கோடரி கொண்டு கபாலம் பிளந்து
என்னை அவர்கள் கொல்லவில்லை.
புருவங்களுக்கிடையில் குண்டு துளைத்தும்
நான் இறக்கவில்லை.
வாள் கொண்டு கழுத்தையறுத்தும்
அவர்கள் என்னைக் கொல்லவில்லை.
இதயத்தை ஊடுருவித் துளைத்தெடுத்த
வெடிச் சிதறலாலும் நான் இறக்கவில்லை.
காரக்கிரகமொன்றில் அடைத்து விஷவாயு செலுத்தியும்
அவர்கள் என்னைக் கொல்லவில்லை.
குறுவாளால் குறி அறுபட்டும்
நான் இறக்கவில்லை.
கால்களுக்கிடையில் சூலாயுதம் திணித்தும்
அவர்கள் என்னைக் கொல்லவில்லை.
பலகை ஒன்றின் மீது இலகுவாக
நெஞ்சு நிமிர்த்தி நின்றிருந்தேன்.
கரங்கள் பின்னே கட்டியிருக்க
முகமிழந்து
விழியகலத் திறந்திருக்க
கனத்த சுருக்கு
கழுத்தை இறுக்க
பலகை இழுபட
முண்டம் துடிதுடிக்க
ஐந்து நிமிடம் ஐம்பத்தைந்து நொடிகள்.