செட்டிநாடு ஹோட்டலுக்கும் ”பிராமணாள்” காப்பிக்கும் என்ன வித்தியாசம்?

”அஸ்ஸாம் டீ”, ”டார்ஜீலீங் டீ” என்று தேநீர் கம்பெனிகள் உண்டு.

ஐதராபாத் பிரியாணி, தலப்பாக்கட்டி பிரியாணி என்ற ப்ராண்ட் அந்தஸ்து பெற்றுவிட்ட பிரியாணி கடைகளையும் அறிவோம். ”செட்டிநாடு ஹோட்டல்” கள் பல தலைமுறைகளாகப் பிரசித்தம்.

”ஜெர்மன் டெக்னாலஜி” என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களையும், “கொரியன் மொபைல்ச் செட்”, “சைனா செட்” ப்ராடக்ட்டுகளும் பரிச்சயமானவைதாம்.

”பிராமணாள் காபி” “ஃபில்டர் காபி” “நரசூஸ் காபி” இவற்றையும் பலதசாப்தங்களாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அஸ்ஸாம் டீ, ஐதராபாத் பிரியாணி, செட்டிநாடு மெஸ், ஜெர்மன் டெக்னாலஜி, சைனா மொபைல் போன்று “பிராமணாள் காபி”யும் ஒரு சாதாரண மதிப்பு கொண்ட விளம்பரம், விளம்பரம் செய்யப்படும் பொருள் என்று கருதத்தக்கதுதானா?

அஸ்ஸாம் டீ என்று விளம்பரம் செய்யப்படும்போது, அத்தேயிலைக்கான மதிப்பு எவ்வாறு ஏற்றப்படுகிறது? உயர்ந்த ரகத்திலான தேயிலை விளையும் இடங்களில் ஒன்றான அஸ்ஸாமில் பயிர் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட தேயிலை/தேயிலைத் தூள் என்பதாகவே மதிப்பு ஏற்றப்படுகிறது. உயர்ந்த ரகத்திலான தேயிலை விளைவிக்க அவசியமான தட்ப வெப்ப நிலை நிலவுகிற பகுதிகளில் ஒன்றான அஸ்ஸாமில் விளைவித்த தேயிலை என்பதால் உயர்ந்த தரத்திலான தேயிலை/தேயிலைத் தூள் என்ற மதிப்பு ஏற்றப்படுகிறது.

அதாவது, சிறந்த தேயிலைக்கான உள்ளார்ந்த மதிப்பீடு நுகர்பொருளாக வரும் தேயிலை/தேயிலைத் தூள் மீது ஏற்றப்பட்டு நம்முன் வைக்கப்படுகிறது.

ஐதராபத் பிரியாணியும் அவ்வாறே. ஐதராபாத் நகரில், தனித்துவமானதொரு சுவையுடன் தயாரிக்கப்படும் பிரியாணி வகை என்பதே அப்பெயரின் மூலம் உணர்த்தப்படுகிறது.

Brahmin Coffeeஜெர்மன் டெக்னாலஜியால் தயாரிக்கப்பட்டது என்று ஒரு பொருள் விளம்பரம் செய்யப்படும்போது, தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நுகர்பொருள் என்ற கருத்தே நுகர்வாளர்களுக்கு சொல்லப்படும் செய்தி.

சைனா மொபைல் எனும்போது, தமக்குள்ள ப்ராண்ட் வேல்யூவை சாதகமாகக் கொண்டு, மொபைல் போன்களை மிக அதிக விலைக்கு விற்கும் கம்பெனிகளின் தொழில்நுட்பத்தை ரிவர்ஸ் இஞ்சினியரிங் மூலமாக போலி செய்து, மிகக்குறைந்த விலையில் மொபைல் ஃபோன்களை தயாரித்து விற்கும் மதிப்பு முன்னிலைப்படுகிறது.

அஸ்ஸாம் டீ என்ற விளம்பரம்/நுகர் பொருள் அங்கு தேயிலையைத் தோட்டங்களைத் தொடங்கிய பிரிட்டிஷ்கார்களை அவர்களின் மதிப்பை (வெள்ளைக்கார துரை கொண்டு வந்தது என்ற மதிப்பை) சுட்டுவதில்லை நினைவுபடுத்துவதில்லை. தேயிலைக்குள்ள உள்ளார்ந்த மதிப்பையே முன்னிலைப்படுத்துகிறது.

ஐதராபாத் பிரியாணி என்ற ரெஸ்டாரண்டோ ப்ராண்ட் பெயரோ ஐதராபாத் நகரையோ, அது முஸ்லீம்கள் அதிகம் வாழும் நகரம் என்பதையோ, பிரியாணி என்பது முஸ்லீம்கள் உருவாக்கிய ஒரு உணவுவகை என்பதையோ சுட்டுவதில்லை; குறைந்தது பிரதானமாகச் சுட்டுவதில்லை. ஐதராபத்தில் தயாரிக்கப்படும் தனித்த சுவையுள்ள ஒரு வகையை – சுவையை, அதன் உள்ளார்ந்த பண்பையே முன்னிலைப்படுத்துகிறது.

ஜெர்மன் டெக்னாலஜி, ஜெர்மன் நாட்டின் பெருமையைச் சுட்டுவதற்காக சொல்லப்படுவதில்லை. குறித்த நுகர்பொருளின் உள்ளார்ந்த பண்பாக, ஒரு உயர்ந்த தொழில்நுட்பம் இருக்கிறது என்பதையே குறிப்பால் உணர்த்துகிறது.

சைனா மொபைல் சீனர்களின் பண்புகளை – மோசடித்தனத்தையோ திறமையையோ முன்னிலைப்படுத்துவதில்லை. நீண்ட காலத்திற்கு நீடிக்காத, தரம் குறைந்த, ஆனால், விலை மலிவு என்ற அந்நுகர்வுப் பொருட்களுக்குரிய உள்ளார்ந்த பண்புகளை, மதிப்புகளையே முன்னிலைப்படுத்துகிறது.

செட்டிநாடு ஹோட்டல்கள் செட்டியார்களின் சாதிப் பெருமிதத்தை முன்னிலைப்படுத்துபவை அல்ல. அவர்களுடைய பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் உருவான காரம் மிகுந்த உணவுத் தயாரிப்பு முறையை, ஒரு சுவையை முன்னிலைப்படுத்துகின்றன. செட்டிநாட்டுச் சமையலின் உள்ளார்ந்த பண்பான ஒரு சுவையை முன்னிலைப்படுத்துகின்றன. அதை நுகர்பொருளாகச் சந்தையில் வைத்து அனைத்து சமூகத்தினருக்கும் விற்கத் தலைப்படுகின்றன.

ஆனால், “பிராமணாள் காபி”?

டிகிரி காபி, ஃபில்டர் காபி எனப்படுபவை “பிராமணாளுக்குப்” பிடித்த ஒரு பிரத்யேகமானச் சுவையோடு காபியைப் பருகத் தாயாரிக்கும் முறை. தாராளமாகத் தயாரிக்கட்டும், “பேஷ் பேஷ், நன்னா இருக்கு” என்று நாக்கைத் தட்டிக் கொள்ளட்டும். யாருக்கும் ஆட்சேபணை இருக்கப்போவதில்லை.

ஆனால், அதுவே காபி என்ற பானத்தின் உள்ளார்ந்த பண்போ, மதிப்போ, தரமோ அல்ல. “பிராமணாள் காபி” என்பது காபி என்ற பானத்தின் அல்லது நுகர்பொருளின் உள்ளார்ந்த பண்பு அல்ல.

”பிராமணாள் காபி” என்ற விளம்பரத்தில் ஒரு பண்பு, மதிப்பு, தரம் அந்நுகர்பொருளின் மீது ஏற்றப்படுகிறது. அது, மேலே கண்ட பிற நுகர்பொருட்களுக்கு அவற்றின் உள்ளார்ந்த பண்புகள் மதிப்பாக ஏற்றிவைக்கப்படுவது போன்ற மதிப்பு ஏற்றம் அல்ல.

அவற்றுக்கு நேர்மாறாக, காபி என்ற நுகர்பொருளின்மீது, அதன் உள்ளார்ந்த பண்புக்கு மாறாக, வெளியே இருந்து ஒரு மதிப்பு அதன்மீது திணிக்கப்படுகிறது. அம்மதிப்பு, “பிராமணாள்” என்ற “உயர்” சாதியினரின் மதிப்பு. ”உயர்ந்த” சாதியாரான “பிராமணாள்” பருகும் உயர்தர பானம் என்பதான மதிப்பு.

செட்டிநாட்டு சுவை போல, ஒரு தனிவகையாக (niche product) இதில் மதிப்பு ஏற்றப்படவில்லை. காபியே “பிராமணாள் காபி”யாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த சாதிய ”உயர்” மதிப்பை, சந்தையில் பிறரும் ஏற்றுக்கொள்ளும்படியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.

பண்பாட்டு நுகர்பொருட்கள், niche products எனக் கருதத்தக்கவை, அப்பண்பாட்டு மதிப்புடன் சந்தையில் முன்னிலைப்படுவது இயல்பானது. அக்குறிப்பான மதிப்புகளை முன்னிலைப்படுத்தாவிடில் சந்தையில் அவற்றுக்கான தேவையே இருக்காது. ஆனால், அனைவருக்கும் பொதுவான ஒரு நுகர் பொருளின் மீது ஒரு குறிப்பிட்ட சாதியாரின் “உயர்ந்த” தன்மையை ஏற்றுவது, அச்சாதியாரின் சாதிய மேலாண்மையை ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் திணிக்கும் ஆணவம் மிகுந்த செயல்பாடாகும். சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் மிகுந்த அபாயகரமான செயல்பாடாகும்.

——–

அசைபோட: ஒரு சமூகத்தில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் ஒரு பிரிவினர், தமது மதிப்புகளை ஒட்டுமொத்த சமூகத்திற்கான மதிப்பாக அல்லது பொதுவான மதிப்பாகத் திணிப்பது, சிவில் சமூகத்தை எங்கு கொண்டு நிறுத்தும்? Oppressor X victim உறவுநிலையில் oppressor ஆக இருக்கும் பிரிவினர் victim உளவியலைத் தருவித்துக் கொண்டு சமூகத்தில் செயலாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தில் என்ன விளைவுகளை உருவாக்கும்?

துக்கடா: அந்தக் காலத்து ஹார்லிக்ஸ் விளம்பரம் முதல், இந்தக் காலத்து டாயலெட் க்ளீனர் விளம்பரம் வரை, மாமி பாஷையும், மாமி பாடி லேங்குவேஜும், மாமி உடல்களும்தானே ஐடியலாக, பண்பாட்டு முன்மாதிரியாகத் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு மாமி ஃபெமினிஸ்ட்டாவது இது குறித்து சுயப் பிரக்ஞையோடு விமர்சித்திருக்கிறாரா?

30.07.2016

சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

நாடோடி மன்னனின் தங்க மலை ரகசியம்

கடந்த ஆண்டு, தமிழகம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வரலாறு காணாத இளைஞர் எழுச்சியுடன் புலர்ந்தது. விவசாயிகளின் தணியாத தாகத்துடன் அந்தி மயங்கி அமைதி கண்டது.

இவ்வருடம், மீண்டும் காவிரி உரிமை மீட்பு போராட்டமாகப் புலர்ந்து உச்சி வெய்யிலில் புடம் போட்டுக் கொண்டிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், அனைத்து எதிர்க் கட்சிகளும் மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் கரம் கோர்த்திருக்கின்றன. தொழிற்சங்கங்களும், வணிகர் சங்கங்களும், திரைத் துறையினரும், ஊடகத் துறையினரும், மருந்து விற்பனையாளர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைப் பிரிவினரும், இன்னும் பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்துள்ளனர்.

ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் தேங்கியிருந்த தமிழக அரசியல் களம் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டங்களால் புது ஆற்றலைப் பெற்று பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஆற்றல்கள், அரசியல் களத்தில் புதியன (Inventions/Innovations) பல புனைந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், கடந்த 30 ஆண்டுகால அரசியல் தேக்கத்திற்கு காரணமாக இருந்த ஆற்றல்கள், இப்புதுமைகளை போலச் செய்து (Imitation) கொண்டிருக்கின்றன.

இவ்விரு போக்குகளையும் அடையாளம் கண்டுகொள்வது, தமிழக உரிமை மீட்பிற்கு மிகுந்த அவசியமாகும்.

புது ஆற்றல்கள் – புதுப் பாய்ச்சல்கள் – புதியன புனைதல்

கடந்த ஆண்டின் ஜல்லிக்கட்டு ஆதரவு இளைஞர் எழுச்சி தமிழகத்தின் புதிய ஆற்றல்கள் அனைத்திற்கும் புது வெளிகளை மடை திறந்துவிட்ட ஒன்று எனச் சொல்வது சாலப் பொருந்தும்.

கடலில் கால் நனைக்கச் செல்லும் உல்லாச வெளியாகத் திகழ்ந்த கடற்கரையையும், காற்று வாங்க காலாற நடக்கச் செல்லும் பூங்காக்களையும் அரசியல் போராட்ட வெளியாக மாற்றிக் காட்டியது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர் எழுச்சி. அடையாளச் சடங்காக இருந்த இரயில் மறியல் போராட்டங்களை உயிரைத் துச்சமென மதித்து எதிர்கொண்டு மறிக்கும் வீர விளையாட்டாக மாற்றிக் காட்டியது.

இதன் தொடர்ச்சியாக, உரிமைக் கோரிக்கைகளை அடையாளக் கோரிக்கைகளாக வைக்க “அகலத் திறந்து” வைக்கப்பட்டிருக்கும் “ஜந்தர் மந்தர்” மைதானத்தை, அரசை அதிரவைக்கும் அரங்காக மாற்றிக் காட்டினர் தமிழக விவசாயிகள்.

சிறு நீரைக் குடித்தும், செத்த எலிகளைக் கடித்தும், நிர்வாணக் கோலத்தைத் தரித்தும் விவசாயிகளின் துயரத்தை உலகம் உற்று நோக்க வைத்தனர். இந்தியத் துணைக்கண்டமெங்கும் தற்கொலையில் உயிரை மாய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் அனைவருக்கும் புது வழியைக் காட்டியது தமிழக விவசாயிகளின் தில்லி முற்றுகை.

இவை தமிழகம் கண்டிராத புதியன புனைதல். புதுப் பாய்ச்சல்கள்.

தற்போதைய காவிரி உரிமை மீட்பு – ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டங்களிலும் இப்புதிய ஆற்றல்களின் புதியன புனைதல், புதுப் பாய்ச்சல்கள் தொய்வு காணாமல் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

09.04.2018 அன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்து மக்கள், “மக்கள் நாங்கள் வந்திருக்கிறோம்! நீங்கள் வெளியே வாங்க!” என்று கோஷமிட்டு தமது கோரிக்கைகளை கேட்க ஆட்சியரை அலுவலகத்தை விட்டு வெளியே வரவழைத்தது இதுவரை சாத்தியமாகாத புதுமை.

ஐ பி எல் போட்டிகளுக்கு எதிராக தமிழ் அமைப்புகளும், இரு பிரதானக் கட்சிகளின் செல்வாக்கிலிருந்தும் விடுபட்ட கலைஞர்களின் வசம் வந்திருக்கும் திரைத்துறை அமைப்பினரும் ஒருமித்த குரலில் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டிருப்பதும் தமிழகம் கண்டிராத புதுமைகள்.

பழம் ஆற்றல்கள் – தேக்கங்கள் – போலச் செய்தல் 

இப்புதிய ஆற்றல்களின் புத்தெழுச்சியைக் கண்டு, கால் நூற்றாண்டுகால உறக்கத்திலிருந்து விழித்து “யானை மேல் அம்பாரி ஏறி” அசைந்து ஆடி உலாவரத் துவங்கியிருக்கின்றன பழம் ஆற்றல்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்னர், கொள்கைத் திருவோடு ஏந்தி மக்கள் மன்றத்தின் முன் நின்ற இவ்வாற்றல்களின் வானளாவிய கொள்கைகள் தங்கத் தகடுகளின் முன் தேய்ந்து, புதியன புனையும் ஆற்றல் இழந்து, வீச்சிழந்து, தொய்ந்து, தேய்ந்து கிடக்கின்றன.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின்போது, சீறி வந்த இரயில் முன்பாக, மதுரை மாநகர் இளைஞர்கள், உயிரைத் துச்சமென மதித்து பாய்ந்ததைக் கண்டு அரண்டவர்கள், இப்போது இரயில் நிலையங்களில் மூச்சிரைத்து நிற்கும் எஞ்சின்களின் முன்பாக உரக்க கோஷமிடுகின்றனர். 04.04.2018 அன்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய இரயில் மறியல் போராட்டங்களில் இது அரங்கேறியது.

தில்லியை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் நிஜமான செத்த எலிகளை வாயில் வைத்துக் கடித்து தமது வாழ்வின் நிலையை உலகுக்கு உணர்த்த முற்பட்டனர். 04.04.2018 அன்று கோவையில் சாலை மறியல் நடத்திய திமுகவினரோ பொம்மை எலிகளைக் கடித்து, தம் மீது கவனத்தைக் குவிக்கின்றனர்.

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு கருப்பு கொடி காட்டத் துணிவது ஏற்புடையதே என்றாலும் சலித்து தேய்ந்து போனதொரு வடிவம். கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு அதிலும் புதுமை புனைந்துள்ளனர் புதிய ஆற்றல்கள். மாட்டு வண்டியில் ஏறி ஊர்வலம் வருவது, மறைந்த முதல்வர் எம் ஜி ஆரின் “நாடோடி மன்னன்” படப் பாடலை போலச் செய்தல்.

இப்பழம் ஆற்றல்கள், புதிய ஆற்றல்கள் புனைந்த புதிய வடிவங்களை போலச் செய்வதும் பழையனவற்றையே திரும்பத் திரும்பச் செய்வதும் ஏன்?

ஐ பி எல் போட்டிகளுக்கான எதிர்ப்பில் மென்மை காட்டுவது, இதற்கான காரணத்தை வெள்ளிடை மலையாகக் காட்டிவிடுகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி திமுக குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறனுக்குச் சொந்தமானது என்பது ஒன்றும் “தங்க மலை ரகசியம்” அன்று.

சுரங்கம் தோண்டத் “தங்க மலைகள்” கைவசம் இருக்கையில் புதியன புனைதல் எங்ஙனம் எழும்! புதியனவற்றை போலச் செய்தலும் பழைய “நாடோடி மன்னன்” பாடலை மீண்டும் போலச் செய்தலுமே தொடரும்.

புதியன புனைதலும் போலச் செய்தலும்

எந்தவொரு சமூகத்திலும் மாற்றத்தின் உந்துசக்தியாக இருப்பது புதியன புனைதலே (Invention/Innovation).

சமூகத்தில் முன்னேறிய நிலையில் இருப்போரே புதியனவற்றைப் புனைகின்றனர். ஜனநாயக நெறிகள் வலுப்பட்டிருக்கும் சமூகங்களில், சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருப்போருக்கும் புதியன புனையும் சாதகமான நிலைமைகள் கூடுகின்றன. முன்னேறிய நிலைமைகளில் இருப்போர் அப்புதியனவற்றை மௌனமாக (சங்கடத்துடன்) ஏற்றுக்கொண்டு, போலச் செய்வதும் (Imitation) நிகழ்கிறது.

புனையப்பட்ட புதியன போலச் செய்தல் மூலம் சமூகம் முழுக்கப் பரவி நிலைபெறுகிறது.

புதியன புனைதல் புதிய ஆற்றல்களால் முன்னெடுக்கப்பட்டு, போலச் செய்தல் மூலமாக சமூகம் முழுக்கப் பரவி நிலைபெறும்போது, சமூகம் புதிய நிலைகளுக்குச் செல்கிறது.

பழைய ஆற்றல்கள் புதியனவற்றை தம் வயப்படுத்திவிடும்போது, சமூகம் பழைய நிலைமைகளில் தேங்கிவிடுகிறது.

இந்த எச்சரிக்கை தமிழ் சமூகத்திற்கு இன்று மிக மிக அவசியமானது.

நன்றி: தமிழ் இந்து

தொடர்புடைய கட்டுரைகள்:

தைப் புரட்சி – தொடரும் அதிர்வலைகள்

தைப் புரட்சி: இனக்குழு குறியீட்டு அடையாளத்தின் எழுச்சி 

 

 

தைப் புரட்சி – தொடரும் அதிர்வலைகள்

மனித மிருகம் என்பது என்ன? இக்கேள்விக்குப் பல அறிஞர்கள் பலவிதமான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். சிந்திக்கும் மிருகம், அரசியல் மிருகம், உழைக்கும் மிருகம், சிரிக்கும் மிருகம், விளையாடும் மிருகம், பழக்க மிருகம் போன்ற விளக்கங்கள் இவற்றில் அதிகக் கவனம் பெற்றவை.

அதிகக் கவனம் பெறாத விளக்கம் ஒன்றும் உண்டு. அது “போலச் செய்யும் மிருகம்“. உண்மையைச் சொல்வதென்றால் “மனிதன் ஒரு போலச் செய்யும் மிருகம்“ என்ற விளக்கத்தை எந்த அறிஞரும் இதுவரை அளித்திருக்கவில்லை.

ஆனால், மானுடச் சமூகத்தின் அடிப்படையான பண்பாக “போலச் செய்தல்” (imitation) இருக்கிறது என்பதை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகழ் பெற்று விளங்கியவரான ஃப்ரெஞ்சு சமூகவியலாளர் கப்ரியேல் டார்ட் என்பார் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு, கொலம்பியா பல்கலைக் கழகத்தில், இந்தியாவில் சாதிகளின் தோற்றம் குறித்து ஆற்றிய புகழ் பெற்ற ஆய்வுரையில் மாமேதை அம்பேத்கர், கப்ரியல் டார்டின் இக்கருத்தாக்கதைக் கையாண்டு, சாதிகள் இந்தியா முழுக்கப் பரவியிருப்பதற்கான காரணத்தை விளக்கியிருப்பார் என்பது சிறப்புக் கவனத்திற்குரியது.

அம்பேத்கரின் ஆய்வுரையில் அதிகக் கவனம் பெறத் தவறியக் கருத்தாக்கமும் அதுவே. போலவே, கப்ரியல் டார்டின் கருத்தாக்கமும் சமூகவியல் ஆய்வுப் புலத்தின் கவனத்தைப் பெறத் தவறியது ஒரு துரதிர்ஷ்டம். என்றாலும், அண்மைக் காலங்களில் கப்ரியல் டார்டின் கருத்தாக்கங்கள் மீளவும் கவனத்தைப் பெறத் துவங்கியிருக்கின்றன.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக அவர் முன்வைத்த “போலச் செய்தல்“ குறித்த செறிவு மிக்க கருத்தாக்கங்கள் தற்கால அரசியல் நிகழ்வுகளை கூர்மையாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன என்பதே அவற்றின் சிறப்பாகும்.

கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டில் எழுச்சி பெற்றிருக்கும் காவிரி நதி நீர் உரிமைக்கான போராட்டங்களையும் இப்”போலச் செய்தல்“ நோக்கில் காணலாம்.

இவற்றில், எனது கவனத்தை ஈர்த்தவை இரண்டு. முதலாவது, 04.04.2018 அன்று கோவையில் திமுகவினர் வாயில் எலிப் பொம்மைகளை வைத்து அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டது.

இரண்டாவது, அதே நாளன்று, இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியினர், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நிகழ்த்திய இரயில் மறியல் போராட்டங்கள்.

கோவை திமுக வினர் வாயில் எலிப் பொம்மைகளை வைத்து நிகழ்த்திய மறியல் தில்லியில் தமிழக விவசாயிகள் நிஜமான செத்த எலிகளை வாயில் வைத்துக் கடித்து நிகழ்த்திய போராட்ட நிகழ்வின் “போலச் செய்தல்“.

இரயில் மறியல் போராட்டங்களில், இரயில் நிறுத்தங்களில் வேகம் குறைந்து வந்து கொண்டிருந்த இரயில்களுக்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியினர் பாய்ந்து ஓடியதை தொலைக்காட்சி செய்திகளில் தமிழக மக்கள் கண்ணுற்றிருப்பார்கள்.

இது, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கடந்த வருடம் தமிழகத்தில் வெடித்த இளைஞர்களின் எழுச்சியின்போது, மதுரையில் சில துணிச்சல் மிக்க இளைஞர்கள் மிகவேகமாக வந்துகொண்டிருந்த இரயிலைத் தம் உயிரைப் பொருட்படுத்தாது எதிர் சென்று மறித்து நிற்க வைத்த போராட்டத்தின் “போலச் செய்தல்“.

ஆனால், சில வித்தியாசங்களும் உண்டு.

கடந்த வருடம் மதுரையில் மறிக்கப்பட்டது மிக வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு இரயில். மறித்தது, உயிரைப் பொருட்படுத்தாத இளைஞர்கள்.

இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் மறித்தவை இரயில் நிலையங்களுக்கு வேகம் குறைந்து வந்துகொண்டிருந்த, அல்லது இரயில் நிலையங்களில் இருந்து மெதுவாகப் புறப்பட்டுக் கொண்டிருந்த இரயில்களை. மறித்தோர் பெரும்பாலும் தலை நரைத்தவர்களாக இருந்ததைக் காணமுடிந்தது.

கடந்த வருடம் தில்லியில் விவசாயிகள் வாயில் வைத்தது நிஜமான செத்த எலிகள்.

இப்போது கோவை திமுகவினர் வாயில் வைத்தது பொம்மை எலிகள்.

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, போலச் செய்தலில் சில விதிகள் அமைந்துவிடுவதுண்டு. “போலச் செய்தலின் விதிகள்“ (The Laws of Imitation) என்ற தமது புகழ்பெற்ற நூலில் கப்ரியல் டார்ட் அவற்றைத் தொகுக்க முற்பட்டிருக்கிறார்.

அவற்றில் சில:

  1. சமூக மாற்றத்தின் உந்துவிசையாக இருப்பது புதியது புனைதல் (Invention).
  2. புனையப்பட்ட புதியது, போலச் செய்தல் (Imitation) வழியாக சமூகம் முழுக்கப் பரவுகிறது.
  3. புதியது புனைதல் சமூகத்தில் முன்னிலையில் இருப்பவர்களிடத்தில் இருந்து தொடங்கி, போலச் செய்தலாக சமூகத்தில் பின் தங்கியிருப்பவர்களிடத்தில் சென்று சேர்கிறது. ஜனநாயக நெறிகள் மேலோங்கியிருக்கும் சமூகங்களில், புதியது புனைதல் பின் தங்கியிருப்பவர்களிடத்தில் இருந்து தொடங்கி முன்னிலையில் இருப்பவர்களால் போலச் செய்தலாகப் பரவுவதற்கான நிலைமைகள் அதிகரிக்கின்றன.
  4. போலச் செய்தல் காலம் மற்றும் வெளி ஆகிய இருநிலைகளில் அருகில் இருப்பவர்களிடையே கூடுதலாக இருக்கும். இடைவெளி கூடக்கூட போலச் செய்தலின் தன்மை அல்லது வீர்யம் குறையும். ஒரு குளத்தில் கல் எறிந்தால் தோன்றும் அதிர்வலைகள் போல புதியது புனைதலால் தோன்றும் போலச் செய்தலின் பரவல் இருக்கும்.
  5. ஒரு சமூகத்தில் பல புதியன புனைதல் தோன்றுகின்றன. சில நிலைத்து போலச் செய்தல் மூலம் சமூகம் முழுக்கப் பரவுகின்றன. பல புதியன புனைதல் தோன்றிய சுவடே தெரியாமல் மறைந்துவிடுகின்றன.

சில புதியன புனைதல் நிலைத்து நிற்பதும், பல மறைந்துவிடுவதும் ஏன் என்ற கேள்வியின் ஆய்வாகத்தான் கப்ரியல் டார்டின் நூல் விரிகிறது. இங்கு விரித்து எழுதுவது சாத்தியமன்று. நோக்கமும் அன்று.

கவனத்திற்கு உரிய புள்ளிகளை மட்டும் ஒப்புநோக்கி குறித்துக்கொள்வோம்.

1000 மைல்கள் தொலைவுக்கு அப்பால் தமிழக விவசாயிகள் நிகழ்த்திய போராட்டம் ஒரு வருடம் கழித்து கோவை திமுகவினரால் போலச் செய்யப்படும்போது, நிஜ எலி பொம்மை எலியாக மாறிவிடுகிறது.

மிக வேகமாக வந்து கொண்டிருந்த இரயிலை உயிரையும் பொருட்படுத்தாது மறித்த இளைஞர்களின் போராட்டம் ஒரு வருடம் கழித்து போலச் செய்யப்படும்போது, இரயில்களின் வேகம் குறைந்துவிடுகிறது. மறிப்பவர்களின் வயதும் கூடிவிடுகிறது.

காலம் வெளி இவற்றுக்கிடையிலான தொலைவு கூடும்போது போலச் செய்தலின் வீர்யம் குறைந்துவிடுகிறது. குளத்தில் எறியப்பட்ட கல்லால் தோன்றும் அதிர்வலைகள் குளத்தின் கரையில் வேகம் குறைந்திருப்பதைப் போல.

சமூகத்தில் பொருட்படுத்தப்படாத பிரிவினராகக் கருதப்படும் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் புனைந்த புதியனவற்றை, சமூகத்தில் மிகவும் முன்னேறிய பிரிவினராக, முற்போக்கானவர்களாகக் கருதப்படும் இரண்டு கட்சியினர் (திமுக, கம்யூனிஸ்ட்டுகள்) போலச் செய்கின்றனர். வழி காட்ட வேண்டியவர்கள் காட்டப்பட்ட வழியில் பின் தொடர்கின்றனர்.

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஜனநாயக நெறிகள் நிலைபெற்றிருப்பதற்கான சான்றுகளில் இது ஒன்று. அதே சமயம், கருத்தாக்கங்களின் அளவில் முன்னேறிய பிரிவினராகக் கருதப்படுவோரின் தேக்கத்தையும் சுட்டுவது.

தமிழக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் எறிந்த கல்லின் அதிர்வலைகள், புனைந்த புதிய போராட்ட முறைகள் நிலைபெற்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதே இதில் மகிழ்ச்சிக்குரியது.

நன்றி: தமிழ் இந்து 

தொடர்புடைய கட்டுரை: தைப் புரட்சி: இனக்குழு குறியீட்டு அடையாளத்தின் எழுச்சி

மலங்கழித்தலும் குப்பை கொட்டுதலும் சமூக நோய்க்குறிகளும் ஒரு அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பும்

ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வயதில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் எங்கள் வீட்டாருக்கு நெருங்கிய பழக்கம். அக்காலத்திலேயே அவர்கள் ட்ராவல் ஏஜன்ஸி நடத்தி வந்தார்கள். மலேசிய போக்குவரத்து அவர்களுக்கு சர்வசகஜம்.
சிறுவர்கள் நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கையில் யாராவது “காற்று பிரித்தால்” மற்றவர்கள் சிரிப்பது வழக்கம். அப்போது அவர்கள் வீட்டுச் சிறுவர்கள் “மலேசியாவில எல்லாம் பொது இடத்தில் ஏப்பம் விட்டால்தான் சிரிப்பார்கள்,” என்று பிரஸ்தாபிப்பார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
ஒரு மனிதனின் ஆரோக்கியம் அவனது கழிவுப் பழக்கத்தில்/கழிவுப் போக்கில் சட்டென்று தெளிவாகிவிடும் என்பது வெள்ளிடை. மலச்சிக்கல் என்றாலும் பேதி என்றாலும் வாந்தி என்றாலும் அதிக ஏப்பம் என்றாலும் உடல் ஆரோக்கியக் குறைவுதான். குறிப்பாக செரிமானக் கோளாறு என்பது வெள்ளிடை.
தனி மனிதர்களின் கழிவுப் பழக்கம்/போக்கு அவர்களது உடல் ஆரோக்கியதைச் சுட்டுவதைப் போலவே, ஒரு சமூகத்தின் கழிவுப் பழக்கங்களும்/ போக்குகளும் அச்சமூகத்தின் ஆரோக்கியத்தைச் சுட்டும் குறியீடுகள்தாம்.
அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாக்கமாக வெளிவந்த நூலை ஒரு வருடத்திற்கு முன்பு வாசித்துக்கொண்டிருக்கையில் இது தொடர்பான விடயம் ஒன்றை கவனிக்க நேர்ந்தது.
வயல் வெளி வரப்புகளில்/காடுகளில் அல்லது எந்தவொரு பொது இடத்திலும் மலங்கழிப்போரைக் கண்டால் அவர்களைப் பிடித்து வந்து கொடுப்போருக்கு சன்மானமும், அவ்வாறு மலம் கழித்தோருக்கு அபராதமும் விதித்து புதுவையின் ஃப்ரெஞ்சு கவர்னர் பிறப்பித்த உத்தரவு ஒன்றைப் பற்றி அனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்புகள் சிலவற்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஊரெல்லாம் அந்த உத்தரவைப் பற்றி அங்கலாய்ப்பாக இருந்ததையும், சிலர் வரப்புகளில் மலம் கழித்தோரைப் பிடித்துக் கொடுத்து சன்மானம் வாங்கிச் சென்றதையும் பதிவு செய்திருக்கிறார்.
இதை வாசித்த உடன் History of Shit என்ற நூலில் வாசித்தவொரு விடயம் சட்டென்று நினைவிற்கு வந்தது. கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் – 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் – பாரிஸ் நகரில், வீட்டுக் குப்பைகளை வீதியில் கொட்டுவோருக்கும் பொது இடங்களில் மலம் கழிப்போருக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டதையும், தற்போது மத்திய வர்க்கத்தினர் மோகிக்கும் western toilet மாதிரிகள் வடிவமைக்கப்பட்டதையும் அந்நூலின் ஒரு அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.
கழிக்கும் பழக்கத்தை பொது இடங்களில் இருந்து அகற்றி வீட்டிற்குள் தனியிடத்திற்கும் தனிமைக்கும் தள்ளிய இந்நகர்வு, மேற்கத்திய பண்பாட்டுச் சகிப்பின்மையின் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்று. இதன் மற்றொரு முக்கிய அம்சம், கண்காணிப்பை சுய தணிக்கையாக, சுய வெளிப்பாட்டுத் தணிக்கையாக ஆக்கிவிடுவது.
சிறுவனாக இருக்கையில் என் தாய்மாமன் ஒருவர், அவர் சிறுவனாக இருக்கையில் பொதுவெளியில் மலங்கழிக்கச் செல்லும் பழக்கம் பற்றி சொன்ன சுவாரசியமானதொரு விஷயம் இவ்விடத்தில் நினைவிற்கு வருகிறது.
மலம் கழிக்க புதர் பகுதிகளுக்கு – இது சென்னையில் – செல்லும் சிறுவர்கள், உட்காருவதற்கு முன்பக, “ஊசியா? நூலா?” என்று கேட்பார்களாம். ஊசி என்றால், அருகருகாக அமர்வார்களாம். நூல் என்றால் சற்றுத் தள்ளி அமர்வார்களாம். மலம் கழிப்பதிலும் விளையாட்டும் பேச்சும் அரட்டையும் இருந்த காலமது போலிருக்கிறது.
அனந்தரங்கம் பிள்ளை குறித்திருக்கும் விடயத்திற்குத் திரும்புவோம். ஃப்ரான்சில் நிகழ்ந்துகொண்டிருந்த பண்பாட்டு மாற்றத்தை – கழிக்கும் பழக்கத்தை பொதுவெளிகளில் இருந்து தனிவெளிக்கு நகர்த்திய மாற்றத்தை – அதே காலப்பகுதியில், தமது ஆளுகைக்கு உட்பட்டிருந்த புதுவையிலும் திணிக்க முற்பட்டிருக்கிறார் ஃப்ரெஞ்சு கவர்னர் என்பது புலனாகிறது. பொது வெளியை கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் உரியதாக மாற்றும் ஐரோப்பிய பார்வை இங்கும் விரிந்திருக்கிறது.
பொது வெளியில் கண்காணிப்பையும் தனி வெளியில் சுய தணிக்கையையும் அரசாளுகை நுட்பங்களாக ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தினர் தமது நாடுகளில் உருவாக்கிக் கொண்டிருந்த அதே காலத்தில், அவற்றை தமது ஆளுகைக்கு உட்பட்ட காலனியப் பிரதேசங்களில் திணித்திருக்கிறார்கள் என்பதற்கான பல எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று.

மலங்கழிப்பதை தனி வெளிக்கு ஒதுக்கியதிலும் ஐரோப்பிய அறிவு தனி மனித உடலுக்கு கேட்டையே உருவாக்கியிருக்கிறது. தற்போதைய மோஸ்தராக இருக்கும் western toilet உடலுக்கு கேட்டைத் தரும் வடிவம் என்பதை உடல்நல மருத்துவர்களில் சொற்ப எண்ணிக்கையினர் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

 

 

மலம் கழிக்க குத்துக்காலிட்டு உட்காரும் வழக்கமே ஆரோக்கியமானது. அந்நிலையில் அமர்ந்து மலம் கழிக்கும்போது ஏற்படும் மேல்நோக்கிய சிறு அழுத்தத்தால் குடலில் இருக்கும் மலம் முற்றாக வெளியேறுகிறது. நாற்காலியில் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் western toilet ல் அமர்ந்து மலங்கழிக்கையில், மலம் வெளியேறுவதற்கு அவசியமான மேல் நோக்கிய சிறு அழுத்தம் உருவாவதில்லை. ஆகையால், குடலில் மலக் கழிவுகள்/கழிவுத் துணுக்குகள் தேங்குவதும், நாட்பட்ட இக்கழிவுத் துணுக்குகளினால் அவசியமற்ற நோய்கள் உருவாவதையும் மருத்துவ உலகம் புரிந்துகொள்ளத் தலைப்பட்டிருக்கிறது.

 

உடலுக்கு கேட்டை விளைவிக்கும் இவ்வடிவத்தை ஐரோப்பிய அறிவு ஏன் உருவாக்கியது?

 

எல்லாம் வசதிக்காகத்தான். குத்துக்காலிட்டு உட்காருவதில் உள்ள சிரமத்தைக்கூடக் குறைத்து, வசதியாக – சாவகாசமாக உட்கார்ந்து மலங்கழிக்க ஏற்பாடு செய்து, மானுடர்களின் வாழ்வை இலகுவாக்கத்தான். இதுவரை கண்டிராத பொன்னுலகத்திற்குள் மானுட குலத்தைத் தள்ளத்தான்.

 

ஆனால், இம்மேற்கத்திய அறிவு உருவாக்கியிருப்பதோ நரகங்களான நகரங்களை.

 

காடுகளிலும் கம்மாய் கரைகளிகளிலும் வரப்புகளிலும் இயற்கையின் மறுசுழற்சிக்கு ஆட்பட்டிருக்க வேண்டிய மனித மலத்தை, பாதாளச் சாக்கடைகளில் தேங்கச் செய்து பெரும் நச்சுக் கழிவை (toxic waste) உருவாக்கியருப்பதும், நீர் நிலைகளிலும் ஆறுகளிலும் கடலிலும் கொண்டு தள்ளி இயற்கை நிலைகளை மாசுபடுத்தியிருப்பதும்தான் மேற்கத்திய நாகரீகமும் அறிவும் நகர மாதிரிகளும் நமக்கு அளித்திருக்கும் நரகங்கள்.

 

மேற்கத்திய நரக நகர மாதிரி வர்ணாஸ்ர “தர்மமும்” சாதி வெறியும் தழைத்தோங்கும் ஒரு சமூகத்தில் திணிக்கப்பட்டதன் விளைவு, நச்சுக் கழிவாகத் தேங்கிய மனித மலத்தை, மனிதர்களைக் கொண்டே அப்புறப்படுத்தச் செய்யும் குரூரம். சக மனிதர்கள் இக்குரூரத்திற்கு ஆட்படுவதைக் கண்டும் காணாமல் செல்லும் பெரும்பான்மைச் சமூகத்தின் குரூரம்.
இக்குரூரத்தின் மற்றுமொரு வெளிப்பாடுதான் “தீபாவளி” என்ற பெயரில் பட்டாசுகளைக் கொளுத்தி சுவாசிக்கும் காற்றையும் மாசுபடுத்தி, அவசியமற்ற பெரும் நச்சுக் குப்பையைக் கழித்து “கொண்டாடும்” குரூரம்.

 

ஒரு தனிமனிதர் கழிக்கும் மலம்/குப்பை அவரது உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது நோயுற்றிருக்கிறதா என்பதை வெள்ளிடையாகச் சுட்டும் குறியீடாக இருப்பதைப் போலவே, ஒரு சமூகம் எத்தகைய குப்பையைக் கழிக்கிறது, அதை எவ்வளவு அக்கறையாக/அசட்டையாகக் கழித்துத் தள்ளுகிறது என்பவை அச்சமூகம் ஆரோக்கியமானதா அல்லது நோய்க்கூறு பீடித்த ஒன்றா என்பதை சுட்டும் குறியீடுகள்.

 

தீபாவாளி என்ற பெயரில் தனிப்பட்ட உடல் நலம், பிறர் நலம், சுற்றுச் சூழல், தம் குழந்தைகளின் நலம், கழித்துத் தள்ளிய குப்பையை யார் அகற்றுவார் – அவர் படும் துன்பம் என்ன என்பவை குறித்தெல்லாம் கிஞ்சித்தும் அக்கறையற்று பெரும் அளவில் கழித்துத் தள்ளும் நச்சுக் கழிவு, இச்சமூகம் நாட்பட்ட நோய் பீடித்த குரூரமானதொரு சமூகம் என்பதை பட்டவர்த்தனமாக காட்டிக் கொண்டிருக்கிறது.

 

அன்பின் – கருணையின் கண்களை அகலத் திறந்து காண்போர் எஞ்சி இருக்கின்றார்களா?

சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

ஆயிரம் லைக்குகள் வாங்கிய அபூர்வ விலாசினியும் மாடு மேய்த்துப் படித்தவர் கிரிமினலாக்கப்பட்ட கதையும்

“ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலையாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர் அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டி ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையையும் கும்பாபிஷேகமும் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வண்டியையும் மேல் வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக,” போலீசார் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து 30 ரூபாய் அபராதமும் விதித்தார்கள் என்று 13.03.1927 தேதியிட்ட ”குடி அரசு” துணைத் தலையங்கத்தில் எழுதுகிறார் பெரியார். விஷயம் அதோடு முடிந்துவிடாமல் உயர்நீதிமன்றம் வரை மேல்முறையீட்டிற்குச் சென்று தண்டனை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

90 ஆண்டுகள் கழித்து காட்சிகள் மாறியிருக்கின்றன. கோலம் மாறவில்லை. பைசைக்கிள் டாக்சியாக மாறியிருக்கிறது. அக்கிரஹாரத்தை சேர்ந்தவர்களே பிரச்சினைக்கு மூலகாரணமாக இன்றுவரையிலும் தொடர்ந்து இருக்கிறார்கள்.

பிரச்சினை பொது வெளியில் மையம் கொண்டிருக்கிறது.

அனைத்துச் சமூகப் பிரிவினருக்கும் சமமான உரிமையுள்ள, அனைவரும் சமமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ள அவசியச் சேவைகள், கேளிக்கைச் சேவைகள் அவற்றை அளிக்கும் மையங்கள் அனைத்தையும் பொது வெளி என்கிறோம். அரசு அலுவலகங்கள், பயணச் சேவைகள் (இரயில், பேருந்து, பிறத் தனியார் வாகன சேவைகள்), தனியார் சேவை நிறுவனங்கள், (வங்கி, காப்பீடு, தொழில்துறை, இன்னபிற), கேளிக்கை வெளிகளான, சினிமா தியேட்டர்கள், கலையரங்கங்கள், பிற பொழுதுபோக்கு வெளிகள் இவை அனைத்திலும் அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும், அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

இத்தகைய பொது வெளி நவீன ஜனநாயக அரசமைப்பின் நிர்வாக அலகுகளின் விரிவாக்கத்துடன் இணைந்தே படிப்படியாக உருவாகிறது. ஜனநாயக அரசின் அடிப்படைகளில் ஒன்றான வாக்குரிமை, வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையாக விரிவடைவதோடு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துப் பொது வெளிகளிலும் பொதுவான உரிமை உண்டு என்ற கருத்தும் நடைமுறையும் வலுவாக ஊன்றிவிடுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் இந்தப் பொது வெளி உருவான அரசியல் வரலாற்றை ஹேபர்மாஸ், தாமஸ் பிரிட்ஜஸ் போன்ற ஆய்வாளர்கள் விரிவாக விளக்கி எழுதியுள்ளனர்.

ஜனநாயக அரசமைப்போடு சேர்ந்து உருவாகும் இத்தகைய பொது வெளியும், பொது உரிமைகளும், சாதிய உயர்வு – தாழ்வு கற்பிக்கும் சமூகமும் ஆணை அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்த அரசமைப்பும் / ஆட்சிமுறையும் வழங்கும் வரையறுக்கப்பட்ட குறுகிய உரிமைகளுக்கு மாறாக, பரந்த அளவிலான உரிமைகளை, மிகப் பரந்த அளவிலான மக்களுக்குப் பெயரளவிலாவது அளிப்பவை. ஒப்பீட்டளவில் மிகுந்த ஜனநாயகப் பூர்வமானவை.

இத்தகைய பொது வெளியும் பொது உரிமைகளும் நமது சூழலில் ஆங்கிலேயர் ஆட்சியின்போதே படிப்படியாக உருவானவை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, தமிழகத்தில் அனைத்துப் பிரிவினரும் சரிசமமாக சந்தித்துக் கொள்ளக்கூடிய பொது வெளி என்பதே இருக்கவில்லை. கோயில், அதை ஒட்டி அமைந்த அக்கிரஹாரம், அதற்குப் புறத்தே இருந்த ஊர், ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சேரி என்றே வெளிகள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன.

ஆங்கிலேயர் ஆட்சி, அதன் நிர்வாகத் தேவைகளுக்காக அரசு நிர்வாக அலுவலகங்களை நிறுவ முற்பட்டபோது, ஆங்கிலேயக் கல்வி பெற்று அரசாங்க அலுவலர்களாக பொறுப்பேற்கும் வசதியும் வாய்ப்பும் பெற்றிருந்த “உயர்ந்த” சாதிப் பிரிவினர் அந்த அலுவலகங்கள் தாம் வசிக்கும் இடங்களில் இருக்கும்படியாகவே பார்த்துக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, தபால் அலுவலகங்கள் அக்கிரஹாரங்களிலேயே திறக்கப்பட்டன. ஊரில் வசதி படைத்த பிற ஆதிக்க சாதியினரும் சேர்த்து செலுத்திய வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகளும்கூட அக்கிரஹாரத்திலேயே போடப்பட்டன. இவற்றில் நடக்கும் உரிமை வரி செலுத்திய வசதி படைத்தப் பிற ஆதிக்க சாதியினருக்கும்கூட மறுக்கப்பட்டிருந்தது.

சுருங்கக் கூறினால், அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானவையாக இருக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்கூட ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சேவையை வழங்கக்கூடிய தனி உரிமையாகவே நமது சூழலில் உருப்பெற்றன. அத்தகைய தனி உரிமைகளை எதிர்த்து பொது உரிமைக்காகத் தலித்துகள் மேற்கொண்ட போராட்டங்களை  முனைவர் கோ. ரகுபதி “தலித் பொதுவுரிமைப் போராட்டம்” என்ற தமது நூலில் மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீ சங்கரனுக்கு நிகழ்ந்தது போன்றதொரு நிகழ்வை முனைவர் கோ. ரகுபதியும் தமது நூலில் குறித்திருக்கிறார். 1879 ஆம் ஆண்டு, தீயர் சாதியைச் சேர்ந்த துணை நீதிபதி ஒருவர், கல்பாத்தி அக்கிரஹாரம் வழியாகக் குதிரை வண்டியில் சென்றபோது, அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத கல்பாத்தி அக்கிரஹாரத்து பிராமணர்கள் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். அதற்காக, பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையும்கூட நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

அரசு / பொது ஊழியர்கள், அனைவருக்குமான பொது வெளியில் தமது பொது வேலையை செய்வது கூட, அவர்களுக்குக் ”கீழான” சாதியை சேர்ந்தவர்களாக இருந்தால், தமது தனி உரிமையில் தலையிடுவதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இந்த இரண்டு வரலாற்றுச் சம்பவங்களும் காட்டுகின்றன.

1879 ஆம் ஆண்டிலும், 1927 ஆம் ஆண்டிலும் ஆங்கிலேய அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஜனநாயக ஆட்சியமைப்பின் நிர்வாக அலகுகள் முழுமையாக உருப்பெற்றிருக்கவில்லை. 1950 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டதும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டதும், நவீன ஜனநாயக ஆட்சி அமைப்பின் நிர்வாக அலகுகள் விரிவாக்கப்பட்டதும், பொது வெளியையும் பொது அலுவலகங்களையும் அவற்றுக்குள் எல்லாச் சமூகப் பிரிவினரும் புழங்குவதற்கான பொது உரிமையையும் ஒரு காற்றாற்று வெள்ளம் போலத் திறந்துவிட்டுவிட்டன.

இப்புதிய சூழலில், பொது வெளியையும் பொது உரிமைகளையும் (தமது பழைய ஆணை அதிகாரத்தையும்) தனி உரிமைகளாக கோரமுடியாத பிராமணர்கள் இரண்டுவிதமான உத்திகளை கைக்கொண்டதை அவதானிக்க முடிகிறது. இரண்டும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பதையும் காண முடிகிறது.

முதலாவது, தமக்கான புதிய வெளிகளை உருவாக்கி, அவற்றைத் தமக்கே உரிய தனி உரிமையுள்ள பொது வெளியாக முன்னிறுத்துவது. இரண்டாவது, சமூகத்தின் பிற பிரிவினருடைய பொது உரிமைகளைக் குற்றச் செயல்களாகச் சித்தரிப்பது.

சிறந்த எடுத்துக்காட்டுகளாக, 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய விலங்குகள் நல வாரியத்தையும் 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ப்ளூ க்ராஸ் அமைப்பையும் குறிப்பிடலாம்.

1936 ஆம் ஆண்டு கலாக்‌ஷேத்ராவை நிறுவி, புகழ் பெற்ற பரத நாட்டியக் கலைஞராக பெயர் பெற்ற ருக்மணி தேவி அருண்டேலே 1962 இல் விலங்குகள் நல வாரியம் உருவாகக் காரணமாக இருந்தவர்.

1964 ஆம் ஆண்டு ப்ளூ க்ராஸ் அமைப்பை உருவாக்கியவர்கள் கேப்டன் சுந்தரம் என்பவரும் அவரது மனைவி உஷாவும். அவர்களுக்குப் பிறகு ப்ளூ கிராஸை நீண்ட காலமாக நிர்வகித்து வழிநடத்தி வருபவர் அன்னாரது மகன் சின்னி கிருஷ்ணன். இவர் ருக்மணி அருண்டேலுடன் விலங்குகள் நல வாரியத்திலும் இணைந்து செயல்பட்டவர். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர். விலங்குகள் நல வாரியத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருபவர்.

இவரது மனைவி நந்திதா கிருஷ்ணன் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகப் பதவி வகித்த சர். சி. பி. ராமசாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி. சர். சி. பி. ராமசாமி ஐயரோ திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த கடைசி வருடங்களில் கொலை முயற்சிக்கு ஆளாகி பலமான கத்திக் குத்துக்களைத் தாங்கி உயிர் பிழைத்தவர்.

விலாசினி சொன்ன திகில் கதையைவிட நீண்ட மர்மக் கதைத் தொடராக விரியும் அந்த வரலாறு.

இங்கு நமது கவனத்திற்குரிய புள்ளி, தாம் மட்டுமே (தமது கருத்தியல் மேலாண்மையை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே) புழங்கக்கூடியதாக தனி உரிமை கொண்டாடக்கூடிய ஒரு வெளியை (பரதநாட்டியம் / கலாக்ஷேத்ரா – ப்ளூ க்ராஸ் / விலங்குகள் நல வாரியம்) உருவாக்கிக் கொண்டு, அதைச் சமூகம் முழுமைக்குமான பொது வெளியாக காட்டுவது ஒரு புறம். அதே சமயம், சமூகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொது வெளிகளில் கூடி மகிழ்ச்சியோடு கொண்டாடும் ஜல்லிக்கட்டு போன்ற பொது உரிமையைக் கிரிமினல் குற்றமாக்கிவிடும் போக்கு மறுபுறம்.

தமது தனி உரிமைக்கு ஆட்படாமல் இருக்கும் பிற பொது உரிமைகளை அவற்றின் போக்கில் விடுவதற்குக்கூட விரும்பாத இந்தக் குரூரம்தான் பொது வெளியில் புழங்க வரும் பிற சமூகத்தினரை கிரிமினல்களாகவும் அவர்களது பொது உரிமைகளை நாகரீகத்திற்குப் புறம்பான காட்டுமிராண்டிப் பண்பாடாகவும் குற்றமாகவும் காணச் செய்கிறது. விலாசினி ஓலா டாக்சி டிரைவரைக் கிரிமினல் என்று அழைப்பதும் நாணயத்தின் இந்த மறுபக்கத்தின் பிரதிபலிப்புதான்.

ஓலா பணத்திற்காக பயணம் செய்யும் சேவையை அளிக்கும் ஒரு தனியார் நிறுவனம். இது அனைவருக்கும் அனைத்து நுகர்வாளர்களுக்கும் பொதுவாக வழங்கப்படுவது. பணம் இருப்பவர்கள் அனைவருக்கும் பொது. பிறப்பின் அடிப்படையிலான எந்த ஏற்றத்தாழ்வுகளும் அதில் இல்லை. இருக்கவும் கூடாது (அவ்வாறு இருப்பின் அது சட்டப்படி குற்றமும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரானதும் ஆகும்).

ஓலா போன்ற ஒரு தனியார் நிறுவனமும், அதன் இணைப்பில் இருக்கும் கார் உரிமையாளர்களையும் டிரைவர்களையும் இதே நியதிக்கு உட்பட்டே அணுக வேண்டும். பணத்திற்காக அதன் சேவையைப் பெறும் நுகர்வாளர்களும் இந்த நியதிக்குக் கட்டுப்பட்டவர்களே. மேலும், நுகர்வாளர்கள் எஜமானர்கள் அல்லர்; பயனாளிகள் மட்டுமே. தமது இஷ்டப்படி பயணிக்க வேண்டுமென்று விரும்பினால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.

எந்தவிதமான பொது நியதிக்கும் கட்டுப்பட முடியாது; தன் இஷ்டப்படிதான் பொது சேவை கிடைக்க வேண்டும் / நடக்க வேண்டும் என்று விரும்புவது பொது வெளியின் பொதுவான உரிமைகளுக்கு எதிரானது.

அவ்வாறு தமது இஷ்டப்படி பொது சேவை நடக்கவில்லை என்ற ஆத்திரத்தில்தான் ஸ்ரீ சங்கரன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஸ்ரீ சங்கரன் அரசாங்க வேலையாக பைசைக்கிளில் சென்றிருக்கிறார். ஓலா டாக்சி டிரைவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நியதிகளுக்கு உட்பட்டு ஒரு பொது சேவையை அளித்திருக்கிறார். பொது வெளியில் புழங்கியதற்காக சங்கரன் ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையும் கும்பாபிஷேகமும் செய்யவென்று 15 ரூபாய் தண்டம் கட்டிவிட்டு, தனக்குச் சொந்தமான மிதிவண்டியை மட்டுமல்லாது கட்டியிருந்த வேஷ்டியையும் பறிகொடுத்திருக்கிறார். ஓலா டாக்சி டிரைவர், செய்த வேலைக்கான கூலியையும் பறிகொடுத்து (127 ரூபாய்), கொலை மிரட்டல் பழி சுமத்தப்பட்டு (இபிகோ செக்‌ஷன் 506 i) கிரிமினல் பட்டமும் சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்று வந்திருக்கிறார். 90 வருட கால இடைவெளிக்குப் பின்னரும் நடந்திருப்பது அதே கொடுமைதான்.

(முற்றும்).

http://minnambalam.com/k/1471392018

பகுதி – 1

பகுதி – 2

பகுதி – 3 

ஆயிரம் லைக்குகள் வாங்கிய அபூர்வ விலாசினியும் மாடு மேய்த்துப் படித்தவர் கிரிமினலாக்கப்பட்ட கதையும் – 3

கேள்விக்கு இடமில்லாத ஆணை உரிமை (authority) எப்படிச் செயல்படுகிறது? தந்தை – மகன் உறவு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு (தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை). இவ்வுறவில், தந்தைக்கு மகனின் மீதான அதிகாரம் கேள்விக்கு இடமில்லாதது. மகன் தந்தைக்கு கீழ்ப்பட்டவர். அவர் சொல்படி நடக்கக் கடமைப்பட்டவர். (தற்காலத்தில், பெற்றோர் – பிள்ளைகள் உறவு ஜனநாயகப் பூர்வமானதாக இருக்க வேண்டும் என்ற புரிதல் உருவாகியிருப்பது இத்தகைய ஆணை உரிமைகள் சிதைவுற்றதன் விளைவு).

அதிகாரப் படிநிலை வரிசையில் மேல் நிலையில் இருப்பவரின் ஆணையை, அவருக்குக் கீழிருப்பவர்கள் கேள்விக்குட்படுத்தாமல் ”சிரமேற்கொண்டு” செய்துமுடிக்க வேண்டும். ஆணை உரிமை இயங்கும் விதம் இப்படியாகத்தான். ஆண்டான் – அடிமைச் சமூக அமைவுகள், நிலவுடைமைச் சமூகங்கள் பெரும்பாலானவற்றில் நிலவிய அரசதிகார முறை என்றும் சொல்லலாம்.

தந்தை – மகன், குடும்பத் தலைவன் – குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியன் – மாணவன், பூசாரி – பக்தன், எஜமான் – அடிமை எனப் பலநிலைகளில் கேள்விக்கு இடமின்றி செயல்படுவதே ஆணை உரிமை. ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகம் மற்றும் அரசமைப்பை  (authoritarian state) பொதுவில் ஒரு பிரமிட் வடிவில் உருவகிக்கலாம். இந்தப் பிரமிட்டின் உச்சியில் அமர்ந்திருப்பவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களின் ஊடாக, அதிகாரம் கீழ்நோக்கி பாய்கிறது.

என்றாலும், உச்சியில் அமர்ந்திருப்பவர், தமது விருப்பப்படி அதிகாரத்தைத் தன்னிச்சையாகச் செலுத்தவும் இயலாது. அவ்வாறு ஒரு தனிநபரின்  தன்னிச்சையான ஆணை அதிகாரம் செயல்படும் அமைப்பு எதேச்சதிகார (dictatorship) அமைப்பு. ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த ஒரு அரசமைப்பிலோ உச்சியில் அமர்ந்திருக்கும் நபருக்கும் மேலாக, அவரும் பின்பற்ற வேண்டிய நில நியதிகள் – சட்டத் தொகுப்பு, மரபுத் தொடர்ச்சி, கடவுளரின் ஆசி போன்ற ஒன்று இருக்கும். பிரமிட்டிற்கு மேலாக அந்தரத்தில் சுழலும் ஒரு ஒளிவட்டம் என்று உருவகிக்கலாம்.

இக்கருத்தமைவுகள் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்துள்ள ஹான்னா ஆரெண்ட் (Hannah Arendt) என்ற அரசியல் தத்துவவியலாளர், ரோமானிய அரசமைப்பை இவ்வாறானதொரு பிரமிட்டாக உருவகிப்பார். ரோமானிய அரசமைவில் பிரமிட்டுக்கு மேலாகச் சுழன்ற அந்த ஒளிவட்டம், ரோமானிய அரசை நிறுவியவர்கள் உருவாக்கிய மரபின் தொகுப்பாகக் கொள்ளப்பட்டது. தமிழக / இந்திய அரசமைவுகளில் அந்த ஒளிவட்டம் வர்ணாசிரம தர்மமாக இருந்தது எனலாம்.

(தொடர்புடைய கருத்துக்களை மிகச் சுருக்கமாக What is Authority? என்ற கட்டுரையிலும், On Violence மற்றும் On Revolution ஆகிய இரு நூல்களிலும் ஆரெண்ட் விளக்கியிருக்கிறார். மேலும் விரிவான புரிதலை விழைவோர், அவருடைய The Origins of Totalitarianism என்ற நூலை வாசிக்கலாம்).

நிலவுடமைச் சமூகங்களின் வீழ்ச்சியோடு, ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த அரசமைவுகளும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் நிலவிய ஆணை உரிமை அடிப்படையிலான உறவுகளும் படிப்படியாகச் சிதைவுற்றன. நவீன ஜனநாயக அரசுகளின் தோற்றத்தோடு, அதிகாரவர்க்க அரசு / அரசமைவு (bureaucratic state) எழுகிறது.

நவீன ஜனநாயக அரசமைவின் நான்கு தூண்களாகச் சொல்லப்படும் நாடாளுமன்றம், நீதித்துறை, அதிகாரவர்க்கம், பத்திரிகைத் துறை இந்த அரசமைவின் அதிகார எல்லைகளைப் பரஸ்பரம் கட்டுக்குள் வைத்திருக்கும் பொறியமைவாகக் (checks and balances) கொள்ளப்படுகின்றன. என்றாலும், நவீன ஜனநாயக அரசின் ஆட்சிமுறை அடிப்படையில் அதிகாரவர்க்க ஆட்சிமுறையே (bureaucratic governance).

இத்தகைய ஆட்சிமுறையில், அரச அதிகாரம் அருவமாகிவிடுகிறது. அதிகாரம் எந்த ஒரு மையத்திலும் குவிந்திருக்காமல், பரவலாகிவிடுகிறது. யாரும் எதற்கும் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிக்கலாம், இன்னொருவரை கைகாட்டலாம், அலையவிடலாம். எந்த ஒரு அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அலைக்கழிக்கப்படுவதை அன்றாட வாழ்வில் நாம் அனுபவிப்பது அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் இத்தகைய உள்ளார்ந்த இயல்பினாலேயே.

09.07.16 இரவு விலாசினியை போலீசார் அலைக்கழித்ததும் அதிகார வர்க்க ஆட்சிமுறையின் இந்த “இயல்பான” உள்ளார்ந்த இயங்குமுறையே. இது எங்கள் சரகத்தின் விசாரணை எல்லைக்குட்பட்டு வராது. கிண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்கள் என்று அலையவிட்டிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் இல்லை, காலை வாருங்கள் என்று கூறியும் அலைக்கழித்திருக்கலாம். வேறு பல காரணங்களையும் சொல்லியிருக்கலாம். பொறுப்பேற்காமல் தட்டிக் கழித்திருக்கலாம். அதிகாரவர்க்க ஆட்சிமுறை செயல்படும் விதம் அதுதான். அவ்வாறாக இல்லாமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்.

விலாசினி மறுநாள் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குப் போயிருந்தாலும் அவரை அலையத்தான் விட்டிருப்பார்கள். தொழில்முறையான ஒரு வக்கீலை வைத்து தொடர்ந்து அழுத்தம் தந்திருந்தால் ஒருவேளை வழக்குப் பதிவு செய்திருப்பார்கள். வழக்குப் பதிவு செய்திருந்தால், டிரைவரும் நமக்கேன் பிரச்சினை, பிழைப்புக்கு அலையவே தனக்கு நேரம் போதவில்லை என்று மன்னிப்பு கேட்டிருக்கலாம். அல்லது, அவரும் ஒரு வக்கீலை வைத்து வழக்கை எதிர்கொண்டிருக்கலாம். விஷயம் அடுத்து கோர்ட்டுக்கு போயிருக்கும். அங்கு நாற்பது வாய்தா வாங்கி அலைக்கழித்திருப்பார்கள்.

இதுதான் ஜனநாயக ஆட்சிமுறையின் – அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் நடைமுறை. ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட, இந்த ஆட்சிமுறையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதற்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும். யாரும் விதிவிலக்கில்லை.

இத்தகைய அதிகாரவர்க்க ஆட்சிமுறையில் நீதி / நியாயம் இவ்வாறு தள்ளிப்போடப்படுவதைக் கண்டு வெகுண்டெழுபவர்கள், மக்களைத் திரட்டி போராடலாம், அவர்களை அரசியல் மயப்படுத்தலாம், இந்த அதிகார வர்க்கப் பொறிமுறைகளை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது முற்றிலும் புதிய முறையில் மாற்றியமைப்பது என்பது குறித்துச் சிந்திக்கலாம், செயல்படலாம்.

ஜனநாயக அரசமைப்பின் அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் லேபிரெந்திற்குள் நுழைந்து, அலைந்து திரிந்து நீதியைப் பெறுவது அல்லது, அரசியல் விழிப்புணர்வூட்டும், இயக்கமாக்கும், எழுத்தாக்கும், சிந்திக்கும், சிந்தித்துச் செயல்படவைக்கும் நீண்ட நெடும்பாதையையோ விலாசினி தேர்வு செய்யவில்லை. மாறாக, கோடம்பாக்கத்து இயக்குனர்களில் சிலர் தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கும் அந்நியன் போலவும் ஜென்டில்மேன் போலவும் குறுக்கு வழியில் பாய்ந்திருக்கிறார்.

அந்நியனும் ஜென்டில்மேனும் ”கிரிமினல்களையும் பொறுக்கிகளையும்” வேட்டையாடிப் பழிவாங்குவதைப் போலத்தான் விலாசினியும் டாக்சி டிரைவரை “கிரிமினல்” என்றும் “பொறுக்கி” என்றும் சாடி, வேட்டையாடிப் பழிவாங்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை.

விலாசினி சொன்ன திகில் கதையை “உண்மையாக”வே எடுத்துக் கொண்டு பார்த்தாலும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தால், பின்பற்ற வேண்டிய நெறிகளின்படி அவர் மறுநாளே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்து விஷயத்தை நகர்த்திச் சென்றிருக்க வேண்டும். ஆனால் நடந்து முடிந்திருப்பது என்னவோ, காவல்துறையினர் இவரது வீடு தேடிச்சென்று புகாரை எழுதி / கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். தலைகீழாக நின்றிருந்தாலும், குட்டிக்கரணம் போட்டிருந்தாலும் ஓலா டாக்சி டிரைவரால் இப்படிச் செய்திருக்க முடியுமா?

ஜனநாயக ஆட்சிமுறையின் பொறிமுறைகளை, நிர்வாக எந்திரங்களை, அதன் ஊழியர்களைத், தமது ”உயர்ந்த பிறப்பு அந்தஸ்த்தால்” கிட்டும் ஆணை உரிமையைக் கொண்டு வளைப்பது சமத்துவத்திற்கும் சமத்துவமான நீதிக்கும் எதிரானது. விலாசினி செய்திருப்பது அத்தகைய அநீதியைத்தான்.

அந்நியனும் ஜென்டில்மேனும், விலாசினி போன்ற ஜென்டில் வுமன்களும் பிறரை இவ்வாறு வேட்டையாடும் மனநிலை எதிலிருந்து பிறக்கிறது?

1950 ஆம் ஆண்டு, ஜூன் 7 அன்று, ஸ்ரீமதி சம்பகம் துரைராஜன் என்ற “ஜென்டில் வுமன்” சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். தான் 1934 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ (இயற்பியல் மற்றும் வேதியியல்) முடித்திருப்பதாகவும், தனது குடும்பச்சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாதிருந்ததாகவும், தற்போது (அதாவது 16 ஆண்டுகள் கழித்து) சென்னை மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடர விரும்பி விசாரித்ததில், 1921 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, பிராமணர்களுக்கு இரண்டு இடங்களே ஒதுக்கப்பட்டிருப்பதால், தான் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் தனக்குக் கல்லூரியில் சேர இடம் கிடைக்காது என்பதை உணர்ந்து அவ்வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். ஆகையால், புதிதாக இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தில் தனி மனித உரிமைகளை பாதுகாக்கும் வலியுறுத்தும் பிரிவுகளின்படி, “writ of mandamus” (கீழ்நிலை அரசு அலுவலருக்குத் தமது கடமையை நிறைவேற்றுமாறு அல்லது தன்னிச்சையாகச் செய்த தவறைத் திருத்துமாறு ஆணை பிறப்பித்தல் – A (writ of) mandamus is an order from a court to an inferior government official ordering the government official to properly fulfil their duties or correct an abuse of discretion) உத்தரவிடும்படியும்  விண்ணப்பித்துக் கொண்டார்.

வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்குச் சென்றபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஸ்ரீமதி சம்பகம் துரைராஜன், மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பதை அறிந்து தமது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தீர்ப்பில் பதிவு செய்தனர். என்றாலும், சாதிரீதியான இடஒதுக்கீட்டை வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டம் இந்திய அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் தனிமனித உரிமைகளுக்கு எதிராக இருப்பதால் அதை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

இந்திய அரசியல் வரலாற்றில் பிரசித்தி பெற்ற இவ்வழக்குதான் இந்திய அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் செய்யப்படக் காரணமாக அமைந்தது என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும்.

என்றாலும், இவ்வழக்கில், ஸ்ரீமதி சண்பகம் துரைராஜனுக்காக வாதாடிய, அந்நாட்களில் பிரசித்தி பெற்ற வழக்குரைஞராக அறியப்பட்டிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வைத்த வாதங்கள் உரிய கவனத்தைப் பெறவில்லை. இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் வாசிக்கையில் இந்த வாதங்களில் ஓடிய முக்கியச் சரடு ஒன்று புலப்படுகிறது.

சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அமெரிக்காவின் கறுப்பு இனத்தவர்கள் அங்குள்ள கல்வி நிலையங்களில் அனுபவித்த இன ஒதுக்கல்கள் பாகுபாடுகளுக்கு இணையாக, தமிழகத்தில் பிராமணர்கள் சாதி ரீதியிலான பாகுபாட்டால் கல்வி நிலையங்களில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்ற வாதத்தை முன்வைத்திருப்பது தெரியவருகிறது.

50 ஆண்டுகள் கழித்து தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களில் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், தமிழகப் பிராமணர்கள் யூதர்கள் அனுபவித்தது போன்ற ஒடுக்குமுறையை அனுபவித்துள்ளார்கள் என்று புலம்பினார்.

இப்போது ஜென்டில் வுமனோ, ஒரு ”கிரிமினல்” டாக்சி டிரைவரால் தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தைப் பற்றி திகில் கதை எழுதுகிறார். ஆனால், அந்தப் “பயங்கர” டிரைவரோ அன்றாடம் 14 மணி நேரம் வேலை செய்து, ஒரு நாளுக்கு ரூ. 500 சம்பாதிக்கும் ஒரு கூலித் தொழிலாளி.

சமூகத்தின் மிக உயர் நிலைகளில் இருந்த / இருக்கும், அதன் சாதகமான பலாபலன்கள் அனைத்தையும் அனுபவித்த / அனுபவிக்கும் சம்பகம் துரைராஜன், அவருக்காக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அசோகமித்திரன், ஜென்டில் வுமன் விலாசினி ஆகிய நால்வரும் இத்தனை ஆண்டுகள் இடைவெளியிலும் இத்தனை தலைமுறை இடைவெளிகளுக்குப் பின்னரும், சொல்லி வைத்தார்போல, தம்மை பாதிப்பிற்கு உள்ளானவர்களோடு ஒப்பிட்டும், பாதிப்பிற்கு ஆளானவர்களாகவும் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

ஜனநாயக ஆட்சியமைப்பின் அதிகாரவர்க்க ஆட்சிமுறை அவர்களுக்கிருந்த ஆணை உரிமையை, முன்போலச் சுதந்திரமாக அனுபவிப்பதற்கு எப்போதும் இடம் கொடுப்பதில்லை என்பதுதான் இம்மனநிலைக்கான ஆதார ஊற்று. ஜனநாயக ஆட்சிமுறை திறந்து விடும் பொது வெளியில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இவர்களது ஆணை உரிமையை ஏற்றுக் கொள்ளாமல் இயங்குவதே தம்மைப் பாதிப்பிற்கு உள்ளானவர்களாகவும் பிறரை ஒடுக்குமுறையாளர்களாகவும் victim X oppressor உறவைத் தலைகீழாக இவர்கள் எடுத்துக்கொள்ளக் காரணமாக இருக்கிறது.

தாம் அனுபவித்து வந்த ஆணை உரிமை தளர்ந்து போகும்போதெல்லாம் சம்பகம் துரைராஜனைப் போன்றவர்களும் விலாசினியைப் போன்றவர்களும் தம்மை ஒடுக்கப்பட்டவர்களாகக் கற்பனை செய்துகொள்ளும் பரிதாபமும் நிகழ்கிறது.

இனிய முகங்களும் “பயங்கரமான” முகங்களாகக் காட்சி தர ஆரம்பித்து விடுகின்றன. சாதாரணக் கை அசைவும் ஆயுதம் எடுக்கிறதோ  என்று பதற வைத்துவிடுகிறது. தன் பாட்டுக்கு காரை ஓட்டிச் சென்றாலும், பின் தொடர்ந்து வருவதாக மனம் கற்பனை செய்துகொள்கிறது.

விஷயம் இப்படியாக இருக்க, விலாசினி “பெண் வெறுப்பென்னும் மகா சமுத்திரத்தில் கல்லெறியும்” திருப்பணியைச் செய்துவிட்டதாகத் திருப்திப்பட்டுக் கொள்வதெல்லாம் வேடிக்கையானது.

அவர் எறிந்த கல்பட்டு பாற்கடல் பரந்தாமன் புரண்டு படுத்துவிடவில்லை. பிரளயம் ஏற்பட்டுவிடவில்லை. கல்கி அவதாரம் எடுத்து இக்கலியுகத்தில் அவதரித்துவிடவும் இல்லை.

மாறாக, மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் அமர்ந்து தமது திருப்பாதக் கமலங்களால் உலகை அளந்து கொண்டிருக்கும் வாமனர்களே விழித்துக் கொண்டார்கள். தமது விரல்களை அசைத்து, கூலித் தொழிலாளியான ஒரு கால்டாக்சி டிரைவரை நசுக்கியிருக்கிறார்கள். விலாசினியும் அவர்களோடு ஊக்கமாக ஒத்துழைத்திருக்கிறார்.

பொது வெளி என்பது பல போராட்டங்கள், கருத்து மோதல்களின் ஊடாக, பல பிரிவு மக்களும் சந்திக்கும் ஒரு வெளியாக படிப்படியாக, உருவெடுப்பது. இவரைப் போன்றவர்களுக்கு பொது வெளியே ”கிரிமினல்கள்” உலவும் ஆபத்து நிறைந்த வெளியாக தோன்றுகிறது. அவ்வாறு கருதத் துணிவதற்கான காரணத்தையும் பார்த்துவிட வேண்டும்.

(தொடரும் … )

https://minnambalam.com/k/1470873612 

பாகம் – 1

பாகம் – 2 

இறுதிப் பகுதி

ஆயிரம் லைக்குகள் வாங்கிய அபூர்வ விலாசினியும் மாடு மேய்த்துப் படித்தவர் கிரிமினலாக்கப்பட்ட கதையும் – 2

ஓலா டாக்சி டிரைவர் மீது வைத்தக் குற்றச்சாட்டில் முழு உண்மையில்லை என்று மாமல்லன் எழுதியதும் விலாசினியின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தது. அதற்கு நேரடியாகப் பதில் அளிக்க முன்வராத விலாசினி, 26.07.16 அன்று தன் முகநூல் பக்கத்தில், ”எனக்கு உதவ முன்வந்த ஊடக நண்பர்களிடம் ஒன்றைத் திரும்பக் கூறிக்கொள்கிறேன். எக்காலத்திலும் தவறான/பொய்யான ஒரு குற்றச்சாட்டை ஆதரிப்பதாகக் கருதவேண்டாம். உங்களிடம் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, உண்மை மட்டுமே. இதை மீண்டும் உங்களிடம் இப்பொது வெளியில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எழுதினார்.

ஆனால், அவர் கூறியது முழு உண்மைதானா?  ”உண்மை. உண்மையைத் தவிர வேறு இல்லை,” தானா?

09.07.16 இரவு நடந்த சம்பவத்தை, இரண்டு நாட்கள் கழித்து, 11.07.16 மாலை முகநூலில் முதல்முறையாக எழுதியப் பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார் விலாசினி: “இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் பதிவுசெய்து கொடுத்தான். நல்லவேளையாக வீட்டிலிருந்து ஏறாமல், பக்கத்தில் ஒரு கடையிலிருந்து ஏறினேன்.”

இதைப் படிப்பவர்கள், விலாசினி, இரவில் தனியாக கால்டாக்சியில் பயணித்தார் என்று மட்டுமல்ல, தனியாக கால்டாக்சியில் ஏறினார் என்றே புரிந்துகொள்வார்கள். ஆனால், உண்மையான உண்மை என்ன?

விலாசினி அவர் திருமணம் செய்ய இருக்கும் நண்பருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரைப் பார்க்கவே வளசரவாக்கத்தில் இருந்து திருவான்மியூர் சென்றிருக்கிறார். இதை விலாசினிக்கு ஆதரவாக முகநூலில் களம் இறங்கிய வக்கீல் ஒருவர், விலாசினியிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு பதிவு செய்திருக்கிறார்.

உடல்நிலை சரியில்லாதவரை பார்த்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு மேலாக விலாசினி வளரசரவாக்கத்தில் உள்ள தன் வீட்டிற்குப் புறப்பட்டிருக்கிறார். கால் டாக்சியை அவரைத் திருமணம் செய்ய இருக்கும் நண்பரே பதிவு செய்து கொடுக்கிறார். அவரே டாக்சியில் ஏற்றி வழி அனுப்பியும் வைத்திருக்கிறார்.

இந்தத் தகவலைத்தான் (உண்மையை) விலாசினி சாதுர்யமாகத் தன் ஆரம்ப வரிகளிலேயே மறைக்கிறார். தனியாகப் பயணம் செய்தது மட்டுமல்ல, தனியாக டாக்சியில் ஏறியதுபோன்ற பொருள் தொனிக்கவும் எழுதுகிறார். (டாக்சி டிரைவர் தனது பேட்டியில், விலாசினியை ஒருவர் காரில் ஏற்றிவிட்டதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்).

விலாசினி உள்ளது உள்ளபடி உண்மையைக் கூறவில்லை. அரை உண்மையை மட்டுமே சொல்லியிருக்கிறார். ஒரு முழு உண்மையை மறைத்திருக்கிறார். இப்படி, ஒரு உண்மையை ”அமுக்குவது” அடுத்த வரியில் ஒரு திகில் கதையை ஆரம்பிக்க அவருக்கு வசதியாக இருக்கிறது. அது, ”நல்லவேளையாக வீட்டிலிருந்து ஏறாமல், பக்கத்தில் ஒரு கடையிலிருந்து ஏறினேன்” – அதாவது, ஒரு “கிரிமினலுக்கு” வீட்டை அடையாளம் காட்டும் ஆபத்தைத் தன்னை அறியாமல் தவிர்த்தாராம்.

இரண்டாவது வரியில் ஆரம்பிக்கும் ”ஆபத்து” மூன்றாவது வரியில் வேகம் எடுக்கிறது. எப்படி? “கார் எடுத்த எடுப்பிலேயே படு வேகம்.” நான்காவது ஐந்தாவது வரிகளில், திகில் கதையின் பிரதான பாத்திரங்களின் உடல் – மன நிலை பற்றியச் சுருக்கமான விவரிப்பு: விலாசினிக்கு உடல்நலம் சரியில்லை; டிரைவரின் திமிர் (”உடல்நலம் சரியில்லையென்று மெதுவாகப் போகச் சொன்னேன். ட்ரைவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை”). அதற்கு அடுத்த வரியில்தான் ஒரு பருண்மையான – திடமான உண்மைத் தகவலைச் சொல்கிறார் (மத்ய கைலாஷ் கடந்து கிண்டி மேம்பாலம் – ஐஐடி க்கு அருகில் இருக்கும் மேம்பாலத்தை கிண்டி மேம்பாலம் என்று தவறாகக் கூறியிருக்கிறார்).

“விலாசினி கார்த்திக்கை பார்க்க சென்றதே அவரின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான்” என்று விலாசினியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவருக்கு ஆதரவான வக்கீல் எழுதிய பிறகுதான், நான்காவது வரியில் தனக்கு உடம்பு சரியில்லை என்று இவர் சொல்லியிருப்பது பொய்யோ மெய்யோ என்ற சந்தேகத்தை கிளப்பிவிடுகிறது (என்ன உடல்நிலை சரியில்லை? உடல்நிலை சரியில்லாதவர், ஏன் அவ்வளவு தூரம் பயணித்து இன்னொரு உடல் சுகமில்லாத நபரைப் பார்க்கப் போனார்? இன்னபிற).

ஆறாவது வரிக்குப் பிறகுதான் விலாசினி சொன்ன திகில் கதையின் மையக் கரு தொடங்குகிறது. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எதிரில் அரையிருட்டு, அரையிருட்டில் “ஷைன் அடித்த” பயங்கர (கருப்பு) முகம், இருக்கிறதோ இல்லையோ என்ற மயக்கத்துடன் தோன்றும் ஆயுதம், கார் சேஸ் இன்னபிற.

துயரம் என்னவென்றால், திகில் கதை ஆன்டி க்ளைமாக்ஸிலும், ஃப்ளாஷ் பேக்கிலும் முடிந்துபோனதுதான் (போலீசாரின் அலைக்கழிப்பும், இரவு பதினோரு மணிக்குப் பிறகு தோன்றும் எண்ண அலைக்கழிப்புகளும்).

இடையில், டிரைவருக்குத் தரவேண்டிய, பயணம் செய்த தூரத்திற்கான தொகையை ஏன் கொடுக்க மறுத்தார் என்ற கேள்வி மட்டும் விடையே கிடைக்காமல் அண்ணா பல்கலைக் கழகத்தின் எதிரில் நிலவிய இருட்டில் அலைந்து கொண்டிருக்கிறது.

விலாசினியின் இந்தப் பயங்கரமானத் திகில் கதையில் ”உள்ளது உள்ளபடியான உண்மை”க்குப் பதிலாக, வேறொரு உண்மை – ஒரு ”தீர்க்கத் தரிசன உண்மை” நிழலாடுகிறது. அந்த ”தீர்க்கத் தரிசன உண்மை”தான் அவரது திகில் கதைக்கான நியாயப்பாடாக இருப்பது. திகில் கதை ஒரு உண்மைச் சம்பவம் போல தோன்றச் செய்வது.

“இந்த நாட்டில், ஒரு பெண், நடு இரவிலும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் என்று நடமாட முடிகிறதோ, அன்றுதான் நாம் உண்மையானச் சுதந்திரத்தை அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியும்” என்ற காந்தியின் “தீர்க்கத் தரிசன உண்மை”தான் அது.

உண்மையை எடுத்துச் சொல்லும் முறைகள் நான்கு உண்டு. தீர்க்கத் தரிசன உண்மை, தத்துவ உண்மை, கற்றலின் உண்மை, அதிகாரத்திற்கு எதிராக பேசப்படும் உண்மை  என்று அவற்றை விளக்குவார் ஃபூக்கோ.

(வாசிக்க: The Meaning and Evolution of the Word Parrhesia

The Courage of Truth )

தீர்க்கத் தரிசன உண்மை என்பது எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை சொல்வது. ஞானிகளும் சாமியாடிகளும் சொல்லும் உண்மை அது. தத்துவ உண்மை உலகின் இயல்பு, உலகில் காணும் பொருட்களின் இயல்பு, வாழ்க்கையின் பொருள் இன்னபிறவற்றைப் பற்றி பேசுவது. காலம் கடந்த – காலத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகளைப் பற்றி பேசும் உண்மை அது. கற்றலின் உண்மை, ஒரு குறிப்பிட்டத் துறையில் சிறந்த பயிற்சி பெற்றவர்கள், தமது துறைசார்ந்த மறுக்கப்பட முடியாத உண்மைகளை – அறிவை, அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்து இயம்புவது, பயிற்றுவிப்பது. கடந்த காலத்தில் மனிதகுலம் கற்ற உண்மைகளை, கடந்தகால உண்மைகளைப் பேசுவது அது. ஞானி, தத்துவவாதி, ஆசிரியன் ஆகியவர்கள் பேசும் உண்மைகள் எனலாம். இந்த வகைப்பட்ட மூன்று உண்மைகளும் நிகழ் கால உண்மையைப் பற்றி பேசுவதில்லை என்பது இங்கே நமது கவனத்திற்கு உரியது.

”அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசுவது”தான் நிகழ்காலத்திற்கு உரிய உண்மை. இந்த உண்மை பேசும் முறை, உள்ளதை உள்ளபடி எடுத்துக் கூறுவது. இந்த உண்மையைப் பேசுபவர் அதிகாரத்தில் தனக்கு மேல் நிலையில் இருப்பவருக்கு உண்மையை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறுவதாக இருப்பது: அரசன் – அரச ஆலோசகர், பெரும்பான்மை அரசியல் சமூகம் – சிறுபான்மையினரின் குரல், ஏன் இரண்டு நண்பர்களுக்கிடையிலும் கூட பேசப்படும் உண்மை.

இந்த உண்மையை எடுத்துக்கூறுவதால், அதைக் கூறுபவருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதன் தன்மையிலேயே அடங்கி இருக்கிறது. உண்மையை எடுத்துக்கூறுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான உறவே முறிந்துவிடும் ஆபத்தையும் உள்ளார்ந்த தன்மையாகக் கொண்டது. உண்மையைச் சகித்துக் கொள்ள இயலாத அரசன், ஆலோசகனை தூக்கில் போடலாம். பெரும்பான்மையினர் காணத் தவறும் உண்மையை எடுத்துக் கூறுவதால், சிறுபான்மைக் குரல் நசுக்கப்படலாம். நண்பன் காண மறுக்கும் நிதர்சனமானதொரு உண்மையை எடுத்துக் கூறுவதால் நட்பே முறிந்து போகலாம். இத்தகைய உண்மையைக் கூறுவதற்கு, விளைபயன் குறித்து அச்சம் கொள்ளாதத் துணிச்சல் ஒருவருக்கு இருக்கவேண்டும். இதுதான் அதிகாரத்திற்கு எதிராக உண்மையை எடுத்துக் கூறுவதன் தன்மை. நிகழ்காலத்திற்கே உரியது. விஷயங்களைத் திரிக்காமல், உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் உண்மை.

விலாசினி, டிரைவரைப் பற்றி சொன்ன திகில் நிறைந்த “உண்மைச் சம்பவத்திற்குத்” திரும்புவோம். சம்பவம் நிகழ்காலத்திற்கு உரியது.

ஆனால், விலாசினி யாரைப் பற்றி பேச முற்பட்டாரோ அவர் (ஓலா டாக்சி டிரைவர்) அதிகாரப் படிநிலையில் இவருக்கு மேலாக இருப்பவராக இல்லாமல் போனதுதான் விலாசினியின் துரதிர்ஷ்டம். டிரைவர், கால் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு கூலித் தொழிலாளி. விலாசினி திருமணத்திற்கு முன்னரே சொந்தமாகக் கார் வைத்திருந்தவர். திருமணத்திற்குப் பிறகு நான்கு சொகுசு கார்களை மாறி மாறி வைத்திருந்தவர் (விலாசினிக்கு ஆதரவாக முகநூலில் எழுதிய வக்கீல் விலாசினியிடமே கேட்டு அறிந்து சொன்ன மற்றொரு உண்மை இது). எஜமானியாக இருந்து பழக்கப்பட்டவர் விலாசினி. வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து பழக்கப்பட்டவர் கார் டிரைவர்.

அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசுவதில் உள்ள அடிப்படை நிபந்தனையே – பேசுபவர் அதிகாரப் படிநிலை வரிசையில் கீழிருப்பவராக இருத்தல் – இங்கு இல்லை.

அடுத்து, ”உண்மையைச்” சொன்னதால் விலாசினிக்கு ஆபத்து எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. நிகழப்போவதும் இல்லை. மாறாக, டிரைவருக்குத்தான் ஆபத்து நேர்ந்தது. பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது.

விலாசினி ”உண்மையை” உள்ளபடியே சொல்லவும் இல்லை. தொடக்கத்தில் காட்டியுள்ளதைப்போல, அரை உண்மையிலிருந்தே தொடங்குகிறார். ஒரு முழு உண்மையை மறைத்திருக்கிறார். அவரது பின்னணியைப் பற்றிய பல உண்மைகளையும் சொல்லவில்லை (அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கிய வக்கீல் ஒருவரால் இந்தப் பின்னணி உண்மைகள் தெரிய வருகின்றன). ஒரு ”அபலைப் பெண்ணுக்கு” இரவில் நிகழ்ந்த பயங்கரமான அனுபவமாக ஒரு திகில் கதையையே சொல்லியிருக்கிறார். காந்தியின் “தீர்க்கத் தரிசன உண்மை”யின் நிழல், அவருடைய திகில் கதை எடுபட ஏதுவான பேக்-ட்ராப்பாக (டெக்னிக்கலாக சொல்வதென்றால் sub text ஆக) அமைந்துவிட்டது.

விலாசினியின் முகநூல் பதிவைக் கண்டதும் ஜனநாயக ஆட்சியின் நான்காவது தூண் துணுக்குற்றது. அதிகாரம் விழித்துக் கொண்டது. சாட்டையைச் சொடுக்கியது. அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசுதல் நிகழாமல், அதிகாரத்தின் தூண்களில் ஒன்று உரத்தக் குரலில் பேசத் தொடங்கியது. விலாசினி அதிகாரத்தின் தூண்களுக்குத் தன் நன்றிகளைத் தெரிவிக்கிறார்.

“பெண் வெறுப்பென்னும் மகா சமுத்திரத்தில்” அவரால் முடிந்த கல்லை எறிந்துவிட்டதாகத் திருப்தி கொள்கிறார். அப்புறம், குர்தீஷ் இனப் பெண்களின் போராட்டங்கள் பற்றிய புத்தகத்தை வாசித்துப் புல்லரித்துப் போகிறார். “குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பிலிருந்து தகுந்த முறையில், செய்த குற்றத்திற்கு வருந்தி, என்னை அணுகினால் உரையாடத் தயாராகவிருக்கிறேன்” என்று விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, எட்கர் ஆலன் போவின் திகில் கதைகளுக்குள் மூழ்கி விடுகிறார்.

அதிகாரத்தின் சாட்டை சீறி சிறைக்குப் போன ஓலா டாக்சி டிரைவரோ, தனக்குத் தெரிந்த ஒரே பிழைப்பையும் செய்ய முடியாமல், தினமும் தாம்பரத்திற்கு அடுத்துள்ள முடிச்சூரில் இருந்து, வளசரவாக்கம் S4 போலீஸ் ஸ்டேஷனிற்கு போய் கையெழுத்து போட்டுக் கொண்டு காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

அதிகாரப் படிநிலையின் உச்சியில் இருப்பவர் தன்னை பாதிக்கப்பட்டவராகவும், அதிகாரப் படிநிலை வரிசைக்கு வெளியே நிற்கும் டிரைவரை ஆணாதிக்கத்தின் பயங்கரமான வடிவமாகவும் சித்தரித்தது இத்தகைய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் ஒருபோதும் உண்மையை உள்ளது உள்ளபடி பேசுவதில்லை. அதிகாரத்திற்கு எதிராக உண்மையை பேசுதல் என்ற கேள்வியே அவர்களிடத்தில் எழுவதும் இல்லை. அதிகாரப் படிநிலை வரிசைக்கு வெளியே இருப்பவர்களை ஒடுக்குபவர்களாகச் (oppressor) சித்தரித்து, உச்சியில் இருக்கும் தம்மை பாதிப்பிற்கு உள்ளானவர்களாகச் (victim) சித்தரிக்கும், பாத்திரப் படைப்பை தலைகீழாக மாற்றிக்காட்டும் வித்தையிலும் (role reversal) கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழக/இந்தியச் சூழலில் காலாகாலமாக அதிகாரத்தின் பலாபலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கே உரிய விசேஷமான குணங்களில் இது ஒன்று.

சற்றே கூர்ந்து நோக்கினால், அவர்கள் அனுபவிக்க விரும்புவது அதிகாரத்தை (power) அல்ல. கேள்விக்கு இடமில்லாத ஆணையுரிமையையே (authority) என்பது புரிய வரும்.

(தொடரும் … )

https://minnambalam.com/k/1470614448

பாகம் – 1

பகுதி – 3

இறுதிப் பகுதி

%d bloggers like this: