குறிப்பு:
சில வாரங்கள் இணையப் பக்கம் அதிக நேரம் செலவிட வாய்க்கவில்லை. நண்பர் ஜமாலன் “செல்லம்மாள் பாகம் II – ல் எழுப்பிய கேள்விக்கு பதில் பகிர வாய்க்கவில்லை. அவரது கேள்வி எழுப்பிய தூண்டுதலில் புதுமைப் பித்தனை மீண்டும் ஒருமுறை வாசித்த மகிழ்ச்சி மட்டுமே.
இன்னும் சில வாரங்கள் இந்த நிலையே தொடரும் என்று தோன்றுகிறது. அவ்வப்போது இங்கு ‘உலாத்திவிட்டுப்’ போக நேர்ந்தபோது கவனிக்க நேர்ந்த ‘ஜெயமோகன் விவகாரம்’ திரு. பொ. வேல்சாமியின் இந்த அம்பலப்படுத்தலை விஷயத்தின் முக்கியத்துவம் கருதி இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. அவருடைய அனுமதி பெற்று இங்கு பதிவிலிடுகிறேன்.
சிற்றிதழ் உலகில் ஜெயமோகனை பன்முறை பலரும் மிக வெளிப்படையாக அம்பலப்படுத்தியாகிவிட்டது. ஒவ்வொரு பிரச்சினையின் போதும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் என்றுமே நேர்மையாக பதில் சொன்னதில்லை. ‘அவதூறு’ செய்கிறார்கள் என்று பழியை எதிர் தரப்பினர் மீது சுமத்திவிட்டு, சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் வேறு ஏதாவதொரு அசட்டுத்தனமான பிரச்சினையைக் கிளப்புவதே அவரது வாடிக்கை. இனியும் சட்டை செய்யக் கூடியவரல்ல என்ற அளவுக்கு இது நிகழ்ந்தேறிவிட்டது.
இது தொடர்பாக இன்னும் சில விஷயகளைப் பகிர்ந்து கொள்ளவும் விருப்பமுண்டு. சாத்தியமானால் முயற்சிக்கிறேன்.நன்றிகள்.
_______________________________________________
(சொல் புதிது டிசம்பர் 2001, இதழ் 8 க்குப் பின்னர் இதழ் 9 என்று வந்த இதழில் (இவ்விடத்தில் வெளியிடப்பட்ட தேதி இல்லை. இதழ் வெளிவந்த தேதியை கண்டுபிடிப்பவருக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம்) தமிழ் இசை பற்றிய சில கட்டுரைகளும், இசை பற்றிய ஒருவரது பேட்டியும் வந்துள்ளது.
பக்கம் 4 – ல் உள்ள எஸ். அருண்மொழி நங்கை பெயரில் வெளிவந்திருக்கும் “தமிழிசை ஒரு பின்னோக்கிய பார்வை” என்ற கட்டுரை 1997 இல் வெளிவந்த “மனோரமா இயர் புக்” பக்கங்கள் 176 முதல் 185 வரை உள்ள பகுதியின் முழுமையான “காப்பி”யாக உள்ளது. மனோரமா இயர்புக்கில் அந்தக் கட்டுரையை எழுதியவர் தற்பொழுது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் இசைத்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியை திருமதி இ. அங்கயற்கண்ணி அவர்கள்.
இக்கட்டுரை சில பகுதிகள் நீக்கப்பட்டு, சில சொற்கள் மாற்றப்பட்டு (‘வழங்கிய’ என்பதற்கு ‘இயற்றிய’ என்றும் ‘இந்தளம்’ என்ற தமிழ்ப் பண்ணின் பெயர் ‘இளந்தளம்’ – வந்துள்ளது. இளந்தளம் என்று எந்தப் பண்ணிற்கும் தமிழில் பெயர் இல்லை என்பதை காப்பி அடிக்கும் அவசரத்தில் மறந்துவிட்டனர் போலும்.
ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பதற்கு நாயன்மார்கள் என்றும் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் என்பதற்கு ஆழ்வார்கள் என்றும் இக்காலங்களில் என்பதற்கு – இக்காலகட்டங்களில் பேணினர் என்பதற்கு – வளர்த்தனர் என்றும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய முழுமையான காப்பிக்கு தமிழில் திருட்டு என்று பெயர்.
இதழ் 9 – ன் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள்: 1. ஜெயமோகான் 2. வேதசகாயகுமார் 3. அருண்மொழிநங்கை 4. மோகனரங்கன் 5. சூத்ரதாரி. ஆசிரியர் சரவணன். கட்டுரை அருண்மொழிநங்கை பெயரில் உள்ளது. (இவர் ஜெயமோகன் துணைவியார்.)
இக்கட்டுரைத் திருட்டு பற்றி நண்பர்களிடம் உரையாடும்போது ஒருவர் இந்த ஒரு கட்டுரைதானே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்டுரைகள் உண்மையானவைதான் என்று எப்படி நம்புவது என்றார். அடுத்தவர் பொருளை அபகரிப்பது அரசியலில் அன்றாட நடைமுறைதான். இது இலக்கியத்திலும் தொடர வேண்டுமா? ஆம், மக்கள் முட்டாள்கள் என்பது அரசியலுக்கு சரிதான். இலக்கிய வாசகர்கள், சக எழுத்தாளர்களுக்குமா? இத்திருட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவர எனக்கு உதவிய முனைவர் சு. துரை அவர்களுக்கு என் நன்றி.
_______________________________________________
சொல் புதிதுவில் வெளிவந்த வடிவம்
பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5 ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இளந்தளம் ஆகிய இரு பண்களில் பாடிய பதிகங்களைப் பின்வந்த இயலிசைப் புலவர்கள் முன்னோடியாகக் கொண்டனர்.
நாயன்மார்களும், ஆழ்வார்களும் சைவ – வைணவ சமயங்களைப் பரப்புவதற்கும், இறைவனைத் தலங்கள் தோறும் சென்று வழிபடுவதற்கும் பல்லாயிரக்கணக்கான தேவாரப் பாடல்களையும், திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் இயற்றித் தமிழிசையை வளர்த்தெடுத்தனர். இக்கால கட்டங்களில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் (7 – ஆம் நூற்றாண்டு) இசைக் கலையை வளர்த்தனர் என்பதற்கு மகேந்திரவர்ம பல்லவ மன்னன் புதுக்கோட்டையில் உள்ள குடுமியான் மலையில் பொறித்த இசை பற்றிய கல்வெட்டே சான்று.
இராசராச சோழன் காலத்தில் (கி. பி. 985 – 1014) தேவாரப் பாடல்கள் பாடுவதற்குக் கோயில்களில் 48 ஓதுவார்களுக்கும், உடுக்கை, ‘கொட்டி மத்தளம்’ வாசிப்போர் இருவருக்கும் ஆக 50 பேருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய செய்திகளைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள் உரைக்கின்றன.
பதின்மூன்றாம் நூற்றாண்டில், சாரங்கதேவர் இயற்றிய ‘சங்கீத ரத்னாகரம்’ எனும் வடமொழி இசை இலக்கண நூலில், ‘தேவார வர்த்தினி’ எனும் அடைமொழியுடன் பல தமிழ்ப் பண்களும், பெயர்களும், இலக்கணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், தமிழக இசையின் தாளங்களை விளக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கில் முருகப் பெருமானின் பெயரில் திருப்புகழ்ப் பாடல்களைச் சந்த நடையில் பாடியருளினார். அவையே தமிழக இசையின் தாளக் கூறுகளுக்கு மூல இலக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இன்றைக்கு வழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான தாளங்கள் திருப்புகழ்ப் பாடல்களின் அமைப்பிலிருந்தே பெறப்படுகின்றன.
சோழர் காலத்தை அடுத்து தமிழகத்தை ஆண்ட விசயநகர, நாயக்கர், மராட்டிய (17, 18, 19 ஆம் நூற்றாண்டுகள்) மன்னர்களும் இசையைப் போற்றிப் பேணினர். அம்மன்னர்களின் தாய்மொழிப் பாடல்கள் ஆதரிக்கப்பட்டன. இவை தமிழிசை மரபை ஒட்டிப் பாடப்படும் ‘கர்நாடக சங்கீதம்’ எனும் பெயரில் குறிக்கப்பட்டன. இவ்வாறு கோயில்களிலும், அரசவைகளிலும் இருந்து வந்த தமிழக இசை, பொது மக்களுக்காக அரங்குகளில் வேற்று மொழிப் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் முத்துத் தாண்டவர் (1560 – 1640), மாரிமுத்துப் பிள்ளை (1712 – 1787), அருணாச்சலக் கவிராயர் (1711 – 1778) முதலானோர் பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் பிரிவுகளைக் கொண்ட கீர்த்தனை, பதம் முதலான இசைப் பாடல்கள் இயற்றியிருப்பினும், அவை தமிழல்லாது வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு மன்னர்கள் ஆண்ட காலத்தில் பாடப்பட்டதால் ஆதரிக்கப்படாமல் போய்விட்டன.
இதையடுத்து தஞ்சையில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் (1767 – 1847), முத்துசுவாமி தீட்சிதர் (1775 – 1834), சியாமா சாஸ்திரிகள் (1762 – 1827) ஆகியோர் தெலுங்கு, வடமொழியில் பல பாடல்கள் இயற்றி கர்நாடக இசையை மேம்படுத்தினர். இம்மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாதலால் இவர்கள் இயற்றிய பாடல்களின் இசை மரபு தேவாரம் மற்றும் தமிழிசைப் பாடல்களை அடியொற்றியவை எனக் கருதலாம். இவர்களை அடுத்து, கோபால கிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை, இராமலிங்க அடிகளார், நீலகண்ட சிவன் ஆகியோர் தமிழ்ப் பாடல்களை இயற்றினர். இருபதாம் நூற்றாண்டில் கோடீசுவர ஐயர், பாபநாசம் சிவன், மகாகவி பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் தமிழ்க் கீர்த்தனைகள் இயற்றித் தமிழிசையை வளப்படுத்திய போதிலும், சங்கித மும்மூர்த்திகளின் பாடல்களால் செவ்விசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் பிரபலமடையவில்லை. இந்நிலையில் தமிழ் நாடகங்களில் தமிழ்ப் பாடல்கள் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. சங்கரதாஸ் சுவாமிகள், மதுரை மாரியப்ப சுவாமிகள் பாடல்கள் குறிப்பிடத்தக்கன. பின்னர் திரைப்படங்களில் தமிழிசைப் பாடல்கள் இடம் பெறும் காலகட்டம் தொடங்கியது. குறிப்பாக எம். கே. தியாகராச பாகவதர், ஜி. என். பாலசுப்பிரமணியம், தண்டபாணி தேசிகர், பி. யூ. சின்னப்பா போன்றோர்கள் செவ்விசையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படப் பாடல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
செவ்விசை அரங்குகளில் வடமொழி, தெலுங்குப் பாடல்கள் பாடப்பட்டு வந்த நிலையிலும், தமிழ்ப் பாடல்களுக்குரிய இடம் தரப்படாத நிலையிலும், தமிழ் நாட்டு இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் முழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு, டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் சீரிய முயற்சியில் சென்னையில் 1943 ஆம் ஆண்டில் தமிழிசைச் சங்கம் நிறுவப்பட்டது. அங்கு ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் 25 பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. அவை பாடப்படும் காலங்களுக்கேற்ப பகற் பண்கள், இரவுப் பண்கள், பொதுப் பண்கள் என வகைப்படுத்தியுள்ளனர்.
இத்தகு சிறப்பு வாய்ந்த தமிழிசை சென்ற நூற்றாண்டு வரை செவ்விசையாகவே இருந்தது. பொதுமக்கள் விரும்பி இலயித்துக் கேட்கும் வண்ணமிருந்தது. ஆனால், இந்த நூற்றாண்டில் இந்நிலை மாறியுள்ளது. இன்றைய நிலையில் தமிழிசை என்றாலே, புதுப்புதுக் கவிஞர்கள் இயற்றிய பக்திப் பாடல்களும், திரை இசைப் பாடல்களுமே நினைவுக்கு வருகின்றன. தமிழிசையில் உயிர்நாடியாகத் திகழும் இன்னிசை தன்மை மாறி, ஒத்திசையும் இன்னிசையும் கலந்தொரு கலப்பிசையாகத் தமிழிசை இன்றைய திரை இசையமைப்பாளர்களால் புது உருவம் அடைந்துள்ளது. இப்புது உருவத்தையே மக்கள் விரும்பி மயங்குவதால், தமிழில் செவ்விசைப் பாடல்கள் அருகி வருகின்றன.
நாளைய தலைமுறையினருக்குத் ‘தமிழிசை’ சென்று சேருமா என்பதே ஐயம்தான்.
___________________________________________
‘மனோரமா இயர் புக்’ இல் வெளிவந்த மூலக் கட்டுரை
பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5 ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இந்தளம் ஆகிய இரு பண்களில் பாடிய பதிகங்களைப் பின்வந்த இயலிசைப் புலவர்கள் முன்னோடியாகக் கொண்டனர்.
இவ்வகையில் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான நாயன்மார்களும், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களும் சைவ – வைணவ சமயங்களைப் பரப்புவதற்கும், இறைவனைத் தலங்கள் தோறும் சென்று வழிபடுவதற்கும் பல்லாயிரக்கணக்கான தேவாரப் பாடல்களையும், திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் இயற்றித் தமிழிசையை வளர்த்தெடுத்தனர். இப்பாடல்களின் இசை மரபு, கோயில்களில் வழிவழிவழியாக வந்த ஓதுவார்களாலும், அரையர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
இக்காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் இசையறிஞராக விளங்கி, இசைக் கலையை வளர்த்தனர். மகேந்திரவர்ம பல்லவன் (7 – ஆம் நூற்றாண்டு)புதுக்கோட்டையில் உள்ள குடுமியான் மலையில் இசை பற்றியொரு கல்வெட்டினைப் பொறித்திருந்தான்.
இராசராச சோழன் காலத்தில் (கி. பி. 985 – 1014) தேவாரப் பாடல்கள் பாடுவதற்குக் கோயில்களில் 48 ஓதுவார்களுக்கும், உடுக்கை, கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவருக்கும் ஆக 50 பேருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் பற்றிய செய்திகளைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள் உரைக்கின்றன.
இன்றைக்குத் தேவாரப் பாடல்களைப் பாடிவரும் முறையினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தமிழிசைச் சங்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் ஆராய்ந்ததில் இருபத்தி நான்கு பண்களுக்குரிய இன்றைய இராகங்கள் கிடைத்துள்ளன. இவை பாடப்பட்டுவரும் காலங்களுக்கேற்ப பகற் பண்கள், இரவுப் பண்கள், பொதுப் பண்கள் என்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எண் பண்கள – இராகம்
பகற் பண்கள்:
1. புறநீர்மை – பூபாளம்
2. காந்தாரம் – நவரோசு
3. பியந்தைக்காரந்தாரம் – நவரோசு
4. கெளசிகம் – பைரவி
5. இந்தளம் – நாதநாமக்ரியை
6. தக்கேசி – காம்போதி
7. நட்டராகம் – பந்துவராளி
8. சாதாரி – பந்துவராளி
9. நட்டபாடை – கம்பீர நாட்டை
10. பழம் பஞ்சரம் – சங்கராபரணம்
11. காந்தார பஞ்சமம் – கேதார கொளை
12. பஞ்சமம் – ஆகிரி
இரவுப் பண்கள்:
13. தக்கராகம் – காம்போதி
14. பழந்தக்க ராகம் – சுத்த சாவேரி
15. சீகாமரம் – நாதநாமக்ரியை
16. கொல்லி – நவரோசு
17. கொல்லிக் கெளவாணம் – நவரோசு
18. வியாழக்குறிஞ்சி – செளராஷ்ட்ரம்
19. மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி
20. குறிஞ்சி – குறிஞ்சி
21. அத்தானிக்குறிஞ்சி – சாமா
பொதுப் பண்கள்:
22. செவ்வழி – எதுகுலகாம்போதி
23. செந்துருத்தி – மத்தியமாவதி
24. திருத்தாண்டகம் – அரிகாம்போதி
பதின்மூன்றாம் நூற்றாண்டில், சாரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்னாகரம் எனும் வடமொழி இசை இலக்கண நூலில் தேவார வர்த்தினி எனும் அடைமொழியுடன் பல தமிழ்ப் பண்களும், பெயர்களும், இலக்கணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், தமிழக இசையின் தாளங்களை விளக்கும் வகையில் பல்லாயிரக் கணக்கில் முருகப் பெருமானின் பெயரில் திருப்புகழ்ப் பாடல்களைச் சந்த நடையில் பாடியருளினார். இவையே தமிழக இசையின் தாளக்கூறுகளுக்கு மூல இலக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இன்றைக்கு வழக்கிலுள்ள நூற்றுக்கணக்கான தாளங்கள் திருப்புகழ்ப் பாடல்களின் அமைப்பிலிருந்தே பெறப்படுகின்றன.
சோழர் காலத்தை அடுத்துத் தமிழகத்தை ஆண்ட விசயநகர, நாயக்கர், மராட்டிய (17, 18, 19 ஆம் நூற்றாண்டுகள்) மன்னர்களும், இசையைப் போற்றி வளர்த்தனர். அம்மன்னர்களின் தாய்மொழி தமிழல்லாது தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளாக இருந்ததால் தமிழிசையின் செல்வாக்கு குன்றி, தமிழ் நாட்டில் தெலுங்கு, கன்னடம், வடமொழி, மராத்தி, இந்தி முதலான வேற்று மொழிப் பாடல்கள் ஆதரிக்கப்பட்டன. இவை தமிழிசை மரபை ஒட்டிப் பாடப்பட்டு “கர்நாடக சங்கீதம்” எனும் பெயரில் குறிக்கப்படலாயின.
இவ்வாறு கோயில்களிலும், அரசவைகளிலும் இருந்து வந்த தமிழக இசை, பொது மக்களுக்காக அரங்குகளில் வேற்று மொழிப் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கால கட்டங்களில் முத்துத் தாண்டவர் (1560 – 1640), மாரிமுத்தா பிள்ளை (1712 – 1787), அருணாச்சலக் கவிராயர் (1711 – 1778) முதலான தமிழ் இயலிசைப் பாவலர்கள் தோன்றி, பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் பிரிவுகளைக் கொண்ட கீர்த்தனை, பதம் முதலான இசைப் பாடல்கள் இயற்றியிருப்பினும், இவை தமிழல்லாது வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு மன்னர்கள் ஆண்ட காலத்தில் பாடப்பட்டதால் ஆதரிக்கப்படாமல் போய்விட்டன.
இதையடுத்துத் தஞ்சையில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப் பெறும் தியாகராஜ சுவாமிகள் (1767 – 1847), முத்துசுவாமி தீட்சிதர் (1775 – 1834), சியாமா சாஸ்திரிகள் (1762 – 1827) ஆகியோர் தெலுங்கு, வடமொழியில் பல பாடல்கள் இயற்றி கருநாடக இசையை மேம்படுத்தினர். இம்மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாதலால் இவர்கள் இயற்றிய பாடல்களின் இசை மரபு தேவாரம் மற்றும் தமிழிசைப் பாடல்களை அடியொற்றியவை எனக் கருதலாம். இவர்களை அடுத்து, கோபால கிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை, இராமலிங்க அடிகளார், நீலகண்ட சிவன் ஆகியோர் தமிழ்ப் பாடல்கள் இயற்றினர். இருபதாம் நூற்றாண்டில் கோடீசுவர ஐயர், பாபநாசம் சிவன், மகாகவி பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் தமிழ்க் கீர்த்தனைகள் இயற்றித் தமிழிசையை வளப்படுத்தினர். இருந்தபோதிலும் சங்கீத மும்மூர்த்திகளின் பாடல்களால் செவ்விசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் பிரபலமடையவில்லை.
இந்நிலையில் தமிழ் நாடகங்களில் தமிழ்ப் பாடல்கள் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. சங்கரதாஸ் சுவாமிகள், மதுரை மாரியப்ப சுவாமிகள் பாடல்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இதில் நடித்த எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றோர் தமிழ் மக்களிடையே அடைந்த செல்வாக்கு இங்கு நினைவு கூறத் தக்கது. இந்நாடகங்கள் வாயிலாக சென்ற நூற்றாண்டில் தமிழிசை வளர்ந்தது.
பின்னர் திரைப்படங்களில் தமிழிசைப் பாடல்கள் இடம் பெறும் கால கட்டம் ஏற்பட்டதும் நாடகங்கள் போற்றுவாரற்றுப் போயின. குறிப்பாக எம். கே. தியாகராச பாகவதர், ஜி. என். பாலசுப்பிரமணியம், தண்டபாணி தேசிகர், பி. யூ. சின்னப்பா போன்றோரின் செவ்விசை அடிப்படையிலான திரைப்படப் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
செவ்விசை அரங்குகளில் வடமொழி, தெலுங்குப் பாடல்கள் பாடப்பட்டு வந்த நிலையிலும், தமிழ்ப் பாடல்களுக்கு உரிய இடம் தரப்படாத நிலையிலும், தமிழ் நாட்டு இசையரங்குகளில் தமிழ்ப்பாடல்கள் முழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு, டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் சீரிய முயற்சியில் சென்னையில் தமிழிசைச் சங்கம் 1943 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதன் வாயிலாக ஆண்டுதோறும் தேவாரப் பண்ணாராய்ச்சி மாநாடுகளும், தேவார, திருப்புகழ், திவ்வியப் பிரபந்த இசையரங்குகளும் இன்றளவும் நடைபெற்று பல நல்ல ஆக்கப் பணிகள் தொடர்கின்றன. இவ்வாறு செல்வாக்குப் பெற்ற, இன்று நம்மிடையே உள்ள ஓதுவார்களில் தருமபுரம் பி. சுவாமிநாதன், திருப்பனந்தாள் முத்துக் கந்தசாமி தேசிகர், வி. சோமசுந்தரம், காஞ்சிபுரம் எம். என். வேங்கடவரதன் (திவ்வியப் பிரபந்தம்) ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
தமிழிசையின் இன்றைய போக்கு
தமிழக இசைக்கேயுரிய சிறப்பு நிலைகளைத் தொகுத்துக் காண்கையில், தமிழக இசையானது இயற்கையினின்றும் தோன்றியது. இயற்கைச் சூழ்நிலைக்கேற்ப ஐந்து நிலங்களாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த நிலப்பகுதி இசையை வளப்படுத்தியமை, மக்களின் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாத கூறாக இருந்தமை, வெறும் பொழுதுபோக்குக் கலையாக இல்லாமல் மனிதனைப் பண்படுத்தும் பாங்கில் இருந்தமை, நாட்டுப்புற இசையாக இருந்து பண்படுத்தப்பட்டுத் தமக்கேயுரிய இசை இலக்கண முறையைக் கொண்டு வளர்ந்து, தற்போது கருநாடக இசை என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருவது ஆகிய நிலைகளைக் கொண்டது.
இத்தகு சிறப்பு வாய்ந்த தமிழிசை சென்ற நூற்றாண்டு வரை செவ்விசையாகவே இருந்தது. பொது மக்களும் விரும்பிக் கேட்கும் வண்ணம் இருந்தது. ஆனால் இந்த நூற்றாண்டில் இந்நிலை மாறியுள்ளது. இன்றைய நிலையில் தமிழிசை என்றாலே புதுப்புது கவிஞர்கள் இயற்றிய பக்திப் பாடல்களும், திரைப்படப் பாடல்களுமே நினைவுக்கு வருகின்றன. இவை கிதார், பியானோ போன்றஇசைக் கருவிகளின் துணையோடு இசையமைக்கப்படுகிற மெல்லிசைப் பாடல்களாகவும், திரை இசைப் பாடல்களாகவும் திகழ்கின்றன.
தமிழிசையின் உயிர்நாடியாக விளங்கும் மெலடித்தன்மை மாறி, ஃஆர்மோனியும், மெலடியும் கலந்ததொரு கலப்பிசையாகத் தமிழிசை இன்றைய திரை இசை அமைப்பாளர்களால் புது உருவம் அடைந்துள்ளது. இவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தமிழில் செவ்விசைப் பாடல்கள் அருகியுள்ளன என்னும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
தமிழகத்தில் இசையைப் பாடமாகத் தரும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் தெலுங்கு, வடமொழிப் பாடல்களே அதிக அளவில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இசை இலக்கணங்களும் வடமொழி நூல்களில் காணப்படும் செய்திகளின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் இந்நிலை மாறுவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வகையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இசைத்துறை நிறுவப்பட்டு தேவாரம், திருப்புகழ் முதலானவற்றில் உயர் ஆய்வுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இவ்வாறே சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், இசை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு நூல்கள் வெளிவந்துள்ளன. முனைவர் ஏ. என். பெருமாளின் தமிழர் இசை, ஆர். ஆளவந்தார் எழுதிய தமிழர் தோற்கருவிகள், முனைவர் இ. அங்கயற்கண்ணி எழுதியுள்ள பஞ்சமரின் இசைமரபு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஓதுவார்கள் பாடியுள்ள பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் உரிய வகையில் இன்றைய தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டும்.
வளர்ந்து வரும் அறிவியல் உலகில், இயற்பியல், கணிதவியல், மருத்துவம், விவசாயம் ஆகிய அறிவியல் துறைகளை இசை அறிவியலோடு இணைத்து கணிப்பொறி வசதிகளையும் பயன்படுத்தி ஆராயும் போக்கும் வளர வேண்டும். இத்தகைய ஆய்வுகள் உலகளவில் தமிழக இசையின் பெருமையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
கவிதாசரண் சனவரி – பிப்ரவரி 2004.