சீமச்சாமி

குறிப்பு: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தம்மை ஊக்கமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இயக்கத்தினருக்கு உதவியாக இருக்கும் பொருட்டு இப்பிரதியை எழுதியிருக்கிறேன். பார்ப்பனியத்தையும், சாதி ஆதிக்கத்தையும் நுட்பமாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவோர், சி பி ஐ, சி பி எம், மற்றும் “நாம் தமிழர்” போன்ற பாசிசக் கொள்கையுடையோர் தவிர்த்து பிறர் இதைத் தமது செயல்பாடுகளுக்கு அணுக்கமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றும்படி, இதை வீதிநாடகம் என்ற வகையினத்திற்குள் வைத்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. Peter Brook முன்வைத்த “எந்த ஒரு வெளியையும் நாடக வெளியாக மாற்ற இயலும்” என்ற கருத்தாக்கத்தைக் கிரகித்துக் கொண்டதில் ஒரு முயற்சியாகவும், தமிழர் பண்பாட்டில் தற்சமயம் அழிந்து கொண்டிருக்கும் சிறுவர் விளையாட்டுகளை நினைவுபடுத்தும் விதமாகவும், விளையாட்டுகளின் ஊடாக நாடகப் பிரதியை அமைக்கும் ஒரு பரிசோதனையாகவும் முயன்றது. 

நன்றி: கீற்று

அரங்கின் மையத்தில் அணு உலையைக் குறிப்பால் உணர்த்தும், அரைவட்டக்  குவிய அமைப்புடைய, ஒரு நபர் வசதியாக அமர்ந்திருந்து, படிப்படியாக எழுவதற்கு போதிய இடம் உள்ள, திறந்து – இரண்டாகப் பிளந்து – வெளியே வர வழியுடன், அட்டைப் பெட்டியினாலான அமைப்பு. அரைவட்டக் குவியம், உள்ளே அமர்ந்திருக்கும் நபர், அதைக் கிழித்துக் கொண்டு படிப்படியாக எழுவதற்கு உகந்த வகையில் மெல்லிய தாளினால் ஆனதாக இருக்க வேண்டும்.

ஒருவர் ஆடையை ஒருவர் பற்றியபடி வரிசையாக 10 நபர்கள் அரங்கினுள் மெதுவான ஓட்டத்தில் நுழைகிறார்கள். ”அணு உலை” அமைப்பை ஒரு முறை 8 வடிவில் சுற்றி வருகிறார்கள்.

அனைவரும் சேர்ந்து:     “ஒரு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”ரெண்டு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”மூனு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”அஞ்சு வருஷம் தண்ணி ஊத்தியும் ஒத்த பூ பூக்கல”

”பத்து வருஷம் தண்ணி ஊத்தியும் ஒத்த பூ பூக்கல”

”நூறு வருஷம் தண்ணி ஊத்தினாலும் ஒத்த பூ பூக்காது”

என்ற படி ”அணு உலை” அமைப்பைச் சுற்றியும் “கால் போன போக்கிலும்” அரங்கைச் சுற்றி வருகின்றனர்.

முடிந்ததும், இருவர் “அணு உலை” அமைப்பிற்கு நேரெதிராக, நன்கு இடைவெளி விட்டு, எதிரெதிராக நின்று, தமது இரு கரங்களையும் உயர்த்தி, கோர்த்துப் பிடித்து நிற்கின்றனர்.

மற்ற எட்டு நபர்களும் அவர்களைச் சுற்றி, அவர்களுக்கு ஊடாக, 8 வடிவில், நுழைந்து வெளியேறியபடி, மெதுவான ஓட்டத்தில், விளையாட்டைத் தொடங்குகின்றனர்.

“ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது”.

“ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்தது”.

“பத்து குடம் தண்ணி ஊத்தி பத்தே பூ பூத்தது”.

”அணு உலை” அமைப்பின் மேல் பாகத்தைக் கிழித்துக் கொண்டு “கோரமான” அலங்கரிப்பில் உள்ளிருப்பவர் தலையை நீட்ட ஆரம்பிக்கிறார்.

பத்தாவது சுற்றின் போது அவரது தலை கழுத்து வரையில் வெளியேறியிருக்க வேண்டும்.

பத்தாவது சுற்றில் கைகளை உயர்த்திப் பிடித்திருக்கும் இருவரும் சேர்ந்து சுற்றி வருவோரில் ஒருவரை “சிறைப் பிடிக்க” வேண்டும். மற்ற எழுவரும், அரங்கின் விளிம்புகளை நோக்கி சிதறி ஓடி பார்வையாளர்களோடு கலந்துவிடவேண்டும்.

சிறைப்பிடிக்கப்பட்டவருக்கும் சிறைப்பிடித்தவர்களுக்கும் இடையில் உரையாடல் தொடங்குகிறது.

பிடிபட்டவர்: (பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் லேசாக விரித்து, பிடித்தவர் ஒருவரை நோக்கித் திரும்பி) இம்புட்டு பணம் தாரேன் விடுடா கிறுக்கா!

பிடித்தவர்: முடியாது!

பிடிபட்டவர்: (அடுத்தவரை நோக்கித் திரும்பி, இரு விரல்களையும் மேலும் விரித்து) இம்புட்டு பணம் தாரேன் விடுடா கிறுக்கா!

பிடித்தவர்: முடியாது!

(பிடிபட்டவர் கையளவு, குனிந்து பாதத்திற்கு மேலாக சற்று உயர அளவு, முழங்கால் அளவு, இடுப்பளவு, கழுத்தளவு, தலையளவு, தலைக்கு மேலே கை உயர்த்தி, அளவைக் கூட்டிக் கொண்டே போக, பிடித்தவர்கள் அனைத்தையும் மறுக்கின்றனர்).

பிடிபட்டவர்: (யோசித்து) சரி. உங்க ரெண்டு பேருக்கும் நிறைய கல்லு தாரேன்!

பிடித்தவர்: (இருவரும் ஒரு சேர வியந்து) கல்லா?!

பிடிபட்டவர்: கல்லு – கிரானைட் குவாரி தாரேன்னேன்.

பிடித்தவர்: (இருவருமாக மறுக்கும் தொனியில்) ம்ஹூம்!

பிடிபட்டவர்: ஆளுக்கு ரெண்டு தாரேன்.

பிடித்தவர்கள் மீண்டும் மறுக்கின்றனர்.

பிடிபட்டவர்: சரி. பத்து பத்து?

பிடித்தவர்: (இருவருமாக) பத்தாது!

பிடிபட்டவர்: சரிடாப்பா! பத்து ஊரு குவாரி தாரேன்.

பிடித்தவர்: (இருவருமாக)) ம்ம்ம் … எந்த எந்த ஊரு?

பிடிபட்டவர்: கிருஷ்ணகிரிய சுத்தி இருக்குற 18 பட்டி குவாரியவும் தாரேன்.

பிடித்தவர்: (இருவருமாக) பத்தாது! பத்தாது!

பிடிபட்டவர்: (சற்றே யோசித்து) சரிங்கடாப்பா! மதுர ஜில்லா முழுக்க தாரேன்.

பிடித்தவர்: (யோசித்து – இருவருமாக) ம்ம்ம் … கொசுறு?

பிடிபட்டவர்: அட! வெட்டாம விட்ட ஆன மலயவும் தாரேன். இந்தாபிடி!

சிதறி ஓடிய மற்றவர்கள் பல்வேறு திசைகளில் இருந்தும் ஓடி வந்து இம்மூவரையும் வட்டமாக சூழ்ந்து, கைகளைக் கோர்த்துக் கொண்டு, வட்டமடித்தபடி, பாடுகிறார்கள். கைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கும் இருவரும் பிடிபட்டவர் உள்ளேயே இருக்க, தட்டாமலை சுற்றுகிறார்கள்.

“குலை குலையா முந்திரிக்கா

நரியே நரியே சுற்றி வா

கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்

கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி”

“மலை மலையா குவாரியா

நரியே நரியே சுற்றி வா

தப்பிச்சவனெல்லாம் எங்கிருக்கான்

ஊருக்குள் இருக்கான் கண்டுபிடி”

பிடித்தவர்கள் விடுவிக்க, பிடிபட்டவர் “டுர்ர்ர்ர்ர்” என்று ஒலியெழுப்பியபடி ஓடுகிறார். வட்டமடித்தவர்கள் அதே வரிசையில் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக ஆடையைப் பிடித்துக் கொண்டு வரிசையாகச் சேர்ந்து கொள்ள, தட்டாமலை சுற்றியவர்கள் சேர்ந்துகொள்ள, தப்பி ஓடியவர் வரிசையின் இறுதியில் இணைந்து கொள்கிறார். அனைவரும் சேர்ந்து, “அணு உலை” அமைப்பை எட்டு வடிவில் சுற்றி,

“ஒரு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”ரெண்டு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”மூனு வருஷம் தண்ணி ஊத்தி ஒத்த பூ பூக்கல”

”அஞ்சு வருஷம் தண்ணி ஊத்தியும் ஒத்த பூ பூக்கல”

”பத்து வருஷம் தண்ணி ஊத்தியும் ஒத்த பூ பூக்கல”

”நூறு வருஷம் தண்ணி ஊத்தினாலும் ஒத்த பூ பூக்காது”

என்று பாடியபடி வலம் வந்து, வேறு இருவர் கரங்களை உயர்த்தி கோர்த்து நிற்க, பிற எட்டு நபர்களும் விளையாட்டைத் திரும்பவும் துவங்குகின்றனர். இம்முறை கரம் உயர்த்தி நிற்கும் இருவரும் அதிகாரத்தின் உச்சங்களில் இருப்பவர்களைச் சுட்டும் குறியீடுகளை அணிந்திருத்தல் வேண்டும்.

பத்தாவது சுற்றில் ஒருவர் சிறைப்படுகிறார். மற்றவர்கள் சிதறி ஓடி விடுகின்றனர். இச்சமயத்தில், “அணு உலை” அமைப்பினுள் இருப்பவர், படிப்படியாக, முழுதாக நின்ற நிலைக்கு வந்திருக்க வேண்டும்.

சிறைப்பட்டவருக்கும் சிறைப்பிடித்தவர்களுக்கும் உரையாடல் துவங்குகிறது.

சிறைப்பட்டவர்: என்ன விட்டுடுங்கய்யா!

சிறைப்பிடித்தவரில் ஒருவர் (பெண்): துட்டு இருக்கா?

சிறைப்பிடித்தவரில் மற்றவர் (ஆண்): எவ்ளோ வச்சிருக்க?

பட்டவர் இருவரையும் பார்த்து விழிக்கிறார்.

பிடித்தவர் (பெண்): போன ஆட்டத்துல மாட்டுனவன் கல் குவாரி, கிரானைட் குவாரி குடுத்து தப்பிச்சான். உன்னிட்ட என்ன இருக்கு!

பிடித்தவர் (ஆண்): சுரங்கம் இருக்கா? கிணறு இருக்கா? பெட்ரோல் கிணறு!

பிடித்தவர் (பெண்): 40,000 கோடி அடிச்சவனையே புடிச்சிருக்கேன் நான்.

பிடித்தவர் (ஆண்): அதைவிட நாலு மடங்கு அடிச்சவங்கள தப்பிக்க விட்டிருக்கேன் நான்.

இருவருக்கும் இடையில் சண்டை மூண்டுவிடுகிறது.

பிடித்தவர் (பெண்): புடிச்சது நான். கோட்ட விட்டது நீ.

பிடித்தவர் (ஆண்): (மக்குத்தனமாக, பிடிபட்டவரைக் காட்டி) இவனப் புடிச்சது நீயா? நீயா? நான் தான் புடிச்சேன். நான் தான் புடிச்சேன்.

பிடித்தவர் (பெண்): எதுக்குமே பேசமாட்ட! ஊமையாட்டமே இருப்ப! இப்போ என்னையே எதிர்த்துப் பேசுறியா?

பிடித்தவர் (ஆண்): (சிணுங்கியபடி) ம்ம்ம் … நா ஒன்னும் ஊமயில்லை. அம்மாவ கேக்காம பேசமாட்டேன் அம்புட்டுத்தேன்.

இச்சமயம் சிதறி ஓடியவர்கள், மெதுவாக அரங்கினுள் நுழைகிறார்கள். இருவரும் சண்டையிட்டுக் கொள்வதைப் புரியாத தொனியில், சற்று எட்ட நின்று,  ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இவர்களில் ஒருவர் மற்றொருவரிடம்:

ஒருவர்: என்ன இது? வெளயாட்டு வேற எங்கியோ போகுது!

மற்றவர்: இது வெளயாட்டு மாதிரி தெரியல்லையே!

மற்றுமொருவர்: அதானே!

பிடித்தவர் (பெண்): சரி, சரி, அழுவாத. புடிச்சது யாரு? நீயா நானா?

பிடித்தவர் (ஆண்): (பிடிபட்டவரைக் காட்டி அடம் பிடிக்கும் தொனியில்) நான் தான் புடிச்சேன். நான் தான் புடிச்சேன்.

பிடித்தவர் (பெண்): மக்கு! மக்கு! நா இவனச் சொல்லலை. 40,000 கோடி அடிச்சவனைப் புடிச்சது யாரு? நீயா நானா? அத விட நாலு மடங்கு அதிகமா அடிச்சவங்கள கோட்ட விட்டது யாரு? நீயா நானா?

பிடித்தவர் (ஆண்): (அழுகையின் விளிம்பில்) ம்ம்ம் … நீ தான்! நான் தான்!

பிடித்தவர் (பெண்): (சலிப்புடன்) இதுக்கு நீ ஊமையாட்டுமே இருக்குறது தேவலை!

பிடித்தவர் (ஆண்): (அழுகைத் தொனியில்) நா ஒன்னும் கோட்ட விடல. ஒன்னுமே நடக்கல. யாருமே திருடல. எல்லாரும் பொய் சொல்றீங்க.

பிடித்தவர் (பெண்) சலிப்பாகத் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறார். இருவருக்குமான சண்டையில், பிடிபட்டவர் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகலப் பார்க்கிறார்.

பிடித்தவர் (பெண்): அங்க பார்! அங்க பார்! அவன் தப்பிக்கப் பாக்குறான் பார்! விடாதே பிடி அவனை! அவனைப் பிடி!

பிடித்தவர் (ஆண்) ஓடிச் சென்று பிடிபட்டவரைப் பிடித்து இழுத்து வருகிறார்.

பிடித்தவர் (பெண்): நம்ம அப்புறமா அடிச்சிக்கலாம் கடிச்சுக்கலாம். இவனை முதல்ல கவனி.

பிடித்தவர் (ஆண்): சரி! நீ இன்னாதான் வச்சிருக்க? குடுத்துட்டுக் கெளம்பு!

பட்டவர்: அய்யா! இது வழிப்பறி மாதிரி இருக்கே! என் ஆயுசுல கடற்கொள்ளைக்காரங்களைக்கூட நான் பார்த்ததில்லையே! அய்யா! அம்மா! கடல நம்பி எங்க பொழப்பு! கடல யாரும் பட்டா போட்டு கொடுக்கல்லையே அம்மா! இந்தக் கடற்கரை மண்ணுகூட எங்களுக்குச் சொந்தமில்லையே அய்யா!

பிடித்தவர் இருவருமாக: பொய் சொல்லாதே! தீவிரவாதின்னு புடிச்சு உள்ளே போட்டுடுவேன்.

பிடிபட்டவர்: அய்யா! அம்மா! என்ன விட்டுடுங்கம்மா! என்ன விட்டுடுங்கய்யா! நானுண்டு என் பொழப்புண்டுன்னு இருக்குறேன். கடலையும் (கீழே குனிந்து மண்ணை அள்ளும் பாவனை செய்து) இந்த மண்ணையும் தவிர எனக்கு வேற  ஒன்னும் தெரியாது.

இருவருமாக: யாருக்கு வேணும் இந்த மண்ணு! அதை நீயே தின்னு! (என்றபடி பிடிபட்டவரின் வாயில் மண்ணை வலுவில் திணித்து அவரைத் தரையில் வீழ்த்தி அழுத்துகின்றனர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து,

ஒருவர்: ஏ! விடப்பா!

மற்றொருவர்: ஏ! என்னப்பா இது!

மற்றுமொருவர்: என்ன அநியாயம்யா இது?

பிடிபட்டவரின் கழுத்தை பிடித்த பெண் நெறித்துக் கொண்டிருக்க, ஆண் எழுந்து வந்து கேள்வி கேட்டவர்களை நோக்கி, மிரட்டும் தொனியில்,

பிடித்தவர் (ஆண்): (போலீசாரைச் சுட்டும் குறியீடு அணிந்து) “இப்ப இன்னா உனக்கு? கம்முனு மூடிட்டு போ! பொண்டாட்டி இருக்கா? புள்ள இருக்கா? போய் பொழப்ப பாரு! குடும்பத்த பாரு! வந்துட்டாங்க பெருசா! வீட்டுக்கு போயி சோத்தத் துண்ணுட்டு டிவி பாரு. போ போ போ!

கேள்வி கேட்டவர்கள் தலை குனிந்து திரும்பி நடக்க ஆரம்பிக்க, வேடிக்கை பார்த்து நிற்கும் மற்றவர்களை நோக்கி,

பிடித்தவர் (ஆண்): இன்னா இங்க வேடிக்க! கெளம்பு கெளம்பு கெளம்பு!

அவர்களும் கலைய ஆரம்பிக்க, அக்கணத்தில் “அணு உலை”யைப் பிரித்துக் கொண்டு, உள்ளிருக்கும் பயங்கர உருவம், பிடிபட்டவரின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் இருவரையும் நோக்கி உறுமிக்கொண்டு வெளியே வருகிறது. இருவரும் அதிர்ந்து பிடிபட்டவரை விட்டுவிட்டு அந்த உருவத்தைப் பார்த்து பயந்து பின்வாங்கி ஒதுங்குகின்றனர். விலகிச் செல்லத் தொடங்கிய மற்றவர்களும் உறுமலைக் கேட்டு அதிர்ச்சியில் திரும்பி உறைந்து நிற்கின்றனர். உருவம், தரையில், கழுத்து நெறிபட்டுக் கொண்டிருக்கும் நபரைக் காட்டி,

உருவம்: (பிடித்தவர்களை நோக்கி) இவனைக் கொல்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? (வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி) தடுக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யாரடா?

அனைவரும் பின்வாங்கி உறைந்து நிற்கின்றனர்.

உருவம்: யாரடா! இங்கே என் முன்னாலே வந்து சொல்லு!

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் துணிந்து முன் சென்று,

ஒருவர்: சாமி யாருங்க?

உருவம்: (பலமாகச் சிரித்து) என்னைத் தெரியல்லை? (பார்வையாளர்களைக் காட்டி) அத்தனை பேரையும் பூச்சி மாதிரி நசுக்கி, பொசுக்கிவிடும் சக்தி படைத்தவன் நான்.

மற்றொருவர்: புரியல்லையே! இன்னும் கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லாருக்கும் சாமி!

உருவம்: சொல்லணுமா?

உருவம் சிலிர்த்துக் கொண்டு ஆடியபடி, திறந்திருக்கும் “அணு உலை” அமைப்பிற்குள் நுழைந்து ஒரு பக்கம் வெண்ணிறமும் மறுபக்கம் கறுப்பு நிறமுமாக இருக்கும் ஒரு நீள அங்கியை, வெண்ணிறம் மேல் தெரியுமாறு போர்த்திக் கொண்டு, பறவை முகமூடி அணிந்து, வெளியே வந்து, ஆடிப் பாடி அரங்கை வலம் வரத் தொடங்குகிறது. மற்ற அனைவரும் வரிசையாக, கைகளை விரித்து, தோளோடு தோள் இணைத்துக் கொண்டு, ஆடியபடி உருவத்தைத் தொடர்கின்றனர். இருவர், அதிகாரத்தில் இருப்பவர்களைச் சுட்டும் குறியீடுகளை நீக்கிவிடுகின்றனர்.

உருவம்:     கியாங் கியாங் குருவி நான்

கியாங் கியாங் கீ

கியாங் கியாங் குருவி நான்

கியாங் கியாங் கீ

உருவத்தைப் பின் தொடர்பவர்கள் இதே வரிகளைக் கோரஸாகப் பாடுகிறார்கள்.

உருவம்:     சிறகொடிந்த குருவி நான்

கியாங் கியாங் கீ

கூடு கட்ட அலைகிறேன்

கியாங் கியாங் கீ

(கோரஸ்)

சிறு குருவி நான் ஆமாம்

கியாங் கியாங் கீ

சின்னக் குருவி நான் ஆமாம்

கியாங் கியாங் கீ

(கோரஸ்)

உருவம் அவர்களை நோக்கித் திரும்ப, அனைவரும் நெருக்கமான வெளிமுகமான வட்டமாக இணைந்து கொள்கிறார்கள்.

உருவம்:     வாழை மரமே வாழை மரமே

இடம் தருவாயோ

மழைக்காலத்தில் குஞ்சு பொரிக்க

இடம் தருவாயோ

அணியினர்: தரமாட்டேன் தரமாட்டேன்

இடம் தரமாட்டேன்

நீ பறவையில்லை குருவியில்லை

இடம் தரமாட்டேன்

உருவம் திரும்பிக் கொண்டு ”கியாங் கியாங் கீ … கியாங் கியாங் கீ” என்று பாடிக் கொண்டு அடுத்த ”மரத்தை” தேட ஆரம்பிக்கிறது. வட்டமாகச் சேர்ந்தவர்கள் பிரிந்து தோள்கள் இணைந்தபடி கோரசாக பாடி ஆடிக் கொண்டு உருவம் சென்றதற்கு எதிர்த்திசையில் வட்டப் பாதையில் செல்கிறார்கள்.

உருவமும், அணியாகச் சென்றவர்களும் நெருங்குகையில், அணியினர் மீண்டும் தம்மை நெருக்கமான வட்டமாக, வெளிமுகமாக அணைத்துக் கொள்கிறார்கள்.

உருவம்:     பனை மரமே பனை மரமே

இடம் தருவாயோ

குளிர் காலத்தில் கதகதக்க

சிறு பொந்து தருவாயோ

அணியினர்: தரமாட்டேன் தரமாட்டேன்

இடம் தரமாட்டேன்

நீ பறவையில்லை குருவியில்லை

ஏமாற மாட்டேன்

உருவம் அடுத்த மரத்தை தேடி, ஆடிப் பாடிக் கொண்டு, அரங்கின் மையத்தை நோக்கி நகர்கிறது. அணியினர், அதே போன்று பின் தொடர்கின்றனர். மீண்டும் அதே வடிவ அமைப்பில் வெளிமுகமாகக் குவிகின்றனர்.

உருவம்:     தென்னை மரமே தென்னை மரமே

இடம் தருவாயோ

வெயில் காலத்தில் இளைப்பாற

நிழல் தருவாயோ

அணியினர்: தரமாட்டேன் தரமாட்டேன்

இடம் தரமாட்டேன்

நீ கருப்பில்லை காகமில்லை

நிழல் தரமாட்டேன்

உருவம் ஆடியபடியே, போர்வையைக் கறுப்பு நிறப் பக்கம் வெளித்தெரியும்படியாக போர்த்திக் கொள்கிறது. பறவை முகமூடியைக் கழற்றி தன் பயங்கர முகத்தைக் காட்டுகிறது. அணியினர் வட்டத்தில் இருந்து வரிசையாக மாறுகின்றனர்.

உருவம்:     கன்னுக் குட்டி நான்

சின்னக் கன்னுக் குட்டி நான்

அணுவைப் பிளந்து ஆற்றல் எடுக்கும்

கன்னுக் குட்டி நான்

அணியினர்: அணுவைப் பிளந்து ஆற்றல் எடுக்கும்

கன்னுக் குட்டி நீ

உருவம் அதே வரிகளை பாடியபடி, “அணு உலை” அமைப்பைச் சுற்றி வருகிறது. அணியினர் இருந்த இடத்திலேயே ஆடியபடி, கோரசாகப் பாடிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும், பிரிந்து சென்று “அணு உலை” அமைப்பிற்குள் இருக்கும் பல நாட்டுக் கொடிகளை எடுத்து வந்து இணைந்து கொள்கிறார். உருவம் அணியினரை நெருங்கியதும், ஒரு நாட்டின் கொடியை (அமெரிக்கா) வீசி அசைத்து அடுத்தவர் கைகளுக்கு மாற்றி நகர்த்துகின்றனர்.

உருவம்:     கட்டி அணைப்பாயோ என்னைக் கட்டி அணைப்பாயோ

ஆற்றல் தருவேன் அணு குண்டும் தருவேன்

கட்டி அணைப்பாயோ

அணியினர்: போதும் போதும் பட்டது போதும்

இங்கு கட்ட மாட்டேன்

வேற்று நாட்டில் கட்டக் கொடுத்து

அணு குண்டு செய்து கொள்வேன்.

உருவம், பாடியபடி அரங்கைச் சுற்றி வலம் வந்து அணியினரை நோக்கித் திரும்ப வருவதற்குள், அணியினர் ஜப்பான் நாட்டுக் கொடியைத் தம் கரங்களுக்கு மாற்றிக் கொள்கின்றனர். அணியினரை நோக்கி,

உருவம்:     கட்டி கொள்ளுவாயோ என்னைக் கட்டி கொள்ளுவாயோ

ஆற்றல் தந்தேன் அணு குண்டும் தந்தேன்

கட்டி அணைச்சுக் கொள்வாயோ

அணியினர்: பட்டது போதும் செத்தது போதும்

இனி திறக்க மாட்டேன்

நாடு கெட்டது போதும் பட்டது போதும்

இனி திறக்க மாட்டேன்.

அணியினர் பல நாட்டுக் கொடிகளைத் ஏந்தியபடி, ஒருவர் பின் ஒருவரான வரிசையாக மாறி, உருவத்தை ஆடியபடி துரத்துகின்றனர்,

அணியினர்: குண்டும் வேணாம் குழியும் வேணாம்

எடங் காலி பண்ணு

அணு குண்டும் வேணாம் கழிவும் வேணாம்

எடங் காலி பண்ணு

அணியினர் துரத்த, உருவம் அரங்கில் ஆங்க்காங்கே அலைந்தபடியும், பார்வையாளர்களை நோக்கியும்,

உருவம்:     எவன் கிடைப்பானோ எனக்கு எவன் கிடைப்பானோ

கட்டி வச்சுக்க இளிச்சவாயன் எவன் கிடைப்பானோ

அணு குண்டு தாரேன் கழிவும் தாரேன்

கட்டி வச்சுக்கோங்க

தத்திக்கிடத்தோம் பொய்யச் சொல்லி

என்ன வச்சுக்கோங்க

(கூத்தின் வடிவங்களில் ஒன்றான திரும்பத் திரும்ப இழுத்திசைக்கும் பாணியில், கெஞ்சுதலில் இருந்து மன்றாடி, அழுது கெஞ்சுவது வரை இதை நிகழ்த்தலாம்).

இந்த நிகழ்த்துதலின் போது, அணியில் இருந்து இருவர் பிரிந்து சென்று, அதிகாரத்தின் உச்சங்களில் இருப்பவர்களைச் சுட்டும் குறியீடுகளைத் மீண்டும் அணிந்து கொள்கின்றனர். பிறர் ஒவ்வொருவராக அணியில் இருந்து பிரிந்து அரங்கிலிருந்து வெளியேறுகின்றனர். உருவம் தனியாக பாடித் திரிந்து கொண்டிருக்கையில், அதிகாரக் குறியீடுகளான இருவரும் உருவத்தை நோக்கி ஆடியபடி,

இருவர்:     நான் வச்சுக்கிடறேன்

உன்ன நான் வச்சுக்கிடறேன்

கட்டி வச்சுக்கிடறேன்

உன்ன கட்டி அணைச்சுக்கிடறேன்

மின்சாரமுன்னு பொய்யச் சொல்லி

நான் வச்சுக்கிடறேன்

எதிர்த்துக் கேக்க எவரும் வந்தா

கட்டி உதைச்சுடுவேன்

நான் வச்சுக்கிடறேன்

உன்ன நான் வச்சுக்கிடறேன்

என் சம்சாரமுன்னு மின்சாரமுன்னு

கட்டி அணைச்சுக்கிடறேன்.

பாடியபடியே இருவரும் உருவத்தை “அணு உலை” அமைப்பிற்குள் கொண்டு நிறுத்திவிட்டு வெளியே வந்து, ”அணு உலை” அமைப்பைச் சுற்றி நடனமாடியபடி,

இருவரும்:   ஹே! சீமச்சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

ஞான சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

விஞ்ஞான சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

மின் சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

மின்சார சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

குண்டு சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

அணு குண்டு சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

பவர் சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

சுப்பர் பவரு சாமி வந்திருக்கு

டும் டும் டும் டும்!

சீம சாமி வந்திருக்கு

சீம சாமி, சீம சாமி, சீம சாமி, சீம சாமி …. சீம சீம சீம சீம சீ…ம!

இரண்டாவது சுற்றில் மேலும் மூவர் இணைந்து கொள்ள, சீமச்சாமியான உருவத்தை “அணு உலை” அமைப்பிலிருந்து வெளியே கொண்டுவந்து, அதைச் சுற்றி ஐவரும் வட்டமிட்டு பாடிக் கொண்டே அரங்கை வலம் வந்து பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து, மீண்டும் “அணு உலை” அமைப்பிற்குள் கொண்டு நிறுத்துகின்றனர். ”அணு உலை”க்குள் உருவத்தை நிறுத்தியவுடன், மற்ற ஐவர் ஒவ்வொருவராக அரங்கினுள் பிரவேசித்து, பயபக்தியுடன் “சாமி கும்பிட்டு” நிற்க வேண்டும்.

அணுவிஞ்ஞானியைக் குறிக்கும் பாவனைகளுடன் ஒருவர் சூடம் ஏற்றி, தீபாராதனை காட்டி வழிபட்டு, கும்பிட்டு நிற்பவர்களுக்கு வரிசையாக சூடத்தைக் காட்டி வருகையில், வழிபட்டு நிற்பவரில் ஒருவர் “அருள்” ஏறி ஆடத்தொடங்குகிறார்.

சாமியாடுபவர்: அடேய்! சூது நடக்குதடா இங்க! சூது நடக்குது!

அனைவரும் பதறி, சிதறி, பக்கவாட்டுகளில் இரண்டு பிரிவினராகப் பிரிந்து, சாமியாடுபவரை நோக்கி பயபக்தியுடன் நிற்கின்றனர். ஒரு பிரிவில், பூசை செய்தவர் உட்பட, அதிகாரக் குறியீடுகளை அணிந்தவர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் இருக்க, மற்ற பிரிவில் சாமி கும்பிட வந்தவர்களில் நால்வர் என்று பிரியவேண்டும்.

பூசை செய்தவர்: சீமச்சாமி! இப்போதானே உன் மனம் குளிர பூசை செய்தோம்! அதுக்குள்ளே என்ன ஆச்சு! என்ன தப்பு நடந்துச்சு?

சாமியாடுபவர்: அடேய்! நான் ஆத்தா வந்திருக்கேண்டா! சீமச்சாமியுமில்லே, மன்னார்சாமியுமில்லே! மாங்கா மடையனுங்களா! ஆத்தா வந்திருக்கேன்டா! உங்க ஆத்தா வந்திருக்கேன்!

நால்வர் பிரிவினர்: தாயே! ஆத்தா! சொல்லு ஆத்தா! என்ன குத்தம் நடந்தது? நாங்க என்ன தப்பு செஞ்சோம்?

சாமியாடுபவர்: தெய்வ குத்தம் நடக்குதடா! சூது நடக்குதடா! சூது!

ஐவர் பிரிவினர்: (சீமச்சாமியை காட்டி) சாமியே வரங்குடுக்க இங்க வந்திருக்கு. (பூசை செய்தவரைக் காட்டி) பூசாரியுமே வழியக் காட்டிட்டாரு. இதுல குறுக்குல நீ யாரு?

சாமியாடுபவர்: (ஆவேசமாக) அது சாமியில்லையடா! கொள்ளிவாய் பிசாசு! இந்தப் பூமியவே முழுங்கிடுமடா! புல் பூண்டு இல்லாம அழிச்சுடுமடா! (உடுக்கை ஒலிக்கு ஆவேசமாக ஆடியபடி)

நூறு வருசமானாலும் புல் பூண்டு முளைக்காது, புல் பூண்டு முளைக்காது

காடு மலை ஏரியெல்லாம் பொட்டகாடா பொசுங்கிப் போகும், பொட்டகாடா பொசுங்கிப் போகும்

கூன் குருடு குறைப்பிரசவம் தலைவிரிச்சு தானாடும் தலைவிரிச்சு தானாடும்

கண்ணவிஞ்சு தோலழுகி உசுரோட பிணமாகும் மனுசஜென்மம் உசுரோட பிணமாகும்

ஆயிரங்கண் ஆத்தா நான் பார்த்ததான் சொல்லிடறேன் பார்த்ததான் சொல்லிடறேன்

இந்தக் கொள்ளிக்கட்ட கொள்ளிவாய் பிசாசை விடாதீங்கடா

ஆவேசமாக ஆடிக்கொண்டு, ”அணு உலை” அமைப்பிற்குள் நிற்கும் உருவத்தை நோக்கி ஓடுகிறார். ஐவர் பிரிவினர் அவரது இரு கைகளை இருபுறங்களிலுமாக பிடித்துக் கொண்டு தடுக்கின்றனர். நால்வர் பிரிவினர் அவருக்கு சூடம் ஏற்றி, வழிபட்டு “மலையேற்று”கின்றனர்.

”அருள்” வந்தவரை ”மலையேற்றி”விட்டு நால்வரும் கைகளை உயர்த்தி சுழற்றிக் கொண்டே, “சூ சூ” என்று விரட்டும் ஒலியெழுப்பியபடி “அணு உலை” அமைப்பைச் சுற்றி வருகின்றனர். “மலையேறி”யவரும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்.

மற்ற ஐவரும் ஒரு அணியாக இணைந்து நிற்க, ஒருவர், அரங்கின் மையத்தில், காலால் கோடு ஒன்றைக் கிழிக்துவிட்டு அணியோடு இணைந்து கொள்கிறார். சுற்றி வந்தவர்கள், அதன் எதிர்புறம் சென்று அணியாக இணைந்து நிற்கின்றனர்.

முதல் அணியில் இருந்து ஒருவர், கோட்டை நோக்கி முன்னோக்கியும் பின்னே சென்றும் ஆடிக்கொண்டிருக்க:

முதல் அணியினர்: பூப்பறிக்க வருகிறோம்

எதிர் அணியினரில் இருந்து ஒருவர் எழுந்து கோட்டை நோக்கி, முன்னும் பின்னுமாக ஆடத்தொடங்க

எதிர் அணியினர்: யாரை அனுப்புறீர்

முதல் அணியினர்: அருக்காணியை அனுப்புறோம் இல்ல இல்ல போலீசை அனுப்புறோம்

இரு அணியினரும் சேர்ந்து: யாரைப் பறிக்கிறார்

இரு அணியினரும் சேர்ந்து: மாடசாமிய பறிக்கிறார்

இரு அணியினரும் சேர்ந்து:     சண்டை வரப் போகுது மண்டை உடையப் போகுது

இருவரும் கோட்டை மீறாமல், முன்னும் பின்னுமாக நகர்ந்து ஆடிக்கொண்டிருக்க, “அணு உலை” அமைப்பினுள் இருந்து உருவம் வெளியே வருகிறது. முதல் அணியில் இருந்து நால்வரும், உருவமும் சேர்ந்து கோட்டை நோக்கி முன்னும் பின்னுமாக பாடியபடி ஆடி, கோட்டை தாண்டிச் சென்று, உருவம் “தூக்கு! தூக்கு! ஆளைத் தூக்கு” என்று ஆணையிட எதிர் அணியினரில் ஆடுபவரை தூக்கிக் கொண்டு, “அணு உலை” அமைப்பினுள் கிடத்திவிட்டு, தம் இடத்திற்கு சென்று வரிசையாக இணைந்து நிற்கின்றனர். உருவமும் அவர்களது அணியில் சேர்ந்து நிற்கிறது. இம்முறை, எதிர் அணியினரில் எஞ்சியிருக்கும் ஒருவர் எழுந்து முன்னே வந்து ஆடத் தொடங்குகிறார். அவரைத் தொடர்ந்து முதல் அணியில் இருந்து ஒருவர்.

எதிர் அணியினர்: மீன் பிடிக்க செல்கிறோம்.

முதல் அணியினர்: யாரை அனுப்புறீர்

எதிர் அணியினர்: அப்பாசாமியை அனுப்புறோம்

முதல் அணியினர்: அனுப்பாதே அனுப்பாதே

எதிர் அணியினர்: சோற்றுக்கு வழியில்ல

முதல் அணியினர்: கல்லத் தின்னு மண்ணத் தின்னு

எதிர் அணியினர்: உயிர் பிழைக்க வழியில்ல

முதல் அணியினர்: உசிரெமக்கு புல்லாச்சு

முதல் அணியில் இருந்து உருவமும் மற்றவர்களும் இணைந்துகொள்ள, கோட்டை தாண்டிச் சென்று எதிர் அணியில் ஆடுபவரை முன்போல தூக்கிச் சென்று “அணு உலை” அமைப்பிற்குள் கிடத்திவிட்டுத் தம் இடம் சேர்கின்றனர். இம்முறை முதல் அணியில் இருந்து ஒருவர் முன்னே வந்து ஆடத் தொடங்குகிறார். இணையாக எதிர் அணியில் மிஞ்சியிருப்பவரில் ஒருவர் வந்து ஆடுகிறார்.

முதல் அணியினர்: பூப்பறிக்க வருகிறோம்

எதிர் அணியினர்: யாரை அனுப்புறீர்

முதல் அணியினர்: சிப்பாயை அனுப்புறோம்

எதிர் அணியினர்: யாரைப் பறிக்கிறீர்

முதல் அணியினர்: யாரானாலும் தூக்குவோம்

மீண்டும், முன்போல எதிர் அணியைச் சேர்ந்தவரை தூக்கிச் சென்று “அணு உலை” அமைப்பினுள் கிடத்திவிட்டு அணிசேர்ந்து நிற்கின்றனர். எதிர் அணியில் எஞ்சி இருப்போரில் ஒருவர் முன்வந்து ஆடுகிறார். முதல் அணியில் அனைவரும் எதிர்கொண்டு ஆடுகின்றனர்.

எதிர் அணியில் எஞ்சியிருப்பவர்: ஒத்த புள்ளய அனுப்புறேன்

முதல் அணியினர்: துப்பாக்கிய அனுப்புவோம்

எதிர் அணியில் இருந்து: ஒரே புள்ளய அனுப்புறேன்

முதல் அணியினர்: தோட்டாவை அனுப்புவோம்

எதிர் அணியில் இருந்து: உண்ணாமல் அனுப்புறேன்

முதல் அணியினர்: வீட்டைத் தாண்டாதே

எதிர் அணியில் இருந்து: உறங்காமல் அனுப்புறேன்

முதல் அணியினர்: வீதியிலே வராதே

எதிர் அணியில் இருந்து: வீரத்தோடு அனுப்புறேன்

முதல் அணியினர்: கோட்டைத் தாண்டாதே

மீண்டும் முதல் அணியினர் கோட்டை தாண்டிச் சென்று, எதிர் அணியில் ஆடுபவரை தூக்கிச் சென்று கிடத்திவிட்டு, தம் இடம் சேர்கின்றனர். எதிர் அணியில் எஞ்சியிருப்பவர், கோட்டிற்கு வந்து அமர்ந்து ஒப்பாரியைத் தொடங்குகிறார்.

கட்டையில போறவனே

செவத்த காட்டெரும

முரட்டு காட்டெரும

என் கட்டிக் கரும்பு வெல்லம்

ஒத்தக் கன்னுக்குட்டி

இளஞ் செட்டக் கன்னுக்குட்டி

நான் பெத்த கன்னுக்குட்டி

பொத்தி வளர்த்த கன்னுக்குட்டி

அத மிதிச்ச காட்டெரும

உதச்ச காட்டெரும

பிஞ்ச கொன்ன காட்டெரும

உன் கண்ணவிய காதழுக

மிதிச்ச காலு யான காலு

நோய் புடிச்சு சீழ்புடிச்சு

நீ நாண்டுகிட்டு தள்ளாட

லத்திக் கம்பெடுத்து

வெரட்டி வந்த காட்டெரும

உன் கையொடிச்சு காலொடிச்சு

என் வீட்டு கொல்லையில

தீ மூட்டி நான் பொசுக்க

அய்யோ என் வீடு என் வீடு

என் வீடு என் வீடு

ஆளுவச்சு அம்புவச்சு

ஆனச் சுவரு வச்சு

அம்பாரி ஊஞ்ச வச்சு

ஆசக் கனவு வச்சு

எம்புருசன் கட்டுனானே

எம்புருசன் கட்டுனானே

இப்போ குந்தக் குடிசையில்ல

ஒதுங்க கூரையில்ல

குடிக்க கூழுமில்ல

துண்டுமில்ல துணியுமில்ல

நடுத்தெருவுல விட்டானே

நடுத்தெருவுல விட்டானே

ஊரு சனம் பாத்திருக்க

ஒலகம் பாத்திருக்க

வானம் பாத்திருக்க

தெய்வம் பாத்திருக்க

கடலும் பாத்திருக்க

ஒத்த புள்ளையக் கொன்னானே

நான் பெத்த புள்ளையக் கொன்னானே

இத கேக்க நாதியில்ல

ஒத்த சனம் ஓடி வல்ல

மொத்த சனம் தேடி வல்ல

நியாயம் கேக்க வில்ல

நீதி கேக்க வில்ல

கேக்க நாதியில்ல

கேக்க நாதியில்ல

முதல் அணியினர் ஆடியபடி வந்து, அவரையும் தூக்கிச் சென்று “அணு உலை” அமைப்பினுள் கிடத்தி, உருவம் அமைப்பிற்குள் நிற்க, மற்ற அனைவரும் அரங்கைச் சுற்றி வந்து,

சீமச் சாமி வந்துடுச்சு

டும் டும் டும் டும்

விஞ்ஞான சாமி ஜெயிச்சுடுச்சு

டும் டும் டும் டும்

குண்டு சாமி வந்துடுச்சு

டும் டும் டும் டும்

அணு குண்டு சாமி ஜெயிச்சுடுச்சு

டும் டும் டும் டும்

அணு குண்டு வந்துடுச்சு

டும் டும் டும் டும்

மின்சாரம் வந்துடுச்சு

டும் டும் டும் டும்

சனங்கள கொன்னு வந்துடுச்சு

டும் டும் டும் டும்

என்று பாடி முடிக்கின்றனர்.

நாடகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

வம்ச வதம்

குடுகுடுப்பைக்காரனின் நுழைவுக்கு முன்பாக அரங்கில் கூக்குரல்கள், ஓலங்கள்… நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றாக விளக்குகளை ஏற்றி வைத்தல். ஒவ்வொரு விளக்கு ஏற்றப்படும்போதும் அதனருகில் காயம்பட்ட உருவம் ஊர்ந்து செல்லத் தொடங்குதல்… ஒவ்வொரு காயம்பட்ட உருவமும் சிறிது தூரம் ஊர்ந்து மறைதல். அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டதும் குடுகுடுப்பைக்காரன் அரங்குள் நுழைகிறான்.

குடுகுடுப்பைக்காரன்:             நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

ஆத்தா பகவதி மாகாளியம்மா

ரத்தஞ் சொட்டுற நாக்கு சொல்லுதம்மா

அம்மா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

அய்யா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

மாதேவி மாகாளியம்மா

கால்கடுக்க நர்த்தனமாட

தலகொடுத்தா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

மண்ணாச

விண்ணாச

பெண்ணாச

பொன்னாச

பேராச

பேயாச விட்டு

ஆத்தா மாகாளியம்மா

கேட்டா தல கொடுத்தா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

(பார்வையாளர்களை நோக்கி)

அம்மா நீ கொடுக்கியா

அய்யா நீ கொடுக்கியா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

(பார்வையாளர்கள் பின்னே இருந்து வரும் இளைஞன்)

இளைஞன்:                                    ஏ குடுகுடுப்ப … நாங் கொடுக்கேன்

குடுகுடுப்பைக்காரன்:             தம்பீ … வெளயாட்டில்ல … தலயக் கொடுக்கோனும் … தலயக் கொடுக்கோனும் …

இளைஞன்:                                    விளையாட்டெல்லாமில்ல

குடுகுடுப்பைக்காரன்:             நெஞ்சுல உரமிருக்கா? தைரியமிருக்கா?

இளைஞன்:                                    அதெல்லாம் ஒன்னுமில்ல

குடுகுடுப்பைக்காரன்:             வாய்ச்சவடாலா… தம்பீ… தெய்வ குத்தமாயிடும்…

இளைஞன்:                                    ஏ குடுகுடுப்ப… அதெல்லாம் ஒன்னுமில்லய்யா… நாங் குடுக்கேன் தலய… ஆத்தா வரங்குடுப்பாளா?

குடுகுடுப்பைக்காரன்:             மனசால பூரணமா வேண்டிக் கேட்டா கொடுப்பா… தலயக் கொடுத்திட்டு…

இளைஞன்:                                    என்ன கேட்டாலும் குடுப்பாளா?

குடுகுடுப்பைக்காரன்:             எதக் கேட்டாலும் கொடுப்பா… இந்தக் கடலையே குடிக்கலாம் நீ…

மரத்தப் புடுங்கலாம்

மலயப் பெயர்க்கலாம்

மண்ணப் பொன்னாக்கலாம்

பொன்ன கல்லாக்கலாம்

கல்ல சிலையாக்கலாம்

சிலைய பெண்ணாக்கலாம்

காத்தக் கட்டி கக்கத்துல வச்சுக்கலாம்

ஆத்தா வரங்கொடுத்தா

நீ தலயக் கொடுத்தா

ஆமா … ஒனக்கென்ன வேணும்

இளைஞன்:                                    அத நா ஆத்தா கிட்ட கேட்டுக்கறேன்

குடுகுடுப்பைக்காரன்:             அட சொல்லு தம்பி. உன் தலயவா கேட்டுப்புட்டேன்

இளைஞன்:                                    அது ஆத்தாவுக்கு

குடுப்பைக்காரன்:                     சரி சரி சொல்லு… நா ஆத்தாகிட்ட கூட்டிட்டுப் போறேன … ஆத்தாவ இங்கயே வரவழைக்கிறேன்.

இளைஞன்:                                    நெசமா?

குடுகுடுப்பைக்காரன்:             உன் தல நெசந்தானே?

இளைஞன்:                                    (பலமாகத் தலையை ஆட்டி) ம்ம்ம்… ம்ம்ம்… நா நா கவிஞனாகனும்… வரகவியாகோனும்

குடுகுடுப்பைக்காரன்:             என்னாது!

காளி:                                                அடேய்!

பேய்க்கூத்தாடியபடி காளி அரங்கவெளியை வலம் வந்து அரங்கின் மையத்தில் நிலை கொள்கிறாள். குடுகுடுப்பைக்காரன் (தாயே என்றலறி) முழங்காலிட்டு கைகூப்பி வணங்கி உறைந்து விடுகிறான். இளைஞன் பயந்து நடுங்கி அவன் பின்னே ஒடுங்கி நிற்கிறான்.

காளி:                                                யாரடா அது! தலை கொடுக்க வந்தது!

குடுகுடுப்பைக்காரன்:             (பின்னாலிருக்கும் இளைஞனை முன்னே இழுத்து நிறுத்தி)

தாயே! மாகாளி! இவன்தாம்மா, இவன்தாம்மா!

இளைஞன்:                                    நா இல்ல, நா இல்ல.

பயந்து நடுநடுங்கி ஒடுங்கி நிற்கிறான். குடுகுடுப்பைக்காரன், அவனைப் பிடித்து மண்டியிட்டு குனியச் செய்கிறான்.

இளைஞன்:                                    (தலை நிமிராமல்) ஆத்தா! என்ன விட்டுடு, என்ன விட்டுடு!

காளி:                                                அடேய், அற்ப மானிடா! தலை கொடுக்கறேன்னு வந்தது நீ தானா?

இளைஞன்:                                    இல்ல ஆத்த… தெரியாம…

காளி:                                                (குடுகுடுப்பைக்காரனை நோக்கி)

ம்ம்ம்… என்னடா இது வேடிக்கை!

குடுகுடுப்பைக்காரன்:             (நடுங்கிக்கொண்டு) தாயே! பைரவி! அகிலாண்டேஸ்வரி… ஆரோக்கியமாதா… இல்லே இல்லே… ‘அபிராமி அபிராமி… ஐயோ… ஆத்தா… காளியாத்தா… பத்ரகாளியம்மா… நான் சோதிச்சுப் பாக்குறதுக்குள்ள நீயே வந்துட்டியே… நா என்ன பண்ணுவேன்…

காளி:                                                ம்ம்ம்… சரி, என்ன வேணுமாம் இவனுக்கு! என்ன வரம் வேணுமாம்? என்ன கேட்கிறான் இந்தப் பதர்!

குடுகுடுப்பைக்காரன்:             தாயே! கவிஞனாகனுமாம்!

காளி:                                                என்னது! ஒரு கிறுக்கனுக்கு அந்த வரத்தை எப்பவோ குடுத்திட்டேனே! சாகுந்தலையும் பாடி மகாகவி பட்டமும் வாங்கிட்டானே அவன்! இப்போ இன்னொரு கிறுக்கனா!

(இளைஞனைப் பார்த்து)

அடேய் மானிடா! எங்கே, நிமிர்ந்து பார்!

(இளைஞன் நடுக்கத்துடன் நிமிர்ந்து பார்க்கிறான்.)

இளைஞன்:                                    தாயே!

காளி:                                                எதுக்கடா உனக்கு இந்த விபரீத ஆசை? சினிமாப் பாட்டு எழுதனுமா?

இளைஞன்:                                    (பயத்தில்) ஆமா ஆத்தா… இல்ல ஆத்தா…

காளி:                                                என்ன!

இளைஞன்:                                    இல்ல ஆத்தா… இல்ல ஆத்தா…

காளி:                                                பின்னே வேற என்ன?

இளைஞன்:                                    சீரியஸ் கவிஞனாகனும் ஆத்தா

“சமூகம் கெட்டுப் போய்விட்டதடா

சரி

சோடாப் புட்டிகள் உடைக்கலாம்

வாடா”

இதுமாதிரி சின்னத்தனமா கூத்தடிக்கா…

“எழுது உன் கவிதையை நீ எழுது”

இப்படி ஆணவமா சவடால் அடிக்காம

“தழுவ விரியும்

தொடைகள்

திரண்டு

பிரிந்து பிரிந்து

இடையே ஓர்

தலைகீழ் கருஞ்சுடர்

எரிந்து எரிந்தழைக்கும் “

இதுமாதிரி எழுதோனும் ஆத்தா.

குடுகுடுப்பைக்காரன்:             அடே அடே! கிராதகா! மாபாதகா! ஆத்தா கிட்டயே இப்படி கூச்சநாச்சமில்லாம பேசறியே…

காளி:                                                (புரியாமல் விழித்து) என்ன? என்ன அது கூச்சநாச்சமில்லாம?

இளைஞன்:                                    (சுதாரித்துக்கொண்டு) இல்ல… ஒன்னுமில்ல ஆத்தா… என் கவிதையை நானே எழுதனும் ஆத்தா… அவ்ளோதான்.

காளி:                                                அட அற்பப் பதரே! இவ்வளவுதானா! எங்கே நாக்கை நீட்டு. ஆணியால எழுதிடறேன்.

இளைஞன்:                                    ஐயோ! வேணா ஆத்தா, வேணா ஆத்தா…

காளி:                                                (குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து) என்னடா இவன்! கவிஞனாகனும்னு கேட்கிறான். நாக்கை நீட்டச் சொன்னா அலறுகிறான்!

(இளைஞனை நோக்கி)

அடே மானிடா! என் பொறுமையைச் சோதிக்காதே!

இளைஞன்:                                    இல்ல ஆத்தா! இல்ல ஆத்தா! நாக்குல எழுதிட்டு, என் தலய எடுத்திட்டு நீ போயிட்டன்னா, அப்புறம் எப்படி நான் கவிஞனா ஆகுறது?

காளி:                                                (குடுகுப்பைக்காரனைப் பார்த்து)

பார்த்தாயா மானுட சாமர்த்யத்தை

(பலமாகச் சிரிக்கிறாள்)

(இளைஞனைப் பார்த்து)

அதனால்…

இளைஞன்:                                    என் தலய மொதல்ல குடுத்துடறேன்… அதுக்கப்புறம் நீ ஒட்ட வச்சு நாக்குல எழுதிடு…

குடுகுடுப்பைக்காரன்:             (பார்வையாளர்களை நோக்கி)

நிறைய ஜிவாஜி படம் பாத்திருப்பான் போலிருக்கே!

காளி:                                                (கோபத்துடன்) அடே மானிடா! எடுத்ததைக் கொடுத்ததில்லை. கொடுத்ததை எடுத்ததில்லையடா இந்த மாகாளி.

(குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து கோபமாக)

மூடனே! எதுவுமே சொல்லவில்லையா இந்தப் பதரிடம்!

குடுகுடுப்பைக்காரன்:             மாகாளியம்மா! நேரம் போதல்லையம்மா… நேரம் போதல்லையே… நீ சீக்கிரமா வந்துட்டியேம்மா…

காளி:                                                ஆமாமடா… அங்கே ஆயிரம் தலைகளை விட்டுவிட்டு, இந்த ஒற்றைக் குடுமிக்காக கடல் தாண்டி வந்தேனே, என்னைச் சொல்லனும்.

இளைஞன்:                                    ஆத்தா … கடல் தாண்டி வந்தியா!

குடுகுடுப்பைக்காரன்:             ஆமாண்டா அபிஷ்டு. ஆத்தா கடல் தாண்டித்தான் வந்திருக்கா. உனக்காக… உனக்கு வரங் கொடுக்கறதுக்காக… கோட்ட விட்டுடுவ போல இருக்கே…

இளைஞன்:                                    ஆனா, ஆத்தா என் தலய எடுத்துடுவாளே! எடுத்துட்டு ஏமாத்திட்டான்னா?

குடுகுடுப்பைக்காரன்:             அட, உன் ஒரு தல எம்மாத்திரம்… ஆத்தா & co பல லட்சம் தலைகள உருட்டியிருக்காக

இளைஞன்:                                    ஆத்தா & co – வா?]

குடுகுடுப்பைக்காரன்:             ஆமாமடா… சகோதரிகள் நாலுபேர்… திசைக்கு ஒருத்தி. மேற்கு ஆரோக்கியமாதாவுக்கு. கிழக்கு மகிஷாசுரமர்த்தினிக்கு. வடக்கு திரிசூலிக்கு. தெற்கே பத்ரகாளி. யுகயுகமா மனுஷங்க ரத்தம் குடிச்சுக் குடிச்சு அட்டகாச நடனம் ஆடிட்டிருக்காங்க. ஆனந்தக் களி நடனம்… ஆகா… காணக் கண் கோடி வேணுமடா… கண் கோடி வேணும்… என் மாகாளி, பத்ரகாளியம்மா பாதம்பட்ட மண் ரத்தத்தால சிவக்குமடா, ரத்தத்தால சிவக்கும்… புத்தனையே புல்லனாக்கும்.

இளைஞன்:                                    என்னது! புத்தனையேவா?

குடுகுடுப்பைக்காரன்:             நாஞ்சொல்லலையப்பா, நாஞ்சொல்லல. தெற்கின் மாகாவியம், மகாவம்ச மகாகாவியம் சொல்லுது…

போர்த்தியிருக்கும் குடுகுடுப்பைக்காரனுக்குரிய சால்வையைக் களைந்துவிட்டு ஒரு கதைசொல்லியாக முன்நகர்ந்து, பார்வையாளர்களை நோக்கி…

கல்பகோடி ஆண்டுகள் முன்னே

பூமாதேவி மத்தியிலே – நெத்தியிலே

ஒசந்து நின்ன மேருமல அடிவாரத்திலே

பரந்து விரிந்த ஜம்புத்வீபம்

நாவலந்தீவு

பாரதவர்ஷம்

யுகங்கள் கற்பூரமாய் எரிந்து

அந்தார கல்பத்திலே ஆங்கார ஆசையிலே

மண்ணாசை

பெண்ணாசை

பொன்னாசை

பேராசை

பேயாசை விரட்டி

பாவம் பலகோடி புரிந்த பாதகரைக்

காத்துக் கடைத்தேற்றப் பிறந்தான் சித்தார்த்தன்.

போதி மரத்தடியில் சித்தம் தெளிந்து

ஞானம் கண்டு

புத்தனான ஒன்பதாம் வருஷத்திலே

ஜம்புத்வீபத்தின் தென் கோடியிலே

இந்து மகாசமுத்திரத்திலே

தத்தளித்துத் தவித்துக் கிடந்த

இலங்கைத் தீவும் சேர்ந்தான்.

மாகாளி பாதம் பட்ட மண்ணல்லவா

புத்தனும் புல்லனானான்

புத்தனும் புல்லனானான்.

புயலும் பெருமழையும்

இருளும் சுடுநெருப்பும் பொழிந்து

ஆங்கே கூடிக்களித்திருந்த யட்சர்களை

பயங்காட்டி

பணியவைத்தான் பணியவைத்தான்.

பெளத்த மாகாவியம்

மகாவம்ச மகாகாவியம்

சொல்லுதடா

புத்தனும் புல்லனானான்

புத்தனும் புல்லனானான்

எம் மாதேவி மாகாளி

பெளத்த மாகாவியத்திலே

கொண்ட ரூபம் விகாரை

தமிழன் தலையறுத்த வாள் கழுவி

அச்செந்நீர் பருகி

சூல் கொண்டு

மாகாளி விகாரி ஈன்ற பிள்ளை

துத்தகமுனு …

துத்தகமுனு…

கதைசொல்லி, இளைஞன், காளி மூவரும் இணைந்து ஒரு வட்டமாகச் சுழன்று பாத்திரம் மாறுகின்றனர்: கதைசொல்லி அரசனாக, இளைஞன் துத்தகமுனுவாக, காளி விகாரையாக.

அரசன்:                                            (துத்தகமுனுவை நோக்கி) துத்தகமுனு! தாயின் தாள் பணிந்து தருக்கழித்து தணிந்து என் முன்னே வா!

துத்தகமுனு விகாரையின் தாள் பணிந்து, தந்தையின் முன் வந்தமர்கிறான்.

அரசன்:                                            பிள்ளாய்!

காட்டுக் குறவர்க்கும் கிட்டாத தேனெடுத்து

பன்னிரெண்டாயிரம் பிக்குகள் பருகி

மீதம் தந்ததைச் சுவைத்து

தமிழனொருவன் தலையறுத்த

வாள் கழுவி

அச்செந்நீர் பருகி

அறுத்த தலைமீதேறி

அநுராதபுரத்து பொற்றாமரைக் குளத்

தாமரை மலர் சூடி

தவமிருந்து பெற்றாளடா

உன் அன்னை  விகாரை.

இப்பால் சோறு உண்டு

யானுரைக்கும் மொழி கேட்டு சபதம் கொள்!

(பால் சோறுள்ள கிண்ணம் எடுத்து, முன்னே வைப்பது போன்ற பாவனை செய்து)

எம் தேசத்து உயிர்ச்சுடராம் பிக்குகளை ஒருநாளும் புறந்தள்ளாய்!

துத்தகமுனு:                                 (பால் சோறு பருகும் பாவனை செய்து)

இத்திண் தோள் மீது சிரம் நிற்கும் வரை எம் பிக்குகள் வழி நடப்பேன் தந்தையே!

அரசன்:                                            (இரண்டாவது பால் சோறு கிண்ணத்தைத் தந்து)

ஒருபோதும் சோதர யுத்தம் புகமாட்டேன் என சபதஞ்செய்!

துத்தகமுனு:                                  (பருகி) இன்னுயிர் துறக்கினும் உடன் பிறந்தோனை ஒரு வன்சொல் துணியேன்!

அரசன்:                                            தமிழர் தம் பகை நாடேன் என சூல்கொள்!

துத்தகமுனு:                                  ஆ!

(அலறி ஆவேச நடனம் ஆடி பால் சோறு கிண்ணத்தை வீசி எறிந்து…)

ஏலாது! ஏலாது! ஒருபோதும் ஏலாது!

உரக்கச் சொல்லி விரித்திருக்கும் சால்வையில் கைகால்கள் குறுக்கி படுக்கிறான்.

விகாரை:                                        (அவனருகே சென்று தலை வருடி)

துத்தகமுனு… ஏனய்யா கூனிக்குறுகி இக்கோலம்…?

துத்தகமுனு:                                  தாயே!முப்புறம் கடல்… வடக்கே தமிழர்… எங்ஙனம் யான் கைவீசி, கால் பரப்பி உடல் சாய்ப்பேன்?

விகாரை:                                        (ஆங்காரமாக சைகையுடன்) இப்படி உதையடா! தமிழரை இப்படி உதை!

உதைத்துக் காட்டி ஆவேச நடனமாடி வலம் வந்து நிற்க, அதேபோது, துத்தகமுனுவும் அரசனும் இரு சேவகர் போல், சற்று தள்ளி மண்டியிட்டு நிலை கொள்கின்றனர்.

விகாரை:                                        உதைத்துத் துரத்து

தமிழரை உதைத்துத் துரத்து

கொல்

கொல்

பட்டத்து யானை சரிந்துபட

கரம் பரப்பி களத்தில்

நெடுக வீழ்வான் எல்லாளன்

அவன் மகுடம் மண்ணில் தேய்த்து அமிழ்த்தி

சிரம் கொய்து

ஆங்கே நெடிதுயர்ந்து எழுப்பு ஓர் தூபி

ஆண்டுகள் ஈராயிரம் கடக்கினும்

உன் வழித்தோன்றல்கள்

இரத்தத்தினால் அபிஷேகம் செய்து

எனை வழிபட ஏதுவாய்

நெடிதுயர்ந்த ஓர் தூபி…

தமிழர் தலையறுத்து

இரத்தாபிஷேகம்

இரத்தாபிஷேகம்

புத்தம் சரணம் புத்தம் சரணம்…

தலைகள்

தலைகள்

புத்தம் சரணம் புத்தம் சரணம்…

இரத்தம்

இரத்தம்

புத்தம் சரணம் புத்தம் சரணம்…

எங்கே

எங்கே

புத்தம் சரணம் புத்தம் சரணம்…

யாரடா அங்கே

அடே வர்த்தனா

அடே பக்சனா

எங்கேயடா இரத்தம்!

எங்கேயடா இரத்தம்!

இருவரும் ஒருசேர:                     தாயே! இதோ … இதோ …

இருவரும் பார்வையாளர்களிடையே அமர்ந்திருக்கும் 10 நடிகர்களில் ஒருவரைப் பிடித்து இழுத்து விகாரையின் முன் நிறுத்தி …

இருவரில் ஒருவர்:                       உன் பேரென்ன?

பிடித்து வரப்பட்டவர்:               குமரன்.

இருவரில் ஒருவர்:                       15.

விகாரை:                                        கொல்! கொல்!

இருவரும் அந்த இளைஞனைக் கொல்வது போன்று பாவனை செய்ய, அவன் விகாரையின் முன் வீழ்கிறான்.

அடுத்தவர்…

இருவரில் ஒருவர்:                       பேரென்ன?

பிடித்து வரப்பட்டவர்:               கந்தய்யா.

இருவரில் ஒருவர்:                       வயது?

பிடித்து வரப்பட்டவர்:               18.

விகாரை:                                        அறு! கழுத்தை அறு!

பாவனை… இளைஞன் முன் விழுந்தவன் அருகே வீழ்கிறான்.

அடுத்தவர்…

இருவரில் ஒருவர்:                       பேரச் சொல்லு?

பிடித்து வரப்பட்டவர்:               கோணேஸ்வரி

விகாரை:                                        சூறையாடுங்கள் இவளை!

இருவரும் அவளைச் சுழற்றி விட அவள் சுழன்று விழுகிறாள்…

விகாரை:                                        அவள் யோனியில் குண்டைத் திணி! வெடித்துச் சிதறட்டும்!

அடுத்தவர் …

இருவரில் ஒருவர்:                       பெயர்?

பிடித்து வரப்பட்டவர்:               யோகன்… 14 வயசுங்கோ…

விகாரை:                                        அருகேஇழுத்துவாங்கடா அவனை…

மடியில் கிடத்தி கழுத்தைக் கடித்து இரத்தம் உறிஞ்சுவது போன்று பாவனை செய்து உருட்டி விடுகிறாள்.

சரசரவென அடுத்தடுத்து…  குமுதா 16, செல்வா 22, குமரேசன் 19, ராசய்யா 17, யோகேஸ்வரன் 20, சீராளன் 15…

உடல்கள் ஒன்றன்மீது ஒன்று சரிந்து ஒரு மலை போலக் குவிந்து கிடக்க, விகாரை அப்பிணக்குவியலைச் சுற்றி ஆவேச நடனமாடி நின்று, “இரத்தம், இரத்தம்” என்று அலறிக்கொண்டு, பார்வையாளர்களைச் சுற்றி அங்குமிங்குமாக அலையத் தொடங்குகிறாள்.

வர்த்தனாவும் பக்சனாவும் காளி அமர்ந்திருந்த இருக்கையை பிணக்குவியலின் முன் கொண்டு வந்து இருத்தி, இருபுறம் அமர்ந்து, ஆழ்ந்த அமைதியான தொனியில் பேசத் தொடங்குகின்றனர்.

வர்த்தனா:                                      பக்சனா! ஈராயிரம் ஆண்டுகள்!

நம் மூத்த குடி, துத்தகமுனு கொண்ட சபதம் முடித்தோமா?

பக்சனா:                                         (சிறு எள்ளலுடன்) வர்த்தனா! துத்தகமுனுவின் வழித்தோன்றல் அல்லவே நான்!

யானே துத்தகமுனு! யானே துத்தகமுனு!

வர்த்தனா:                                      மமதை கொண்டு உளறாதே பக்சனா!

எல்லாளன் பரம்பரையை எளிதாக எண்ணாதே!

புல்லூடும் ஊடுருவிப் படரும் புல்லுருவிகள் அவர்கள்!

புல்லுருவிகள்!

பூண்டற்றுப்போகச் செய்யவேண்டும்!

முடித்தாயா?

உடுக்கை அதிர விகாரி அரங்கவெளிக்குள் நுழைந்து “தலைகள் தலைகள்” என்றலறி, தேடியலைந்து மீண்டும் பார்வையாளர்களைச் சுற்றிஅலைகிறாள்.

பக்சனா:                                         (பிணக்குவியலை நோக்கி கைநீட்டிச் சுட்டி)

குவியல் காண்! பிணக்குவியல் காண்!

வர்த்தனா:                                      (எள்ளல் தொனிக்க) இதென்ன பிரமாதம்!

எத்துனை விலை கொடுத்தாய் இதற்கு! எத்துனை ஆயிரம் சிங்களப் பாலகரைப் பலி கொடுத்தாய்? எத்துனை பத்தாயிரம் இளைஞரை முடமாக்கினாய்?

பிணக்குவியல் ஒன்றும் புதிதில்லை எனக்கு!

ஜூலை 83…

சடுதியில் மறந்தாயோ…

பதிமூன்று… வெறும் பதிமூன்று சிப்பாய்களின் மரணத்திற்கு மூவாயிரம் தமிழரை பலி கொண்ட படையெனது. மறவாதே! பதினெட்டாயிரம் தமிழரை வீதிக்கு துரத்திய பெருமை எனக்குண்டு. எளிய சிங்களவரை வெறிகொண்டெழச் செய்து வீதிகளில் வேட்டை மிருகங்களாய் உலவவிட்ட பேரரசுப் பொற்காலம் எனது.

எம் அன்னை விகாரை வழி நின்று, வெளிக்கடையில்

குருதி குடித்தனரே… வீரச் சிங்களவர் … குருதி குடித்தனரே…

(பெருமிதத்தோடு)

ஆ! அந்நாட்கள்!

எம் சிங்கள இளைஞர், ஆண் மக்கள் தாம் என்பதை வீதிகளில் காட்டினரே! இருபது இளஞ்சிங்கங்கள் சேர்ந்து ஒரு தமிழ் பெட்டையை நட்ட நடு வீதியில் புணர்ந்து கொன்ற கோலம்!

என்னே எம் மக்கள்! என்னே எம் மக்கள்!

(சோகப் பெருமூச்சு விட்டு)

எங்கே தொலைந்தன அப்பொற் கணங்கள்!

அறுபதினாயிரம் வீரர்களை பலிகொண்டு நீ நடாத்திய இப்போரில் எங்கே… ஓர் சாகசம் சொல்!

விகாரை அரங்கவெளிக்குள் நுழைந்து வெறிகொண்டாடி, சற்று எட்ட நின்றபடி பக்சனாவை நோக்கி “எங்கே எங்கே” என்று உரத்த குரலில் கேட்டு, உடன் மீண்டும் பார்வையாளர் ஊடாகச் சென்று அலைகிறாள்.

பக்சனா:                                         வர்த்தனா!

புவியறியும் உமது சாதனை.

மறுத்தேனில்லை.

மறக்கவும் இல்லை.

வெளிக்கடைச் சிறை முற்றத்தில் பலி கொண்ட தமிழரை… இதோ இப்படி மலை போல் குவித்து, புத்த பகவானுக்கு உமது சேனைகள் சமர்ப்பணம் செய்த காட்சி… இன்னும் என் கண் முன்னே… (பரவசப்பட்டு) ஆகா!

(கோரஸ்):                                        (ஆழ்ந்த அமைதியான தொனியில்)

புத்தம் சரணம் புத்தம் சரணம்

தலைகள் தலைகள் புத்தம் சரணம்

புத்தம் சரணம் புத்தம் சரணம்

கொலைகள் கொலைகள்

பிணங்கள் பிணங்கள் புத்தம் சரணம்

புத்தம் சரணம் புத்தம் சரணம்

புத்தம் சரணம் புத்தம் சரணம்…

பக்சனா:                                         சிங்களக் கோட்டையாம் பதுல்லாவிலே… உமது சேனைச் சிங்கங்கள்… ஒவ்வொரு பொன்னான மணித்துளியும் ஓயாது சுற்றிச் சுழன்று ஆடிய வேட்டை… ஆகா!… வழிநடாத்திய சிங்கங்கள் ஃப்ரான்சிஸ் ராஜபக்சே, திஸ்ஸநாயகே இருவரையும் மறக்க முடியுமா?

தம் பள்ளிப் பாலகரையும் வேட்டைக்குப் பழக்கிய ஹீராத்… ஓ! அவரை மறப்பேனா!  (பெருமிதத்துடன்) காளி கோவிலையும் சூறையாடி தங்க விக்கிரகத்தைக் கவர்ந்த ஹெத்திஹேவா… என்னே அவர் நெஞ்சுரம்… என்னே அவர் நெஞ்சுரம்… எம் தாய் விகாரை பெருமிதம் கொண்டாள்… காளியையே சூறையாடிய சிங்கம்… பத்திரமாக இருக்க முடியாதவள் பத்ரகாளியாம் … எம் தாயின் செருக்கு முன் அவள் என்னே!

விகாரை இப்போது சூலமேந்தி – காளியாகி, அரங்கிற்குள் நுழைந்து, இருவரையும் சுற்றி ஆவேசமாக ஆடி…

காளி:                                                அடேய்! யாரடா அது! இந்த மாகாளியைப் பழித்தது! எனக்கும் உங்க ஆத்தாளுக்கும் வித்தியாசம் தெரியுமாடா உங்களுக்கு!

அடேய்! விட்டா என்னையும் சூறையாடுவீங்களாடா! அடேய்! அடேய்! வாங்கடா! எங்கே வாங்கடா பாக்கலாம்!

(நின்று இருவரையும் வெறுப்புமிழ வெறித்து, மீண்டும் பார்வையாளர்களுக்கு அப்பால் உலவத் தொடங்குகிறாள்)

வர்த்தனா:                                      என் சாதனை புகழ்ந்தது போதும் பக்சனா… உன் சாகசம் என்ன… எங்கே ஒன்று சொல்…

பக்சனா:                                         (லேசாக சிரித்து) வெள்ளை வேன்!

வர்த்தனா:                                      ஓ!

பக்சனா:                                         உமது சிறு மூளைக்கு எட்டாத சாதனை!

வடக்கே யான் நடாத்திய போர்… கூட்டங்கூட்டமாக புகலிடம் தேடி ஓடிய தமிழரை ஆட்டுமந்தைபோல ஓட்டி… ஓரிடத்தில் சேர்த்து… பீரங்கிக் கணைகள்…

இங்கே தெற்கே… சும்மா வீட்டிலடைந்து கிடக்கும் தமிழரை தேடித் தேடி வேட்டையாடி பொறுக்கியெடுத்து மெல்ல நசுக்கி நசுக்கி உயிரெடுக்க வெள்ளை வேன்…

(லேசான பெருமிதச் சிரிப்புடன்)

மொத்த வியாபாரம்… சில்லறைப் புழக்கம் இரண்டும் செய்தேன்…

உயிர்… வடக்கே வெல்லக்கட்டி… ஆங்கே விழுங்கினேன்… உடல்… இங்கே வெறும் வெங்காயம்… வேன் அனுப்பி உரித்து எடுத்து வந்தேனே…

உம்மால் முடியாதது… நான் செய்தேன்… செய்து முடித்தேன்…

போதுமா…?

வர்த்தனா:                                      ஆகா! மெச்சினேன்… மெச்சினேன்…

(எழுந்து பெளத்த முறைப்படி வணக்கம் செய்து ஆரத்தழுவிக் கொள்கிறான் பக்சனாவை)

பக்சனா:                                         (சற்றும் அமைதி மாறாத் தொனியில்)

ஆயினும்… சிங்காதனத்தில் அமர்ந்தோர்க்கு சாகசமும் வீரமும் மட்டுமே போதா வர்த்தனா… மதிநுட்பம் வேண்டும்… மதிநுட்பம்…

வர்த்தனா:                                      மதிநுட்பம் என்று சொல்லாதே! சதி நுட்பம் என்று சொல்! (அழுத்தமாக) சதியாலோசனை!

பக்சனா:                                         (ஆமோதித்து தலையசைத்து)

சரிதான்… சரிதான்.

தமிழர்க்கு மதிநுட்பம் வர்த்தனா.

நமக்கு சதிநுட்பம்.

விதியை மதியால் வெல்வது வீணர்களின் வேலை.

மதியை சதியால் வெல்வது எம் தாய் தந்த கடாட்சம்.

நினைவிருக்கிறதா?

“தமிழனொருவன் தலையறுத்த வாள் கழுவி… அச்செந்நீர் பருகி… சூல் கொள்வேன்” என்று சூளுரைத்தாளே எம் அன்னை விகாரை… அத்தலை கொய்த காதை அறிவாயா?

வர்த்தனா:                                      அறிவேன் அறிவேன்.

என்றாலும் உலகறியச் சொல் பக்சனா.

பக்சனா:                                         எல்லாளன் படைக்களம் சேர்ந்து… நல்லொழுக்கம் புனைந்து… பொய்யொழுகி அவன் மனம் கவர்ந்தான் சிங்களச் சூரனொருவன்… பொற்றாமரைக் குளத் தாமரை மலர் சேர்த்து… இருள் விலகாத அதிகாலைப் பொழுதொன்றில் அவன் புரவியொன்று கவர்ந்தான்… விரட்டி விரைந்தேகினான் எல்லாளன் படை வீரன்… (பலமாகச் சிரித்து) வீணன்… வெட்டி வீரன்… மறைந்து ஒளிந்து நின்ற எம் சிங்களச் சூரன் எட்டி… வாளை நீட்டி… அறுத்தான்… நோகாமல் அறுத்தான்… கழுத்தறுத்தான்… சிரம் கொய்தான் …வீரன் வீழ்ந்தான்… வீழ்வான்… விதியை மதி வெல்லும்… மதியை… சதி வெல்லும்… மந்திராலோசனை வீழும்… தந்திராலோசனை… சதியாலோசனை வெல்லும்… சதியே மதி… சதியே மதி… அத்தனை சுலபம் அத்தனை சுலபம் வர்த்தனா…

(இருவரும் சேர்ந்து உரக்கச் சிரிக்கின்றனர்).

வர்த்தனா:                                      ஆயின்… சதியாலோசனைக்கு கலங்காச் சித்தம் வேண்டும் பக்சனா.

பக்சனா:                                         உண்டு வர்த்தனா. கவலை வேண்டாம். கலங்காச் சித்தமும் உண்டு, எப்பாதகத்திற்கும் கழுவாய் உண்டு என்பதும் அறிவேன்.  தமிழர் குருதியால் குளம் நிறைத்த துத்தகமுனு…  கடைத்தேற்றம் உண்டோவெனக் கலங்கி நின்றான். பெளத்தப் புனிதர்களாம் அரஹத்துகள் அவன் இருப்பிடம் நாடி, உரைத்த நியாயமும் அறிவேன். தமிழர் மானுடரே அல்லர். ஆகின் உனைப் பாவம் சேராது என்றுரைத்தது மறவேன்.

(உரக்க)

தமிழர் மானுடப் பிறவி அல்லர். மானுடப் பிறவிகளே அல்லர்.

மாக்கள். மாக்கள். விலங்குகள். விலங்குகள் (உரக்கச் சிரிக்கிறான்).

(உரக்க)

தமிழரைக் கொல்வது பாவமில்லை.

தமிழரைக் கொல்வது பாவமில்லை.

கொன்றேன்…

கொல்வேன்…

குளமென்ன குட்டையென்ன…

குருதியாறு பெருகச்செய்வேன்

இந்துமாச் சமுத்திரத்தையே அவர்தம் செந்நீரால் நிரப்புவேன்…

தமிழ் பேசும் ஒரு விலங்கும் பெளத்தம் தழைத்தோங்கும் இத்தீவில் உயிர் பிழைத்திருக்காது… சூளுரைக்கிறேன்…

காளி ஆவேச நடனமாடியபடி அரங்கிற்குள் நுழைந்து, மையத்தில் நிலைகொள்கிறாள்.

இருவரையும் நோக்கி…

காளி:                                                அடே யாரடா அது?

என்னைத் தெரியுதாடா?

சொல்லுங்கடா? சொல்லுங்கடா?

இருவரும் ஒருசேர:                  (மிகுந்த அமைதியாக) எம் தாயே!

பெளத்த முறைப்படி வணங்குகின்றனர்.

காளி:                                                (உரக்கச் சிரித்து)

அதிபுத்திசாலி மூடங்களா! அதிபுத்திசாலி மூடங்களா!

கும்பிட்டது போதுமடா… கொண்டு வாங்கடா… கொண்டு வாங்கடா… உருட்டுங்கடா தலைகளை… உருட்டுங்கடா தலைகளை…

வர்த்தனாவும் பக்சனாவும் மிக நிதானமாக, பார்வையாளர்களிடையே இருந்து நபர்களை இழுத்து வந்து அவள் முன்பாகக் கிடத்துகிறார்கள்.

இறுதியாக, இருவரையும் நோக்கி…

காளி:                                                அடே முண்டங்களா… நான் உங்க ஆத்தா இல்லையடா… காளியடா காளி… மாகாளி… பத்ரகாளி… ஆயி… மாயி… நீலி… சூலி… இன்னும் மனுச முண்டத்துக்குள்ள இருக்குற எல்லாப் பேய்க்கும் மூத்தவளடா… எல்லோருக்கும் மூத்தவ… எங்கிட்டவே உங்க ஆட்டமா ?

உரக்கச் சிரித்து ஆக்ரோஷமாக நடனமாடி, வர்த்தனா – பக்சனா இருவரையுமே மடியில் கிடத்தி இரத்தம் குடித்து அப்பிணக்குவியலில் தள்ளி, குவியலின் மேல் ஒருகாலை வைத்து ஆவேசம் அடங்காது நிற்கிறாள்.

*              *              *

நாடகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பரமபதம்

காட்சி – 1

(அரங்கின் மையத்தில் பெர்க்மனின் மரணதேவனும் தளபதியும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் வயலின் (Western) இசைத்துக் கொண்டிருக்கிறது. அரங்கின் பின்னணியாக ‘அறிவு விருட்சம்’. அதன் கிளைகளில் மூளைகள் சொருகியிருக்கின்றன. அதனடியில் ஆதாமும் ஏவாளும் கனியைப் புசித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்ப்பம் அவர்களிடமிருந்து ஊர்ந்து வந்து தளபதியை வெறிக்கிறது. அவன் அரங்கை விட்டு வெளியேறுகிறான்.)

சர்ப்பம்: (மரணதேவனைப் பார்த்து) உனக்கு இங்கென்ன வேலை?நானிருக்கும்போது!

(மரணதேவன் எழுந்து மெல்ல வெளியேறுகிறான். அரங்கின் விளிம்பை நெருங்கும்போது)

சர்ப்பம்: நில்!

(சதுரங்கப் பலகையையும் காய்களையும் ஒரு கறுப்புப் பைக்குள் அள்ளிப்போட்டு, அறிவு விருட்சத்திலிருந்து மூளைகளைக் கிள்ளி பைக்குள் திணித்து)

சர்ப்பம்: இதையும் எடுத்துச் செல்லலாம்.

(மரணதேவன் பெற்றுக்கொண்டு வெளியேறுகிறான். கனியைப் புசித்து முடித்திருக்கும் ஏவாள் மரத்திற்குப் பின்னால் நாணி ஒளிகிறாள். ஆதாம் இடது கை நீட்டி அவளைச் சுட்டி, வலது கையை உயர்த்தி)

தேவனே!

(வெளியேறுகிறான்.)

சர்ப்பம்: ஆமென்!

(வயலின் இசை நிற்கிறது.சாவு மணியும் சங்கும் ஒலிக்கின்றன.சர்ப்பம் அரங்கின் முன்வந்து அமர்ந்து, சோழிகளை
அள்ளி வீசி, குனிந்து உற்றுப் பார்க்கிறது.)

* * *

காட்சி: 2

(சாவு மணி மட்டும் ஒலிக்க, வெள்ளை முகமூடியும் கறுப்பு அங்கியும் அணிந்து மரணதேவன் அரங்குள் நுழைகிறான். அரங்கின் விளிம்பினூடாகவே அடிமேல் அடிவைத்து வலம் வருகிறான். இடையிடையே நின்று, சிறு பதட்டம் தொனிக்க திரும்பிப் பார்க்கிறான். அரங்கின் முன்விளிம்பைச் சேர்ந்ததும் முகமூடியையும் அங்கியையும் கழற்றி, சோர்வுடன் அமர்கிறான். எமனின் உருவம். மெல்லப் புலம்புகிறான்.)

எமன்: ஏன்… ஏன் இந்தக் கெதி எனக்கு … நாயினும் இழிந்து அலைகிறேனே … அந்த சனீஸ்வரனும் பீடிக்கப் பயந்தானே எனை … இவன் … அஸ்வத் …

(வார்த்தையை விழுங்கி, கண்கள் மூடி, வெறுப்பை அடக்கிக் கொண்டு)

… அற்ப மானுடன் … விரட்டி விரட்டி அலைக்கழிக்கிறானே …

(தோளில் கிடக்கும் பாசக்கயிற்றை வெறுப்புடன் பார்க்கிறான். சரேலென்று எடுத்து பார்வையாளர்களை நோக்கி விசையோடு வீசுகிறான். மறுநுனியைப் பற்றிக் கொண்டு, உரக்க, வேகம் தொனிக்க)

எத்தனை கோடி மானுட உயிர்களைப் பற்றிப் பிடித்திருப்பேன் இதுகொண்டு … (சோர்ந்து) பயனற்றுப் போனதே … வீண் சுமையானதே …

(சலிப்புடன் மறுநுனியையும் பார்வையாளர்களை நோக்கி வீசிவிட்டு)

இனி எதற்கிது எனக்கு … (படபடத்து உரக்க) நால் வேதஞ்சொன்ன பிரம்மனுக்கு என்ன ஆனது?… மரணமற்றுப் போகச் செய்தானே மானுடர்களை … இவன் … எனைத் துரத்தி துரத்தி அடிக்கிறானே … சர்வேசா … பரந்தாமா … கைவிரித்தீரே … எனைக் கைவிட்டீரே … அந்தக் கள்ளச் சூதாடினா கடைசியில் எனைக் கடைத்தேற்ற வேண்டும் … என் விதி அவன் கையிலா… ஐயோ …

(தரையில் கரமூன்றி தலைகவிழ்கிறான்.)

(பின்னரங்கில், “தர்மராஜனே… ஏ! எமதர்மா!”என்றொரு குரல் ஆவேசத்தோடு, தேடும் தொனியில் ஒலிக்கிறது.)

எமன்: (பதைபதைத்து எழுந்து) “ஆ! இங்கும் சேர்ந்தானே … !”

(உரக்கக் கூவியபடி, முகமூடியையும் அங்கியையும் அவசரகோலமாக அள்ளிக்கொண்டு பார்வையாளர்களினூடாக ஓடி மறைகிறான். சில நொடிகள் கழித்து, சற்றே வாட்டமுற்ற முகத்துடன் சகுனி அரங்குள் நுழைகிறான். கைகளை பரபரவெனத் தேய்க்கிறான். அங்குமிங்கும் அலைகிறான். தேடுகிறான்.)

சகுனி: “பகடைகள் … சோழிகள் … ஏதாவது … ஏதாவது”

(பரபரத்து தேடியலைந்து, வெறுப்புடன்)

சே! … என்ன அற்பப் பிறவிகள் இதுகள் … தேவர்களாம் … என் உயிரையே ஒளித்து ஒளித்து வைக்கிறார்களே! நரகமே தேவலை போலிருக்கிறதே! ஐயோ! யாராவது … யாராவது …

(சர்ப்பங்கள் அரங்குள் ஊர்ந்து வருகின்றன. மகுடியும் உறுமியும் பின்னணியாக)

ஆ! என் செல்லக் குட்டிகளே!

(சர்ப்பமொன்றை ஆரத்தழுவி, உச்சியில் முத்தமிடுகிறான். ஏணிகள் ஆடி அசைந்து வந்து நிலைகொள்கின்றன. அரங்கு பரமபத வெளியாக மெல்ல விரிகிறது. சகுனி சர்ப்பங்களை உச்சி முகர்ந்து அவற்றின் மீது ஊர்ந்து சறுக்கி எழுகிறான். சர்ப்பங்கள் ஊர்ந்து ஏணிகளைக் கடித்துத் துப்பித் துரத்துவதும், ஏணிகள் இடம் மாறுவதுமாக அரங்கு இயக்கம் கொள்கிறது. மரணதேவன் அரங்குள் நுழைகிறான். சர்ப்பங்களை கவனமாகத் தவிர்த்து சகுனியை
நோக்கிச் செல்கிறான். அவன் வருவதைக் கவனிக்காத சகுனி, உற்சாகத்தோடு சோழிகளை வீசி விளையாடிக் கொண்டிருக்கிறான்.)

சகுனி: எப்படி, அது எப்படி இந்தச் சகுனி வேண்டுவது விழாமலிருக்கும். சக்ரவர்த்தி. சக்ரவர்த்தி நான். இல்லை சூதின் கடவுள் நான். எவரும் என் அருகில் நிற்கக்கூட முடியாது.

(உரக்கச் சிரிப்பவன், யாரோ, தன் பின்னால் நிற்பதை உணர்ந்து திரும்பிப் பார்க்கிறான். மரணதேவன். எதிர்பாராத சந்திப்பில் சிறு அதிர்ச்சி கொள்கிறான். ஆச்சரியத்தில் ஒரு முகமலர்ச்சி. பின் சிறு சலிப்பு தொனிக்க)

சகுனி: நீர் ஏன் வந்தீர். உம்மைத்தான் போகச் சொல்லியாகிவிட்டதே!

(சர்ப்பமொன்று மரணதேவனைப் பார்த்துச் சீறுகிறது.)

மரண தேவன்: (அந்த சர்ப்பத்தை வெறுப்புடன் பார்த்து, சகுனியை நோக்கித் திரும்பி)

எங்கு செல்வது சகுனியாரே! எங்கும் நிலைகொள்ள முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். உம்மைச் சேர்ந்தால், ஒருவேளை, ஒரு வழி பிறக்கும் என்றே உமைத் தேடி வந்தேன்.

சகுனி: (யோசிக்கும் பாவனையில்) ம்ம்ம் … சரி, ஆனால், முதலில் இந்த வேடத்தைக் கலையும். இது இங்கு பொருத்தமில்லை.

(மரணதேவன் தன் கறுப்பு அங்கியையும் வெள்ளை முகமூடியையும் களைகிறான். எமனின் உருவம் வெளிப்படுகிறது.)

எமன்: அமரலாமா?

சகுனி: (மகிழ்ச்சி பொங்க) ஆஹா! அமருங்கள் தர்ம ராஜனே அமருங்கள். ஒரு ஆட்டம் போட்டு விடலாமா?

(ஆர்வத்தோடு சோழிகளை வீசிக் காட்டுகிறான். எமன் சிறு தயக்கத்துடன் மெல்ல அவற்றை அள்ளுகிறான். ஆற்றிப் பார்க்கிறான். ஒரு பெருமூச்சு விட்டு, சகுனியை நோக்கி)

எமன்: எனக்கும் வேலையேதும் இல்லைதான் … நரகத்தை இழுத்து மூடியாகிவிட்டது. மானுடர்கள் மரணத்தை வென்றுவிட்டார்கள். சாகாவரம் பெற்றுவிட்டார்கள். கலி முற்றி பிரம்மனையும் பீடித்தது. ஆன்மா அற்றவர்களாக மானுடர்களைப் படைக்க ஆரம்பித்துவிட்டான். ஆன்மாக்கள் இல்லாது, ஆவிகளும் இல்லாது கிங்கரர்களுக்கு வேலையில்லாமல் போனது. கல்ப கோடி ஆண்டுகளாக நரகத்தில் ஆற்றிய தொண்டுகளுக்கு ஈடாக அவர்களும் சொர்க்கமெய்தி விட்டார்கள். யாருமற்ற அநாதையாகத் திரிகிறேன் நான்.

சகுனி: இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது தர்மராஜனே! பாரதத்தில் ராமராஜ்ஜியம் தழைத்தோங்கியிருக்கிறது. மானுடர்கள் யாவரும் புனிதர்களானார்கள். ஸ்ரீ ராமபிரானின் திருநாமத்தால் ஆசீர்வதித்து விருப்ப ஓய்வும் அருளிக் கொண்டிருக்கிறார்கள். உலக ஞானமில்லாதிருக்கிறீர்களே! ஓய்வெடுங்கள், ஓய்வெடுங்கள்.

(சர்ப்பமொன்று எமன் மீதேறி ஊர்கிறது. அவன் அதை விலக்குகிறான். அது அவனைக் கடந்து செல்கிறது.)

எமன்: (விரக்தியுடன் சிரித்து, ஊர்ந்து செல்லும் சர்ப்பத்தைப் பார்த்தபடி)

அதுவும் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை சகுனியாரே. எல்லாம் முடிந்தது என்று சற்றே தலைசாய்க்கவும் முடியவில்லை. ஒரு தொல்லை. ஒரேயொரு தொல்லை …

சகுனி: (சிந்தனைவயப்பட்ட தொனியில்) ம்ம்ம் … அசுவத்தாமன்.

(கைநீட்டி எமனிடமிருந்து சோழிகளை பெற்றுக் கொள்கிறான்.)

எமன்: (சலனமற்ற முகத்தோடு) ஆம். தன் உயிரைப் பறிக்கச் சொல்லி என் உயிரை எடுக்கிறான். ஈரேழு பதினான்கு லோகங்கள், எங்கு சென்று ஒளிந்தாலும் துரத்துகிறான்.

சகுனி: நீங்கள் விளக்கிச் சொல்லலாமே!

எமன்: விடலைச் சிறுவனல்லவே அவன். ஞானி, வீரன், துரோணரின் மகன். என்ன சொல்வது! வெறிகொண்டலைகிறான். பித்துப் பிடித்தவன்போல் திரிகிறான். ஒன்று, ஒன்றேயொன்று போதுமென்கிறான். மரணம்! எனைக் கெஞ்சினான். கதறினான். கயிலாயனை சரண்சேர் என்றேன். “பிறைசூடி நின்றவனையும் பார்த்தேன். உன் வினை என்று முறுவலிக்கிறான். தர்மராஜனே! விடுதலை வேண்டும். மரணம்! மரணம்!” என்று அலறினான். விவேகியுமல்லவா. என்னைக் கெஞ்சுவதில் பலனில்லை என்பதையும் புரிந்து கொண்டான். நாணேற்றி கணைகளைத் தொடுக்கத் துவங்கிவிட்டான். வெல்வதாகுமோ அவனை. கொல்லவும் ஏலாது. வழியொன்றும் தெரியாமல் இப்படித் தலைமறைவாய்த் திரிகிறேன்.

சகுனி: (சோழிகளை வீசி, குனிந்து பார்த்துவிட்டு, நிமிர்ந்து கபடம் தொனிக்கச் சிரித்து) நல்ல வேளை என்று நினைத்துக் கொள்ளும். ஒருவனோடு பிழைத்தீர்.

எமன்: (சற்றே நடுங்கி) ஆம். மார்க்கண்டேயன். கயிலாயன் ஆட்கொண்டு எனைக்காத்தார். அவனும் இருந்திருந்தால்! அவன் உயிரைப் பறிக்கப் போய் பட்டபாடே போதும் போதும் என்றானது. இப்போது அவனும் சேர்ந்து … நினைக்கவே நடுக்கமாயிருக்கிறது.

சகுனி: (கேலி தொனிக்க) நல்ல வேடிக்கையாக இருந்திருக்கும். ஒருவருக்கு இருவராகச் சேர்ந்து உம்மை (அழுத்தமாக) வறுத்து எடுத்திருப்பார்கள். (உரக்கச் சிரித்து, அழுத்தமாக) நரக வேதனை … (உரக்கச் சிரித்து) எமதர்மராஜனுக்கு … தப்பித்தீர் … (சிரித்து) சரி, சரி அதிருக்கட்டும் … இதில் நான் எங்கு வருகிறேன் தர்மராஜனே? சகலத்தையும் காத்து இரட்சிக்கும் அந்த நாராயணனை அல்லவா நீர் பார்த்திருக்க வேண்டும். அவன் அறியாதது என்ன இருக்கிறது?

எமன்: வேறு வழி! தேவாதி தேவர்களும் “அபயம் அபயம்” என்று அலறியடித்துச் சேர்வது அவன் திருவடிகள் தானே. அந்தப் பரமனையே பத்மாசுரனிடமிருந்து காத்தவனாயிற்றே! ஆனால் …

சகுனி: ஆனால்?

எமன்: (சிறு வெறுப்பு தொனிக்க) கபடத்தில் தம்மை நிகர்த்த உம்மிடம் தான் கேட்க வேண்டும் என்று அவனும் கைவிரித்தான்.

சகுனி: (உரக்கச் சிரித்து) நல்லது, நல்லது. ஆக, கடைசியாக என்னிடம் தஞ்சம் புகுந்திருக்கிறீர்.

எமன்: (தலை குனிந்து) ஆம். நீர்தான் வழி சொல்ல வேண்டும்.

(சர்ப்பமொன்று சகுனியிடம் வந்து, கவ்விப் பிடித்த ஏணிப்படி ஒன்றைத் தருகிறது. ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்து அவன் அதை அலட்சியமாக வீசுகிறான்.சர்ப்பத்தின் உச்சியில் ஒரு முத்தம் தந்து அதை வருடிக் கொடுத்துக் கொண்டே)

சகுனி: நரனும் நாராயணனுமே கைவிரித்த காரியத்தில் நான் செய்ய என்ன இருக்கிறது. காலம் கடந்துவிட்டது காலதேவனே காலம் கடந்துவிட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

எமன்: (சர்ப்பத்தின் மீது பார்வை பதித்து) இல்லை, எங்கோ, ஏதோ ஒரு சூக்குமம் இருக்கிறது. இருக்க வேண்டும். கபடதாரி நீர். மறைக்கிறீர்.

சகுனி: அதைச் சொல்லி இனி ஒன்றும் ஆகப்போவதில்லை தர்மராஜா.

எமன்: இல்லை, நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

சகுனி: (சிரிக்கிறான்) ஞானப் பசியோ!

எமன்: (சிறு சினம் தொனிக்க, சற்றே உரக்க) பகடி போதும் சகுனியாரே. அந்தப் பரந்தாமன் மட்டும் பணித்திருக்காவிட்டால், உம்மை நினைத்தும்கூட இருக்க மாட்டேன். சொல்லும் … சொல்லிவிடும். என்ன செய்தீர் … சதியென்ன செய்தீர்…. என் விதி என்ன?

சகுனி: (ஒரு நொடி முகம் பிரகாசமடைந்து, மெல்லிய குரலில், சிந்தனை வயப்பட்ட தொனியில்)

பகடி… பகடை …

(உரக்க, சிந்தனைவயப்பட்டது போன்று பாவனை செய்து)

உமது விதி … என் … தர்மராஜனே! குருட்ஷேத்திரப் போரில் உம்மைத் தழுவி உமது லோகம் சேர்ந்தேன். வாதைகளெல்லாம் தாங்கி, பாவமெல்லாம் கழுவி, இதோ, இந்திர லோகமும் அடைந்தேன். (பெருமூச்சு) ஆனால், இங்கும் ஒரு மனக்குறை. (சற்று உரக்க) என்னுடன் சூதில் இறங்க எவரும் இல்லை ராஜனே, எவரும் இல்லை. இத்தனைக்கும் யாரையும் எந்தப் பணயமும் வைக்கச் சொல்வதில்லை. பகடைகளை எடுத்தாலே தேவர்கள் எல்லோரும் ஓடி ஒளிகிறார்கள். (சிறு வெறுப்பு தொனிக்க) கோழைகள். ஓடி ஒளிந்தே பழக்கப்பட்டவர்கள். (ஆர்வத்தோடு) என்னோடு ஒரு ஆட்டம், ஒரேயொரு ஆட்டம் … வருகிறீர்களா. எதையும் நீர் பணயமாக வைக்கத் தேவையில்லை. நீர் வென்றால் ‘சூக்குமத்தைச்’ சொல்லி விடுகிறேன்.

எமன்: சூதில் மட்டுமல்ல, கபடத்திலும் உம்மை வெல்ல முடியாது சகுனியாரே. எனது கேள்வியையே பணயமாக வைக்கச் சொல்கிறீரே. எப்படியும் வெல்லப் போவது நீர்தான். உமது வேட்கையும் தீரும். எனக்கு பதிலும் கிடைக்காது.

சகுனி: ஆட்டத்தை நகர்த்தும் காய் ஒன்றே ஒன்றுதான் தர்மராஜா. வெற்றி! அதிலும், வெல்ல முடியாதவர்களை வெல்வதில் கிட்டும் பேரின்பம். காலதேவன் நீர். காலத்தையே ஆள்பவர். காலத்தை வெல்ல யாரால் முடியும்!

எமன்: (விரக்தி தொனிக்க) தோல்வியைத் தழுவித்தான் இங்கு வந்திருக்கிறேன் சகுனியாரே. இங்கு, இந்த சொர்க்கத்தில் எனக்கென்னெ வேலை? எனது லோகம் வேறு – நரகம். என் வாழ்க்கை வேறு. வாழ்வை அளப்பவன், ஆள்பவன், முடிப்பவன் நான். மரணமே என் வாழ்வின் ஆதாரம். வாழ்வின் ஆதாரம் காலம். காலத்தின் ஆதாரம் மரணம். புத்துயிர்ப்பு. காலம் … காலன் … (சோர்ந்து) கலியுகம். உமக்குத் தெரியும். மானுடர்கள் காலத்தை வென்றுவிட்டார்கள். நினைவுகள் கொண்டு நிரப்பிவிட்டார்கள். அதைப் பதித்துப் பதுக்கி வைக்கும்
கருவிகளையும் உருவாக்கிவிட்டார்கள். எப்படி, எப்படி இது நிகழ்ந்தது? சூக்குமம் எங்கே இருக்கிறது? காலம் ஏன் இப்படிக் கடந்ததில் உறைந்து நிற்கிறது? விடிவென்ன?

சகுனி: (பலமாகச் சிரித்து) காலத்திற்கு காரண-காரியம் தெரியாது என்று சொல்வது சரியாகத்தான் இருக்கிறது.

எமன்: என்னை மூடன் என்கிறீரா?

சகுனி: சினங்கொள்ளாதீர்கள் தர்மராஜா. காலத்திற்கு – உமக்கு, புத்தி, அதாவது, குயுக்தி கிடையாது என்கிறேன். மானுடர்களைப் பாருங்கள். புத்தி மிகுந்தவர்கள். கள்ளங்கபடமற்று, காரண காரியமற்று இயங்கிக் கொண்டிருக்கும் உம்மையே ஏமாற்றிவிட்டார்கள். (உரக்கச் சிரித்து) காலத்தை உறைந்து நிற்கச் செய்துவிட்டு, காலனை இப்படி அலையவிட்டு விட்டார்கள்!

(ஏணிகளும் சர்ப்பங்களும் ஒவ்வொன்றாக, மெதுவாக அரங்கைவிட்டு வெளியேறத் தொடங்குகின்றன.)

எமன்: (சினத்துடன் தலைகவிழ்த்து) புழுக்கள் … என் நிழலின் வாசம் வீசினாலே ஓலமிட்டு ஒப்பாரி வைத்த பூச்சிகள் … (வேகத்துடன் நிமிர்ந்து, சகுனியை நோக்கி குற்றம் சாட்டும் தொனியில் கைநீட்டி) இத்தனை ஆற்றல் … யார் தந்தது அவர்களுக்கு?

சகுனி: (ஆற்றுப்படுத்தும் தொனியில்) சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால், ஒரு ஆட்டம் … ஒரேயொரு ஆட்டம். உம்மை விட்டால் இவ்வேளை … ஒருவேளை என்றைக்குமே, எனக்கு எவருமே இல்லாமல் போய்விடலாம். உமக்கும் என்னை விட்டால் வேறு எவரும் இல்லை. ஒரு ஆட்டம் தான் ஆடிப் பார்ப்போமே!

எமன்: தெரிந்தே ஏமாறச் சொல்கிறீரா?

சகுனி: (கெஞ்சும் தொனியில்) ஒரேயொரு முறை.

எமன்: ஒரு முறையாவது உம்மிடம் நான் ஏமாற வேண்டும் என்பதுதான் உமது நீண்ட நாள் விருப்பமோ?

சகுனி: என்ன தர்மராஜனே! இழப்பதற்கு உம்மிடம் என்ன இருக்கிறது! (ஆசையூட்டும் தொனியில்) வென்றாலோ … உமது காலம் உம்மைச் சேரும். உமது நேசத்திற்குரிய கயிறு … ஆஹா! அலாதியான உமது வாகனம் … அற்ப உயிர்களை இஷ்டம்போல அள்ளிச் செல்லலாம் … பொற்காலம்!

எமன்: (சற்று யோசித்துவிட்டு) சரி. ஆடுவோம். ஆனால் ஒன்று. ஆட்டத்தில் நானே வெற்றி பெற வேண்டும். அல்லது, நான் தோற்றாலும், நீர் நான் கேட்டதைச் சொல்லிவிட வேண்டும்.

சகுனி: (ஆச்சரியம் கொண்டது போன்ற பாவனையோடு) இது என்ன நிபந்தனை? ஆட்டத்தின் அடிப்படை விதியையே மீறுவதாக இருக்கிறதே!

எமன்: ஆட வேண்டுமா? வெற்றிபெற வேண்டுமா? எது உமது விருப்பம்?

சகுனி: வெற்றி பெற ஆடவேண்டும்.

எமன்: வெற்றியை இலக்காகக் கொண்ட ஆட்டம் ஏதாவது ஒரு புள்ளியில் முடிந்துவிடும் சகுனியாரே! உமது ஆட்டம் முடிந்ததும் அதனால்தான். பாருங்கள் … எல்லோரும் கூடிக் குடித்து, ஆடிக் களித்து, முடிவிலா இன்பத்தில் திளைக்கும் இந்திரலோகத்திலேயே உம்முடன் ஆட ஒருவர்கூட இல்லை! நீரே முடிவு செய்து கொள்ளும். வெற்றி தோல்வியற்ற ஒரு ஆட்டம். ஆடுவதுதான் உமது தீரா வேட்கையென்றால், நீர் இறங்கலாம். தோல்வி பற்றிய கவலையின்றி ஆடலாம். வெற்றியே பெற்றாலும் துறக்கலாம். வெற்றியைத் துறக்கத் துறக்க, தோல்வியைத் தள்ளிப்போடப்போட, ஆட்டத்தை தொடர்ந்துகொண்டே இருக்கலாம்.

* * *

காட்சி – 3

(ஏணியொன்று பதைபதைத்தபடி அரங்கின் குறுக்காக ஓடிச்செல்கிறது. சில நொடிகள் கழித்து, சர்ப்பமொன்று அது சென்ற திசையில். அரங்கின் முன்பகுதியில் சகுனியும் எமனும்.)

சகுனி: (சொக்கட்டான்களை உருட்டி) தாயம்!

(தாயம் விழுகிறது. உரக்கச் சிரித்து)

இதோ, என் முதல் காயைத் துவக்கி வைக்கிறேன்.

(சொக்கட்டான்களை அள்ளி எமனிடம் கம்பீரமாக நீட்டுகிறான். எமன் ஒரு முறுவலோடு அவற்றைப் பெற்றுக் கொள்கிறான்.)

எமன்: (சொக்கட்டான்களை உருட்டி) காதல்! …

(தாயம் விழுந்திருக்கிறது.)

சகுனி: (அதிர்ந்து) இது என்ன?

எமன்: (சலனமின்றி சொக்கட்டான்களைக் காட்டி) தாயம் விழுந்திருக்கிறது சகுனியாரே.

சகுனி: (சொக்கட்டான்களைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து, எமனை சந்தேகத்துடன் கூர்ந்து பார்த்து)

அதைக் கேட்கவில்லை. அது என்ன அது காதல்?

எமன்: (சலனம் காட்டாத தொனியில்) என்ன இப்படிக் கேட்கிறீர் சகுனியாரே! பாரதமே காதலில்
பிறந்ததுதானே! சந்தனு சத்யவதியிடம் கொண்ட காதலில்! அதற்கும் முன்பாக, அவன் கங்கையின் பால் கொண்ட காதலில்! யுதிஷ்டிரன் சூதில் கொண்ட காதல்தானே இறுதியில் பாரதப் போருக்கே காரணமானது! இவ்வளவு ஏன், சூதில் நீர் கொண்டிருக்கும் தீராக் காதலால்தானே இங்கே நாம் … அண்டசராசரங்களும் அணுத்திரள்களும் இந்த ஈர்ப்பில்தானே சுழன்று கொண்டிருக்கின்றன! பிரபஞ்சமே காதலால்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது சகுனியாரே.

சகுனி: (சந்தேகம் மாறாமல்) இதில் சூது ஏதும் இல்லையே?

எமன்: காதலில் சூது ஏது சகுனியாரே!

சகுனி: (எரிச்சலுடன்) காதல் … காதல். நான் அதைக் கேட்கவில்லை. உமது பேச்சு …

எமன்: சூதின் எல்லாம் வல்ல இறை நீர். உமக்கு எதிராக நான் என்ன சூது செய்துவிட முடியும் சகுனியாரே!

சகுனி: இல்லை … (சற்றே கேலி தொனிக்க) நீர் அளப்பது … இதுவரையில் நான் ஆடியிராத ஆட்டம்.

எமன்: ஐயம் தீரவில்லையோ!? சூதுள்ளவன் கடந்தவற்றில் உறைந்து வருவதைத் தீட்டுபவன். நீரே சொன்னீர். விருப்பு வெறுப்புகளின்றி, காரண காரியத்தொடர்புகளைத் தீட்டாது இயங்கிக் கொண்டிருப்பவன் நான். காலன். காலத்தைக் கடந்தவனும் அல்லன், கடந்தவற்றில் தொக்கி நிற்பவனும் அல்லன். ஹரியும் ஹரனும் நான்முகனும் போன்று முக்காலமும் உணர்ந்தவனும் அல்லன். மும்மூர்த்திகளுக்கு காலம் ஒரு சுழல். நானோ, கணத்தில், கணங்களில் உறைந்திருப்பவன். விதை போன்றவன். கடந்தவற்றின் துகள்கள் தூசியாகப் படிந்த விதை.
மறைந்திருக்கும் சிறு துளைகளென வருபவை பரவியிருக்கும் விதை. எந்தத் துகள் எந்தத் துளையை அடைத்தது? எது எதில் இழைந்து கலந்து எப்படித் துளிர்விட்டது? துகள் விளைத்ததா, துளை விளைத்ததா? யார் சொல்ல முடியும்?

சகுனி: என்றாலும் …

எமன்: உமது ஆட்டம். உமக்காகவே இந்த ஆட்டம். ஆனால், என் விதிகளின்படி. இதை நீர் ஒப்புக்கொண்ட பின்னரே நான் ஆட அமர்ந்தேன் சகுனியாரே.

(எமன் சொக்கட்டான்களை அள்ளி, சகுனியிடம் கொடுத்துவிட்டு, தனது காயை நகர்த்தி, சகுனியைப் பார்க்கிறான். சகுனி பெருமூச்சுவிட்டு, குழப்பம் தொனிக்கும் முறுவலுடன் எமனைப் பார்த்து, சில நொடிகள் கண்கள் மூடி, சலனம் சற்றுக் குறைந்து)

சகுனி: (கேலி கூடிய தொனியில்) உமது விதிகள் … ம்ம்ம் …

(சரசரவென சொக்காட்டன்களை விசையோடு உரசி, வீசி, மகிழ்ச்சி பொங்க, உரக்க)

கலவி! …

(உரக்கச் சிரித்து, எமனை நோக்கி)

என்ன, சரிதானா?

(கபடம் தொனிக்கும் முறுவலுடன் எமனைப் பார்த்தபடியே தன் காயை நகர்த்தி வைக்கிறான்.)

எமன்: (சொக்கட்டான்களை உருட்டி) பொறாமை!

(காயை நகர்த்தி, சகுனியைப் பார்க்கிறான். சகுனி சில நொடிகள் யோசித்து, திருப்தி கொண்ட பாவத்தில் தலையசைத்து, சொக்கட்டான்களை அள்ளுகிறான்.)

சகுனி: (யோசிக்கும் பாவனையில்) அவசரப்பட்டுவிட்டேனோ! காதல் கலவிக்குத்தானே என்று யோசித்தேன். (கேலியுடன்) வேறென்ன! நீர் … சற்றே இழுக்கிறீர். அதுவும் சரிதான். நல்ல சோடியொன்று சேர்ந்துவிட்டால் ஊரார் கொள்ளும் ஆற்றாமையைச் சொல்லவா வேண்டும்! சரி.

(சொக்காட்டான்களை நன்றாக உரசி, வீசி)

ஊடல்! என்ன?… ஊர்க்கண் பட்டுவிட்டால் பிரிவு நிச்சயந்தானே!

(சிரித்து, காயை நகர்த்தி, சொக்கட்டான்களை அள்ளி எமனிடம் தருகிறான்.)

எமன்: (சலனம் காட்டாமல், சொக்கட்டான்களை உருட்டி) போட்டி!

(சகுனி கண்களைச் சுருக்கி யோசித்து, திருப்தி கொண்ட பாவத்தில் தலையசைத்து, சொக்கட்டான்களை அள்ளுகிறான்.)

சகுனி: ஓ! முக்கோணக் காதல். அப்புறமென்ன, ஒரு கோணம் பொருந்தாக் கோணந்தான்.

(உரக்கச் சிரித்து, சொக்கட்டான்களை உரசி, வீசி)

கைக்கிளை!

(குனிந்து, தன் காயை நகர்த்தி, நிமிர்ந்து, பெருமிதத்தோடு எமனைப் பார்த்து)

எப்படி!

(சிரித்து, சொக்கட்டான்களை அள்ளி எமனிடம் தருகிறான்.)

எமன்: (சொக்கட்டான்களை உருட்டி) வன்மம்!

(அரங்கின் குறுக்காக, மீண்டும் ஏணியொன்று ஓடுகிறது. அதை விரட்டிக் கொண்டு ஒரு சர்ப்பம்.)

(சகுனி அதிர்ச்சி கொள்கிறான்.)

எமன்: (தன் காயை நகர்த்திவிட்டு, சலனமற்ற தொனியில்) என்ன சகுனியாரே?

சகுனி: (குழப்பமும் சினமும் தொனிக்க) இனி என்ன?

எமன்: சினமேன் சகுனியாரே! நான் தவறாக ஏதும் சொல்லிவிடவில்லையே!

சகுனி: (குழப்பத்துடன்) காதலில் பொறாமையும் போட்டியும் சரி. ஊடலும் கூடலும் தோல்வியும் கூட சரிதான். வன்மம் எப்படி வந்தது?

(சிறு சினம் தொனிக்கும் பார்வையை எமன் மீது வீசுகிறான்.)

எமன்: (சிரித்து, மறுக்கும் தொனியில் தலையசைத்து) தப்பிதம். தப்பிதம். நானுரைத்தது காதலைப் பற்றியோ, காரண காரியங்கள், விளைவுகளைப் பற்றியோ அல்ல சகுனியாரே. பாரதமெனும் வித்தில் எந்தத் துகள் எந்தத் துளையில் இழைந்து குருட்ஷேத்திரப் போர் முளைத்தது என்று அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன். ஆலமாய் விரிந்து, பாரதப் பூமியெங்கும் அது ஊன்றியிருக்கும் விழுதுகளின் நிழல் இருள் விலக்கி, ஆலத்தின் வேர்களின் நுனிகளை அலசிப் பார்க்கிறேன். சந்தனு சத்யவதியிடம் கொண்ட காதலா, அவள் தந்தை-மீனவ குலத்தலைவன் அரியணையின் மீது வைத்த காதலா, பீஷ்மன் தன் தந்தையிடம் கொண்டிருந்த காதலா? எந்தக் காதல், எந்தத் துகள் … காந்தாரி, குந்தி ஐந்து பிள்ளை பெற்றாளென அறிந்ததும் கொண்ட பொறாமையோடு இழைந்தது?அதன் உக்கிரம் … அதைச் சொல்ல நாவேது … ?

(பின்னணியில்…தலைவிரி கோலமாய் காந்தாரி தரையில் அமர்ந்திருக்கிறாள்.)

உரக்க அரற்றுகிறாள்:

“குருடனுக்கு வாக்கப்பட்டு

கண்கட்டி வாழ்ந்தேனே

குருடியாய் கன காலம்

கண்கட்டி வாழ்ந்தேனே

பத்தினி எனக்கு

(இன்னும் உரக்க)

பத்தினியில்லையா

நான் பத்தினியில்லையா

ஈஸ்வரீ

பிள்ளைவரம் ஏனில்லை

பிள்ளைவரம் ஏனில்லை

போகாத தலமெல்லாம் போய்வந்து

ஊண் மறந்து நிலம் மறந்து நீரும் மறந்து

நோகாத நோன்பெல்லாம் தானிருந்து

கூடாத நாளெல்லாம் தவமிருந்து

கொண்டவனைத் தெய்வமாய்த் தான்தொழுது

வேண்டாத வரமெல்லாம் வேண்டி நின்றும்

ஈஸ்வரீ

பிள்ளைவரம் ஏனில்லை

பிள்ளைவரம் ஏனில்லை

கூடவும் ஏலாத பேடிக்கும் பெற்றாளே

அவள்

பேடிக்கும் பெற்றாளே

ஒன்னில்ல ரெண்டில்ல

அஞ்சாறு பெற்றாளே

அஞ்சாறு பெற்றாளே

(வயிற்றிலடித்துக் கொள்கிறாள்)

காம்பெடுத்து பாலூட்ட

முலைக்காம்பெடுத்து நான் கொடுத்து பாலூட்ட

குஞ்சில்லையே

எனக்கொரு குஞ்சில்லையே

(மார்பிலடித்துக் கொள்கிறாள்)

வளமில்லையே

ஐயோ

இந்த வயிற்றுக்கு வளமில்லையே”

(வயிற்றிலடித்துக் கொள்கிறாள்)

(சட்டென்று நிறுத்தி, வெறியுடன்)

“சேடி … அடி சேடி!”

(இருவர் இருபுறமிருந்தும் ஓடி வருகிறார்கள்)

“இங்கே வாடி, ஒரு ஒலக்கயக் கொண்டாடி!”

(ஒருத்தி எடுத்துவர ஓடிப் போகிறாள்)

சேடி: எதுக்கம்மா?

காந்தாரி:

“ஒரு மணி

ஒரு குண்டுமணி பூக்காத

தொடச்செடுத்த ஒரலுக்கு

ஒரு ஒலக்க வேணுமடி

ஒரு ஒலக்க வேணுமடி

இடிக்க வேணுமடி

(வயிற்றிலடித்து)

இத இடிக்க வேணுமடி”

(ஓடிப்போன சேடி உலக்கையுடன் வந்து காந்தாரியிடம் அதைத் தருகிறாள். காந்தாரி உலக்கையால் வயிற்றிலிடித்துக்கொண்டு)

“தொடச்செடுத்த ஒரல

இடிக்க வேணுமடி

ஒரல

இடிக்க வேணுமடி”

(சேடிகள் தடுக்கின்றனர். அவர்களைத் தள்ளிவிட்டு இன்னும் வேகமாக இடித்துக் கொள்கிறாள்.)

“இருந்தென்னடி

குண்டுமணி பூக்காத இது

இருந்தென்னடி …

இடிக்க வேணுமடி

வெத்துரல இடிக்க வேணுமடி …

வெத்துரல

வெத்துரல

இடிக்கணுமடீ

இடிக்கணுமடீ”

(பின்னரங்கில் ஒளி மங்கி, மறைந்து, முன்னரங்கில் குவிகிறது.)

சகுனி: கௌரவர்கள்! (உரக்கச் சிரித்து) இடிபட்ட உரலுக்குப் பிறந்தவர்கள்!

எமன்: (தொடர்கிறான்) திருதராஷ்டிரன் பாண்டு புத்திரர்பால் கொண்ட பொறாமை, துரியோதனன் வீமன் மீது கொண்ட பொறாமை, அர்ச்சுனன் கர்ணன் மீது கொண்ட பொறாமை … திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் இடையில் மெல்லிய இழையாக ஊடாடிய அரியணைப் போட்டி, கௌரவர்களுக்கும் பாண்டு புத்திரர்க்கும் குருகுலவாசத்தில் விஷவிருட்சமாய் வளர்ந்த போட்டி, அர்ச்சுனனை எண்ணி துரோணர் கட்டை விரல் பறித்து ஏகலைவனை விலக்கியது, கபடத்தில் யார் வல்லவர் என்பதில் உமக்கும் கண்ணனுக்குமான போட்டி … எது
எதனுடன் கலந்தது? கங்கா புத்திரன் – பீஷ்மன். காலனை – என்னையே எட்டி நிற்கச் செய்தவன். குருட்ஷேத்திரப் போர் முடிந்து, தான்விரும்பி கயிலாயனடி சேர்ந்தவன். இணையற்ற அந்த வீரனை வீழ்த்தியது என்ன?

(பின்னணியில்…)

(அம்பா ஒற்றைக் காலில் நின்று தவமிருக்கிறாள். செந்நிற ஒளி அவள் மீது குவிந்திருக்கிறது. ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் ரீங்கார இழையாக அரங்கில் ஓங்கி ஒலிக்கிறது. மந்திரம் மெல்ல படிப்படியாகத் தணிந்து, பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க)

பெண் குரல்: யாரிவள்? பாற்கடல் பொங்க, நான்முகன் வீற்றிருக்கும் தாமரைத் தண்டதிர, கயிலாயம் குலுங்க, கடுந்தவம் செய்துகொண்டிருப்பவள்?அநுதினமும் அஞ்சி நடுங்கும் அற்பக் கோழை இந்திரனவன் குழம்பித் தவிக்கிறான். “இந்திரப் பதவி இனி இவள் இந்திராணிக்குப் போய்விடுமோ?” புலம்புகிறான். விஸ்வாமித்திரனைக் கலைக்க ஒரு மேனகை. இவளைக் கலைக்க? முப்பது முக்கோடி தேவர்களும், சப்த ரிஷிகளும், சந்திரனும் சூரியனும் “யாரிவள், யாரிவள்”, என்று முனுமுனுத்துத் திரிகிறார்கள். அம்பா! நாணேற்றத் தண்டில்லா தன் இளவல்களுக்காய், வெட்கமின்றிப் பரிந்து, சிறையெடுத்துச் சென்றான் இவளை பீஷ்மன். இளவலை இவள் மறுக்க, பீஷ்மன்
இவளை மறுக்க, இவள் நினைத்தவனும் மறுக்க, மறுக்கப்பட்டவளாய், நினைவிலிருந்து விலக்கப்பட்டவளாய்,
நினைவுகளைச் சுமந்து, வட்டமிட்டுப் பருந்துகள் உயரச் சுழலும் வனம் புகுந்தாள். வன்மத்தில் உறைந்து, முக்கண்ணனை இருத்தி, ஆற்றல் வேண்டி நிற்கிறாள். ஆற்றல் … அழிவாற்றல் … நினைவாற்றல்?!

(ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் மெல்ல மேலோங்கி, அரங்கதிர ஒலிக்கிறது. செந்நிற ஒளி அரங்கு முழுக்கப் பரவிப் படர்கிறது.)

அம்பா: ஒருவன்கூட இல்லை. ஒரு ஆண்மகன்கூட இல்லை. பரந்த இப்புவியில் நிமிர்ந்த நெஞ்சங்கொண்ட ஒரு … ஒரு ஆண்மகன்கூட இல்லை. மாறாமுறுவல் பூத்த அம்முருகனே அருளித் தந்தான்; இதை அணிந்தவர் அவனைக் கொல்வாரென்று. வாடா அத்தாமரைச் சரத்தை அணியத் துணிய ஒருவனுக்கும் தண்டில்லை … பீஷ்மன் … பீஷ்மன் …

(உலவி வந்து, அரங்கின் ஒரு மூலையில் முழங்காலிட்டு அமர்ந்து விம்முகிறாள். சரேலென எழுந்து, அரங்கின் மையத்தில் வந்து நின்று, சினம் பொங்க)

அம்பா: கொல்வேன். நானே கொல்வேன். என் காதலைப் புறந்தள்ளியவனை நானே கொல்வேன். என் பெண்மையைக் கொல்வேன். என் மென்மையைக் கொல்வேன். கொன்று கொல்வேன் …

(அரங்கு இருளில் மூழ்கி, சகுனி மீது ஒளி குவிகிறது.)

சகுனி: (இருண்ட முகத்துடன், சிந்தனையிலாழ்ந்த தொனியில்) வறட்சி … கேட்கக் கேட்கத் தீராது, அள்ளித்தர வக்கற்ற ஒரு காதல் … ஏந்திக் கெஞ்சி நின்ற காதல் … கேட்டது கிட்டாதென்று தெரிந்ததும் அதன் நினைவில் உறைந்து … சிகண்டியாய்ப் பிறந்தவள் ஜென்மங்களுக்காய் கொண்ட வன்மம் …

எமன்: (தொடர்கிறான்) துரியோதனன் திரௌபதியிடம் கொண்ட வன்மம், திரௌபதி துச்சாதனன் மீதும் துரியோதனன் மீதும் கொண்ட வன்மம் …

சகுனி: ஆ! உன்மத்தம் … உன்மத்தம் … வெறிகொண்டாடினாளல்லவா அவள்! உறைந்து நின்றோமே நாங்களெல்லோரும் …! வெறி … வெறி … இரத்தவெறி …

(பின்னணியில் …)

(திரௌபதி உன்மத்தங்கொண்டு, தலைவிரி கோலமாய் ஆடுகிறாள்)

(உடுக்கை ஒலிக்கு)

(ஆடி முடித்து, அரங்கின் மையத்தில் வந்து நின்று)

திரௌபதி: பதிவிரதையடா நான் பதிவிரதை. பாஞ்சாலி. ஐவருக்கு மனைவியானதனால் பரத்தை எனக் கொண்டாயோ? குற்றமில்லை. உலுத்தன் உனைச் சொல்லிக் குற்றமில்லை. கொண்டவளைச் சூதில் வைத்துக் கொண்டாடத் துணிந்த இந்தப் பேடிகளைச் சொல்ல வேண்டும். இடிந்த தூண்களைப் போன்று சரிந்து நிற்பதைப் பார்! கண்டவளைச் சேர்ந்து, கொண்டது கோலமெனத் திரியும் பெண்டாளனொருவன். தீனித் தினவெடுத்த
தடியனொருவன். நக்கித் திரியும் நாய்க்கும் வழுவிலா நீதி சொல்லும் வெற்று வாய்ச் சொல்லாளர். ஆகாயம் பார்த்தலைபவனொருவன், ஏறெடுத்தும் நோக்காதவனொருவன். போதுமே, இது போதுமே வினை வந்து சூழ! ஏ, துரியோதனா, கேள்! பஞ்சுப் பொதி சுமக்கவும் பொக்கில்லாது நிற்கும் இப்பேடிகளை மணந்தும் பதிவிரதையடா நான், பதிவிரதை. எனைப் பற்றி இருத்திய நின் துடை பிளந்து, வற்றி வழியும் இரத்தம் குடிப்பேன். (இடப்புறமாக திரும்பி, கைநீட்டி, அடித்து, சபதம் செய்து, உடுக்கை ஒலிக்கு ஆடுகிறாள்.)

(நின்று)

ஏ, துச்சாதனா! மலர் சூடி மணங்கமழ்ந்த இக்கூந்தல் பற்றித் தரதரவென தேரில் கட்டி வந்தவனே! கேள்! நின் நெஞ்சம் பிளந்து, பொங்கும் குருதி பிசைந்து, ஆற்றி அலைந்தே இக்கூந்தல் முடிப்பேன்!

(வலப்புறமாக திரும்பி, கைநீட்டி, அடித்து சபதம் செய்து உடுக்கை ஒலிக்கு ஆடுகிறாள்.)

(ஆடி முடித்து, கூந்தலை வழித்து, சுழற்றி, முகம் மறைக்க முன்விழச்செய்து ஆக்ரோஷமாக உறைந்து நிற்கிறாள்.)

சகுனி: (நடுக்கம் கொண்ட தொனியில்) பதிமூன்று ஆண்டுகள் … பொதித்துப் பொதித்து நினைவைச் சுமந்திருந்தாள் … காத்திருந்து சொல் முடித்தாள் … அந்த வன்மம் …

எமன்: (தொடர்கிறான்) வன்மம்! பாரதக் கதை முழுக்க வன்மம்! பாரதம் முழுக்க, புவி முழுக்க விஷவிருட்சமாய்ப் படர்ந்து பரவிக்கிடக்கிறது. ஏனிந்த வன்மம் சகுனியாரே? எங்கு ஊற்று கொள்கிறது இந்த வன்மம்?

சகுனி: (இருண்ட முகத்துடன்) உம்மால் புரிந்துகொள்ள முடியாது தர்மராஜனே! நீர் கணங்களில் நிலைகொள்பவர்.

எமன்: உமக்குத் தெரியும். வன்மத்தின் ஊற்று எங்கிருக்கிறது என்பது உமக்குத் தெரியும். உமது வன்மமும் தெரியும்.

சகுனி: என் வேதனை! நான் கொண்ட வன்மம்! அது உமக்கு ஒரு போதும் பிடிபடாது தர்மராஜனே! அழிக்கமுடியாத வடுக்களிலிருந்து பிறந்த வன்மம். கண்முன்னே கண்ட, அனுபவித்த கொடுமைகள் நெஞ்சைப் பிளந்து நினைவுகளாய்ப் பதிந்ததிலிருந்து பிறக்கும் வன்மம். நினைவுகள் …

(சகுனி எழுந்து பின்னரங்கிற்குச் செல்கிறான்.)

(அமர்ந்து, கூனிக் குறுகி, நெளிந்து, தரையில் புரள்கிறான்.)

புலம்புகிறான்: (பலகீனமான குரலில்)

மறக்கமாட்டேன். இத்தேகத்தில் சதை வற்றி எலும்புகள் மட்கிக் கரையும் வரையில் மறக்கமாட்டேன். நூறுவர்
நாங்கள். உடன் பிறந்தோர் நூறுவர். இந்த இருட்குகையில், பாதாளத்தில் அடைத்து ஒரு கவளச்சோறிட்டாய் திருதராஷ்டிரா. ஒருபோதும் மறக்கமாட்டேன். உன் குலத்தைப் பூண்டோடழிக்காமல் உறங்கமாட்டேன். சிதறிய சிறு மணிப் பருக்கைகள் சேர்ந்து, எனக்கீந்து உயிரொட்டி பிழைத்திருக்கச் செய்த சோதரரை நினைவிருத்திச் சூளுரைக்கிறேன். உன் குலத்தை வேரறுக்காமல் விடமாட்டேன். சிறுகச் சிறுக சதையுருகியுருகி, மெல்லக் கூடாய்த் தேய்ந்து மடிந்த அவர்தம் நினைவின் பேரால் சபிக்கிறேன். உன் குலக்கொழுந்துகள் ஒவ்வொன்றாய் மடிவது சொல்லக் கேட்டு உயிருடன் நரகம் காண்பாய் நீ.

(அமர்ந்து)

சிறு புல் பிடுங்கிப் போடாமல் செய்து முடிப்பேனிதை.

(பகடைகளை வீசி)

இப்படி உருளும் உன் குலக்கொடிகளின் தலைகள். என் சோதரர் விலா எலும்பெடுத்துச் செய்தேன். இந்தப் பகடைகள்
போதுமெனக்கு. என் நாவின் சுழற்சியில் விழுவதைத் தருமவை.

(வெறிகொண்டு உரக்கச் சிரிக்கிறான்.)

(எழுந்து, எமனருகில் வந்து அமர்கிறான்.)

எமன்: (ஆற்றுப்படுத்தும் தொனியில்)

உமது வேதனை புரிகிறது சகுனியாரே.

சகுனி: நினைவுகள்! ஹீனம் … பலஹீனம் … இயலாமை வடுக்களிலிருந்து ஊற்றுகொள்வதுதான் வன்மம் தர்மராஜனே! நினைவழிப்பது, நினைவுகளை இழப்பது, மறப்பது மானுடப் பிறப்பிற்குக் கைகூடாதது. பலஹீனப் பிறவிகளுக்குக் கூடவே கூடாதது. அணைகட்டி தேக்கித் தேக்கி, காத்திருந்து காலம் கூடும்போது கட்டவிழ்த்துப் பழிதீர்க்கும்வரை ஓயாத நினைவுகள் … இதையெல்லாம் உம்மால் புரிந்துகொள்ள முடியாது தர்மராஜா! கணக்கெடுப்பதையும் கூட நீர் அறியமாட்டீர். அது சித்ரகுப்தனுக்குரியதல்லவா!

எமன்: அந்தப் பகடைகளை என்ன செய்தாய் சகுனி?

சகுனி: (உரக்கச் சிரித்து)

தெரியும். கடைசியில் நீர் இதைத்தான் கேட்பீர் என்று தெரியும். அதைத் தெரிந்து இனி ஒன்றும் ஆகப்போவதில்லை தர்மராஜா! ஆனால், எனக்கொரு கேள்வியுண்டு தர்மராஜனே!எல்லாம் முடிந்து, முடி துறந்து, பாண்டவர்கள் பூத உடலோடு சொர்க்கம் சேரச் சென்றார்கள். மலையினடியில் தொடங்கியது பயணம். நீரும் நாயுருக்கொண்டு …

(பின்னரங்கில், பாண்டவர்களும் திரௌபதியும் மலையேறுவது போன்று சிரமத்துடன் நடக்கத் தொடங்குகிறார்கள். முன்னரங்கிலிருந்து எமன் எழுந்து சென்று, அவர்களுக்குப் பின்னால் நாய் போல நடக்கத் தொடங்குகிறான் …)

(அரங்கை ஒருமுறை வலம் வந்து, முன்னரங்கின் விளிம்பில்)

திரௌபதி: (அலறுகிறாள்) ஐயோ! என் கூந்தல் … என் கூந்தல் திரிந்து பிரியுதே (தலையைப் பற்றிக் கொண்டு) கடைந்து பிழியுதே (மார்பகங்களைப் பற்றிக் கொண்டு) ஆ!தனம் வற்றுதே காம்பு சுருங்கிச் சுடுதே (இடையைப் பற்றிக் கொண்டு) ஐயோ!குறுகிக் கூடாகுதே (தருமனை நோக்கி கைநீட்டி) பிரபு … (பலகீனமாக) நா வரளுதே நா வரளுதே … (சரிந்து வீழ்கிறாள்.)

(பாண்டவர் ஐவரும் திகைத்து நிற்கிறார்கள். ஒரு அரைவட்டமாக திரௌபதியைச் சூழ்ந்து முழங்காலிட்டு அமர்கிறார்கள். மெல்ல விம்முகிறார்கள். தருமன் மட்டும் சலனமின்றி நின்றிருக்கிறான். ‘நாய்’ சற்று எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.)

வீமன்: (தருமனை நோக்கி உரக்க)

அண்ணா! பத்தினி, என் பத்தினி! பூவுடல் கசங்கி நொடியில் வீழ்ந்தாளே! என்ன, என்ன பாவம் செய்தாளிவள்?

தருமன்: (சலனமற்ற தொனியில்) உன் பத்தினியல்ல வீமா. நம் ஐவருக்கும். ஆனால் … அர்ச்சுனனையே மனதாரக் கொண்டாள் … அதுதான் …

சகுனி: (முன்னரங்கின் விளிம்பிலிருந்து உரக்கச் சிரித்து)

அர்ச்சுனனை மனதாரக் கொண்டாள் … ஆனால் … (சரசரவென வீமன் அருகில் சென்று) இந்த மடையனை … ஓ! ஏசவில்லை … நளபாகனல்லவா, அதைச் சொல்கிறேன் … இவனைத் தன் சொல்படியெல்லாம் ஆட்டி
வைத்தவளல்லவா! (அர்ச்சுனனைச் சுட்டி) ஸ்த்ரீலோலன் இவன் … (அர்ச்சுனன் தலைகவிழ்கிறான்) இவனை மனதில் வைத்தாள் … (வீமனைச் சுட்டி) இவனோ இவள்பால் பைத்தியமே கொண்டிருந்தான். இவனை ஏவலாளென அலைத்துச் சுழற்றிச் சுழற்றியடித்தாளே! அஞ்ஞாத வாசத்தில், உமது மறைவிடம் வெளிப்பட்டுவிடும் என்பதைக்கூட யோசியாமல், இவள் கேட்டாளென, கீசகனை இருட்டு மூலையில் வைத்துக் கொலை செய்தானே, அது மறந்துவிட்டதா? பாண்டவர் குலக்கொழுந்துகளின் சிரமறுத்து வஞ்சம் தீர்த்தான் அசுவத்தாமன். அவன் தலையைக் கொணரக் கேட்டு வெற்று மூர்க்கச் சபதம் செய்தவளல்லவா இவள்.

(வீழ்ந்து கிடக்கும் திரௌபதியை நோக்கி, சிறு வெறுப்பு கலந்த கேலி தொனிக்க)

ம்ம்ம் … பாஞ்சாலி … ஐவருக்கும் பத்தினி …

(பாண்டவர் ஐவரும் வெட்கித் தலை குனிகிறார்கள். சில நொடிகள் திரௌபதியின் உடலை மௌனமாகப் பார்த்து நிற்கிறார்கள். மெல்லத் தொடர்கிறார்கள். அரங்கை வலம் வந்து, திரௌபதியின் உடல் வீழ்ந்து கிடக்கும் இடம் தாண்டியதும்)

சகாதேவன்: (திடீரென்று, பின் தொடர்ந்து வரும் நாயைப் பார்த்து, அதிர்ச்சி கொண்ட தொனியில்)

ஆ! இது … இது … மரணமல்லவா … என் நேரம் … நெருங்கிவிட்டதா? (ஆகாயத்தைப் பார்த்து) நிமித்தங்கணிப்பதில்
சூரனில்லையா நான்? … எப்படி … எப்படி என் நேரத்தைக் கணிக்கத் தவறினேன் … ஐயோ … (தலையைப் பற்றிக் கொண்டு வலி தாளாமல் முழங்காலிட்டுக் குனிந்து) என் சிரம் … கணம் … தாளவில்லையே …

(சுருண்டு மடிகிறான். மற்றவர்கள் நின்று வெறிக்கிறார்கள்.)

வீமன்: (சோர்வு தொனிக்க) அண்ணா! இவன் …

தருமன்: (சலனமற்ற தொனியில்) அறிவிலும், கற்ற வித்தைகளிலும் தனக்கு நிகர் எவருமில்லையென்று அகந்தை மருவி இருந்தான் வீமா!

(மெல்ல நகர்ந்து அரங்கை வலம் வருகிறார்கள். சகாதேவனின் உடல் வீழ்ந்து கிடக்கும் இடத்தைத் தாண்டியதும்)

நகுலன்: (பதைபதைத்து, முகம் பொத்தி அலறி)

வதனம் என் சுந்தர வதனம் … யார் கண் பட்டதோ … பெண்டிரும் நாணி ஒளிந்த என்னழகு … ஐயோ … (வீழ்ந்து கிடக்கும் திரௌபதியின் உடலைச் சுட்டி) இவள்தான் வஞ்சம் வைத்தாளோ … (கைகளையும் உடலையும் பரபரவெனப் பார்த்து) மேனி தகதகத்த என் மேனி … புழுத்துப் புண்ணாகுதே … நிண நாற்றம் வீசுதே … மண்ணில் மட்கிக் கரைவதுதான் இதற்கும் விதியா …?

(மடிந்து வீழ்கிறான்)

தருமன்: (தொனி சற்றும் மாறாமல் வீமனைப் பார்த்து)

நகுலன் … தன் அழகில் மிஞ்சிய பெருமை கொண்டிருந்தான் … சொரூபி … குரூபி …

சகுனி: (மீண்டும் சற்று எட்ட நின்று, வீழ்ந்து கிடக்கும் நகுலனையும் சகாதேவனையும் பார்த்து, சற்றே கேலிகூடிய தொனியில்)

பாவம்! செல்லத்தில் கெட்ட பிள்ளைகள். (நகுலனைச் சுட்டி) என் மகன் உலுகனைக் கொன்றான் இவன். (சகாதேவனைச் சுட்டி) இவன் என் உயிரைப் பறித்தான். பாரதக் கதையில் இவர்தம் பெயர்கள் எம்மால் நிலைத்திருக்கும்!

(சிரித்து நகர்கிறான். மற்ற மூவரும், ‘நாயும்’ அரங்கை வலம் வருகிறார்கள். நகுலனது உடல் கிடக்கும் இடத்தைத் தாண்டியதும், அர்ச்சுனன் தோள்களைப் பற்றிக் கொண்டு வலி தாளாமல் முழங்காலிட்டு அமர்ந்து, அழுத்தமாக, வேதனை தொனிக்க)

அர்ச்சுனன்: தோள்கள்! ஆ! எத்தனை ஆயிரம் கணைகளைத் தொடுத்திருப்பேன்! திரட்சிகொண்ட தோள்கள்! மாவீரர் எத்தனை பேர் … உயிர் குடித்த அஸ்திரங்கள் எத்தனை எத்தனை … வலியுருக்குதே … (மார்பையும் சேர்த்து அழுத்தி அணைத்துக் கொண்டு, மண்ணில் புரண்டு) ஆ குறுகுதே! என் நெஞ்சுக்கூடு … விரிந்த மார்பில் … பேரழகிகள் … எத்தனை பேர் … கொஞ்சிக் கொஞ்சிக் களித்துக் கழித்ததெல்லாம் … முடிந்ததா?

(மடிகிறான், அர்ச்சுனனின் உடலை வீமன் ஏந்தி அழுகிறான். தணிந்து,)

வீமன்: (தருமனை நோக்கி) அண்ணா! வீரமொழுகி வாழ்ந்தான். நேர்கொண்டிருந்தான். நேசித்திருந்தான். அண்ணா?!

தருமன்: (சலனமற்ற தொனியில்) வீண் சபதம் செய்து பாபம் கொண்டான் வீமா! ஒரே நாளில் எல்லோரையும் கொல்வேனென்று யுத்த சபதஞ்செய்து காக்கத் தவறினான்.

(இருவரும் அவனது உடலை வெறித்து நிற்கிறார்கள். சகுனி, அர்ச்சுனனது உடலை நோக்கி வந்து, குனிந்து, வெறுப்புமிழும் பார்வையை வீசி)

சகுனி: வீரன் … ! பீஷ்மனை, சிகண்டியின் பின்னிருந்து கணையெய்திக் கொன்றவன் வீரன்! நேர்கொண்டவன் … ! நிராயுதபாணியாய் களத்தில் நின்றவனை, சகதியலமிழ்ந்த தேர்ச்சக்கரத்தை மீட்கக் குனிந்த கர்ணனைக் கணைவீசிக் கொன்றவன் நேர்கொண்டவன் … ! வில்வித்தையில் தனக்கு நிகராய்க் கற்றவர்
எவருமிருக்கக்கூடாதென்று கனவிலும் புழுங்கித் தவித்தவன் … (கேலி தொனிக்கச் சிரித்து) ஏகலைவனின் கட்டைவிரல் பறிபோனது இந்த நேசத்தில் … பசுமையோங்கிய காண்டீவ வனத்தைப் புல்பூண்டற்றுப் போக எரித்து, ஒரு குற்றமும் அறியாச் சர்ப்பக் கூட்டத்தைக் கூண்டோடு கொன்றாழித்தது … ?! வீரம், நேர், நேசம் … என்ன நேர், என்ன நீதி, என்ன தர்மம் இது … ?

(சினம் பொங்க நகர்ந்து செல்கிறான். தருமனும், வீமனும், ‘நாயும்’ மீண்டும் வலம் வருகிறார்கள். அர்ச்சுனனது உடல் கிடக்கும் இடம் தாண்டியதும், வீமன் தள்ளாடி, சரிந்து, முழங்காலிட்டு அமர்ந்து)

வீமன்: (பலகீனமாக) அண்ணா!

தருமன்: (சலனம் மாறாத் தொனியில்) சான்றோர் வீற்ற சபையில், எவரையும் மதியாது சினங்கொண்டு
பேசினாய். இன்சொல் அறியாய். மதியிலி … புலன்கள் பெருத்து …

(வீமன் வீழ்கிறான்)

சகுனி: (வேகத்துடன் வீமனது உடல் நோக்கி வந்து, குனிந்து பார்த்து, உரக்கச் சிரித்து) தீனித்தினவெடுத்த தடியன் … மதியிலி … (சட்டென்று முகம் இருண்டு, வெறுப்புடன்) மிருகம் … மனிதக் குருதி குடித்த வெறிகொண்ட மிருகம் … யுத்த தருமம் மீறி துரியோதனனை மடியில் அடித்துக் கொன்ற கீழ்மகன் …

(விலகிச் செல்கிறான். ஐவரது உடல்களும் முன்னரங்கின் விளிம்பிலிருந்து தொடங்கி, பின்னரங்கின் விளிம்புவரை ஒரு வளைகோடாக நீண்டிருக்கின்றன. சர்ப்பமொன்று, அவர்களது உடல்களை உரசியவாறு ஊர்ந்து சென்று மறைகிறது. தருமனும் ‘நாயும்’ அரங்கை வலம் வருகிறார்கள். பின்னரங்கின் ஒரு வாயிலில் பிரகாசமாக ஒளி வீச, இருவரும் அதை நோக்கிச் செல்கிறார்கள். அரங்கம் இருளில் மூழ்குகிறது.)

(பின்னரங்கில் …)

(சர்ப்பம் ஏணியை பாதிக்கும் மேல் விழுங்கியிருக்கிறது. ஏணி இறுதி உயிர்ப்போராட்டத்தில் …)

(முன்னரங்கில் …)

சகுனி: அன்று யுதிஷ்டிரனுக்கு மீண்டும் ஒரு சோதனை வைத்தாய். அவன் அதிலும் வென்றான். நாயுருக்கொண்டு தொடர்ந்தது நீரென்று அறியாமலேயே, நாய்க்கும் சொர்க்கம் வேண்டி நின்றான். அதற்கில்லையெனில் தனக்குமில்லை எனத் துணிந்தான். உமது சொரூபம் காட்டி மெச்சினீர் அவனை. வழமை விடாது தேவர்களும் கூடி மலர் சொரிந்து வாழ்த்தினர் ஆனால் … யுதிஷ்டிரன் ஒரு தவறும் புரியாதவன் தானோ தர்மராஜனே!

எமன்: (சங்கடத்துடன்) இல்லை … உமக்குத் தெரியும்.

சகுனி: (உரக்க) அசுவத்தாமன் இறந்துவிட்டது! (உரக்கச் சிரித்து) ஒரு பொய், ஒரேயொரு பொய். அதன் பலன் அறிவீரா தர்மராஜனே! இங்கே, சொர்க்கத்தில் அரிச்சந்திரன் சுண்டுவிரல் சாம்பலானது. யுதிஷ்டிரன் தன்னைக் காண வருகிறான் என்று அறிந்து ஓடி ஒளிந்து, திரைச்சீலையொன்றைப் போர்த்திக் கொண்டான் அவன்.
சுண்டுவிரலோடு பிழைத்தான். யுதிஷ்டிரனின் ஒரு பொய்!

எமன்: (வெட்கித் தலை குனிகிறான்) அதற்கு அவன் முழுப் பொறுப்பில்லையே …

சகுனி: (ஏளனம் கூடிய தொனியுடன்) ஓ! அரைப் பொய்.

(உரக்கச் சிரித்து)

எப்போதும் போல எல்லா பழிபாவமும் கண்ணனையே சேரும், இல்லையா! நன்றாக இருக்கிறது. நன்றாகவே இருக்கிறது.

(உரக்கச் சிரித்து)

“எது இருக்கிறதோ அது நன்றாகவே இருக்கிறது.” ‘நடந்தது அனைத்தும் நன்றே நடந்தது.’

(மீண்டும் உரக்கச் சிரிக்கிறான்.)

தர்மராஜனே! அந்த ஒரு ‘அரைப் பொய்’ மட்டும்தானா? வாரணாவதத்தில் பூர்வகுடியினர் அறுவரை விருந்துக்கழைத்து, கள் கொடுத்து உறங்கச் செய்து, அரக்கு மாளிகையைத் தீயிட்டுத் தப்பியோடினார்களே என்ன நீதியில் சேரும் அது? சூதில் தன்னை இழந்த பின்னும் திரளெபதியைப் பணயமாக வைத்தானே, அது? “யுத்தத்தில் கர்ணனும் அர்ச்சுனனும் நேருக்கு நேர் பொருத வேண்டிய நேரம் வரும். அன்று கர்ணன் உம்மைத் தனது சாரதியாகக் கேட்பான். நீங்கள் உடன்பட வேண்டும். ஆனால், கர்ணனது மனத் திடம் குன்றும்படியாகப் பேசி, அவனைச் சோர்வு கொள்ளச் செய்ய வேண்டும்”, என்று தன் மாமன் சால்யனிடம் உறுதி கேட்டுப் பெற்றானே, அது எந்த நீதியில் சேரும்?

(உரக்கச் சிரித்து)

ஆ! நன்றாயிருக்கிறதே! என் சூழ்ச்சித் திறத்திற்கு நிகராயிருக்கிறதே இது!

எமன்: (வெட்கித் தலைகுனிந்து)

என்றாலும் … இன்னொரு நியதி உண்டு சகுனியாரே. ஒருவனிடத்தில் அறவொழுக்கங்கள் பல இருக்கலாம்.
அவற்றில், ஒன்றில் … ஒன்றில் மட்டும அவன் சிறந்தவனாயிருந்தாலே போதும். பிறவற்றில் வழுவினாலும், அவன் ஒழுகி நிற்கும் அந்த ஆகச்சிறந்த அறப்பண்பின் நலன் போதும் அவனைக் கடைத்தேற்ற.

சகுனி: (சிரித்து) … சரிதான், சரிதான். கர்ணனுக்குக் கொடை போதும். துரியோதனனுக்கு அவன் வீரம். (சிரித்து) எனக்கு சூழ்ச்சி … ஆனால், அது அறமாகாது இல்லையா?!

எமன்: (தலை நிமிராமலேயே) ஒவ்வொருவருக்கும் ஒன்று உண்டு.

சகுனி: (வேகவேகமாக, உரக்க) பாண்டவர்க்கு …? உமது மகனுக்கு …? எது? நீதி ஒழுகி வாழ்ந்தானா? ஒரு பொய் சொல்லாமல், உண்மையொன்று மட்டுமே ஒழுகி வாழ்ந்தானா? எது? நீதியென்றால் … அவன் வழுவிய இடங்களை இன்னும் நான் அடுக்கிக்காட்ட முடியும்!

எமன்: (நிமிர்ந்து, இருண்ட முகத்துடன், மெலிந்த கெஞ்சும் தொனியில்) அந்த ஒரு பொய் …

சகுனி: (குலுங்கிக் குலுங்கிச் சிரித்து) அரைப்பொய்யல்ல … முழுப்பொய். ஒப்புக் கொள்கிறீர். அப்படியென்றால், உமது அறம், நீதி பரிபாலனம் என்ன ஆனது தர்மராஜனே! … உமது சிரமேற் தொங்கிக் கொண்டிருந்த வாள்! அது?ஒரு பிழை! ஒரேயொரு வழு! கல்ப கோடி ஆண்டுகள் பிறழாத உமது நீதி! அதனால்தானோ உமக்கிந்த கதி தர்மராஜனே?
சகுனி: (எழுந்து நின்று சோம்பல் முறித்து)

உமது விதிகளின்படி ஒரு ஆட்டம். என்றாலும் என்னை வெற்றிகொள்ள முடியவில்லை. (உரக்கச் சிரித்து) உமது கேள்விக்கு விடை சொல்லத்தான் வேண்டுமோ?

(சர்ப்பம் ஏணியை முழுவதுமாக விழுங்கி, சிரமத்தோடு மெல்ல ஊர்ந்து வந்து எமனருகில் படுத்துக்கொள்கிறது.)

சகுனி: (உரக்கச் சிரித்தபடி அரங்கைவிட்டு வெளியேற விழைகிறான். பின்னரங்கின் விளிம்பில் நின்று, சிரித்து)

காலம் “பிழை”-த்துவிட்டது.

(எமனை நோக்கித் திரும்பி)

சொல்கிறேன் தர்மராஜா. இனி எனக்கொன்றுமில்லை. அந்தப் பகடைகள் … திருதராஷ்டிரனது கிளை எங்கும் என்றும் எப்போதும் இனி துளிர்விடக்கூடாதென்று … பொடித்து காற்றில் தூவிவிட்டேன் தர்மராஜனே! காற்றில் தூவிவிட்டேன் … என் சோதரரின் ஆன்மாக்கள், புவியுள்ள மட்டும் அலைந்து கொண்டிருக்கும். சுவாசத்தில் கலந்து, மானுடரின் நினைவுகளை அலைக்கழித்து திணறச் செய்யும். வன்மங்கொண்டு திரிவார்களவர்கள். நினைவுகளைச் சுமந்து அலைவார்கள். வாழ்வைக் கொல்வார்கள். மரணத்தை வெல்வார்கள்.

வென்றுவிட்டார்கள்!

இனி விடிவில்லை, விடிவேயில்லை …

தெய்வங்களும் இனி செய்வதற்கொன்றுமில்லை.

தீராப் பழியொன்று நீரும் சுமந்தீர்.

சீக்கிரம் … உமது வினை … அசுவத்தாமன் … இங்கும் சேர்வான் …

உமக்கும் ஒரு பழி …

ஒரு நினைவு …

தந்தேன் …

சுமந்து திரியும் …

ஓடும் காலதேவனே ஓடும்!

(உரக்கச் சிரித்து வெளியேறுகிறான். ஒளி எமன் மீது குவிகிறது. தலை கவிழ்கிறான்)

* * *

நாடகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 5 Comments »

நாடகப் பட்டறை

நண்பர்களுக்கு,

பன்னாட்டு நிறுவனங்களின் கிடுக்கிப் பிடியில், நாடகக் கலைக்கு அளித்து வந்த ஆதரவை உலகம் முழுவதுமே பல்வேறு அரசுகளும் கைகழுவிக் கொண்டிருக்கின்றன.

மூன்றாம் உலக நாடுகளின் பாரம்பரியக் கலை வடிவங்கள் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.

இச்சூழலில், புடிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் பாரம்பரியத்தில் வந்த தெருக்கூத்து குழுவினர் அரசையோ எந்த தன்னார்வ நிறுவனத்தையோ சாராது புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

எழுத்தில் பதியப்படாது பரம்பரை பரம்பரையாக வாய்மொழியாகவும் நிகழ்த்துப் பயிற்சிகள் வழியாகவும் மட்டுமே தலைமுறைகளுக்குக் கையளிக்கப்பட்டு வந்த தெருக்கூத்து வடிவத்தை சற்றே முறைப்படுத்தப்பட்ட வழியில் அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் முயற்சி.

முதல் முயற்சியாக வார இறுதி நாட்களில் 15 வாரங்கள் பயிற்சி முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இச்செய்தியை, இரு தினங்களுக்கு முன் நண்பரும் நாடக இயக்குனருமான திரு. கருணா பிரசாத்தின் அலுவலகத்தில் புடிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் மகனார், அந்நாடக மன்றத்தின் செயலாளர் திரு. காசி அவர்களைச் சந்திக்க நேர்ந்தபோது அறிய நேர்ந்தது.

இது தொடர்பாக அவர் தயாரித்து வைத்திருந்த சுற்றறிக்கையை அவரது அனுமதியோடு அனைவர் முன்னும் வைக்கிறேன்.

திரு. கண்ணப்ப தம்பிரான், கூத்துக் கலையை பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகளிலிருந்து விடுவித்து புதிய பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் முதன்மையானவராக அறியப்படுபவர்.

கூத்து வடிவில் ப்ரெக்டின் The Caucasian Chalk Circle நாடகத்தையும், போர்கேவின் சிறுகதை ஒன்றையும் அரங்கேற்றியவர். தமது வாழ்நாள் இறுதிவரை, 87 வயது மூப்பிலும் கூத்துக்கலைக்காக தம்மை அர்ப்பணித்து மறைந்தவர். அவரது வழித்தோன்றல்கள் அனைவரும் அக்கலையினூடாகவே இன்றுவரை பயணித்து வருகின்றனர்.

அவர்களது முயற்சிக்கு, இயன்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டுகிறேன்.

நன்றிகள்.

புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக் கூத்து மன்றத்தினரின் சுற்றறிக்கை:

கலை ஆர்வலர்களுக்கு வணக்கம்.

புரிசை கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்துப் பள்ளி தன் செயல்பாடுகளை தொடங்க இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தெருக்கூத்துப் பள்ளி செயல்பாட்டின் தொடக்கமாக வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புரிசையில் எங்கள் பள்ளியில் புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்ற மூத்த கலைஞர்களை வைத்துக் கொண்டு 15 வாரங்களுக்கு சென்னை மற்றும் புறநகரிலிருந்து வரும் கலை ஆர்வலர் மற்றும் நடிப்புக் கலையில் ஈடுபாடுடைய மற்ற கலைஞர்களுக்கும் பயிற்சி அளித்து முடிவில் ஒரு மணி நேரத்திற்கான தெருக்கூத்து நிகழ்ச்சி தயாரிப்பதென முடிவு செய்துள்ளோம்.

எங்களின் நோக்கம் நலிந்து வரும் கிராமியக் கலைகளை முடிந்தவரை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும் என்பதே. அதனடிப்படையில் முதலில் தெருக்கூத்து கலையை சுற்றுவட்டார கிராமப்புற இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு அதற்கான உத்திகளையும் வகுத்துக் கொண்டு வருகிறோம். எங்கள் சுற்று வட்டார கிராமப்புற இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் முகமாக முதலில் இத்தகைய கலை உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் எங்கள் சுற்று வட்டார கிராமப்புற இளையதலைமுறையினருக்கு ஒரு உத்வேகம் கிடைக்கக் கூடும் என்கிற சிறு நம்பிக்கையோடு இந்தத் திட்டத்தை வகுத்துள்ளோம்.

பயிற்சி நடக்கின்ற இரு தினங்களும் தங்கும் இடம் மற்றும் சிறிய அளவிலான உணவு ஏற்பாடும் எங்களால் செய்து தர முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.பயிற்சி தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை நடைபெறும்.

இந்த முயற்சிக்கு தங்களால் இயன்ற தொகையினை நன்கொடையாக தர நினைப்பவர்கள் தரலாம். முடியாதவர்கள் கலையின் மீது உள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தலாம்.

பயிற்சி வகுப்பு பிப்ரவரி 16 மற்றும் 17 தேதி முதல் தொடங்கப்படும்.

புரிசை சென்னையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே அமைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து எண். 130 மற்றும் சிறீராமஜெயம் (தனியார்) ஆகிய பேருந்துகள் புறப்படும்.

இறங்க வேண்டிய இடம்: புரிசை

மேலும் விவரங்களுக்கு:

கண்ணப்ப காசி

செயலாளர்

புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்

தொலைபேசி: 044 – 24742743

அலைபேசி: 09444732783

மின் அஞ்சல்: therukoothu@hotmail.com

Purisai Duraisami Kannapa Thambiran Parambarai Theru Koothu Manram
Regd. No. 179/1980

Registered Office:
4, Anna 5th Street,
M. G. R. Nagar, K. K. Nagar P.O
Chennai – 600 078.

Phone: 044 – 2474 2743
Fax: 91 – 44 – 2371 5923

நன்கொடை அனுப்ப விரும்புவோர் நேரடியாக இந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

Purisai Duraisami Kannapa Thambiran Parambarai Theru Koothu Manram
State Bank of India
Cheyyar Branch
Savings A/c No: 11073613228
Micro Code No: 620002002
Branch Code: 0267

நாடகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: