செத்தும் கொடுத்தான் சீதக்காதி

குறிப்பு: 22.12.18 மதியம் எழுதி ஒரு இதழுக்கு அனுப்பியது. இதுவரை வெளியிடுவது குறித்த தகவல் எதுவும் இல்லை. மேலும் காலம் தாழ்த்துவது சரியாக இருக்காது என்பதால் வலைத்தளத்தில் பதிவேற்றுகிறேன். 

 

மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தைத் தந்திருக்கிறார் பாலாஜி தரணீதரன். “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்பதே படத்தின் கதைக் கரு.

 

சீதக்காதி என்ற பெயரில் எந்த ஒரு கதாபாத்திரமும் படத்தில் இடம் பெறவில்லை.  வள்ளல் சீதக்காதி யார் என்பதை பெரும்பாலான பார்வையாளர்கள் அறிந்திருப்பார்கள். அத்தகைய பெரும் வள்ளல் சீதக்காதி பற்றியும் படம் பேசவில்லை. பிறகு ஏன் படத்திற்கு சீதக்காதி என்ற பெயர்?

 

பெரும் கவிஞர்களை போற்றி வளர்த்த வள்ளல் சீதக்காதி போன்ற புரலவலர்கள் வாழ்ந்த காலம் முடிந்து நூற்றாண்டுகள் பல கடந்துவிட்டன. தெய்வங்களை போற்றும் காவியங்களையும், பாடல்களையும் இயற்றுவதே பெரும் பேறு என்று வாழ்ந்த கவிஞர்களின் காலமும் முடிந்துவிட்டது.

 

கலைஞர்கள் இனி மானுட வாழ்க்கையைப் பற்றித்தான் பேசியாகவேண்டும். அதன் வேடிக்கையை, விபத்தை, குரூரத்தை, அபத்தத்தை, பற்றிக்கொள்ள இருந்த ஒவ்வொரு நம்பிக்கையும் சிதைந்து போகும் அவலத்தை கூர்ந்து கவனித்து, இவை எல்லாவற்றையும் மீறி எந்த அடிப்படையும் ஆதாரமும் அர்த்தமும் அற்று தொடர்ந்துகொண்டிருக்கும் வாழ்வே ஒரு பெரும் பேறு என்பதைத் தம் படைப்புகளின் மூலம் பரந்துபட்ட வாசகர்கள் / பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதே கலைஞர்களின் பணி என்று ஆகிவிட்டது.

 

இத்தகைய ஒரு பணியைத் தம் தலை மீது சுமத்திக்கொண்ட கலைஞர்களுக்கு யார் புரவலர்களாக இருக்கத் துணிவார்கள்? கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கும் எந்தப் புதியப் பணக்காரர்கள் இத்தகைய கலைஞர்களை போற்றி வளர்க்க முன்வருவார்கள்?

 

ஆகையினால், கலைஞர்களே வள்ளல்களாக இருக்க ‘அருளப்பட்ட’ காலமிது. தாம் பெற்ற செல்வத்தை – அறிவு சேகரத்தை, கூர்மையான உணர்ச்சிமிக்க கலைப்படைப்புகளின் மூலம் பிறருக்கு அள்ளி வழங்கும் வள்ளல்களே இன்றைய உண்மையான கலைஞர்கள். (போலிச் சாமியார்கள் போல, போலிக் கலைஞர்களும் பெருகியிருக்கும் காலமிது. அவர்களை இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.)

 

அவ்வாறான ஒரு கலைஞன் – படத்தின் நாயகன் ஆதிமூலமே சீதக்காதி.

 

நாயகன் ஆதிமூலம் ஒரு நாடகக் கலைஞன். மிக இளம் வயதிலேயே நாடகத்தால் ஈர்க்கப்பட்டு, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன். சினிமாவிற்கான வாய்ப்புகள் வந்தபோதும், தான் விரும்பும் கலைக்காக, அதை விரும்பும் பார்வையாளர்களுக்காக அவற்றைத் துறந்தவன்.

 

‘காலத்தின் கோலத்தால்’ ஸ்மார்ட் ஃபோன்களில் தலையைக் கவிழ்த்து அமிழ்ந்திருக்கும், டாஸ்மாக் கடைகளில் வாழ்வை தொலைத்துவிட்டிருக்கும், பெரும் ‘மால்’களையும் அவற்றில் உள்ள திரையரங்குகளையும் மொய்த்துக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறை. இத்தலைமுறைக்கு நாடகக் கலை மீது நாட்டம் எப்படி வரும்?

 

ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நாடகக் கலைஞனான நாயகன், நடித்துக்கொண்டிருக்கும்போதே மேடையிலேயே இயற்கையாக சாகிறான். கலையும் நசிகிறது. கலைஞனும் சாகிறான்.

 

நாயகனின் மரணத்திலிருந்தே படத்தின் கதை நகரத் துவங்குகிறது. அவன் இறப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நீண்ட காலமே – 40 நிமிடங்கள் – பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.

 

நாயகனின் மரணத்திற்குப் பிறகு, அவனது நாடகக் குழுவினர் தொடர்ந்து நாடகங்களை நடத்த முடிவு செய்கிறார்கள். அவர்கள் நடத்தும் முதல் நாடகத்திலேயே, அதுவரை சாதாரணமாக நடித்துக்கொண்டிருந்த சிலருடைய திறமைகள் எதிர்பாராமல் சிறப்பாக வெளிப்படுகின்றன. இதைக் காணும் நாயகனின் நீண்டகால நண்பன் பரசுராம், நாயகனின் ஆன்மாவே அவர்களை அப்படி நடிக்க வைப்பதாக நம்புகிறார்.

 

இவர்களுடைய நாடகத்தை பார்க்க வரும் புதிய திரைப்பட இயக்குனர் ஒருவர், குழுவின் இளம் நடிகன் ஒருவனைத் தன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய முன்வருகிறார். அவரிடமும் நடிப்பது அந்த இளம் நடிகன் அல்ல, மறைந்த நாயகனின் ஆத்மாதான் என்று வலியுறுத்துகிறார் பரசுராம். நடிகனும் அதை நம்புகிறான். காரணம், அவன் சமீபமாகத்தான் குழுவில் சேர்ந்தவன். நடிப்பில் அவனுக்கு போதிய பயிற்சியும் கிடையாது.

 

இதை ஏற்றுக்கொள்ளும் புதிய இயக்குனர், இளம் நடிகனை ஒப்பந்தம் செய்துகொண்டு, நாயகனின் குடும்பத்தாருக்கே நடிப்பிற்கான தொகையை அளிக்கிறார். இளம் நடிகன் நடிக்கும் முதல் படம் பெரும் வெற்றி பெறுகிறது. புதிதாகக் கிடைத்த புகழின் மயக்கத்தில், இளம் நடிகன், பரசுராமை நிராகரிக்க தொடங்குகிறான்.

 

விஷயங்கள் வேடிக்கையும் விபரீதமும் கலந்த அபத்த நாடகமாக அரங்கேறத் தொடங்குகின்றன. தர்க்க ரீதியான காரண காரியங்கள், விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை அடையும் நோக்கில், கோடம்பாக்கத்துச் சினிமாத் தொழில், எந்தவிதமான முட்டாள்தனம் மூடத்தனத்தின் பின்னாலும் அலையத் தயாராக இருக்கும் அபத்தத்தின் சித்திரம் திரையில் விரியத் தொடங்குகிறது.

 

பரசுராமை நிராகரித்த கையோடு திரைப்பட காட்சியில் நடிக்கச்  செல்லும் இளம் நடிகனால், ஒரு சிறிய முகபாவனையைக்கூடச் சரியாக வெளிப்படுத்த முடியாமல் போகிறது. “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி நகைச்சுவையை தெறிக்கச் செய்த பாணியில், ஒரு முகபாவத்தை நடிக்க அந்த இளம் நடிகன் படும் பாட்டை, திரும்பத் திரும்ப செய்ய வைத்து, நகைச்சுவையால் அதிர வைத்திருக்கிறார் இயக்குனர்.

 

நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், இளம் நடிகனின் கவனச் சிதறலும் புகழ் மயக்கமும், என்பதாக இருக்க, அவனோ, தனக்கு நடிப்பில் போதிய பயிற்சி இல்லை என்பதால் பரசுராம் சொன்னதைப் போல, நாயகனின் ஆன்மாவே தன்னை நடிக்க வைத்தது என்று உறுதியாக நம்பத் தொடங்கிவிடுகிறான்.

 

விஷயம் காட்டுத் தீயைப் போலப் பரவுகிறது. தயாரிப்பாளர்கள் பரசுராமை நோக்கி படையெடுக்கத் தொடங்குகிறார்கள். ஒருவர், நாயகன் ஒரு நாடகத்தில் பெண் வேஷம் கட்டி நடித்ததைப் போல, தன் படத்தின் கதாநாயகியின் உடலில் புகுந்து நடிக்க கேட்கிறார். ஒருவர் இரட்டை வேட பாத்திரத்தில் நடிக்க கேட்கிறார். மற்றொருவர், குழந்தையாக நடிக்கவும் கேட்கிறார். நாயகனின் ஆன்மாவே பிறரை நடிக்க வைப்பதாக நம்பும் பரசுராமும் ஒப்புக்கொள்கிறார். அவரது ஒரே நிபந்தனை, நல்ல கதையுள்ள படமாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே.

 

நாயகனின் ஆன்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுத் தயாரிக்கப்படும் படங்கள் வெற்றி மேல் வெற்றி பெறுகின்றன. கதாநாயகப் பிம்பத்தை வழிபடும் “மாஸ் சினிமா” ரசிகர் பட்டாளம் இறந்து போன நாயகனுக்கும் “சூப்பர் ஸ்டார்” அந்தஸ்த்தை ஏற்றி வழிபடத் தொடங்குகிறது. இறந்து போன நாயகனின் ஆன்மா “அய்யா”வின் புகழ் பாடும்  பெரும் கும்பல் உருவாகிவிடுகிறது. சினிமாத் தொழில் தயாரிப்பாளர்களின் மூட நம்பிக்கை, “மாஸ் சினிமா” ரசிகர்களின் கதாநாயக வழிபாடு, இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தீனி போட்டு வளரும் அபத்தம் வெகு இலகுவாக சித்தரித்து காட்டப்படுகிறது.

 

சினிமாத் தயாரிப்பில் தகப்பனார் தொடங்கி 50 ஆண்டுகால அனுபவமுள்ள, கதாநாயகனாகும் கனவுள்ள ஒரு தயாரிப்பாளர், தன் சொந்தத் தயாரிப்பில் நாயகனின் ஆன்மாவை ஒப்பந்தம் செய்வதிலிருந்து விபரீதம் தொடங்குகிறது.

 

ஒப்பந்தம் செய்த கதைப்படி படத்தை எடுக்காமல், மசாலாத்தனமாக படத்தை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் பரசுராம். கதாநாயகனாக நடிக்கும் தயாரிப்பாளர் அவரை கேலி செய்து உதாசீனப்படுத்திவிட்டு அடுத்த காட்சியை நடிக்கச் செல்கிறார்.

 

நடிப்பில் கவனம் செலுத்தாமல், கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் அழகில் சொக்கி வழியும் கதாநாயகத் தயாரிப்பாளரால் ஒரு சிறிய முகபாவனையைக்கூட நடித்துக் காட்ட முடியாமல் போகிறது. இக்காட்சியிலும், ஒரு எளிய முகமாவனையைத் திரும்பத் திரும்ப நடிக்க வைத்து நகைச்சுவையால் அதிர வைத்திருக்கிறார் இயக்குனர்.

 

பரசுராமை நிராகரித்ததால்தான், நாயகனின் ஆன்மா, தன்னை நடிக்க வைக்கவில்லை என்று நம்பும் கதாநாயகத் தயாரிப்பாளர், பரசுராமிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். விரக்தியுற்ற மனநிலையில் இருக்கும் பரசுராம், இனி எதுவும் தன் கையில் இல்லை என்று கைவிரிக்கிறார்.

 

மீண்டும், நாயகனின் ஆன்மா, நடிக்க வரவில்லை என்ற செய்தியும், அதைத் தொடர்ந்து, நாயகனின் ஆன்மா இறந்துவிட்டதாகவும் காட்டுத்தீ போல் செய்தி பரவுகிறது. நாயகனின் ஆன்மாவை கொன்றது, கதாநாயக தயாரிப்பாளர்தான் என்று வழக்கு தொடுக்கிறார், உதவி இயக்குனர் ஒருவர். கோடம்பாக்கத்து சினிமா தொழிலின் அபத்தங்களை ஊதிப் பெருக்கிப் பிழைக்கும் ஊடகத் துறையினரின் ஒட்டுண்ணித்தனமும்கூட மிக இலகுவாக போகிற போக்கில் இடித்துக்காட்டப்படுகிறது.

 

நீண்ட வருடங்கள் கழித்து, நீண்டதொரு  கோர்ட் சீனை, சலிப்புத் தட்டிவிடாமல் நகர்த்திச் சென்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

 

திரைப்படத்தின் பிற்பாதியில் தொய்வு சிறிதும் இன்றி, விறுவிறுவென்று கதை நகர்ந்து செல்கிறது. திரும்பத் திரும்ப நடித்து காட்டப்படும் இரண்டு காட்சிகளில் அரங்கம் சிரிப்பலையால் அதிர்கிறது. இவ்விரண்டு காட்சிகள் தவிர்த்து, நுட்பமான முகபாவங்களிலும் வசனங்களிலும் வெளிப்படும் நகைச்சுவையையும் பார்வையாளர்கள் கவனிக்கத் தவறவில்லை.

 

இந்த நகைச்சுவை காட்சிகளின் அலையில், திரைப்படத்தின் மையக் கரு பார்வையாளர்கள் மனதில் பதிந்திருக்குமா என்பது மட்டுமே சிறிய சந்தேகமாக எழுகிறது. படத்தின் இறுதியில், நீதிபதியின் கூற்றாக அது வெளிப்படையாக சொல்லப்பட்டபோதிலும், பார்வையாளர்கள் அதை ஊன்றிக் கவனிக்கச் செய்யும் வலு சற்றே குறைவாக இருப்பதாக தோன்றுகிறது. கலையும் கலைஞர்களுமே வாழ்வின் நிதர்சனமான உண்மைகளை காட்ட வல்லவர்கள் என்பதே அது.

 

கோடம்பாக்கத்துச் சினிமா தொழிலின் அபத்தம் கலையையும் கலைஞர்களின் கூர்மையையும் எப்படியெல்லாம் புறக்கணிக்கிறது என்ற நுட்பமானச் சித்தரிப்பு பார்வையாளர்களின் மனதில் எந்த அளவிற்குப் பதிந்தது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

இறுதியாக, திரைப்படத்தின் பெரும் பலவீனம் அதன் முதல் 40 நிமிடங்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பது என்ற அளவில் மட்டுமின்றி, அந்த 40 நிமிடங்களில் மையக் கருவைச் சொல்ல இயக்குனர் தேர்வு செய்திருக்கும் வடிவமும் பிழையானது.

 

நாடகக் கலையின் சிறப்பையும், நாடக நடிகர்களின் சிறப்பையும் சொல்ல “சபா நாடகங்கள்” சரியான தேர்வு அல்ல. நாடகக் கலை வடிவங்களிலேயே மிகவும் மலினமானது “சபா நாடகம்”. அதிலும் சென்னையை மய்யமாக கொண்டு செயல்பட்டுவந்த சபா நாடகங்கள் மிக மலினமான ரசனையும் கருத்துப் பிரச்சாரத்தையும் கொண்டவை. 1960 கள் வரை சென்னை தவிர்த்து, பிற சிறிய நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இயங்கிவந்த சபா நாடகக் குழுக்கள், கலையின் மீது பற்றும் பிடிப்பும் கொண்டிருந்தவை எனலாம். தமிழ் சினிமாவின் வரலாற்றை அறிந்தவர்கள், வாசித்து தெரிந்துகொண்டவர்கள், அத்தகைய சபா நாடகக் குழுக்கள், தமிழ் சினிமாவிற்கு அளித்த பெரும் கொடைகளை அறிவார்கள். 60 களோடு முடிந்துவிட்ட சகாப்தம் அது.

 

நாடகக் கலை, அதன் நடிகர்களின் சிறப்பு இரண்டையும் சினிமாவில் காட்டச் சிறந்த வடிவம், கூத்து மரபுதான். சபா நாடக மரபிற்கு மாறாக, கூத்துக் கலைஞர்களையும் நாடகங்களையும் கையாண்டிருந்தால், மேலும் உயிர்ப்புள்ளதாக படத்தின் முதல் 40 நிமிடங்கள் இருந்திருக்கும். கூத்தின் வடிவச் சிறப்புகளை காட்டி தொய்வில்லாமல் கதையை நகர்த்திச் சென்றிருக்கலாம்.

 

இப்பிழையையும் மீறி, தற்போதுள்ள வடிவத்திலேயே முதல் 40 நிமிடங்களில் இரக்கமின்றி வெட்டி எறிய நிறைய இடமிருக்கிறது. கருத்தைச் சிதைக்காமலேயே ஒரு 15 நிமிடங்களை எடிட் செய்ய இடமிருக்கிறது. பல திரைப்படங்கள் வெளியீட்டிற்குப் பின்னான ஒரு சில நாட்களில் அவ்வாறு எடிட் செய்யப்பட்டிருக்கின்றன. சொல்ல விரும்பும் மையக் கருத்து, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கவேண்டுமெனில், எந்த ஒரு கலைவடிவமும் நறுக்குத்தெறித்தார்போல இருக்கவேண்டியது அவசியம். செத்தும் கொடுத்த சீதக்காதி என்ற நிலைமை, அதன் துயர்மிக்க பொருளில் திரைப்படத்திற்கு ஏற்பட்டுவிடாமல் இருக்க அதைச் செய்வதில் பாதகம் எதுவும் இல்லை.

சினிமா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . செத்தும் கொடுத்தான் சீதக்காதி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
%d bloggers like this: