யானைப் பசிக்கு சோளப் பொரி – 1

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளன்று, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி, யானைப் பசிக்கு சோளப்பொரி போல் உள்ளது” என்று கூறியிருந்தார்.

இக்கூற்று எந்த அளவிற்கு சரியானது?

நிதிநிலை அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, வரும் நிதியாண்டில் தமிழக அரசு ஈட்ட இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள வருமானம், செலவினம் குறித்த ஒரு சிறு கூட்டல் கழித்தல் கணக்கைப் போட்டுப் பார்த்தால் இது சற்றுத் தெளிவாகும்.

வருமானம்

மாநில அரசுக்கே உரிய வரி வருமானம் (State’s Own Tax Revenue) – 99,590 கோடி. இதற்குள், வணிக வரிகள் – 77,234 கோடி, கலால் வரி – 6,903 கோடி, அரசு முத்திரைத் தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள் – 8220 கோடி, மோட்டார் வாகன வரி விதிப்புகள் – 5,418 கோடி ஆகியவை அடங்கும்.

மாநில அரசுக்கே உரிய வரியல்லாத வழிகளிலான வருமானம் – 12,318 கோடி.

மத்திய அரசின் வரிவிதிப்புகளில் மாநில அரசுக்கு உரிய பங்காகக் கிடைப்பது பங்கு 27,224 கோடி.

மத்திய அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையின்படி, தமிழக அரசுக்கு கிடைக்க இருக்கும் மத்திய அரசு மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளின் உத்தேசமான தொகை 20,213 கோடி.

ஆக, தமிழக அரசு ஈட்டும் மொத்த வருமானம் 1,59,363 கோடி. மத்திய அரசின் வரிவிதிப்புகளில் தமிழக அரசின் பங்காகக் கிடைக்கும் தொகையையும் மத்திய அரசின் மானியங்கள் மற்றும் உதவித் தொகையையும் கழித்துவிட்டு, தமிழகத்தின் சொந்த நிதியாதாரங்களில் இருந்து மட்டும் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கிட்டால், தமிழக அரசின் மொத்த வருமானம் 1,10,093 கோடி.

செலவினங்கள்

நிதிநிலை அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளபடி அரசின் மொத்த செலவினம் 1,75, 293 கோடி. பற்றாக்குறை 15,930 கோடி.

செலவினங்களில், அரசு அலுவலர்களுக்கான சம்பளம் 46,332 கோடி, ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஊழியர் ஓய்வுப் பலன்களுக்கான தொகை 20,577 கோடி, சம்பளம் அல்லாத செலவினங்கள் மற்றும் பராமரிப்புச் செலவினங்கள் 9,764 கோடி.

அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் உள்ளடக்கிய மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி 72,616 கோடி. அரசு வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டித் தொகையாக கட்ட வேண்டிய தொகை 25,982 கோடி.

தமிழக அரசின் ஒட்டுமொத்த செலவினத்தில், நிர்வாகச் செலவுகள் (சம்பளம், ஓய்வூதியம், பராமரிப்பு) ஏறத்தாழ 44 % மும், கடன்களுக்கான வட்டித் தொகை ஏறத்தாழ 15 % மும், இரண்டும் சேர்ந்து 59 % த்தை விழுங்கிவிடுகின்றன.

வரவும் செலவும்

தமிழக அரசுக்கு மட்டுமே உரிய வருமான வழிகளில் ஈட்டப்படும் மொத்த வருமானத்துடன் ஒப்பிட்டால், நிர்வாகச் செலவுகள் ஏறத்தாழ 69.5 % த்தை விழுங்கிவிடுகின்றன. கடன்களுக்கான வட்டியான 23.5 % யும் சேர்த்தால் 93 % விழுங்கிவிடுகின்றன.

அதாவது, மத்திய அரசின் மானியங்கள் மற்றும் மத்திய அரசின் வரிவிதிப்பில் மாநில அரசுக்கு உரிய பங்காகக் கிடைக்கும் தொகை இரண்டையும் ஒதுக்கிவிட்டு, மாநில அரசுக்கே உரிய வரிவிதிப்புகள் மற்றும் வரிகள் அல்லாத வழிகளில் கிட்டும் மொத்த வருமானம் ஏறத்தாழ 1,10,093 கோடி. மாநில அரசின் நிர்வாகச் செலவுகளும் கடன்களுக்கான வட்டியும் சேர்த்த செலவுகள் மட்டும் ஏறத்தாழ 1,02,655. மிஞ்சுவது ஏறத்தாழ 7,438 கோடி – 7 % மட்டுமே.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு

தமிழக அரசு தனக்கே உரிய வழிகளில் ஈட்டும் மொத்த வருமானத்துடன் (1,10,093 கோடி) ஒப்பிட்டால், மத்திய அரசு அளிக்கும் மானியத் தொகையின் (20,231 கோடி) சதவீதம் ஏறத்தாழ 18 % மாக இருக்கிறது. தமிழக அரசின் மொத்த செலவினங்களோடு (1,75,271 கோடி) மத்திய அரசின் மானியத் தொகையை ஒப்பிட்டால் ஏறத்தாழ 11 % மட்டுமே.

ஆனால், நலத்திட்டங்களுக்காகவும், பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குவதற்காகவும், தொழில் முதலீடுகளுக்கான உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காகவும் தமிழக அரசு ஒதுக்கியுள்ள 72,616 கோடியில் மத்திய அரசின் மூலம் கிட்டும் நிதி உதவியின் பங்கு ஏறத்தாழ 28 % ஆக இருப்பது தெரிகிறது.

யானைப் பசி?

நிலைமை இவ்வாறு இருக்க, “யானைப் பசிக்கு சோளப் பொரி” என்று அமைச்சர் கூறியிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?

நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் – பசி உட்பட – இருப்பது அனைவருக்கும் தெரியும். சோளப் பொரி என்று அமைச்சர் குறிப்பிட்டது நிதி ஒதுக்கீடு – பணம், என்பதும் புரிகிறது. ஆனால், யானை எது என்பதில்தான் சற்று குழப்பம் நிலவுகிறது.

இக்குழப்பத்தை தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், இந்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) ஆண்டுதோறும் அளிக்கும் அறிக்கைகளுக்குள்தான் தேடவேண்டும். மத்திய மாநில அரசுகளின் நிதி நிர்வாகச் செயல்பாடுகளை நுணுக்கமாகப் பரிசீலனை செய்து அளிக்கப்படும் இவ்வறிக்கைகள், அரசுகளின் நிதி – நிர்வாகக் கொள்கைகள், பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்கள் – சுருக்கமாக நிதிநிலை அறிக்கைகளில் முன்வைக்கப்படும் கொள்கை முன்மொழிதல்கள் எத்திசையில் சென்று கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கான வலுவான தடயங்களைக் கொண்டிருக்கின்றன.

சோளப் பொரி எது என்பது தெளிவாகத் தெரியும் என்பதால், மார்ச் 2015 வரையிலான நிதியாண்டில் தமிழக அரசு செலவு செய்த சில சோளப் பொரிகள் குறித்து செம்படம்பர் 2016 -ல் சமர்ப்பிக்கப்பட்ட தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் (சமர்ப்பிக்கப்பட்டுள்ள 5 அறிக்கைகளில் ஒன்றான பொதுத் துறை நிறுவனங்கள் குறித்த அறிக்கை) இருந்து சில குறிப்புகளைப் பார்ப்போம். யானை எது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்.

சோளப் பொரிக் கதை 1

(தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை – பொதுத் துறை நிறுவனங்கள், செப்டம்பர் 2016, பக்: 98 – 100)

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திலும் ஆன்லைன் மின்னணு கையடக்க கருவிகள் மூலம் பயணச் சீட்டு வழங்கும் திட்டம் 2008 அக்டோபரில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைச் செயல்படுத்தும் nodal agency யாக பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழுவை 2011 ஏப்ரல் மாதத்தில் திமுக பொறுப்பில் இருந்த தமிழக அரசு அறிவித்தது.

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், ஆகஸ்டு 2012 -ல்  இதற்கான திறந்த ஒப்பந்தப் புள்ளி (open tender) அறிவிப்பு வெளியிடப்பட்டு, செப்டம்பர் 2012 இல் திட்ட முன்வரைவு இறுதி செய்யப்பட்டது. பிப்ரவரி 2013 இல் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஐதராபாத்தை சேர்ந்த Ingenerie Technology Solutions Private Limited என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. ஆரம்பகட்ட ஆய்வுப் பணிக்காக ஆறு மாதங்கள் வழங்கப்பட்டு, அக்டோபர் 1, 2013 தொடங்கி, செப்டம்பர் 30, 2018 ற்குள் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரையறுத்து மார்ச் 2013 இல் பணி ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் (மார்ச் 2015 வரையிலான நிதியாண்டிற்கான அறிக்கையின்படி) எட்டு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 99 சதவீத கருவிகள் அளித்திருக்க வேண்டும் என்ற இலக்கிற்கு மாறாக, ஏழு கழகங்களுக்கு 6 லிருந்து 63 சதவீதத்தையே அந்நிறுவனம் அளித்திருக்கிறது. சென்ன மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு அளிக்கப்பட்ட கருவிகளில் அக்டோபர் 2015 நிலவரப்படி, 8,935 கருவிகள் – 29 சதவீதம் – சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கருவிகளின் செயல்பாட்டிற்கு அவசியமான தகவல் மையத்தை நிறுவும் பணியையும் நிறைவேற்றவில்லை. இணையம் வழித் தகவல் பரிமாற்றமும் திருப்திகரமாகச் செயல்படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இக்குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்குத் தமிழக அரசு, மென்பொருள் தயாரிப்புத் தொழிலில் ஏழு வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டிருந்த நிறுவனம் என்பதைக் கருத்தில் கொண்டே Ingenerie நிறுவனத்தை இவ்வொப்பந்தப் பணிக்கு தேர்வு செய்ததாக பதில் அளித்திருக்கிறது. மென்பொருள் செயல்பாட்டிற்கு அவசியமான வன்பொருட்களை (hardware) நிறுவுவதற்குப் பொருத்தமான இடங்களை அரசு போக்குவரத்துக் கழகங்கள் தரத் தவறியதே ஒப்பந்தப் பணியில் நிலவும் தாமதத்திற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 2012 காலப்பகுதியில் அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 15.3 கோடியாக இருந்ததையும் கணக்கில் கொண்டே ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த விளக்கங்கள் ஏற்புடையவை அல்ல என்று கூறும் தணிக்கை அறிக்கை, பின்வரும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது:

  1. ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான விதிகளின்படி, நிறுவனத்தின் மொத்த மதிப்பு, டிசம்பர் 2012 வரையில் அல்ல, மார்ச் 2012 வரையில் 15 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், நிறுவனங்களின் பதிவாளர் (Registrar of Companies) ஆவணங்களின் தரவுகளின்படி மார்ச் 2012 காலப்பகுதியில் ஒப்பந்தத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தின் மொத்த மதிப்பு 74 லட்சமாகவே இருந்திருக்கிறது.
  2. தேர்வு செய்யப்படும் நிறுவனம், ஜூன் 2012 வரை மூன்று ஆண்டுகள் குறித்த துறையில் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்பது மற்றொரு விதி. தமிழக அரசு அந்நிறுவனம் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், 2012 ற்கு முன்பான மூன்று ஆண்டுகளில், அந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் தொழிலில், குறிப்பாக, மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக, மருத்துவ ஒலி பெயர்த்தல் (Medical Transcription) நிறுவனமாகவே செயல்பட்டிருக்கிறது.

மேலும், அந்நிறுவனம் ஜனவரி 2013 வரை Mango Healthcare Solutions Limited என்ற பெயரில் இயங்கி வந்திருக்கிறது. ஜனவரி 24, 2013 அன்று, அதாவது சரியாக ஒப்பந்தத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் Ingenerie Technology Solutions Private Limited என்று பெயரை மாற்றிக் கொண்டுள்ளது. அதோடு, நிறுவன நோக்கங்களில் ஒன்றாக மென்பொருள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டுள்ளது.

  1. தமிழ்நாடு ஒப்பந்தப் புள்ளிச் சட்டம் 1998 –இன்படி (Tamil Nadu Transparency in Tender Act, 1998) (Tamil Nadu Transparency in Tenders Rules, 2000) அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்ததாரர் எவருக்கும் வட்டியில்லா திரட்சி முன்பணம் (mobilisation advance) எதையும் தரக்கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் வரையறுத்துள்ளதற்கு மாறாக, பணிகள் துவங்கியவுடன் திருப்பித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் 15 கோடி ரூபாய் வட்டியில்லா திரட்சி முன்பணம் வழங்கப்படுவதற்கு ஒப்பந்தப் புள்ளி விதிகளில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, 2013 மே மாதம் ஒப்பந்ததாரருக்கு 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டும் இருக்கிறது. ஆனால், ஒப்பந்தப் பணி துவங்கியவுடன் திருப்பித் தரவேண்டும் என்ற நிபந்தனை நிறைவேற்றப்படாமல், ஜூன் 2015 வரை (தணிக்கை அறிக்கை எழுதுவது தொடங்கிய காலம்வரை) இப்பணம் திருப்பித்தரப்படவில்லை.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் இவ்வளவு முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் இது குறித்து ஏதாவது விளக்கம் அளித்திருக்கிறதா என்ற கேள்வி எழலாம். ஆனால், போக்குவரத்துக் கழகத்தின் 2016 – 2017ஆம் ஆண்டிற்கான கொள்கை அறிக்கையில் (பொறுப்பில் இருந்தவர் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்) மின்னணு கையடக்கக் கருவிகள் குறித்த கீழ்க்கண்ட குறிப்பு மட்டுமே காணப்படுகிறது:

“GPS தொழில்நுட்ப மின்னணுப் பயணச்சீட்டு இயந்திரம், பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் பெரிதும் உதவியாக உள்ளதோடு, நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்குவதற்கும், கணக்கிடுவதற்கும் எளிதாக உள்ளது. மேலும், போக்குவரத்துக் கழகங்கள் தங்களின் இயக்கச் செயல்பாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளவும், முறையான கணக்கீட்டைப் பற்றி அறியவும் பெரிதும் உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் 17,451 (28.6.2016 வரை) மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 31.66 கோடி அரசால் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.” (பக்: 27 – 28, பத்தி: 8.7)

2015 – 16 ஆண்டிற்கான கொள்கை அறிக்கையிலும், இதே பத்தி அச்சுப் பிசராமல் தரப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளின் எண்ணிக்கை 16,127 – தேதி 27.07.2015 – பக்கம் 29 – பத்தி 8.8 பொறுப்பு அமைச்சர் பி. தங்கமணி, தொகை அடைப்புக் குறிகளுக்குள் ஆகிய சிறு மாற்றங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

தமிழக அரசின், அரசுத் துறை நிறுவனங்களின் பொறுப்பு கூறும்  (accountability) தகைமை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு சுட்டிக்காட்டல்கள், குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசின் பொறுப்பு கூறும் தகைமை இவ்விதமே அமைந்துள்ளதை வரும் பகுதிகளில் பார்க்கலாம். குறித்துள்ள விடயம் தொடர்பாக எழும் உடனடி கேள்வி குறித்து இங்கு கவனம் குவிப்பது நல்லது.

சட்ட விதிகளை மீறியும், ஒப்பந்தப் புள்ளி கோரும் வழமைகளுக்கு மாறாகவும், அடிப்படைத் தகுதிகளையே நிறைவு செய்யாத ஒரு நிறுவனம் என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தும் ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனத்துடன் தொடர்புடைய செல்வாக்கு படைத்த அந்நபர் யார்?

ஒங்கோல் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் வேட்பாளர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், ஒய். வி. சுப்பா ரெட்டி தான் அந்தச் செல்வாக்கு மிக்க நபர். ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய்வழி சித்தப்பா.

பல நிறுவனங்களின் இயக்குனராகப் பட்டியலிடப்பட்டுள்ள இவர், மேற்குறித்த நிறுவனத்தில் 5000 பங்குகளை மட்டுமே வைத்துள்ளதாக தனது சொத்து விவர உறுதிப் பத்திரத்தில்  [http://myneta.info/ls2014/candidate.php?candidate_id=8505&scan=original] (பக்: 6) தெரிவித்திருக்கிறார்.

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பெரும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 16 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.

அண்மையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர், இந்தியாவிலேயே ஆந்திர மாநிலம்தான் ஊழலில் முதல் இடத்தில் உள்ளது என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டதையும் பலரும் அறிந்திருப்பார்கள்.

(நாம் தடவிப் பார்த்திருப்பது என்ன? யானையின் துதிக்கையா?)

சோளப் பொரிக் கதை – 2

(தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை – பொதுத் துறை நிறுவனங்கள், செப்டம்பர் 2016, பக்: 102 – 103)

ஜூலை 2011 இல் தமிழக அரசு, இந்திய கடற்படையால் சேவையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டு, தமிழக அரசுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வாக்லி – யை மகாபலிபுரத்தில் காட்சிப் பொருளாக நிறுத்தி, “கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம்” ஒன்றை நிறுவ முடிவு செய்தது. இத்திட்டத்தை செயல்படுத்தும் nodal agency யாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை ஜூலை 2012 இல் நியமனம் செய்தது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சிறந்த வழிகள் குறித்து Academy for Marine Education and Training University மூலம் மார்ச் 2012 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நீர்மூழ்கிக் கப்பலை சென்னை துறைமுகத்தில் வைத்து எட்டு பகுதிகளாகப் பிரித்து எடுத்து மாமல்லபுரத்தில் வைத்து வெல்டிங் தொழில்நுட்பம் மூலம் திரும்ப இணைப்பதே, இருப்பதில் சிறந்த வழிமுறை என்று தெரிவிக்கப்பட்டது.

2012 டிசம்பரில் திறந்த ஒப்பந்தப் புள்ளி கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, Tradex Shipping Company Private Limited என்ற ஒரு நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்து ஒப்பந்தத்தைப் பெற்றது. காற்றடைத்த பைகள் மூலம் இழுத்துச் செல்லும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவதாக இந்நிறுவனம் தெரிவித்தது. இத்தொழில்நுட்பம் குறித்து Indian Maritime University யிடம் ஆலோசனை கேட்கப்பட்டதில் அலைகளும் காற்று வேகமாக வீசாத நீர் நிலைகளில் மட்டுமே, இத்தொழில்நுட்பம் சாத்தியம் எனவும், மிகவும் நுணுக்கமான திட்டமிடுதல் அவசியம் எனவும் தெரிவித்தது. இவ்வாலோசனையையும் மீறி, 8.01 கோடி ரூபாய் செலவில் Tradex நிறுவனத்திற்கு மே 2013 இல் ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது.

ஏப்ரல்6, 2016 இல் Tradex நிறுவனம் நீர்மூழ்கிக் கப்பலை இழுத்துச் செல்லும் பணியைத் துவங்கியது. ஆரம்பகட்டப் பணிகளுக்கான தொகையாக 4.41 கோடியைப் பெற்றுக் கொண்டது. பின்னர், துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டு, வலிமையான நீரோட்டம், கடுமையான அலைகள் போன்ற “கட்டுப்படுத்த முடியாத இயற்கை இடையூறுகள்” (force majeure) என்ற காரணங்களைக் கூறி, பணியைக் கைவிடுவதாகத் தெரிவித்தது. ஏப்ரல் 30, 2014 அன்று நீர்மூழ்கிக் கப்பலை மீண்டும் சென்னைத் துறைமுகத்திற்குள் இழுத்து வந்து விட்டு திட்டத்தை செயல்படுத்துவதைக் கைவிட்டது.

அதோடு நில்லாமல், ஏப்ரல் மாதம் செய்த பணிகளுக்காக, ஏற்கனவே பெற்ற 4.41 கோடி போக, 10.68 கோடியை கூடுதல் கட்டணமாக கேட்டது (ஒப்பந்த தொகையாக நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த தொகையே 8.01 கோடிதான்).

பிப்ரவரி 2015 இல் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இக்கோரிக்கையை நிராகரித்து, ஒப்பந்தத்தை கைவிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈட்டுத் தொகையாக 1.19 கோடியைத் தருமாறும், வங்கி உத்திரவாதத் தொகையாகக் காட்டிய 40.05 லட்சத்தை கோரப் போவதாகவும் கூறியது. ஆனால், ஜூலை 2015 வரை இதன் மீதான் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவும் இல்லை, எத்தொகையும் மீட்கப்படவும் இல்லை.

இவ்விடயங்களைச் சுட்டிக் காட்டிய தலைமைக் தணிக்கையாளருக்கு, தமிழக அரசு, நீர்மூழ்கிக் கப்பலைப் பிரித்தெடுக்காமல் கடல்வழியாக இழுத்துச் செல்லும் திட்டத்தை நன்கு பரிசீலனைக்கு உட்படுத்தி ஏற்றுக்கொண்டே ஒப்பந்ததாரரை தேர்வு செய்தாக பதிலுரைத்திருக்கிறது. இது நிகழ்ந்தேறிய சம்பவங்களுக்கு முற்றிலும் மாறானது என்பது தெளிவு.

செய்து முடிக்காத வேலைக்கு கூடுதல் கட்டணம் கேட்ட, Tradex நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் யார்?

அந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த திருமதி. வாசுகி ரமணன். இவர் திமுக மகளிர் அணியின் பிரச்சாரக் குழு செயலாளர்களில் ஒருவராக சில காலம் இருந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. 2014 ஆம் ஆண்டு இறுதியில் இவர் தமிழக பாஜக – வில் இணைந்தார் என்று பத்திரிகைச் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

(யானையின் வாலைத் தடவியிருக்கிறோமா?)

 

(தொடரும்)

பின்குறிப்பாக: இதை எழுதி இரண்டு வாரங்கள் ஆகப்போகிறது. மேலும் நான்கு பகுதிகள் எழுத இருப்பதாகக் கூறி மின்னம்பலம் இதழுக்கு அனுப்பி வைத்தேன். வெளியிட ஒப்புக்கொண்டார்கள். அடுத்தடுத்த பகுதிகளை எப்போது தரமுடியும் என்று தெளிவாகக் கூறினால், தொடர்ச்சியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்கள். என்னால்தான் கவனத்தை ஒருமுகப்படுத்தி எழுதமுடியவில்லை.

எழுதுவதற்கான எவ்விதமான தூண்டுகோலும் இல்லை. வலைப்பக்கத்தில் வெளியிட்டாலாவது அடுத்தடுத்த பாகங்களை எழுதும் கட்டாயம் உருவாகும் என்ற நம்பிக்கையில் வெளியிடுகிறேன்.

 

 

Advertisements

2 பதில்கள் to “யானைப் பசிக்கு சோளப் பொரி – 1”

  1. Muthukumar Says:

    இத்தகைய விவரங்களை எந்தப் பத்திரிகையும் இவ்வளவு விரிவாக வெளியிடுவதில்லை. ஊழலின் ஊற்றுக்கண், அதன் வலைப்பின்னல்கள் பற்றிய அறிவு ஓட்டுப்போடும் சாமானியர்களுக்கு சென்று விடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கங்களும் தெளிவாக உள்ளன. தொடர்ந்து இதனை எழுதவும். வாழ்த்துக்கள். ஆர்.முத்துக்குமார்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: