நீதியின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள்!

குறிப்பு: இக்கட்டுரை ”தமிழ் ஆழி – மே” இதழுக்காக எழுதியது. இதழ் இன்று வரை வரவில்லை. நாளையோ நாளை மறுநாளோ வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தாமதத்திற்கான நண்பர் ஆழி செந்திலின் காரணங்கள் அனைத்தும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இத்தனை நாட்கள் கழித்து இக்கட்டுரை வருவது இதற்கான கவனமும் அவசியமும் குறைந்துவிடும் என்பதால் இங்கே வெளியிடுகிறேன். இதை “கீற்று” இதழிலேயே வெளியிடுவதையும் “தமிழ் ஆழி”க்காகத் தவிர்த்து வந்தேன். ஆங்கிலத்தில் எழுதவும் நேரம் கிடைக்கவில்லை. முயற்சிக்கிறேன்.

——-

”சட்ட வழிப்பட்டு ஒரு மனித உயிர் தூக்கிலிடப்படும் துயரார்ந்த பொழுதாக விடியும் ஒவ்வொரு நாளும், மனிதநேயம் மிக்க நீதியின் கொடி அரைக்கம்பத்தில் தொங்கவிடப்பட வேண்டும். உயிரைப் பலி கொல்கிற சட்டத்திற்கு காந்தியின் தேசம் இப்படியாகத்தான் மரியாதை காட்ட வேண்டும். ஒரு தேசத்தின் மதிப்பீடுகளும் ஒரு தலைமுறையின் அறநெறிகளுமே குற்றம் மற்றும் தண்டனை குறித்த கருத்தாக்கங்களை வடிவமைக்கின்றன. அதன்படி, முந்தைய நூற்றாண்டுகளின் சிறந்த பண்பாடுகளின் ஊடாகச் சுடர் விட்டு வந்திருக்கும் வழிகாட்டும் நட்சத்திரமான குற்றவியல் சட்ட நெறிமுறைகளின் இன்றைய நோக்குகள், மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தவே செய்கின்றன.” வி. ஆர். கிருஷ்ணய்யர் (ராஜேந்திர பிரசாத் இன்ன பிறர் எதிர் உத்தர பிரதேசம், பிப்ரவரி 9, 1979)

தேவேந்தர் பால் புல்லரின் மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்து, ஏப்ரல் 12 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வாசித்து முடித்ததும், முன்னாள் நீதிபதி மதிப்பிற்குரிய வி. ஆர். கிருஷ்ணய்யரின் மேற்சொன்ன கூற்றுதான் சட்டென்று நினைவிற்கு வந்தது.க்

புல்லரின் கருணை மனு மீதான முடிவு மிக நீண்ட காலமாக தள்ளிப்போடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டும், அதன் விளைவாக அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தீவிர சிகிச்சையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும், புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே புல்லரின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவின் சாரம்.

மேல் முறையீட்டு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அதற்குக் குறிப்பிட்டிருக்கும் காரணங்களை நோக்கும்போது, கால் நூற்றாண்டிற்கு முன்பாக, கிருஷ்ணய்யர் மொழிந்த கூற்றுப்படி, நீதியின் கொடி அரைக்கம்பத்திலேயே நிரந்தரமாகக் கட்டப்பட்டுவிட்டதோ என்ற கேள்வியே மிஞ்சுகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பட்டிருக்கும் காரணங்களின் சில முக்கியப் புள்ளிகள் பின்வருமாறு:

நீண்ட காலத் தாமதத்தைக் காரணம் காட்டித் தண்டனைக் குறைப்பைச் செய்ய புல்லர் ஒன்றும் சாதாரணமான கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை. தடா சட்டத்தில் அடங்கும் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர். தனிப்பட்ட பகை, சொத்துத் தகராறு, போன்ற காரணங்களுக்காக நிகழும் கொலைகளோடு ஒப்பிட முடியாத அளவிற்கு தடா சட்டத்தின் கீழான குற்றங்கள் முற்றிலும் வேறானவை.

பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் எண்ணற்ற அப்பாவி பொதுமக்களும், படையினரும் உயிரிழக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், அக்குற்றங்களின் தீவிரத்தன்மை புரியும். தமது திரிந்த அரசியல் நோக்கங்களை அடைவதற்காக அரசுக்கு எதிரான போரைத் தொடுக்க  துப்பாக்கிகளையும், குண்டுகளையும், சில சமயங்களில் பேரழிவு ஆயுதங்களையும்கூட பயன்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.

அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவர்கள் மனித உயிருக்கு எந்த மதிப்பையும் அளிப்பதில்லை. மற்ற மனிதர்கள் மீது நேசமோ கருணையோ காட்டாதவர்கள், தம் மீது கருணை காட்டும்படி கோரிக்கை விடுப்பதும், தமது மனு மீது நடவடிக்கை எடுக்க நீண்ட காலதாமதம் ஆனது என்ற காரணத்தைக் கூறி தண்டனையைக் குறைக்கக் கோருவதும் வேடிக்கையான புதிராக இருக்கிறது.

மரண தண்டனையை இரத்து செய்யும் அளவிற்கு கடுமையாக மனநலம் குன்றியிருக்கிறார் என்று முடிவு செய்ய, போதுமான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிற்கு எதுவும் முன்மொழியப்படவில்லை.

கருணை மனு மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு, புல்லரின் சார்பில் பல்வேறு தரப்பினரால் முடிவேயில்லாமல் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை இரக்கமின்றிக் கொன்று குவிக்கும் குரூரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு, மனித உரிமைகள் என்ற மாயப்பிசாசைக் கிளப்பிவிடும் வேலையில் பலரும் சேர்ந்து விட்டிருக்கிறார்கள். (Many others join the bandwagon to espouse the cause of terrorists involved in gruesome killing and mass murder of innocent civilians and raise the bogey of human rights. pg: 62 – 63)

சுருங்கக் கூறுவதென்றால், பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள், கருணையோ மனித நேயமோ அற்றவர்கள். மற்றவர்களுக்கு கருணை காட்ட முடியாதவர்களுக்கு கருணை காட்ட அவசியமில்லை. மனித உரிமைகள் என்ற ”மாயப்பிசாசை” காட்டி அவர்களுடைய தண்டனையைக் குறைக்கக் கோருவது ஒரு மோசமான தவறு. சாதாரணமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு இவற்றைக் கோர உரிமை உண்டு. பயங்கரவாதிகளுக்கு இல்லை.

இக்கூற்று சரிதானா? பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு மனித உரிமை கோரிக்கை எழுப்ப உரிமை கிடையாதா? அடிப்படை மனித உரிமைகள் எனப்படுபவை பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கும் பொருந்தும் என்று இதுவரை யாருமே அங்கீகரிக்கவில்லையா?

அமெரிக்காவிலே இப்படி இல்லை. இங்கிலாந்திலே அப்படி இல்லை என்பது போன்ற வாதங்களை முன்வைக்காமல் இதற்குச் சரியான பதிலை சொல்ல முடியுமா?

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் உறுப்பினர்களாக இருக்கும் ஐநா சபை, மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவான நெறிகள் என்று வரையறுத்திருப்பவற்றை நமது வழிகாட்டும் நெறிகளாக ஏற்றுக் கொள்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்து விடாது என்று நம்பலாம் அல்லவா?!

2006 ஆம் வருடம் ஐநா சபை உலக அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு செயல்திட்டம் (Global Counter – Terrorism Strategy) என்று ஒரு திட்டத்தை அறிவித்தது. அவ்வருடம் செப்டம்பர் 8 அன்று இச்செயல்திட்டம் ஐநா பொது மன்றத்தில் (General Assembly) தீர்மானமாக முன்மொழியப்பட்ட போது, அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் அதை ஆரத்தழுவிக் கொண்டன.

ஆறு ஆண்டுகள் கழித்து, 2012 மார்ச் 30 அன்று மீண்டும் ஐநா சபை பொது மன்றத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பது (Protection of human rights and fundamental freedoms while countering terrorism A/RES/66/171) என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

”காத்திரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் முரண்பட்ட இலக்குகள் அல்ல” என்று முகவுரையிலேயே குறிப்பிட்டுத் தொடங்கும் அத்தீர்மானத்தின் ஆரம்பப் பிரிவுகளில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் பின்வருமாறு:

பிரிவு 1. பயங்கரவாதத்திற்கு எதிராக அரசுகள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சர்வதேசச் சட்டம், அதிலும் குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், அகதிகள் மற்றும் மனிதநேயச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டவையாக இருக்கவேண்டும் என்பதை [ஐநா பொது மன்றம்] மீண்டும் வலியுறுத்துகிறது.

பிரிவு 4. பல்வேறு தேசிய, இன, மொழிப் பிரிவினர் உள்ளிட்ட அனைவருடைய மனித உரிமைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சர்வதேசச் சட்ட நெறிகளின்படியே அனைத்து பயங்கரவாத எதிர்ப்பு செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த வகையில், நிறம், இனம், மொழி, பாலினம், மதம், சமூகப் பின்புலம் சார்ந்து எவ்விதமான பாகுபாடுகளும் காட்டப்படக்கூடாது.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் பேரில் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றன என்ற கவலையினாலேயே ஐநா சபை இத்தீர்மானத்தை நிறைவேற்றி உறுப்பு நாடுகளை அறிவுறுத்தத் தொடங்கியது. பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கும் மனித உரிமைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே ஐநா சபையின் கொள்கை முடிவு. அதை அனைத்து உறுப்பு நாடுகளும் (இந்தியா உட்பட) ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

இதற்கு மாறாக, பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு மனித உரிமைகளைக் கோரவே உரிமை கிடையாது என்று கூறுவது, ஐநா சபையால் முன்மொழியப்பட்டு, அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட கொள்கை முடிவுக்கே எதிரானது. ஐநா சபையின் தீர்மானங்களை ஏற்றுக் கொண்ட இந்திய அரசின் கொள்கை முடிவுக்குமே எதிரானது. துரதிர்ஷ்டவசமாக புல்லருக்கு எதிரான தீர்ப்பு  சர்வதேசச் சமூகம் (இந்திய அரசும்) ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு பொது நியதிக்கு எதிரான நிலையில் நிற்கிறது.

அதோடு, பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு மன்னிப்பே கிடையாது என்ற கருத்தை இப்போதைய தீர்ப்பும் சரி, 2001 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் சரி (நீதிபதிகள் அரிஜித் பிரசாயத் மற்றும் பி. என். அகர்வால் ஆகியோரின் பெரும்பான்மை தீர்ப்பு) தொடர்ந்து வலியுறுத்தியிருக்கின்றன.

இது குறித்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நெறிமுறை என்ன?

1966 ஆம் ஆண்டு ஐநா சபையால் நிறைவேற்றப்பட்ட, ”சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாலான சர்வதேச ஒப்பந்தம்” (International Convention on Civil and Political Rights, 1966) பிரிவு 6 –ன் உட்பிரிவு 4 மிகத் தெளிவாகக் கூறுகிறது (இந்திய அரசாங்கம், 1979 லேயே இந்த ஒப்பந்தத்தை உறுதி (ratify) செய்திருக்கிறது): மரணதண்டனை விதிக்கப்பட்ட எவருக்கும் பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு கோருவதற்கு உரிமை இருக்கிறது. மரணதண்டனை விதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்படலாம். (Anyone sentenced to death shall have the right to seek pardon or commutation of the sentence. Amnesty, pardon or commutation of the sentence of death may be granted in all cases.)

இந்த உட்பிரிவு “வழங்கப்பட வேண்டும்” (be granted) என்று வலியுறுத்தவில்லை. “வழங்கப்படலாம்” (may be granted) என்ற வலியுறுத்தலோடு தன்னை நிறுத்திக் கொள்கிறது. என்றாலும், அனைத்து வழக்குகளிலும் எனும் போது பயங்கரவாதக் குற்ற வழக்குகளும் அடங்கும். புல்லருக்கு எதிரான தீர்ப்புகளிலோ, பயங்கரவாதக் குற்றங்கள் ஒரு விதிவிலக்காகவே தொடர்ந்து சுட்டிக் காட்டப்படுகிறது. பயங்கரவாதக் குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்போ தண்டனைக் குறைப்போ செய்யத் தேவையில்லை என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது. இக்கருத்தும் சர்வதேச ஒப்பந்தத்தின் ஒப்புக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.

மேலே குறிப்பிட்டுள்ளதைக் காட்டிலும் முக்கியமான புள்ளி ஒன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சில் மே 1984 -ல் “மரண தண்டனைக் கைதிகளின் உரிமைகளை உத்திரவாதம் செய்யும் பாதுகாப்பு நெறிகள்” (Safeguards guaranteeing protection of the rights of those facing the death penalty – Approved by Economic and Social Council resolution 1984/50 of 25 May 1984) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன் 4வது பிரிவு, ”குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம், வேறு எந்தவொரு மாறுபட்ட விளக்கத்திற்கும் இடமில்லாத வகையில், தெளிவான, நம்பத் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட பிறகே ஒருவர் மீது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்” (Capital punishment may be imposed only when the guilt of the person charged is based upon clear and convincing evidence leaving no room for an alternative explanation of the facts.) என்ற நெறிமுறையை மொழிகிறது.

ஆனால், புல்லர் வழக்கில் நடந்தது என்ன?

மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வால் வழங்கப்பட்ட 2001 ஆண்டுத் தீர்ப்பு ஏகமனதான தீர்ப்பு அன்று. நீதிபதிகள் அரிஜித் பிரசாயத் மற்றும் பி. என். அகர்வால் ஆகிய இருவரும் மரண தண்டனையை உறுதிப்படுத்தும் தீர்ப்பை வழங்குகின்றனர். மற்றுமொரு நீதிபதியான (சமீபமாக) மறைந்த எம். பி. ஷா புல்லரை குற்றத்திலிருந்தே விடுவித்து மற்றுமொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

துன்புறுத்தலின் பேரில், போலீஸ் அதிகாரிகளிடம் புல்லர் அளித்த வாக்குமூலம் ஒன்று மட்டுமே புல்லருக்கு எதிராக இருக்கிறது. வாக்குமூலத்தை உறுதி செய்யும் மற்ற ஆதாரங்கள் எதையும் போலீசார் முன்வைக்கவில்லை. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் கணிணியும் ஃப்ளாப்பியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை. அது சேமித்தே வைக்கப்படவில்லை என்று போலீசார் ஒப்புக் கொள்கின்றனர்.

முதல் குற்றவாளியான தயா சிங் லஹோரியா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அப்படியிருக்க, இரண்டாவது குற்றவாளியான புல்லரைக் குற்றவாளி என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. சாட்சி சொல்ல அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட புல்லரைக் குறிப்பிட்டு அடையாளம் கூறவில்லை.

இறுதியாக, விசாரணை அதிகாரியிடம் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை விதிக்க முடியாது என்றும், அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் தமது தீர்ப்பை அளித்திருக்கிறார்.

ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சில் மே 1984 -ல் “மரணதண்டனைக் கைதிகளின் உரிமைகளை உத்திரவாதம் செய்யும் பாதுகாப்பு நெறிகள்” பிரிவு 4 –ன் படி புல்லர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவும் இல்லை. மூன்று நீதிபதிகளில் ஒருவர் அவரை வழக்கில் இருந்தே விடுவித்திருக்கிறார். இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் புல்லருக்கு மரணதண்டனை விதித்திருப்பது மீண்டும் சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது.

மரண தண்டனை விதித்ததோடு அல்லாமல், அவரது அனைத்து மேல்முறையீடுகளையும், ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரிய அவரது கருணை மனுவையும் உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் தொடர்ந்து நிராகரித்து வந்திருப்பது சர்வதேசச் சட்ட நெறிமுறைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தங்களுக்கும், சர்வதேச மனித நேய நெறிமுறைகளுக்கும் எதிரானது.

புல்லருக்கு எதிரான தீர்ப்பில் அவரது கோரிக்கையை நிராகரிக்கக் கூறப்பட்டுள்ள காரணங்களின் சாரம், இவ்வாறு சர்வதேசச் சட்ட நெறிமுறைகளுக்கும், ஒப்பந்தங்களுக்கும் மாறானது மட்டுமே அன்று. கருணை மனு மீதான முடிவு தாமதம் ஆனதற்கான காரணத்தைக்கூட புல்லரின் தரப்பு மீது சுமத்தியிருப்பதும் அவரது உடல் நலக் குறைவைக்கூடக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்திருப்பதும், மனித நேய நெறிகளுக்கும் அடிப்படை மனித உரிமைகளுக்குமே எதிரானவை.

ஆனால், இவ்வழக்கைப் பொருத்த அளவில், இந்திய அரசு புல்லரைக் கைது செய்ததே ஒரே வீச்சில் சர்வதேச நெறிமுறைகளுக்கும் இந்தியச் சட்டத்திற்குமே எதிராக அமைந்திருந்த வேடிக்கையையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

அரசியல் அகதியாக ஜெர்மன் அரசு தன்னை ஏற்றுக் கொண்டுவிடும் என்ற நம்பிக்கையில் 1996 ஆம் ஆண்டு புல்லர் ஜெர்மனிக்குத் தப்பிச் செல்கிறார். ஆனால், ஜெர்மன் அரசு அவரைக் கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்கிறது. ஒப்படைப்பதற்கு முன்பாக, புல்லருக்கு எக்காரணத்தைக் கொண்டும் மரண தண்டனை வழங்கப்படக்கூடாது என்ற வாக்குறுதியை இந்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. காரணம், ஜெர்மனியில் மரண தண்டனை தடை செய்யப்பட்ட ஒன்று. ஜெர்மனியின் சட்ட விதிகளின்படி, நாடு கடத்தப்படும் ஒரு நபருக்கு, அவரது சொந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் ஆபத்து இருந்தால், அவரை அந்த நாட்டு அரசிடம் ஒப்படைக்கக்கூடாது. இப்போது, ஜெர்மன் அரசாங்கம், புல்லரை இந்திய அரசின் வாக்குறுதியை நம்பி ஒப்படைத்ததற்காகத் தன்னைத்தானே நொந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இந்திய அரசு இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுபவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற இந்தியச் சட்டத்தைப் பற்றியே இந்திய அரசாங்கம் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. 1966 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Extradition Act இன் 34C என்ற பிரிவே அது.

அச்சட்டப் பிரிவு கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறது:

”மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனைக்கான வழிவகை. தற்சமயம் நடப்பில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் இருப்பதற்கு அப்பாற்பட்டு, இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான குற்றத்தைச் செய்த ஒருவர், தப்பித்து வெளியேறிய நிலையில், வேறொரு நாட்டில் நாடு கடத்தலுக்குரிய குற்றத்தைச் செய்திருக்கும்பட்சத்தில், மத்திய அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு இணங்கி அந்நாட்டு அரசாங்கம் அவரை இந்திய அரசிடம் ஒப்படைக்குமானால், ஒப்படைக்கும் நாட்டின் சட்டத்தில் அக்குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வழியில்லை எனும்பட்சத்தில், அக்குற்றவாளிக்கு அவர் தேடப்படும் குற்றத்தைப் பொருத்த அளவில், ஆயுள் தண்டனை வழங்கப்படும்.” (Provision of life imprisonment for death penalty. Notwithstanding anything contained in any other law for the time being in force, where a fugitive criminal, who has committed an extradition offence punishable with death in India, is surrendered or returned by a foreign State on the request of the Central Government and the laws of that foreign State do not provide for a death penalty for such an offence, such fugitive criminal shall be liable for punishment of imprisonment for life only for that offence.)

இறுதியாக,

சர்வதேச மனித நேய நெறிமுறைகளின்படி மரண தண்டனை என்பதே ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. ”சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாலான சர்வதேச ஒப்பந்தம்” பிரிவு 6 மிகக் குறிப்பாக மரணதண்டனைக்கு எதிரானதாகவே வடிவமைக்கப்பட்டது. அதன் முதல் உப பிரிவு, “ஒவ்வொரு மனிதருக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளார்ந்து இருக்கிறது. இந்த உரிமையைச் சட்டம் பாதுகாக்க வேண்டும். எவருடைய உயிரும் தன்னிச்சையாக பறிக்கப்படக்கூடாது” (Every human being has the inherent right to life. This right shall be protected by law. No one shall be arbitrarily deprived of his life.) என்று வரையறுக்கிறது.

மரண தண்டனைக்கு எதிரான ஐநாவின் பல்வேறு தீர்மானங்களும் வலியுறுத்துவது அத்தண்டனை மானுடத் தன்மதிப்பிற்கு (human dignity) எதிரானது என்பதே. மானுடத் தன்மதிப்பைச் சிதைக்கும் வகையிலான மிகக் குரூரமான தண்டனை என்பதே. இது ஒட்டுமொத்த மானுட குலத்திற்கும் பொதுவானது. இதிலிருந்து எவருக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது. அது ”பயங்கரமான பயங்கரவாதிகளாக” இருந்தாலும் சரி.

மரணதண்டனை போன்றதொரு குரூரமான தண்டனையை வழங்குவது ஒருவரை சட்ட வழிப்படிக் குரூரமாகச் சித்திரவதைக்கு ஆட்படுத்தி, கொன்று, அம்மனிதரின் மானுடத் தன்மதிப்பைச் சிதைக்கும் செயலாகும். அதுமட்டுமன்று. அத்தண்டனையை வழங்குவது, மானுட குலத்தவராகிய நமது தன்மதிப்பில் இருந்து கீழிறங்கி, நம்மை நாமே சிதைத்துக் கொண்டு, நமது மானுடத் தன்மையை இழக்கும் செயலாகும்.

நன்றி: தமிழ் ஆழி

%d bloggers like this: