ஒரு மொட்டைக் கதைக்கு எழுதிய தட்டைத் திரைக்கதை

ஒரு பெரிய பட்ஜெட் படத்தை பாதியில் தொங்கலில் விட்டு, இயக்குனர் ஆவதற்கான பிரயத்தனத்தில் இருக்கும் ஒருவரின் பொருட்டு எழுதித் தந்த திரைக்கதை இது. இதுவும் தொங்கலுக்குப் போய் ஒரு வருடம் ஆகப்போகிறது.

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஜேம்ஸ் பாண்ட், எம்ஜிஆர் படங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல காட்சிகளோடு, மேஜிக்கும் பீரியட் பேக் ட்ராப்பும் கலந்து அவர் சொன்ன ஒரு துப்பறியும் கதையைத் தட்டி மெருகேற்றி எழுதியது.

அவர் சொன்ன கதையில் இருந்த ஒரு பெரிய ஓட்டையைச் சுட்டிக்காட்டி மாற்ற விழைந்தபோது, மனுசர் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. கதை அமைப்பும் தெரியாமல், திரைக்கதையும் தெரியாமல், காமிரா காட்சி அமைப்புகளும் தெரியாமல் தொழில்நுட்பம் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு இயக்குனர்களாகிவிடும் இத்தகையோரால்தான், புதிய திசைகளில் நகரும் முயற்சிகள் அவ்வப்போது எழுந்தபோதும், தமிழ் சினிமா விழுந்த குட்டையிலேயே இன்னமும் ஊறித் திளைத்துக்கொண்டிருக்கிறது.

திரைக்கதையில் இருந்து சில காட்சிகள். கதைக் கருவுக்கு அப்பாற்பட்டு என் கற்பனையில் விரிந்தவை.

 

காட்சி 1:

இரட்டை வட்டத்தின் நடுவில் தங்க முலாம் பூசப்பட்டுத் தகதகக்கும் செப்புத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கும்  மலையாள எழுத்துகள், குறியீடுகள் மீது குவிந்திருக்கும் கேமரா மெல்ல மேலெழுகிறது.

இரு வட்டங்களுக்கு இடையில் அடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவைகள், ஊதுபத்திக் குச்சிகள் சொருகி வைக்கப்பட்ட சிறு மண் குடுவைகள்.

காமிரா அவற்றை ஒருமுறை சுற்றிச் சுழல்கிறது.

சொருகிவைக்கப்பட்ட ஊதுபத்திக் குச்சிகள் கொண்ட ஒரு சிறு மண்குடுவையில் இருந்து எழும் புகையில் நிலை கொள்கிறது.

மெல்ல வலப்புறமாகச் சுழன்று அடைத்த குடுவையைக் காட்டுகிறது.

நன்றாக அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடிக் குடுவைக்குள், தேள், பூரான், அரணை, சிறுபாம்பு, விஷ வண்டு ஐந்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன.

தேள் குடுவையை அடைத்திருக்கும் `கார்க்`கில் தலைகீழாக நின்று தனது கொடுக்கைத் தயாராக வைத்திருக்கிறது.

விஷப் பூச்சிகள் குடுவையின் அடிப்பாகத்தில் தாக்கும் நிலையில் தயாராக இருக்கின்றன. விஷ வண்டு ரீங்கரித்துப் பறந்துபடி இருக்கிறது.

ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்கின்றன.

நான்கும் இறந்த பிறகு மெல்ல கீழே இறங்கும் தேள், அவற்றின் உடலில் தனது கொடுக்கை செலுத்தி உறிஞ்சுகிறது.

தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.

 

காட்சி 2:

தங்க நிறத்தில் ஜொலிக்கும் தேளின் கொடுக்கில் இருந்து, zoom out ஆகும் காமிரா, கண்கள் சொருகிய நிலையில் அதைக் கண்டு களித்துக் கொண்டிருக்கும் ஒரு நபரின் கண்களில் குவிந்து அவரைக் காட்டுகிறது.

30 வயதை ஒத்த இளைஞர் ஒருவர், அலங்கரிக்கப்பட்ட நாற்காலி ஒன்றில்,போதையில் கண்கள் சொருகிய நிலையில் கை – கால்களைத் தளர்த்தி பரத்தி அமர்ந்திருக்கிறார். தான் கண்ட காட்சியைக் கண்டு எக்களித்துச் சிரிக்கிறார்.

‘குத்து! குத்து!’ என்று தனது வலது காது மடலை மடக்கிக் காட்டுகிறார்.

தேளின் உருவம் பொறித்த சூடான இரும்பு முத்திரையைக் கொண்ட நீண்ட கம்பி ஒன்று அவரது காது மடலை நோக்கி நகர்ந்து செல்கிறது.

ஒரு கை அமர்ந்திருக்கும் நபருக்குப் பின்னால் இருந்து அவரது காது மடலை மடக்குகிறது.

இரும்பு முத்திரை அவரது காது மடலுக்குப் பின்னே பதிந்து புகை எழுகிறது.

அந்த இளைஞர் வீறிட்டு அலறி எழுந்து இரட்டை வட்டத்தைச் சுற்றி ஓடுகிறார். தடுமாறி கீழே விழுகிறார். மூச்சிரைத்து வீழ்ந்து கிடக்கிறார்.

தங்க நிறத்தில் தகதகக்கும் தேள் அடைத்த குடுவைக்குள் இருந்து தங்க நிற ஜுவாலை கொண்ட புகைச் சுழல் எழுந்து, அவரை நோக்கிச் செல்கிறது.

அவரது காது மடலின் பின்னே பொறிக்கப்பட்டிருக்கும் தேள் முத்திரைக்குள் புகுகிறது.

சில நொடிகள் ஜொலிக்கிறது.

அவர் கண்கள் காண்பதெல்லாம் தங்கமாக ஜொலிக்கின்றன.

“தங்கம் தங்கம்” என்று இளைஞர் மகிழ்ச்சியில் கொந்தளித்துச் சிரிக்கிறார்.

சில நொடிகளில் காதுமடலின் பின்னே ஜொலிக்கும் நிறங்கள் பலவாக மாறி இறுதியில் பச்சை நிறமாக மாறுகிறது.

இளைஞர் கதறத் தொடங்குகிறார்.

கதறிக் கதறி கைகால்கள் வலிப்பு வந்து போல் இழுத்துத சரிந்து இறக்கிறார்.

அவரது காது மடலின் நுனி மட்டும் நீலமாக மாறுகிறது.

காமிரா இரட்டை வளையத்தை விறுவிறுவென்று வேகமாகச் சுழல்கிறது.

கைகளை அகல விரித்து முதுகைக் காட்டி நிற்கும் ஒரு உருவத்தின் மீது குவிகிறது.

 

காட்சி 3:

டைட்டில்ஸ்

மலையாள மாந்தரீகப் பாரம்பரியத்தை காட்சி ரூபமாக விளக்கியபடி டைட்டில்ஸ்.

 

காட்சி 7:

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பத்திரிகை அலுவலகம்.

டைப்ரைட்டர்கள் படபடக்கும் ஓசை.

அவற்றினூடாக நாயகன் நடந்து வருகிறார்.

காமிரா அவர் தோள்பட்டையூடாகப் பயணிக்கிறது.

தோள் உயர அளவில், கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் கதவினூடாக பார்த்து, கதவை லேசாகத் திறந்து, “மே ஐ கம் இன் சார்?” என்கிறது நாயகன் குரல்.

“யெஸ்” என்று கண்டிப்பான குரல் காமிராவிற்கு முதுகை காட்டியிருக்கும் நாற்காலியின் பின்னிருந்து கேட்கிறது.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறார் நாயகன்.

“ஐ ஆம் ________; ___________________ ஃப்ரம் மெட்ராஸ்.”

“வெல்… யூ ஆர் 3 மினிட்ஸ் இயர்லி.”

“யெஸ் சார். நான் எப்பவுமே இருக்கவேண்டிய இடத்தில 3 நிமிஷத்துக்கு முன்னாடியே இருப்பேன்.”

பத்திரிகை எடிட்டர் (தேங்காய் சீனிவாசன் பாணியில்): “குட்! குட்! உன்னோட முழு ப்ரொஃபைலும் வந்திடுச்சு. 3 நிமிஷத்துக்கு முன்னாடி ஸ்பாட்டுல நிப்ப, 3 நிமிஷத்துக்குள்ள தேவையான தகவலை சேகரிச்சிடுவ, 3 நிமிஷத்துக்குள்ள தேவையான பேட்டிய எடுத்துடுவ… கல்யாணம் ஆயிடுச்சா?”

நாயகன்: (அப்பாவித் தனமாக) “இன்னும் இல்லைங்க சார்.”

எடிட்டர்: (முறைத்துப் பார்க்கிறார்) “குட் குட். யூ ஆர் லக்கி. கல்யாணத்துக்குப் பிறகு… தினம் 3 மணி நேரம் பொண்டாட்டி பேச்சை கேட்கணும்… ராத்திரி ஒரு மணிநேரம். யங்க் கய். உனக்கு இதெல்லாம் புரியாது. காதல் கீதல்… ?”

நாயகன்: (அசடுவழிந்தபடி) “நோ… நத்திங் சார்.”

எடிட்டர்: “வெரி குட். வெரி குட். காதலுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம். யூ ஆர் லக்கி. காதல் இல்ல. கல்யாணம் இல்ல. சோ, ஒரு நாளைக்கு 14.00 மணி நேரம் பத்திரிகைக்காக நீ வேலை செய்யுற. குட். உனக்கு க்வார்டர்ஸ் எல்லாம் ஒதுக்கியாச்சு. தங்கிக்கலாம். சமையல்காரன், பியூன், அட்டெண்டர் எல்லாம் இருப்பாங்க. (முறைத்து) நோ வுமன். பெண் வாசனையே இருக்கக்கூடாது. அண்டர்ஸ்டுட்!” (முறைக்கிறார்)

நாயகன்: “யெஸ் சார்!”

எடிட்டர்: “வேலை கெட்டுடும் மேன்! வேலை கெட்டுடும்!” (உதட்டை பிதுக்கியபடி மேல் நோக்கி வெறிக்கிறார்).

பழங்காலத்து கறுப்பு டெலிஃபோன் மணி அடிக்கிறது.

டெலிஃபோனை முறைக்கிறார்.

தயங்கி எடுக்கிறார்.

மறுமுனையில் ஒரு பெண் குரல் கீச்சிட்டுக் கத்துகிறது.

எடிட்டர்: (டெலிஃபோனின் வாய் பகுதியை மூடி)” லைஃப் இஸ் எ நான்சென்ஸ். வைஃப் இஸ் எ நியூசென்ஸ்! டோண்ட் கெட் இண்டு எனி வுமன் இன் திஸ் ஐலேண்ட்!”

 

காட்சி 18:

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக மாஜிக் நிபுணர் சிறிய உரையாற்றுகிறார்.

மாஜிக் நிபுணர்: “இந்தப் பத்து நாட்கள் நடந்த மேஜிக் ஷோ – வுடைய கடைசி நாள் இன்று. இன்னைக்கு இதுவரை எந்த மெஜிஷியனும் செய்யாத சில மேஜிக் காட்சிகளை செஞ்சு காட்டப் போறேன். அதை பார்க்கிறதுக்காக, சில முக்கியமான விஐபி -க்கள் இங்க வந்திருக்காங்க. அவங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என் மேஜிக் ஷோவை தொடர்ந்து ஒருவாரமா சிலர் தினம் வந்து பாத்துட்டு இருக்காங்க. அவங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

(காமிரா சட்டென்று இன்ஸ்பெக்டர் மீது குவிகிறது. அவர் சங்கடத்திலும் எரிச்சலிலும் நெளிகிறார்).

இந்த உலகத்துல பலமானதுதான் வாழும்னு பலபேர் நினைக்கிறாங்க. ஆனால், பலம் இல்லாததுதான் தாக்குப் பிடிச்சு வாழும்னு நான் நினைக்கிறேன். அதுதான் இன்னைக்கான மேஜிக் ஷோ. பார்த்து ரசிச்சு பாராட்டுங்க, சந்தோஷப்படுங்க.”

கூட்டத்தினர் கரகோஷம்.

மேடையின் இருபுறமிருந்து நுழையும் உதவியாளர்கள், ஒரு பக்கம் கூண்டில் அடைக்கப்பட்ட முயல் ஒன்றைக் கொண்டுவந்து வைக்கிறார்கள். மறுபக்கம் கண்ணாடிக்கூண்டில் அடைக்கப்பட்ட மலைப் பாம்பு ஒன்றை வைக்கிறார்கள்.

இரண்டு கூண்டுகளையும் இணைக்கும் ஒரு நீண்ட கண்ணாடிக் கூண்டை இருவர் சுமந்து வந்து இரண்டுக்கும் இடையே பத்திரமாக வைக்கிறார்கள்.

உதவியாளர்கள் அனைவரும் மேடையின் ஓரத்திற்கு போய் நிற்கிறார்கள்.

மேஜிக் நிபுணர்: “இப்போ, இந்த இரண்டு கூண்டுகளோட கதவுகளைத் திறக்கப் போறேன். முயலை மலைப் பாம்பு முழுங்கிடுமா? இல்ல, முயல் தப்பிச்சுக்குமா? நீங்களே பாருங்க.”

சொல்லிவிட்டு கையை உயர்த்துகிறார்.

இரண்டு கூண்டுகளின் கதவுகளும் பெருத்த பின்னணி ஓசையில் திறக்கின்றன.

முயல் மிரட்சி கொள்கிறது. மலைப் பாம்பு மெதுவாக அசைகிறது. நாக்கை நீட்டி முகர்ந்து முயல் இருக்கும் கூண்டை நோக்கி மெதுவாக அசைந்து முன்னேறுகிறது.

மலைப் பாம்பு முயல் இருக்கும் கூண்டை நெருங்குகிறது. முயல் மேலும் மிரட்சியடைகிறது.

மாஜிக் நிபுணர் தனது கைகளை தேய்த்து காற்றில் ஊதுகிறார்.

(கூட்டத்தில் அமர்ந்திருக்கும் நாயகன், மேஜிக் நிபுணரின் கைகளைக் கூர்ந்து கவனிக்கிறான்)

தகதகக்கும் வெள்ளி நிறப் புகை காற்றில் மிதந்து கண்ணாடிக்  கூண்டிற்குள் ஊடுருவிப் புகுந்து முயலின் உடலுக்குள் பாய்கிறது.

முயலின் கண்கள் சிவக்கின்றன. முயல் சிலிர்த்து விறைத்து நிற்கிறது.

மலைப் பாம்பு அதை நெருங்கியவுடன் சடாரென்று, முயல் கீரிப்பாம்பாக உருமாறுகிறது.

சீறிப்பாய்ந்து மலைப் பாம்புடன் சண்டையிடுகிறது.

சில நிமிடங்களில் மலைப் பாம்பு ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது.

கீரிப்பிள்ளை மெதுவாக மீண்டும் முயலாக மாறுகிறது. முயல், இறந்து கிடக்கும் மலைப்பாம்பிற்கு அருகில் இருந்து தூர ஓடி நின்று மிரட்சியோடு பார்க்கிறது.

அரங்கத்தில் இருக்கும் கூட்டத்தினர் இக்காட்சியை பார்த்து அதிர்ச்சியில் அமைதியாக இருக்கின்றனர்.

மாஜிக் நிபுணர் மேடையின் மையத்திற்கு வருகிறார்.

மாஜிக் நிபுணர்: (பார்வையாளர்களை நோக்கி) “பலமானது ஜெயிக்குமா? பலவீனமானது ஜெயிக்குமா?” என்று கேள்வி தொடுக்கிறார்.

கூட்டத்தினர்: “பலவீனமானதே ஜெயிக்கும்” என்று கூச்சலிடுகின்றனர்.

மாஜிக் நிபுணர் குரூரமாகப் புன்னகைப்பது க்ளோஸ் அப்பில்.

விஐபி காலரியில் இருப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருப்பது மிட் – க்ளோஸ் அப்பில்.

சுதாரித்துக் கொண்டு அவர்களும் கைதட்டுகிறார்கள்.

காமிரா மேடையை நோக்கித் திரும்புகிறது.

 

காட்சி 19:

மாஜிக் நிபுணர் மேடையின் நடுவே வந்து குனிந்து கரகோஷத்தை ஆமோதித்து ஏற்றுக் கொள்கிறார். பின்னணியில், உதவியாளர்கள், கூண்டுகளை மேடையை விட்டு அகற்றுகிறார்கள்.

மாஜிக் நிபுணர்: “மேலும் சில அற்புத காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்,” என்று சொல்லி மேடையின் நடுப் பகுதியில் பின்னே நகர்ந்து செல்கிறார். உதவியாளர்கள் வேறு கூண்டுகளை கொண்டு வந்து வைக்கிறார்கள்.

 

காட்சி 20:

பாடல் காட்சி. பாடல் காட்சியினூடாக, பல்வேறு மேஜிக் காட்சிகள் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.

பெரிய மீனை சிறிய மீன் விழுங்குவது, பாம்பைத் தவளை விழுங்குவது, புறா பருந்தாக மாறி சண்டையிடுவது போன்ற காட்சிகள் பாடலின் ஊடாகக் காட்டப்படுகின்றன.

பாடலின் முடிவில் மாஜிக் நிபுணர், பார்வையாளர்களின் கரகோஷத்தை ஏற்றுக்கொண்டு குனிந்து மேடையில் இருந்து மறைகிறார்.

 

காட்சி 22:

ஒரு நாளிதழ் உதறப்பட்டு விரிக்கப்படுகிறது.

விரியும் பேப்பரில் உள்ள நியூஸ் ஐட்டங்களின் மீது குவியும் கேமிரா.

“தினப் பருந்து” – எழுத்துக்கள். பாம்பைத் தன் அலகில் கவ்வியிருக்கும் பருந்தின் உருவம் – லோகோ.

“உண்மை உங்கள் கைகளில்” என்ற டேக் லைன்.

பேப்பரைப் பிடித்திருக்கும் கை பேப்பரை உதறுகிறது.

தலைப்புச் செய்தியாக “மேஜிக் மன்னன் ____________”.

காணாமல் போன செட்டியார் மகன் பற்றிய விளம்பரம்.

பேப்பரை வேகமாக மடித்து வைக்கும் கைகள்.

கோட் சூட்டில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சலிப்போடு பேசுகிறார்: “என்னய்யா இது காலங்காத்தால! அந்த செட்டியார் சும்மான்னு இருக்கமாட்டானா?”

டெலிஃபோன் மணி அலறுகிறது.

தயங்கி எடுக்கிறார் இன்ஸ்பெக்டர்.

அடுத்த முனையில் குரலொன்று கோபமாக பேசுகிறது.

“எஸ் சார்! எஸ் சார்!” என்று பதற்றத்தோடும் பணிவோடும் இன்ஸ்பெக்டர்.

டெலிஃபோன் ரிசீவரை வைத்துவிட்டு, ஏட்டை நோக்கி,

இன்ஸ்பெக்டர்: “க்ரைம் சீனே இல்லாம, க்ரைம எப்படிய்யா கண்டுபிடிக்கிறது? என் பையன் காணாம போகல, கொன்னுட்டாங்க கொன்னுட்டாங்கன்னு அந்தக் கிழம் அலறுதுய்யா” என்று எரிச்சலோடு சலித்துக்கொள்கிறார்.

ஏட்டு: “சார்! கடைசியா அவர் பையன் இருந்த இடத்தை போய் அலசிடலாம் சார். காணாம போனாலுஞ்சரி, கொலை செஞ்சிருந்தாலும் சரி, அதுதானே சார், க்ரைம் சீன்!” என்கிறார்.

இன்ஸ்பெக்டர்: (ஏட்டை பெருமித்தோடு பார்த்து) “பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். என்னோட கூடவே இருந்து நீயும் என்னை மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சிட்டேய்யா! கமான்!” என்று சொல்லி, ஏட்டை தோளில் தட்டிக் கொடுத்து, இருவரும் கிளம்புகின்றனர்.

 

காட்சி 30:

செட்டியார் மகன் பங்களாவின் தோட்டத்தின் பின்புறமாக வரும் நாயகனும் நாயகியும் பின்பக்க வேலியை அகற்றி உள்ளே நுழைகிறார்கள். தோட்டத்தில் ஒரு மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியை எடுத்து வந்து, ஒரு ஜன்னலுக்குக் கீழே வைத்து அதன் மீதேறி ஜன்னலை சிறு கொடுக்கியின் மூலம் திறக்கிறான் நாயகன். அறைக்கு உள்ளே இறங்கி நாயகியை மேலே ஏறி வர சைகை செய்கிறான். நாயகியும் ஏணியின் மேலேறி ஜன்னல் வழியாக  தாழ்வான அறைக்குள் குதிக்கிறாள்.

மங்கலான வெளிச்சம் படர்ந்த படுக்கை அறை. “இங்கே ஒன்னும் இல்லை, நான் ஏற்கனவே அலசிட்டேன்,” என்று மெதுவாகச் சொல்லி, பின் தொடர்ந்து வருமாறு அவளுக்குச் சைகை செய்து கதவருகே சென்று மெல்லத் திறந்து பார்க்கிறான். படுக்கை அறைக்கு வெளியே பரந்த ஹால். ஒரு வேலையாள், எதிர்ப்புறச் சுவற்றில் இருக்கும் பெரிய புகைப்படம் ஒன்றைத் துடைத்துவிட்டு, துண்டை உதறிவிட்டு, ஹாலை விட்டு வெளியேறி கதவைச் மூடுகிறான்.

எதிர்ப்புற அறை பூசை அறை என்று தோற்றத்திலேயே தெரிகிறது. நாயகன் கதவை மேலும் சற்று அகலத் திறந்து யாரும் இல்லை என்று உறுதி செய்துகொண்டு, கதவைத் திறந்துகொண்டு பூசை அறையை நோக்கிச் செல்கிறான். நாயகி பின் தொடர்கிறாள்.

பூசை அறையின் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. திரும்பிவிடலாமா என்ற யோசனையுடன் நாயகன் தயங்கி நிற்கிறான். சற்றென்று விறைப்பாகி, கதவில் காதை வைத்து உற்றுக் கேட்கிறான். நாயகி புரியாமல் விழித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏதோ சொல்ல முற்படுகிறாள். வாய் மீது விரலை வைத்து பேசாதே என்று எச்சரிக்கிறான்.

யோசித்தபடி அவளை நெருங்கி “பூனை” என்று காதில் கிசுகிசுக்கிறான்.

நாயகி புரியாமல் மேலும் கீழும் பார்த்து, எங்கே என்று சைகையில் கேட்கிறாள்.

கதவைக் காட்டி, “பூட்டிய அறைக்குள்ள பூனை,” என்று கிசுகிசுக்கிறான்.

“அதுக்கென்ன?” என்று புரியாமல் கேட்கிறாள்.

“பூனை சமையலைறைக்குள்தான் சாமான்களை உருட்டும்,” நாயகன்.

“ஆமால்ல,” ஆச்சரியப்பட்டபடி நாயகி, “தெரியாம மாட்டிட்டு இருக்கும் பாவம். கதவ திறந்து விட்டு காப்பாத்திடலாமா?” என்று கொஞ்சும் தொனியில் கேட்கிறாள்.

“நாம பூனைய காப்பாத்தவா வந்திருக்கோம்?” என்று சொல்லி முறைக்கிறான் நாயகன். “பூசை அறைக்குள்ள பூனை ஏன் போனது?” என்று சில நொடிகள் யோசித்தபடி, ஒரு முடிவிற்கு வந்தவனாக, தனது சட்டையின் உள் பாக்கெட்டிற்குள் கையை விட்டு, பளபளக்கும் சிறிய கம்பி ஒன்றை எடுக்கிறான்.  அதன் மேல் பாகத்தை அழுத்தி இழுத்தவுடன் அது மேலும் சற்று நீண்டு முனையில் இருபக்கமும் சிறு கம்பிகள் வெளிப்படுகின்றன.

அக்கம்பியை கவனமாக பூட்டின் சாவித் துவாரத்திற்குள் நுழைத்துத் திருப்புகிறான். காமிரா பூட்டிற்குள் ஜூம் ஆகி, உள்ளே சென்ற கம்பி திருகித் திருகி, பூட்டின் லீவரைத் தள்ளித் திறப்பதை காட்டுகிறது. பூட்டு திறக்கும் லேசான க்ளிக் சத்தம்.

பூட்டின் உள்ளிருந்து காமிரா ஜூம் அவுட்.

பூட்டில் இருந்து கம்பியை எடுக்காமல், தாழ்ப்பாளில் இருந்து லாவகமாக பூட்டை எடுத்து கதவைத் திறக்கிறான் நாயகன்.

மியாவ் என்ற சத்தம் சன்னமாக கேட்கிறது.

மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு இருவரும் உள்ளே நுழைகிறார்கள். விஸ்தாரமான பூசை அறை முழுக்க, சாமிப் படங்களும் பூசை சாமான்களும் நிறைந்திருக்கின்றன. அறையின் எதிர் முனையில் சில விக்கிரகங்களும் அவற்றின் பாதங்களுக்கடியில் பூசைப் பொருட்களும் இருக்கின்றன. காமிரா ஒருமுறை அறையை சுற்றிச் சுழன்று, எதிர்ப்புறம் இடது மூலையில் பதுங்கி நின்று அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கும் பூனையின் மீது குவிகிறது.

அதைக் கண்டதும் நாயகி, “அச்சோ, பாவம் குட்டி,” என்று கொஞ்சும் தொனியில் அதை நோக்கி கையை நீட்டி வரச் சொல்கிறாள். தயங்கி மிரட்சியுடன் பார்க்கும் பூனை சரேலெனப் பாய்ந்து, அவர்களைத் தாண்டி லேசாகத் திறந்திருக்கும் கதவு இடுக்கின் வழியாக வெளியே ஓடிவிடுகிறது.

ஓடும் பாய்ச்சலில் ஒரு வெங்கலச் சொம்பு அதன் கால்பட்டு உருள்கிறது.

அதன் எதிர்பாராத பாய்ச்சலில் பயந்து பின்னே சாய்ந்து விழ இருக்கும் நாயகியை சட்டென்று தாங்கிப் பிடிக்கிறான் நாயகன். அலற முற்படும் அவள் வாயை அழுத்தி சத்தம் வெளிப்படாமல் தடுக்கிறான்.

அதே சமயம், உருண்டோடும் வெங்கலச் சொம்பு மேலும் உருளாமல் தன் காலால் தடுக்கிறான். அது இருந்த இடத்தில் உருண்டபோது ஏற்பட்ட சத்தத்தையும் தன் அருகில் உருளும்போது ஏற்பட்ட சத்தத்தையும் நொடிப் பொழுதில் கூர்ந்து கவனிக்கிறான்.

தாங்கிப் பிடித்திருக்கும் நாயகியை நேராக நிற்கச் செய்கிறான். அவள் தன் கலைந்த ஆடையைச் சரி செய்து கொண்டு வெட்கப்பட்டு ஒதுங்கி நின்று கதவை இறுகச் சாத்துகிறாள்.

அவளைப் பொருட்படுத்தாத நாயகன், அந்த வெங்கலச் சொம்பை கையில் எடுத்து, தான் நின்ற இடத்தில் லேசாகத் தட்டி அதன் ஒலியைக் கவனித்து, பூனை நின்றிருந்த சுவர் மூலைக்கு அருகாகச் சென்று அங்கும் தட்டி ஒலியைக் கூர்ந்து கவனிக்கிறான். தரையின் ஒலிக்கு மாறாக மரத்தின் ஒலி ஏற்படுவதை கவனிக்கிறான்.

எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறான். சட்டென்று திரும்பி விக்கிரகங்கள் இருக்கும் இடத்தைக் கூர்ந்து பார்க்கிறான். விக்கிரகங்களின் பாதங்களுக்கிடையில் பதிக்கப்பட்டிருக்கும் வழுவழுப்பான மணிகளை நோக்கி அவன் பார்வை குவிகிறது. நெருங்கிச் சென்று அவற்றை உற்றுப் பார்க்கிறான். தங்க நிறத்தில் ஜொலிக்கும் கல்லை யோசித்தபடி அழுத்துகிறான். அது உள்ளே அழுந்துகிறது. மரம் கிறீச்சிடும் ஓசை மெலிதாகக் கேட்கிறது. பூனை அமர்ந்திருந்த இடத்தில் தரையில் பதிக்கப்பட்ட மரக் கதவு உள்புறமாகத் திறக்கிறது. இருட்டில் கீழே செல்லும் மரப்படிக்கட்டுகள் தெரிகின்றன.

சட்டைப் பையில் இருக்கும் பேனைவை எடுத்து அழுத்துகிறான். அதன் முனையில் இருந்து கூர்மையான டார்ச் ஒளி வீசுகிறது. ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் நாயகியின் கையைப் பிடித்துக் கொண்டு டார்ச் லைட் ஒளியில் படிக்கட்டுகளில் இருவரும் கீழே இறங்குகிறார்கள். படிகளின் இறுதியில் பக்கவாட்டுச் சுவரின் மீது டார்ச் ஒலியைப் பாய்ச்சும் நாயகன், அங்கு ஸ்விட்சுகள் இருப்பதைக் கண்டுகொள்கிறான். ஒவ்வொரு ஸ்விட்சாக போடப் போட வலப்பக்கம் ஒரு பெரிய ஹாலில் ஒவ்வொரு விளக்காக எரியத் தொடங்குகிறது.

வலப்பக்க சுவரெங்கும் அலமாரிகளில் கண்ணாடிப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. நாயகன் அதை நோக்கி நகர, பின் தொடரும் நாயகி பயத்தோடு நாயகனின் தோளைப் பற்றிக் கொள்கிறாள். இடப்புறமாகத் திரும்பும் நாயகன் இடப்புறச் சுவற்றின் கீழ் குள்ளமான ஒரு பயங்கர உருவச் சிலை இருப்பதைக் காண்கிறான் (குட்டிச் சாத்தான்). அதன் கீழே பூசை நடந்திருப்பதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. சீராக அடுக்கி வைக்கப்பட்ட சிறு மண் பாண்டங்கள், வேர்கள், தகடுகள், வெள்ளை மாவில் எழுதப்பட்ட புரியாத குறியீடுகள்.

நாயகன் வலப்புறச் சுவற்றின் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் கூண்டுகளைப் பார்வையிடுகிறான். ஒவ்வொன்றிலும் ஒரு விஷப் பூச்சி, சிறு விலங்கு மிரட்சியோடு கூண்டின் மூலையில் ஒதுங்கியிருக்கின்றன. சில இவர்களைக் கண்டதும் கூண்டிற்குள் அலைபாய்கின்றன. வரிசையாக அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டுவருகிறார்கள். வரிசையின் இறுதியில் ஒரு கண்ணாடிக் கூண்டு லேசாக ஒளிர்வதைக் கவனிக்கிறார்கள். அதை நோக்கிச் செல்கிறார்கள். பிற கூண்டுகளை விட கனமான – கடினமான கண்ணாடியால் ஆன கூண்டு. அதற்குள் தங்க நிறம் ஜொலிக்கிறது. நெருங்கிச் செல்கிறார்கள்.

சரேலென கண்ணாடிக் கூண்டின் முன்புறம் தகதகக்கும் தேள் ஒன்று சீறிப்பாய்ந்து தன் கொடுக்கால் கண்ணாடியில் கொட்டுகிறது. அதன் கொடுக்கு தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.

நாயகன், தன் உள்பாக்கெட்டில் இருந்து எடுக்கும் சிறு கேமராவைக் கொண்டு அதைப் படம் பிடிக்கிறான். ஃப்ளாஷ் லைட் ஒளியில் தேள் மேலும் சீறுகிறது. இருவரும் பின்னே நகர்ந்து அதை உற்றுப் பார்க்கிறார்கள்.

நாயகன், “இங்க இருக்கிறது நல்லதில்ல” என்று சொல்லி அவசர அவசரமாக, அந்த கண்ணாடிக் கூண்டுகளையும், பூசை நடந்த இடம், அகோரமான சிலை அனைத்தையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, நாயகியை அழைத்துக்கொண்டு, மாடிப்படியை நோக்கிச் சென்று விளக்குகளை அணைத்துவிட்டு இருவரும் மேலே ஏறுகிறார்கள். அவர்களுக்குப் பின்னால், தேளின் தங்க ஒளி மங்கி மறைகிறது.

மேலேறி, பூசை அறைக்குள் வந்து ரகசியக் கதவை மூடி, பூசை அறைக் கதவையும் பூட்டிவிட்டு, மீண்டும் படுக்கை அறைக்குள் நுழைந்து சற்று நின்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

“சரி கிளம்பு” என்று சொல்லி நாயகியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்து செல்கிறான். ஜன்னலை இருவரும் நெருங்கும்போது, அவர்களுக்குப் பின்னால், கதவு தாழிடப்படும் சத்தம் கேட்கிறது.

அறையின் கதவைத் தாழிட்டு ஒரு மர்ம உருவம் அவர்களை வெறித்துப் பார்த்து நிற்கிறது.

அவ்வுருவம் நாயகனை தாக்கத் தொடங்குகிறது. பூட்டிய அறைக்குள் இருவருக்கும் லாவகமான சண்டைக் காட்சி. நாயகன் அந்த மர்ம உருவத்தைக் காயப்படுத்திவிட, அது இவர்கள் வந்த ஜன்னல் வழியாக தாவிக் குதித்துத் தப்பிச் சென்றுவிடுகிறது. நாயகி உடன் இருப்பதால் அதைப் பின் தொடராமல், விட்டுவிடுகிறான். இருவரும் ஏணியின் மூலம் கீழே இறங்கிச் செல்கிறார்கள்.

 

காட்சி 34:

காலை 8 மணியளவுப் பொழுது. மலைப்பாங்கான காட்டிற்குள் நாயகி முன்னே நடக்க, நாயகன் பின் தொடர்ந்து செல்கிறான். பசுமையான செடி கொடிகளை விலக்கி நடந்தபடி செல்பவர்கள் முன்னால், சட்டென்று சிறு பாறைகள் மட்டுமே நிறைந்த ஒரு சிறிய வெட்டவெளி விரிகிறது. அதற்கு அப்பால் படர்ந்திருக்கும் பசுமையான செடிகொடிகளும் நெருக்கமான மரங்களும்.

மலைச் சரிவின் இடப்பக்கம், பெரும் பள்ளத்தாக்கு. அதன் விளிம்பில் ஆளுயர பத்ரகாளிச் சிலை. அதன் முன்னே பூசை செய்து பல மாதங்கள் ஆனதற்கான அடையாளங்கள். அம்மன் சிலைக்கு நேரெதிரே மலைச்சுவற்றுக்கு முன்பாக பலிபீடம் போல தோற்றம் தரும் ஒரு பாறை. அதில் பிணைத்துக் கட்டுவதற்கு ஏற்றபடி பாறையில் புதைக்கப்பட்ட சிறு கம்பி வளைவுகள். மேற்புறத்தில் பாறையில் புதைந்திருக்கும் மற்றொரு சிறு கம்பி வளைவு.

அம்மனை பயத்துடன் கும்பிட்டு நாயகனை நோக்கித் திரும்பும் நாயகி, “அந்தப் பாறை மேலதான் அவன் கிடந்தான். கை கால் ரெண்டும் விரிச்சு, தலை மட்டும் தொங்கிக் கிடந்துச்சு,” என்கிறாள்.

நாயகன் அதைக் கற்பனை செய்து பார்க்கிறான்.

“இங்க வர்றதுக்கு நாம வந்த இந்த ஒத்தையடிப் பாதை ஒன்னுதான் வழியா?” என்று கேட்கிறான்.

“எனக்கு தெரிஞ்சு இது ஒன்னுதான் வழி. அந்தப் பக்கம் என்ன இருக்குதுன்னு தெரியாது,” என்று எதிர்ப்பக்க வெளியைக் காட்டி உதட்டைப் பிதுக்குகிறாள்.

“இங்க வந்து சேர்றதுக்கு சரியா ஒன்றரை மணிநேரம் ஆச்சு. வண்டிய கீழ நிறுத்திட்டு, இந்த ஒத்தையடி பாதையில ஏறி வர்றதுக்கு 15 நிமிஷம்” என்று சொன்னபடி தன் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான்.

“நீ அந்த உடம்பை கீழ இழுத்துட்டு போக எவ்வளவு நேரமாச்சுன்னு தோராயமா சொல்லமுடியுமா,” என்று கேட்கிறான்.

“ஒரு அரைமணி நேரம் ஆயிருக்கும்,” நாயகி.

“நீ பொணத்த கீழே இழுத்துட்டு போனபோது, அது உரசி இந்த செடியெல்லாம் அந்தப் பக்கமா சாஞ்சிருக்கு. பொணத்தை மேலே இழுத்து வந்ததுக்கான தடயம் எதுவும் இல்லை. நாலைந்து பேர் தூக்கி வந்திருக்கவும் முடியாது. நிறைய பேர் நடந்து வந்திருந்தா, பாதையோரப் புல் நசுங்கியிருக்கும். அப்படி எதுவும் இல்லை. அதனால, ஒரு நல்ல பலசாலியான ஆள்தான் அவ்வளவு கணமான பொணத்தை தூக்கி வந்திருக்கனும்,” என்று விவரிக்கிறான். (அவன் விவரிப்பது மங்கலான காட்சி ரூபமாக காட்டப்படுகிறது).

“உடம்புல ஏதாச்சும் காயம் இருந்துச்சா?” நாயகியைக் கேட்கிறான்.

“வலது கை நாடி நரம்பை அறுத்திருக்காங்க. ஆனா, நான் எடுத்தப்ப ரத்தம் எதுவும் கசிஞ்சு இல்ல. அதனால…” என்று யோசித்தபடி இழுக்கிறாள்.

கட்டப்பட்ட கம்பிகளுக்கருகில் சென்று இரத்தம் கசிந்த அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று உற்று நோக்கும் நாயகன், அங்கிருந்தபடியே அவளை நோக்கித் திரும்பி, “ஒருத்தர் இறந்த 15 நிமிஷத்துல அவர் உடம்புல இருக்குற ரத்தம் உறைஞ்சு போயிடும். அதனால, அவரை இங்க பலிகொடுத்துட்டாங்கன்னு காட்டுறதுக்காக செத்த பல மணிநேரத்துக்குப் பிறகு மணிக்கட்டை கீறி காயம் ஏற்படுத்தியிருக்காங்க.

நாம இங்க மேல ஏறி வர்றதுக்கே ஒன்றரை மணிநேரம் ஆச்சு. செத்துப்போன ஒரு ஆளை தூக்கிட்டு வர்றதுக்கு இன்னும் அதிக நேரம் ஆகியிருக்கும்.

ஒன்னு அவர் கொலை செய்யப்பட்டிருக்கனும் இல்லைன்னா எதிர்பாராம செத்திருக்கனும். ஏற்கனவே இறந்துபோனவரை காட்டுவாசிங்க பலிகொடுத்துட்டாங்கன்னு திசைதிருப்பறதுக்காக, இங்க வந்து பலிகொடுத்த மாதிரி கட்டி வச்சு மணிக்கட்ட அறுத்திருக்காங்க,” என்று சொல்லி புன்னகைக்கிறான்.

நாயகி, அவனை ஆச்சரியத்தோடு பார்த்து, “உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்?” என்று சொல்லி சிரிக்கிறாள்.

“எனக்கு உன்னைத் தெரியும், என்னைத் தெரியும், அந்த சாமியத் தெரியும். ஆனால், இந்த சாமிய கும்பிடுறவங்க யாரு? அவங்க எங்க இருக்காங்க, என்ன செய்யறாங்க, இந்தச் சிலைய எதுக்காக இங்க வச்சிருக்காங்க, எப்ப பூசை செய்வாங்க, அதெல்லாம் தெரியாது. உனக்குத் தெரிஞ்சா சொல்லேன்,” என்று கேட்கிறான்.

 

காட்சி 57:

விஞ்ஞானி: இந்த போதை மருந்து கடத்தல்ல இரண்டு விஷயம் இருக்கு. ஒன்னு, ஏகப்பட்ட பணம். அதுவும் இந்த போதை மருந்தோட தரம் – பல வெளிநாடுகளுக்கு இங்க இருந்து கடத்தப்படுற அளவுக்கு தரமானது. இதற்கு அடிமையானவங்க அதில இருந்து மீளவே முடியாது. ஆனால், உடம்பையும் ரொம்ப பாதிச்சிடாது. நீண்ட காலம் இதை அனுபவிக்கலாம். உலகத்தோடு பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு பெரிய ஆபத்தில்லாத சொர்க்க சுகம் தரும் பொருள் இது.

ஆனால், இங்க நடந்துட்டு இருக்கறது, வெறும் போதை மருந்துக் கடத்தல் மட்டுமில்ல. (நாயகனை ஏறிட்டுப் பார்த்து) மாஜிக் நிபுணர் கைகள்ல இருந்த மருந்த லாவகமா தேய்ச்சு நீ எடுத்து அனுப்புனத, நான் இப்ப இருக்கிற எல்லா அப் டு டேட் கெமிக்கல் பரிசோதனையும் செஞ்சு பார்த்துட்டேன். அது எந்த கெமிக்கல் அனாலிஸசுக்கும் அகப்படல்ல. அதுல விஷக் கலவை எதுவும் இல்ல.

எனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும் அது சாதாரணமான கெமிக்கல் இல்ல. ஆல்கெமியால உருவாக்கப்பட்டது. ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமா மாத்துறத ஆல்கெமின்னு சொல்வாங்க.

பித்தளைய தங்கமா மாத்துறதா சொல்வாங்க. கண்ணாடிக் கல்லை வைரக் கல்லாக மாத்துறதா சொல்வாங்க. சில இடங்கள்ல இதுக்காக நரபலி கொடுக்குற வழக்கமும் இருந்திருக்கு. அது விஞ்ஞானம் வளர்றதுக்கு முன்னாடி மந்திரவாதிகள் மக்களை ஏமாத்துறதுக்காக செய்யப்பட்ட ஒரு கண் கட்டி வித்தை, மூட நம்பிக்கையை மூலதனமா கொண்ட ஏமாற்று வித்தை.

ஆனா, நீ அனுப்புன சாம்பிளை அனாலிஸிஸ் செஞ்சு பார்த்த பிறகு அது உண்மையா இருக்குமோன்னு எனக்கே சந்தேகமா இருக்கு. ஒரு விஞ்ஞானிக்கு விஞ்ஞானமே மூடநம்பிக்கையாகிடக்கூடாது இல்லையா (புன்னகைக்கிறார்).

இந்தக் காலத்திலயும் இதை ப்ராக்டிஸ் செய்யறாங்கன்னா, அவங்க சாதரணமான ஆட்களா இருக்க முடியாது.

அவங்க வேற ஏதோ சக்திய எதிர்பார்த்துதான் இந்த மாந்திரீகத்தை எல்லாம் செய்யறாங்க. (நாயகனை பார்த்து) இங்க மலைவாழ் மக்கள் தோட்டங்கள்ல கொத்தடிமைகளா வேலை பாக்குறாங்கன்னு சொன்ன இல்லையா? ஒரு வேளை அவங்களை இந்த மாந்திரீகங்களால பயமுறுத்தி அடிமையாகவே வச்சிருக்கறதுக்காக இருக்கலாம். சொல்றது என்னோட வேலை. கண்டுபிடிக்கிறது உன்னோட வேலை. (சிரிக்கிறார்)

நாயகன்: “நான் அனுப்புன தகவல்களை வச்சே இவ்வளவு ஊகம் செஞ்சிருக்கீங்க,” என்று சொல்லி சிரிக்கிறான். “இங்க இருக்கிற தோட்டங்கள் பிரிட்டிஷ்காரங்க ஆரம்பிச்சுது. நாடு விடுதலை ஆன பிறகு படிப்படியா அவங்க இங்க இருக்குற பெரிய பணக்காரர்களுக்கு வித்துட்டு போய்ட்டாங்க. அதுல பலபேர் இந்த ஊரை சேர்ந்தவங்களே இல்லை. சிலர் வட இந்தியாவை சேர்ந்த பெரிய கம்பெனிக்காரங்க. சிலர் கேரளாவுல பெரிய முதலாளிகள். அவங்களுக்கு தேவை சீப் லேபர். அதுவும் கூலியே இல்லாத அடிமைகள் என்றால் கொள்ளை லாபம். ஆரம்பத்துல இந்தப் பகுதியில காலம் காலமா வாழ்ந்து வந்த மலை வாழ் மக்களை நிறைய சம்பளம் தர்றோம்னு சொல்லி வேலைக்கு வச்சி, அவங்களோட தேவைகளுக்கு கடனை அள்ளிக் கொடுத்து படிப்படியா கொத்தடிமைகளா ஆக்கி வச்சிருக்காங்க. சுதந்திரமா வாழ்ந்து பழக்கப்பட்ட மக்கள் என்றைக்காவது தங்களுக்கு எதிரா திரும்பிடுவாங்க என்ற எச்சரிக்கையிலதான், அவங்க கும்பிட்டு இருந்த கடவுளையே பயங்கரமான மந்திர சக்தி வாய்ந்த – ரத்த பலி கேட்குற கொடூரமான சாமியா மாத்தி, மாந்தீரகங்களை செஞ்சு அவங்களை பயமுறுத்தி அடிமைகளாவே வச்சிருக்காங்க (நாயகன் விவரிக்க, தொடர்பான காட்சிகள் வேகமாக காட்டப்படுகின்றன).

அதுல எதிர்பாராம செத்தவர் தான் செட்டியாரின் மகன். அவருக்கு போதை மருந்து பழக்கத்தை உண்டாக்கி, மாந்திரீகத்தை செஞ்சு காட்டி அதையும் நம்ப வச்சிருக்காங்க. தொட்டதையெல்லாம் தங்கமா மாற்றக்கூடிய சக்திய அவருக்கு தர்றதா சொல்லி பூஜை நடத்தியிருக்காங்க. அதுல அந்த சக்தி அவரையே கொன்னுருக்கு.

விஞ்ஞானி: மலையாள மாந்திரீகத்தோட விசேஷமே அதுதான். ஒன்னு அது மிகப் பெரிய சக்திய தரும். கொஞ்சம் கோளாறு நடந்துச்சுன்னா, ஆசைப்பட்ட ஆளையே பலிவாங்கிடும்.

செட்டியாரின் மகன், பூஜையில பேராசையில் ஏதோ தப்பு செஞ்சிருக்கார். அதனாலதான் அவரை அந்த மாந்திரீக சக்தி பலிவாங்கியிருக்கு (ஆரம்பக் காட்சியில் செட்டியாரின் மகன், முத்திரை குத்திய வலி தாங்காமல ஓடும்போது பூசைச் சட்டி ஒன்றைத் தன் காலால் இடறிவிட்ட காட்சி பின்னணியில்).

அவனைத் தொட்டாலே பாவம். விஷம். அந்த மாந்திரீகத்தின் விஷம் யாரைத் தொட்டாலும் விடாது.

(இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வரும் நாயகி, பயந்து மயங்கி விழுகிறாள்).:

 

காட்சி 62:

நாயகன்: “எப்படி முடியும்?” என்று கேட்டு விஞ்ஞானியை பார்க்கிறான். “அஞ்ஞானத்தை விஞ்ஞானம் வெல்ல முடியும். விஞ்ஞானம் விஞ்ஞானத்தை வெல்ல முடியும். ஆனால், இது மாந்திரீகம். அதிலும் பயங்கரமான மலையாள மாந்திரீகம். அதை எப்படி ஜெயிக்க முடியும்?” என்று கேட்கிறான்.

விஞ்ஞானி: “மந்திரத்தை தந்திரத்தால் வெல்ல முடியும்,” என்று சொல்லி சிரிக்கிறார். “வர்ற மேஜிக் ஷோ வுல மேஜிக் நிபுணன் செய்யப் போறதா எதை அறிவிச்சிருக்கான்னு சொன்னே?” என்று கேட்கிறார்.

நாயகன்: “ஒரு கண்ணாடிக் கூண்டில் தோன்றி, எதிர் முனையில் இருக்கும் இன்னொரு கண்ணாடிக் கூண்டில் தோன்றப் போவதாக அறிவிச்சிருக்கான்.”

விஞ்ஞானி: “அவனுடைய பிரமாதமான மந்திரம், ஒரு மிருகத்தை இன்னொரு மிருகமாக மாற்றிக் காட்டுவது. அதை எந்த மந்திரத்தால செஞ்சு காட்டுறான்னு தெரியல்ல. அவன், ஆட்டை மாடா மாத்திக் காட்டலாம். காக்கையை புறாவாக மாற்றலாம். அவனேகூட இன்னொரு ஆளா மாறிக்காட்டலாம். ஆனா ஒன்னு, அவனே அவனா மாறமுடியுமா? அது அவன் மாந்திரீகத்தாலேயே முடியாது,” என்று சொல்லி சிரிக்கிறார்.

நாயகன்: அப்படீன்னா… அவனைப் போல இன்னொரு ஆள் இருக்கான்… இல்லை வரவழைப்பான்… அப்படீன்னு சொல்றீங்க.

விஞ்ஞானி: அதுதான். இந்த விஷயத்தில அவன் செய்யப்போறது மந்திரம் இல்ல. வழக்கமான மேஜிக் ட்ரிக். அதுல அவன நாம ஈஸியா கையும் களவுமா புடிச்சிடலாம். நமக்கு தெரியவேண்டியதெல்லாம், அவன் அந்த இன்னொரு ஆளை அந்த எதிர் கண்ணாடிக் கூண்டில எந்த வழியா வரவழைக்க போறான்கிறது மட்டும்தான். அவனை மடக்கிப் புடிச்சிடா நாளைக்கு நடக்கப் போற மேஜிக் ஷோவே மொத்தமா ஸ்பாயில் ஆயிடும். மேஜிக் ஷோ ஸ்பாயில் ஆச்சுன்னா அவனுக்கு இருக்கிற மரியாதை எல்லாம் தவிடு பொடியாயிடும். அவன் ஷோவிலயே அவன் கேவலப்பட்டு நிற்பான். அந்தக் கோபத்துல அவன் தாறுமாறா ஏதாச்சும் செய்வான். எதிராளிய நிதானம் இழக்கச் செய்வதுதான் நமது தந்திரம். இந்தத் தந்திரம் வேலை செஞ்சுதுன்னா, அவன் மந்திரத்தை நாம தோற்கடிச்சிடலாம்.

நாயகன்: ஒரு வரைபடத்தை மேசையின் விரித்து, “இதுதான் நாளைக்கு மேஜிக் ஷோ நடக்கப்போற கூடாரத்தோட ப்ளான்,” என்று சொல்லி விவரிக்கிறான். இருவரும் தீவிரமாக ஆலோசனை செய்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: