என்னமோ நடக்குது … 3

முதலில், இந்தக் குறிப்பிட்ட பிரதி தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களைப் பார்த்துவிடுவது நல்லது. இரா. நடராசனின் முன்னுரை, ஸ்நேகாவின் பதிப்புரை இரண்டிலுமே “தலித் இலக்கியத்திற்கு ஒரு முன்மாதிரிக் களனை” அமைத்துக் கொடுப்பதே நோக்கம் என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தலித் இலக்கியத்திற்கு ஒரு உற்சாகமும், தனது வடிவங்களைத் தேர்வு செய்து கொள்வதற்கு உதவியாகவும் இருக்கக்கூடும் என்ற ‘நல்ல’ எண்ணத்துடனேயே இதை எடுத்துக்கொண்டு, வெளிப்படையான இந்த அரசியல் நோக்கு வரவேற்கத்தக்கது என்று சொல்லிவிடலாம்.

தமிழினி வெளியீடுகள், பொதுவாக பதிப்புரைகளோடு வருவதில்லை. பின் அட்டையில் blurb – கள் போடுவதுண்டு. இந்நூலுக்கு இல்லை. சூத்ரதாரி எக்காரணங்கருதி பெயர்க்க எடுத்துக்கொண்டார் என்பதைச் சொல்லவில்லை. (சொல்ல வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று நினைத்திருக்கலாம். அல்லது காரணம் எதுவும் இல்லாமலும் இருக்கலாம். ஒரு ‘நட்பு’ அடிப்படையில் செய்து கொடுத்திருக்கலாம்.)

ஆனால், திலீப்குமார் அணிந்துரை எழுதியிருக்கிறார். பிரதியைப் பற்றிய சில பதிவுகளோடுகூட இப்படியொன்றையும் கூறுகிறார்: “கருப்பாகவும் ‘வளர்ச்சி’யடையாதவர்களாகவும் வெள்ளைத் தோலைக் கண்டு பதறுபவர்களாகவும் உள்ள நமக்கு, (அழுத்தம் எனது) பிரெடரிக் டக்ளஸ் மிகவும் நெருக்கமானவர்தான்.”

டக்ளஸ் எப்படி ‘நமக்கு’ நெருக்கமானார்? அமெரிக்க கருப்பின மக்களை தலித்துகளின் நிலைமையோடு ஒப்பிட்டுப்பார்க்கக்கூட முடியாதவரை என்னவென்று சொல்வது? அமெரிக்காவில் இருக்கும் நிறவெறிக்கு எதிரான பிரதியை தேர்வு செய்வதில் ஒரு அரசியல் இருப்பது போலவே, அது இங்குள்ள தலித்துகளின் நிலைமைக்கு நெருக்கமாகவும் உள்ளதைப் ‘புரிந்துகொள்ள முடியாமல்’, ‘நமக்கு’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதிலும் ஒரு அரசியல் இருக்கிறதா இல்லையா? அரசியலற்றிருப்பது போல காட்டிக் கொள்வதே ஒரு அரசியல் என்பதை இன்னும் எத்தனை நாளைக்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? (9)

சொற்தேர்வுகளுக்குள் போவதற்கு முன்பாக, மிகவும் மோசமான பிழைகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டிவிட வேண்டும். இந்தப் பிழைகள், அரசியல், கலாச்சார, இலக்கிய முக்கியத்துவம் மிகுந்த ஒரு பிரதியின்பால் இவர்கள் எவ்வளவு அசட்டையாக இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுபவை.

முதல் பக்கந்தொடங்கியே கொடுமை ஆரம்பித்துவிடுகிறது. பன்னிரண்டு மைல் என்று இருக்க வேண்டிய ஒரு தகவலை சூத்ரதாரி இருபது மைலாக எழுதியிருக்கிறார். இதே தவற்றை அத்தியாயம் 2 – லும் செய்திருக்கிறார். இதனால் என்ன பெரிதாகக் குடிமுழுகிப்போய் விடப்போகிறது என்று எடுத்துக்கொண்டுவிட முடியாது. டக்ளஸின் பிரதியை ஊன்றிப் படித்தால் அதிலுள்ள ஒவ்வொரு தகவலும் எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும்.

பிரதியின் ஆரம்பத்திலேயே டக்ளஸ் வெளி x காலம் என்று ஒரு முரணைக் கட்டமைக்கிறார். வெளி சார்ந்த விஷயங்கள் – ஊர், ஊரின் பெயர், அவற்றுக்கிடையிலான தூரங்கள் இவை குறித்த அறிவு அடிமைகளாக இருந்தவர்களுக்கு இருந்தது என்றும், காலம் சார்ந்த விஷயங்கள் – நாள், மாதம், வருடம், பிறந்தநாள், வயது குறித்து அறியாதவர்களாக, அறிவது மறுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்கிறார். காலம் சார்ந்த விஷயங்களை வெளி சார்ந்து உருவகப்படுத்தியே – விதைக்கும் பருவம், அறுவடைப் பருவம் – அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்றும் மிகுந்த நுட்பத்தோடு சித்தரிக்கிறார். இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ளாமல் போகும்போது 12 மைல் 20 மைலாகிவிடுவதில் ஆச்சரியம் இல்லை. அசட்டைக்கு விலை 8 மைல்.

இன்னொன்று. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று இரண்டு கண்டங்கள் இருப்பதும், இவற்றில் United States of America என்ற நாடு வட அமெரிக்கக் கண்டத்தில் இருப்பதும், அதைச் சாதாரண வழக்கில் அமெரிக்கா என்று எழுதுவதுண்டு என்பதும் எழுதப் படிக்கத் தெரிந்த பெரும்பாலானோருக்குத் தெரிந்த விஷயங்கள். இந்த ஐக்கிய அமெரிக்க நாட்டில், அடிமை முறை அதன் தென் பகுதிகளில் இருந்த அரசுகளில் (தென் மாநிலங்கள் என்பது போல) கோலோச்சியது வரலாறு. இதை, ‘தென் அமெரிக்காவில் அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்கள்’ (பக் – 17) என்று எழுதி, கண்டம் விட்டுக் கண்டம் தாவி சாதனை படைத்திருக்கிறார் சூத்ரதாரி. அதே வரியில், different looking people என்பதை ‘வித்தியாசமான பார்வையைக் கொண்டவர்கள்’ என்றும் எழுதியிருக்கிறார். ஆகா!

இதுபோன்ற ஏகப்பட்ட குப்பைகள் இரண்டு பதிப்புகளிலுமே மலிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டிருப்பது வேலைக்காகாது. என்றாலும், முக்கியமான ஒரு டமாஷை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

“பெரிய வீட்டுக்கு நான் போகிறேனே …
ஓ … யே … ஓ”

(சூத்ரதாரி: பக். 26)

‘மகா பெரும்பண்ணைக்கு போகிறே’னய்யா …
நான் ஓயே … யே … ஒயே … ஓ!

(இரா. நடராசன்: பக். 20)

டக்ளஸின் ஆங்கிலப் பிரதியில் இது:

“I am going away to the Great House Farm!
O, yea! O, yea! O!”

அடிமைகளின் வாழ்வில் இதுபோன்ற பாடல்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை எல்லாம் கொஞ்சம் மறந்துவிட்டு (மறக்கடித்து விடுவார்கள் போலிருக்கிறது) பாடலின் இரண்டாவது அடியில் உள்ள yea என்ற அந்த வார்த்தை ஆமாம் என்பதைக் குறிக்கும் என்பதை அனைவரின் தாழ்மையான கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். பாடல் என்ன பாடுபட்டிருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு அகராதியை எடுத்துப் புரட்டிப் பார்த்திருந்தால்கூட இது தெரிந்திருக்கும். அதைக்கூடச் செய்யாததை அசட்டை (கொஞ்சம் வாய்த்துடுக்காக ‘கொழுப்பு’) என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது! (10)

இனி சொற்தேர்வு. (வாக்கிய அமைப்பு, சொல்லாடல் களன் இவற்றையும் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். இடவசதி கருதி அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்திற்கு விட்டுவிட வேண்டியதாகிவிட்டது.) முதலில் சூத்ரதாரி. முதல் பக்கத்தில், “அத்தகைய கேள்விகள் எல்லாம் முறையற்றதென்றும், அதிகப் பிரசங்கித்தனமென்றும், சாந்தியடையா ஆவியின் (அழுத்தம் எனது) அடையாளமென்றும் அவர் கருதினார்,” என்பதில் உள்ள ‘சாந்தியடையா ஆவி’ – யை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

ஆங்கிலப் பிரதியில், இது restless spirit. அலைக்கழிக்கப்பட்ட ஆத்மா என்று எழுதுவது சரியாக இருக்குமா? இரா. நடராசன் இதைத் தேர்வு செய்திருந்தாலும் டக்ளஸ் தமது கதையாடலின் முதல் பத்தியில் உருவாக்கிக் காட்டும் சூழலிலிருந்து எங்கோ விலகிப் போகிறார். (”வேண்டுமென்றே இதுபோன்ற புரிதல்கள் ஏற்படாத அலைக்கழிக்கப்பட்ட ஆத்மாக்களாக நாங்கள் சீரழிக்கப்பட்டோம்” – சூத்ரதாரியின் வாக்கியம் பிரதிக்கு சற்று நெருக்கமாக இருக்கிறது.)

கதையாடலின் முதல் பத்தியில், வெளி x காலம் என்ற முரணைப் போலவே, டக்ளஸ் மனிதர்கள் x மிருகங்கள் என்ற முரணையும் எழுப்புகிறார். வயதைச் சொல்லத் தெரிந்த வெள்ளைத் தோல் குழந்தைகள் மனிதர்களாகவும், குதிரைகளைப் போல வயதைச் சொல்லத் தெரியாத கருப்புக் குழந்தைகள் மிருகங்களின் நிலைக்குத் தாழ்த்தப்பட்டதையும் சுட்டுகிறார். வெள்ளைத் தோல் எசமானர்கள் கருப்பின மக்களை அறியாமையிலேயே வைத்திருந்ததன் மூலம் அவர்களை விலங்குகளைப் போல நுகத்தடியில் வைத்திருந்தார்கள் என்பதையும் நுட்பமாகச் சொல்கிறார். மிருகங்களாக ஆக்கப்பட்டவர்களிடத்தில் எசமானர்கள் ஆத்மாக்களை எப்படிச் சந்தேகிக்க முடியும்? தவிரவும், ‘அலைகழிக்கப்படுதல்’ ஓய்வேயில்லாமல் வேலை வாங்கப்பட்டுச் சோர்ந்திருந்த ஆத்மாக்கள் என்ற – பிரதியின் இந்த இடத்தில் சேராத – அர்த்தத்தில் தொக்கி நின்றுவிடுகிறது. எசமானர்கள், சோர்ந்திருப்பவர்களைச் சந்தேகிக்க வேண்டிய தேவையில்லை. சூத்ரதாரியின் ‘சாந்தியடையாத ஆவி’யோ சுவிசேஷக் கூட்டங்களை ஞாபகப்படுத்தி விடுகிறது. ஆத்மா, சாந்தி, ஆவி போன்ற சொற்களே மதத்தில் தொய்ந்தவை என்பதை விளக்கத் தேவையில்லை.

இவற்றுக்குப் பதிலாக, வருமொழிப் பிரதியின் அர்த்தங்களுக்கு நெருக்கமான சொற் தேர்வு அவசியம். மொழிபெயர்ப்பு நிலைமொழியின் அமைப்பைக் குலைப்பதாக, அன்னியப்படுத்துவதாக (foreignizing translation) இருக்க வேண்டும். எசமானர்கள் சந்தேகங் கொள்ளக்கூடியது, எச்சரிக்கை கொள்வது அதிருப்தியுற்ற உயிரின் அசைவுகளைக் கண்டுதான். “அதிருப்தியுற்ற உயிரின்/உடலின் சலனங்களைச் சந்தேகித்தார்” என்பது இவ்விடத்திற்குப் பொருத்தமாக அமையலாம்.

இன்னொன்று. சூத்ரதாரியின் மொழியாக்கத்தில் பைபிள் வேதமாகிவிடுகிறது (பக்கம் – 17). இத்தகைய சொற்தேர்வு வருமொழிப் பிரதியை நிலைமொழியின் அமைப்பில் அப்பட்டமாகக் கரைப்பது (domesticating translation). பைபிள் தலைகீழாக நின்றாலும் வேதமாக முடியாது. பைபிள் என்றே எழுதுவது அல்லது விவிலியம் என்ற தேர்வு அன்னியத்தன்மையைத் தக்க வைக்கக்கூடிய மொழிபெயர்ப்பாக இருக்கலாம்.

இதுபோல எண்ணற்ற உதாரணங்களை இருவருடைய பிரதிகளிலிருந்தும் அடுக்கிக் கொண்டே போகலாம். மொத்தத்தில், இரண்டு பிரதிகளுமே டக்ளஸின் பிரதியை தமிழில் கரைத்த மொழியாக்கங்கள் (அவர்களுடைய ‘நல்லெண்ணங்களையும்’ மீறி) என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

கடைசியாக ஒரு உதாரணத்தைக் காட்டி இதை முடித்துக் கொள்கிறேன். சூத்ரதாரியின் மொழியாக்கத்தில், முதல் அத்தியாயத்தில், அடிமை ஆதிக்க முறை, தாய் – சேய் உறவை எப்படிச் சூறையாடிப் பிரிக்கிறது என்பது பற்றிய விவரிப்பில் (பக்கங்கள்: 14 – 15) இடையில் ஒரு இடத்தில் தாய் என்பதற்குப் பதிலாக அம்மா என்ற சொல் விழுந்து விட்டிருக்கிறது. தாய் என்ற சொல்லையே தொடர்ச்சியாகக் கையாள்வதில் ஒரு சலிப்பு தோன்றிவிடக்கூடும் என்பதற்காக, ஒரு மாறுதலுக்காக, எந்த விதமான ‘உள்நோக்கங்களும்’ இல்லாமல் சூத்ரதாரி “அம்மாவை” என்ற சொல்லைப் போட்டிருக்கலாம்.

ஆனால், டக்ளஸின் விவரிப்பில் தாயுடனான உணர்ச்சி நெருக்கம் என்பதைவிட, அடிமைகளாக்கப்பட்ட கருப்பின மக்களின் குடும்ப அமைப்பு, ஒரு நிறுவனம் என்ற வகையில் எப்படித் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டது என்பது பற்றிய அழுத்தமே அதிகம். அம்மா என்ற சொற்தேர்வு இதை மழுங்கடித்து தனிப்பட்ட பாசப்பிணைப்புறவைக் குறிப்பதாக, வருமொழிப் பிரதி சுட்டிக் காட்டும் ஒரு வன்முறை நிறைந்த வாழ்வைக் கொண்டு வருவதாக இல்லாமல், அதன் அன்னியத்தன்மையை வித்தியாசத்தை அழித்து, ஏற்கனவே பாசத்தில் உப்பிப் பெருத்துக் கிடக்கும் தமிழ் கலாச்சாரத்தில் பிரதியை குழிதோண்டிப் புதைத்து விடுகிறது. ஹே ராம்! (என் தாயை நான் பார்த்ததில்லை; வசந்தா அக்காதான் எனக்குத் தாய். இப்போது நீயும் … எவரு வே!)

பசு

பரிதாபங்கருதி தவிர்க்கப்பட்டது.

(நடக்கும் … )

புதிய கோடாங்கி ஜூலை 2002.

குறிப்புகள்:

(9) இரா. நடராசன் தனது முன்னுரையில், முதலிரண்டு பக்கங்களில், கடைசிப் பத்தியின் கடைசி வரியும், இரண்டாம் பக்கத்தின் முதல் பத்தியும் தவிர்த்து நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 – ல் அ. மார்க்ஸ் எழுதியிருந்த அறிமுகத்தை ‘வார்த்தைக்கு வார்த்தை’ அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறார் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லி விடுகிறேன்.

(10) இந்தக் கேள்விகளை இன்னும் சற்றுக் ‘காட்டமான’ தொனியில் கேட்க விருப்பம்தான். ஆனால், பொதுவாக நமது இலக்கியவாதிகள், மிகுந்த நுண்மையானவர்களாக, மென்மையான இதயம் படைத்தவர்களாக இருப்பது கருதி தவிர்க்கப்பட்டது.

(11) இவை mis – translations அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். இவற்றால் எந்தவிதமான புதிய, ஆரோக்கியமான, பயனுள்ள – அதாவது, பயன்பாட்டு நோக்கில் அல்ல; ஒரு creative play என்ற பொருளில் அர்த்த நிகழ்வுகள் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் இதில் அளவுகோல். இதை மனங்கொள்ளாமல், mis – translation, mis – reading என்பன போன்ற பின் – அமைப்பியல் உருவாக்கித் தந்த உருப்படியான கருத்தாக்கங்கள், வாசிப்பு முறைகளையெல்லாம், பின்நவீனத்துவ இலக்கியக் கர்த்தாக்கள், விமர்சகர்கள் என்று தம்பட்டமடித்துக் கொண்டிருப்போரில் சிலர், சகட்டு மேனிக்கு போட்டு உருட்டி, அவற்றின்பால் பயத்தையும் வெறுப்பையுமே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

பின்குறிப்பாக:

தமிழினி பதிப்பில் பின் – அட்டையில் உள்ள புகைப்படம் எதைக் குறிப்பதாக இருக்கலாம்? டக்ளஸின் பிரதியை authentic – ஆக கொண்டு வந்திருக்கிறது என்று அறிவித்துக் கொள்வதாக எடுத்துக் கொள்ளலாமா? (அமெரிக்காவுக்குப் போய் திலீப்குமார் எடுத்து வந்த பிரதி. படம்?! முன்னட்டை ஒரு portrait என்பதால் ‘கலைத்தன்மையுள்ள’ பிரதி என்று குறிப்பதாக?)

ஸ்நேகாவின் அட்டைப்படம் ஸ்பீல்பர்க் கருப்பர்களை மிக நுட்பமான வகையில், மிக மோசமாக சித்தரித்த Amistad பட ஸ்டில். டக்ளஸின் பிரதிக்கு அதைத் தேர்வு செய்திருப்பது பெரிய கொடுமை.

(பல்வேறு காரணங்களால் இக்கட்டுரையின் இறுதிப்பகுதியை எழுத முடியாமலேயே போய்விட்டது.)

பயன்பட்ட நூல்கள் மற்றும் காசட்டுகள்:

Lawrence Venuti, The Translatior’s Invisibility – A History of Translation, Routledge, New York, 1995.

Susan Bassnet, Translation Studies, Roudledge, New York, 1991.

Henry Louis Gates, Jr., Figures in Black: Words, Signs and The “Racial” Self, Oxford University Press, New York, 1987.

Henry Louis Gates, Jr. and Nellie Y. McKay (eds) The Norton Anthology of African American Literature, W. W. Norton & Company, New York, 1997.

இசை ஞானி இளையராஜா, கரகாட்டக்காரன், Echo Recording Co., 1989.

ராஜேஸ்வர ராவ், மிஸ்ஸியம்மா, HMV, 1988.

என்னமோ நடக்குது … 2

காப்பிரைட் சமாச்சாரத்தை (கொஞ்சம் கமுக்கமாகப் படியுங்கள்) எடுத்துக்கொண்டால், முதல் கேள்வி, ஸ்நேகா அல்லது இரா. நடராசன் எங்கே, எப்போது, யாரிடம் அனுமதி பெற்று உரிமை பெற்றார்கள்? இரா. நடராசன் தமது திருமதி(?)யாரின் [Mala Natarasan (c)] பெயரில் காப்பிரைட்டைப் பதிவு செய்திருப்பது என்ன வகையான கலாச்சாரம் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்பது நாகரீகம் இல்லையென்பதால் தவிர்த்துவிடுகிறேன். மொழிபெயர்ப்பிற்கும் காப்பிரைட்டிற்கும் உள்ள சிக்கலான உறவு குறித்த ஒரு பதிவை மட்டும் செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் (காழ்ப்புணர்வுகளற்ற, கலப்பில்லாத அரசியல் பார்வை மட்டுமே எனக்கு உண்டாக்கும். அக்காங்.)

பாரீஸ் நகரில் 1971 – ஆம் ஆண்டு கூடிய, பெர்ன் மாநாடு என்று அழைக்கப்பட்ட, சர்வதேச ஒப்பந்தத்தின்படி, மொழிபெயர்ப்புகள் தம்மளவில் அசலான படைப்புகள் என்றாலும் அவற்றுக்கான காப்பிரைட வழங்கும் உரிமை ‘மூலப’ பிரதியின் ஆசிரியருக்கே உரியதாம். 1976 நவம்பர் நைரோபியில் மொழிபெயர்ப்பாளர்களின் ‘நிலைமையை மேம்படுத்துவதற்காகக்’ கூடிய UNESCO மாநாடும்கூட மேற்கண்டவாறே பரிந்துரைத்திருக்கிறது. மொழிபெயர்ப்புகள் அதிக அளவில் செய்யப்படும் பிரிட்டன், அமெரிக்கா இரண்டு நாடுகளின் சட்டங்களும் இதையேதான் சொல்கின்றனவாம். இந்தியச் சட்டம் என்ன சொல்கிறதென்று தெரியவில்லை. (அதைத் தெரிந்துகொள்ளும் வக்கற்றுதான் இந்த மேலை உதாரணங்கள். ‘கண்ணம்மாப்பேட்டைல மழ பேஞ்சா மாஸ்கோவுக்கு கொட புடிக்கும்’ கதைதான்.)

ஆனால், இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் வேறு. ‘மூலப்’ பிரதி, அதைப் ‘படைக்கும்’ படைப்பாளி (கடவுள், தந்தை, creative genius) என்ற கருத்தாக்கங்கள் சட்டங்கள் வழியாகவும் பாதுகாப்பைப் பெறுகின்றன. இக்கருத்தாக்கங்களின்படி, மொழிபெயர்ப்பு ஒரு படைப்பூக்கமுள்ள செயல்பாடு அல்ல. காரணம், அது மூலப் பிரதியை வெறுமனே நகல் செய்யும் நடவடிக்கை; மூலப்பிரதியைப் போன்று ‘படைப்பாளியின்’ மூளைக்குள்ளிருந்து வெளிவருவதல்ல. அதனால், அது ஒரு இரண்டாம் தரமான செயல்பாடு. (2)

படைப்பூக்கமுள்ள இலக்கியச் செயல்பாடு என்பதை மொழியால், மொழிக்குள், மொழி மீதான ஒரு நிகழ்வாகப் பார்த்தால் இந்தக் கருத்தாக்கங்களிலிருந்து விடுபடமுடியும். (3) மொழிபெயர்ப்பையும் ஒரு படைப்பூக்கமுள்ள செயல்பாடாக பார்க்க முடியும். இதன் தொடர்ச்சியாக, மொழிபெயர்ப்பை “மொழிபெயர்ப்பாளர், பொருள்கோடலில் தனக்குள்ள பயிற்சி கொண்டு குறிப்பான்களின் தொடர்களால் ஆன வருமொழிப் பிரதியை நிலைமொழியின் குறிப்பான்களின் தொடர்களாக மாற்றும் நிகழ்வு” என்று பார்க்கலாம். (4) (எம்மாடி!)

அர்த்தங்கள் ‘படைப்பாளியின் மூளையிலிருந்தோ’ மொழிபெயர்ப்பாளரின் ‘திறமையிலிருந்தோ’ எழுவதில்லை. எண்ணற்ற விதங்களில் தமக்குள் ஊடாடவும் உறவு கொள்ளவும் சாத்தியங்களுள்ள குறிப்பான்களின் தொடர்புகளை, சில குறிப்பிட்ட இலக்கிய வகைகள், பாரம்பரியங்கள் என்று வரையறுத்து வைக்கப்பட்டுள்ளவற்றின் தொடர்ச்சியாகவும் சமூக, கலாச்சார, அரசியல், வரலாற்று, இன்னபிற சூழல்கள், பின்புலங்களில் சற்றே நிறுத்தி வைத்துப் பார்ப்பதன் விளைவாகவுமே தோன்றுபவை. இப்படியாகப் பார்த்தால், வருமொழிப் பிரதியின் ‘சாரம்’ என்ற கருத்தும் அதை அப்படியே நிலைமொழிக்குள் கொண்டு வருவது என்ற பேச்சுமே அடிபட்டுப் போகிறது.

இதனால், சகட்டுமேனிக்கு ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம் என்றாகிவிடாது. (5) ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு, ‘துல்லியமான, உண்மையான, வரிக்கு வரி’ மொழிபெயர்ப்பு என்பவையெல்லாம் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களால் நிர்ணயம் பெறுகிற கருத்தாக்கங்கள். (6) சில சந்தர்ப்பங்களில், ஒரு ‘தவறான’ மொழிபெயர்ப்புகூட நிலைமொழியின் கலாச்சார சூழலில் எதிர்பாராத, புதிய அர்த்தம் பெற்றுவிடலாம். மோச்மான மொழிபெயர்ப்பு, நல்ல மொழிபெயர்ப்பு என்ற வாய்ப்பாடுகளே அபத்தமானவை. (அதாவது, அவற்றின் விரிவான அர்த்தங்களில். நமது மொழிபெயர்ப்பாளர்கள் செய்துள்ள அபத்தங்களைத் ‘தவறுகள்’ என்ற கணக்கில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது.)

இவற்றைக் கருத்தில் வைத்து, மொழிபெயர்ப்பு குறித்து மேலே சொல்லப்பட்டதை வேறு வார்த்தைகளில், இப்படியாகச் சொல்லலாம்: “மொழிபெயர்ப்பு என்பது ஒரு அன்னிய மொழிப் பிரதியை அதன் உள்ளுறைந்திருக்கும் கலாச்சார, மொழியியல், இன்னபிற தனித்துவங்களை, அதன் வித்தியாசத்தை, வலுவில் நீக்கிவிட்டு, நிலைமொழி வாசகருக்கு அணுக்கமாகவுள்ள ஒரு பிரதியை உருவாக்கித்தரும், ஒரு பிரதியை உருவாக்கித்தரும் நிகழ்வு.”

மொழிபெயர்ப்பு நடவடிக்கையை இப்படி வரையறுப்பது, அதற்குள் தவிர்க்க முடியாமல் புதைந்திருக்கும் வன்முறையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக இருக்கிறது. மொழிபெயர்ப்பு நடவடிக்கையில் அன்னிய மொழிப் பிரதியின் பல்வேறு சாத்தியமான அர்த்தங்களில், தெரிந்தோ தெரியாமலோ சிலது விடுபட்டுப்போகும்; சிலது முன்னிலைபெறும். நிலைமொழியின் வாசகருக்கு அணுக்கமுள்ளதாக அதை மாற்றும் முயற்சி, அம்மொழியில் அன்னியமொழிப் பிரதியில் இல்லாத அர்த்தங்கள் சிலவற்றை உருவாக்கிவிடும். மொழிபெயர்ப்பு நடவடிக்கையின் இந்த வன்முறை தவிர்க்கப்பட முடியாதது.

மொழிபெயர்ப்பாளர் ‘படைப்பாளி’ யாவதும், மொழிபெயர்ப்பு ஒரு கலாச்சார – அரசியல் நடவடிக்கையாவதும் மொழிபெயர்ப்பு என்பதே ஒரு மொழி நிகழ்வாக மாறுவதும் இந்நடவடிக்கையின் வன்முறை என்பதிலேயே தங்கியிருக்கிறது. இந்த வன்முறை, வருமொழிப் பிரதியை நிலைமொழிக்குள் நிறுவப்பட்ட இலக்கியப் புனிதக் கட்டமைப்பிற்கு வலுசேர்ப்பதாகவோ அதைத் தகர்ப்பதாகவோ வெளிப்பாடு கொள்கிறது.

வருமொழிப் பிரதியை, அதன் வித்தியாசத்தை, ‘அன்னியத் தன்மையை’ எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு நிலைமொழிக்குள் கொண்டுவரும்போது அது நிலைமொழியின் நிறுவப்பட்ட புனிதத் தொகுதியைத் தகர்ப்பதாக அமைகிறது. (7) மொழிபெயர்க்கத் தேர்வு செய்யப்படும் பிரதியிலிருந்து தொடங்கி சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, சொல்லாடல் களனின் தேர்வு, பதிப்புச் சூழல், வாசிப்புச் சூழல் என்று பல காரணிகளும் இதில் செயலாற்றுகின்றன. இந்த வகையான மொழிபெயர்ப்பு, வருமொழிப் பிரதிக்கு ‘உண்மையாக’ இருக்கும் பொருட்டு நிலைமொழிக்கு ‘துரோகம்‘ செய்யும் நடவடிக்கையாக, அன்னியமாக்கும் (foreignizing)நடவடிக்கையாக இருக்கும். நிலைமொழியின் அப்போதைய நிலைமை, தகவமைப்பு – அதன் புனிதத் தொகுதியின் பலம், பலவீனம், மொழிக் கட்டமைப்பு, இன்னபிற – பொருத்தே அதன் மதிப்பு அமையும்.

இந்தக் குறிப்புகள், ஏதோ ‘தூய’ கோட்பாட்டளவிலானவை மட்டுமல்ல. இவற்றின் நோக்கமே, மொழிபெயர்ப்பு நடவடிக்கையை ஒரு கலாச்சார – அரசியல் நடவடிக்கையாக ஆக்குவதும், மொழிபெயர்ப்புகளை மதிப்பிடுவதற்கான ஒரு கூர்மையான (வன்முறை!) ஆயுதமாகக் கொள்ளவும்தான். சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, சொல்லாடல் களன் இவற்றில் தென்படும் தொடர்ச்சியின்மைகளை அடையாளம் காணும் வாசிப்பு முறையை உருவாக்கிக்கொள்ளவும் இவை உதவக்கூடும். (8) அப்படியொரு வாசிப்பை நமது மொழிபெயர்ப்பாளர்கள் மீது பிரயோகித்துப் பார்த்துவிடுவது இந்த ‘கூற்று’க்கு (வன்முறை! வன்முறை!) வலுசேர்ப்பதாக இருக்கும்.

குறிப்புகள்:

(2) ஆகையால், மொழிபெயர்ப்பாளருக்கு காப்பிரைட் கிடையாது! ஆனால், விஷயம், காப்பிரைட் – அதாவது ‘உரிமை’ என்பதே வாரிசுரிமை என்ற ஆணாதிக்க, முதலாளியக் கருத்தியலின் அடிப்படையில் எழுந்த ஒன்று. ஆசிரியன், படைப்பாளி என்ற கருத்தாக்கங்களும்கூட முதலாளியத் தனிமனிதவாதக் கருத்தியலின் விளைபொருட்களே. இதனால்தான் அரசவிழ்ப்பாளர்கள், Situationist – கள் பலரும் தாம் எழுதும் எழுத்துக்களை ‘உரிமை’ பெறாமல் பதிப்பிக்கின்றனர். (தமிழினி பதிப்பில் ‘உரிமை’ குறித்த விபரம் ‘மிஸ்’ ஆகியிருப்பது இந்தப் புரிதலால்தான் என்று சொல்ல முடியுமா?) ஆனால், தமிழ்ச் சூழலில் ‘போஸ்ட் மார்டனிஸ்டுகளாக’ அறியப்படுபவர்கள்கூட இது குறித்த எந்தப் பிரக்ஞையுமில்லாமல் எழுதி வருவது பெருத்த சோகத்திற்குரியது என்றுதான் சொல்லவேண்டும். ப்ச்செ …

[காப்பிரைட் குறித்த எனது மேலதிகமான புரிதல்களை “இசையின் அரசியல்” நூலில் பதிவு செய்திருக்கிறேன். தற்சமயம், காப்பிரைட் தொடர்பான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதால் மேற்கொண்டு வாசித்தும் வருகிறேன். இது குறித்து தனியாகவே எழுதும் விருப்பம் உண்டு]

(3) இது தொடர்பான விவாதங்கள் தமிழில் சற்று விரிவாக (ஆனால், அரைகுறையாக – உதாரணத்திற்கு, இப்போதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் தலித்துகள், பெண்கள் இன்னும் மற்ற பிரிவினருக்கு இந்தக் கருத்தாக்கங்களிலிருந்து விடுபடுவது என்பது என்னவாக இருக்கும் என்பது போன்ற கேள்விகள் எதிர் கொள்ளப்படாமலிருப்பது; ஆகையால், மேற்கொண்டு தொடர, ‘புரிந்தது போல’ எடுத்துக்கொண்டு) பேசப்பட்டிருப்பதால் இங்கு தவிர்க்கப்பட்டது.

(4) குறி, குறிப்பான், குறிப்பீடு, குறிப்பிடு பொருள் என்பன போன்ற ‘jargon’ களெல்லாம் தமிழ்ச் சூழலுக்கு ஓரளவு பரிச்சயமாகிவிட்டவை என்ற நம்பிக்கையில், அந்தச் சிக்கலான, செறிவான அர்த்தங்களில் புரிந்துகொள்ளப்படும் என்று எடுத்துக் கொள்கிறேன்.

(5) இரா. நடராசன் தனது முன்னுரையில் ‘கூடுமானவரை வரிக்கு வரி மொழிபெயர்த்துள்ளேன்’ என்று அறிவித்துக்கொண்டாலும் அவரது ‘பெயர்ப்பு’ இப்படியாகத்தான் இருக்கிறது.

(6) ஒரு குறிப்பிட்ட சூழலில் துல்லியமான, வரிக்கு வரி மொழிபெயர்ப்பாகக் கருதப்படுவது வேறொரு சூழலில் ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பாகக் கருதப்படலாம்.

(7) வருமொழிப் பிரதியின் வித்தியாசத்தை அப்படியே நிலைமொழிக்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை. நிலைமொழியின் மொழிக் கட்டமைப்பிற்கு உள்ளாகவே இந்த முயற்சி என்பதால் ‘இழப்பு’ என்பதில்லாமல் சாத்தியமில்லை.

(8) இத்தகையதொரு வாசிப்பு முறைக்கு, வருமொழிப் பிரதியை அம்மொழியிலேயே படித்திருக்கவேண்டும் என்பதோ, நிலைமொழியில் பெயர்ப்பிற்குள்ளான பிரதியை வருமொழிப் பிரதியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. பெயர்ப்பிற்குள்ளான பிரதியில் உள்ள தொடர்ச்சியின்மைகளை ஒரு கூர்ந்த வாசிப்பின் மூலமே நிகழ்த்திக் காட்டிவிட முடியும். இம்முயற்சியை வேறொரு சந்தர்ப்பத்தில் வைக்கிறேன்.

(தொடரும் …)

புதிய கோடாங்கி ஜூலை 2002.

என்னமோ நடக்குது … 1

ஆடு

சில நாட்களுக்கு முன்பாக நண்பர் சி. மோகனோடு அவரது பதிப்பகத்தில் அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட புத்தகம் “மொழிபெயர்ப்பியல்”. அன்னம் வெளியீடாக 1989 – லும் இரண்டாம் பதிப்பு 94 – லிலும் வந்திருக்கிறது. டாக்சர் சி. சிவசண்முகம், டாக்டர் வே. தயாளன் என்போர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்று ஊகிக்க முடிகிறது. எம். ஏ. தமிழ் பாடத்திட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று பிற்பாடு ஒரு நண்பர் மூலமாக அறிந்து கொண்டேன்.

ஒரு ஆர்வத்தில் புத்தகத்தைப் புரட்டியபோது எடுத்தவுடன் என் கண்களுக்குச் சிக்கியது ஒரு பிழை (இந்த முறை அச்சுப் பிழையன்று; சொற்குற்றம். அது என்னமோ தெரியவில்லை, என் தலையெழுத்து இப்படியிருக்கிறது. பொருட்பிழையை நோக்கி நகரக்கூட முடியவில்லை.) மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளும் பிரதியின் மொழியை source language என்றும் பிரதி மொழியாக்கத்திற்குள்ளாகும் மொழியை target language என்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான விவாதங்களில் குறிப்பிடப்படுவதுண்டு. நூலில் target language என்பதற்கு ஆசிரியர்கள் செய்திருக்கும் பெயர்ப்பு “குறிக்கோள் மொழி”!

இலக்கு மொழி என்று எழுதுவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அல்லது தமிழ் இலக்கண நூல்களில் புணரியல் பற்றிய விதிகளின் தொகுப்பில் பயன்படுத்தப்படும் வருமொழி, நிலைமொழி என்ற பதங்களை முறையே source language – ற்கும் target language – ற்கும் ஆள்வதும்கூட நன்றாக இருக்கலாம். என்னத்த ‘தோனி’ என்னத்தப் பண்ண. புத்தகத்தை வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

(பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு. Author’s spirit “மூல ஆசிரியரின் விறுவிறுப்பு (spirit!)” என்று பெயர்த்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். ‘Spirit’ டுகளின் பால், அதாகப்பட்டது ‘விறுவிறுப்பு’ – களின்பால் எனக்குள்ள பிடிப்பு, பற்றுதல், மோகம், உற்சாகம், ஆர்வம் இன்னும் இதுபோன்ற பற்பல சொற்களால் விளக்கம் பெறுகிற உணர்ச்சிகளை, எனது நண்பர், தமிழ் நாட்டின் ஆகச் சிறந்த இலக்கிய மானேசரின் முயற்சியால் தமிழ்ச் சிறுபத்திரிகை உலகம் நன்கு அறிந்திருக்கும் என்று நம்புகிறேன்.)

மாடு

மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற வேகத்தோடு ஒப்பிடும்போது “மொழிபெயர்ப்பின் அரசியல்” குறித்த பேச்சு தமிழில் குறைவு. அரசியல், கோட்பாடு – பொதுவில் ‘அறிவு’ என்றாலே அலறும் நமது சிறுபத்திரிகை இலக்கியவாதிகளுக்கு இது ஒருபோதும் உறுத்தலாகப் படப்போவதில்லை. நான்கு கவிதைத் தொகுதிகளைப் படித்துவிட்டால், ஒரு கவிதை, பத்து சிறுகதைத் தொகுதிகளைப் படித்துவிட்டால் ஒரு சிறுகதை எழுதத் தகுதி வந்துவிடுவதுபோல இவர்களுக்கு மொழிபெயர்ப்பும் பழகப் பழக் ‘மெருகு’ கூடிவிடக்கூடிய ஒன்று. கொஞ்சம் பழகிவிட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு.

இது தொடர்பாக, சில விஷயங்களை கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் தட்டிக்கழிந்து கொண்டே போகிறது. குறிப்பாக, தோட்டியின் மகன் என்ற தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவலை சுந்தர ராமசாமி ‘தமிழில்’ பெயர்த்து நூலாக வந்தபோதே இது குறித்து எழுதும் உத்தேசம் இருந்தது. தவறிவிட்டது. இப்போது, ஆஃப்ரோ – அமெரிக்க எழுத்தாளரான ஃப்ரெடெரிக் டக்ளஸின் Narrative of the Life of Frederick Douglass, an American Slave, Written by Himself என்ற அடிமைத் – தன் வரலாற்று நூலை சூத்ரதாரியின் ‘மொழியாக்கத்தில்’ தமிழினி பதிப்பகமும், இரா. நடராசனின் ‘மொழிபெயர்ப்பில்’ ஸ்நேகா பதிப்பகமும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தை சாக்காக எடுத்துக் கொள்கிறேன்.

இரண்டு பதிப்புகளிலும் தரப்பட்டிருக்கும் பதிப்பு விவரங்களிலிருந்து தொடங்குவது சற்று சுவாரசியமாக இருக்கும் (முழு நீள நகைச்சுவைச் சித்திரம் என்று சொல்லலாம்.)

முதலில் தமிழினி:

நூலின் பெயர் – ஒரு அடிமையின் வரலாறு
ஆசிரியர் ஃப்ரெடெரிக் டக்ளஸ்
நூல்வகை – வரலாறு
மொழியாக்கம் – சூத்ரதாரி
முதல் பதிப்பு – டிசம்பர் 2001
ISBN – 81 – 87641 – 42 – 8
விலை – ரூ. 50.

முன் அட்டை ஓவியம், அதிலுள்ள உள்புகைப்படம், பின்னட்டைப் புகைப்படம், உரிமை குறித்த விபரங்கள் காணாமல் போன லிஸ்டில் இருப்பவை.

அடுத்து ஸ்நேகா:

ஆசிரியர் – பிரெடரிக் டக்ளஸ்
நூலின் பெயர் – அமெரிக்க கறுப்பின அடிமையின் சுயசரிதை
மொழிபெயர்ப்பாளர் – இரா. நடராசன்
உரிமை – மாலா நடராசன் (c)
முதல் பதிப்பு – டிசம்பர் 2001
பக்கங்கள் – 96
ரூபாய் – 40.00

ஸ்நேகா பதிப்பில் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள தவல்களின் விசேஷங்கள்:

Fredrick Douglass (கவனிக்க – spelling mistake)
Auto Biography
Cover – “Amistad” Film Directed by Steven Speilberg (American Photography Issue)

(எந்த வருட, மாத/வாரத்தைய இதழ்?)

காணாமல் போன ‘சில்லறை’ விபரங்களுக்குப் பிறகு வருகிறேன். நூல் வகை, பதிப்புரிமை குறித்த விபரங்கள் மொழிபெயர்ப்பு குறித்த பிரச்சினைகளோடு நேரடி தொடர்பு கொண்டிருப்பதால் முதலில் அவற்றை எடுத்துக் கொள்கிறேன்.

வரலாறு, auto – biography என்று இரு தரப்பாரும் வகைப்படுத்தியிருப்பது இருவருக்குமே பிரதி எந்த இலக்கிய வகையைச் (literary genre) சார்ந்தது என்பதுகூடத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. வரலாறு என்று தமிழினி வகைப்படுத்தியிருப்பது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. ஸ்நேகா குறிப்பிட்டிருப்பது போல டக்ளஸின் நூல் தன் வரலாற்று நூலும் அன்று.

ஆங்கிலத்தில் நூலின் தலைப்பைச் சற்றுக் கவனமாகப் பார்த்தாலே இது தெரியும்: Narrative of the Life of Frederick Douglass, an American Slave, Written by Himself. (அழுத்தம் எனது. இரு பதிப்புகளிலுமே நூலின் ஆங்கிலத் தலைப்பு குறிப்பிடப்படவில்லை. தமிழினி, நூலின் இறுதியில் References என்ற தலைப்பின்கீழ் இந்நூலை அரைகுறை விபரங்களோடு சேர்த்திருக்கிறது.)

இந்த அவரே எழுதியது என்ற உபதலைப்பின் முக்கியத்துவத்தை சற்று ஆராய்ந்திருந்தாலே நூல் என்ன வகைப்பட்டது என்பதை அறிந்திருக்கலாம். சூத்ரதாரி அந்த எட்டு பக்கக் குறிப்புகளை எழுதுவதற்குப் பதிலாக இதில் முனைந்திருக்கலாம். அல்லது, பின்னால் கொடுத்துள்ள பத்து நூல்களை ஒழுங்காகப் படித்திருந்தாலும் விஷயம் பிடிபட்டிருக்கும். ஆனால், அவர் இந்நூலைப் புனைவு எழுத்தாகக் கருதியிருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஒன்று, அவர் இதைத் தன் – வரலாற்று நூலாக எடுத்திருக்கலாம் (தன் வரலாறுகளில் ‘இலக்கிய நயம்’ இருக்கலாம்; ஆனால் அது தன்னளவில் இலக்கியமில்லை என்ற அளவுகோல்.) அல்லது திலீப்குமார் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல ‘அசலான ஆவணமாகக்’ கருதியிருக்கலாம். எட்டுப் பக்கங்களுக்கு அந்த வெட்டியான ‘வரலாற்றுக் குறிப்புகள்’ இந்தக் காரணங்களாலேயே வந்திருக்கின்றன என்று கருதவேண்டியிருக்கிறது.

ஃப்ரெடெரிக் டக்ளஸ் என்கிற அமெரிக்க அடிமையின் வாழ்க்கைக் கதை: அவரே எழுதியது 1845 – ல் வெளியானது (இந்த விபரம்கூட இரண்டு பதிப்புகளிலுமே காணவில்லை. தெரியவில்லை? தெரிந்துகொள்ள சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை?) டக்ளஸ், 1838, செப்டம்பர் 3 – ஆம் தேதி பால்டிமோரிலிருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் ஏறி மறுநாள் நியூயார்க் வந்து சேர்கிறார். அடிமைத் தளையிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்ட நாள் அது. மூன்று வருடங்கள் கழித்து அடிமை ஒழிப்பு இயக்கத்தில் முழுநேரப் பேச்சாளராக சேர்கிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும் பேச்சாற்றலும் சீக்கிரத்திலேயே பெரும்புகழைத் தேடித் தந்து விடுகின்றன. இவ்வளவு திறமைகள் உள்ள நபர் நிச்சயம் ஒரு அடிமையாக இருந்திருக்க முடியாது என்ற புரளி கிளம்பிவிடுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தன் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் கொண்டுவர முடிவு செய்கிறார். இதன் பொருட்டே அவரே எழுதியது என்ற உபதலைப்பை வைக்கிறார்.

அடிமைத் தளையிலிருந்து தப்பி ஓடிவந்த ஆஃப்ரோ – அமெரிக்கர்கள் தாம் அடிமைத்தனத்தில் சிக்குண்டிருந்தபோது அனுபவித்த துன்பங்களை எழுத்தில் கொண்டு வந்தது ஒரு புதிய நிகழ்வாக இருக்கவில்லை. டக்ளசுடைய நூலுக்கு முன்பாக பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால், அவருடைய நூலே இந்த வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். டக்ளஸினுடைய நூலுக்குப் பிறகே Slave Narrative என்ற இலக்கிய வகை அமெரிக்க சமூகத்தில் மிகப் பரவலான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது எனலாம். (1) அவருடைய நூலுக்குப் பின்வந்த அடிமைத் தன் வரலாறுகள் அனைத்திலும் அவரே எழுதியது என்ற அந்த உபதலைப்பு, எழுதியவரது அரசியல், இலக்கியத் தற்சார்பையும் தனித்துவத்தையும் சுட்டிக்காட்டும் குறிசொல்லாகியது.

ஒரு இலக்கிய வகை என்ற அளவில், ஆங்கிலப் புனித இலக்கியத் தொகுதிக்குள் அடங்கும் தன்வரலாறுகளுக்கும் அடிமைக் கதையாடல்களுக்குமான (slave narrative) உறவுகள் சிக்கலானவை. இந்த தனிச்சிறப்புமிக்க இலக்கியவகையை ஒரு எதிர் இலக்கியவகை என்று சொல்வதே சரியாக இருக்கும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுந்த sentimental novel மற்றும் picaresque(சாகச) எழுத்துக்களின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிர்வினையாக உருவானவையே அடிமைக் கதையாடல்கள். சாகச் நாவல்கள் போலியான தன் வரலாறுகளாக (pseudo – autobiography) இருந்தனவென்றால் அடிமைக் கதையாடல்கள் அரைகுறையான தன் வரலாறுகளாக (quasi – autobiography) இருந்தன. இன்னும் இது போன்ற நுணுக்கமான வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றையெல்லாம் டக்ளசின் புனைவை (அப்பாடா! இதைச் சொல்வதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது!) எடுத்துக் கொண்டே நிறுவவும் முடியும்.

குறிப்புகள்:

(1) டக்ளசுக்கு முன்பாக வந்த அடிமைத் தன் வரலாற்று நூல்களுள் 1789 – ல் அவுலத் ஈக்வானா என்பாருடைய அவுலத் ஈக்வானா அல்லது கஸ்தாவஸ் வஸ்ஸா என்ற ஆப்ரிக்கனின் வாழ்க்கை பற்றிய சுவையான கதை, அவரே எழுதியது (The Interesting Narrative of the Life of Olaudah Equiano, or Gustavus Vassa, the African, Written by Himself) என்ற நூல் புகழ் பெற்றது. இதிலிருந்து ஒரு பகுதி நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 – ல் மொழியாக்கம் பெற்றிருக்கிறது.

(தொடரும் …)

புதிய கோடாங்கி ஜூலை 20002.

ரக்பி – ஆஸ்துமா = யுத்த தந்திரி சே?

குறிப்பு:
இதை வெறுமனே நூல் விமர்சனமாகவும் வாசிக்கலாம். சமகால அரசியல் நிகழ்வுகளோடு இணைத்தும் வாசிக்கலாம்.
அதாவது, இதன் மூலம் குறிக்க விழைவது: மறைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் படுகொலையை முன்வைத்து தமிழ்நாட்டிலிருந்து எழும் ‘வீரக்’ குரல்களின் மனப்பாங்கு குறித்த விமர்சனமாகவும் வாசித்துப் பார்க்கலாம்.
ஈழப் பிரச்சினை என்பதே தமிழ்நாட்டு ‘வீரர்களுக்கு’ உணர்ச்சிவயப்பட்டு கொதித்தெழுந்து moral support தருவது, அதன் மூலம் தங்களது அரசியல் காய்களை நகர்த்துவது என்ற அளவில்தான். அவர்களுடைய அரசியல் அறிவும் சரி, செயல்பாடுகளும் சரி அந்த அளவோடு நின்று விடுபவைதான் என்பதை சமகால வரலாறும் நிரூபித்திருக்கிறது.
‘உணர்ச்சி வயப்படுவடுவது’ ‘இயல்பானதுதான்’. நாலு வேளை மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு வீரவணக்கம் செலுத்துவதும் ‘கடமை’தான். இதையெல்லாம் முடித்துவிட்டு சற்றே அரசியல் ரீதியாக இந்நிகழ்வைப் பரிசீலிப்பதும் மிக அவசியமான ஒன்று.
திரு. தமிழ்ச் செல்வனின் மறைவு புலிகள் இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பு என்பதை எவரும் மறுக்க முடியாது. சர்வதேச அரங்கில் அவரது திறமையான செயல்பாடுகளை இனி வருபவர் இட்டு நிரப்புவாரா என்பதும் கேள்விக்குரியே. ஆனால், இந்நிகழ்வை, புலிகள் இயக்கத்தினர் மட்டுமின்றி, ஈழத் தமிழர் பல தரப்பினரும் சேர்ந்து, சிங்கள இனவெறி அரசின் கொடூரத்தையும், அற்பத்தனத்தையும் சர்வதேச அரங்கில் மிக வலுவாக அம்பலப்படுத்துவதற்கான ஒரு புள்ளியாக நகர்த்திச் செல்வதே சிறந்த அரசியல உத்தியாக இருக்கும்.
சிங்கள அரசு அதன் அற்பத்தனமான இன வெறி கண்ணை மறைக்க ஒரு அப்பட்டமான அரசியல் படுகொலையைச் செய்திருக்கிறது. இந்த ஒரு விஷயத்தை சர்வதேச அரங்கில் மிக வலுவாக எடுத்து வைப்பது ஈழப் போருக்கான நியாயத்தை பல தரப்பினரும் உணர்ந்து கொள்ள உதவியாக இருக்கும்.
தமிழ் நாட்டு ‘வீரத்’ தமிழர்கள், அரசியல் பிரிவுத் தலைவரை ‘பிரிகேடியராக’ நினைத்து உருகி, உருமாற்றி தங்களது அசட்டுத்தனமான உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிக் கொள்வதை நிறுத்திக் கொண்டு இந்த அம்சத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது உருப்படியான காரியமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
எவர் செவி சாய்க்கப் போகிறார்கள்! பெரிய நம்பிக்கைகள் ஒன்றும் எனக்கில்லை.


பரிமளதைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய
ஜனனநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது.

விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது
நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்;
உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.
-பரிசுத்த வேதாகமம், பிரசங்கி (7: 1,2)

சமீபமாக வந்த நூல்களில் “hot sales” என்று பலராலும் பரியந்தமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது சேகுவாரா: வாழ்வும் மரணமும். ‘வீரமரணம்’ அடைந்த ‘மாபெரும் மனிதர்களின்’ ஜீவிதத்தின்பால் மனுஷ குமாரர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை நூல் hot sales ஆகியிருப்பது மறுபடியும் ருஜூப்படுத்தியிருக்கிறது. அதுபோன்றதொரு மரணமும் வாழ்க்கையும் தமக்குக் கிட்டவேண்டும் என்ற ஆசை யாரை விட்டது?! வரலாற்றில் தமது பெயர் பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்கப்பட வேண்டும் என்ற அவா யாருக்குத்தான் இல்லை?!

ஆனால், இந்த விருப்பங்கள், வேட்கைகளை பூசி மெழுகி, மூடிமறைக்கத்தான் எத்தனை சிரத்தைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எத்தனை கொள்கைகள், கோட்பாடுகள், எவ்வளவு அரசியல் செயல்பாடுகள், இலக்கிய ஆக்கங்கள்?!

மிகச்சிலரைத் தவிர ஒருவரும் இவற்றுக்குப் பின்னாலிருக்கும் வேட்கைகளை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை என்பதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். வெட்கமின்றி சொல்லப்படுவது: தன்னடக்கம்.

திரு. எஸ். பாலச்சந்திரன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ஜோர்ஜ் ஜி. காஸ்டநாடா – வின் இந்நூல் சே – வின் தத்துவார்த்தப் புரிதல்கள், அரசியல் நடைமுறைகள் இவற்றிலிருந்த பலம் – பலவீனம் என்பதற்கு அப்பாற்பட்டு சே – வின் இந்த வேட்கையை – வரலாற்றில் தனது பெயர் பொன் எழுத்துக்களால் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசையை – தன்னையுமறியாமல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது என்று சொல்லலாம்.

சே – வை தீவிர இடதுசாரிகள் எவரும் என்றுமே ஒரு கம்யூனிஸ்டாக ஒப்புக் கொண்டதில்லை. ‘குட்டி முதலாளிய சாகசக்காரர்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவது வழக்கம். விரிவான விவரிப்புகள், ஆதாரங்களோடு இக்குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது இந்நூல். என்றாலும், சே – வை ஒரு கிளர்ச்சிக்காரராக, போராட்டத்தின் குறியீடாக, 60 – களில் உலகெங்கும் வீதிகளுக்கு இறங்கத் துணிந்த இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகம் தந்தவராக அங்கீகரித்திருப்பது மேற்சொன்னவர்களிடமிருந்து விலகும் புள்ளி.
இந்த அங்கீகாரமும்கூட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக நூல் முன்மொழிந்து விடவில்லை என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விஷயம். சே – வின் இறுதி நாட்களிலேயே பொருந்தாமல்போன அவருடைய நடவடிக்கைகள் தற்காலத்திற்குச் சுத்தமாகப் பொருந்தாதவை என்று தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. சே – வின் வாழ்விலிருந்து ‘உத்வேகம்’ பெறுவதற்காகவே நூலைப் படிக்க முனையும் வாசகர்களுக்கு தெளிவான எச்சரிக்கைப் புள்ளி இது.

சே – வின் நிறை – குறைகளை எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் சரியாகவே சுட்டிக் காட்டுகிற நூலில் முக்கியமான குறையாகப்படுகிற ஒரு விஷயம்: போராளி சே – வின் ஆளுமை உருவாக்கத்தைக் கண்டுபிடிக்க முயலும் ஆரம்ப அத்தியாயங்கள் இரண்டு சமன்பாடுகளை வைக்கின்றன; ஒன்று, உடற்பயிற்சி – ஆஸ்துமா = சேவின் மனவலிமை; இரண்டு, ரக்பி – ஆஸ்துமா = பின்னாட்களில் சிறந்த கொரில்லாப் போர்முறைகளை வகுத்த யுத்த தந்திரி சே.

அதாவது, ரக்பி ஆட்டத்தில், களத்தில் தேவையான திட்டமிடுதல்களைக் கோருகிற பின்கள ஆட்டக்காரராக சே விளையாடியது, பின்னாட்களில் மிகச் சிறந்த கொரில்லா யுத்த தந்திரியாக அவரது ஆளுமை உருவாக வழிவகுத்ததாம்.

Personality என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஆளுமை என்ற சொல்லின் லத்தீன் வேர்ச்சொல் persona. இச்சொல் முகமூடியைக் (mask) குறிப்பது. இதிலிருந்து பெறப்படுவது யாதெனில், personality – ஆளுமை என்பதே ஒரு முகமூடியாம். இப்படியான பின் நமது தேடல்கள் எதை நோக்கியதாக அமையலாம்?

ஒரு நபர் இந்தப் பல முகமூடிகளை எப்படி லாவகமாகக் கழற்றி, மாற்றி அணிகிறார் என்பது ஒரு சாத்தியம். ‘பன்முகப்பட்ட ஆளுமையைக்’ கண்டடைவதற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நூல் இந்த விஷயத்தில் ‘கோட்டை விட்டிருக்கிறது’ என்பதாகச் சொல்லலாம்.

ஆனால் ‘குற்றம்’ நூலுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. “வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?” (பரிசுத்த வேதாகமம், நீதி மொழிகள் 30:4) என்று இன்னமும் தேடியலைந்து கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சரிபங்கு இருக்கிறது இல்லையா?

இந்தியா டுடே, அக்டோபர் 2, 2002.

அரசியல், நூல் மதிப்புரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: