”அஸ்ஸாம் டீ”, ”டார்ஜீலீங் டீ” என்று தேநீர் கம்பெனிகள் உண்டு.
ஐதராபாத் பிரியாணி, தலப்பாக்கட்டி பிரியாணி என்ற ப்ராண்ட் அந்தஸ்து பெற்றுவிட்ட பிரியாணி கடைகளையும் அறிவோம். ”செட்டிநாடு ஹோட்டல்” கள் பல தலைமுறைகளாகப் பிரசித்தம்.
”ஜெர்மன் டெக்னாலஜி” என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களையும், “கொரியன் மொபைல்ச் செட்”, “சைனா செட்” ப்ராடக்ட்டுகளும் பரிச்சயமானவைதாம்.
”பிராமணாள் காபி” “ஃபில்டர் காபி” “நரசூஸ் காபி” இவற்றையும் பலதசாப்தங்களாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அஸ்ஸாம் டீ, ஐதராபாத் பிரியாணி, செட்டிநாடு மெஸ், ஜெர்மன் டெக்னாலஜி, சைனா மொபைல் போன்று “பிராமணாள் காபி”யும் ஒரு சாதாரண மதிப்பு கொண்ட விளம்பரம், விளம்பரம் செய்யப்படும் பொருள் என்று கருதத்தக்கதுதானா?
அஸ்ஸாம் டீ என்று விளம்பரம் செய்யப்படும்போது, அத்தேயிலைக்கான மதிப்பு எவ்வாறு ஏற்றப்படுகிறது? உயர்ந்த ரகத்திலான தேயிலை விளையும் இடங்களில் ஒன்றான அஸ்ஸாமில் பயிர் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட தேயிலை/தேயிலைத் தூள் என்பதாகவே மதிப்பு ஏற்றப்படுகிறது. உயர்ந்த ரகத்திலான தேயிலை விளைவிக்க அவசியமான தட்ப வெப்ப நிலை நிலவுகிற பகுதிகளில் ஒன்றான அஸ்ஸாமில் விளைவித்த தேயிலை என்பதால் உயர்ந்த தரத்திலான தேயிலை/தேயிலைத் தூள் என்ற மதிப்பு ஏற்றப்படுகிறது.
அதாவது, சிறந்த தேயிலைக்கான உள்ளார்ந்த மதிப்பீடு நுகர்பொருளாக வரும் தேயிலை/தேயிலைத் தூள் மீது ஏற்றப்பட்டு நம்முன் வைக்கப்படுகிறது.
ஐதராபத் பிரியாணியும் அவ்வாறே. ஐதராபாத் நகரில், தனித்துவமானதொரு சுவையுடன் தயாரிக்கப்படும் பிரியாணி வகை என்பதே அப்பெயரின் மூலம் உணர்த்தப்படுகிறது.
ஜெர்மன் டெக்னாலஜியால் தயாரிக்கப்பட்டது என்று ஒரு பொருள் விளம்பரம் செய்யப்படும்போது, தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நுகர்பொருள் என்ற கருத்தே நுகர்வாளர்களுக்கு சொல்லப்படும் செய்தி.
சைனா மொபைல் எனும்போது, தமக்குள்ள ப்ராண்ட் வேல்யூவை சாதகமாகக் கொண்டு, மொபைல் போன்களை மிக அதிக விலைக்கு விற்கும் கம்பெனிகளின் தொழில்நுட்பத்தை ரிவர்ஸ் இஞ்சினியரிங் மூலமாக போலி செய்து, மிகக்குறைந்த விலையில் மொபைல் ஃபோன்களை தயாரித்து விற்கும் மதிப்பு முன்னிலைப்படுகிறது.
அஸ்ஸாம் டீ என்ற விளம்பரம்/நுகர் பொருள் அங்கு தேயிலையைத் தோட்டங்களைத் தொடங்கிய பிரிட்டிஷ்கார்களை அவர்களின் மதிப்பை (வெள்ளைக்கார துரை கொண்டு வந்தது என்ற மதிப்பை) சுட்டுவதில்லை நினைவுபடுத்துவதில்லை. தேயிலைக்குள்ள உள்ளார்ந்த மதிப்பையே முன்னிலைப்படுத்துகிறது.
ஐதராபாத் பிரியாணி என்ற ரெஸ்டாரண்டோ ப்ராண்ட் பெயரோ ஐதராபாத் நகரையோ, அது முஸ்லீம்கள் அதிகம் வாழும் நகரம் என்பதையோ, பிரியாணி என்பது முஸ்லீம்கள் உருவாக்கிய ஒரு உணவுவகை என்பதையோ சுட்டுவதில்லை; குறைந்தது பிரதானமாகச் சுட்டுவதில்லை. ஐதராபத்தில் தயாரிக்கப்படும் தனித்த சுவையுள்ள ஒரு வகையை – சுவையை, அதன் உள்ளார்ந்த பண்பையே முன்னிலைப்படுத்துகிறது.
ஜெர்மன் டெக்னாலஜி, ஜெர்மன் நாட்டின் பெருமையைச் சுட்டுவதற்காக சொல்லப்படுவதில்லை. குறித்த நுகர்பொருளின் உள்ளார்ந்த பண்பாக, ஒரு உயர்ந்த தொழில்நுட்பம் இருக்கிறது என்பதையே குறிப்பால் உணர்த்துகிறது.
சைனா மொபைல் சீனர்களின் பண்புகளை – மோசடித்தனத்தையோ திறமையையோ முன்னிலைப்படுத்துவதில்லை. நீண்ட காலத்திற்கு நீடிக்காத, தரம் குறைந்த, ஆனால், விலை மலிவு என்ற அந்நுகர்வுப் பொருட்களுக்குரிய உள்ளார்ந்த பண்புகளை, மதிப்புகளையே முன்னிலைப்படுத்துகிறது.
செட்டிநாடு ஹோட்டல்கள் செட்டியார்களின் சாதிப் பெருமிதத்தை முன்னிலைப்படுத்துபவை அல்ல. அவர்களுடைய பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் உருவான காரம் மிகுந்த உணவுத் தயாரிப்பு முறையை, ஒரு சுவையை முன்னிலைப்படுத்துகின்றன. செட்டிநாட்டுச் சமையலின் உள்ளார்ந்த பண்பான ஒரு சுவையை முன்னிலைப்படுத்துகின்றன. அதை நுகர்பொருளாகச் சந்தையில் வைத்து அனைத்து சமூகத்தினருக்கும் விற்கத் தலைப்படுகின்றன.
ஆனால், “பிராமணாள் காபி”?
டிகிரி காபி, ஃபில்டர் காபி எனப்படுபவை “பிராமணாளுக்குப்” பிடித்த ஒரு பிரத்யேகமானச் சுவையோடு காபியைப் பருகத் தாயாரிக்கும் முறை. தாராளமாகத் தயாரிக்கட்டும், “பேஷ் பேஷ், நன்னா இருக்கு” என்று நாக்கைத் தட்டிக் கொள்ளட்டும். யாருக்கும் ஆட்சேபணை இருக்கப்போவதில்லை.
ஆனால், அதுவே காபி என்ற பானத்தின் உள்ளார்ந்த பண்போ, மதிப்போ, தரமோ அல்ல. “பிராமணாள் காபி” என்பது காபி என்ற பானத்தின் அல்லது நுகர்பொருளின் உள்ளார்ந்த பண்பு அல்ல.
”பிராமணாள் காபி” என்ற விளம்பரத்தில் ஒரு பண்பு, மதிப்பு, தரம் அந்நுகர்பொருளின் மீது ஏற்றப்படுகிறது. அது, மேலே கண்ட பிற நுகர்பொருட்களுக்கு அவற்றின் உள்ளார்ந்த பண்புகள் மதிப்பாக ஏற்றிவைக்கப்படுவது போன்ற மதிப்பு ஏற்றம் அல்ல.
அவற்றுக்கு நேர்மாறாக, காபி என்ற நுகர்பொருளின்மீது, அதன் உள்ளார்ந்த பண்புக்கு மாறாக, வெளியே இருந்து ஒரு மதிப்பு அதன்மீது திணிக்கப்படுகிறது. அம்மதிப்பு, “பிராமணாள்” என்ற “உயர்” சாதியினரின் மதிப்பு. ”உயர்ந்த” சாதியாரான “பிராமணாள்” பருகும் உயர்தர பானம் என்பதான மதிப்பு.
செட்டிநாட்டு சுவை போல, ஒரு தனிவகையாக (niche product) இதில் மதிப்பு ஏற்றப்படவில்லை. காபியே “பிராமணாள் காபி”யாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த சாதிய ”உயர்” மதிப்பை, சந்தையில் பிறரும் ஏற்றுக்கொள்ளும்படியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.
பண்பாட்டு நுகர்பொருட்கள், niche products எனக் கருதத்தக்கவை, அப்பண்பாட்டு மதிப்புடன் சந்தையில் முன்னிலைப்படுவது இயல்பானது. அக்குறிப்பான மதிப்புகளை முன்னிலைப்படுத்தாவிடில் சந்தையில் அவற்றுக்கான தேவையே இருக்காது. ஆனால், அனைவருக்கும் பொதுவான ஒரு நுகர் பொருளின் மீது ஒரு குறிப்பிட்ட சாதியாரின் “உயர்ந்த” தன்மையை ஏற்றுவது, அச்சாதியாரின் சாதிய மேலாண்மையை ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் திணிக்கும் ஆணவம் மிகுந்த செயல்பாடாகும். சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் மிகுந்த அபாயகரமான செயல்பாடாகும்.
——–
அசைபோட: ஒரு சமூகத்தில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் ஒரு பிரிவினர், தமது மதிப்புகளை ஒட்டுமொத்த சமூகத்திற்கான மதிப்பாக அல்லது பொதுவான மதிப்பாகத் திணிப்பது, சிவில் சமூகத்தை எங்கு கொண்டு நிறுத்தும்? Oppressor X victim உறவுநிலையில் oppressor ஆக இருக்கும் பிரிவினர் victim உளவியலைத் தருவித்துக் கொண்டு சமூகத்தில் செயலாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தில் என்ன விளைவுகளை உருவாக்கும்?
துக்கடா: அந்தக் காலத்து ஹார்லிக்ஸ் விளம்பரம் முதல், இந்தக் காலத்து டாயலெட் க்ளீனர் விளம்பரம் வரை, மாமி பாஷையும், மாமி பாடி லேங்குவேஜும், மாமி உடல்களும்தானே ஐடியலாக, பண்பாட்டு முன்மாதிரியாகத் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு மாமி ஃபெமினிஸ்ட்டாவது இது குறித்து சுயப் பிரக்ஞையோடு விமர்சித்திருக்கிறாரா?
30.07.2016
மறுமொழியொன்றை இடுங்கள்