ஏகம் அனேகம்

எனைச் சிறுகச் சிறுகக்
கொன்றவர் அனேகர்

பேச்சும் மூச்சும்
ஆட்டமும் ஆர்ப்பரிப்பும்
ஆசையும் ஆனந்தமும்
அன்பும் அரவணைப்பும்
சிரிப்பும் சினேகிதமும்
ஏக்கமும் இரக்கமும்

எதுவும்

ஏற்க
கோர்க்க
சேர்க்க
சிரிக்க
ஏலாதவனாய்

எனைச் சிறுகச் சிறுகக்
கொன்றவர் அனேகர்.

நான் மடியவில்லை

அழுகவில்லை
புழுவாகவில்லை
பூச்சியாகவில்லை
வித்தாகவில்லை
விதையாகவில்லை
செடியாகவில்லை
மரமாகவில்லை
கிளைக்கவில்லை
பூக்கவில்லை
காய்க்கவில்லை
கனியாகவுமில்லை

கல்லாகவில்லை
மண்ணாகவில்லை
விண்ணாகவில்லை
காற்றாகவில்லை
கடலாகவில்லை
எந்தச் சாக்கடையாகவும்
இல்லை

நான் மடியவும் இல்லை
உயிர்த்தெழவும் இல்லை

எனைச் சிறுகச் சிறுகக்
கொன்றவர் அனேகர்.

 

கவிதை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

நல்ல வாயும் நாற வாயும்

நல்ல வார்த்தைகள் தேய்ந்துபோன காலத்தில்
கொடும் தேளாய் கொட்டும்
கெட்ட வார்த்தைகள்
வாழ்வூட்டட்டும்.

குத்துக்கு குடை
குடைக்கு கிடை
கிடைக்கு செங்குத்து
செங்குத்துக்கு இடைவெட்டு
இடைவெட்டுக்கு கடைக்கட்டு
கட்டுக்கு கழிசடை
கழிசடைக்கு பத்தினி
பத்தினிக்கு பரத்தை
பரத்தைக்கு பரப்பிரம்மத்தோடு படுத்தல்
பரப்பிரம்மம் லிங்கமயம்
லிங்கம் ஆலிங்கனம்
ஆ எருது
எருது விழுது
விழுது எழுவது
எழுவது திரிவது
திரிவது தொய்வது
தொய்வது காய்வது
காய்வது கனிவது
கனிவது நல்லது
நல்லது நாறுவது / மணப்பது
நாறுவது நாலு வார்த்தை பேசும்.

நல்ல வார்த்தைகள் தேய்ந்துபோன காலத்தில்
கொடும் தேளாய் கொட்டுவது
காய்வது
மிக நல்லது.

கவிதை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கண்டேன் சீதையை

 

பருத்த இடையும் கருத்த மேனியும்
பெருத்த வாளும் கடும் பாறையும்
ஆர்ப்பரித்த அலைகடலும்
கடந்தே கண்டான் கம்பன் கற்பனையில்

தீச்சட்டியும் பாற்குடமும் மண்சோறும் மரப்பசுவும்
மாரடித்த மங்கையரும் ஆழிச் சேய்படையும்
சிகப்பு சைரனும் காக்கிச் சேனையும் காத்த
காணா அருமருந்துத் தருவை தாயை
கண்டிலர் அவர் கவர் னவர்.

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

சாளரம் வழிச் சென்ற முத்தம்

ஒரு முத்தம்
வாழ்வு முழுக்க நினைவிலிருக்கும்
ஒரு முத்தம்
நமக்கு வேண்டும்

ஆன்மாவின் பருண்மையில்
அது தங்கியிருக்க வேண்டும்

சிப்பி பிளந்து ஒளி வீச
ஒரு மழைத் துளிக்கென
காத்துக் கிடக்கிறது ஒரு முத்து

பாலையில் பூத்த மலரொன்று
தவித்துக் காத்துக் கிடக்கிறது
காணா காதலனை

சாளரம் இரவைத் திறக்கிறது
நிலவு அழைக்கிறது
உன் விழியால் என் விழியைத் திறந்துவிடு

மொழிச் சாரலை விலத்தி
காதல் சாளரத்தை
காற்றில் இசைக்கவிடு

நிலவு சாளரத்தின் வழி நுழைவதில்லை
காதலின் ஊற்றாகத்தான்

13.02.2014

பாரசீக சூஃபி கவிஞர் ரூமியின் கவிதையொன்றின் மொழியாக்கத்தை வாசித்த உந்துதலில் எழுதியது.

கவிதை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பிழைத் திருத்தல்

என் பிழை

அவர் பிழை

இவர் பிழை

உவர் பிழை

அது பிழை

இது பிழை

உது பிழை

அன்றும் பிழை

இன்றும் பிழை

என்றும் பிழை

அதிலும் பிழை

இதிலும் பிழை

உதிலும் பிழை

எங்கும் பிழை

எதிலும் பிழை

எப்போதும் பிழை

பிழை பிழை

பிணைந்திருப்பதும் பிழை

பிரிந்திருப்பதும் பிழை

பிழைத்திருப்பதே பிழை

பிழைத்திருப்பது அத்தனையும் பிழை

பிழையே பிழை

01.07.13

கவிதை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பிழையின் பிறப்பு

பொய் பொய் பொய்

நீ சொல்வதெல்லாம் பொய்

கள்ளன் கயவன் கல்நெஞ்சன்

கபட நாடகக் கலையில் கரைகண்டவன்

திருகு விழியன்

திணவெடுத்துத் திசையற்றுத் திரிபவன்

புழு

பூச்சி

புல்

பூண்டு

ஒப்பிலாப் புழுதி நீ

ஒட்டுப் பேன் நீ

புழை விழைந்தொழுகும்

பீளை நீ

பிழையின் பிறப்பு நீ

பிழைத்து போ …

பிணை முறித்து

பிழைத்து

பன்றியாய் பீ தின்று

பாவமும் பரிகசிக்க

பாழாய்

பழங்கிணறாய்

புதைந்து

நெடுங்கிடையாய் ஆழ்வீழ்ந்து

கவிந்திருக்கிறேன்

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

ஒரு மனம் ஓராயிரம் நினைவுகள் ஒரு பார்வை

நினைவுகளைச் சுமந்த மனமொன்று
நிறைவற்று அலைகிறது
காற்றிலே அலைந்த ஒற்றைச் சிறகு
அன்றிது
விருட்சம்
வேரிலே பாய்ந்த சுடுநீர்
கிளைகளில் இலைகளில்
பழுத்த கனிகளில்
மலராத மொட்டுகளில்
அடி முதல் நுனி வரை
உறைந்த பெரும் குருதியும்
அகாலக் கதறல்களும்
அழுகிய உடல்களும்
அணையாத் தனலுமாய்
காற்றில் கனவாய்
பெரும் நினைவாய்
அலைந்து சுழலும்
ஒரு மனம்
ஒராயிரம் நினைவுகள்

ஒரு பார்வை

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »
%d bloggers like this: