ஏகம் அனேகம்

எனைச் சிறுகச் சிறுகக்
கொன்றவர் அனேகர்

பேச்சும் மூச்சும்
ஆட்டமும் ஆர்ப்பரிப்பும்
ஆசையும் ஆனந்தமும்
அன்பும் அரவணைப்பும்
சிரிப்பும் சினேகிதமும்
ஏக்கமும் இரக்கமும்

எதுவும்

ஏற்க
கோர்க்க
சேர்க்க
சிரிக்க
ஏலாதவனாய்

எனைச் சிறுகச் சிறுகக்
கொன்றவர் அனேகர்.

நான் மடியவில்லை

அழுகவில்லை
புழுவாகவில்லை
பூச்சியாகவில்லை
வித்தாகவில்லை
விதையாகவில்லை
செடியாகவில்லை
மரமாகவில்லை
கிளைக்கவில்லை
பூக்கவில்லை
காய்க்கவில்லை
கனியாகவுமில்லை

கல்லாகவில்லை
மண்ணாகவில்லை
விண்ணாகவில்லை
காற்றாகவில்லை
கடலாகவில்லை
எந்தச் சாக்கடையாகவும்
இல்லை

நான் மடியவும் இல்லை
உயிர்த்தெழவும் இல்லை

எனைச் சிறுகச் சிறுகக்
கொன்றவர் அனேகர்.

 

Advertisements
கவிதைகள், Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

நல்ல வாயும் நாற வாயும்

நல்ல வார்த்தைகள் தேய்ந்துபோன காலத்தில்
கொடும் தேளாய் கொட்டும்
கெட்ட வார்த்தைகள்
வாழ்வூட்டட்டும்.

குத்துக்கு குடை
குடைக்கு கிடை
கிடைக்கு செங்குத்து
செங்குத்துக்கு இடைவெட்டு
இடைவெட்டுக்கு கடைக்கட்டு
கட்டுக்கு கழிசடை
கழிசடைக்கு பத்தினி
பத்தினிக்கு பரத்தை
பரத்தைக்கு பரப்பிரம்மத்தோடு படுத்தல்
பரப்பிரம்மம் லிங்கமயம்
லிங்கம் ஆலிங்கனம்
ஆ எருது
எருது விழுது
விழுது எழுவது
எழுவது திரிவது
திரிவது தொய்வது
தொய்வது காய்வது
காய்வது கனிவது
கனிவது நல்லது
நல்லது நாறுவது / மணப்பது
நாறுவது நாலு வார்த்தை பேசும்.

நல்ல வார்த்தைகள் தேய்ந்துபோன காலத்தில்
கொடும் தேளாய் கொட்டுவது
காய்வது
மிக நல்லது.

கவிதை, கவிதைகள், Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

முட்டைக் கண்ணன்

முட்டைக் கண்ணன்

மொட்ட தலையன்

கட்டிப் புரண்டு

காத கடிச்சு

கடுக்கண் திருடி

கம்பி வளச்சு

கடய சுருட்டி

தாவி ஓடி

தடுக்கி விழுந்து

தட்டித் தடவி

எழுந்து நடந்து

கண்ணு கசக்கி

தூசு தட்டி

தொடய குடஞ்சு

தொலஞ்சு போனான்

Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

இந்தா பிடி சாபம்!

கள்ளக் கருவிழிகளிலே

களங்கம் காணத் தவறி

கள்ளங்கபடமற்றவனாய்க் கனிந்திருந்தவனை

உமது உள்ளச் சேறும்

உதட்டு இனிப்பும்

பிரித்தறியா பொல்லாப்பற்றவனை

கசக்கிக் கள்குடித்த கயவர்களே!

இந்தா பிடி சாபம்!

துர்க்கரே!

துன்மார்க்கரே!

துய்ப்பில் தொய்பவரே!

தூ!

இந்தா பிடி சாபம்!

தூளாகித் துகளாகி

தூற்றும் துர்ச்சாதனராகி

தேற்றத் தகைமையின்றி

தோள் குன்றி

தோல் சீழ்

துர்நாற்றம் தொற்றி

தூற்றும் சாவு

தொடுவீர்!

Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

வேசை மொழி

ஆன்மாவை விற்றவன் அறம்பாடுதல் அழகில்லை

விற்றவன் விதைப்பதில்லை

வித்தகன் கற்பதில்லை

வீரனும் விரைப்பதில்லை

விரைப்பில் விசையில்லை  

வேசை மொழி வேம்பில்லை

கசடில் கனிவில்லை

கழிவில் உரமில்லை

ஆன்மாவை விற்றவன்

அறம்பாடுதல் அறமில்லை

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கசாப்புக் கடை

கோடரி கொண்டு கபாலம் பிளந்து

என்னை அவர்கள் கொல்லவில்லை.

புருவங்களுக்கிடையில் குண்டு துளைத்தும்

நான் இறக்கவில்லை.

வாள் கொண்டு கழுத்தையறுத்தும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

இதயத்தை ஊடுருவித் துளைத்தெடுத்த

வெடிச் சிதறலாலும் நான் இறக்கவில்லை.

காரக்கிரகமொன்றில் அடைத்து விஷவாயு செலுத்தியும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

குறுவாளால் குறி அறுபட்டும்

நான் இறக்கவில்லை.

கால்களுக்கிடையில் சூலாயுதம் திணித்தும்

அவர்கள் என்னைக் கொல்லவில்லை.

பலகை ஒன்றின் மீது இலகுவாக

நெஞ்சு நிமிர்த்தி நின்றிருந்தேன்.

கரங்கள் பின்னே கட்டியிருக்க

முகமிழந்து

விழியகலத் திறந்திருக்க

கனத்த சுருக்கு

கழுத்தை இறுக்க

பலகை இழுபட

முண்டம் துடிதுடிக்க

ஐந்து நிமிடம் ஐம்பத்தைந்து நொடிகள்.

கவிதைகள், Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

”வாசிப்பின் நிமித்தங்கள்” – சில நினைவுக் குறிப்புகள் (3)

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ பாட்டாளிவர்க்க உணர்வில் புடம்போட்டுக் கொள்ள எடுத்த முயற்சிகள் அத்தனையும் என்னளவில் தோல்வியிலேயே முடிந்தன. குட்டி முதலாளியப் பின்னணியில் இருந்து வந்த குட்டி முதலாளியாகவே வாழச் சபிக்கப்பட்டிருந்தேனோ என்னவோ, அறிவுஜீவி என்ற அடைமொழியும் அதனுடன் விரைவிலேயே என்னை மீறி சேர்ந்துகொண்டது. அதைச் சூட்டியதும் ஒரு காம்ரேடுதான்.

அறிவுஜீவிப் பட்டம் கிடைத்த வரலாறு வேடிக்கையானது என்பதால் பதிவு செய்யப்பட வேண்டியது. அறிவுஜீவிக் கூட்டத்தின் மீதான வெறுப்பின் உச்சம் தலைக்கேறியிருக்கும் இந்த சந்தர்ப்பம் அதற்குப் பொருத்தமாகவும் இருக்கும்.

90 களின் துவக்க ஆண்டுகளில் தீவிர வாசிப்பில் மூழ்கியிருந்ததில், பகல் பொழுது உறக்கம், இரவு முழுக்க பசித்த வாசிப்பு என்பதாகக் கழிந்தவை.  இதன் பக்கவிளைவாக, கடுமையான டஸ்ட் அலர்ஜி. மூச்சிலே பிரச்சினையில்லை. கண்களுக்கு.

லேசாகக் கூசும் வெளிச்சமும் பிரச்சினையானது. கண்களில் ஒருவிதமான சிறு பூச்சி மொய்ப்பு தொந்தரவானது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் “ப்ளெயின் க்ளாஸ்” அணிய வேண்டியதாயிற்று. அந்த மூக்குக் கண்ணாடிதான் அறிவுஜீவிப் பட்டத்தை ஒரு தோழரிடம் இருந்து அன்பளிப்பாகக் கிடைக்க வழிகோலியதே தவிர வாசிப்பு நிமித்தமாக எழுந்த வாதப்பிரதிவாதங்கள் அன்று. அவர் அந்தப் பட்டத்தைச் சூட்டிய பிறகு தோழர்கள் பக்கம் தலைவைத்துப் படுப்பதையே நிறுத்திக் கொண்டேன்.

அந்தக் காலகட்டத்திலும் சரி, இன்றைய நிலையிலும் சரி, வாசிப்பின் நிமித்தமாக கருத்தமைவுகளைப் பகிர்ந்து கொண்டு அளவளாவும் நெருங்கிய நட்புகள் இன்றியே கழிக்க சபிக்கப்பட்டவன் போலும். இடையில் சில ஆண்டுகள் (96 – 99) ராஜன் குறையின் நட்பு அத்தகைய அறிவார்த்த பகிர்தல்களுடன் கூடிய ஒரு சிறு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

அப்போது கிடைத்த நட்புகளே ரோசா வசந்த், சஃபி, வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திருச்சி கண்ணன் போன்றோர். அ. மார்க்சின் தொடர்பும் நெருங்கிய உறவும் உருவானதும் அதே காலகட்டத்திலேதான். இவர்களில் அ. மார்க்சுடனும் ராஜனுடனுமான உறவு நெருக்கமே அதிகம்.

கட்சியில் பணியாற்றிய காலம் என்னை உருவாக்கிய வடிவமைத்த ஒரு பொற்காலம். அதே போன்று, அதற்கு இணையான ஒரு பொற்காலம் அந்த “நிறப்பிரிகை” நட்பு வட்டம். இரு சந்தர்ப்பங்களிலும் வயதிலும் அனுபவத்திலும் மிக இளையவனாகவும், முதிர்ச்சியற்றவனாகவும் அனைத்தையும் வியப்போடும் உற்சாகத்தோடும் அனுபவித்த பேறு எனக்கு வாய்த்தது.

ராஜனுடனான உறவு ஒரு மூத்த சகோதரனுக்கு ஒப்பானது. ஒவ்வாத ஒரு மேட்டிமைத்தனம் கொண்டிருந்தாலும் பழகுவதில் அவரிடம் கிடைத்த சமத்துவம் முற்றிலும் புதிதான ஒன்றாக இருந்தது. சோம்பலை நெருங்கிய அவரது நிதானம் ஆச்சரியமும் பல சமயங்களில் எரிச்சலும் ஊட்டுவதாகவும் இருந்தது.

அ. மார்க்சுடனான உறவு நெருக்கம் தந்தை – மகன் என்ற அளவிற்கு பரிமாணம் பெற்றது. ஆனால், அப்போதும் அவரோடு அறிவார்த்த உரையாடல் ஒருபோதும் சாத்தியப்பட்டதில்லை.

அத்தகைய தீர்க்கமான பார்வை நான் பழகிய அளவில் அன்றும் அவருக்கு இருக்கவில்லை. ஒருவித மோசமான அறிவு எதிர்ப்பு மனநிலை, தேடித் தேடி வாசிக்கும் பழக்கமின்மை அவரிடம் ஆழ உறைந்திருந்தது. அதற்கு அவர் செய்துகொண்ட சமாதானம் “பார்ப்பன அறிவுஜீவிகளின் மேட்டிமைத்தனம்” என்பதாக இருந்தது. தமிழ்நாட்டின் அறிவுஜீவிக் கலகக் குரலாக அவர் உருப்பெற்றதற்கு இந்த “பார்ப்பனிய மேட்டிமைத்தனம்” தந்த சுயநியாயப்பாடு என்ற மோசமான விபத்தே தவிர வேறில்லை.

 

வாசிப்பின் நிமித்தங்கள் – 1 

வாசிப்பின் நிமித்தங்கள் – 2 

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »
%d bloggers like this: