நாலு காலும் ஒரு வாலும் – விருதுகளின் இரகசியங்கள்

விருது வழங்குவோருக்கான தகுதிகள்

ரிட்டையர்ட் பேராசிரியராக இருத்தல் முதல் நிபந்தனை.

சிறு பத்திரிகை நடத்தியவராகவோ பெரும்பத்திரிகைகளில் சிலவற்றில் எடிட்டராக இருந்த அனுபவமோ இருத்தல் இரண்டாவது நிபந்தனை.

சிறு பத்திரிகை நடத்தியவராக இருந்தால், “கொசுவத்தியும் கோட்டானும்” என்பது போன்ற பெயரில் குறியீடுகளால் ஆன குறி சொல்லும் நாவலை எழுதியிருக்கவேண்டும். அதை மாய யதார்த்த நாவல் என்று சொல்லிக்கொள்ளவேண்டும் அல்லது அடிப்பொடிகளை வைத்து சொல்லவைக்கவேண்டும். முடிந்தால், அதில் நான்கில் ஒரு பங்கு நீளமாவது இருக்கக்கூடிய நீண்ட கட்டுரை ஒன்றை அடிப்பொடிகளில் ஒருவரை ஏவி எழுதவைத்து, அதை தான் நடத்தும் பத்திரிகையிலேயே கூசாமல் வெளியிட்டுக்கொள்ளவேண்டும்.

பெரும் பத்திரிகைகளில் இருந்தவரென்றால், செய்யும் தொழிலில் மண்ணுருண்டை எனப் பெயரெடுத்திருந்தாலும் `மூத்த` பத்திரிகையாளர் என்று பெயரெடுத்தவராயிருத்தல் வேண்டும். “படுத்தேன், புரண்டேன் என நினைத்தாயோ”, “சாம்பாரில் விரலை விட்டால்“ என்பன போன்ற தலைப்புகளில் `இலக்கியக்` கட்டுரைத் தொடர்களை அவ்வப்போது எழுதிக்கொண்டிருபவராய் இருத்தல் கட்டாயம்.

ரிட்டையர்ட் பேராசிரியர் சில வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணிபுரிந்தவராயிருத்தல் நலம்.

`மூத்த பத்திரிகையாளர்` பாரதியும் கல்கியுமே தமிழ் இலக்கியத்தின் தூண்கள் என்று இன்றும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் பண்பாடு காக்கும் என் ஆர் ஐ தமிழர்களோடு நெருக்கமானவராயிருத்தல் மிக அவசியம்.

ரிட்டையர்ட் பேராசிரியர், ஒரு கட்டத்தில் ஃபேஷனாக அறியப்படும் ஏதாவது ஒரு இசத்தையோ ரசத்தையோ தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்தவராயிருத்தல் நலம். அதை எவ்வளவு குற்றுயிரும் குலையுயிருமாக செய்திருந்தாலும் பாதகமில்லை.

`மூத்த பத்திரிகையாளர்` கரண்ட்டில் கை வைத்தது போல எப்போதும் முகத்தை சுள்ளென்று வைத்திருப்பதோடு, கரண்டில் இருப்பவராக காட்டிக் கொள்வதும் மிக மிக அவசியம்.

விருது கொடுப்பதற்கு இதற்கு மேலாக பெரிய தகுதிகள் தேவையில்லை. பொற்கிழி வழங்க ஃபிக்சட் டெபாசிட் இருத்தல் அவசியம் என்பதைச் சொல்ல அவசியமில்லை.

விருது பெறுவதற்கான நிபந்தனைகள்

இரண்டு காலும் ஒரு வாலும் இருத்தல் அவசியம். வால் முன்பக்கம் என்பது நிபந்தனை.

குறைந்தது 15 ஆண்டுகள் சிறு பத்திரிகை வட்டாரங்களில் இலக்கியவாதிகளாக அறியப்பட்டவர்களோடு சேர்ந்து சோமபானம் பருகிய அனுபவம் இருத்தல் வேண்டும்.

சோம பானம் பருகிய ஏகாந்த அனுபவங்களால் உந்தப்பட்டு தீவிர இலக்கிய வாசகனாய் மலர்ந்து, உலக இலக்கியம் பற்றி பேசிப் பழகவேண்டும்.

ஏதாவது ஒரு சிறு பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் எப்போதாவது பெயருக்காவது இடம் பெற்றிருக்கவேண்டும்.

விருது பெறுவதற்கான வழிமுறைகள்

இலக்கிய வீதியில் தனக்கென ஒரு சந்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அதாகப்பட்டது, போர்ஹே, மார்க்யூஸ், இருவரில் ஒருவர் குறித்து எந்நேரமும் பிரஸ்தாபிப்பவராய் உருமாற வேண்டும்.

அனைத்து இலக்கிய குழாத்தினருடனும் தனித்தனியாக நட்பு பாராட்டல் வேண்டும். எவரையும் பகைத்துக்கொள்ளக்கூடாது.

வெவ்வேறு இலக்கியக் குழாத்தினருடனான சோமபான விருந்துகளில், பிடில் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். அதாகப்பட்டது, ஒரு குழாத்தின் விருந்தில் இன்னொரு குழாத்தில் இருப்போரை “அவனுக்கு என்ன தெரியும்?” என்று பேசுவதும், குழாம் மாறும்போது அதே கேள்வியை மற்ற குழாமில் இருப்போரைக் குறித்து சொல்வதும் முன்னேற்றப் பாதையின் மைல் கற்கள்.

கட்டிங் – பேஸ்டிங் பழகவேண்டும். எவராவது குடைந்தால், “எல்லா எழுத்தும் மேற்கோளே,“ என்று பார்த்தையோ, தெரிதாவையோ சட்டென்று மேற்கோள் காட்டத் தெரிந்திருக்கவேண்டும்.

முற்போக்கு மதக் குழாம் ஒன்றின் மடத் தலைவர் அல்லது பீடாதிபதி ஒருவரின் பரமார்த்த அடிப்பொடியாய் காட்டிக்கொண்டு, அவரது ஆசியைப் பெறும் பாக்கியம் பெற்றிருத்தல்வேண்டும். ஆனால், மதக் கொள்கையைப் பிரச்சாரம் செய்பவராக காட்டிக்கொள்ளாமல் இருப்பதில் மிகுந்த கவனமாய் இருத்தல் வேண்டும்.

கட்டாயம் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கவேண்டும். அது குதறல் முழியாக்கமாகவோ, குடல் அரசியல் கோட்பாடாகவோ அல்லது முகநூல் முக்காத்துட்டுச் சிதறல்களாகவோ, என்ன விளக்கெண்ணெயோ பிரச்சினையில்லை. விளக்கு வெளிச்சம் தன் மீது விழுவது முக்கியம்.

இறுதியாக, விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் டிமிக்கி கொடுப்பது, கடுப்படிக்கக் காத்திருப்போரின் வாயில் மண்ணள்ளிப் போட்டுத் தப்பிக்கும் மிக முக்கியமான டெக்னிக். கவுரவக் குட்டிக்கரணம் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: