ரற

பற்றற பற
கற்றற மற
அறமற உறு
உயிரற அறு
மெய்யற துற
சொல்லற ரற

24.06.10

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

எதையாவது தேய்ப்பவன் அல்லது ஒரு இன்ஸ்டண்ட் கவிதை

மரப்பலகையில் சிறு சக்கரங்கள் பொருத்தி 
உள்ளங்கை ஊனம் தேயாதிருக்க 
நோகாத கட்டைகள் எடுத்து 
தேய்த்து இழுத்துச் செல்வேன் 
வீதி வழிப்போக்கர் கூனிக்குறுக 
விழிகளில் இயலாமை சுரக்க இரஞ்சிக் கேட்பேன் 
சிறுபோக்கர் கடந்தபின் காறி உமிழ்வேன் 
உமிழ்ந்த நாவில் கசந்த சொல் 
இனித்துத் தழலாடும் உள்ளம் கறைக்க 
கடைக்கண் கசடுப் பார்வையில் 
காண்பேன் தெளிவேன் இயம்பித் திரிப்பேன் 
வாழ்வை 
யானே கடையன் 
யானே இனியன் 
கசடரே கருணையற்றோரே 
தோள் சுமக்க உமக்கேன் சுணக்கம்! 


08.12.09 


கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மரணவீடேகாதவன்

துர்மரணங்கள் துரத்த
களித்துத் திரிந்த எம் குருத்துக்கள்
சிறு கடுகெனத் தெறித்துக் கலைந்த காலமது
காய்ந்த மூங்கில் சடசடவென முறிய
வேய்ந்த சருகுதிர்ந்து காற்றலைந்து செல்ல
தெறித்த விழிகளில் பிதுங்கிய துர்க்கனவுகள் தொற்றாதிருக்க
பதுங்கிப் பிழைத்த பாதகன்
கடுகுப் பொதி சுமந்தலைகிறேன்.
05.12.09
கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

“மடத்” தமிழர்

தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம்

திசையெட்டும் திரிந்து நா வளர்த்த

மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு

வழமையான ரசம்தான்

என் ரசம் அலாதி

அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி

கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய

எரும

உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண

சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு

உப்பில்லாத பண்டம் குப்பையிலே

எவரோ சொன்னது

பழந்தமிழர் வீரமறவராம்

இருக்கலாம்

மற்றவர்க்கு எப்படியோ

எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு.


11.02.94

குறிப்பு:

கவிதை எழுத ஆரம்பித்த புதிதில் ‘கவிதை மாதிரி’ எழுதி வைத்தது. ஈழம் குறித்து தற்போது எழுதப்பட்டு வரும் ஆகக்கேடான விஷயங்கள் குறித்து எழுத உட்கார்ந்து புரட்டிக் கொண்டிருந்ததில் கண்ணில் பட்டது. கணிசமான மாற்றங்களுடன் திருத்தி எழுதி பதிவில்.

“மடையன்” என்பதற்கு சமையல்காரன் என்ற பொருளும் உண்டு.

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

இன்மையில் திளைத்தல் / வீணான தொகை

வேலையில்லை வெட்டியில்லை வீணில்லை வினையில்லை வேகமில்லை விவேகமில்லை விசர் இல்லை வீரம் இல்லை விழுப்புண்ணும் இல்லை வெற்றியில்லை தோல்வியுமில்லை துயரில்லை துவட்சி இல்லை துணையில்லை சுகமில்லை சோகமும் இல்லை சுத்தமாக ஏதுமில்லை சொல் இல்லை சொல்லவும் ஏதுமில்லை தாளில்லை தானில்லை தருக்கில்லை தவிப்பில்லை தனிமையும் இல்லை நானில்லை நீயில்லை நாயில்லை நரியில்லை நட்பில்லை பகையில்லை பிணக்கில்லை பிலாக்கனமும் இல்லை பற்றில்லை பாசமில்லை பேய் இல்லை பிசாசுமில்லை பசி இல்லை புசிக்கவும் இல்லை பாயில்லை படுக்கையில்லை பெண்ணுமில்லை கட்டிலைவிட்டிறங்காக் கதையுமில்லை காசில்லை கசடில்லை கசப்பில்லை கனிவில்லை கரிசணை இல்லை கசாப்புக்கடையுமில்லை வெட்டில்லை துண்டில்லை தூணில்லை துரும்பும் இல்லை தூசில்லை தும்பில்லை துப்பில்லை துணிவில்லை தகைமை இல்லை தப்பில்லை சரியில்லை உப்பில்லை சப்பில்லை சோறில்லை சுரைக்காயுமில்லை சுரத்தில்லை சந்தேகமில்லை சேறில்லை சகதியில்லை செருப்புமில்லை செருக்குமில்லை சேனையில்லை சூரனில்லை சகுனியுமில்லை சூதில்லை வாதில்லை வசமேதும் இல்லை விண்ணில்லை மண்ணில்லை ஊரில்லை பேரில்லை ஏதிலியும் இல்லை ஏற்பும் இல்லை மறுப்பும் இல்லை மாயமில்லை மந்திரமில்லை மாங்காயுமில்லை காதலில்லை கத்தரிக்காயும் இல்லை செடியில்லை கொடியில்லை மரமில்லை மழையில்லை வித்தில்லை விழுதில்லை உழுதில்லை தொழுதில்லை பொய்யில்லை உண்மையுமில்லை இருத்தலும் இல்லை இன்மையும் இல்லை.

24.03.09

குறிப்பு: ஒரு மாதத்திற்கு முன்பாக ‘தட்டிய பொறி’. குறித்து வைத்திருந்தேன். நேரம் கிட்டியபோது அவ்வப்போது செதுக்கி வந்தாலும் ஏனோ திருப்தியில்லாமல் இருந்தது. இன்று மீண்டும் ஏதோ ‘பொறி பறந்ததில்’ ஒரே மூச்சில் செதுக்கியது.

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

பட்டியல்

பட்டினி
புகை
தண்ணி
தனிமை
எழுத்து
புரச்சி
தோழமை
தற்கொலை
பார்த்தாகிவிட்டது
இன்னும்
இருக்கிறது
துரோகம்
பழி
பிசாசு
வஸ்து
பெண்
பாரம்
ஒரு
கொலை
இன்னுமொரு
தற்கொலையும்.

11.08.96

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மலங்கழிக்கவியலா ஒரு மார்க்சியத் தன்னிலை

ஒற்றைச் சாளரம் வைத்த
தாழிட்ட என் அறைக்குள்
இதோ
திரும்பவும் அதே மூலையில்
சாளரத்தின் கீழ்
நடுங்கி சிறுத்து
எதிரே பரவி நிற்கும் நட்புகளை
மெல்லத் தலை உயர்த்தி நோக்குகிறேன்
இதழ்களில் படிந்திருக்கும் மென்முறுவல்கள்
விரிகின்றன
சின்னக் குரலில் என் முனகல்
ஒரு நடுக்கம்
கதவருகில் தலைகளுக்குப் பின்னால்
மழுங்கிய கழியை மூலையில் பொருத்தி
சாய்ந்து நிற்கும் உருவம்
ஊடுருவி என்னை வெறிக்கிறது
அந்த மூலையில் கதவருகில்
எப்போதும் அவன் காவலிருப்பது தெரியும்
ஒரு பூனைக்குட்டியை அழைப்பது போல
வருடும் அவர்களது கையசைப்பு
இரு பக்கச் சுவர்களும் முதுகை உரசும்
கணம் என் விழிகளில் அச்சம்
கெஞ்சல்
மெல்ல அசையும் கழியின் பார்வையில்
உறைந்து நின்றிருக்கிறேன்
இரு நொடிகள் இரு காட்சிகள் …
இதமான அணைப்புகளுக்குள் தாவிப் பதுங்கிவிட
கரைந்து காற்றின் அலைகளில்
அவன் தொலைந்துபோகிறான்
மெல்லக் குனிந்து முன்னே வர
மண்டைகள் சிதறிப் பிளக்கின்றன
ஈனக்குரலெழுப்பி
அவன் காலடி நக்கிக்கிடக்கிறேன்
இக்கணம்
இங்கு
உறைந்து
கழியில் பதிந்து
நின்றிருக்கிறேன்.

( … அரசன்குறைக்கு)

03.01.98

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »
%d bloggers like this: