச்செல்வதும், மாலை திரும்புகையில் அதை வீடுவரை ஓட்டிவருவதும் அவரது அன்றாடக் கடமைகளில் ஒன்று. பெற்றோருக்குத் துணையாக வயல் வேலைகளும் செய்து அதிலும் தேர்ச்சி பெற்றவர். அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே. சித்தப்பாவிற்குச் சொந்தமான இன்னொரு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து இவர்கள் குடும்பத்தினரே விவசாயம் செய்துவந்திருக்கிறார்கள். உடன் பிறந்த தம்பி ஒருவர் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு தகப்பனார் காலமாகிவிட்டதால், நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு, தாயாரும் தம்பியும் இவரோடு சென்னையில் வசிக்க வந்துவிட்டார்கள்.
பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் பி. எஸ்ஸி கெமிஸ்ட்ரியில் சேர்ந்திருக்கிறார். கல்லூரியின் கட்டிடங்களைப் பார்த்து பிரம்மித்துப்போன தந்தையார், எவ்வளவு கஷ்டப்பட்டாவது பணம் கட்டி அக்கல்லூரியிலேயே படிக்க வைப்பதாக ஆசையோடு சொல்லியிருக்கிறார். ஆனால், முதல் வருடத்திற்குப் பிறகு அவரால் பணம் கட்ட முடியவில்லை. அதனால், இரண்டாம் வருடத்தில் இருந்தே, இவர் பகுதி நேரமாக வேலை செய்து படிப்பைத் தொடரவேண்டிய நிலை. ஒன்றிரண்டு கம்பெனிகளில் வேலை செய்தவர், ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டு, இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டி பணம் சம்பாதித்திருக்கிறார். இது போதாதென்று கல்லூரியில் என். சி. சி யில் சேர்ந்து அதிலும் சிரத்தையோடு செயல்பட்டிருக்கிறார். இந்தச் சிரமங்களால், அரியர்ஸ் விழுந்து படிப்பை முடிக்க இயலாமல் போயிருக்கிறது.
ஆனாலும், தளர்ந்துவிடாமல், நியூ காலேஜில் பி. ஏ ஆங்கிலப் பாடத்தில் சேர்ந்து பட்டம் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்து சிறு கம்பெனிகள் ஒன்றிரண்டில் வேலை பார்த்த பிறகு, ஷேர் ஆட்டோ டிரைவராக ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்த்திருக்கிறார். கடைசியாக, ஜூலை மாதத் தொடக்கத்தில், நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில், திரு. காஜா ஷெரீஃபிடம் டிரைவராக சேர்ந்திருக்கிறார்.
இவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, ஊருக்குத் திரும்பிப் போய்விட வேண்டும் என்பதுதான் இவரது தாயாரின் ஆசை. தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கனவுகளும் இந்த இளைஞருக்கும் இல்லை.
படிக்கும் காலத்திலேயே வேலையும் பார்த்து, அந்தப் பணத்திலேயே படிப்பையும் முடித்து, தம்பியையும் படிக்கவைத்து, தன் குடும்ப முன்னேற்றம் ஒன்றில் மட்டுமே கண்ணும் கருத்துமாக, தானுண்டு தன் பிழைப்புண்டு என்று இருந்த இத்தகைய இளைஞரைத்தான் பதிப்பாளர் விலாசினி, பொறுக்கி என்றும் கிரிமினல் என்றும் தனது முகநூல் பதிவில் சாடியிருக்கிறார். பயங்கரக் கொலைகாரன் போலச் சித்தரித்திருக்கிறார். இரண்டுவார காலம் சிறைக்குப் போக காரணமாக இருந்திருக்கிறார்.
காரை பயங்கர வேகத்தில் ஓட்டியதாகவும், மெதுவாக ஓட்டச் சொன்னதற்குத் தன்னை வண்டியில் இருந்து இறக்கிவிட்டதாகவும், மரியாதை குறைவாக பேசியதாகவும், கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டியதாகவும் பதிப்பாளர் விலாசினி நடந்த சம்பவமாக விவரித்திருக்கிறார்.
நடந்த சம்பவமாக அந்த இளைஞர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க இதுவரை யாரும் முன்வரவில்லை. அவர் கூறுவதை முழுமையாக இந்த ஒலிப்பதிவில் கேட்கலாம்.
டிரைவரின் விவரிப்பில் முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:
முதலாவதாக, விலாசினி சொல்லியிருப்பதைப் போல, அவர் தனியாக வந்து காரில் ஏறவில்லை. டாக்சியை புக் செய்து கொடுத்தவர் அவர் திருமணம் செய்ய இருப்பவர். விலாசினியோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளியே வந்து, அவரைக் காரில் ஏற்றியிருக்கிறார். அவரிடம், காரின் எண்ணைக் குறித்துக்கொள்ளுமாறு விலாசினி இரண்டு முறை கூறியிருக்கிறார். காரில் ஏறிய சில நிமிடங்களிலேயே மொபைல் ஃபோனில் ஆங்கிலத்தில் யாருடனோ பேசத்தொடங்கி விட்டிருக்கிறார். சற்று கோபமாகவும் பேசியிருக்கிறார்.
ஐஐடி பாலத்தில் ஏறி இறங்கியபோது விலாசினி திடீரென்று அலறி இவ்வளவு வேகமாக போகாதே என்று சத்தம் போட்டிருக்கிறார். தான் வேறு காரைப் பிடித்துக் கொள்வதாக சொல்லி வண்டியை நிறுத்தச் சொல்லி மீட்டரையும் கட் செய்யச் சொல்லியிருக்கிறார். அதுவரை பயணம் செய்ததற்கான தொகை என்று டிரைவர் சொன்ன தொகையைத் தராமல் காரைவிட்டு இறங்கி டாக்சியை புக் செய்து கொடுத்தவரோடு மொபைலில் பேச ஆரம்பித்துவிடுகிறார். ஆட்டோ ஒன்று வர, அதை நிறுத்தி தொகை பேசி ஏறிவிட்டிருக்கிறார்.
அதன் பிறகே டாக்சி டிரைவர் விலாசினியிடம் சென்று பயணம் செய்ததற்கான தொகையை ஆட்டோ டிரைவருக்கு அருகில் நின்று கேட்டிருக்கிறார். கம்பெனியிடம் வாங்கிக் கொள்ளுமாறு விலாசினி கூறியதற்கு “நீங்கள் இந்தப் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நானும் என் குடும்பமும் ஒன்றும் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிடப் போவதில்லை” என்று சொல்லிவிட்டுத் தனது காரில் சென்று ஏறிவிட்டிருக்கிறார்.
அவருக்கு அடுத்த அழைப்பு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகில் இருந்து வர, அவ்விடத்தை நோக்கி டாக்சியை ஓட்டத் தொடங்கிவிடுகிறார். கவர்னர் மாளிகையைத் தாண்டும்போது விலாசினி பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவை ஓவர் டேக் செய்து வலது பக்கச் சாலையில் சென்றுவிடுகிறார். அவர் தன் வழியில், தனது அடுத்த சவாரியை எடுக்கப் போவதை, விலாசினி தன்னைப் பின் தொடர்ந்து வருவதாகக் கற்பனை செய்துகொள்கிறார்.
விலாசினியின் பயணம் கார் டிரைவருக்குப் பன்னிரண்டாவது சவாரி. அதற்குப் பிறகு 4 பேரை ஏற்றி இறக்கிவிட்டு நள்ளிரவு வீடு போய் சேர்கிறார்.
14.07.16 அன்று நந்தம்பாக்கம் S4 காவல் நிலையத்தில், அவருடைய தரப்பில் நடந்ததை எழுதிக் கொடுக்க சொன்னபோதும் டிரைவர் இதையேதான் எழுதிக் கொடுத்ததாக (நானும் என் குடும்பமும் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிட மாட்டோம் என்று) சொல்கிறார்.
டிரைவரின் எடுத்துரைப்பு அல்லது வெர்ஷன் இவ்வளவுதான். விலாசினியின் எடுத்துரைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.
இது கிடைப்பதற்கு முன்பாக, 26.07.16 அன்று ஆலந்தூர் கோர்ட்டில் அவரது தம்பியைச் சந்தித்து விவரங்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு முந்தைய நாள் (25.07.16) புழல் சிறையில் தனது அண்ணனைச் சந்தித்துப் பேசியபோது ”நானும் என் குடும்பமும் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிட மாட்டோம்” என்று மட்டுமே விலாசினியிடம் பேசியதாகச் சொன்னார் என்று எங்களிடம் கூறினார்.
ஆகையால், இது ஏதோ அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு வக்கீலோ அல்லது வேறு யாரோ சொல்லிக் கொடுத்து சொல்வது அல்ல. அவர்களுக்குக் கிடைத்த முதல் வக்கீல், காவல் நிலையத்தில் இருந்த ஒருவரால் பரிந்துரை செய்யப்பட்டவர். அந்த முதல் வக்கீல், இவர்களுக்கு அனுசரனையாக இல்லை. பிணையில் எடுப்பதற்கான படிவம் ஒன்றில் இவர்களுடைய தகப்பனாரின் பெயரைத் தவறாக எழுதி அதனால் பிணையில் எடுப்பது தள்ளிப்போகும் அளவிற்கு அசட்டையாக இருந்தவர். இரண்டாமவர், இவர்கள் கோர்ட்டில் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தாமாக முன்வந்து பிணையில் எடுக்க ஏற்பாடு செய்தவர். கிளை கோர்ட்டுகளில் பிணையில் எடுத்துக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் பல்லாயிரக்காண வக்கீல்களில் ஒருவர்.
பிறகு எங்கிருந்து, மாமல்லன் எழுதிய வெர்ஷன் (பொறுக்கி என்று விலாசினி திட்டியதால்தான் டிரைவர் அவர் கழுத்தை அறுத்துவிடுவதாகச் சொன்னது) முளைத்தது? அது கார் ஓனர் காஜா ஷெரீஃப் மாமல்லனிடம் சொன்னது. அவருக்கு இந்த வெர்ஷன் எங்கிருந்து வந்தது?
14.07.16 அன்று காவல் நிலையத்தில் டிரைவர் எழுதிக் கொடுத்த விளக்கத்தை, டிரைவர் ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துவிட்டதாக ஓனர் காஜா ஷெரீப்பிடம் போலீசார் சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை, விலாசினி முகநூலில் எழுதிய, “த இந்து”வில் வெளிவந்த “கழுத்தை அறுத்துவிடுவேன்” என்பதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்திருப்பதாக எடுத்துக் கொண்டுவிடுகிறார் ஓனர் காஜா ஷெரீஃப். அதோடு, “பொறுக்கி என்று திட்டியதால்” என்ற கண்ணும் மூக்கும் காதும் சேர்ந்துவிடுகிறது. விலாசினியின் வெர்ஷனுக்கு மறுப்பாக, மாமல்லன் எழுதிய வெர்ஷனாக இது வெளியாகிறது.
மூன்று வாரங்கள் கழித்து இப்போது, டிரைவரின் வெர்ஷன் வருகிறது.
”ரோஷமான்” திரைப்படத்தில் வருவதைப் போல, அதைப் போலி செய்த விருமாண்டியில் வருவதைப் போல மூன்று வேறு வேறு எடுத்துரைப்புகள்.
இந்த மூன்று எடுத்துரைப்புகளின் தாக்கம் என்னவாக இருந்தது/ இருக்கிறது? இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்குள்ள அறிவு, அதிகாரம், ஆணை உரிமை (knowledge, power, authority) எப்படி இயங்கியிருக்கின்றன? அவை எவற்றை உணர்த்துகின்றன?
வழக்கை நடத்தச் சரியான ஒரு வக்கீலை வைத்துக்கொள்ளக்கூடத் தெரியாத, தான் உண்டு தன் பிழைப்பு உண்டு என்று அன்றாடக்கூலி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞர் மீது, பல எழுத்தாளர்களுடைய நட்பும், ஊடகங்களில் பணிபுரிவர்களோடு தொடர்பும் கொண்டுள்ள, சமூகத்தில் “உயர்ந்த அந்தஸ்த்தில்” உள்ள ஒரு பதிப்பாளர், பெண்மணி ஒரு குற்றச்சாட்டை வைத்தவுடன் அந்த இளைஞர் பயங்கரக் குற்றவாளியாகவும் கிரிமினலாகவும் மாறிவிடுவது ஏன், எப்படி நிகழ்கிறது?
(தொடரும் …)
மறுமொழியொன்றை இடுங்கள்