நெருப்பு

எனக்கு வயது பதினாலு ஆகிவிட்டது
சதையின் வேட்கைக்கு எப்போதோ பலியாகிவிட்டேன்
அவனில்லாமல் இனி உயிர்வாழ முடியாது
அந்தப் பையன்
இன்னும் மறைவில் கைசூப்புவதுண்டு
அதெப்படி என் கால்கணுக்கள் மட்டும்
எப்போதும் சாம்பல் நிறத்தில்
நாளை எழுவதற்குள்
இறந்துவிட்டால் என்ன
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள் இருக்கிறாள்
கதவு தாளிட்டிருக்கிறது

அடுத்த பார்டிக்குள்ளாக
நடனமாட கற்றுக்கொள்ள வேண்டும்
என்னுடைய அறை மிகவும் சின்னதாகிவிட்டது
ஒருவேளை பட்டம் பெறுவதற்குள்
நான் இறந்துவிட்டால்
அவர்கள் சோக கீதம் இசைப்பார்கள்
எப்படியிருந்தாலும் கடைசியில்
என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுவார்கள்
எதையும் செய்ய எனக்கு விருப்பமில்லை
ஆனால் செய்ய நிறைய இருக்கிறது
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள் இருக்கிறாள்
கதவு தாளிட்டிருக்கிறது

என் பக்கக் கதையைக் கேட்க
எவருக்கும் தோன்றுவதில்லை
கணிதக் குழுவில் நான் இருந்திருக்கவேண்டும்
அவனுடையதைவிட என் மதிப்பெண்கள் அதிகம்
இடுப்புறைகள் அணிந்தவளாக
ஏன் நானிருக்கவேண்டும்
நாளை உடுத்துவதற்கு ஒன்றும் இல்லை
பெரியவளாகும் வரைக்கும் நான்
உயிர்வாழ்வேனா
அப்புறம் அம்மா படுக்கையறைக்குள்
கதவு தாளிட்டிருக்கிறது

ஆட்ரே லோர்ட் (1934 – 92)
Audre Lorde, The Black Unicorn, Norton Paper Back, 1978.
உணர்ச்சி வேகமும் சொற்செறிவும் மிக்க கவிஞர். கவிதைகளாகவும் உரைநடையாகவும் இவர் எழுதியவை 13 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. பாலியல், அரசியல், பொருளியல் மற்றும் அமெரிக்க கருப்பின மக்கள் உரிமைகளுக்காகவும், தன்பால் புணர்ச்சியாளர்களின் உரிமைகளுக்காவும் வாழ்நாள் முழுக்கப் போராடியவர். இவருமே ஒரு லெஸ்பியன். வெளிப்படையாகவும் தம்மை அறிவித்துக் கொண்டவர். நியூயார்க் நகரிலுள்ள ஃஅன்டர் கல்லூரி உட்பட பல்வேறு சிறந்த கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998

கருப்புக் காதல்

ஒரு நாள்
நீ இந்த வீட்டிற்குள் மெல்ல நடந்து வருவாய்
நான்
ஒரு நீண்ட ஆப்ரிக்க கவுன் அணிந்திருப்பேன்
உட்கார்ந்து நீ பேசத்தொடங்குவாய் “கருப்பு … “
உனது கையை எடுத்து எனதுள் வைத்துக்கொள்வேன்
நீ – என்னை கவனிக்காமலேயே பேசிக்கொண்டிருப்பாய், “ஆமாம், இந்தச் சகோதரனை …”
மெல்ல உன் கையை என் தலையில் நழுவவிடுவேன்
சலிக்காமல் நீ உளறிக்கொண்டிருப்பாய் “புரட்சி இருக்கிறதே … ?”
உனது கையை என் வயிற்றில் அழுத்திப் பிடித்திருப்பேன்
எப்போதும் போல நீ தொடர்ந்து கொண்டிருப்பாய் “இது எனக்கு சுத்தமாக புரியவில்லை …”
உனது கையால் என் உடலை வருடிக் கொண்டிருப்பேன்
பிறகு மெல்ல உனது டாஷிகியை உருவி எடுப்பேன்
அப்போது நீ சொல்வாய் “உண்மையில் நமக்கு இப்போது தேவைப்படுவது என்னவென்றால் …”
இப்போது நாவால் உனது கையை வருடிக் கொண்டிருப்பேன்
நீ, “நான் அதை எப்படிப் பார்க்கிறேன் என்றால், இனி நாம் …”
உனது காற்சட்டைப் பொத்தான்களை அவிழ்த்திருப்பேன்
“சரி, அந்த நிலைமையில் எப்படி …”
உனது உள்ளாடையை உருவி எடுப்பேன்
அப்போது உனது நிர்வாண நிலை
உனக்கு உறைக்கும்
உன்னை உனக்குத் தெரியும்
நீ வெறுமனே இப்படிச் சொல்வாய்”
நிக்கி
இது எதிர்ப்புரட்சிகரமானதில்லையா?”

-நிக்கி கியோவானி (1943 – )
Nikki Giovanni, Black Feeling, Black Talk, Broad Side Press, 1970.
60 – களின் கருப்பு அழகியல் இயக்கத்தோடு சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு ஏறியவர். இவரது கவிதைகள் ஒலித்திராத கருப்பர் வீடுகள் ஒன்றாவது இருந்திருக்குமா என்பது கேள்வியே. கருப்பு இசையிலிருந்து இவருடைய கவிதைகள் பிரிக்க முடியாதது.
நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998
%d bloggers like this: