கருப்பாய் இருக்கிறாய்! உள்ளே வராதே!

முன்னொரு காலத்தில் “பாப்லோ அறிவுக்குயில், பாப்லோ அறிவுக்குயில்” என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். ஒரு பாப்லோ அறிவுக்குயில்தான். இன்னும் இருக்கிறார். எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தொடர்பு அறுந்து பல வருடங்களாயிற்று.

சொந்த ஊர் திருவாரூர் பக்கம். தலித் சமூகத்தில் பிறந்தவர். தலித் எழுத்தாளராகவே அறியப்பட்டவர். 90 களின் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர். ஆள் “கொழுக் மொழுக்” என்று குண்டாகவும், நல்ல கருப்பு நிறத்தில் பார்க்க அழகாக இருப்பார். ஆனால், படு வெள்ளந்தி.

சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்துகொடுத்து பிழைப்பை ஓட்டி வந்தார். அங்கு ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்தும் வைத்திருந்தார்.

1999 ஆண்டு “விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ் கதையாடல்களும்” என்ற நூல் வெளியீட்டு விழா. ரூ. 10,000 வட்டிக்கு கடன் வாங்கி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன். நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்பென்சருக்கு எதிரில் இருந்த “புக் பாயிண்ட்” அரங்கில்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில், நண்பர்கள் சிலர் பரபரப்பாக வந்து அரங்கிற்கு வெளியே என்னை அழைத்துச் சென்றார்கள். என்ன விவரம் என்று கேட்டதற்கு, போலீஸ் கிராப்புத் தலை ஒன்றிடம் கொண்டு போய் நிறுத்தினார்கள். க்யூ பிராஞ் போலீஸ்.

புத்தக வெளியீட்டிற்கு எதற்கு க்யூ பிராஞ்ச் போலீஸ் என்று வியந்துகொண்டே என்ன வேண்டும் என்று கேட்டேன். “பாப்லோ அறிவுக்குயில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.

“இல்லையே! ஆள் வரவில்லையே!” என்றேன்.

“எங்கே இருக்கிறார் என்று தெரியுமா?”

“தெரியாது. என்ன விஷயம்? ஏன் கேட்கிறீர்கள்?”

“ஒரு கேஸ் விஷயமா அவரை விசாரிக்கணும்.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மனுசனுக்கும் கேசுக்கும் என்ன சம்பந்தம்! அநியாயத்திற்கு அப்பாவியாயிற்றே என்று வியப்பு.

ஆளுக்கு ஃபோனை போட்டால் எடுக்கவில்லை. அவரது நண்பர்கள் ஒவ்வொருத்தருக்காக ஃபோனை போட்டு எங்கே இருக்கிறார் என்று தேட ஆரம்பித்தோம். ஒருவழியாக ஆளைப் பிடித்தும்விட்டோம்.

அறிவுக்குயில் கோவாவில் ஒரு நண்பரோடு மப்பில் மிதந்து கொண்டிருந்தது.

“என்னய்யா விஷயம்? உன்னை க்யூ பிராஞ்ச் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று வந்து நிற்கிறது? உடனே கிளம்பி வா!” என்று தகவலை சொன்னோம்.

ஆள் வந்தால் போலீசிடம் கொண்டு ஒப்படைக்கவா முடியும்? என்ன சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று அந்த கியூ பிராஞ்ச் போலீஸ்காரரிடமே கேட்டோம்.

“ஒன்னுமில்லைங்க. ஒரு நாலைந்து மாசத்துக்கு முன்னாடி, பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்துல, பட்டப் பகல்ல, ஒரு வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு 33 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார்களே! அது சம்பந்தமா பாப்லோ அறிவுக்குயிலை விசாரிக்க வேண்டும்.”

எங்களுக்கு தூக்கி வாறிப்போட்டது. இந்த மனுசனுக்கும் அந்தச் சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? இது அநியாயத்திற்கு அசடாச்சே! இப்படி ஒரு பிரச்சினையில் எப்படி சிக்கிக்கொண்டது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தோம்.

பாப்லோ கோவாவில் இருந்து சென்னை வந்து சேர்வதற்கு முன்பாகவே பிரச்சினை என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது போலீஸ் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த எழுத்தாளர் திலகவதியைச் சந்தித்து, விஷயத்தை சொல்லி உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.

வழக்கு விசாரணை பூக்கடை போலீஸ் நிலையத்தின் பொறுப்பில் இருந்து உயர்நீதிமன்றத்தின் பின்புறமிருந்த போலீஸ் நிலையத்தின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டிருந்தது. ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து, சப் இன்ஸ்பெட்கரிடம் பேசி, பாப்லோ அறிவுக்குயில் சம்பந்தட்ட வழக்கு விவரங்களை வரும் நண்பரிடம் தெரிவியுங்கள் என்று கூறினார்.

துணைக்கு வழக்குரைஞர் பகவத்சிங்கை அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு போய்ச் சேர்ந்தேன். சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்று உட்கார வைத்தார் சப் இன்ஸ்பெக்டர்.

“அது ஒன்னுமில்லைங்க சார். பாப்லோ அறிவுக்குயிலுக்கும் இந்த கொள்ளைக்கும் சம்பந்தமில்லை என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். விஷயம் என்னன்னா, அவரோட அறையில்தான் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அது பாப்லோவுக்கும் தெரியாது. ஆனால், பாப்லோவுக்கு அந்த ஆட்களைத் தெரியும். அவர்களைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் பாப்லோவை தேடிக்கொண்டிருக்கிறோம். ஆள் வந்ததும் அழைத்து வாருங்கள். அவர் குறிப்பிட்ட ஆட்கள் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்களைத் தெரிவித்தால் போதும். அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை,” என்று விஷயத்தை விளக்கினார்.

பெரிய நிம்மதிப் பெருமூச்சை விட்டுவிட்டு, நன்றி தெரிவித்துவிட்டு வந்தோம்.

ஒன்றிரண்டு நாட்களில் பாப்லோவும் சென்னை வந்து சேர்ந்தார். நான் ராஜன்குறை வீட்டிற்கு வரச்சொல்லி அங்கு சென்று காத்துக்கொண்டிருந்தேன். இப்படியொரு பிரச்சினையில் இவர் எப்படிச் சிக்கினார்? யார் அந்த நபர்கள்? அவர்களோடு இவருக்கு எப்படிப் பழக்கம்? என்றெல்லாம் யோசித்துக்கொண்டு அவரைக் கேலிசெய்து சிரித்துக்கொண்டிருந்தோம்.

அப்போது ராஜன்குறை வீடு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பின்புறம் இருந்தது. மெயின் ரோட்டிற்கு ஒரு புறம் ஏழெட்டு தெருக்கள் உள்ளே சென்றால் ராஜன்குறை வீடு. எதிர்ப்புறம் ஒன்றிரண்டு தெரு உள்ளே சென்றால் சாரு நிவேதிதாவின் வீடு.

வருவார் வருவார் என்று நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். மனுசன் வெகு தாமதமாக வந்து சேர்ந்தார். ஏங்க இவ்வளவு தாமதம் என்று கேட்டதற்கு “இல்ல. நேரா சாரு வீட்டிற்கு போயிருந்தேன்” என்று விவரிக்க ஆரம்பித்தார். அவர் சொன்ன விஷயம் மகா ஆத்திரத்தைக் கிளப்பியது. அதை இறுதியில் சொல்கிறேன்.

சப் இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயங்களை பாப்லோவிடம் சொல்லி, அப்படி யாரைய்யா உன் அறையில் தங்க வைத்தாய்? என்று கேட்டேன்.

மனுசன் தலையில் கையை வைத்து உட்கார்ந்துவிட்டார். ஐயோ! வளர்மதி என்று அழாத குறையாக விஷயத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

அவருடைய கதைகளை யாராவது பாராட்டி பேசினால் மனுசனுக்கு குதூகலம் வந்துவிடும். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருக்கிறார்கள்.

அப்படித்தான் அந்த நபர் அறிமுகமாகியிருக்கிறார். தோழர் உங்க கதைகளைப் படிச்சிருக்கேன். இந்தக் கதை நல்லாயிருந்தது. அந்தக் கதை அருமை. எனக்கு அ. மார்க்சை தெரியும். அவரைத் தெரியும். இவரைத் தெரியும் என்று பேசி அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்.

பாப்லோவுக்கு சந்தோஷம். வாங்க தோழர் என்று அறைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். கதை கதையாய் பேசியிருக்கிறார்கள். இப்படியாக நாலைந்து சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. உற்சாக மிகுதியில், நான் இல்லாத நேரத்தில் அறையில் தங்கிக் கொள்ளுங்கள் தோழர் என்று ஒரு சாவியையும் அவரிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்.

“தோழர்” ஒரு தமிழ் தேசிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இது பாப்லோவுக்குத் தெரியாது. தோழர் என்று மட்டும்தான் தெரியும்.

தோழருக்கு புரட்சி செய்ய பணம் தேவைப்பட்டிருக்கிறது. பாப்லோ இல்லாத நேரத்தில், சக தோழர்களை அவரது அறைக்கு வரவழைத்து, திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

“பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில், வியாபாரிக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு. 33 லட்சம் கொள்ளை” என்ற செய்தியை மட்டும்தான் நாம் பேப்பரில் படித்திருப்போம். நானும் படித்தேன். அது இப்படிச் சுற்றி அப்படிச் சுற்றி என் காலைச் சுற்றும் என்று எப்படித் தெரியும்?

பாப்லோ யோசித்து யோசித்து ஒவ்வொன்றாக விவரிக்க ஆரம்பித்ததும் எனக்கும் ராஜனுக்கும் சிரிப்பு தாளமுடியவில்லை. “என்னய்யா நீ! இப்படியா போய் மாட்டிக் கொள்வாய்!” என்று சிரித்து சமாதானப்படுத்தினோம்.

திலகவதி உதவி செய்திருக்கிறார். பிரச்சினை ஒன்றும் இல்லை என்று விளக்கி சொல்லி, மீண்டும் வழக்குரைஞர் பகவத்சிங்கை துணைக்கு வரச்சொல்லி பாப்லோவை அழைத்துக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்தோம்.

பிரச்சினை பிரச்சினயில்லாமல் முடிந்தது.

இதில், பாப்லோ சாரு நிவேதிதாவைச் சந்தித்த எபிசோட்தான் முக்கியமானது.

நானும் ராஜன்குறையும் இவர் வருவார் வருவார் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க, இவரோ நேராக சாரு நிவேதிதாவை பார்க்கப் போயிருக்கிறார்.

இருவருக்கும் அவ்வளவு நெருக்கம்.

இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்த கியூ பிராஞ்ச் பாப்லோ எங்கே என்று சாருவை ஏற்கனவே விசாரித்திருக்கிறார்கள்.

மனுசனுக்கு (சாருவுக்கு) ஏற்கனவே பீதி பிடுங்கிவிட்டிருக்கிறது.

பயத்தோடும் பதட்டத்தோடும் தன்னைப் பார்க்க வீடு தேடி வந்த நண்பனை – சக எழுத்தாளனை – பாப்லோ அறிவுக்குயிலை, அறிவழகன் என்ற சாருநிவேதிதா வீட்டிற்கு உள்ளே நுழையவே விடவில்லை.

வாசலில் நிற்க வைத்து, “நீ கன்னங்கரேல் என்று கருப்பாய் இருக்கிறாய். உன்னை பார்த்தால் என் மாமியார் வீட்டில் என்ன நினைப்பார்கள்?” என்று சொல்லி விரட்டி விட்டிருக்கிறார் உயர்ந்த உள்ளம் படைத்த அறிவழகன் என்ற சாரு நிவேதிதா.

அன்றிலிருந்து எனக்கு இந்த அறிவழகன் என்ற பெயரைக் கேட்டாலே குமட்டிக்கொண்டு வரும்.

”டப்பா காரும்” நகராத இந்தியப் புரட்சியும் – 2

ஓடாத டப்பா காருக்கும் இந்தியப் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்? இதில் ம. க. இ. க வுக்கு என்ன சம்பந்தம்?

1920 களின் மத்தியில் தொடங்கிய இந்தியப் புரட்சி என்ற கற்பனையும் சரி, 1970 களின் பிற்பாதியில் இருந்து இயங்கத் தொடங்கிய ம. க. இ. க என்ற பெயரால் அறியப்படும் அமைப்பும் சரி, அந்த டப்பா காரைப் போலவே ஒரு இஞ்ச்சு கூட நகராமல், துருப்பிடித்து தூசு மண்டி, நிற்கின்றன என்பதே ஒப்புமையாம்.

முதலில், ம. க. இ. க என்ற பெயரால் அறியப்படும் அமைப்பின் சில “மர்ம முடிச்சுகளை” விடுவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பெயரால் அறியப்படும் அமைப்பு ஒரு மார்க்சிய லெனினியக் குழுவின் வெகுஜன இலக்கிய அமைப்பு மட்டுமே.

மாநில அமைப்புக் கமிட்டி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ) – State Organizing Committee CPI (M–L) என்பதே அந்த மார்க்சிய லெனினியக் குழுவின் பெயர். புரட்சிகர வட்டாரங்களில் SOC என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

1964 ஆம் ஆண்டு சிபிஐ கட்சி உடைந்து சிபிஎம் உருவானது. 1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி என்ற கிராமத்தில் (நக்சலைட்டுகள் என்ற பெயரால் மா – லெ பிரிவினர் அழைக்கப்படுவது இதனால்தான்) உருவான விவசாயிகளின் எழுச்சியைத் தொடர்ந்து சிபிஎம் கட்சி பிளவுற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1969 இல் சாரு மஜூம்தார் தலைமையில் சிபிஐ (மா-லெ) அறிவிக்கப்படுகிறது. கிராமங்களுக்குச் செல்லுங்கள், வர்க்க எதிரிகளை அழித்தொழியுங்கள் என்ற ”கொள்கையை” சாரு மஜூம்தார் பிரகடனப்படுத்துகிறார். அதாவது, நிலப்பிரபுக்களை கொல்லச் சொல்லி அறைகூவல் விடுக்கிறார். அவரது அறைகூவலை ஏற்று தஞ்சையின் ஒரு கிராமத்தில் ஒரு நிலச்சுவாந்தாரைக் கொன்று ஆயுள் தண்டனை பெற்றவரே தோழர் தியாகு.

1972 ஆம் ஆண்டு சாரு மஜூம்தார் காவல் நிலையத்தில் போலீசாரால் கொல்லப்பட்டார். அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே அவரது அழித்தொழிப்பு “கொள்கை” தவறானது என்பதை வலியுறுத்தும் போக்குகள் மார்க்சிய லெனினிய கட்சிக்குள் உருவாகின்றன. சாரு மஜூம்தாரின் மரணத்திற்குப் பிறகு, கட்சி பல்வேறு பிரிவுகளாக உடையத் தொடங்குகிறது. தமிழகத்திலும் மக்களை அணிதிரட்டி போராட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி உடைகிறது. அவ்வாறு உடைந்து பிரிந்து செல்லும் பிரிவினரில் ஒன்று 1976 ஆம் ஆண்டு, மாநில அமைப்புக் கமிட்டி (மா – லெ) என்ற பெயரில் தமிழ்நாடு அளவில் செயல்படத் தொடங்குகின்றனர். இவர்களுடைய  சுருக்கமான வரலாறு இது.

தமிழ்நாடு அளவிலான குழு என்ற போதிலும், உடைந்து போன அகில இந்தியக் கட்சியின் ஒரு அங்கமாகவே இவர்கள் தம்மைக் கருதிக் கொண்டனர். அக்காரணம் பொருட்டே மாநில அமைப்புக் கமிட்டி என்று தம்மை அழைத்துக் கொண்டனர். தமது உடனடி இலக்குகளில் ஒன்றாக இவர்கள் அறிவித்துக் கொண்டது, உடைந்துபோன அகில இந்தியக் கட்சியின் குழுக்களை ஒன்றிணைத்து மீண்டும் அகில இந்திய மார்க்சிய லெனினியக் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். “அகில இந்தியப்” புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்பதே இன்று வரையிலும் இவர்களது கொள்கையும் ஆகும்.

ஆனால், அகில இந்தியக் கட்சியை ஒருங்கிணைப்பது தமது உடனடி வேலைகளில் ஒன்று என்று அறிவித்தவர்கள், 37 ஆண்டுகாலமாக அதற்காக என்ன முயற்சி எடுத்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். சில ஆண்டுகளுக்கு முன்பாக, பல்வேறு குழுக்களையும் இணைக்க மாவோயிஸ்டுகள் எடுத்த முயற்சியில் அடிப்படையான பேச்சுவார்த்தைகளுக்குக்கூட உடன்படாத ஒரே கட்சி என்ற பெருமை இவர்களை மட்டுமே சேரும். தமிழ்நாட்டிற்கு வெளியே செயல்பட்டு ஒரு அகில இந்தியக் கட்சியை உருவாக்க முயற்சிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. தமிழ்நாடு தவிர்த்து கேரளா, ஆந்திரா, கர்னாடகா, ஒரிசா, பீகார், மகாராஷ்ட்டிரா, உத்தரகாண்ட் என்று வேறு எங்கும் இந்தக் கம்பெனிக்கு கிளைகளும் இல்லை.

எனது அனுபவத்திலும், பிற அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து தோழர்களின் அனுபவத்திலும், சக தோழமை அமைப்புகளோடு, ஒரு பொது அரசியல் பிரச்சினையில் கூட்டாக இணைந்து செயல்பட இவர்கள் ஒருபோதும் முன்வந்ததே இல்லை. தமிழ்நாட்டில் இயங்கிய / இயங்கிக் கொண்டிருக்கும் பிற மார்க்சிய லெனினியக் குழுக்கள் மீது இவர்கள் காட்டும் காழ்ப்புணர்வுக்கு அளவே இருந்ததில்லை.

1976 ஆம் ஆண்டு, சாரு மஜூம்தாரின் அழித்தொழிப்பு “கொள்கை”யை நிராகரித்து, மக்கள் திரள் அமைப்புகளை உருவாக்கி, மக்களைத் திரட்டி புதிய ஜனநாயகப் புரட்சியை இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்படுத்துவோம் என்று ”புரட்சிகரமாக” சூளுரைத்த இக்கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளில் ஒன்றுதான் மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற பெயரால் சுருக்கமாக, ம. க. இ. க என்று அறியப்படும் அமைப்பு. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய பிற “முன்னணி”கள் யாவும் இக்கட்சியின் “மக்கள் திரள் அமைப்புகள்”. 37 ஆண்டுகளாக களப்பணி ஆற்றியும் இவற்றில் எந்தவொரு முன்னணியும் மக்கள் திரளைத் திரளாக அணிதிரட்டியதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் பூஜ்ஜியம் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் ஒன்று (0.0001 %) சதவீதத்தினரைக் கூட இவர்களால் இதுவரையில் அணிதிரட்ட முடியவில்லை. இவர்களுடைய அத்தனை “முன்னணி”களும் பின்னணியிலேயே தேங்கிக் கிடக்கின்றன என்பதே நாட்டு நடப்பு.

இக்கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை மக்களிடம் பரப்ப நடத்தப்படும் இதழ்கள் இரண்டு. அரசியல் இதழாக “புதிய ஜனநாயகம்”, இலக்கிய இதழாக “புதிய கலாச்சாரம்”. இவை தவிர, கட்சிக்குள்ளாக, “தத்துவார்த்த கோட்பாட்டு” விவாதங்களை நடத்த “புரட்சிப் புயல்” என்று ஒரு இதழும் உண்டு. பாவப்பட்ட அப்பாவி ஜனங்களான பொதுமக்களுக்கு அந்த இதழ் வாசிக்கக் கிடைக்காது. அவ்வளவு பயங்கரமான “அண்டர் க்ரவுண்டு” பத்திரிகை. இந்த அண்டர் க்ரவுண்டு “புரட்சிப் புயல்” குறித்து சொல்ல அருவருப்பான சுவாரசிய விஷயம் ஒன்று உண்டு. அதற்குப் பிறகு வருகிறேன்.

இக்கட்சியினரின் உள்வட்டங்களில் பாவப்பட்ட அப்பாவி ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் சில பல “கலைச் சொற்கள்” சர்வ சாதாரணமாகப் புழங்கும். அவையாவன: தரகு முதலாளித்துவம், (இப்போது பன்னாட்டு தரகு முதலாளித்துவம் என்ற ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறது), நீண்ட கால மக்கள் யுத்தம், அரைக் காலனியம், நவ காலனியம், அரை நிலப்பிரபுத்துவம், புதிய ஜனநாயகப் புரட்சி, பாராளுமன்றம் பன்றித் தொழுவம், தேர்தல் பாதை திருடர் பாதை. பட்டியல் நீளமானது. பாமர ஜனங்களுக்கு சொன்னால் பேயறைந்தது போல மிரண்டு விடுவார்கள் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.

இத்தகைய பயங்கரமான பரிபாஷைக் கலைச் சொற்களை ஆயுதமாகக் கொண்டு மக்களை அணிதிரட்டக் களம் இறங்கியவர்களுக்கு சில வருடங்களிலேயே எதிர்பாராத சோதனை ஒன்று வந்தது. இந்தப் பரிபாஷை கலைச் சொற்கள் தவறு என்றும், அதற்கு மாற்றாக வேறு ஒரு பரிபாஷைக் கலைச் சொற்கள்தாம் சரி என்றும் கட்சிக்குள்ளே குழப்பம். பரிபாஷைக் குழப்பத்தை ”விவாதிப்போம் விவாதிப்போம்” என்று சொல்லி வந்த கட்சித் தலைமை, குழப்பம் விளைவித்தவர்களின் விடாப்பிடியான கேள்விகளால் எரிச்சலுற்று திடீரென்று அவர்களைக் கட்சியில் இருந்து வெளியேற்றியது.

வெளியேற்றப்பட்ட குழு 1981 ஆம் ஆண்டு, “தற்காலிக அமைப்புக் குழு” – Adhoc Committee, ஒன்றை அமைத்துக் கொண்டு தனியாக கட்சி ஒன்றைக் கட்டி எழுப்ப ஆரம்பித்தனர். 1983 ஆம் வருடம் அவர்கள் தமது கட்சியின் பெயரை அறிவித்தனர். அது பின்வருமாறு: தமிழ் நாடு அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா – லெ) – Tamil Nadu Organizing Committee, CPI (M – L). த. நா. அ. க (மா – லெ) என்று புரட்சிகர வட்டாரங்களில் சுருக்கமாக அறியப்பட்ட கட்சி.

இக்கட்சியும் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றது. மக்கள் திரள் அமைப்புகளைக் கட்ட வேண்டும் என்றது. அகில இந்திய அளவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும் என்றது. அகில இந்திய அளவில் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்றது. அவ்வாறு ஒருங்கிணைக்கப்படப் போகும் அகில இந்தியக் கட்சியின் தமிழ்நாட்டுக் குழு என்று தன்னை அறிவித்துக் கொண்டது.

”கேடயம்” என்ற அரசியல் இதழும் “மனஓசை” என்ற இலக்கிய இதழும் இக்கட்சியால் வெளியிடப்பட்டன. “புரட்சிக் கனல்” இக்கட்சியின் “தத்துவார்த்த கோட்பாட்டுப்” பத்திரிகை.  புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர விவசாயிகள் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர மகளிர் முன்னணி, மக்கள் உரிமைக் கழகம் (ம. உ. க) மக்கள் கலாச்சாரக் கழகம் (ம. க. க) இவை இக்கட்சியின் ”மக்கள் திரள் அமைப்புகள்”. ஒரே புரட்சிக(கா)ரம்தான். மக்கள்தான் எதிலும் திரளவில்லை.

மாநில அமைப்புக் கமிட்டியில் இருந்து மாறுபட்ட த. நா. அ. க வின் தனித்துவமான பரிபாஷைக் கலைச் சொல் பட்டியல்: சார்பு முதலாளியம், பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி, பிராந்திய அளவிலான ஆயுதப் போராட்டம், பாராளுமன்றப் பங்கேற்பு, இன்னபிற. நிறைய மறந்துவிட்டது.

இவ்விடத்தில் ம. க. இ. க வினரின் கட்சியான மாநில அமைப்புக் கமிட்டி (மா – லெ) கட்சியினரோடு, அவர்களில் இருந்து பிரிந்த த. நா. அ. க வினரைப் பற்றியும் குறிப்பிடுவதற்கு காரணங்கள் உண்டு.

ஒன்று, த. நா. அ. க  வில்தான் 1989 பிப்ரவரி முதல் 1991 மே வரையிலான காலப் பகுதியில் முழு நேர ஊழியனாக செயல்பட்டிருக்கிறேன். இரண்டாவது, தமது கட்சியில் இருந்து பிரிந்து போன த. நா. அ. க வினரை ம. க. இ. க வின் கட்சியான மாநில அமைப்புக் கமிட்டியினர் எப்படி நடத்தினார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி சில விடயங்களைப் புரிய வைக்க இயலும். மூன்றாவது, 1976 இல் தொடங்கப்பட்ட ”டப்பா கார்” எங்கேயும் நகராமல், இருந்த இடத்திலேயே துருப்பிடித்து கிறீச்சிட்டுக் கொண்டிருப்பதையும் இந்த ஒப்பீடு விளக்க உதவும்.

எப்படியோ! எங்கள் தெருவில் இருந்து காணாமல் போன ”டப்பா கார்”, இப்போது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு கொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது.

(தொடரும்)

அனுபவம், அரசியல் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

”டப்பா காரு”ம் நகராத இந்தியப் புரட்சியும் – 1

அடியேன் சென்னை சூளைமேட்டில் பிறந்து வளர்ந்த தெருவில் ஒரு கார் இருந்தது. அரதப் பழசாகிக் குப்பை தொட்டிக்கு அருகில் அனாதையாக நின்று கொண்டிருக்கும். சிறுவர்களாகிய எங்கள் எல்லோருக்கும் அதுதான் “லேண்ட் மார்க்”. ஓட்டப் பந்தயம் வைத்தாலும் சரி, கில்லி, கோலி, கிரிக்கெட் என்று எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி அதுதான் எல்லைக் கோடு. ”டப்பா கார்” என்று நாங்கள் அழைத்த அந்தக் கார், எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து 1988 ஆம் வருடம் வரையில் சிறுவர்களாகிய எங்கள் விளையாட்டு உலகத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது.

பிறகு, இரண்டரை வருடங்கள் முழு நேர அரசியல் களப்பணியாளனாக பணியாற்றி, சோர்ந்து, இளவயதிலேயே முதுமை எய்தி, வீடு திரும்பி, வாசிப்பில் தீவிரமாக மூழ்கிய காலத்தில் நமது சமூகத்தில் சாதியின் இறுக்கத்தின் பால் எனது கவனம் குவிந்தது. சாதியமைப்பு குறித்த வாசிப்புகளின் இடையிடையே, நான் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் சாதி பற்றிய கேள்வியும் எழுந்ததால், எனது தாய்வழிப் பாட்டியாரைத் துளைத்து எடுத்து, குடும்பப் பழங்கதைகளையும், அடியேன் பிறந்த சாதியைப் பற்றியும் அறிந்து கொள்ளத் தொடங்கியிருந்தேன்.

அப்பழங்கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இளம் பிராயத்து நினைவுகள் கிளர்ந்து, ஏதோ ஒரு நினைவு முடிச்சு அவிழ்ந்து அந்த “டப்பா கார்” நிழலாடியது. ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு ஓடிவந்து பார்க்கிறேன், இருந்த இடத்தில் அது இல்லை. தலை சுற்றியது. வெளுத்திருந்த நீல வானம் அப்படியே என் மீது கவிவது போலிருந்தது. பூமி பிளந்து ஆழத்தில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.

சுளீரென்று முகத்தில் ஒரு குளிர்ந்த உணர்வு. மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன். பாட்டி, தாயார், தங்கை மூவரும் கலவரத்தோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தாயார், பதற்றத்தோடு “என்னடா ஆச்சு! எதை நினைச்சு இப்படி விழுந்தே!” என்று உலுக்கிக் கொண்டிருந்தார். தங்கையோ கண்ணீரின் விளிம்பில். பாட்டி, பிலாக்கணம் வைக்கத் தொடங்கியிருந்தார். ”யாரு கண்ணு பட்டுச்சோ, அவ நாசமா போக!” என்று.

மெல்ல சுதாரித்து, “இல்லம்மா, அந்த கார் …”

தாயார்: எந்த  காருடா?

”அதாம்மா, அந்த டப்பா கார் … அந்த லைன் வீட்டு முன்னால குப்ப தொட்டியில நிக்குமே அந்த டப்பா கார்”

தாயார்: ”அதுக்கு என்னடா இப்ப?”

”அது அங்க இல்லம்மா …”

பாட்டி அடுத்த பிலாக்கணத்திற்கு தாவினார்: “ஐய்யோ, உச்சி வெயில்ல வெளிய போகாதடான்னு எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறானே … எந்த காத்து கருப்பு தீண்டுச்சோ …”

தங்கை குபீரென்று சிரித்துவிட்டாள்: “அம்மா, இது லூசும்மா. அங்க நிக்குமில்ல, அந்த டப்பா கார், அது நினைப்பு வந்துடுச்சு போல இருக்கு … லூசு லூசு!” குலுங்கிக் குலுங்கி சிரிக்க தொடங்கியிருந்தாள்.

தாயார்: “நாசமா போறவனே. கொஞ்ச நேரத்துல குடலப் பிசைஞ்சிட்டியேடா. இதுக்குத்தான் ராத்திரியெல்லாம் கண் முழிச்சு படிக்காதே படிக்காதேன்னு தலப்பாடா அடிச்சிக்கிறது. கேட்டாத்தானே. அந்த வீணா போன புள்ள புடிக்கிற கும்பலோட சகவாசம் என்னிக்கு வந்துச்சோ, அன்னையில இருந்து புடிச்சுது சனியன் …” என்று திட்டிக்கொண்டே என்னை விட்டு நகர்ந்தார்.

இரண்டு நாட்கள் தங்கை இதை சொல்லியே என்னை சீண்டி கேலி செய்து கொண்டிருந்தாள். பாட்டியார், “என்னத்த புள்ளய பெத்தியோ” என்று தாயாரை சீண்டிக் கொண்டிருந்தார்.

என் மனமோ ”டப்பா காரை”யே அசை போட்டு கொண்டிருந்தது.

ஓட்டப் பந்தயம் என்றால், டப்பா காரைத்தான் தொட்டுவிட்டு வரவேண்டும்.

கில்லி என்றால், டப்பா கார்தான் எல்லைக் கோடு. கோலியில் “பேந்தா ப்ரூட்” விளையாட்டில் டப்பா கார்தான் எல்லை. தோற்றவர்கள் அங்கிருந்து முட்டி தேய “கஞ்சி காய்ச்சிக்” கொண்டு வரவேண்டும்.

ஐஸ் பாய் என்றால் அதற்குப் பின்னால் ஒளிவதற்குத்தான் போட்டி. ஆளைப் பிடிப்பவரை சுற்றி வந்து ஏமாற்ற வசதி.

க்ரிக்கெட் என்றால், அடித்த பந்து டப்பா காரை தாண்டினால் ஃபோர்.

இப்படி எங்கள் இளவயது விளையாட்டுக்களின் ஒரு அங்கமாக அந்த “டப்பா கார்” நீக்கமற நிறைந்திருந்தது.

இரண்டரை வருட இடைவெளியில், விளையாட்டுக் குணத்தை இழந்து, படு சீரியஸாகி, அரும்பிக் கொண்டிருந்த மீசையில் எவரையும் துச்சமாக ஏறி மிதிக்கும் முறுவல் படிந்து, விரைப்பான மனதோடு,  யாரையும் கேள்வி கேட்கும் துணிவில் ஊறித் திளைத்து, “தோழர்” பட்டம் அருளியிருந்த மமதையோடு திரிந்து, குருவி தலையில் வைத்த பாரத்தின் சுமை தாளாத கதையாக விழுந்து சோர்ந்து வீடு சேர்ந்து, மெல்லத் துளிர்த்து தீவிரத் தேடலில் மனம் அலைக்கழிந்து கொண்டிருந்த காலம் அது.

தோழர் பட்டம் அருளியிருந்த மமதையில் இருந்து விடுபடுவது, மார்க்சிய மூலவர்களான காரல் மார்க்சையும் எங்கெல்சையும் நேரடியாக வாசித்துத் தெளிவது என்று எனக்குள் உறுதியெடுத்துக் கொண்டு பயணப்பட ஆரம்பித்திருந்த தருணம். தமிழக/இந்திய வரலாறுகளை – சமூக அமைவுகளை, சாதியமைப்பின் இயக்கத்தை ஆழக் கற்க வேண்டிய அவசியத்தையும் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்த கட்டம்.

அத்தருணத்தில், மாமேதைகளின் ஆசீர்வாதத்தினால்தான் என்னவோ “டப்பா கார்” நினைவு இடுக்குகளின் சிடுக்குகளை முறித்துக் கொண்டு வந்து விழுந்தது.

விஷயம் என்னவென்றால், என்னதான் அந்த டப்பா காரைச் சுற்றியே எங்களது விளையாட்டு பொழுதுகள் இருந்தாலும், ஒருவரும் அதனுள்ளே நுழைய மாட்டோம். அவ்வளவு குப்பை மண்டியிருந்தது. சுற்றி வருவோம், அதன் படியில் ஏறி நிற்போம், சற்று உயரமான பையன்கள் அதன் கூரை மீது ஏறி சாகசமும் செய்வார்கள். ஆனால், ஒருவரும் அதற்குள்ளாக நுழைந்ததில்லை. எத்தனை வருடக் குப்பையோ தெரியாது, மண்டியிருந்தது. அழுக்கில் புரள்வதைப் பற்றிக் கவலைப்படாத சிறுவர்கள் கூட அதனுள்ளே நுழைந்ததில்லை. இத்தனைக்கும் கதவுகள் திறந்துதான் இருந்தன.

டப்பா காருக்குப் பிறகுதான் நாங்கள் மற்ற கார்களையே பார்த்திருக்கிறோம் என்பதும் சத்தியமான உண்மை.

டப்பா  காருக்குப் பிறகு சிறுவர்களாகிய நாங்கள் பார்த்து மகிழ்ந்தது, சிகப்பு மாருதி கார். இரண்டு சிகப்பு மாருதி கார்களை ஒரு சேர பார்த்தால் அதிர்ஷ்டம் என்ற விளையாட்டு நம்பிக்கையும் எங்களில் உருவாகியிருந்தது.

மாருதி காருக்குப் பிறகு எத்தனையோ கார்கள் வந்து விட்டன. அவை எதுவும் நினைவு இடுக்குகளில் தங்கவில்லை. சிகப்பு நிற மாருதி கார்கள் கூட இப்போது அந்த டப்பா கார் கிளர்த்தி விட்ட நினைவுச் சிடுக்கில் இருந்துதான் மீளக் கிளம்பின.

அந்த அளவிற்கு அது ஆழப் பதிந்ததன் விசேஷம் என்ன என்று இப்போது அசைபோட்டு பார்க்கிறேன்.

முதல் விசேஷம், அது ஓடாத கார். என் நினைவுக்குத் தெரிந்து இருபது வருடங்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரே கார் அதுவே.

(தொடரும்)

தொடர்புடைய பதிவுகள்:

வாசிப்பின் நிமித்தங்கள் 1

வாசிப்பின் நிமித்தங்கள் 2

வாசிப்பின் நிமித்தங்கள் 3

அனுபவம், அரசியல் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »
%d bloggers like this: