மதச்சார்பின்மை: தோற்றமும் மாற்றமும்

அரசியல், காணொலி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மோசடி வழக்கில் சிறை சென்றவருக்கு கலைமாமணி விருது

எட்டு ஆண்டுகள் கழித்து கலைமாமணி விருதுகளை அறிவித்திருக்கிறது  அதிமுக அரசு. திரைப்படக் கலைஞர்கள், கர்னாடக இசைக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆகியோர் அடங்கிய 201 கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முன் எப்போதும் இல்லாத வகையில் பத்திரிகையாளர்கள் எனக் குறிப்பிட்டு சிலருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கலைமாமணி விருது ஒருவருக்கு வழங்கப்படுவதற்கு என்ன அளவுகோல் என்பது எவருக்கும் தெரியாத ‘அரசாங்க இரகசியமாக‘ இருந்து வருகிறது. என்றாலும், பொது வாழ்வில் அடிப்படை நேர்மை நியதிகளை மீறாதவர்களுக்கே விருதுகள் வழங்கப்படுகின்றன என்ற நம்பிக்கை ஒன்று இருக்கிறது. அந்த நம்பிக்கையையும் நியதியையும் தகர்த்து, நிதி மோசடி வழக்கொன்றில் உச்சநீதிமன்றத்தால் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தில்லி திகார் சிறையில் அத்தண்டனையை அனுபவித்த நபர் ஒருவருக்கு கலைமாமணி விருதை அறிவித்திருக்கிறது அதிமுக அரசு.

அப்படிப்பட்ட நபருக்கு விருதை வழங்குவதற்காகவே, முன் எப்போதும் இல்லாத வகையில் கலைமாமணி விருதை, கலைத்துறை சாராத பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் புதுமையைப் புகுத்தியிருக்கிறதோ என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது.

2017 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியலில், “மூத்த பத்திரிகையாளர்” என்று குறிப்பிடப்பட்டு 28 ஆம் நபராக இடம் பெற்றிருக்கும் முனைவர் பிரகாஷ் எம். ஸ்வாமி என்பவருக்கு விருது வழங்கப்பட்டிருப்பதே இந்த சந்தேகத்திற்கு காரணம். அதே 2017 ஆம் ஆண்டுதான் பிரகாஷ் ஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனையை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. திடுக்கிடும் திருப்புமுனைகளைச் சந்தித்த சகாரா குழும நிதி மோசடி வழக்கிலேயே அவருக்கு அத்தண்டனை வழங்கப்பட்டது.

40,000 கோடி ரூபாய் நிதி மோசடி என்று மதிப்பிடப்பட்டு, 2010 ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவ்வழக்கில், 2014 மார்ச்சில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, மே 2016 இல் நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, நவம்பர் 2016 இல் 600 கோடி ரூபாய் செலுத்தினால்தான் சுப்ரதா ராய்க்குப் பிணையை நீட்டிக்கமுடியும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அதன்படி முதல் தவணையாக ரூபாய் 280 கோடிக்கான காசோலைகளை பிப்ரவரி 2017 இல் சுப்ரதா ராய் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பிப்ரவரி 6, 2017 இல் விசாரணைக்கு வந்த அவ்வமர்வில், சகாரா குழுமத்தின் சொத்துக்களை ஏலத்தில் விற்று, மோசடி செய்யப்பட்ட நிதியை மீட்க முடிவு செய்த உச்சநீதிமன்றம், ஏலம் விடத் தகுதியான சொத்துக்களின் பட்டியலை பிப்ரவரி 27, 2017 -ற்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

பிப்ரவரி 28, 2017 இல் ஏலம் விடத் தகுதியான சொத்துக்களின் பட்டியல் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்பட்டியலில் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற ப்ளாசா ஹோட்டலின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 1907 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹோட்டல், நியூயார்க் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக 1969 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஹாலிவுட் நட்சத்திரங்களும் உலகின் பெரும் பணக்காரர்களும் இந்த ஹோட்டலில் தங்குவதைத் தமது அந்தஸ்தின் அடையாளமாக்க கருதும் அளவிற்குப் புகழ் பெற்றது பிளாசா ஹோட்டல்.

உலகின் பெரும் பணக்காரர்கள் பலரது கைகளுக்கு உரிமை மாறிய இந்த ஹோட்டல், 1988 ஆம் ஆண்டு, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வசமானது என்பது குறிப்பிடத்தக்கது. “நான் வாங்கியிருப்பது ஒரு கட்டிடத்தை அல்ல, ஒரு மாபெரும் கலைப்படைப்பை வாங்கியிருக்கிறேன் – மோனோ லிசாவை,” என்று அப்போது ட்ரம்ப் பெருமை பொங்க அறிவித்துக்கொண்டார். ஆனால், 1995 ஆம் ஆண்டில் ஹோட்டல் சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவரின் கைகளுக்கு மாறியது. ஹோட்டல் லாபகரமாக நடைபெற்று வந்தபோதிலும், அதன் மீதிருந்த கடன் சுமை காரணமாக, இவ்வாறு உரிமை கைமாறுவது வாடிக்கையாக இருந்தது. இறுதியாக, 2012 ஆம் ஆண்டு ஹோட்டலின் 75% பங்குகளை வாங்கிய சுப்ரதா ராயின் வசம் வந்தது.

அந்த 75% பங்குகள் பிப்ரவரி 28, 2017 இல் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஏலத்திற்கு விடத் தகுதியான சொத்துக்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.  இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இவ்வழக்கிற்குச் சம்பந்தமே இல்லாத பிரகாஷ் ஸ்வாமி தானாக வந்து தலையைக் கொடுத்தார். பிரகாஷ் ஸ்வாமியின் சார்பாக ஆஜரான பி. ஸ்ரீராம் என்ற வழக்குரைஞர், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த MG Capital Holdings LLC என்ற சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனம், ப்ளாசா ஹோட்டலில் சகாரா நிறுவனத்திற்கு சொந்தமான 75% பங்குகளை, 550 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து (ஏறத்தாழ ரூபாய் 3500 கோடி) வாங்க விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரத்தைச் (affidavit) சமர்ப்பித்தார். இது தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பிரகாஷ் ஸ்வாமிக்கு MG Capital Holdings LLC நிறுவனம் முழு உரிமையும் அங்கீகாரமும் (power of attorney) வழங்கியிருப்பதையும் தெரிவித்தார்.

இதுபோன்ற பெரும் நிதிமோசடி வழக்குகளில் இத்தகைய திருப்பங்கள் ஆச்சரியத்திற்கு உரியவை அல்ல என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏப்ரல் 17, 2017 -க்குள் 750 கோடி ரூபாயை வைப்புத்தொகையாக (deposit) செலுத்தினால், ஏலத்தில் பங்கெடுக்க அனுமதியளிக்கப்படும் என்று தெரிவித்து, வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனம் சம்பந்தமான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டனர்.

ஏப்ரல் 17, 2017 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரகாஷ் ஸ்வாமியின் வழக்குரைஞர், MG Capital Holdings LLC நிறுவனம், பிளாசா ஹோட்டலை ஏலத்தில் எடுக்கும் முயற்சியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார். நிறுவனம் குறித்த தகவல்களையும் சமர்ப்பிக்கவில்லை.

பெரும் நிதிமோசடி வழக்கில் அவசியமின்றித் தலையிட்டு பின்வாங்கிய இந்த நடவடிக்கையால் கடும் கோபமுற்ற நீதிபதிகள், பிரகாஷ் ஸ்வாமி அபராதத் தொகையாக 10 கோடி ரூபாயை 10 நாட்களுக்குள் செபி – சகாரா மீட்பு நிதிக் கணக்கில் செலுத்தவேண்டும் என்றும், கட்டத் தவறினால் அவர் மீது பிணையில் வர இயலாத கைது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும், பிரகாஷ் ஸ்வாமி தனது கடவுச் சீட்டை மறுநாளே சென்னை சாஸ்திரி பவனில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், வழக்கு மறுவிசாரணைக்கு வரும் ஏப்ரல் 27 அன்று பிரகாஷ் ஸ்வாமி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இவற்றுக்கும் மேலாக, பிரகாஷ் ஸ்வாமி குறித்து அவசர சிகப்பு எச்சரிக்கை (Red alert) அறிவித்து, அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு வெளியுறவுத் துறைக்கு அரசு வழக்குரைஞர் அறிவுறுத்தவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

ஏப்ரல் 27 அன்று வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜரான பிரகாஷ் ஸ்வாமி, கைகளைக் கட்டி, தேம்பி அழுது தன்னை மன்னித்துவிடுமாறு நீதிபதிகளிடம் கெஞ்சினார். தன்னால் 10 கோடி ரூபாய் அபராதத் தொகை கட்டமுடியாதென்றும், வேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாயை அபராதமாக கட்டுவதாகவும் மன்றாடினார். இன்னொரு பெரிய நிதிப் பரிவர்த்தனையில் தனக்கு பங்கு கிடைக்கும் என்று MG Capital Holdings LLC நிறுவனம் சொன்னதை நம்பி, இவ்வழக்கில் தலையிட்டுவிட்டதாகவும் கூறினார். பிரகாஷ் ஸ்வாமியின் கெஞ்சல்களை நீதிபதிகள் நிராகரித்தனர். “அப்படியென்றால் அது பேராசை. பேராசை பெருநஷ்டம்,” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பிற்காக அவரை 6 மாதங்கள் சிறைக்கு அனுப்பமுடியும் என்றும் தெரிவித்தனர்.

வழக்கில் வாதாடிக் கொண்டிருந்த வழக்குரைஞர்கள் சிலர் பிரகாஷ் ஸ்வாமியை பெரிதாக பொருட்படுத்தாமல் மன்னித்துவிடுமாறு கோரினர். அவ்வாறு செய்வது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இறுதியாக, நீதிமன்ற அவமதிப்பிற்காக, ஒருமாத கால சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். அந்த ஒரு மாத கால சிறைத்தண்டனையை பிரகாஷ் ஸ்வாமி தில்லி திகார் சிறையில் அனுபவித்தார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சமன்ற நீதிபதிகள் எவர் என்பது இங்கு மிகுந்த கவனத்திற்குரியது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா, இன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகாய், மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான திரு. சிக்ரி ஆகியோர் அடங்கிய குழுவே இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆவர்.

தில்லி திகார் சிறையில் ஒரு மாத காலம் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு வந்த பின்பாவது பிரகாஷ் ஸ்வாமி அடங்கி இருந்தாரா என்றால் அதுவும் இல்லை. மணிரத்தினத்தின் “அஞ்சலி” திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காயத்ரி சாய் என்பவரை பாலியல் தொந்தரவு செய்தார் என்ற சர்ச்சையிலும் அண்மையில் சிக்கினார்.

உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி, ஒரு மாதம் சிறைத்தண்டனையை அனுபவித்து, அதன் பிறகும் பாலியல் தொந்தரவு சர்ச்சையில் சிக்கிய ஒருவருக்கு சந்தடியில்லாமல் கலைமாமணி விருது வழங்கப்பட்டிருக்கிறதென்றால், அவருடைய செல்வாக்கு எப்படிப்பட்டது என்ற கேள்வி தவிர்க்க இயலாமல் எழுகிறது. இதற்கு பிரகாஷ் ஸ்வாமியின் பின்னணியை பார்க்கவேண்டும்.

பிரகாஷ் ஸ்வாமி ராஜீவ் காந்தி படுகொலை மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒரு நபரால் நிகழ்ந்தது என்பதை “தி ஹிந்து” ஆங்கில நாளிதழில் வெளியிட்டதன் மூலம் பரவலான கவனத்திற்கு வந்த பத்திரிகையாளர். அதன் பிறகு அவர், “இந்தியா டுடே”, “ஆனந்த விகடன்” ஆகிய பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 1997 இல் அமெரிக்காவிற்கு சென்று, அங்கு  பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவின் ஐநா பிரதிநிதியாக பணியாற்றினார். நியூயார்க் நகரில் “அமெரிக்க தமிழ் சங்கம்” என்ற தன்னார்வ நிறுவனம் ஒன்றைப் பதிவு செய்துகொண்டார். இந்நிறுவனம் சார்பாக, 2016 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமிக்கு “தமிழ் ரத்னா” என்ற விருதை வழங்கி கௌரவித்தார். 2017 இல் ஐநாவிற்கான இந்திய நிரந்தர தூதரின் அலுவலகத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு “அமெரிக்க தமிழ் சங்கம்” சார்பாக அழைப்பு விடுத்தவரும் இவரே.

மேலும், பிரகாஷ் ஸ்வாமி தீவிரமான பாஜக ஆதரவாளர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியை பாராட்டி கௌரவிக்க நியூயார்க் நகரின் மேடிசன் சதுக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் அமைப்புக் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக பிரகாஷ் ஸ்வாமியும் செயல்பட்டார். 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில், பாஜக விற்கு ஆதரவாக, சென்னையில் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டதற்காக “மைலாப்பூர் டைம்ஸ்” பிரகாஷ் ஸ்வாமியை பாராட்டி செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. இவ்விஷயங்களுக்காக, சென்னை ரோட்டரி சங்கம் பிரகாஷ் ஸ்வாமிக்கு 2016 ஆம் ஆண்டுக்கான “வாழ்நாள் சாதனையாளர்” விருதை வழங்கியிருக்கிறது.

இவை அனைத்தும், 2107 இல் பிரகாஷ் ஸ்வாமி உச்சநீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு முன்பு நடந்தவை. சில மாதங்களுக்கு முன்பாக பாலியல் தொந்தரவு சர்ச்சையில் சிக்குவதற்கு முன்பாக நிகழ்ந்தவை.

ஆனால், இவற்றுக்குப் பிறகும், தீவிரமான பாஜக ஆதரவாளர் என்ற ஒரு காரணத்திற்காகத்தான் அதிமுக அரசு பிரகாஷ் ஸ்வாமிக்கு கலைமாமணி விருதை வழங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.

அதிமுக-வின் கொள்கை வேறு, பாஜக-வின் கொள்கை வேறு என்று அதிமுக அமைச்சர்கள் பலரும் பலவிதமான விளக்கங்களை அவ்வப்போது அளித்துவந்தபோதிலும், அதிமுக-விற்கும் பாஜக-விற்கும் இடையிலான பிணைப்புகள் ஆழத்தில் பாயும் நீரோட்டத்தில் கலந்தவை என்பதை இத்தகைய செயல்பாடுகள் அவ்வப்போது வெளிப்படுத்திவிடுகின்றன.   

தொடர்புடைய கட்டுரை: சொப்பன சுந்தரியும் நியூயார்க் ப்ளாசா ஹோட்டலும் பவர் ஆஃப் அட்டர்னியும்

——–

பின் குறிப்பு: இக்கட்டுரையை எழுதி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அனுப்பி வைத்த இதழ்கள் எவையும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன் எழுதி அனுப்பிய சினிமா குறித்த மூன்று கட்டுரைகளுக்கும் இதே கதிதான். ஒரு கட்டுரைத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் இரண்டு வருடங்களாக கோப்புகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. தமிழில் எழுதி பிழைப்பை ஓட்டுவதெல்லாம் எதற்கும் துணியும் பிழைப்புவாதிகளுக்கு மட்டுமே சாத்தியம். சலித்து, சோர்ந்து கட்டுரைகளை பதிவேற்றுகிறேன்.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 6

புதிய குடவோலை முறையின் மீட்சி – 6

 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் “ஜனநாயகம்” என்று அழைக்கப்படும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் கட்சிகளும் தாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் அனுபவித்து சலிப்படைந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நெருக்கமான உறவு இருப்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பெரும் தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபர்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள் என்பதையும் கண்ணாறக் கண்டுகொண்டே இருக்கிறார்கள்.

 

தேர்தல் என்பதே ஐந்தாண்டுகள் தம்மை யார் கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்பதற்கு எழுதிக்கொடுக்கும் பிரமாணப் பத்திரம் என்று உணர்ந்திருக்கிறார்கள். நிர்வாகச் சீர்கேடுகளும், லஞ்சமும், ஊழலும், கொலையும் கொள்ளையும் நிறைந்ததுதான் அரசியல் என்ற முடிவிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். புதிய நேர்மையான தலைவர்கள், அதிகாரிகள், படித்தவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் எவராவது இந்த சீரழிவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முன்வரமாட்டார்களா என்று ஏங்கித் தவித்துக்கிடக்கிறார்கள். ஆனால், தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையைத் தவிர வேறு மாற்றுகள் எதுவும் இருக்கிறதா என்பது தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.

 

தேர்தல் முறையால் உருவாகும் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை ஜனநாயகமும் அல்ல, மக்களாட்சியும் அல்ல, புதிய மேட்டுக்குடியினரின் ஆட்சிமுறைதான் என்பதை வரலாற்றிலிருந்து சுருக்கமான எடுத்துக்காட்டுகளோடு இக்குறுந்தொடர் விளக்க முயற்சி செய்திருக்கிறது. தமிழக வரலாற்றில் சோழர் காலத்தில், குலுக்கல் முறையும் சுழற்சி முறையும் இணைந்த குடவோலை முறை என்று அழைக்கப்பட்ட ஆட்சிமுறையே உண்மையான ஜனநாயகம் – மக்களாட்சி என்பதையும் இத்தொடரில் விளக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆட்சிமுறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏதென்ஸ் நகரத்தில் எவ்வாறு சிறப்புடன் செறிவாக செயல்பட்டது என்பதும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

 

அத்தகைய ஆட்சிமுறையை தற்காலத்தைய நிலைமைகளுக்கு ஏற்ப மீண்டும் உருவாக்க முடியுமா? நிலவும் ஆட்சிமுறையை அகற்றுவதற்கு பெரும் பிரயத்தனங்கள் எதையும் செய்யாமல், அவற்றுக்கு அருகிலேயே – அக்கம்பக்கமாக மக்களே நேரடியாக ஆட்சியில் பங்கேற்க வழிவகை செய்யும் புதிய நிறுவனங்களை உருவாக்க முடியுமா? அத்தகைய நிறுவனங்கள் எவ்வகையில் இருக்கும்? அவற்றில் மக்களை பங்குபெற செய்வது எப்படி? அவற்றின் பணிகள் எவ்வாறு இருக்கும்? இவ்வாறான கேள்விகள் பலவும் எழுவது இயல்பே.

 

இக்கேள்விகளுக்கு தீர்மானகரமான விடைகள் இன்னும் உருவாகவில்லை. என்றாலும் பல நாடுகளில் பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் அனுபவங்களை தொகுத்துக்கொண்டு, மேலும் செறிவான பல புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், மிகச் சிறந்ததும், நடைமுறையில் செயல்படுத்த சற்று எளிமையானதுமான ஒரு மாதிரியை அறிமுகம் செய்வதோடு இக்குறுந்தொடர் நிறைவுபெறுகிறது. இந்த மாதிரியை, சிறிய அளவுகளில் – கல்லூரி மாணவர் மன்றங்கள், தொழிற்சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், கிராம நிர்வாக சபைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், குடியிருப்புப் பகுதிகள் – போன்றவற்றில் முதற்கட்டமாக பரிசோதனை செய்து பார்க்கலாம். அனுபவங்களை சேகரித்துக்கொண்டு, படிப்படியாக பரந்த அளவுகளில் முன்னெடுக்க முயற்சிக்கலாம்.

 

பல் அடுக்கு குடவோலை முறை என்று இதை அழைக்கலாம்.

 

முதலாவதாக, இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்புகளின் அடிப்படைப் பண்புகள், நிபந்தனைகள், தேர்ந்தெடுக்கும் முறைகள் ஆகியவற்றை பார்த்துவிடுவது நலம்.

 

இந்த அமைப்புகள் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கானவை அல்ல. சாதனை புரியவேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ள துடிப்பானவர்களுக்கானதும் அல்ல. பல்துறை சார்ந்த வல்லுனர்களுக்கானதோ அறிவுத்துறையினருக்கானதோ தீவிர அரசியல் களப்பணியாளர்களுக்கானதோ அல்ல.

 

சாதாரண மக்களுக்கானது. எளிய மக்கள் தமது பிரச்சினைகளை தாமே முன்வந்து தீர்த்துக்கொள்வதற்கான அரசியல் – பொது நிர்வாகக் கட்டுமானங்களை உருவாக்குவதே இவற்றின் நோக்கம். அந்நோக்கில் முடிவுகளை எடுக்கவும் அவற்றை செயல்படுத்துவதற்குமான வழிமுறைகளை உருவாக்குவது. இவற்றில் வல்லுனர்கள், அறிவுத்துறையினர், தீவிர அரசியல் களப்பணியாளர்களின் பாத்திரம் தமது துறை சார்ந்த நுட்பமான அறிவு, அனுபவம், திறன்கள் ஆகியவற்றை சாதாரண மக்களுடன் பலா பலன்களை எதிர்பாராமல் பகிர்ந்துகொள்வது மட்டுமே. இறுதி முடிவுகள் எதுவானாலும் அவற்றை எடுக்கும் அதிகாரம் சாதாரணர்களுக்கு மட்டுமே உரியது.

 

இந்த அமைப்புகள் ஏற்கனவே இருக்கும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புகளுக்கு உடனடியான மாற்றுகள் அல்ல. நிலவும் அமைப்புகளால் பலன் பெறும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இவற்றை உடனே அங்கீகரித்துவிடப் போவதில்லை. ஒருவேளை அங்கீகரிக்க முன்வந்தால், அவற்றை தம் செல்வாக்குக்கு உட்பட்ட அமைப்புகளாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டுவார்கள். ஆகையால், இவ்வமைப்புகளை நிலவும் அமைப்புகளுக்கு எதிரானவையாக நிறுத்திக்காட்டுவதையும் தவிர்க்கவேண்டும். அவற்றுக்கு கீழ்ப்பட்டவையாக மாறிவிடாமலும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். நிலவும் அதிகார அமைப்புகளுக்கு இணையாக – அக்கம்பக்கமாக (parallel) இயங்கும் அமைப்புகளாகவே இவை துவக்கத்தில் செயல்படமுடியும்.

இவ்வமைப்புகள் அனைத்தும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையிலேயே தேர்ந்தெடுக்கப்படவேண்டும். கருத்தொருமிப்பை எட்டுவதற்காகவும், முடிவுகளை எடுப்பதற்காகவும் தேவைகளுக்கேற்ப இரகசிய வாக்கெடுப்பு, வெளிப்படையான வாக்கெடுப்பு ஆகிய இரண்டு முறைகளையும் கையாளலாம். குலுக்கல் முறையோடு சுழற்சி முறையும் இணைந்திருப்பது கட்டாயம்.

 

பாகுபாடுகள் நிறைந்துள்ள நமது சமூகத்தில், ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், இன்ன பிறருக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவது கட்டாயமாக இருக்கவேண்டும். மொத்த உறுப்பினர்களில் 50 விழுக்காடு பெண்களாக இருப்பதையும் கட்டாயம் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

 

பொது நிர்வாகத்திற்கு வாக்காளர் பட்டியல், தொழிற்சங்கம் போன்ற குறிப்பான நிறுவனங்களுக்கு உறுப்பினர்/பதிவுப் பெயர் பட்டியல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சீர்வாய்ப்பு தேர்வு முறையில் (random selection process) நபர்களை தேர்வு செய்வதிலிருந்து துவங்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளின் பணிச்சுமைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படும் எளியோர்க்கு ஊதியம் வழங்குவது சாலச் சிறந்தது. அவர்களது தனிப்பட்ட வாழ்விற்கான வருமானத்தை ஈடுசெய்யும் வகையில் அத்தகைய ஊதியங்கள் இருப்பது நல்லது.

 

இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனி விரித்துச் சொல்லப்படும் ”பல் அடுக்கு குடவோலை முறை” தமிழகம் என்ற பரந்த அளவில் செயல்பட தேவையான உறுப்பினர் எண்ணிக்கையை மனதில் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது. கிராம அளவிலான, குடியிருப்புகள் அளவிலான, பிற சிறிய அளவிலான அமைப்புகளுக்கு அவற்றுக்கே உரிய வகையில் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம். சூழல்கள், நிறுவனங்களின் செயல்பாட்டு எல்லைகளுக்கு ஏற்ப ஒரு சில அமைப்புகள் அவசியமில்லாமலும் போகலாம்.

 

நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு மன்றம்

தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள், தேவைகளின் பொருட்டு உருவாக்கப்படவேண்டிய திட்டங்கள், அவை குறித்து இயற்றப்படவேண்டிய சட்டங்கள் அல்லது தீர்மானங்கள் குறித்த பட்டியலை நிகழ்ச்சி நிரலாகத் தயாரிக்கும் மன்றம். 150 – 400 உறுப்பினர்களைக் கொண்டிருக்கவேண்டும். தேவைக்கேற்ப உபகுழுக்கள் அமைத்து செயல்படலாம். செயல்படுவதற்கு தாமாக முன்வரும் குடிமக்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

இம்மன்றம் தயாரிக்கும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட அம்சம் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புவோர், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கையெழுத்துகள் சேகரித்து மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான சாத்தியத்தையும் அனுமதிக்கலாம்.

 

நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது மட்டுமே இம்மன்றத்தின் பணி. அவற்றை நிறைவேற்றவோ நிறைவேற்றும்படி கட்டாயப்படுத்தவோ இம்மன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

 

துறைசார் குழுக்கள்

நிகழ்ச்சி நிரல் மன்றம் தயாரித்து அனுப்பும் பிரச்சினைகளைப் பரிசீலித்து அவற்றுக்கு சட்ட முன்வரைவு வடிவம் கொடுக்கும் குழுக்கள். ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்சினைக்கும் தனிக் குழுக்கள் அமைக்கப்படவேண்டும். தேவைக்கேற்ப குழுக்களை அமைத்துக்கொள்ளலாம். தமது துறை சார்ந்த குழுக்களில் செயல்பட விரும்புவோர் முன்வரலாம். ஒவ்வொரு குழுவிலும் 12 உறுப்பினர்கள் அவசியம். தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். தேவைக்கேற்ப இக்குழுக்கள் அடிக்கடி கூடி விவாதித்துக் கொள்ளலாம். கால வரம்பை நிர்ணயித்து குறித்த காலத்திற்குள் தமது பணியை முடிக்கவேண்டும். துறை வல்லுனர்கள், குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்து செயல்படும் களப்பணியாளர்களைக் கொண்டதாக இருக்கலாம். சட்ட முன்வரைவைச் சமர்ப்பிப்பதோடு இக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவுபெற்றுவிடும். ஊதியம் வழங்கவேண்டிய அவசியம் இல்லை. இம்மன்றத்திற்கு அதிகாரம் ஏதும் இல்லை.

 

பரிசீலனைக் குழுக்கள்

துறைசார் குழுக்கள் சமர்ப்பிக்கும் சட்ட முன்வரைவுகளைப் பரிசீலித்து அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் குழுக்கள். ஒவ்வொரு துறைசார்ந்த பிரச்சினைக்கும் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்படவேண்டும். மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 150. தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். துறைசார் குழுக்களைப் போன்று, இவர்கள் தமது விருப்பம் சார்ந்து குழுக்களை தேர்வு செய்ய அனுமதி இல்லை. செயல்படும் காலம் 3 ஆண்டுகள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

குறித்த சட்ட முன்வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை கூட்டி கருத்துக்களைக் கேட்டறிதல், துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டறிதல், பிரச்சினை குறித்து கள ஆய்வுகளும், கல்விசார் ஆய்வுகளும் மேற்கொள்ளல், தேவையெனில் அவற்றுக்குப் உதவியாளர்கள், பணியாளர்களை நியமித்துக்கொள்ளல், சேகரிக்கப்பட்ட கருத்துக்கள், கள ஆய்வுகள், கல்வி ஆய்வுகளைக் கொண்டு சட்டமுன்வரைவில் திருத்தங்களோ புதிய அம்சங்களோ சேர்த்தல், உறுப்பினர்களோடு கலந்து விவாதித்தல் ஆகியவற்றின் இறுதியில் சட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுத்தல் ஆகியவையே இக்குழுக்களின் பணிகள்.

 

சட்ட முன்வரைவுகளுக்கு இறுதி வடிவம் மட்டுமே தர இயலும். சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை.

 

கொள்கை முடிவெடுக்கும் சான்றாளர் (Jury) குழு

பரிசீலனைக் குழுக்கள் சமர்ப்பிக்கும் சட்டத்தின் இறுதி வடிவின் மீது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கும் குழு. ஒவ்வொரு சட்டத்தை இறுதி செய்வதற்கும் ஒரு தனிக் குழு கூட்டப்படவேண்டும். அனைத்து குடிமக்களில் இருந்தும் 400 உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். முன்மொழியப்பட்டுள்ள சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களை கூட்டப்படும் பொது சபை அமர்வில் கேட்டு, இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தீர்ப்பளிப்பதே இக்குழுவின் பணி. விவாதங்களில் ஈடுபடுவதோ, தமக்குள் கலந்தாலோசிப்பதோ கூடாது. பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் சட்டம் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். சட்டத்தின் தன்மையைப் பொறுத்து இக்குழுவின் பணிக்காலம், ஒரு நாளாகவோ சில நாட்களாகவோ இருக்கலாம். பயணப் படி, பிற படிகள் உட்பட குறித்த நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

விதிகள் உருவாக்கும் மன்றம்

அனைத்து மன்றங்கள், குழுக்களுக்குமான விதிமுறைகள், குலுக்கல் முறை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகள், துறை வல்லுனர்களின் கருத்துக்களை அறிவதற்கான வழிமுறைகள், விவாத நெறிமுறைகள், குறைந்தபட்ச உறுப்பினர்/வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை வடிவமைப்பதற்கான மன்றம். பிற மன்றங்கள், குழுக்களில் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்களில் இருந்து குலுக்கல் முறையில் இதற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது நலம். உறுப்பினர் எண்ணிக்கை 50. செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

மேற்பார்வை மன்றம்

அனைத்து மன்றங்கள், குழுக்களின் உறுப்பினர்கள், பரிந்துரை வழங்கிய துறை வல்லுனர்கள், பிற உதவியாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் அனைத்தும் நியாயமாகவும் நேர்மையாகவும் செய்யப்பட்டனவா என்பதையும், அவர்கள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுமானால் அவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கும் குழு. உறுப்பினர் எண்ணிக்கை 20. தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

இவ்வாறான பல் அடுக்கு குடவோலை முறையிலான அமைப்பு முறை, அதிகாரம் ஏதாவதொரு படிநிலையில் குவிந்துவிடாமல், ஒன்றை ஒன்று சரிபார்த்து சீர் செய்யும் (checks and balances) தன்மை கொண்டிருப்பதை மேலே விவரித்திருப்பதிலிருந்து உணரலாம். வெளிப்படைத் தன்மையும், பல தரப்பினரின் பங்களிப்பும், சாதாரண மக்கள் அனைவரது பங்கேற்ப்பையும் படிப்படியாக உறுதி செய்வதாக இருப்பதையும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மக்களுடையதாகவே இருப்பதையும் உணரலாம். பரந்த அளவில் செயல்படுவதற்கு ஏற்றதாகவும், உள்ளூர் அளவிலும் குறிப்பான அமைப்புகளுக்கு ஏற்பவும் இவற்றை வடிவமைத்துக்கொள்வதும் எளிதானது.

 

இவ்வமைப்பு முறையின் செயல்பாடுகள் அதிகரிப்பதைப் பொறுத்தும், மக்கள் இவற்றின் பால் ஆர்வம் செலுத்தி, பங்கேற்க முன்வருவதைப் பொறுத்தும், இவற்றின் செயல்பாடுகள் நிலவும் அதிகார அமைப்பின் மீது அழுத்தங்கள் செலுத்தலாம். படிப்படியாக இவற்றின் செல்வாக்கு கூடுவதும், இவற்றின் குரல்களுக்கு நிலவும் ஆட்சியமைப்பும் அதிகார வர்க்கமும் செவிமடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு.

 

பொது வாழ்வில் நேர்மை, அரசியலில் தூய்மை, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் கனவு கொண்ட இளம் தலைமுறையினர் இப்பரிசோதனையை சிறிய அளவில் மேற்கொண்டு, தாம் பெறும் அனுபவங்களில் இருந்து மேலும் மெருகேற்றலாம்.

(முற்றும்.)

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 5

பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் அடிப்படைகளும் பரிணாம வளர்ச்சியும் – 5

 

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் கொண்ட பிரதிநிதித்துவ அரசாங்கங்கள், தம்மை குடியரசுகள் என்றே கருதின என்பதையும், ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்தே ஜனநாயக அரசுகள் என்று அழைக்கப்படலாயின என்பதையும் கண்டோம். அதே போன்று, நாம் இன்று அடிப்படை ஜனநாயக உரிமை என்று கருதும் வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும்கூட ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகாலம் சொத்துடையோருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவ்வுரிமை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது.

 

ஜனநாயக அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கமாக நாம் கருதும் கட்சி அரசியலும்கூட இவ்வரசுகளின் ஆரம்பகாலங்களில் இருக்கவில்லை. பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவிய புரட்சியாளர்கள் கட்சிகளை நாட்டின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் “குழுக்களின் பிளவுபடுத்தும் அரசியல்” என்றே கருதினர். “ஒரு கட்சி இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்லமுடியாதென்றால், அப்படிப்பட்ட சொர்க்கம் எனக்கு தேவையே இல்லை,” என்ற அமெரிக்கப் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான  தாமஸ் ஜெஃபர்ஸனின் வாசகம் புகழ் பெற்றது. வெகுமக்கள் கட்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளில்தான் தோன்ற ஆரம்பித்தன.

 

அண்மைக்காலங்களிலோ, உலகம் முழுக்கவே தேர்தல் அரசியலின்பால் வாக்காளர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. வாக்களிப்போரின் சதவீதமும் சரிந்துகொண்டே வருகிறது. கட்சிகளின் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்து வருகிறார்கள். கட்சிகளின் கொள்கைகளை முன்வைத்து வாக்குகள் சேகரிப்பதற்கு மாறாக, வலுவான தலைவர்களை முன்நிறுத்தி வாக்கு சேகரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும், தேர்தல் அரசியலின் – பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் அடிப்படைகளாக இருப்பவை வாக்குரிமையும் கட்சி அரசியலும்தான் என்ற கருதுகோள் தவறானது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வாக்குரிமையை சமூகத்தின் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வரையறுத்து வைத்தும் தேர்தல் அரசியல் செயல்படமுடியும். கட்சிகளே இல்லாமலும் தேர்தல் அரசியல் செயல்படமுடியும் என்பதை உணர்த்துகின்றன.

 

அவ்வாறெனில், தேர்தல் அரசியலின் – பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் அடிப்படைகள் எவை என்ற கேள்வி எழுகிறது.

 

பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் எங்கெல்லாம் அமைக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் பின்வரும் நான்கு முக்கிய அம்சங்கள் அவற்றின் அடிப்படையான அம்சங்களாகத் திகழ்கின்றன.

 

முதலாவதாக, குடிமக்களின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெற்றவர்களுக்கே ஆட்சி புரியும் உரிமை இருக்கிறது என்ற கருதுகோளில் இருந்தே பிரதிநிதித்துவ அரசாங்கம் பிறந்தது என்பதை முந்தைய பகுதியில் கண்டோம். அவ்வாறு வழங்கப்பட்ட ஒப்புதலும் அங்கீகாரமும் வாழ்நாள் முழுமைக்குமான அங்கீகாரம் அன்று. தமது விருப்பத்திற்குரிய ஒரு பிரதிநிதியையோ, கட்சியையோ, அதன் தலைவரையோ வாழ்நாள் முழுக்க ஆள்வதற்கு அனுமதிக்கும் வகையில், ஒரேயொருமுறை மட்டுமே நடத்தப்படுவதல்ல தேர்தல். வழங்கப்பட்ட ஒப்புதலும் அங்கீகாரமும் மீண்டும் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவும் புதுப்பிக்கப்படவும் வேண்டும். எனவேதான், குறிப்பட்ட வருடங்களுக்கு ஒருமுறை, சீரான இடைவெளியில் மீண்டும் மீண்டும் தேர்தல்களை நடத்துவது பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் அடிப்படையான அம்சமாக அமைகிறது.

 

இரண்டாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், வாக்காளர்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்படாமல், கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், தம் விருப்பத்தின் பேரில் செயல்படுவதற்கான சுதந்திரம். இதன் காரணமாகவே, வேட்பாளர்களைத் திருப்பி அழைப்பதற்கான உரிமையையும், வேட்பாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட உரிமையையும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் தம் ஆரம்ப காலங்களிலேயே நிராகரித்தன. தமது விருப்பங்களை நிறைவேற்றாத, தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வேட்பாளர்களை அடுத்த தேர்தலில் நிராகரிக்கும் உரிமையை மட்டுமே வழங்கின.

 

மூன்றாவதாக, கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம். வேட்பாளர்களைத் திருப்பி அழைக்கும் சுதந்திரம், சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பதிலீடாகவே கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் வழங்கின. தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் – அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை குடிமக்கள் எப்போதும் எங்கும் முன்வைக்கவும் வெளிப்படுத்தவும் செய்யலாம். அவற்றை ஆட்சியிலிருப்போர் கவனத்தில் கொள்வார்கள் என்ற அளவிற்கே இவ்வுரிமை வரையறுக்கப்பட்டது. இவ்வுரிமை வேட்பாளர்களும் வாக்காளர்களும் சந்திக்கும் புள்ளியாகவும், ஒருவகையில், வாக்காளர்களின் இணக்கத்தை உருவாக்குவதாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

 

இறுதியாக, விவாதங்களின் மூலம் முடிவெடுத்தல் என்ற அம்சம். பிரதிநிதித்துவ அரசாங்கங்களை தோற்றுவித்தவர்கள், தமது அரசமைப்பை பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை உடையவர்களும் ஒரு சபையில் ஒன்றாகக்கூடி, விவாதித்து, முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு முறையாகவே கருதினர். இவ்விடத்தில் முடிவின்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டே இருப்பதுதான் விவாதம் என்று பொருள் இல்லை. விவாதம் கருத்தொருமிப்பை நோக்கியது. ஒரு குறிப்பிட்ட சட்டம் அல்லது திட்டம் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக நடத்தப்படுவது. கருத்தொருமிப்பு பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவது.

 

இந்நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான பிரதிநிதித்துவ அரசமைப்பு, தனது இருநூறாண்டு கால வரலாற்றில் மூன்று பரிணாம வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. அம்மூன்று நிலைகளிலும் மேற்கண்ட நான்கு அடிப்படை அம்சங்களையும் வெவ்வேறு வடிவங்களில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

 

பிரதிநிதித்துவ அரசாங்கம் எடுத்த முதல் வடிவம் நாடாளுமன்றவாதம். இக்காலகட்டத்தில் வாக்குரிமை சொத்துரிமையால் வரையறுக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. கட்சிகளோ அவை முன்வைத்த கொள்கைத் திட்டங்களோ இருக்கவில்லை. சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் பெற்ற “பெரிய மனிதர்கள்” தமக்கிருந்த பரவலான தொடர்புகள், வரையறுக்கப்பட்டிருந்த வாக்காளிடர்களிடையே பெற்றிருந்த நன்மதிப்பு ஆகியவற்றின் காரணமாக, நம்பிக்கையின் பாற்பட்டே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமது வாக்காளர்களின் “அறங்காவலர்” என்றே தம்மைக் கருதிக்கொண்டனர். ஆக, பிரதிநித்துவ அரசாங்கம் பெயர் பெற்ற பிரமுகர்களின் – மேட்டுக்குடியினரின் ஆட்சியாகவே தொடங்கியது.

 

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள், நாடாளுமன்றங்களில் தமது தொகுதி வாக்காளர்களின் “அறங்காவலர்” என்ற வகையிலேயே செயல்பட்டனர். வாக்காளர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும் தேவையே இவர்களுக்கு இருக்கவில்லை என்பதால் வாக்காளர்களின் விருப்பங்களின்பாற்பட்டு நடந்துகொள்ளும் நிர்ப்பந்தங்களும் இவர்களுக்கு இருக்கவில்லை.  இக்காலகட்டத்தில், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் என்பது, குறிப்பிட்ட கோரிக்கைகள் சார்ந்த அமைப்புகளால் நாடாளுமன்றத்திற்கு மனுக்கள் அளிப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற வடிவங்களை எடுத்தன. விவாதங்கள் மூலம் முடிவெடுத்தல் என்பது நாடாளுமன்றங்களில் தமது சொந்த ‘மனசாட்சியின்’படியும், நம்பிக்கைகளின்படியும் வாக்களிப்பதாகவும், குறிப்பிட்ட பிரச்சினைகளில் ஒத்த கருத்துள்ள மற்ற பிரதிநிதிகளோடு குழுவாக இணைந்து செயலாற்றுவதாகவும் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் செயல்பாடுகள் இவ்வாறான நாடாளுமன்றவாதமாகவே இருந்து வந்தது.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால்நூற்றாண்டில் வாக்குரிமை படிப்படியாக விரிவாக்கப்பட்டதாலும், வெகுமக்களுக்கான கட்சிகள், சோஷலிசக் கட்சிகளின் எழுச்சியாலும் இந்நிலையில் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. பிரமுகர்களின் செல்வாக்கு முடிவுக்கு வந்து அரசியலில் கட்சிகள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின. பிரதிநிதித்துவ அரசாங்கம் நாடாளுமன்றவாதம் என்ற வடிவத்திலிருந்து கட்சி ஜனநாயகம் என்ற வடிவத்திற்கு மாறியது.

 

சமூகத்தில் நிலவும் பிளவுகளைப் பிரதிபலிப்பதாக பிரதிநிதித்துவம் வெளிப்படத் தொடங்கியது. கட்சிகள் தாம் சார்ந்திருந்த சமூகக் குழுக்களின் நலன்களை முன்வைத்து வாக்குகளை சேகரித்தனர். வாக்காளர்களும் அவ்வாறே வாக்களிக்கத் தொடங்கினர். என்றாலும் கட்சிகளின் ஆட்சியில், கட்சியின் தொண்டர்களும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். பிரமுகர்களின் இடத்தை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று பிரதிநிதித்துவ ஆட்சிமுறையை தோற்றுவித்த புரட்சியாளர்களின் பார்வை இதிலும் தொடர்ந்தது.

 

வேட்பாளர்கள் தமது சொந்த மனசாட்சிப்படியும், நம்பிக்கைகளின் அடிப்படையிலும் செயல்படுவதற்குப் பதிலாக, கட்சியின் கட்டளைப்படி நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் உள்ளேயும் செயல்பட்டனர். வாக்காளர்களின் விருப்பங்கள் கோரிக்கைகளைக் காட்டிலும் கட்சியின் செயல்திட்டங்களும் ஆணைகளுமே பிரதிநிதிகளின் செயல்பாடுகளை தீர்மானித்தன. கருத்துக்களை வெளிப்படுத்துவற்கான சுதந்திரம் நாடாளுமன்றத்திற்குள் எதிர் கட்சிகளுடனான கருத்து மோதலாக வெளிப்படத் தொடங்கியது. விவாதங்களின் மூலம் முடிவெடுத்தல் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு பெரும்பான்மை அல்லது கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாறியது.

 

கட்சி ஜனநாயகம் கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்த ஆட்சியமைப்பாகவே இருந்தது.

 

மேலை நாடுகளில் 1970-கள் தொடங்கியும், இந்திய/தமிழக சூழலில் கடந்த இருபது ஆண்டுகளிலும் பெரும்பாலான கட்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கின. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவுவது வழக்கமாகிப் போனது. “பார்வையாளர்” ஜனநாயகம் என்ற புதிய போக்கு தலைதூக்கத் தொடங்கியது. ஊடகங்களைத் திறம்படக் கையாளத் தெரிந்த புதிய மேட்டுக்குடியினரின் ஆட்சியாக இந்த “பார்வையாளர்” ஜனநாயகம் உருவாகியிருக்கிறது.

 

கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்களுக்குப் பதிலாக, ஆற்றல் மிக்க தலைவர்களை முன்நிறுத்தும் போக்கு இப்புதிய முறையில் பரவலாகியுள்ளது. கட்சி தொண்டர்களுக்கும், கட்சிப் பிரமுகர்களுக்கும் இருந்த இடத்தை ஊடகச் செல்வாக்கு மிக்க புதிய பிரமுகர்கள் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிப்பதற்கு மாறாக, குறிப்பிட்ட தேர்தலில் தலைதூக்கி நிற்கும் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது சில முக்கிய பிரச்சினைகளே தேர்தலின் முடிவுகளை தீர்மானிப்பவையாக மாறிக்கொண்டிருக்கின்றன.

 

வேட்பாளர்கள் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்துவதற்குப் பதிலாக, எந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தினால், வாக்காளர்களைப் பிளவுபடுத்தி அதிக வாக்குகளை சேகரிக்கமுடியும் என்ற நோக்கில் அணுகத் துவங்கியிருக்கிறார்கள். தம்மைப் பற்றியும் தமது கட்சியைப் பற்றியும் தமது தலைவரைப் பற்றியும் ஊடகங்கள் வாயிலாக சில குறிப்பிட்ட பிம்பங்களை முன்னிறுத்துவதையே பிரதானப்படுத்துகிறார்கள். வாக்காளர்கள் தமது விருப்பங்கள் சார்ந்து வாக்களிப்பதற்குப் பதிலாக, பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்றும் முகமாக வாக்களிக்கும் போக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் பார்வையாளர்கள் போன்று எதிர்வினையாற்றுபவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

 

கட்சிக்குள் நடைபெறும் விவாதங்களாக இருந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், கருத்துக் கணிப்புகளாக உருமாற்றம் கண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட வணிக நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கருத்துக் கணிப்புகள் அரசியல் ஆர்வம் குறைந்துள்ள வாக்காளர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பவையாகவும், அவர்களுடைய கருத்துக்களின் பரப்பைக் குறைப்பவையாகவும் உள்ளன.

 

இறுதியாக, அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்தும், நேரடி அரசியலில் ஆர்வம் குறைந்தும் போயுள்ள பெருவாரியான வாக்காளர்கள், அரசியல் விழிப்புணர்வு கூடியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பெறும் வாய்ப்புள்ளவர்களாக இருப்பதால் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குபவர்களாகவும் தமக்குள்ளாக விவாதிப்பவர்களாகவும் உருவெடுத்துள்ளார்கள்.

 

தமிழக இந்திய சூழலில் இந்த மாற்றங்களை விரிவாகவும் தனிக் கவனம் கொடுத்தும் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

 

நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை, ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்குமான இடைவெளி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கும் “பார்வையாளர்” ஜனநாயகத்தில் இருந்து விடுபட்டு, தற்காலத்திற்கு உகந்த முறையில் குடவோலை முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா என்பதே.

(தொடரும்… )

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 4

குடவோலை முறையின் வீழ்ச்சியும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் தோற்றமும் – 4

 

கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் இருந்து கி. மு. 1 ஆம் நூற்றாண்டு வரை ஏதென்ஸிலும், பல கிரேக்க நகர அரசுகளிலும் தழைத்திருந்த குடவோலை முறையிலான மக்களாட்சி, கி. மு. 146 இல் ரோமப் பேரரசின் ஆக்கிரமிப்போடு முடிவுக்கு வந்தது. என்றாலும், ஏதென்ஸின் மக்களாட்சி என்ற கனவு, தத்துவவாதிகளின் எழுத்துக்களிலும், அரசியல் கோட்பாட்டாளர்களின் கற்பனைகளிலும் தொடர்ந்து உலவிக்கொண்டிருந்தது. மறுமலர்ச்சி கால இத்தாலியில் வெனிஸ், ஃப்ளோரன்ஸ் நகரங்களில், மேட்டுக்குடியினரின் குறுகிய வட்டங்களில் குடவோலை முறையைப் பின்பற்றி அதிகாரக் குவிப்பைத் தவிர்க்கும் முயற்சி மீண்டும் முளைத்து, ஐரோப்பாவின் பல நகரங்களுக்கும் பரவியது. இறுதியாக, 1797 ஆம் ஆண்டில் வெனிஸ் நகரின் வீழ்ச்சியோடு குடவோலை முறை முற்றிலுமாக மறைந்துபோனது.

 

மத்திய கால உலகை முடிவிற்கு கொண்டு வந்து, நவீன காலத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட அமெரிக்கப் புரட்சியும், ஃப்ரெஞ்சுப் புரட்சியும், நாடாளுமன்ற ஆட்சியை நோக்கிய இங்கிலாந்தின் படிப்படியான முன்னேற்றமும் குடவோலை முறை நடைமுறையையும் அது குறித்த பேச்சையும் அரசியல் உலகில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தழித்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் உலகைக் குலுக்கிய இம்மூன்று மாற்றங்களும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையில் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறைக்குப் பதிலாக, தேர்தலின் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் முறையே தமக்குரிய ஆட்சிமுறை என்று மிகுந்த கவனத்துடன் தேர்ந்துகொண்டன.

 

முதலாவதாக, இம்மூன்று புரட்சிகளின் நாயகர்களும் அவர்கள் புதிதாக உருவாக்கிய ஆட்சியமைப்பை ஜனநாயம் – மக்களாட்சி என்று கருதவே இல்லை. அவ்வாறு அழைப்பதை மிகுந்த கவனத்துடன் தவிர்த்து வந்தனர். தமது அரசுகளை குடியரசுகள் (Republic) என்றே அழைத்தனர். ஃப்ரெஞ்சு அரசு குடும்பத்தில் இருந்து வந்தவரும், முடியாட்சியை வெறுத்தவரும், ஆனால், உருவாகிக் கொண்டிருந்த புதிய அரசுகளின் எல்லைகளை தீர்க்கத்தரிசனத்துடன் உணர்ந்தவருமான அலெக்ஸி டி டாக்யெவெல்லி என்பார், தனது அமெரிக்கப் பயணத்தை தொடர்ந்து 1835 இல் “அமெரிக்காவில் ஜனநாயகம்” என்ற நூலை எழுதும்வரை, இப்புதிய அரசமைப்புகளை குடியரசுகள் என்று அழைக்கும் வழக்கமே நிலவி வந்தது. டாக்யெவெல்லியின் நூலைக்குப் பிறகே, இப்புதிய அரசமைப்புகளை ஜனநாயகம் என்ற சொல் பீடித்துக்கொண்டது.

 

இரண்டாவதாக, பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சிகளின் நாயகர்கள் ஏதென்ஸில் நிலவிய ஆட்சியமைப்பை நன்கு அறிந்தே இருந்தார்கள். தமது சமகாலத்தில் இத்தாலிய நகரங்கள் சிலவற்றில் – குறிப்பாக வெனிஸில் – நிலவிய வரையறுக்கப்பட்ட வகையிலான குடவோலை முறையைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்கள். என்றபோதிலும், தாம் உருவாக்கிக் கொண்டிருந்த புதிய ஆட்சிக்கு அது உகந்ததல்ல என்றே முடிவு செய்தார்கள். ஏதென்ஸின் குடவோலை முறையிலான ஆட்சியமைப்பிற்குப் பதிலாக ரோமக் குடியரசில் நிலவிய தேர்தல் மூலமான குழு ஆட்சிமுறையே தமக்கு உகந்தது என்று தெளிவாக முடிவு செய்தார்கள்.

 

ஒரு அரசாங்கம் – ஆட்சி அமைப்பு எவ்வாறு அங்கீகாரம் பெறுகிறது என்பதைப் பற்றிய அவர்களுடைய புரிதலே இந்த தேர்வுக்கு காரணமாக அமைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சிகள் யாவும் முடியாட்சிக்கு எதிரானவை என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். முடியாட்சியில் அரசனின் ஆட்சிக்கான நியாயப்பாடு அவன் குறிப்பிட்ட அரச பரம்பரையில், “உயர் குடியில்” பிறந்தவன் என்ற காரணத்தினாலேயே உருவாகிறது. வேறு எந்த நியாயப்பாடும் ஆட்சிபுரியும் அரசனுக்கு அவசியமில்லை.

 

அத்தகைய முடியாட்சியை தூக்கி எறிந்தவர்கள் அவ்வாறான நியாயப்பாட்டையும் நிராகரித்தார்கள். எந்தவொரு அரசாங்கமும் குடிமக்களின் ஒப்புதல் – அங்கீகாரம் பெற்றே ஆட்சி புரியமுடியும் என்ற வரையறையே சரியாக இருக்கமுடியும் என்று நம்பினார்கள். அவ்வகையிலான அரசாங்கத்தை உருவாக்க பொருத்தமான முறை தேர்தலாக மட்டுமே இருக்கமுடியும் என்று கருதியதாலேயே, குடவோலை முறையை நிராகரித்து தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஆட்சிமுறையைத் தழுவிக்கொண்டார்கள்.

 

ஏதென்ஸின் குடிமக்களுக்கு அனைவரும் ஆட்சியில், சுழற்சி முறையில் பங்குபெறவேண்டும் என்பதே மையமான அம்சமாக இருந்தது. அத்தகைய ஜனநாயகக் கொள்கைக்கு உகந்த முறையாக குடவோலை முறையிலான குலுக்கல் முறை இருந்ததாலேயே அவர்கள் அதை தேர்வு செய்தனர். ஆட்சிக்கான நியாயப்பாடு குடிமக்கள் தரும் ஒப்புதல் – அங்கீகாரத்திலேயே அடங்கியிருக்கிறது என்று பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்கள் நம்பினார்கள். அதற்கு உகந்த முறையான தேர்தல் முறையை தேர்வு செய்துகொண்டார்கள். எவருடைய ஒப்புதலுமற்ற முடியாட்சியுடன் ஒப்பிடும்போது இம்முறை அவர்களின் கண்களுக்கு மேலானதாகத் தெரிந்ததில் வியப்பில்லை.

 

குடிமக்கள் ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கும் தேர்தல் முறையின் மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது. ஒப்புதல் தந்த  குடிமக்கள், ஆட்சியில் அமர்ந்தவர்களுக்கு – அதாவது தாம் அளித்த ஒப்புதலுக்கு – அடங்கி நடந்துகொள்ளவேண்டும் என்ற கடமையும் உருவாகிவிடுகிறது. குடிமக்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய இத்தகைய கடமை உணர்வை தேர்தல் முறை உருவாக்குகிறது என்பதை நன்கு உணர்ந்த காரணத்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்கள் தேர்தல் முறையைத் தழுவிக்கொண்டனர்.

 

இறுதியாக, புரட்சியாளர்கள், புதிய ஆட்சியமைப்பில், தேர்ந்தெடுப்பவர்களுக்கும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் இடையில் தெளிவான வித்தியாசம் இருக்கவேண்டும் என்று நம்பினர். முடியாட்சியில் நிலவியதைப் போல, பிறப்பின் அடிப்படையில் “உயர்குடியினராக” இருக்கவேண்டும் என்ற கருத்தை அவர்கள் ஏற்கவில்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதாவது ஆட்சியில் அமர்பவர்கள், செல்வச் செழிப்பிலும், செயல்திறனிலும் தேர்ந்தெடுப்பவர்களைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருப்பதே ஆட்சிக்கு உகந்தது என்று நம்பினர். அத்தகையவர்களே நிர்வாக முறைகேடுகளில் ஈடுபடமாட்டார்கள் என்பதிலும் அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.

 

இதன் காரணமாகவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறிப்பிட்ட அளவு சொத்துடையவர்களாக இருக்கவேண்டும் என்ற வரையறை முதலில் உருவாக்கப்பட்டது. சில குடியரசுகளில், சொத்துடையவர்களில் இருந்து மட்டுமே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ள, வாக்களிப்பவர்களுக்கு குறிப்பிட்ட சொத்து மதிப்பு இருக்கவேண்டும் என்ற வரையறை உருவாக்கப்பட்டது. சில குடியரசுகளில் இரண்டு நிபந்தனைகளுமே முன்வைக்கப்பட்டன.

 

செல்வச் செழிப்பிலும் செயல்திறனிலும் உயர்வானவர்கள், சிலவேளைகளில் முறைகேடாக நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணராத அளவிற்கு புதிய அரசமைப்பை உருவாக்கியவர்கள் அசடுகளாக இருக்கவில்லை. அத்தகைய நிலை உருவானால், பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களுக்கான அங்கீகாரம் திரும்பப்பெறப்படும் என்ற எச்சரிக்கைப் பொறிமுறையாகவே, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்படவேண்டும் என்றும் வகுத்துக்கொண்டனர்.

 

ஆக, முதலாவதாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பிரதிநிதித்துவ அரசாங்கங்கள், முதலில் தம்மை ஜனநாயக அரசுகளாகவே கருதிக்கொள்ளவில்லை. குடியரசுகள் என்றே கருதிவந்தன. இத்தகைய அரசுகள் தோன்றி, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கழிந்தபிறகே அவற்றுக்கு “ஜனநாயகம்” என்ற பெயர் சூட்டப்பட்டது.

 

இரண்டாவதாக, முடியாட்சியிலிருந்து மாறுபட்ட ஆட்சியமைப்பை உருவாக்கவேண்டும் என்ற விழைவின்பாற்பட்டே, குடிமக்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் பெற்ற அரசாங்க அமைப்புகளே நியாயப்பாடுள்ள அரசமைப்புகளாக இருக்கமுடியும் என்ற கருத்தமைவின் காரணமாகவே தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை கையாளத் துவங்கினர். இதன் மறுபக்கமாக, தேர்வு செய்பவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் கடமைப்பாடு உடையவர்கள் என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

மூன்றாவதாக, தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தேர்ந்தெடுப்பவர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருப்பதே ஆட்சிக்கும் அதிகாரத்திற்கு உகந்தது என்ற நம்பிக்கை. இதன் காரணமாக, செல்வச் செழிப்பும், செயல்திறனும் உள்ளவர்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான வரையறைகள் உருவாக்கப்பட்டன. இதன் மறுபக்கமாக, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தமது நிலையில் இருந்து தவறினால், அவர்களுக்கான அங்கீகாரம் திரும்பப்பெறப்படும் என்ற எச்சரிக்கையாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் மீண்டும் மீண்டும் நடத்தும் வழமை உருவாக்கப்பட்டது.

 

பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் தோற்றம் இவ்வாறாக இருந்ததென்றால், அவற்றின் ஆதாரமான அடிப்படைகளாக நான்கு அம்சங்கள் இருந்தன. அவை மூன்று அவதாரங்களை எடுத்துள்ளன. இந்த மாற்றங்களில், குடிமக்கள் அனைவரும் ஆட்சிப் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் சுழற்சி முறையில் பங்கேற்கவேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கையும் நடைமுறையும் காணாமல் போயின.

 

(தொடரும்… )

 

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 3

ஏதென்ஸின் குடவோலை முறை – 3

 

சோழர் காலத்து குடவோலை முறையில் சொத்துடைமை வரையறையும், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற முடியும் என்ற வரையறையும் இருந்ததைப் போலவே ஏதென்ஸில் நிலவிய மக்களாட்சி முறையிலும், பெண்களும் அடிமைகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அத்தகைய எதிர்மறையான அம்சத்தைக் கவனத்தில் குறித்துக்கொண்டு அதன் சாதகமான அம்சங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியம்.

 

ஏதென்ஸ் ஜனநாயகத்தின் ஆதாரமாக இரண்டு அடிப்படைக் கொள்கைகள் இருந்தன. முதலாவது, தமது அரசியல் உரிமைகளைச் செயல்படுத்த அனைத்து குடிமக்களுக்குமான சம உரிமை (கிரேக்க மொழியில் isonomia). இரண்டாவது, மக்கள் சபையில் பேசுவதற்கும், தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமை (isogoria).

 

ஏதென்ஸின் மக்களாட்சியின் தனித்துவம் மிக்க அமைப்பாக இருந்தது மக்கள் சபை. மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கூடிய இந்த மக்கள் சபையில் 20 வயதிற்கு மேற்பட்ட ஏதென்ஸின் குடிமக்கள் அனைவருக்கும் தம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்கும் உரிமை இருந்தது. அவ்வாறு பேச முன்வருவோரை ஏதென்ஸின் மக்கள் “விருப்பத்துடன் முன்வருவோர்” என்று குறிப்பிட்டனர்.  என்றாலும், மக்கள் சபையில் எல்லாக் குடிமக்களும் பேச முன்வந்துவிடவில்லை.ஏதென்ஸின் மக்கள் தொகை அக்காலத்தில் 30,000 -லிருந்து அதிகபட்சமாக 60,000 வரை இருந்தது. இவர்களில் ஏறத்தாழ 6,000 பேர் மட்டுமே மக்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டனர். இந்த 6000 பேரிலும் அரசியலிலும் நிர்வாகத்திலும் ஆட்சி புரிவதிலும் விருப்பம் இருந்த சிலர் மட்டுமே சபையின் முன் பேசவும் ஆலோசனைகளை முன்மொழியவும் செய்த “விருப்பத்துடன் முன்வருவோராக” இருந்தனர். பெரும்பாலான மக்கள், வாதப் பிரதிவாதங்களைக் கவனிப்பவர்களாகவும், அவற்றின் முடிவில் தமது ஒப்புதலையோ, மறுப்பையோ வாக்குகள் மூலம் தெரிவிப்பவர்களாகவுமே இருந்தனர்.

 

ஏதென்ஸின் மக்களாட்சி முறையில் குடவோலை முறை போன்று “குலுக்கலில்” தேர்ந்தெடுக்கும் முறையோடு கூட, வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையும் நிலவியது. ஆனால், வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒரு சில பொறுப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.  குறிப்பாக படைத் தளபதிகள், இராணுவ நிதிக்கான பொருளாளர், நிதிநிலை கணக்குத் தணிக்கையாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கு மட்டுமே வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் பெரும்பாலும் ஏதன்ஸ் சமூகத்தின் மேட்டுக் குடியினராகவே இருந்தனர்.

 

இவை தவிர்த்து, மேலே குறித்துள்ளது போல, மக்கள் சபை போன்ற அமைப்புகளில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களின் முடிவில் தமது ஒப்புதலையோ மறுப்பையோ தெரிவிக்க கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறை நிலவியது. பெரும்பாலும், இந்த வாக்களிப்பில் உயர்த்தப்பட்ட கைகள் எண்ணப்படும் வழக்கம்கூட இருந்ததில்லை. கூடியிருந்த 6000 பேர்களில் எத்தனை பேர் கைகளை உயர்த்தினார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது அதிக நேரம் எடுக்கக்கூடியது என்பதால் மட்டுமில்லை. ஏதென்ஸ் மக்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை சமூகத்தின் மேட்டுக்குடியினருக்கே உரிய முறையாகவும், அவர்களுக்கு சாதகமான முறையாகவுமே கண்டனர். ஆகையால், பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் நபர்களை தேர்ந்தெடுக்கும் முறையாக அதை பின்பற்றுவதை ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே வரையறுத்து வைத்தனர்.

 

மக்கள் சபை தவிர்த்து, ஏதென்ஸின் மக்களாட்சியில் மூன்று முக்கிய அரசியல் அமைப்புகள் இருந்தன. முதலாவது, ஐநூறுவர் மன்றம். மக்கள் சபையில் கூடிய 6000 பேரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேர் கொண்ட மன்றமே ஐநூறுவர் மன்றம் என்று அழைப்பட்டது.

 

இந்த 500 நபர்களில் ஏதென்ஸ் நகரத்தின் 139 இனக்குழுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழக்கப்பட்டிருந்தது. குலுக்கல் முறையிலேயே இந்த 500 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஒருவர் தம் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே இம்மன்றத்திற்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் வரையறுக்கப்பட்டிருந்தது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இம்மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

 

வெளியுறவுத் துறை விவகாரங்கள், இராணுவத்தின் நிர்வாகம், நிதி நிர்வாகம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவை இந்த மன்றத்தின் பொறுப்பில் இருந்தன. இவை தவிர, மக்கள் சபையின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பொறுப்பும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பும் ஐநூறுவர் மன்றத்தின் முக்கிய பணிகளாக இருந்தன. நடைமுறையில் பாதியளவு தீர்மானங்களே ஐநூறுவர் மன்றத்தால் முன்மொழியப்பட்டன. பாதியளவு தீர்மானங்கள் மக்கள் சபையில் கூடியோரால் முன்மொழியப்பட்டன.

 

இரண்டாவது முக்கிய அரசியல் அமைப்பாகத் திகழ்ந்தது, மக்கள் நீதிமன்றங்கள். 30 வயதிற்கு மேற்பட்ட, அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட, தாமாக செயல்பட முன்வந்தவர்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 6000 பேர் இம்மன்றத்திற்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலும் வயது முதிர்ந்த, அனுபவம் மிக்கவர்களும் ஏழைகளுமே இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள், மக்கள் சபை மற்றும் ஐநூறுவர் மன்றத்தின் தீர்ப்பாணைகளுக்கு கட்டுப்பட்டும், சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்காத விஷயங்களில் நியாய உணர்வுடனும், வழக்காடுபவர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் வாய்ப்பளித்தும் நடப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றங்கள் கூடும் நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கூடிவிடுவார்கள். அவர்கள் மத்தியிலிருந்து வழக்குகளின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப, 501, 1001, 1501 நபர்கள் அடங்கிய நீதிபதிகளின் குழுக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்குகளின் விசாரணை நடைபெறும். இவ்வழக்குகளின் தீர்ப்புகளில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கருத்தொருமிப்பிற்கு வருவது வழக்கமாக இருந்தது.

 

மக்கள் நீதிமன்றங்கள், தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மன்றங்களாகச் செயல்படவில்லை என்ற விஷயம் இதில் முக்கியமானது. இவை விசாரித்த வழக்குகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே பெரும்பாலும் இருந்தன. குறிப்பாக, மக்கள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தீர்ப்பாணைகள், மற்றும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் மன்றங்களாக இவை செயல்பட்டன. இதன் மூலம், மக்கள் சபையில் ஒருவேளை தவறான சட்டம் இயற்றப்பட்டிருந்தால், அதைச் சரி செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பாக இந்நீதிமன்றங்கள் செயல்பட்டன எனலாம்.

 

படைத் தளபதிகளின் குற்றங்களையும் இம்மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்தன. அத்தகைய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. குடியுரிமையைப் பறிப்பது, நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற தண்டனைகள் குற்றம் இழைத்த படைத்தளபதிகளுக்கு வழங்கப்பட்டன. அவ்வகையில், ஏதென்ஸ் நகரின் மேட்டுக் குடியினரின் மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பணியையும் இந்த மக்கள் நீதிமன்றங்கள் செய்தன.

 

மூன்றாவதாக, கி.மு. நான்காம் நூற்றாண்டில், ஒரு குறுகிய காலத்திற்கு, மேட்டுக்குடியினரால் வீழ்த்தப்பட்ட மக்களாட்சி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டபோது, சட்டம் இயற்றுவதற்காகவென்றே தனியாக ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. மக்கள் சபைக்கு இருந்த சட்டம் இயற்றும் அதிகாரம் நீக்கப்பட்டு, தீர்ப்பாணைகள் மட்டுமே வழங்குமாறு வரையறுக்கப்பட்டது.  புதிதாக அமைக்கப்பட்ட சட்டம் இயற்றும் மன்றத்திற்கு, மக்கள் நீதிமன்றங்களைப் போலவே குலுக்கல் முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, சட்டங்களைத் திருத்துவது, புதிய சட்டங்களை இயற்றுவது ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட்டன. மக்களாட்சிக்கு விரோதமான சட்டங்கள் இயற்றப்படாமல் பாதுகாப்பதற்கான அமைப்பாக இந்தச் சட்டம் இயற்றும் மன்றம் செயல்பட்டது.

 

இம்மூன்று மன்றங்களின் முடிவுகளையும், மக்கள் சபையின் தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு என்றே தனியாக அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 600 பேர் குலுக்கல் முறையிலும், தேர்தல் முறையில் 100 மேட்டுக் குடியினரைச் சேர்ந்தவர்களும் ஆண்டிற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஒரு பதவிக்கு ஒரு முறைக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்ற வரையறுக்கப்பட்டது. மேலும், ஒரு பதவிக்காலத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைத்த பிறகே அடுத்த பதவிக்கு போட்டியிட முடியும். அதாவது, ஒருவர் ஒரு வருடம் பதவியில் இருந்தால், அடுத்த வருடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பித்திலேயே கழிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இந்த அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுவதாக குற்றச்சாட்டு எழுந்தால், அவற்றை மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்து கடும் நடவடிக்கை எடுத்தன.

 

இவ்வாறாக, ஏதென்ஸ் நகரத்தின் ஆட்சி அதிகார, நிர்வாக அமைப்புகள் அனைத்தும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையோடு, சுழற்சி முறையும் இணைக்கப்பட்டிருந்தது. நிர்வாக சீர்கேடுகள் நிகழாத வண்ணம், ஒன்றை ஒன்று கண்காணித்து கட்டுப்படுத்தும் மூன்றுவிதமான அமைப்புகள் சீராக செயல்படுத்தப்பட்டன. குலுக்கல் முறையோடு, தேர்தல் முறையும் நிலவியது. ஆனால், அது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பதவிகளுக்கு மேட்டுக்குடியினரை தேர்வு செய்வதற்காக மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. இதைத் தவிர்த்து, மக்கள் சபையிலும், மக்கள் நீதிமன்றங்களிலும் கருத்தொருமிப்பை எட்டுவதற்கான முறையாக மட்டுமே வெளிப்படையான வாக்கெடுப்பு முறையும், இரகசிய வாக்கெடுப்பு முறையும் பயன்படுத்தப்பட்டன.

 

இறுதியாக, ஏதென்ஸ் நகரின் குடிமக்கள், அரசியல் விவகாரங்களில் தனித் திறமையால் சிறப்பு பெற்றவர்களை எப்போது நம்பத் தயாராக இருக்கவில்லை. அத்தகையோர் அதிகாரத்தின் படிகளில் காலடி எடுத்துவைத்தால், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தம் வசப்படுத்திக்கொள்ளவே விழைவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகையால், அனைத்தையும் அறிந்திராத, எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள கற்றுக்குட்டிகளின் (amateurs) கைகளிலேயே மக்களாட்சி பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினர். அத்தகைய கற்றுக்குட்டிகள் அசட்டுத்தனமான காரியங்களைச் செய்து ஆட்சியமைப்பை சீர்குலைத்துவிடாமலிருக்கும் வகையில் நிறுவன பொறியமைப்புகளை உருவாக்கிக்கொண்ட காரணத்தினாலேயே ஏதென்ஸின் மக்களாட்சி நிலைத்து நின்றது.

 

(தொடரும்… )

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 2

குடவோலை முறை எனும் மக்களாட்சி முறை – 2

கி. பி. பத்தாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியில் நிலவிய குடவோலை முறை குறித்த தகவல்கள் அடங்கிய உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தையும் பெரும் புகழையும் பெற்றிருந்தாலும், அவற்றில் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சிமுறை அரசியல் ஆய்வாளர்களின் உரிய கவனத்தைப் பெறவில்லை. குறிப்பாக, ஒரு ஆட்சிமுறை என்ற அளவில் தற்கால அரசியல் நெருக்கடிகளுக்கு அக்கெல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கிலிருந்து அவை அணுகப்படவே இல்லை.

தற்போது நிலவும் ஆட்சிமுறை வாக்குகளைச் செலுத்தி பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஆள்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கும் ஆட்சிமுறை என்பது அனைவரும் அறிந்ததே. இதை ஜனநாயக ஆட்சிமுறை என்று நாம் கருதுகிறோம். குடவோலை முறையையும் ஜனநாயக ஆட்சிமுறை என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறோம். ஆனால், குடவோலை முறை வாக்குகளை செலுத்தி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறையே அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம்.

உத்திரமேரூர் கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டிருக்கும் குடவோலை முறையின் நடைமுறை மிகவும் எளிமையானது. தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், நில வரி வாரியம், ஆண்டுக்கு ஒருமுறை கூடி மேற்பார்வை செய்யும் வாரியம் ஆகிய கிராம நிர்வாக சபைகளுக்கு, தகுதி உடைய நபர்களை தேர்வு செய்யும் முறை. ஊரில் இருந்த முப்பது பிரிவுகளுக்கு ஒருவர் என்ற விதத்தில் 30 நபர்கள் இவ்வாரியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

முதலில், ஒவ்வொரு ஊர் பிரிவிற்கும் தகுதியான நபர்கள் என்று கருதப்படுபவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு, இறுக மூடிவைத்துவிடுவார்கள். தேர்வு செய்யப்படும் நாளன்று, ஊரின் மகாசபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்க, பூசாரிகளும் ஒருவர் தவறாமல் கூடியிருக்கவேண்டும். கூடியிருக்கும் பூசாரிகளில் வயதில் மூத்தவர், பெயர்கள் எழுதப்பட்ட ஓலைகள் அடங்கிய பானையை, சபையினர் அனைவரும் பார்க்கும் வகையில் தூக்கி காட்டவேண்டும். பிறகு அப்பானையில் உள்ள ஓலைகளை வேறொரு பானைக்குள் இட்டு, அதை நன்றாக குலுக்கவேண்டும். அதன் பிறகு, ஏதுமறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு, பானையில் உள்ள ஓலைகளில் ஒன்றை எடுக்கச் சொல்லவேண்டும். சிறுவன் எடுக்கும் ஓலையை, மத்தியஸ்தர், தன் ஐந்து விரல்களையும் அகல விரித்து வாங்கிக்கொள்ளவேண்டும். வாங்கிய ஓலையில் உள்ள பெயரை அவர் உரக்க வாசிக்கவேண்டும். அவரைத் தொடர்ந்து சபையில் கூடியுள்ள மற்ற பூசாரிகள் அனைவரும் ஓலையில் உள்ள பெயரை உரக்க வாசிக்கவேண்டும். ஊரின் 30 பிரிவுகளுக்கும் இவ்வாறு 30 பானைகளில் பெயர்கள் இடப்பட்டு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எவ்விதமான முறைகேடுகளும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்வதற்கான நடைமுறை என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்விதமான அதிகாரப் போட்டிக்கும் பொறாமைக்கும் இடம் தராமலும், செல்வாக்கு பெற்றவர்கள் மறைமுகமாக அழுத்தம் தந்து தமக்கு சார்பானவர்களை தேர்வு செய்வதற்கான வழியும் இல்லாமல் தேர்தெடுக்கும் முறை என்பதும் புலனாகிறது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியானவர்கள் என்பதற்கான நிபந்தனைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. அவை பின்வருமாறு:

  • வரி செலுத்தக்கூடிய கால்வேலிக்கு அதிகமான நிலம் உடையவராக இருக்கவேண்டும்.
  • அந்நிலத்தில் சொந்தமான வீடு உடையவராக இருக்கவேண்டும்.
  • 35லிருந்து 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
  • மந்திர பிரமாணங்களைப் பிறருக்கு எடுத்துரைத்துச் சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும்.
  • வேலியில் 1/8 பங்கு நிலமுடையவராக இருந்தால், 1 வேதத்திலும் அதற்கான உரையிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கவேண்டும்.
  • செல்வத்தை நல் வழியில் சேர்த்தவராகவும், தூய்மையான மனத்தினராகவும் இருக்கவேண்டும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. நெருங்கிய உறவினர்கள் எவரும்கூட அவ்வாறு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது.
  • ஏதாவது வாரியத்தில் உறுப்பினராக இருந்து, கணக்குகளைக் காட்டாமலோ ஒப்படைக்காமலோ இருந்தால், குடத்தில் பெயரை இடுவதற்கான தகுதியற்றவராக கருதப்படுவார். அவருடைய நெருங்கிய உறவினர்களில் எவராவது உறுப்பினராக இருந்து கணக்குகளை காட்டாமலிருந்தாலும்கூட, தகுதியற்றவராகவே கருதப்படுவார்.
  • ஆகமங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள், கையூட்டு பெற்றவர்கள், பிறர் பொருளை அபகரித்தவர்கள், மக்களுக்கு விரோதமான காரியங்களை செய்தவர்கள், இன்னபிற பாதகங்களை செய்தோரும் தகுதியற்றவர்கள்.
  • பொய் கையெழுத்து இட்டவர்கள், கழுதை மேல் ஏறியவர்களும் தகுதியற்றவர்கள்.

இந்த நிபந்தனைகளின் பாதகமான அம்சங்களை முதலில் பார்த்துவிடுவது நல்லது. முதலாவதாக, வேதங்களிலும் ஆகமங்களிலும் வல்லவர்கள் – அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படத் தகுதியானவர்கள் என்ற வரையறை. இரண்டாவதாக, குறிப்பிட்ட அளவு சொத்துடைமை வரையறை. இவ்விரண்டும், ஆட்சி செய்யத் தகுதியானவர்களை ஒரு குறுகிய வரம்பிற்குள் நிறுத்திவிடுகின்றன.

இதற்கு அப்பாற்பட்டு, விதிகளின் சாதகமான அம்சங்கள் கவனத்திற்கு உரியவை. முதலாவதாக, முறைகேடுகளைத் தடுப்பதற்கான விதிமுறைகள். சமூகத்தின் பொது நன்மைக்கு எதிரானவர்களை மட்டுமின்றி, நிர்வாகத்தில் பொறுப்பின்றி நடந்துகொண்டவர்களையும் முறைகேடுகளைச் செய்தவர்களையும் விலக்கி வைக்கும் விதிமுறைகள். இவை நிர்வாகத் தூய்மையை உறுதி செய்பவை.

இரண்டாவதாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிர்வாக சபைகளுக்கு தேர்வு செய்யப்பட முடியும் என்ற நிபந்தனை. நெருங்கிய உறவினர்கள் எவரும்கூட இக்கால எல்லைக்குள் நிர்வாக சபையில் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது என்று துணை நிபந்தனை இதை மேலும் இறுக்கமாக்குகிறது.

அதிகாரம் ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு மிக்க நபரிடமோ செல்வாக்கு மிக்க குழுவிடமோ குவிந்துவிடாமல் இருப்பதை இந்த நிபந்தனை உறுதிசெய்கிறது. வேறு வகையில் சொல்வதென்றால், சுழற்சி முறையில் நிர்வாகத்திலும் ஆட்சிப் பொறுப்பிலும் ஊரில் இருக்கும் பலரும் பங்கேற்க வழிவகை செய்கிறது.

தற்கால அரசியல் சூழலுக்குப் பொருத்திக் கூறுவதென்றால், நிர்வாக முறைகேடுகள், ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை நிகழாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அடுத்து, அதிகாரம் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடமோ, செல்வாக்கு மிக்க தனி நபர்களிடமோ குவிந்துவிடாமல் தடுக்கப்படுவதோடு, அதிகாரத்திலும் ஆட்சிப் பொறுப்பில் அனைவரும் பங்கேற்பதை சுழற்சி முறை உறுதி செய்கிறது.

இவற்றோடு, குடத்தில் ஓலைகளை இட்டு பெயர்களை தேர்வு செய்யும் முறையின் மையமான பண்பு கவனத்திற்குரியது. இவ்வாறு தேர்வு செய்யும் முறையை random process – சீர்வாய்ப்பு முறை அல்லது அறவட்டு முறை என்று கூறுவர். இம்முறையில், குடத்தில் இடப்பட்டுள்ள பெயர்களில் இருந்து எவருடைய பெயரும் தேர்வு செய்யப்படலாம். எவரது பெயர் தேர்வு செய்யப்படுவதற்கும் நூறு சதவீதம் சமமான வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது.

ஆட்சி புரிவதில் அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யும் சீர்வாய்ப்பு/அறவட்டு முறையுடன் சுழற்சி முறையும் இணைந்த இத்தகைய குடவோலை முறை, அனைத்து மக்களும் அல்லது அவர்களின் பிரதிநிதிகளும் எந்த பாகுபாடும் இன்றி அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சி புரியவும், நிர்வாகம் செய்யவும் வழிவகை செய்யக்கூடியது. இதுவே மக்களாட்சி அல்லது ஜனநாயகம்.

இம்முறையில், தேர்தல் முறையில் நிலவும் போட்டியினால் உருவாகக்கூடிய பலப் பரீட்சை, மோதல், போட்டி, பொறாமை, பகைமை, செல்வாக்கு அழுத்தங்கள் போன்ற அனைவருக்கும் தீங்கை விளைவிக்கும் பண்புகளும் உருவாகாமல் தவிர்க்கப்படுகிறது.

ஆனால், சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை, சொத்துரிமை வரையறையுடன், சாதிய அடுக்கில் ஒரு பிரிவினரைத் தவிர பிறருக்கு வாய்ப்பை மறுத்த, மன்னராட்சிக்கு உட்பட்ட கிராம அளவிலான ஆட்சிமுறையாகவே இருந்தது கண்கூடு. இத்தகைய முறை, சோழர் ஆட்சி காலத்தில் மட்டுமல்லாது, பிற ஆட்சிக் காலங்களில் நிலவியதா, எவ்வளவு காலம் தொடர்ந்து நிலவியது என்ற கேள்விகள் எல்லாம் வரலாற்றுப் புலத்திற்குரிய விடை காணப்படாத கேள்விகள்.

இதற்கு மாறாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க சூழலில்,  ஏதன்ஸ் நகரத்திலும், பல கிரேக்க நகர அரசுகளிலும், மன்னராட்சி முறைக்கும் செல்வாக்கு மிக்க மேட்டுக்குடியினரின் குழு ஆட்சிக்கும் உண்மையான மாற்றாக விளங்கிய ஒரு மக்களாட்சி – குடவோலை முறையை ஒத்த ஆட்சிமுறை நிலவியது.   நகரக் குடிமக்கள் அனைவரும் பாகுபாடின்றி பங்கேற்க வழிவகை செய்யக்கூடியதாக, உண்மையான மக்களாட்சியாக, ஜனநாயக அரசாக ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் தழைத்தோங்கியிருந்தது. அவ்வாட்சி முறையின் நுணுக்கங்களைச் சற்றேனும் சுருக்கமாக புரிந்துகொள்வது, குடவோலை முறை எனும் மக்களாட்சி முறையை மேலும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

(தொடரும்… )

நன்றி: விகடன்

%d bloggers like this: