குறிப்பு: இக்கட்டுரையின் நோக்கத்தை வாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இங்கு இப்போது தருவதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் தற்போது சில ஆழ்ந்த கருத்தமைவுகளைக் குறிக்கும் சொற்களை எந்தப் புரிதலும் இல்லாமலேயே எதற்கெடுத்தாலும் உதிர்ப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. அதில் ஒன்று பெருங்கதையாடல். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் ‘இந்துத்துவ பெருங்கதையாடல்’ என்று சொல்வது சர்வசாதாரணமாகிவிட்டது. இந்துத்துவக் கதையாடலை பெருங்கதையாடல் என்று சொல்லமுடியாது என்பது என் துணிபு. அதை இங்கு தொட்டிருக்கிறேன். அப்படிச் சொல்வதனால் என்ன அரசியல் சிக்கல் உருவாகிறது என்பதை கதையாடல் என்றால் என்ன, பெருங்கதையாடல் என்றால் என்ன, என்ற விளக்கங்களுடனும் இங்கு இந்துத்துவக் கதையாடல் குறித்து தந்துள்ள குறிப்புகளை மேலும் விளக்கியும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
ஆண்டு – 1780. காஞ்சிபுரத்திலிருந்து இரவோடு இரவாக, இரகசியமாக, ‘மூன்று பிணங்கள்’ கடத்திச் செல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு திசையில். ஒன்று திருப்பதிக்கு பத்திரமாகப் போய்ச்சேர்கிறது. ஐந்து வருடங்கள் அப்போதிருந்த ‘Z’ பிரிவு பாதுகாப்பில் மிகமிக பத்திரமாக ‘வாழ்ந்து’ வந்தது. பிறகு, 1785 – ஆம் ஆண்டு திரும்பவும் காஞ்சிபுரத்திற்கே அதை அனுப்புவது என்று முடிவாகிறது. அப்போதிருந்த சென்னையின் ஆங்கிலேயக் கவர்னர், அதை இராணுவப் பாதுகாப்போடு கொண்டுவர உத்திரவிட்டு, சந்திரகிரியில் இருந்த ஆங்கிலப் படைப்பிரிவின் தளபதிக்கு கடிதம் எழுதுகிறார். ஒருவழியாக அதுவும் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தது. நேற்றுவரையில் அங்கு பத்திரமாக இருப்பதாகவே தகவல்.
நான் கதை எழுதுபவன் அல்லன். இது கதையும் அன்று, வரலாறு. வரலாறு எழுதுபவனும் அல்லன். ஆவிகளில் எனக்கு நம்பிக்கையில்லை. கடந்த காலங்களைத் தோண்டி, தலைமுறைகளின் ஆவிகளைக் கிளப்புவது வரலாறு. அரசியல்வாதியுமல்ல யாம். பிணங்களைக் காட்சிக்கு வைத்து அவற்றின் மீது நடப்பதே அரசியல்.
ஆனால், இந்த மூன்றையும் ஒரே ‘ஸ்ட்ரோக்கில்’ செய்து காட்டுபவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியப்படத்தான் தோன்றுகிறது. அதுவும், அமைதியானவர், அலட்டிக் கொள்ளாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர் என்று இலக்கிய உலகில் பெயரெடுத்த ஒருவர் இதைச் செய்து காட்டும்போது, சில நேரங்களில் மூச்சுத் திணறிவிடுகிறது. சமீபமாக அப்படித் திணறச் செய்தது ‘அவுட்லுக்’ வார இதழில் (ஏப்ரல் – 11, 2005) வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் பேட்டி.
“தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர்களைப் போல உணர்கிறார்கள்” என்று ஆரம்பித்து, அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான் என்ற குற்றச்சாட்டை வைத்து, தமிழ்நாட்டு பிராமணர்கள் சரியான தலைமையின்றித் தவிக்கிறார்கள் (“ஜயேந்திரர் ஒருக்காலும் ஒரு நல்ல தலைவராகியிருக்க முடியாது …ராஜாஜி ஒரு நல்ல தேர்வுதான்; ஆனால் அவர் இன்று இல்லையே”) என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்.
அசோகமித்திரனை இப்படி ‘மனம் திறக்க’ வைத்திருப்பவர் எஸ். ஆனந்த் என்பவர். லிட்டில் ஆனந்த் என்ற பெயரில் தலித் ஆதரவுப் போராளியாக சிற்றிதழ் அரசியல் வட்டாரங்களில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். தமிழில் ஒரு பக்கத்தை ஒன்றரை மணிநேரத்திற்கு எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருப்பவர். ஆனாலும் இவரது பெயரில் இவரே எழுதிய கட்டுரைகள் தமிழில் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. தமிழ்நாட்டு சமூக – அரசியல் சூழலோ, வரலாறுகளோ அதிகம் அறியாதவர். என்றாலும், ‘தமிழ்நாட்டு மக்களுக்கு பெரியார் என்றால் பெரியாறு அணைதான் ஞாபகத்திற்கு வரும்’ என்பது போன்ற அரிய, ஆழ்ந்த கருத்துக்களையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்ன பெருமைக்குரியவர். ஐதராபாத்திலிருந்து (கவனம், திருப்பதியிலிருந்து அல்ல) வந்தவர். தமிழ்நாட்டில் பார்ப்பனர் – தலித் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தன்னை ‘அர்ப்பணித்துக்’ கொண்டிருப்பவர்.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்சொன்ன இதழில் வந்துள்ள அவரது கட்டுரை. கட்டுரையின் தலைப்பு, “தலித்துகளாக்கப்பட்டுள்ள பிராமணர்கள்” (Dalits in Reverse). தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் ‘பரிதாப’ நிலையை மிகுந்த அங்கலாய்ப்போடு அலசும் கட்டுரை. மருந்துக்கூட ஒரு தலித்தினுடைய கருத்தோ அல்லது ஒரு பார்ப்பனரல்லாதவருடைய கருத்தோ அதில் பதிவு செய்யப்படவில்லை. கட்டுரையை அவர் துவங்கியிருக்கும் விதமும் சுவாரசியமானது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா. ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். “கபாலி கபாலி” என்று ‘ஆனந்தப்’ பரவச முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பார்ப்பனரல்லாதவர்கள் தேரை இழுத்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது 40 வயது மதிக்கத்தக்க P.மாதவன் (பெயர் சொல்லும் சேதி: அவர் ஒரு பார்ப்பனர்) என்பவர், தேர் வடத்தைப் பிடிக்க ஆசைப்பட்டுக் கேட்கிறார். வடத்தைப் பிடித்துவிட்டு திருப்தியோடு பழையபடி வேடிக்கை பார்ப்பவராக நின்றுவிடுகிறார். அவர் ஆசைப்பட்டது எதோ கொஞ்சம் புண்ணியத்துக்கு, அவ்வளவுதான். எவ்வளவு பரிதாபம் பார்த்துக்கொள்ளுங்கள்!
விஷயம் இன்னும் விளங்காதவர்களுக்கு கொஞ்சம் இப்படி விளக்கிச் சொல்லலாம். அதாகப்பட்டது, தேர் இழுக்கும் பிரச்சினையில் பார்ப்பனர்கள் கிட்டத்தட்ட தலித்துகளுடைய நிலைமையில் இருக்கிறார்கள். ஏதோ கொஞ்சம் ‘வடத்தை’ தொட்டுப் பார்த்து திருப்தி அடைந்து கொண்டிருக்கிறார்கள். தலித்துகளை வன்கொடுமைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கிற அதே பார்ப்பனரல்லாதார்தான் பார்ப்பனருடைய இடத்தைப் பிடித்துக்கொண்டு அவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பார்ப்பனர்களுடைய நிலை, இன்றைக்கு தலித்துகளுடைய நிலைக்கு ஒப்பானது. ஆகையால், தலித்துகள் பார்ப்பனர்களோடு சேரவேண்டியது வரலாற்று விதி!
இந்த ‘விதியை’ நினைத்து நொந்துகொண்டிருந்த நேரத்தில்தான், முதலில் சொன்ன காஞ்சிபுரத்து விவகாரம் நினைவிற்கு வந்தது. அதற்குத் திரும்புவோம்.
காஞ்சிபுரத்திற்கு வடக்கே பத்து மைல் தொலைவில், புல்லனூர் என்ற இடத்தில் 1780 – ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 10 – ஆம் தேதி, ஐதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானுடைய படைகள், பிரிட்டிஷ் கொலனெல் ஜான் பெய்லி என்பாரின் தலைமையிலிருந்த ஆங்கிலேயப் படையைத் தோற்கடித்து நிர்மூலமாக்கின. ஐதரின் அடுத்த இலக்கு காஞ்சி என்று தெரிந்தவுடன் தான், காஞ்சிபுரத்திலிருந்த வரதராஜசுவாமி, ஏகாம்பரநாதர், காமட்சியம்மன் கோயில் சிலைகள், பிணங்கள் என்ற போர்வையில் கண்காணா இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டன. அவற்றில், காமாட்சியம்மன் சிலை, முழுக்க முழுக்க தங்கத்தினாலானது. அதை தஞ்சை மராத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட உத்தரபாளையத்தைச் சுற்றியிருந்த காடுகளுக்கு எடுத்துச் சென்றனர். பிற்பாடு அதை தஞ்சை அரசர், தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்கென்று ‘எடுத்துக்’ கொண்டார்.
ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து சென்ற ‘பிணம்’ எங்கு கொண்டு செல்லப்பட்டது என்ற தகவல் இப்போதைக்கு என்னிடம் இல்லை. ஆனால், 1785 – ஆம் ஆண்டு, திப்பு சுல்தான் கொல்லப்பட்டு சிறீரங்கப்பட்டிணம் சூறையாடப்பட்ட பிறகுதான் திருப்பதியில் (கவனம், ஐதராபாத்தில் அல்ல) ஒளித்து வைக்கப்பட்டிருந்த வரதராஜசுவாமிகள் சிலையைத் திரும்பவும் காஞ்சிபுரத்திற்கே கொண்டு செல்ல முடிவெடுக்கிறார்கள்.
அதற்கு, பிரிட்டிஷ் படைகள் பாதுகாப்பும் தருகின்றன. பாதுகாப்பு தருவதோடு நின்றுவிடாமல், அச்சிலைகளை மறுபடியும் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்து விழா ஏற்பாடுகள் நடக்கின்றன என்ற செய்தி கிடைத்ததும், கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னைக் கமிட்டி, விழா எந்தத் தடங்கலும் இல்லாமலும், ‘கோலாகலமாக’ நடைபெறவும் காஞ்சிபுரத்துப் பார்ப்பனர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்யுமாறு சென்னைக் கலெக்டருக்கு உத்தரவும் பிறப்பித்தது.
பிரிட்டிஷ் ஆட்சியில் பார்ப்பனர்களின் செல்வாக்கு மெல்ல மெல்லக் குறைந்தது என்றே சொல்லக் கேட்டுப் பழகியவர்களுக்கு இது போன்ற தகவல்கள் ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், ஒரு சாதாரண வணிக நிறுவனம் என்ற நிலையில் இருந்து, ஒரு அரசாங்கம் என்ற நிலைக்கு மாறிய பிரிட்டிஷார், முற்றிலும் அன்னியர்களான தமது ஆட்சிக்கு ஒரு நியாயத்தை உருவக்கிக்கொள்ள, தாமும் ‘உள்ளூர்’ அரசர்களைப் போன்றவர்கள்தாம் என்று நிரூபிக்கச் செய்த முதல் வேலை, கோயில்களின் புரவலர்களாகவும், பார்ப்பனர்களின் பாதுகாவலர்களாகவும் தம்மைக் காட்டிக்கொண்டதுதான். கண்ணகி காலத்தில் மட்டுமல்ல, மன்றோக்களின் காலங்களிலும்கூட இந்த நிர்ப்பந்தம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் இருந்தது.
இதில், 1794 – 98 ஆண்டுகளில் சென்னை கலெக்டராக இருந்த லியோனல் ப்ளேஸ் என்பவர் எடுத்துக்கொண்ட சிரத்தை அலாதியானது. வரதராஜசுவாமி கோயில் எப்படியோ அவரது விசேஷ அன்பிற்குப் பாத்திரமானது. பாழடைந்த நிலையில் இருந்த அக்கோயிலை மறுசீரமைப்பு செய்து, வைகாசித் திருவிழா எடுத்தார். திருவிழாவிற்கு 30,000 பேர் திரண்டார்கள் என்று பூரித்தார். உணர்ச்சிவயப்பட்டு, கோயில் நிதியிலிருந்து 2,161 பகோடாக்கள் (அன்றைய நாணயம்) மதிப்புள்ள நகைகள், வெள்ளிச் சாமான்களை ‘தானமாகத்’ தந்தார். காஞ்சிபுரத்துப் பார்ப்பனர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். ஐம்பது ஆண்டுகள் கழித்தும்கூட, 1849 – ல் காஞ்சிபுரத்திற்கு ‘விசிட் அடித்த’ அலெக்சாண்டர் டஃப் என்ற கிறித்துவப் பாதிரியிடம் அவர்கள் அதை ‘நன்றியோடு’ நினைவு கூர்ந்தனர்.
ப்ளேஸைத் தொடர்ந்து கலெக்டரான ஃஅட்ஜ்ஸன் என்பவர், இன்னும் ஒரு படி மேலே போய், 1799 -ஆம் ஆண்டு வானம் பொய்த்தபோது, வருண பூசை நடத்துவதற்கு 2000 பகோடாக்கள் (இன்றைய மதிப்பில் ஏறக்குறைய நான்கு இலட்சங்கள்) அரசு நிதியிலிருந்து ‘தானமாகத்’ தந்தார்.
ஆரம்பகால பிரிட்டிஷ் ஆட்சி சநாதன ‘தர்மம்’ மீண்டும் நிலைநிறுத்தப்பட்ட பார்ப்பனப் பொற்காலம் என்று சொன்னாலும் மிகையில்லை. அதனாலேயே அவர்கள் கடைசிவரையில் பிரிட்டிஷாரின் விசுவசிகளாக இருந்தார்கள். கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில்தான் பிரிட்டிஷ் அரசு தலித்துகளுக்கு எதிரான கொடூரமான சட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது. உதாரணத்திற்கு, 1798 – ஆம் ஆண்டு உத்தரவொன்று, (பார்ப்பனக் கோட்டைகளான) கும்பகோணம் மற்றும் மாயவரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வேறு இடங்களில் வேலை செய்து கொண்டிருந்த பள்ளர்கள் மற்றும் பறையர் இனமக்களை அப்பகுதிகளைச் சேர்ந்த நிலவுடைமையாளர்கள் (90 % -கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்கள்) மீண்டும் தங்களுடைய பண்ணையடிமைகளாக்கிக்கொள்ள முழு உரிமை அளித்து பிரகடனம் செய்தது.
ஆனால், இதற்கு நேர்மாறாக, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய சில நூற்றாண்டுகளில், சநாதன ‘தர்மம்’ இறங்கு முகத்தில் இருந்தது. முஸ்லீம்களின் ஆட்சி அதற்குக் கிடைத்த பலத்த அடிகளில் ஒன்று. மைசூர் உடையார் அரசர்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் விரட்டியடிக்கப்பட்டது பிரசித்தி பெற்ற கதை. அரண்மனைக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய பணத்தை பொய் கணக்குக் காட்டி பெருமளவில் சுருட்டினார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, பார்ப்பன அதிகாரிகள் கடும் சித்திரவதைக்கும்கூட ஆளாக்கப்பட்டார்கள். உடையார்களைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஐதர் அலி, திப்பு சுல்தான் காலங்களிலும்கூட இந்தப் ‘பாரம்பரியம்’ தொடர்ந்தது.
பார்ப்பன எதிர்ப்பு என்பது, ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான், அதுவும் திராவிட இயக்கத்தால்தான் உருவானது என்றும், அதை ‘பார்ப்பனரல்லாதார்’ மட்டும்தான் முன்னெடுத்தார்கள் என்றும் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பது பார்ப்பனர்களுடைய வழக்கமாகியிருக்கிறது. இதற்கு மறுப்பாக, இதுபோன்ற இன்னும் ஏராளமான தகவல்களைத் தரமுடியும். ஆனால், அதைவிட, இப்படியொரு கட்டுக்கதை ஏன் உருவானது என்று பார்க்கவேண்டியது இன்று அவசியமாகியிருக்கிறது.
கட்டுக்கதை என்று சொல்வதைவிட புராணக் கதை என்று சொல்வது சரியாக இருக்கும். கட்டுக்கதை என்பது இட்டுக்கட்டுவது; ‘இல்லாததையும் பொல்லாததையும்’ சொல்வது. புராணக்கதை, ‘காலாகாலமாக’ சொல்லப்பட்டு வருவதாகக் கருதப்படுவது; ஆதியும் அந்தமும் இல்லாதது என்று சொல்லப்படுவது.
புராணக்கதைக்கு சமஸ்கிருத மரபில் ஐந்து இலட்சணங்கள் உண்டு. உபபுராணங்கள், தலபுராணங்கள் என்று வகைப்பாடுகளும் உண்டு. அவற்றுக்குள் போகாமல், இந்த புராணக்கதை மரபின் முக்கியத்துவம் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்று மட்டும் பார்ப்போம்.
எளிமையாகச் சொல்வதென்றால், புராணக்கதை என்பது, ஆதியில் ‘பூலோகம் எவ்வளவு க்ஷேமமாக இருந்தது’ என்று ஆரம்பித்து, மெல்ல மெல்ல எப்படி அது ‘சீரழிந்து’ படுபாதாளத்திற்குள் வீழ்ந்தது என்று விவரித்துச் சொல்லும் ஒரு வரலாறு சொல்லும் முறை. இந்தியச் சூழலில், பார்ப்பனர்கள் தம்மைச் சுற்றியிருக்கும் சமூக வாழ்வை செரித்துக்கொள்ள உருவாக்கிய ஒரு வரலாறு எழுதும் முறை. சநாதன ‘தர்மத்திற்கு’ அரணாக எழுந்த ஒரு கருத்தியல் ஆயுதம். இந்த வரலாறு எழுதும் முறையில் காலம் கீழ் நோக்கி சுழன்று சரிந்து விழுவதாக இருக்கும்.
க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்ற நான்கு யுகங்களுள் க்ருத யுகம் பொற்காலம், அதிலிருந்து சரிந்து சத்தியத்தின் வழி சநாதனம் தழைக்கும் த்ரேதா யுகம் (உண்மையே பேசும் அரிச்சந்திரன்; ஏகபத்தினி விரதன், ‘இன்று போய் நாளை வா’ என்று நிராயுதபாணியாக நிற்கும் இராவணனை வழியனுப்பி நிற்கும் இராமன்). அதுவும் கெட்டு, எந்த வழியிலாவது சநாதனம் நிலைநிறுத்தப்படும் துவாபர யுகம் (கள்ளங்கபடம் மிகுந்த கிருஷ்ணனும் அவனது ‘லீலைகளும்’; பொய்க்குத் துணைபோயாவது துரோணரைக் கொல்லும் நிலைக்குத் தள்ளப்படும் தருமனும்). எல்லாம் கெட்டு, சநாதனம் வீழ்ந்து கிடக்கும் கலியுகம் என்று முடியும். பிரளயம் உண்டாகி பூலோகம் அழியும். மீண்டும் முதல் யுகம்.
கலியுகத்தில் எல்லாம் கெட்டது என்றால் சநாதன ‘தர்மம்’ அழிந்தது என்று பொருள். சநாதன ‘தர்மம்’ அழிந்தது என்றால். பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும்விட ‘உயர்ந்தவர்கள்’ என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள் என்று அர்த்தம். புராணக்கதைப்படி அறியப்பட்ட இந்திய வரலாறு முழுவதுமே கலியுகம்தான். நாம் கலியுகத்தின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் (இன்னொரு சுனாமி நிச்சயம் உண்டு!).
புராணக்கதைப்படி கலியுகத்தில் சநாதன ‘தர்மம்’ வீழ்ந்து கிடக்கும் என்பது மட்டுமல்ல, கலியுகத்தின் இறுதியில் பார்ப்பனர்களேகூட அந்தத் ‘தர்மத்தை’ சரிவர பின்பற்றிக்கொண்டிருக்க மாட்டார்கள். “ஈமக்கிரியைச் சடங்குகளைக்கூட இந்தக் காலத்தில் சரிவர செய்யமுடியவில்லை. அதனால் என் பிள்ளைகளிடம் எனக்கு அதையெல்லாம் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் … இன்னும் கொஞ்ச காலத்தில் புரோகிதர்களே இல்லாமல் போய்விடுவார்கள் போலிருக்கிறது … கமலஃஆசன் மாட்டுக்கறி தின்று திராவிடக் கருத்தியல் பேசும் பிராமணர்,” என்றெல்லாம் அசோகமித்திரன் சொல்வது வெறும் புலம்பல் அல்ல, புராணக்கதை பாடும் சநாதனத்தின் மனசாட்சி (கலி முத்திடுத்து! கலி முத்திடுத்து!).
அந்த ‘மனச்சாட்சியின் குரலால்’தான் பெரியவாளிடம் ஆசியைப் பெற, உண்ணா நோன்பிருந்து அவரது தாயார் காத்துக்கிடந்தபோதும், கணவனையிழந்த அவர், தலையை மழிக்காமல் இருந்ததால் அவரின் ஆசியைப் பெறமுடியாமல் போனது என்று கூசாமல் சொல்ல முடியும். மாட்டுக்கறி தின்னும் பிராமணர் என்று வசைபாடமுடியும். இந்தப் பேட்டியை எடுத்து வெளியிட்டு பார்ப்பனர்களும் தலித்துகளுடைய நிலைமையில்தான் இருக்கிறார்கள் என்று எழுதும் துணிச்சலும் அந்த மனசாட்சியின் குரலுக்குத்தான் வரமுடியும்.
ஆக, இப்படிக் கலி முற்றியதற்கும், பார்ப்பனர்கள் ‘சீரழிந்ததற்கும்’ ஒட்டுமொத்த காரணம், திராவிட இயக்கத்தைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்! ஆகையால், இதில் காழ்ப்பு ஒன்றும் இல்லை நண்பர்களே! தனிப்பட்ட பகை யாருக்கும் யார் மீதும் இல்லை. இது முழுக்க, அதாவது, திராவிட இயக்கத்தால் பார்ப்பனர்கள் ‘துன்புறுத்தப்பட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க புராணக்கதை சொல்லும் பார்ப்பன மரபிலிருந்து எழும் ‘இயல்பான’ ஒன்றுதான்.
இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், அசோகமித்திரன் போன்ற சநாதனிகள் சொல்வதைப் போல, ‘திராவிட இயக்க (அதாவது தி.மு.க.) ஆட்சியில்’ பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு புடலங்காயும் அரியப்படவில்லை என்பதுதான். ஆட்சியைப் பிடிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே அது பார்ப்பன எதிர்ப்பை மெல்ல மெல்ல கைகழுவியது என்பதே வரலாறு. பேச்சளவிலும்கூட அதிலிருந்து துண்டித்துக்கொண்டது. தி.மு.க – வே கைகழுவிய பார்ப்பன எதிர்ப்பு அரசியலை அதன் மீது சுமத்தி, தாமாகவே அஞ்சி நடுங்கிப் பயந்தவர்கள் பார்ப்பன சநாதனிகள். ‘சூத்திராள்’ ஆட்சியில் வாழப் பொறுக்காமல், தாமாகவே ‘அஸ்தினாபுரத்திற்கு’ மாற்றல் வாங்கிப் பறந்தவர்கள். அதற்குப் பிறகு, ‘பூலோக சொர்க்கமாம்’ யு.எஸ். – சிற்கு.
‘தேவன் தமக்கு உடன்படிக்கை செய்துகொடுத்த பிரதேசத்தைத்’ தேடித் தேடி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அலைந்தவர்கள் யூதர்கள். ஒருவகையில் அசோகமித்திரன் பார்ப்பனர்களை யூதர்களோடு ஒப்பிட்டிருப்பதும் சரிதான். அவர்களும் புரோகிதத் தொழிலுக்கே மிகுந்த மரியாதை கொடுத்தவர்கள். உடல் உழைப்பை வெறுத்து ஒதுக்கியவர்கள். வட்டிக்கு விட்டே ஐரோப்பாவின் அரசுகளை தமது அடகுப் பெட்டிகளில் அடைத்து வைத்திருந்தவர்கள். அந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டே, ஜெருசலேமைச் சுற்றியிருந்த நிலங்களை வாங்கி, இஸ்ரேல் தேசத்தை உருவாக்கியவர்கள். உலக வல்லரசான அமெரிக்காவின் பொருளாதாரத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவர்கள். என்னதான் இஸ்ரேல் என்று அவர்களுக்கு ஒரு நாடு இருந்தாலும் அவர்களுக்கும் பூலோக சொர்க்கம் அமெரிக்காதான்.
அவர்களுக்கு ஒரு கடவுள் இருந்தார். இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே பழுத்த பழமாகிக் கிடந்தவர் அவர். நீண்ட வெண்தாடி மடிமீது புரண்டிருந்த அவரது பெயர் யஃஓவா. சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவர் மரணமடைந்துவிட்ட செய்தியை உலகுக்கு அறிவித்தான் நீட்ஷே என்ற பெரும் தத்துவஞானி.
ஆனால், அவரது ஆவி இன்னமும் இப்புவியைவிட்டு நீங்கியபாடில்லையாம். உடன்படிக்கை செய்துகொண்ட தமது செல்லப் பிள்ளைகளான இஸ்ரவேல் தேசத்தாருக்கு, கடைசியாக ஒன்றே ஒன்றை ஞாபகப்படுத்திவிட்டுச் செல்லவேண்டும் என்ற நினைப்பிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. பேய்க்கதை என்று வேறு தலைப்பு வைத்துவிட்டேன். அதனால், கட்டாயம் இதைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது. தயவு செய்து, அசோகமித்திரனோ அல்லது அவரது சகபாடி சுந்தர ராமசாமியோ (கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் உயிரோடிருந்தார்) அடுத்தமுறை யு.எஸ். செல்லும்போது, உமது உடன்பிறவாச் சோதரரான இஸ்ரவேல் தேசத்தாரிடம் இந்தச் செய்தியை சொல்லிவிடுங்கள்:
“அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அனுப்புவார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்க மாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.
இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
அவர்கள் தனித்துத் திரிகிற கழுதையைப்போல் அசீரியண்டைக்குப் போனார்கள்; …. (ஓசியா – 8: 7,8,9).
பின்குறிப்பாக: திருவாளர் அசோக்கின் புகழ் பெற்ற நாவல் “18 – ஆம் அட்சக் கோடு”. அவரது இந்தப் பேட்டிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை அதை எடுத்து வாசித்துப் பார்த்தேன். சுவாரசியமான விஷயங்கள் கவனத்திற்கு வந்தன. அதன் கதாநாயகன் சந்திரசேகரனுக்கு, எதிர்ப்படும் மற்றவர்கள் எல்லோரும் – எருமை மாடு முதல் ஆங்கிலோ இந்தியர்கள், முஸ்லீம்கள், பார்ப்பனரல்லாத தமிழர்கள், தெலுங்கர்கள் அத்தனை பேரும் – ஏதாவது ஒருவகையில் அவனுக்கு துன்பத்தைத் தருபவர்களாகவே இருக்கிறார்கள், ஒரேயொரு நபரைத் தவிர. அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ரங்கராமனுஜம் (ஐயங்காராக இருக்கலாம்).
அடுத்து, அவன் ‘சைட்’ அடிக்கும் பெண்கள் ஒருவர்கூட அவனை சட்டை செய்வதில்லை. அவனுடைய அக்காளின் தோழி நாகரத்தினம் உட்பட (அனிதா ரத்தினத்திற்கு 1970 -ளிலேயே தமிழ்நாடு முழுக்கத் தேடி அலசியும் தகுதியான ஒரு அவளாத்துப் பிள்ளைகூட கிடைக்கவில்லையாம். அப்போதே எல்லோரும் யு.எஸ். போய்விட்டிருந்தார்களாம்).
அடுத்த முக்கியமான விஷயம். ஒட்டுமொத்த நாவலில் தலித்துகள் ஒரேயொரு இடத்தில் வருகிறார்கள். அதுவும்கூட அவன் ‘சைட்’ அடிக்கும் ஒரு பெண் சம்பந்தமான இடத்தில். அந்தச் சித்தரிப்பை அப்படியே தருகிறேன்:
“சந்திரசேகரன் குசினி பறச்சேரியையும் கடந்து சென்றான். அவன் சிறுவனாக இருந்தது முதலில் அப்பெயரைக் கேட்டபோது எதோ வசவு போலத்தான் தோன்றிற்று. ஆனால் அங்கே வசிப்பவர்களே அந்த இடத்தை அப்படித்தான் குறிப்பிட்டார்கள். ஒரே தெலுங்காகவும் ஓரளவுக்கு உருதுவாகவும் உள்ள அந்த ஊரில் அந்த இடம் மட்டும் முழுக்கத் தமிழ். ஆனால் என்ன தமிழ்? அந்தத் தமிழ் சந்திரசேகரனுக்குச் சரியாக புரிந்ததில்லை. அந்தச் சேரியில் ஆண்களில் வயது வந்தவர்கள் அனைவரும் தங்களைப் பட்லர்கள் என்று கூறிக் கொண்டார்கள்.ஓரிருவர் கார் டிரைவர்கள். ஆண்கள் அதிகம் பேசிக்கொள்ளமாட்டார்கள். ஐந்தாறு பேராகச் சேர்ந்துகொண்டு சீட்டாட்டம் ஆடினால்கூட மிகக் குறைந்த சப்தம்தான் அவர்களிடமிருந்து எழும். அவர்கள் வேலை செய்து வந்த வெள்ளைக்காரர்கள் வீடுகளின் கட்டுப்பாடு அப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், ஆனால் பெண்கள் அவ்வளக்கவ்வளவு தொண்டையை உபயோகப்படுத்துவார்கள்.
அவர்கள் சண்டையை ஓர் உச்சக் கட்டத்தில் ஆனால் கைகலப்பில்லாமல் மணிக்கணக்கில் நடத்துவார்கள். இவ்வளவு சண்டைக்கும் அருகிலேயே ஆண்கள் பீடி குடித்தபடி அமர்ந்திருப்பார்கள். அப்படியே தூங்கியும் விடுவார்கள். அவர்கள் விழித்து எழுந்திருக்கும்போது சண்டை ஓயாமல் தொடர்ந்து கொண்டிருந்தால் ஒன்றுக்கு இரண்டாக கொட்டாவி விடுவார்கள். ஆனால் அந்த இடத்தில்தான் சேறும் சக்தியும் வெங்காயத் தோலும், கோழி எலும்புகளும், நாயும், பன்றியும், இறைச்சி சுடும் நாற்றமும் சண்டையும் காது கொடுத்துக் கேட்க முடியாத வசைச் சொற்களும் சாபங்களும் நிறைந்திருக்கும். அந்தச் சேரியில்கூட சந்திரசேகரனின் மனதிற்கு உபாதையளிக்கும் மூன்று நான்கு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒருத்தியின் பெயர் புஷ்பா என்றுகூட அவன் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான்.” (பக்: 86 – 87).
70 – களில் எழுதப்பட்ட நாவலில் இப்படியொரு சித்தரிப்பு. என்ன செய்வது! ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் ‘எலக்கிய’ ரசனை இல்லாதவர்கள் என்பார்கள். அப்படியே, ‘எலக்கிய’ ரசனைப்படியே பார்த்தாலும்கூட அசோகமித்திரன், சுந்தர ராமசாமி வகையறாக்களின் ‘எலக்கியங்களில்’ என்ன இருக்கிறது? எதுக்களிப்பு (எதிர்க் கழிப்பு) மட்டும்தான். தானல்லாத மற்றவர்கள் முகத்திலறைந்தார்போல முழு நிர்வாணத்தில் எதிர்ப்படும்போதெல்லாம் இவர்களுக்கு வருவதெல்லாம் எதிர்க்கழிப்பு மட்டும்தான். அவசர அவசரமாக விழுங்கிய நவீனத்துவம் இவர்களுடைய இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் சநாதனத்தோடு கலக்க முடியாமல் போவதால் வரும் எதுக்களிப்பு அது.
அசோகமித்திரன் சிலாகித்த அமெரிக்க நாவலாசிரியர்களில் ஒருவர் வில்லியம் ஃபாக்னர். நவீனத்துவ நாவலின் உச்சங்களைத் தந்தவர்களில் அவரும் ஒருவர். அவருடைய பல நாவல்களில், பல கதாபாத்திரங்கள் எதுக்களிக்கும், வாந்தி எடுக்கும். அமெரிக்கக் கறுப்பின மக்கள் படும் அவலங்களைக் காணச் சகியாமல், வெள்ளை இன – நிறவெறி அதிகார அமைவுகளிலிருந்து விலகி ஓடி அலையும் கதாபாத்திரங்கள் வாந்தி எடுத்துவிடும். வாந்தி எடுத்துவிடுவதை, இனவெறி அதிகாரத்தை செரித்துக்கொள்ள முடியாததன் உருவகமாக (சரியாகச் சொல்வதென்றால் – உருமாற்றமாக) அவர் தமது நாவல்களில் கையாண்டிருக்கிறார்.
எதுக்களித்து வருவதை மீண்டும் விழுங்கி, வலிந்து ஜீரணிக்க முயல்வது, அதிகார அமைவுகளின் அங்கமாகிப் போவதன் குறியீடு (வாதாபி ஜீரனோபவ!). அசோகமித்திரனின் மேற்சொன்ன நாவலின் இறுதியில், சந்திரசேகரனுக்கும் எதுக்களித்து வருகிறது. ஒரு கலவரக் கும்பலிடமிருந்து தப்பி ஓடும் அவன், ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறான். அங்கு ஏற்கனவே ஒரு முஸ்லீம் குடும்பம் ஒளிந்திருக்கிறது. இவனைப் பார்த்ததுமே இன்னும் கலவரப்பட்டுப் போகிறது. கண் மூடித் திறக்கும் நேரத்தில், 15 – 16 வயதொத்த ஒரு இளம்பெண், தன் குடும்பத்தை விட்டுவிடுமாறு கெஞ்சிக்கொண்டே அவன் முன்னே வருகிறாள். நிர்வாணப்படுத்திக் கொள்கிறாள்.
பெண்களின் ஸ்பரிசத்தையே உணர்ந்திருக்காத சந்திரசேகரனைப் பாவம், இந்த திடீர் நிர்வாணம் சிதறடித்துவிடுகிறது. அவன் ‘ஓடுகிறான், ஓடுகிறான், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுகிறான்’. “இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தைகூட எவ்வளவு இழிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது?” என்று நினைத்துக் கொண்டே ஓடுகிறான். அதற்கு அவனும் ஒரு காரணமாகிவிட்ட குற்ற உணர்ச்சியோடும், அந்தக் கறையை என்று, எப்படி அழித்துக்கொள்வது என்றும் யோசித்துக்கொண்டே ஓடுகிறான். ஆனால் பாருங்கள், சந்திரசேகரன் எதுக்களித்து வந்த ‘கசப்புத் திறளை’, முதன்முதலாக நிர்வாணத்தைப் பார்த்த அதிர்ச்சியில் விழுங்கிவிட்டான். அந்த நினைவே இல்லாமல் அவன் ஓடிக்கொண்டே இருந்தான். பொழுதும் விடிந்தது.
கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஓடிவிட்டது. சந்திரசேகரன் எடுக்காமல் விட்ட வாந்தியை, முப்பது வருடங்களாக அடக்கி வைத்திருந்த எதிர்க்கழிப்பை, இப்போது கக்கியிருக்கிறார் அசோகமித்திரன் !சுரணையுள்ளவர்களுக்கு குடலைப் பிடுங்குகிறதா இல்லையா?
புதிய காற்று மே, ஜூன் 2005.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...