தேர்தல் என்பது ஜனநாயகமா? – 1
தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகத் திகழ்ந்த பராசக்தி திரைப்படம், தமிழக அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பிய படமாக இருந்தது என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பர். நாத்திகக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிறது என்ற காரணத்தை காட்டி, படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளும் அப்போது முன்வைக்கப்பட்டன. ஆனால், அப்போதைய முதல் மந்திரி ராஜாஜி அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்தார் என்பது வரலாறு.
அந்த காலப்பகுதியில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜாஜியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்திருந்தார் அப்போதை கவர்னர் ஸ்ரீ பிரகாசம். 1952 ஜனவரியில் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் மார்ச் இறுதிவரை ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.
அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் 375 தொகுதிகளில் காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆந்திரப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருந்த சிபிஐ கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற சுயேச்சைகளின் எண்ணிக்கையும் 62. இந்நிலைமையில், 1953 இல் சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரான டி. பிரகாசம், சிபிஐ மற்றும் பிற சிறு கட்சிகளை ஒன்றிணைத்து 166 உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
கம்யூனிஸ்டுகள் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, கவர்னர் ஸ்ரீ பிரகாசம், ராஜாஜியை அழைத்து 1952 ஏப்ரல் 10 அன்று முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ராஜாஜி தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெறுமாறு வழங்கப்பட்ட ஆலோசனையையும் நிராகரித்தார். வேறு வழியில்லாமல், கவர்னர் அவரை அப்போதிருந்த தமிழக மேல்சபையின் உறுப்பினராக நியமித்தார். ஆனால், மேல்சபைக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கு மட்டுமே இருந்தது. அமைச்சரவையோ இன்னும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.
ஆக, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று அறிவிக்கப்பட்ட முதல் தேர்தலின் முடிவில், இந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தில், ஜனநாயகத்திற்குப் புறம்பான வழியில் ஆட்சியமைக்கப்பட்டது. ஆனால், வாக்குரிமை என்பது ஒரு ஜனநாயக உரிமை என்றும், பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் முறை ஜனநாயக ஆட்சிமுறை என்றும் நாம் இன்றுவரையிலும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
மேலே விவரித்த ஜனநாயகப் படுகொலை முடிந்து, ஆறு மாதங்கள் கழித்து, 1952 அக்டோபரில் வெளியான “பராசக்தி” திரைப்படமும் அப்படித்தான் நம்பியது. படத்தில் முக்கால் பாகக் கதை போன பிறகு, எஸ். எஸ். ராஜேந்திரன் மீண்டும் கதைக்குள் வருவார். பர்மாவிலிருந்து உயிர் பிழைத்து வரும்போது ஒரு காலை இழந்து, உயிர் பிழைத்திருக்க பிச்சையெடுத்து, அகதி முகாமில் சேர வரும் தமிழர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவருக்கும் அவரோடு வந்த கூட்டத்தினருக்கும் அகதி முகாமில் இடம் கிடைக்காமல் போகும். அனைவரும் அருகில் இருக்கும் ஒரு மரத்தடியில் கூடி பேசுவார்கள்.
அப்போது எஸ். எஸ். ஆர் கூட்டத்தினரிடையே உரையாற்றுவார். பிச்சைக்காரர்கள் மாநாடு ஒன்றை கூட்டப்போவதாக அறிவிப்பார். பிச்சைக்காரர்களுக்கு வாக்குரிமை கோரி பெற்று, சமுதாயத்தைப் புரட்டிப்போடும் புரட்சியை செய்யப்போவதாகச் சபதமிடுவார்.
65 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. 15 சட்டமன்ற தேர்தல்களையும், 16 நாடாளுமன்ற தேர்தல்களையும் மக்கள் பார்த்துவிட்டார்கள். தேர்தல்கள் மீதான நம்பிக்கையும் ஜனநாயகத்தின் மீதான பார்வையும் இருக்கும் நிலை என்ன?
கடந்த வருடம் வெளியான “சர்க்கார்” திரைப்படமும், இவ்வருடத் துவக்கத்தில் வெளியான “எல் கே ஜி” திரைப்படமும் மக்களின் மனநிலையை ஓரளவு பிரதிபலித்திருக்கின்றன என்று கருதலாம்.
ஒரு வாக்கு – ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, அதை எக்காரணம் கொண்டும் இழக்கக்கூடாது என்று வலியுறுத்தியது “சர்க்கார்”. வாக்காளர்களை ஏமாற்ற எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளின் செயல் நுணுக்கங்களை விவரிக்கிறது “எல் கே ஜி”.
இரண்டு திரைப்படங்களும், இறுதியில் தவறு இழைப்பவர்கள் வாக்காளர்களே என்று குற்றம் சுமத்துகின்றன. வாக்காளர்கள் செய்யும் தவறுகளாக இரண்டைக் குறிப்பிடுகின்றன. ஒன்று, அரசியல்வாதிகள் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. மற்றது, மோசமான வேட்பாளர்கள் என்று தெரிந்தும் வாக்களிப்பது; படித்த, நேர்மையான, சமூக அக்கறை கொண்ட வேட்பாளர்களைப் புறக்கணிப்பது.
இவ்விரண்டு குற்றசாட்டுகளை வாக்காளர்கள் மீது சுமத்துவதோடு, வாக்களிக்கும் ஜனநாயக க் கடமையை, சரியான முறையைல் நிறைவேற்றத் தவறுபவர்களை நோக்கி, “நீ ஒரு மனுசன் தானா? ஆண் மகன் தானா?” என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.
ஒரு ஜனநாயக உரிமை என்ற நிலையில் இருந்து, கடமை, நேர்மை, மனித மாண்பு, ஆண்மை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக இவ்விரு திரைப்படங்களும் வாக்குரிமையை உருப்பெருக்கி காட்டுகின்றன. தேர்தல் = ஜனநாயகம் = வாக்குரிமை = கடமை = நேர்மை = மனித மாண்பு = ஆண்மை என்ற ஒரு சமன்பாட்டை பிரச்சாரம் செய்கின்றன.
1952 இல் பிச்சைக்காரர்களுக்கு வாக்குரிமை பெற்று சமுதாயப் புரட்சி செய்யபோவதாக கிளம்பிய தமிழ் சினிமாவின் அரசியல் புரிதல், 2019 இல் “காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுறியே உனக்கு வெட்கமா இல்ல?” என்று மக்களை கேவலப்படுத்தி கேள்வி கேட்கும் நிலைமைக்கு வந்து நின்றிருக்கிறது.
எந்தக் கட்சியையும் நம்ப முடியாது, எந்த அரசியல்வாதியும் நேர்மையானவர் இல்லை என்ற அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பார்த்து, இவ்வாறு கேள்வி கேட்டுவிட்டு, படித்தவர்கள், நேர்மையானவர்கள், சமூக சேவகர்கள், நேர்மையான ரிட்டையர்ட் ஐஏஎஸ் அதிகார்கள் போன்றவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று புத்திமதியும் சொல்கின்றன.
ஆனால், தேர்தல் = ஜனநாயகம் என்ற நம்பிக்கை மட்டும் மாறவில்லை.
தேர்தல்கள் மூலம் ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து, அதிகாரத்தில் அமர்த்தி, ஆட்சி செய்ய வழிவகுக்கும் ஆட்சிமுறை ஜனநாயக ஆட்சிமுறைதானா என்ற கேள்வியை நமது திரைப்படங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளோ, அரசியல் ஆய்வாளர்களோகூட எழுப்பிப் பார்க்கவே இல்லை.
இந்த சந்தர்ப்பத்தில், நமது “மண்ணின் ஜனநாயக பாரம்பரியம்” குறித்து எவரேனும் கேள்வி எழுப்பினால், சட்டென்று இடைக்கால சோழர் காலத்தில் நிலவிய “குடவோலை முறை”யை ஞாபகப்படுத்துவார்கள். நீண்ட நெடிய ஜனநாயக பாரம்பரியம் மிக்கது நமது நாடு என்று பெருமை பேசத் தொடங்கிவிடுவார்கள்.
ஆனால், அந்தக் “குடவோலை முறை”யில், வாக்குரிமை என்ற உரிமையோ, வாக்குகளை செலுத்தி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையோ இருக்கவில்லை என்ற முக்கிய அம்சத்தின் மீது மட்டும் கவனத்தைக் குவிக்கத் தவறிவிடுவார்கள்.
இந்தக் “குடவோலை முறை”க்கு ஒப்பான முறைகளில், வேட்பாளர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதிக்கும் ஆட்சிமுறைதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, ஏதென்ஸ் நகரத்திலும், பல கிரேக்க நகரங்களிலும் நிலவி வந்த ஆட்சிமுறை. அதைத்தான் ஜனநாயக ஆட்சிமுறை என்று வரலாற்று ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.
பண்டைய கிரேக்க உலகின் தலைசிறந்த தத்துவ அறிஞர்களில் ஒருவரான அரிஸ்டாட்டில், தேர்தல் என்பது மேட்டுக்குடியினரின் (aristocracy) குழு ஆட்சிக்கான (oligarchy) முறை; குலுக்கலில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களின் ஆட்சியான ஜனநாயகத்திற்கான முறை என்று வலியுறுத்தியிருப்பார். 65 ஆண்டுகால தேர்தல் ஆட்சி முறையின் மோசமான அனுபவங்களுக்குப் பிறகு, தேர்தல் = ஜனநாயகம் என்ற நம்பிக்கையைப் பரிசீலனை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாமும் ஆளாகியிருக்கிறோம்.
(தொடரும்… )
நன்றி: விகடன்
3:41 பிப இல் மே 3, 2019
வாழ்த்துக்கள் ஸார்.
3:47 பிப இல் மே 3, 2019
நன்றி.