தொலைதல் – சில அசை மொழிகள் (aphorisms)

1. வீட்டுக்குப் போகிற வழி நன்கு பரிச்சயமாயிருக்கிறது. தொலைந்து போகிற வழி கண்காணாதிருக்கிறது.

2. தொலைந்தவர் வீடு திரும்புவார். தொலைந்தது திரும்பவோ திரும்பத் தொலையவோ?

3. திரும்பாதிருந்தால் திரும்பத் தொலைந்து தொலைக்கத் தேவையில்லை.

4. தொன்று தொட்டுத் தொலைவோர் தொல் குடியார்.

5. தொல் குடியும் தொப்பூழ் கொடியும் தோல் தடித்தோர் தொட்டுணரார்.

6. தொடுதல் – உணர்தல். அறி – ஞர் இயலா அயலவர். அகம் – புறம்.

7. உணர்தல் உள்ளத்தனையது.

8. உள்ளத்திலிருப்பதை உள்ளபடி நவிலும் நயமான நாவும் நாசூக்கும் நாகரீகம் எனப்படும். வாய்மையின் வன்மை நல்ல வாயா நாறவாயா என்பதிலே!

9. பொய்மையும் வாய்மையிடத்து நன்மை பயக்கும் எனின்.

குறுக்குப் படிப்பினை: தன் அதி – (அக[ம்]ங்) – காரத்திற்கு எதிராக உண்மை பேசுவது நற்பண்பன்று.

கேள்வி: அதிகாரத்திற்கு எதிராக ஏன் உண்மை பேசவேண்டும்?

உபகேள்வி: அதிகாரத்திற்கு எதிராக உண்மை பேசுமிடத்து நயந்து பேசுதல் தகுமா?

எதிர் எ – கா: கட்டியங்காரனின் தன்னறிமுகத்தைத் தொடர்ந்து கட்டியங்காரன் வணக்கம் கூறி, என்ன கதை நடைபெற இருக்கிறது என்று கூறிய பின்பு, கூத்து ஆசிரியர் (சூத்திரதாரி) தலைபாகை கட்டிக் கையில் பிரம்பு எடுத்தபடி உள்ளிருந்து வந்து “நால்வகைத் தோற்றமும் சிங்காரம், வீர்யம், ரௌத்ரம், அற்புதம், பயம் என்று சொல்லக்கூடிய நவரச அலங்காரத்துடனே விசித்திர விசித்திர நற்கவிகளால் பாடவல்ல பெரியோர்கள் முன்னிலையில் இன்று …. கூத்து. அதற்குண்டான ஆளை நாம் தேட வேண்டும்” என்று கூறவும் கட்டியக்காரன் உள்ளிருந்து வர, “ஓரப்பப்பா, ஓரையய்யா” உரையாடல் நடைபெறும். அதைத் தொடர்ந்து, “நாங்களோ சூத்திரதார்” என்க,

கட்: திரும்பும்

சூத்: எதற்கு?

கட்: என்ன! சூத்தில் தார் இல்லையே?

சூத்: எனக்கில்லை. அடே சூத்திரம் என்றால் நூல். அதற்கு ஆசிரியர் நான். நீ நன்றாக விகடம் பேசுவதால் நீ விகடகவியாக இருக்க சம்பளம் என்ன கேட்கிறாய்?

கட்: எனக்குச் சம்பளம்30 ரூ.

சூத்: ஏ அப்பா!

கட்: நான் இதற்குமுன் உத்தியோகத்தில் இருந்தேன்.

சூத்: என்னடா உத்யோகம்?

கட்: ரயிலுக்கு முன்னாடி விளக்குப் பிடித்துக் கொண்டிருந்தேன். நாளொன்றுக்கு 1 ரூ. சம்பளம். பிடிப்பு மாதம் 30 ரூ.

சூத்: ரொம்ப அழகாகப் பேசுகிறாய். அந்தச் சம்பளம் கொடுக்கிறேன். (சில வேளையில் இக்கூத்திற்கு வாங்கும் அம்பகத் தொகையைச் சம்பளமாகச் சொல்வர். மக்கள் ரசித்துச் சிரிப்பர்).

– தெருக்கூத்து நடிப்பு, முனைவர் மு. இராமசுவாமி. (அடிக்குறிப்பு 50. பக்: 107 -8).

எடுகோள் எ – கா: மிகுந்த நாகரீகமான கனவான்களே மிகுந்த மோசமான வன்முறையாளர்களாக இருந்திருக்கிறார்கள். – தாஸ்தாவ்ஸ்கி.

குறிப்பு: Aphorism என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பெறும் மொழிபுகளைச் சுட்டும் விதத்தில் அசை மொழிகள் என்ற சொல் பொருந்தி வரலாம். யாப்பிலக்கணத்தில் சுட்டப்படும் வகையினம் என்பதோடு அசை போடுதலைச் சுட்டவும்.

அசை மொழிகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: