அவளைக் காதல் செய்ய என்னை அனுமதிக்கும் முன்பாக
அவள் எப்போதும் எப்போதும்
எப்போதும் நான் அவளை மட்டுமே காதல் செய்வேன்
என்று என்னை சத்தியம் செய்யச் செய்தாள்.
நான் அவளிடம் சொல்ல முயற்சித்தேன்
சொன்னேன், “கண்ணே, இதோ பார், நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம்
எது என்ன ஆனாலும் நாமிருவரும் காதல் செய்வோம்
மே தினம் வரை, பிற்பாடு என்ன ஏது என்று யோசிப்போம்.
எப்படியிருந்தாலும், மே தினம் எனது பிறந்த நாள்
அன்று நிச்சயம் நான் நல்ல மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருப்பேன்
அப்போது இதுபோலவே தொடர்ந்து இருக்க விரும்பினால்
நமது சிறிய இந்தக் காதல் ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்வோம்
கிறிஸ்துமஸ் வரைக்கும்.”
அவள் கேட்பது போலத் தெரியவில்லை
வேறு வழியில்லாமல் நான் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தேன்
அன்பே அந்தச் சந்திரனை உருக்கி தங்கத்தில் உனக்கு
காதணிகள் செய்து தருவேன்
உன் கண்களின் சிமிட்டல்களுக்கு முன்னால்
மின்மினிப் பூச்சிகள் என்ன பிரமாதம்
என்று உருகினேன்
இன்னும் இதுபோல அபத்தங்களை உளறித் தள்ளினேன்.
முடிந்த பிறகு
அவளை ப்ராட்வேயில் ஒரு பாருக்கு அழைத்துச் சென்றேன்
அவள் முகம் காதல் செய்த களிப்பில் இன்னும் சிவந்திருந்தது
நான் அதைக் கண்டு கொள்ளவில்லை
என்னை ஒளிக்காமல் சொல்லிவிட்டேன்
அன்பாக இருக்க இரக்கமற்றவன் போலக் காட்டிக் கொண்டேன்.
அவளுக்குச் சொன்னேன், “கட்டிலில் நான் சொன்னதையெல்லாம் வைத்து
கற்பனைகள் எதையும் வளர்த்துக் கொள்ளாதே
ஒரே பெண்ணோடு சுருக்கு மாட்டிக்கொள்ள என்னால் முடியாது.”
அவள் வயிறு வெடிக்கச் சிரித்தாள்
ஊளையிட்டாள், “அந்தக் குப்பையை எல்லாம் நம்பிவிட்டதாகச்
சொல்லிவிடாதே”
மணலில் விழுந்த மீன் அடித்துக்கொள்வது போல மூச்சு வாங்கினாள்
“நீ ரொம்பவும் உணர்ச்சிவயமானவனாக இருக்கிறாய்.”
வீட்டின் அசட்டுப் பயலைச் செல்லமாகத் தட்டுவதைப் போல
என் கன்னத்தில் தாயன்போடு முத்தமிட்டாள்
என் கணவன் திரும்புவதற்கு முன்னால்
வீடுபோய்ச் சேரவேண்டும் என்று கிளம்பினாள்
அவள் திருமணமானவள் என்பதுகூடத் தெரியாமல் …
சில நாட்கள் கழித்து
எவ்வளவு அன்பான பெண் அவள் என்று
அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்
தொலைபேசியில் அழைக்க முயற்சித்தேன்
ஆனால் அவள் எனக்குத் தவறான எண்ணைத் தந்திருந்தாள்.
Black Anima என்ற கவிதைத் தொகுதி, Small Time, The Messenger என்ற இரு திரைப்படங்கள் இவரது படைப்புகளில் முக்கியமானவை. கட்டுரையாளராகவும் நாவலாசிரியராகவும்கூட அறியப்பட்டவர். தற்போது Medger Evens College, City University of New York – ல் பேராசிரியராக பணிபுரிகிறார். இக்கவிதை முதலில் யாதுமாகி இதழிலும் பின்னர் ஃப்ரான்சிலிருந்து வந்துகொண்டிருந்த அம்மா இதழ் 9 லும் பிரசுரமானது.
கவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004