தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 4

இதில் உள்ள முரண்நகை என்னவென்றால், அரிஸ்டாட்டில் இதை முன்மொழிந்த காலப்பகுதியில், கிரேக்க நகரக் குடியரசுகள் தமது அந்திமக் காலத்தில் இருந்தன. மாசிடோனியப் பேரரசு, சுதந்திரமான நகரக் குடியரசுகளை, ஒவ்வொன்றாக விழுங்கிக் கொண்டிருந்தது. அலெக்சாண்டரின் தந்தை பிலிப், பாதிக்கும் மேற்பட்ட கிரேக்கத்தை தனது ஆளுகையின்கீழ் கொண்டு வந்துவிட்டிருந்தார். அரிஸ்டாட்டிலின் கண்முன்பாகவே, அலெக்ஸாண்டர் அதை முடித்து வைத்தான். Praxis என்ற வாழ்க்கைமுறை அவர் கண்முன்பாகவே மறைந்துபோனது.

இந்த இடத்தில் poiesis என்ற சொல்லால் குறிக்கப்பட்ட வாழ்க்கைமுறையை சற்று கவனிப்பது தேவையாகிறது. முன்பு விளக்கியது போன்று, அது making – தொழிற்படுதல்; அதாவது, கைவினைஞர்கள், கலைஞர்கள் ஆகியோரின் வாழ்க்கையைச் சுட்டிய ஒன்று. கைவினைஞர்களைப் பொறுத்தவரையில், அவர்களது வாழ்க்கை உடல் உழைப்பைக் கோருவது. அதனால், அவர்கள் கிரேக்க நகர அரசுகளின் குடிமக்களாகும் தகுதி மறுக்கப்பட்டனர். கலைஞர்களைப் பொறுத்தவரையில், ப்ளேட்டோ கவிஞர்களை (poietai) தன் கற்பனைக் குடியரசிலிருந்து நாடு கடத்தியது புகழ்பெற்ற கதை. கவிஞர்கள் உடல் உழைப்பில் ஈடுபடாதவர்கள் என்றபோதிலும் ப்ளேட்டோ அவர்களை ஏன் நாடு கடத்த வேண்டும்?

ஒரு தத்துவவாதி அழகில் சிறந்த பொருட்களை, அதாவது, கடவுளின் நமது கண்களுக்குப் புலப்படும் அந்த ஆதியும் அந்தமும் இல்லாப் பொருட்களை (eternal divine objects) தியானிப்பவன். அதுவே அவனை கடவுள் தன்மையை நோக்கி இட்டுச் செல்லும். கவிஞனோ, நாளும் தோன்றி மறையும் இவ்வுலகப் பொருட்களை – வடிவங்களை மொழியில் புனைந்து கொண்டே இருப்பவன். இதனால், தத்துவவாதி முன்மொழியும் விடுதலைக்குத் தடையாக இருப்பவன்; அதுதான் காரணம். கைவினைஞர்களும், இதேபோன்று வடிவங்களை வனைபவர்கள் என்ற ஒப்புமையைக் கவனித்தால், அவர்கள் ஒதுக்கப்பட்டதற்கு அது மேலும் ஒரு காரணமாவதும் புலப்படும்.

இதில் உள்ள வன்முறை ஏதோ விலக்கிவைத்தல் என்பதன்று. கிரேக்கத் தத்துவம் அதன் ஆரம்பம் முதலே poiesis என்ற வாழ்க்கை முறையையே ஆதாரமாகக் கொண்டு எழுந்த ஒன்று. உடல் உழைப்பில் ஈடுபட்டிருந்தவர்களின் உழைப்பைச் சுரண்டுவதால் கிடைத்த ஓய்விலிருந்தே அவர்களது வாழ்க்கை இருந்தது என்ற அர்த்தத்தில் மட்டுமன்று. சாக்ரடீசிற்கு முந்தைய, ஆரம்பகால கிரேக்கத் தத்துவவாதிகளின் மொழியும் உள்ளடக்கமும், விவசாயம் சார்ந்த உழைப்புச் செயல்பாடுகளை உருவகப்படுத்தியும், சாக்ரடீஸ் தொடங்கி (அவருக்கு சற்றே முன்பிருந்தவர்கள்கூட) கைவினைத் தொழில் சார்ந்த செயல்பாடுகளை உருவகப்படுத்தியும் அமைந்திருப்பதைக் காட்டமுடியும்.

சுருக்கமாகக் கூறினால், அன்றாட உழைப்பு நடவடிக்கைகளைக் கவனித்து, அவற்றிலிருந்து அருவமான கருதுகோள்களுக்கு வந்தடைந்ததோடல்லாமல், அவற்றை உருவகங்களாகவும் பயன்படுத்திக்கொண்ட கிரேக்கத் தத்துவம், தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்ள, அந்த உழைப்பு நடவடிக்கைகளையே இழிவுபடுத்தி கடைக்கோடிக்கு விலக்கியும் வைத்தது.

கவிஞர்களை விலக்கி வைக்க அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தத்துவத்தின் தோற்றத்திற்கு முன்பாக, கிரேக்க உயர்குடியினரின் இருத்தலியல் நெருக்கடிக்கு வடிகாலாக இருந்தது கிரேக்கத் துன்பியல் நாடகம் (tragedy).*7

கிரேக்க உயர்குடியினரின் வாழ்வையும் இருத்தலியல் நெருக்கடிகளையும் கருப்பொருளாகக் கொண்டு, புராணங்களையும் நாட்டுப்புறக் கதைகளையும் பாடி நடித்துக்காட்டி அவர்களுக்கு இருத்தலியல் திருப்தியை வழங்கிக் கொண்டிருந்த அவ்வடிவத்தின் நியாயப்பாடு, கிரேக்க ஜனநாயக நகர அரசுகளின் (உயர் குடியினர் அல்லாத வெகுமக்களின்) எழுச்சி, கைவினைத் தொழில்களின் வளர்ச்சி, அதற்குக் காரணமாக இருந்த விஞ்ஞான அறிவின் வளர்ச்சி ஆகியவற்றால் மெல்லச் சரிந்து கொண்டிருந்தது. அச்சூழலில், புதிய விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை – அதற்குக் காரணமாக இருந்த கைவினைத் தொழில்களை ஒதுக்கிவிட்டு – கையிலெடுத்துக்கொண்டு, சரிந்து கொண்டிருந்த உயர்குடியினரின் இருப்பிற்கு, புதிய சூழலையொட்டிய புதிய நியாயப்பாடுகளை வழங்க கிரேக்கத் தத்துவம் முன்வந்தது.

விஞ்ஞான அறிவின் வளர்ச்சியின் காரணமாக, கிரேக்கப் புராண தெய்வங்கள், அவை மானுட வாழ்வில் குறிக்கிடுவது போன்ற நம்பிக்கைகள் மறைந்து கொண்டிருந்த சூழலில், ஆதியும் அந்தமும் இல்லாத, பெயரில்லாத, பெயரிட முடியாத ஒரே தெய்வத்தை கிரேக்கத் தத்துவவாதிகள் மும்மொழிந்தனர். புராணங்களையும் பல்தெய்வ வாழிபாட்டையும் இன்னமும் முன்வைத்துக் கொண்டிருந்த துன்பியல் நாடகங்கள் இதனால் அதன் இயல்பான தாக்குதல் இலக்காயின. இந்தத் தாக்குதலில் தவிர்க்க இயலாமல் சிக்கிக் கொண்டவர்கள் அவற்றின் ஆசிரியர்கள் – கவிஞர்கள்.

கலைஞர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அரசியல்வாதிகளும் கோட்பாட்டாளர்களும்; கோட்பாட்டாளர்களை, அரசியல்வாதிகளை வெறுப்புடன் புறந்தள்ளும் கலைஞர்களும் என்று இந்தப் பிரச்சினை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிரேக்கச் சூழலும் அதனடியாக எழுந்த தத்துவமும் வடித்துத் தந்த இப்பிரச்சினைக்கு குறைந்தபட்சம் மார்க்சியத்தின் வழியாக நாமும் வாரிசுகளாகியிருக்கிறோம். இன்று, அது நம் முன் எடுத்திருக்கும் வடிவத்தை எதிர்கொள்ள, கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் இப்பிரச்சினைப்பாட்டில் நிகழ்ந்த சில முக்கிய திருப்புமுனைகளை மிகச் சுருக்கமாகவேனும் பார்ப்பது அவசியம்.

குறிப்புகள்:

*7) கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் நிகழ்த்துதலிலும் பெண்கள் விலக்கி வைக்கப்பட்டனர். பெண்களின் பாத்திரங்களில் ஆண்களே நடித்தனர். இந்நாடகங்கள் ‘வயதுக்கு வந்த’ ஆண்களை குடிமக்களாக பொறுப்பேற்கச் செய்யும் ஒரு சடங்காகவே நிகழ்த்தப்பட்டன என்ற ஒரு கருத்தும் இன்று முன்வைக்கப்படுகிறது.

(தொடரும் … )

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 3

ஆனால், பகுத்தறிவு என்பதை கிரேக்கர்கள் நாம் இன்று பார்ப்பதைப்போல ஒரு உறுப்பு (மூளை) சம்பந்தப்பட்டதாகப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், பேச்சும் பகுத்தறிவும் அரசியல் நடைமுறையின் – தமது கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொல்லி, விவாதித்து, நகர அரசின் பொது நன்மைக்கு உகந்த முடிவுகளை எடுப்பது – பிரிக்க முடியாத அம்சங்கள். அடிமைகள், கிரேக்கரல்லாதவர்கள் இருவரிடத்திலுமே இத்தகைய நடைமுறை இல்லை என்பதாலேயே அவர்கள் மனிதர்கள் அல்லர்; ஆகையால், கிரேக்க நகரங்களின் குடிகளாகும் தகுதியும் அற்றவர்கள். *3கிரேக்கர்களின் பார்வையில், மனிதனாக இருப்பது என்பதே, கிரேக்க நகர அரசுகளின் குடிமக்களாக இருப்பது என்பதுதான். குடிமக்களாக இருப்பது என்பது அதன் அரசியல் வாழ்வில் முழுமையாக பங்கெடுத்துக் கொள்வது. கிரேக்க (ஜனநாயக) நகர அரசுகள், குடிமக்கள் அனைவரையும் உறுப்பினராகக் கொண்ட, வழக்கமாக வருடத்திற்கு மூன்று முறை கூடிய ஒரு பேரவையால் நிர்வாகம் செய்யப்பட்டவை. இப்பேரவையல்லாது, ஒவ்வொரு வட்டத்திற்கும், இனக்குழுவிற்கும் (ஏதன்ஸ் நகரின் குடிமக்கள் நான்கு இனக்குழுக்களால் ஆனவர்க்ள்) தனித்தனியே நிர்வாக சபைகள் இருந்தன. இவை இன்னும் அதிகமுறை கூடியவை.

ஒவ்வொரு குடிமகனும், தனது வாழ்வில் குறைந்தது இருமுறையாவது ஆட்சிப்பேரவைக்குத் (senate) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒருமுறை நீதிமன்றத்திற்கு ஜுரியாக தேர்ந்தெடுக்கப்படலாம்; வட்டங்கள், இனக்குழு சபைகளுக்கு பலநூறு குற்றவியல் நடுவர்களை நியமிக்க வேண்டிய தேவையும் இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒவ்வொரு குடிமகனும், ஆண்டு முழுக்க ஏதாவது ஒரு பொறுப்பில் இருந்தே ஆகவேண்டும் என்ற நிலைமை இருந்தது.*4வேறுவகையில் சொல்வதென்றால், கிரேக்கர்களின் வாழ்க்கை, தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்வதில், அரசியலிலேயே கழிந்தது என்று சொல்லலாம். இத்தகையதொரு வாழ்க்கை முறையையே கிரேக்கர்கள் praxis என்று அழைத்தனர். இதையே மிகச் சிறந்த வாழ்க்கை முறையாகவும் கருதினர். அவர்கள் அவ்வாறு கருதியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

மேலே விவரித்தது போன்றதொரு வாழ்க்கைக்கு, குடிமக்கள் தமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்காக உழைக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு சூழல் நிலவ வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை. ஒட்டுமொத்த கிரேக்கப் பொருளாதாரமுமே அடிமைகளின் உழைப்பில் நின்றது என்ற வகையில் இது ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டது என்பதும் உண்மை. மிகுந்த வறுமை நிலைமையில் இருந்தவர் என்று கருதப்பட்டவர்கூட ஒன்றிரண்டு அடிமைகளாவது வைத்திருந்தனர் என்ற நிலைமை இருந்தது. சில சந்தர்ப்பங்களில், வறுமை நிலையில் இருந்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும்பொருட்டு இழப்பீட்டுத் தொகைகளும்கூட வழங்கப்பட்டது.

என்றபோதிலும், கிரேக்கத்தில் ஜனநாயக நகர அரசுகள் செழித்தோங்கியிருந்த (கி. மு. 450 – 350) காலகட்டத்தில், ஒரு சிறு எண்ணிக்கையிலான மேட்டுக்குடியினரே நகரத்தின் மொத்த செல்வத்தையும் கைக்கொண்டிருந்தனர். நிலபுலன்களையும் மற்ற செல்வங்களையும் நிர்வகிக்க விசுவாசமான அடிமைகளை வைத்துவிட்டு, முழுநேர அரசியல்வாதிகளாக வாழ்வைக் கழித்தவர்கள் இவர்களைப் போன்ற மிகச் சிலரே என்று சொல்லலாம்.

என்றாலும், குடிமகனாக இருப்பது என்பது உயிர்வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளுக்காக உழைப்பது என்பதிலிருந்து விலகிய உயர்வான வாழ்க்கை என்று சொல்லப்பட்டதால்/புரிந்துகொள்ளப்பட்டதால் கையளிக்கப்பட்ட அவ்வாழ்வைத் தழுவிக் கொள்வதில் கிரேக்கர்கள் எந்தத் துன்பமும் காணவில்லை என்றே சொல்லலாம்.

இப்படியானதொரு சூழலில், கிரேக்கத் தத்துவவாதிகள் அதை விடவும் மேலானதொரு வாழ்க்கை என்று ஒன்றை முன்வைக்கின்றனர். அது – தத்துவவாதியாக இருப்பது. முன்னர் கண்டதுபோல் தத்துவம் என்பது “அழகில் சிறந்தவற்றைத் தியானிப்பது” என்று விளக்கினர். அவ்வாறு “தியானம்” செய்வதற்கு குடிமக்களின் அரசியல் வாழ்க்கைக்குத் தேவையானதைக் காட்டிலும் கூடுதலான ஓய்வு அவசியம் என்பது வெளிப்படை. ஒருவகையில் குடிமக்களின் praxis அலைக்கழிப்புகள் மிகுந்த ஒரு வாழ்க்கை என்பதை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. தத்துவவாதியின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டால் அந்த அலைக்கழிப்புகூட மோசமானது; முற்ற முழுதான ஓய்வும், அமைதியும் கோரும் ஒரு வாழ்க்கைமுறை.

மேலும், குடிமகனாக இருப்பது மனிதனாக – அதாவது மிருகத்திற்கும் கடவுள் தன்மைக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பது*5 ஆனால், தத்துவவாதியாவது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட நிலையை – கடவுள் தன்மையை நோக்கி நகர்வது என்றும் அவர்கள் விளக்கங்கள் தந்தனர்.

கடவுள் எந்தச் செயலிலும் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லாதவர்; எல்லையில்லாத ஓய்வில், நிரந்தரமான தியானத்தில் இருப்பவர். ஒரு தத்துவவாதியாக ஆவதன்மூலம், theoria – வில் ஈடுபடுவதன் மூலம், அதுபோன்றதொரு ஓய்வும் தியானமும் சாத்தியமாவதால் கடவுளின் நிலைக்கு நெருங்கிச் செல்லமுடியும் என்றும் விளக்கி, அத்தகைய வாழ்வையும், அதன் மூலம் தமது தேர்வையுமே நியாயப்படுத்திக் கொண்டனர் என்றும் சொல்லலாம்.

அதே நேரத்தில், கிரேக்கத் தத்துவவாதிகளால் praxis – ஐ முற்ற முழுதாகவும் நிராகரித்துவிட முடியவில்லை. கிரேக்க ஜனநாயக நகர அரசுகள், அவை கோரிய praxis என்ற வாழ்க்கைமுறை, இவை நிலவும் பட்சத்திலேயே theoria என்ற வாழ்க்கைமுறையும் ஒரு தத்துவவாதியின் இருப்புமே சாத்தியம் என்பதால், இவ்விரண்டிற்குமிடையில் ஒரு இணக்கத்தை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஆளாயினர்.

முழுக்க முழுக்க ஒரு தத்துவவாதியாக மட்டுமே இருப்பது/வாழ்வது (பிதாகரஸ்) என்ற பார்வைக்குப் பதிலாக, ஒரு நல்ல அரசியல்வாதி தத்துவவாதியாகவும் இருக்கவேண்டும் என்ற பார்வையை வைத்தனர் (ப்ளாட்டோ/அரிஸ்டாட்டில்). இதன் உள்ளீடாக, praxis – theoria இரண்டும், மாறுபட்ட எதிரெதிரான வாழ்க்கைமுறைகள் என்ற கருத்து மறைந்து, சிறந்த வாழ்வின் பிரிக்க முடியாத இரு அம்சங்கள் என்ற கருத்து எழுந்தது.*6குறிப்புகள்:

*3 அரசியலில் இருந்து, அதனால் குடிமக்கள் என்ற தகுதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இன்னொரு தரப்பினர் பெண்கள்.

*4 தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய குடிமக்கள் குடியுரிமை பறிக்கப்படும் தண்டனைக்கு ஆளாயினர். மேலும், எந்தப் பொறுப்பிலும் இல்லாத குடிமக்களும் அவர் அங்கம் வகிக்கும் சபை கூடும்போது நகரத்தில் இருந்தும் கலந்து கொள்ளாமல் இருந்தால், அவர்களை விரட்டி அழைத்துவர அடிமைகளைக் கொண்ட ஒரு சிறப்புப் படையுமே இருந்தது.

*5 “மனிதன் ஒரு அரசியல் மிருகம்” என்று அரிஸ்டாட்டில் சொன்னது இதனாலேயே.

*6 தொடக்கத்தில் குறிப்பிட்டதைப்போல கிரேக்கச் சூழலில் praxis என்ற வாழ்க்கைமுறைக்கு எதிரானதாக poiesis நிற்கவில்லை. Theoria -வே அவ்வாறு கருதப்பட்டது. Poiesis அவர்களுக்கு இழிவானது; கணக்கில் எடுத்துக்கொள்ளவே தகுதியற்ற ஒன்று.

(தொடரும் … )

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 2

இவ்விரண்டு சொற்களும் (praxis, poiesis ) அவற்றால் குறிக்கப்பெறும் அர்த்தங்களும் நேரெதிரானவை அன்று. இதை விளங்கிக்கொள்ள இன்னொரு கிரேக்கச் சொல்லைப் பார்ப்பது அவசியமாகிறது. அந்த மற்ற சொல் theoria. Theory என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து பெறப்பட்டதே. Theory (தமிழில் இதை கோட்பாடு என்று எழுதலாம்) என்பதை நாம் இன்று நடைமுறையிலிருந்து விலகிய, நடைமுறைக்கு உதவக்கூடிய ஒரு செயல்பாடாகவே புரிந்துகொள்கிறோம். ஆனால், கிரேக்கச் சூழலில் அதன் பொருள் வேறு.

Philosopher என்ற சொல்லைத் தந்தவர் பிதாகரஸ் என்று நம்பப்படுவதுண்டு. அவர் குறித்து ஒரு சம்பவமும் சொல்லப்படுவதுண்டு. தத்துவவாதி என்று தன்னை அழைத்துக் கொள்வது எந்தப் பொருளில் என்று கேட்கப்பட்டபோது அவர், “அழகில் சிறந்த பொருட்களைப் பார்ப்பவர்/கவனிப்பவர்/தியானிப்பவர்,” என்று பதில் சொன்னாராம்.*1

தத்தவவாதி என்றால் கவனிப்பவர் (one who sees) என்று பிதாகரஸ் சொன்னதை, அவரது கேள்வியாளர்கள், அன்று நிலவிய சில மரபுகளின் சூழலில் வைத்தே புரிந்து கொண்டார்கள். அன்றைய கிரேக்க நகர அரசுகள், கடவுளர்களை மகிழ்விப்பதற்காக புனித விழாக்களை நடத்துவது வழக்கம். இவ்விழாக்களில் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு.*2 இவற்றில் கலந்து கொண்டு, போட்டிகளைப் பார்த்து வருவதற்காக ஒவ்வொரு கிரேக்க நகர அரசும் தனது பிரதிநிதியாக ஒருவரை அனுப்பி வைக்கும். இந்தப் பிரதிநிதிகள் theoros என்று அழைக்கப்பட்டனர். விளையாட்டுப் போட்டிகள் புனித விழாக்களின் ஒரு பகுதியாதலால், இந்த theoros எனப்படும் பார்வையாளர்கள் அவற்றை மிகுந்த அமைதியோடு கவனிப்பர். Theoros – களின் இந்தச் செய்கை – theoria – இதனால் கடவுளர்களை தியானிப்பது என்றாகிறது. மேலும் கிரேக்க மொழியில் theo என்றாலே கடவுள் என்றும் பொருளுண்டு (theo என்ற சொல்லில் இருந்து எழுவதே theology – இறையியல்).

இம்மூன்று சொற்களைப் பற்றிய இந்த அறிமுகம் வெறும் சொல்லாராய்ச்சியன்று. தத்துவம் – நடைமுறை – கலை இவற்றுக்கிடையிலான உறவுகளைப் புரிந்து கொள்ளவும், நமது சமகாலத்திய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் சில தெளிவுகளை நோக்கி நகர்வதற்காகவுமே. அதற்கு, கி. மு. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளின் கிரேக்கச் சூழலில் வைத்து இவற்றைப் பார்ப்பது அவசியம்.

Theoria. praxis, poiesis என்ற இந்த மூன்று சொற்களும் மூன்று மாறுபட்ட வாழ்க்கை முறைகளைச் சுட்டுபவை. இவை குறித்த மிகவும் விரிவானதொரு விவாதத்தை முன்வைத்தவர் அரிஸ்டாட்டில். அவருக்கு முன்பாகவிருந்த பல கிரேக்கத் தத்துவவாதிகளுக்கு இவை குறித்த புரிதல் இருந்தது என்றபோதிலும், தெளிவான, விரிவானதொரு விவாதத்தை வைத்தவர் அரிஸ்டாட்டிலே என்று சொல்லலாம்.

அரிஸ்டாட்டில், அவருடைய முன்னோடிகளான ப்ளாட்டோ, சாக்ரடீஸ் மூவருக்குமே அன்றைய கிரேக்கச் சூழலில் அவர்கள் கண்ணுற்ற வாழ்க்கை முறைகளில், எது சிறந்த வாழ்க்கை என்பதே கேள்வி. எது அதிகபட்ச மகிழ்ச்சியைத்தரும், விரும்பத்தக்க வாழ்க்கை; யார் மகிழ்ச்சி நிரம்பிய, அறிவார்ந்த, நன்னோக்குடைய, மிகச் சிறந்த மனிதன் என்பதே விசாரணை.

இவர்கள் மூவருமே இழிவானதாகச் சொல்லும் வாழ்க்கைமுறை, உடல் இன்பங்களில் திளைத்துக் களித்திருப்பது. அத்தகையோரை, மிருகத்தனமான வாழ்வை வாழ்பவர்கள் என்று இழிவாகவே பேசுகின்றனர்.

வணிகத்தில் ஈடுபடுவோரையும் அவர்கள் மதிப்பதில்லை. வணிகம் செய்பவர்கள் பொய் சொல்பவர்கள் (சொல்லியே ஆகவேண்டியவர்கள்), ஏமாற்றுபவர்கள் என்பதால், அவர்களுடைய வாழ்வும் விரும்பத்தகாத ஒன்று. அதனாலேயே, இவ்விரண்டைப் பற்றியும் அவர்கள் விரிவாகப் பேசுவதில்லை.

என்றாலும், அரிஸ்டாட்டிலைப் பொருத்தமட்டில், வணிகம் ஒரு தவிர்க்கவியலாத தீமை (necessary evil). அவரது காலத்தில், கிரேக்க வாணிபம் அதன் உச்சத்திலிருந்ததும், கிரேக்க நகரங்களின் (polis) வருவாய் பெருமளவு வணிகத்தைச் சார்ந்ததாக மாறியிருந்ததும் அவர் இவ்வாறு மொழிந்ததற்குக் காரணம் என்று சொல்லலாம்.

அடிமைகளைப் பொருத்தவரையில், அவர்களை குதிரை, கழுதை, நாய் போன்ற, மனிதர்களுக்குப் பயனுள்ள, பழக்கப்படுத்தப்பட்ட மிருகங்களோடு ஒப்பிடுகிறார் அரிஸ்டாட்டில். என்றாலும் அவர்கள் மிருகங்களும் அல்லர். ஏனென்றால், அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிருகங்களைவிடக் கூடுதலாக இருக்கிறது. மேலும், அவர்கள் மனிதர்களைப் போல நேரான, நிமிந்த முதுகெலும்பை உடையவர்கள்; ஆகையால், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள்; ஆன்மாவுள்ள கருவிகள்.

கிரேக்கர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள் சுதந்திரமானவர்கள் தாமென்றாலும், கிரேக்கர்களுடைய பார்வையில் அவர்களும் மனிதர்கள் அல்லர்; காட்டுமிராண்டிகள். இவர்களைக் குறிக்க கிரேக்கர்கள் பயன்படுத்திய சொல் barabarous அதாவது புரியாத மொழியைப் (bara bara – வென்று) பேசியவர்கள்.

பழமையான எல்லா இனங்களையும் போலவே கிரேக்கர்களும் தமது மொழியைப் புனிதமானதாக, கடவுள் அருளியதாகவே கருதினர். அதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு கிரேக்க மொழி மட்டுமே, பகுத்தறிவை உள்ளடக்கிய, வெளிப்படுத்தக்கூடிய மொழி. மொழியை அவர்கள் பேச்சாகவே கருதினர். மொழியின் வரிவடிவம் – எழுத்து, பேச்சிலிருந்தே பெறப்பட்டது என்பது அவர்களது புரிதல். சொல் (வாய்மொழிச் சொல் – word) என்பதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான logos – ற்கு பகுத்தறிவு என்ற பொருளும் உண்டு என்பதிலிருந்தே இதைக் காணலாம்.

ஆக, கிரேக்க இனத்தில் பிறந்து, கிரேக்க மொழியில் பேசுபவர்களே பகுத்தறிவு உள்ளவர்கள் – மனிதர்கள். “எல்லா மனிதர்களும் சமமானவர்கள்” என்ற கருத்தே கிரேக்கர்களுக்கு அந்நியமானது. இதில் உள்ள முரண்நகை, அப்படியானதொரு கருத்திற்கு அவர்கள் வரமுடியாமல் போனதற்கு, கிரேக்கன் மட்டுமே பகுத்தறிவுள்ளவன் என்ற அவர்களுடைய புரிதலே காரணமாக அமைந்துவிட்டதுதான்.

குறிப்புகள்:

*1) அழகில் சிறந்த பொருட்கள் எவை? பிரபஞ்சமும், எண்ணற்ற விண்மீன்களும், ஒரு ஒழுங்கில் சுற்றி வரும் கோள்களுமே அழகானவை. அந்த ஆதி முதல் இருப்பின் (First Being) அதாவது இறைவனின், நமது பார்வைப் புலனுக்கு அகப்படும் வெளிப்பாடுகள் அவை. அவற்றைத் தியானிப்பவர்களே “மெய்யறிவை நேசிப்போர்”. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது, கிரேக்கச் சூழலில், தத்துவவாதிகளின் தியானத்திற்குரிய (contemplation) பொருள் கடவுளின் வெளிப்பாடுகளே (eternal divine objects) அன்றி கடவுள் அல்ல; கடவுளைத் தியானிப்பது என்பது பிற்காலத்தில் உருவான கருத்து.

*2) இத்தகைய புனித விழாக்களில் முக்கியமான ஒன்று ஒலிம்பிக்ஸ். இவ்விழாக்களில் பெண்கள் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது.
அதையும் மீறி ஒரு பெண், ஆண் வேடமிட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுவிட்டதாகவும், மேற்கொண்டு அதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் பொருட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆண்கள் நிர்வாணமாக கலந்து கொள்ளும் வழக்கம் உருவானதாகவும் ஒரு கதை உண்டு.

(தொடரும் … )

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 1

“தத்துவவாதிகள் உலகுக்கு பலவகையான விளக்கங்கள் மட்டுமே தந்துள்ளனர்; ஆனால் விஷயமோ, அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே.”
ஃபாயர்பாக் மீதான ஆய்வுரைகளின் இந்தப் புகழ்பெற்ற பதினோராவது ஆய்வுரையை அறியாத மார்க்சியர்கள் யாரும் இருக்க முடியாது என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. ஒரு முனையில், இனி தத்துவத்திற்கு வேலையில்லை; களத்தில், நடைமுறையில் இறங்க வேண்டும் என்பதாகவும், இன்னொரு முனையில், தத்துவத்தின் பணி, இனி நடைமுறைக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்பதாகவும் புரிந்து கொள்ளப்பட்ட வகையில், தத்துவ வரலாற்றிலேயே முதல் முறையாக, தத்துவத்தின் முடிவை அறிவித்ததாக அல்லது மிக முக்கியமான திருப்புமுனையாக இது மார்க்சியர்களால் கருதப்பட்டும் வந்திருக்கிறது.

ஆனால், காரல் மார்க்ஸ் இந்த முடிவிற்கு எப்படி வந்து சேர்ந்தார் என்ற கேள்வியைப் பொருத்த அளவில் அவர்களுடைய புரிதல் மிகமிக மேலோட்டமானது என்பது என் துணிபு. அவர்களுடைய புரிதலை ‘ஆழப்படுத்துவதை’ வேலையாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, கார்ல் மார்க்சின் இந்த ஆய்வு முடிவு சரிதானா, அப்படியென்றால் எந்த அளவுக்கு என்ற கேள்வியின் மீது கவனத்தைக் குவிப்பதே நல்லது.

ஃபாயர்பாக் மீதான ஆய்வுரைகளில் முதல் ஆய்வுரை, ” Hence he (ஃபாயர்பாக்) does not grasp the significance of “revolutionary”, of “practical-critical” activity” என்று முடிகிறது. அதேபோன்று, மூன்றாவது ஆய்வுரை, “The coincidence of the changing of circumstances and of human activity or self-change can be conceived and rationally understood only as revolutionary practice” என்று முடிகிறது.

இதில், “practical-critical activity” கம்யூனிஸ்ட்டு கட்சிகளிலிருந்து விலகி நின்று செயல்பட்ட மார்க்சிய அறிவுஜீவிகள் தம்மை நியாயப்படுத்திக் கொள்ளவும், “revolutionary activity” கம்யூனிஸ்ட்டு கட்சிகள் தமது கட்சியையும், நடைமுறையையும் நியாயப்படுத்திக் கொள்ளவும், அணிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், தம்மிடமிருந்து சற்று விலகி நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளை, தேவையான சந்தர்ப்பங்களில் ‘விமர்சனத்தோடு அணுகவும்’, மற்ற சந்தர்ப்பங்களில் தாக்கவும் பயன்பட்டன என்ற வரலாற்றைப் பெரிதாக விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இருதரப்பாருமே, காரல் மார்க்ஸ் praxis என்ற சொல்லில் இருந்தே, அதன் பொருளாக அவர் புரிந்துகொண்ட விஷயங்களிலிருந்தே, மேற்கண்ட இரு பதங்களையும் கையாண்டார் என்பதைக் கோட்டை விட்டுவிட்டனர். மேற்சொன்ன பதத்திற்கும் அதன் பொருளுக்கும் அவர் எங்கனம் வந்து சேர்ந்தார் என்பதை விளக்க ஒரு தனிநூலே தேவைப்படும் என்பதாலும், அது இங்கு நோக்கமில்லை என்பதாலும், தவிர்த்துவிட்டு, இச்சொல்லின் பொருள், அது குறித்த காரல் மார்க்சின் புரிதல் என்ற திசையில் திரும்பிவிடுவது நன்றென்று தோன்றுகிறது.

Praxis ஒரு கிரேக்கச் சொல். பொதுவாக, இது நடைமுறை என்று பொருள் தரும் practice என்ற சொல்லாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டாலும், இதன் பொருளுக்கு நெருங்கிவரக் கூடியதாக இருக்கும் ஆங்கிலச் சொல் doing. இதைச் சரியாக விளங்கிக் கொள்ள poiesis என்ற மற்றொரு கிரேக்கச் சொல்லைப் பார்க்கலாம்.

Poiesis என்ற கிரேக்கச் சொல்லுக்கு நெருக்கமான ஆங்கிலச் சொல் making. தொழிற்படுதல் என்று இதை தமிழில் எழுதலாம். களிமண்ணைத் தொழிற்படுத்தி நாம் மட்கலன்களை உருவாக்குகிறோம். கற்களைத் தொழிற்படுத்தி வீடுகளை உருவாக்குகிறோம்.

தொழிற்படுதல் எப்போதும் ஒரு பொருளை உருவாக்குவதில் முடிகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட பொருட்கள் முழுமையாக உருவாகி முடிந்தபின்பே அர்த்தமுள்ள நடவடிக்கைகளாகக் கொள்ளப்படும். வீட்டைக் கட்டி முடித்தபின்பே அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொருள் பதிந்தவையாக இருக்கும்.

Doing என்று பொருள்படும் praxis – ஐ தமிழில் செய்தல் அல்லது ஈடுபடுதல் என்று எழுதலாம். கிரேக்க அர்த்தத்தில் செய்தல் சிறப்பாகச் செய்தல் (doing something well). இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு புல்லாங்குழலை வாசிப்பதைச் சொல்லலாம்.

புல்லாங்குழலை வாசிப்பதால் எந்த ஒரு பொருளும் உருவாகிவிடுவதில்லை. அதேசமயம், புல்லாங்குழலை சிறப்பாக வாசித்தாலேயே வாசித்ததாகக் கொள்ளப்படும். புல்லாங்குழலை வாசிப்பதாலேயே (சிறப்பாக) அந்நடவடிக்கை நிறைவானதாகிறது. அது நிறைவு பெறுவது வாசிப்பை நிறுத்துவதால் அன்று (இதற்கு மாறாக, வீட்டைக் கட்டி முடித்தபின்பே அவ்வீட்டைக் கட்டும் நடவடிக்கை – தொழிற்பாடு நிறைவு பெறுகிறது). இங்கு, நடவடிக்கையும் முடிவும் வெவ்வேறாக இருப்பதில்லை. வாசிப்பதை நிறுத்துவதற்கு வெகுநேரத்திற்கு முன்பாகவே அது தன் இலக்கை எய்திவிடுகிறது.

தொழிற்படுதலில் (making) இலக்கும் நடவடிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது. ஈடுபடுதலில்/செய்தலில் (doing) இலக்கும் நடவடிக்கையும் பிரிக்க முடியாததாக இருக்கிறது.

(தொடரும் …)

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003

%d bloggers like this: