ஆயிரம் லைக்குகள் வாங்கிய அபூர்வ விலாசினியும் மாடு மேய்த்துப் படித்தவர் கிரிமினலாக்கப்பட்ட கதையும் – 1

இக்கட்டுரையை வெளியிட்ட மின்னம்பலம் இதழுக்கு நன்றி. மின்னம்பலம் இதழில் வெளியானபோது தலைப்பில் உள்ள “அபூர்வ” என்பதை மட்டும் நீக்கியிருந்தார்கள். முதல் பகுதி மட்டும் பத்திரிகையாளர், நண்பர் ராதிகா சுதாகருடன் கலந்து ஆலோசித்து எழுதப்பட்டது. பிற பகுதிகளில் குற்றம் குறைகள் ஏதும் இருப்பின் அவற்றுக்கு நான் மட்டுமே பொறுப்பு. தட்டச்சுப் பிழைகளை நீக்கியும், சில கருதுகோள்களின் மூல ஆசிரியர்கள் மற்றும் நூல்கள் குறித்த விவரங்களையும் இணைத்திருப்பதற்கு மேலாக வேறு திருத்தங்கள் ஏதும் செய்யாமல் இங்கு பதிவேற்றுகிறேன்.

https://minnambalam.com/k/1470441637

ஓட்டுனரின் நேர்காணல்: https://soundcloud.com/valar-mathi-1/driver-interview

கட்டையான சற்றே குள்ளமான உடல்வாகு. சிரித்தக் களையான முகம். நல்ல கருப்பு. பணிவு தொனிக்கும் உடல் மொழி. கிரிமினலாகவும் பொறுக்கியாகவும் முகத்தைப் படுபயங்கரமாக வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் சித்தரிக்கப்பட்ட அந்த ஓலா டாக்சி ட்ரைவரைச் சந்திக்கச் சென்றிருந்த எங்களைச் சிறு புன்னகையோடு தலை அசைத்து வரவேற்றார் 28 வயதே ஆன அந்த இளைஞர்.

டாக்சி ஓனர் திரு. காஜா செரிஃப் எங்களை வரவேற்று தேநீர் பரிமாறினார். அந்த இளைஞருக்கு தேநீர் அருந்தும் பழக்கமும் இல்லை. புகைப் பழக்கமோ வேறு எந்தப் பழக்கமோ இல்லாதவர் என்பதை ஓனரும் உறுதிப்படுத்தினார். அவருக்கு இருக்கும் ஒரே எண்ணம் தன் குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்பது மட்டும்தான்.

கடந்த மாதம் முகநூலில் விலாசினி என்ற பதிப்பாளர், தன்னை ஒரு ஓலா டாக்சி டிரைவர் ”கழுத்தை அறுத்துவிடுவேன்” என்று மிரட்டியதாக எழுதியது பரபரப்பை உருவாக்கியது. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றும் விலாசினியின் நண்பர் உடனடியாக அவரை பேட்டியெடுத்து செய்தி வெளியிட்டதும், ஆங்கில நாளிதழான “த இந்து”வில் இச்செய்தி வெளியானதும் “கொலை மிரட்டல்” குற்றச்சாட்டு பூதாகரமானது.

ஊடகங்களில் இச்செய்தி வெளியானதால் உருவான அழுத்தத்தைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, 14.07.16 அன்று டிரைவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிணையில் எடுக்கச் சரியான வழக்குரைஞரைக்கூட அமர்த்திக் கொள்ளத் தெரியாத நிலையில், 16 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, 30.07.16 அன்று பிணையில் விடுதலையாகி வந்த அந்த இளைஞரை 31.07.16 அன்று நாங்கள் சந்தித்து பேட்டி கண்டோம். அதற்கு முன்பாக, 25.07.16 அன்று டாக்சியின் ஓனர் காஜா செரீஃபை தாம்பரத்திற்கு அடுத்துள்ள முடிச்சூரில் அவரது இல்லத்திலும், 26.07.16 அன்று ஆலந்தூர் கோர்ட்டில் டிரைவரின் தாயாரையும் தம்பியையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம்.

பொறுக்கி என்றும் கிரிமினல் என்றும் பதிப்பாளர் விலாசினி தனது முகநூல் பதிவுகளில் கடுமையாகச் சாடியிருக்கும் அந்த இளைஞரின் பின்னணியை முதலில் விவரித்துவிடுகிறோம்.

வட மாவட்டத்துச் சிறிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவரான அந்த இளைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்றைச் சேர்ந்தவர். 5 கிமீ தொலைவில் இருந்த பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது, தினமும் குடும்பத்திற்குச் சொந்தமான மாட்டை 2 ½ கிமீ தள்ளியிருந்த அவர்களுக்குச் சொந்தமான வயல் வரை ஓட்டிச்செல்வதும், மாலை திரும்புகையில் அதை வீடுவரை ஓட்டிவருவதும் அவரது அன்றாடக் கடமைகளில் ஒன்று. பெற்றோருக்குத் துணையாக வயல் வேலைகளும் செய்து அதிலும் தேர்ச்சி பெற்றவர். அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே. சித்தப்பாவிற்குச் சொந்தமான இன்னொரு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து இவர்கள் குடும்பத்தினரே விவசாயம் செய்துவந்திருக்கிறார்கள். உடன் பிறந்த தம்பி ஒருவர் இருக்கிறார். ஒரு வருடத்திற்கு முன்பு தகப்பனார்  காலமாகிவிட்டதால், நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு, தாயாரும் தம்பியும் இவரோடு சென்னையில் வசிக்க வந்துவிட்டார்கள்.

பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் பி. எஸ்ஸி கெமிஸ்ட்ரியில் சேர்ந்திருக்கிறார். கல்லூரியின் கட்டிடங்களைப் பார்த்து பிரம்மித்துப்போன தந்தையார், எவ்வளவு கஷ்டப்பட்டாவது பணம் கட்டி அக்கல்லூரியிலேயே படிக்க வைப்பதாக ஆசையோடு சொல்லியிருக்கிறார். ஆனால், முதல் வருடத்திற்குப் பிறகு அவரால் பணம் கட்ட முடியவில்லை. அதனால், இரண்டாம் வருடத்தில் இருந்தே, இவர் பகுதி நேரமாக வேலை செய்து படிப்பைத் தொடரவேண்டிய நிலை. ஒன்றிரண்டு கம்பெனிகளில் வேலை செய்தவர், ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டு, இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டி பணம் சம்பாதித்திருக்கிறார். இது போதாதென்று கல்லூரியில் என். சி. சி யில் சேர்ந்து அதிலும் சிரத்தையோடு செயல்பட்டிருக்கிறார். இந்தச் சிரமங்களால், அரியர்ஸ் விழுந்து படிப்பை முடிக்க இயலாமல் போயிருக்கிறது.

ஆனாலும், தளர்ந்துவிடாமல், நியூ காலேஜில் பி. ஏ ஆங்கிலப் பாடத்தில் சேர்ந்து பட்டம் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்து சிறு கம்பெனிகள் ஒன்றிரண்டில் வேலை பார்த்த பிறகு, ஷேர் ஆட்டோ டிரைவராக ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்த்திருக்கிறார். கடைசியாக, ஜூலை மாதத் தொடக்கத்தில், நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில், திரு. காஜா ஷெரீஃபிடம் டிரைவராக சேர்ந்திருக்கிறார்.

இவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, ஊருக்குத் திரும்பிப் போய்விட வேண்டும் என்பதுதான் இவரது தாயாரின் ஆசை. தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கனவுகளும் இந்த இளைஞருக்கும் இல்லை.

படிக்கும் காலத்திலேயே வேலையும் பார்த்து, அந்தப் பணத்திலேயே படிப்பையும் முடித்து, தம்பியையும் படிக்கவைத்து, தன் குடும்ப முன்னேற்றம் ஒன்றில் மட்டுமே கண்ணும் கருத்துமாக, தானுண்டு தன் பிழைப்புண்டு என்று இருந்த இத்தகைய இளைஞரைத்தான் பதிப்பாளர் விலாசினி, பொறுக்கி என்றும் கிரிமினல் என்றும் தனது முகநூல் பதிவில் சாடியிருக்கிறார். பயங்கரக் கொலைகாரன் போலச் சித்தரித்திருக்கிறார். இரண்டுவார காலம் சிறைக்குப் போக காரணமாக இருந்திருக்கிறார்.

காரை பயங்கர வேகத்தில் ஓட்டியதாகவும், மெதுவாக ஓட்டச் சொன்னதற்குத் தன்னை வண்டியில் இருந்து இறக்கிவிட்டதாகவும், மரியாதை குறைவாக பேசியதாகவும், கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டியதாகவும் பதிப்பாளர் விலாசினி நடந்த சம்பவமாக விவரித்திருக்கிறார்.

நடந்த சம்பவமாக அந்த இளைஞர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க இதுவரை யாரும் முன்வரவில்லை. அவர் கூறுவதை முழுமையாக இந்த ஒலிப்பதிவில் கேட்கலாம்.

டிரைவரின் விவரிப்பில் முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:

முதலாவதாக, விலாசினி சொல்லியிருப்பதைப் போல, அவர் தனியாக வந்து காரில் ஏறவில்லை. டாக்சியை புக் செய்து கொடுத்தவர் அவர் திருமணம் செய்ய இருப்பவர். விலாசினியோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வெளியே வந்து, அவரைக் காரில் ஏற்றியிருக்கிறார். அவரிடம், காரின் எண்ணைக் குறித்துக்கொள்ளுமாறு விலாசினி இரண்டு முறை கூறியிருக்கிறார். காரில் ஏறிய சில நிமிடங்களிலேயே மொபைல் ஃபோனில் ஆங்கிலத்தில் யாருடனோ பேசத்தொடங்கி விட்டிருக்கிறார். சற்று கோபமாகவும் பேசியிருக்கிறார்.

ஐஐடி பாலத்தில் ஏறி இறங்கியபோது விலாசினி திடீரென்று அலறி இவ்வளவு வேகமாக போகாதே என்று சத்தம் போட்டிருக்கிறார். தான் வேறு காரைப் பிடித்துக் கொள்வதாக சொல்லி வண்டியை நிறுத்தச் சொல்லி மீட்டரையும் கட் செய்யச் சொல்லியிருக்கிறார். அதுவரை பயணம் செய்ததற்கான தொகை என்று டிரைவர் சொன்ன தொகையைத் தராமல் காரைவிட்டு இறங்கி டாக்சியை புக் செய்து கொடுத்தவரோடு மொபைலில் பேச ஆரம்பித்துவிடுகிறார். ஆட்டோ ஒன்று வர, அதை நிறுத்தி தொகை பேசி ஏறிவிட்டிருக்கிறார்.

அதன் பிறகே டாக்சி டிரைவர் விலாசினியிடம் சென்று பயணம் செய்ததற்கான தொகையை ஆட்டோ டிரைவருக்கு அருகில் நின்று கேட்டிருக்கிறார். கம்பெனியிடம் வாங்கிக் கொள்ளுமாறு விலாசினி கூறியதற்கு “நீங்கள் இந்தப் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நானும் என் குடும்பமும் ஒன்றும் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிடப் போவதில்லை” என்று சொல்லிவிட்டுத் தனது காரில் சென்று ஏறிவிட்டிருக்கிறார்.

அவருக்கு அடுத்த அழைப்பு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகில் இருந்து வர, அவ்விடத்தை நோக்கி டாக்சியை ஓட்டத் தொடங்கிவிடுகிறார். கவர்னர் மாளிகையைத் தாண்டும்போது விலாசினி பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவை ஓவர் டேக் செய்து வலது பக்கச் சாலையில் சென்றுவிடுகிறார். அவர் தன் வழியில், தனது அடுத்த சவாரியை எடுக்கப் போவதை, விலாசினி தன்னைப் பின் தொடர்ந்து வருவதாகக் கற்பனை செய்துகொள்கிறார்.

விலாசினியின் பயணம் கார் டிரைவருக்குப் பன்னிரண்டாவது சவாரி. அதற்குப் பிறகு 4 பேரை ஏற்றி இறக்கிவிட்டு நள்ளிரவு வீடு போய் சேர்கிறார்.

14.07.16 அன்று நந்தம்பாக்கம் S4 காவல் நிலையத்தில், அவருடைய தரப்பில் நடந்ததை எழுதிக் கொடுக்க சொன்னபோதும் டிரைவர் இதையேதான் எழுதிக் கொடுத்ததாக (நானும் என் குடும்பமும் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிட மாட்டோம் என்று) சொல்கிறார்.

டிரைவரின் எடுத்துரைப்பு அல்லது வெர்ஷன் இவ்வளவுதான்.  விலாசினியின் எடுத்துரைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.

இது கிடைப்பதற்கு முன்பாக, 26.07.16 அன்று ஆலந்தூர் கோர்ட்டில் அவரது தம்பியைச் சந்தித்து விவரங்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு முந்தைய நாள் (25.07.16) புழல் சிறையில் தனது அண்ணனைச் சந்தித்துப் பேசியபோது ”நானும் என் குடும்பமும் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிட மாட்டோம்” என்று மட்டுமே விலாசினியிடம் பேசியதாகச் சொன்னார் என்று எங்களிடம் கூறினார்.

ஆகையால், இது ஏதோ அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு வக்கீலோ அல்லது வேறு யாரோ சொல்லிக் கொடுத்து சொல்வது அல்ல. அவர்களுக்குக் கிடைத்த முதல் வக்கீல், காவல் நிலையத்தில் இருந்த ஒருவரால் பரிந்துரை செய்யப்பட்டவர். அந்த முதல் வக்கீல், இவர்களுக்கு அனுசரனையாக இல்லை. பிணையில் எடுப்பதற்கான படிவம் ஒன்றில் இவர்களுடைய தகப்பனாரின் பெயரைத் தவறாக எழுதி அதனால் பிணையில் எடுப்பது தள்ளிப்போகும் அளவிற்கு அசட்டையாக இருந்தவர். இரண்டாமவர், இவர்கள் கோர்ட்டில் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தாமாக முன்வந்து பிணையில் எடுக்க ஏற்பாடு செய்தவர். கிளை கோர்ட்டுகளில் பிணையில் எடுத்துக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் பல்லாயிரக்காண வக்கீல்களில் ஒருவர்.

பிறகு எங்கிருந்து, மாமல்லன் எழுதிய வெர்ஷன் (பொறுக்கி என்று விலாசினி திட்டியதால்தான் டிரைவர் அவர் கழுத்தை அறுத்துவிடுவதாகச் சொன்னது) முளைத்தது? அது கார் ஓனர் காஜா ஷெரீஃப் மாமல்லனிடம் சொன்னது. அவருக்கு இந்த வெர்ஷன் எங்கிருந்து வந்தது?

14.07.16 அன்று காவல் நிலையத்தில் டிரைவர் எழுதிக் கொடுத்த விளக்கத்தை, டிரைவர் ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துவிட்டதாக ஓனர் காஜா ஷெரீப்பிடம் போலீசார் சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை, விலாசினி முகநூலில் எழுதிய, “த இந்து”வில் வெளிவந்த “கழுத்தை அறுத்துவிடுவேன்” என்பதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்திருப்பதாக எடுத்துக் கொண்டுவிடுகிறார் ஓனர் காஜா ஷெரீஃப். அதோடு, “பொறுக்கி என்று திட்டியதால்” என்ற கண்ணும் மூக்கும் காதும் சேர்ந்துவிடுகிறது. விலாசினியின் வெர்ஷனுக்கு மறுப்பாக, மாமல்லன் எழுதிய வெர்ஷனாக இது வெளியாகிறது.

மூன்று வாரங்கள் கழித்து இப்போது, டிரைவரின் வெர்ஷன் வருகிறது.

”ரோஷமான்” திரைப்படத்தில் வருவதைப் போல, அதைப் போலி செய்த விருமாண்டியில் வருவதைப் போல மூன்று வேறு வேறு எடுத்துரைப்புகள்.

இந்த மூன்று எடுத்துரைப்புகளின் தாக்கம் என்னவாக இருந்தது/ இருக்கிறது? இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்குள்ள அறிவு, அதிகாரம், ஆணை உரிமை (knowledge, power, authority) எப்படி இயங்கியிருக்கின்றன? அவை எவற்றை உணர்த்துகின்றன?

வழக்கை நடத்தச் சரியான ஒரு வக்கீலை வைத்துக்கொள்ளக்கூடத் தெரியாத, தான் உண்டு தன் பிழைப்பு உண்டு என்று அன்றாடக்கூலி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞர் மீது, பல எழுத்தாளர்களுடைய நட்பும், ஊடகங்களில் பணிபுரிவர்களோடு தொடர்பும் கொண்டுள்ள, சமூகத்தில் “உயர்ந்த அந்தஸ்த்தில்” உள்ள ஒரு பதிப்பாளர், பெண்மணி ஒரு குற்றச்சாட்டை வைத்தவுடன் அந்த இளைஞர் பயங்கரக் குற்றவாளியாகவும் கிரிமினலாகவும் மாறிவிடுவது ஏன், எப்படி நிகழ்கிறது?

(தொடரும் …)

பகுதி – 2

பகுதி – 3

இறுதிப் பகுதி 

நல்ல வாயும் நாற வாயும்

நல்ல வார்த்தைகள் தேய்ந்துபோன காலத்தில்
கொடும் தேளாய் கொட்டும்
கெட்ட வார்த்தைகள்
வாழ்வூட்டட்டும்.

குத்துக்கு குடை
குடைக்கு கிடை
கிடைக்கு செங்குத்து
செங்குத்துக்கு இடைவெட்டு
இடைவெட்டுக்கு கடைக்கட்டு
கட்டுக்கு கழிசடை
கழிசடைக்கு பத்தினி
பத்தினிக்கு பரத்தை
பரத்தைக்கு பரப்பிரம்மத்தோடு படுத்தல்
பரப்பிரம்மம் லிங்கமயம்
லிங்கம் ஆலிங்கனம்
ஆ எருது
எருது விழுது
விழுது எழுவது
எழுவது திரிவது
திரிவது தொய்வது
தொய்வது காய்வது
காய்வது கனிவது
கனிவது நல்லது
நல்லது நாறுவது / மணப்பது
நாறுவது நாலு வார்த்தை பேசும்.

நல்ல வார்த்தைகள் தேய்ந்துபோன காலத்தில்
கொடும் தேளாய் கொட்டுவது
காய்வது
மிக நல்லது.

கவிதை, கவிதைகள், Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

செய்யும் தொழிலே நோயாக

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நெருக்கமாகப் பழகிய இலக்கிய நண்பரொருவர் அவர் எதிர்கொண்டிருந்த பிரச்சினையைப் பகிர்ந்தது நினைவில் தங்கியிருக்கிறது. பழகும் நண்பர்கள் ஒவ்வொருவரையும் பல நேரங்களில் தனது அடுத்த நாவலின் கதாபாத்திரங்களாகக் கற்பனை செய்து பார்ப்பது குற்றவுணர்ச்சியைத் தருவதாக இருக்கிறது என்பதுதான் அவர் எதிர்கொண்டிருந்த பிரச்சினை. இதை அவர் சொன்னபோது எனக்கு எழுந்த முதல் சங்கடம், என்னையும் அவரது நாவல் ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக எங்காவது சொருகிவிடுவாரோ என்பதுதான்.

 
யதார்த்தவாத நாவல் எழுதுவோர் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகளில் இது ஒன்று. சற்றே செறிவு கூடியதும் தாம் பழகிய பல நண்பர்கள், நபர்களின் பல குணாதிசயங்களை, குணாதிசயங்களில் சில கூறுகளைக் கலந்து, ஒரு நபரை மட்டும் அடையாளம் காட்டாத வகையில் கதாபாத்திரத்தை உருவாக்கும் செய்நேர்த்தியில் (craft) தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். ஆனால், அதையும் மீறி வாசகர்கள், ஒரு கதாபாத்திரம் தம்மை ஒத்திருப்பதாகக் கற்பிதம் செய்து கொள்வார்கள். அது யதார்த்தவாத இலக்கியத்தின் தலைவிதி.

 
யதார்த்தவாத இலக்கியத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவது இங்கு நோக்கமல்ல. ஒரு துறைக்குள் அல்லது தொழிலுக்குள் மூழ்கியிருப்பவர்கள் தம்மைச் சுற்றியிருக்கும் உலகை அத்தொழில் சார்ந்தே எந்நேரமும் அணுகும் ஒருவித நோய்க்கூறு (occupational servility) பற்றியே இங்கு பேச விழைவது.

 
ஒவ்வொரு தொழிலிலும் தொழில் சார்ந்த தொல்லைகள் (occupational hazard) உண்டு. தொழில் சார்ந்த நோய்கள் (occupational disease) உண்டு. பேராசிரியர்களாக இருப்பவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியோடு, அலுவலக கோப்புகளைத் துரத்திக் கொண்டிருப்பது ஒரு தொழில்சார் தொல்லை. பேருந்து ஓட்டுனர்களுக்கு பயணிகள் படிக்கட்டில் தொங்குவது தொழில்சார் தொல்லை. நடத்துனருக்கு நெரிசல் தொழில்சார் தொல்லை. ஆலைத் தொழிலாளிக்கு இயந்திரங்களின் பேரொலி தொழில்சார் தொல்லை.

 

தொழில்சார் தொல்லைகள் போக, தொழில்சார் நோய்கள் ஒரு தொகை உண்டு. பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நுரையீரல் நோய்கள் – முக்கியமாக ஆஸ்த்துமா. பேருந்து ஓட்டுனர்களுக்கு இதய நோய்கள். செவிலியர்களுக்கு நோய் தொற்று. ஐடி பணியாளர்களுக்கு எலும்புத் தேய்வு.

 
தொழில்சார் தொல்லைகளும், தொழில்சார் நோய்களும் குறித்த தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களின் வாழ்வை மட்டும்தான் பாழாக்குபவை. ஆனால், தொழில்சார் நோக்கை முற்ற முழுதான வாழ்க்கை பார்வையாக வரித்துக் கொள்ளும் நோய்கூறு, தொழில்சார் நோக்கிற்கு அடிமையாதல் (occupational servility), அடிமையானவரின் உலக நோக்கை குறுக்கி விடுவதோடு, ஆரோக்கியமான சமூக – அரசியல் – பண்பாட்டு நோக்குகள் உருவாவதற்கும் இடர்பாடாக அமைபவை.

 
இத்தகைய நோய்க்கூறு யாருக்கும் தெரியாத புதுப் பிரச்சினையுமல்ல. கோடம்பாக்கத்து திரைப்படங்கள் பலவற்றில் எள்ளி நகையாடப்பட்டிருக்கும் பிரச்சினைதான். சக மனிதர்களை மருத்துவர்கள் நோயாளிகளாக பார்ப்பது, வழக்குரைஞர்கள் கேஸ் கட்டில் ஒரு கோப்பாக பார்ப்பது, இன்ஷூரன்ஸ் ஏஜண்டுகள் பாலிசிதார்களாக பார்ப்பது, பல்பொருள் அங்காடி மேலாளர்கள் கஸ்டமர்களாக பார்ப்பது, என். ஜி. ஓ நடத்துபவர்கள் பிரச்சினைகளை பிராஜக்டுகளாக பார்ப்பது என்று ஒவ்வொரு தொழிலிலும் தமது தொழில் நோக்கிற்கு அடிமையானவர்கள் தம்மையும் அறியாமல் வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு நோய்கூறுதான்.

 
எனது பேராசிரிய நண்பர் ஒருவர் தனது துறையில் பழம் நூல்கள் சேகரிப்பு மையம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். பழம் நூல்களை சேகரிப்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது தொழில்முறை சார்ந்த அக்கறையை நான் மிகவும் வியப்பதுண்டு. பிறரிடம் சொல்லி பாராட்டுவதுண்டு. பிரச்சினை என்னவென்றால், அவர் பேசும் பழகும் நபர்களிடத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் பழைய நூல்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார். பொதுவில் பேராசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியத் தொழிலில் இருக்கும் நண்பர்களுக்கும் இருக்கும் நோய்க்கூறு உபதேசம் செய்தலாக இருப்பதை அவதானிக்க முடியும்.

 
கோடம்பாக்கத்து நண்பர்களைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சினிமாதான் மூச்சு. தெரு முக்கு தேநீர் கடையில் பொழுது போக பேசிக் கொண்டிக்கையிலும்கூட, அங்கு நடக்கும் சிறு சம்பவங்களை தாம் வருங்காலத்தில் இயக்க இருக்கும் திரைப்படத்தின் “சீன்”களாக பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இலக்கியவாதிகள் பழகிக் கொண்டிருக்கும் நபர்களை கதாபத்திரங்களாக உருமாற்றிக் கொண்டிருப்பார்கள். இசைக் கலைஞர்கள் இந்தப் பிரபஞ்சமே இசையால் ஆனது என்று லயித்திருப்பார்கள்.

 
24 X 7 தொழில்முறைச் சிந்தையினால் விளையும் குறுகிய நோக்கு இது. இதில் விசேடமான இன்னொரு துறையினர் பத்திரிகையாளர்கள். அதிலும் குறிப்பாக எலக்ட்ரானிக் மீடியாவை சேர்ந்தவர்கள். சமூகத்தில் பற்றியெரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் இவர்களுக்கு செய்தியாக மட்டுமே தெரியும். குறித்த பிரச்சினைகளை எப்படி செய்தியாக வடித்துக் கொடுப்பது என்பதே இவர்களது நாடித் துடிப்பு.

 
பொதுமக்களின் ஒவ்வொரு பிரச்சினையும் ஊடகங்களுக்கு தீனி மட்டுமே. அந்த தீனிக்குப் பெயர் செய்தி. தீனியை சேகரிப்பவர் செய்தியாளர் / பத்திரிகையாளர் / நிருபர் இன்னபிறர். செய்தியைத் தாமும் விழுங்கி மக்களின் வாயிலும் திணிப்பதே இவர்களது தொழில். பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த அலசல், பகுப்பாய்வு, தீர்வுகளை நோக்கியச் சுட்டல்கள் என்பனவற்றில் தமக்கு தொடர்பும் இல்லை பொறுப்பும் இல்லை என்பது இவர்களது அடிப்படை தொழில் தர்மம். ஆகையினாலேயே, ஒரு நாள் செய்தி, பொழுது விடிந்தால் பழைய செய்தி. அடுத்தென்ன புதிய செய்தி என்று கணப்பொழுதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

 
இதில், நேர்மையான பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உண்மையான செய்திகளை, மறைக்கப்பட்ட செய்திகளைத் தருவதன் மூலம் தமது தொழிலுக்கு நேர்மையாக இருப்பதாக நினைத்துக் கொள்வது அவர்களது சுயதிருப்திக்கும் சுய ஏமாற்றுக்கும் மேலாக எதையும் செய்துவிடப் போவதில்லை. சமூக நிகழ்வுகளை செய்திகளாக பார்க்கும் நோக்கில் – தமது தொழில் நோக்கில் மூழ்கியிருக்கும்வரை பத்திரிகையாளர்கள் சமூக ஒட்டுண்ணிகள் (social parasites) என்று கருதத்தக்கவர்களே.

 
இதன் பொருள், பத்திரிகையாளர்கள் அரசியல் களப் பணியாளர்களாக மாறவேண்டும் என்பதல்ல. மாறாக, செய்திகளை அலசுபவர்களாக, அவற்றின் அரசியல் கோணங்களை வெளிப்படுத்துபவர்களாக, வாசகர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்பவர்களாக, அவர்களது பார்வைகளுக்கு செவிமடுப்பவர்களாக, அவற்றுக்கு இடமளிப்பவர்களாக மாறவேண்டும் என்பதுதான். வாசகர் கடிதம் என்பதில் இருந்து வாசகர் வட்டம் என்ற அடிவைப்பு ஒரு முன்னோக்கிய நகர்வாக இருக்கலாம்.

 
பத்திரிகை முதலாளி ஒப்புக்கொள்ள மாட்டாரே என்ற பிலாக்கணத்திற்கு பதில் என்ன சொல்வது? பத்திரிகைத் தொழிலை உயர்வானதாக காட்டிக் கொள்ளாதீர்கள். பொதுமக்களைக் காட்டிலும் மேலானவர்களைப் போல பாவனை செய்யாதீர்கள். டிராஃபிக் கான்ஸ்டபிளிடம் மாட்டிக் கொள்ளும்போது அடையாள அட்டையை எடுத்துக் காட்டாதீர்கள். மற்ற சாதாரண குடிமக்களை போலவே தண்டத் தொகையைக் கட்டித் தொலையுங்கள்.

 
அவரவர் சோற்றுக்குப் படும்பாடு போல நாங்களும் பாடுகிறோம் என்று பாடிச் செல்லுங்கள். யாருக்கும் பாதகமில்லை.

சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

கண்டேன் சீதையை

 

பருத்த இடையும் கருத்த மேனியும்
பெருத்த வாளும் கடும் பாறையும்
ஆர்ப்பரித்த அலைகடலும்
கடந்தே கண்டான் கம்பன் கற்பனையில்

தீச்சட்டியும் பாற்குடமும் மண்சோறும் மரப்பசுவும்
மாரடித்த மங்கையரும் ஆழிச் சேய்படையும்
சிகப்பு சைரனும் காக்கிச் சேனையும் காத்த
காணா அருமருந்துத் தருவை தாயை
கண்டிலர் அவர் கவர் னவர்.

கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

சுத்த வீரன்

“இதைப் பற்றி எழுதும்போது நமது உடம்பு சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்கள் இவ்வீரனைக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் கூட்டங்கள் போட்டு அவனைப் பாராட்டித் தீர்மானங்கள் செய்தனுப்ப வேண்டும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றச் சம்பந்தமான ஒவ்வொரு சங்கத்திலும் இவ்வீரனின் உருவப் படத்தை வைக்க வேண்டும். உண்மையான பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவர் வீட்டிலும் இப்படங்கள் துலங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கெல்லாம் இவ்வீரனின் சுத்த வீரத்தன்மையை எடுத்துச் சொல்ல வேண்டும்.”

 
பெரியார் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு எழுதிய அரிதான தலையங்கம் ஒன்றில் வரும் வரிகள் இவை. “பார்ப்பனக் கொடுமைக்காக உயிர்விட்ட சுத்த வீரன்” என்ற தலைப்பிட்டு, 17.04.1927 ”குடி அரசு” இதழில் எழுதப்பட்டத் தலையங்கம். காங்கிரசில் இருந்து விலகி, “குடி அரசு” இதழைத் தொடங்கி, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக எழுதப்பட்டது. பெரியாரை இவ்வளவு உணர்ச்சிவயப்பட வைத்த சம்பவம்தான் என்ன?

 
அன்றைய செங்கல்பட்டு ஜில்லாவிற்கு உட்பட்ட பொன்னேரி கிராமத்தில், பார்ப்பன அதிகாரி ஒருவரின் கீழ் வேலை செய்துவந்த பி. சுப்பிரமணியம் என்ற 22 வயது இளைஞர், பார்ப்பன அதிகார துஷ்பிரயோகங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாமல், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த இளைஞர் எழுதி வைத்த கடிதத்தை பெரியார் தனது தலையங்கத்துடன் பிரசுரித்திருக்கிறார். விஷயத்தைப் புரிந்து கொள்ள அக்கடிதத்தின் முக்கியப் பகுதிகளை பார்க்கலாம்.

 

பொன்னேரி லோகல் போர்டு ஆஸ்பத்திரி,
1927.

 

அன்புமிக்க மாணிக்கம்!

 

இந்த மாதம் 8 – தேதி எனக்கு குறிப்பிடத்தக்க ஒரு அதிர்ஷ்டவசமான நாளாகும். அது என்னவென்றால் நான் இந்த உலகத்தையும், உன்னையும், எனது பந்துக்களையும் விட்டு சந்தோஷமாகவும், திருப்தியாகவும் பிரியும் நாளாகும்.

 
ஒரு பார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை செய்ய இனி என்னால் முடியாது. பார்ப்பன எஜமானன் கீழ் வேலை செய்து ஜீவிப்பதைக் காட்டிலும், செத்துப்போவது மேலானதெனவும், புத்திசாலித்தமனான தெனவும் நான் தெரிந்து கொண்டேன்.

 
… இதுவரை டாக்டர் நாயர், சர். தியாகராய செட்டியார், எ. ராமசாமி முதலியார், சி. நடேச முதலியார் முதலியவர்கள் பார்ப்பனர் கொடுமைகளை அடியோடு துலைப்பதற்காக செய்து வரும் பிரயத்தனங்களைத் தப்பிதமென்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது அத்தலைவர்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியமானது என்பது என் விஷயத்தில் மிகவும் ருஜுவாகி விட்டது. பார்ப்பனர்களை வெறுப்பதாலாவது, பார்ப்பனர்களின் கீழ் வேலை செய்யக்கூடாது என்று நினைத்து என் வேலையை ராஜீனாமா செய்து விடுவதினாலாவது வேறு வழியில் இந்த நாட்டில் பிழைக்க முடியாதவனாயிருக்கிறபடியால் ஒரு கோப்பை பாலில் ஒரு அவுன்சு சியானிக் ஆசிடைக் (Hydro – Cyanic Acid) கலந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்வதையே விரும்புகிறேன். ஆதலால் நான் ஒரு உண்மையான பார்ப்பனரல்லாத உணர்ச்சி உடையவனாகவும் எனது பார்ப்பனரல்லாதார் சகோதர சகோதரிகள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து நீங்குவதற்காக அப்பார்ப்பனக் கொடுமையை அழிக்க வேண்டியும், நான் பிராணனை விடுகிறேன். நான் செய்யும் இந்தக்காரியம் சரிதானே? இந்த விஷயத்தை மெயில் பத்திரிகையிலும் ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் பிரசுரிக்கச் செய்வதால் நமது சகோதரிகளையும் சகோதரர்களையும் பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கி ஏமாறாமலிருப்பதற்காக இருந்து தப்புவிக்க உதவும் என நினைக்கிறேன்…. இதோடு நான் நல் விடைபெற்றுக் கொள்ளுகிறேன். இனி நீ பார்க்க முடியாததான என்னுடைய கடைசி கையெழுத்து இதுதான். என்னுடைய பிரேதத்தை பார்ப்பன தெருவுக்கு முன்னால் ஓடும் ஆரணி நதி மணலில் பார்க்கலாம்….

 

(ஒம்.) பி. சுப்பிரமணியன்.

 

ஜனநாயக அரசியல் வெளி, சிவில் சமூகம் என்பதே இல்லாதிருந்த காலமது. மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்கும் வெகுமக்கள் அரசியல் இயக்கங்களே இல்லாதிருந்த காலம். 1916 இல் உருவான, ஜஸ்டிஸ் கட்சி என்று அறியப்பட்டிருந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தனது சென்னைக் கிளையை 1921 இல்தான் தொடங்கியிருந்தது. 1923 இல் அச்சென்னைக் கிளையின் மொத்த உறுப்பினர்கள் வெறும் 63 பேர் மட்டுமே. 1920 களின் இறுதிகளில் அன்றைய சென்னை மாகாணம் முழுக்கப் பரவியிருந்த அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5000 பேர்கள் மட்டுமே. அவர்களில் 2000 பேர் சென்னை மற்றும் அதைச் சுற்றியிருந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

 
1924 ஆம் ஆண்டு வரை கட்சிக்கான அரசியல் அமைப்பு அறிக்கை என்பதே இல்லாமல்தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் செயல்பட்டு வந்தது. கடும் நிர்ப்பந்தங்களுக்குப் பிறகு 1925 ஆம் ஆண்டு, அரசியல் அமைப்பு நகலறிக்கை உருவாக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. 1928 ஆம் ஆண்டில் உள்ளூர் கட்சிக் கிளைகள் ஏதேனும் இருந்தால் தலைமையை தொடர்பு கொள்ளக்கோரி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் நிலைமையில்தான் அக்கட்சியின் அமைப்புப் பலம் இருந்தது (பார்க்க: Christopher John Baker, The Politics of South India 1920 – 1937, CUP, 1976 பக். 63 – 71).

 
1921 இல் சென்னை மாகாணத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 4 கோடி. 1920 ஆம் ஆண்டு இரட்டையாட்சி முறையில் 25 மாவட்ட தொகுதிகளில் நடைபெற்ற முதல் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 ¼ இலட்சம். கிராமப்புறங்களில் ரூ. 10 நில வரி கட்டியவர்களும் நகர்ப்புறங்களில் ரூ. 3 முனிசிபல் வரி கட்டியவர்களுமே வாக்காளர்கள். ஒரு தொகுதியில் வெற்றிபெறுவதற்கு மூன்று அல்லது நான்காயிரம் வாக்குகளை பெற்றாலே போதும் என்ற நிலை. முக்கிய கோயில்களின் நிர்வாகிகள், பேர்பெற்ற வழக்குரைஞர்கள், நிலச்சுவாந்தார்கள், வியாபாரிகள் இவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதே வாக்குச் சேகரிக்கும் நடைமுறை. வாக்குச் சேகரிப்பு பெரும்பாலும் மூடிய அறைகளுக்குள் கனவான்களைச் சந்தித்துப் பேசுவதாகவே இருந்தது. பொதுவான இந்நடைமுறைக்கு மாறாக, சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவாளர்கள், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி விளம்பரம் செய்தார்கள் என்பதை கேள்விப்பட்டு கட்சியின் தலைவர் சர். பிட்டி தியாராயச் செட்டியார் துணுக்குற்றதாகவும் செய்தி உண்டு (மேற்குறித்த நூல், பக்: 35 – 37).

 
பார்ப்பனரல்லாதார் இயக்கமாக தோன்றிய ஜஸ்டிஸ் கட்சி என்று அறியப்பட்டிருந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், தெளிவான அரசியல் கொள்கையை வரையறுத்துக் கொள்வது, பிரச்சார இயக்கங்களை வீச்சாக கொண்டு செல்வது, வலுவான வெகுமக்கள் அமைப்பாக உருப்பெறுவது என்ற எதிலும் நாட்டம் கொண்டிராத ஜமீந்தார்களின் கட்சியாகவே இருந்தது.
நவீன ஜனநாயக அரசியலின் மங்கலான நிழலாக மட்டுமே அரசியல் களம் உருவாகத் தொடங்கியிருந்த இக்காலப்பகுதியில்தான் 22 வயதே நிரம்பிய இளைஞர் சுப்பிரமணியன், ஒரு பார்ப்பன அதிகாரியால் ஏற்பட்ட தொல்லை தாளாமல், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பிரச்சாரத்தின் தாக்கத்தில், ”பார்ப்பனரல்லாத உணர்ச்சி உடையவனாகவும் எனது பார்ப்பனரல்லாதார் சகோதர சகோதரிகள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து நீங்குவதற்காக”வும் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். நவீன அரசியல் களம் உருவாகத் தொடங்கியிருந்த ஆரம்பகாலத்தில் தமிழகம் கண்ட முதல் அரசியல் தன்னுயிர் கொடையாக அவரது மரணம் இருக்கலாம்.

 
பார்ப்பனரல்லாதாரின் அரசியல் விழிப்புணர்வுக்காகத் தனது உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டபடி அவரது கடிதம் மெட்ராஸ் மெயில், ஜஸ்டிஸ் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால், பெரியார் அவரது கடிதத்தைப் பிரசுரித்து மிகவும் உணர்ச்சிவயப்பட்டு அவரைச் “சுத்த வீரன்” என்று விதந்தோதியிருக்கிறார். விதந்தோதியதோடு நின்றுவிடவில்லை. அனைவருக்கான வாக்குரிமையும், அரசியல் உரிமைகளும், அடிப்படைச் சமத்துவமும்கூட இல்லாதிருந்த தமிழகத்தில், இந்தியத் துணைக்கண்டமே கண்டிராத வகையில், ஒரு மாபெரும் வெகுமக்கள் இயக்கத்தைக் கட்டி, அரசியல் விழிப்புணர்வையும் சமூக விழிப்புணர்வையும் ஊட்டினார்.

 
“குடி அரசு” இதழைப் பெரியார் தொடங்கியது 1925 ஆம் ஆண்டு மே மாதம். 1926 பிப்ரவரி மாதத்தில் 307 புதிய சந்தாதாரர்கள் சேர்ந்திருப்பதாக அறிவிக்கிறார். அதே ஆண்டு மே மாதம், இரண்டாம் ஆண்டுத் துவக்கத்தில் 2000 சந்தாதாரர்கள். அக்டோபர் மாதம் 4000 பிரதிகள் விற்பனை. 1927 இல் 4,500 சந்தாதாரர்கள். 1928 இல் 7,000 சந்தாதாரர்கள். 1928 ஆம் ஆண்டு இறுதியில் “குடி அரசு” 10,000 பிரதிகள் விற்பனையை எட்டுகிறது.

 
1928 மார்ச் மாதத்தில் “ரிவோல்ட்” ஆங்கிலப் பத்திரிகை துவங்க இருப்பதாக அறிவிக்கிறார். நவம்பர் மாதம் ஆரம்பித்தும் விடுகிறார். 1927 மார்ச் மாதம் ஜஸ்டிஸ் கட்சியார் தாம் நடத்தி வந்த “திராவிடன்” நாளிதழை பொறுப்பேற்று நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்து வாசகர்கள் அபிப்பிராயத்தை கேட்கிறார். ஏற்று நடத்துமாறு 500 கடிதங்கள் வந்து சேர்ந்திருப்பதாக தெரிவிக்கிறார். 1928 ஏப்ரலில் “திராவிடன்” நாளிதழின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

 
1927 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் 5000 பிரதிநிதிகள் கூடிய பார்ப்பனரல்லாதார் மகாநாட்டை கூட்டி, ஜில்லாக்கள் தோறும் மாநாடுகள் நடத்தி இயக்கத்தை உள்ளூர் அளவில் உருவாக்க அறைக்கூவல் விடுக்கிறார். 1928 துவக்கத்தில் சைமன் பகிஷ்காரப் பிரச்சார இயக்கத்தின் பொருட்டு, ஒரு லட்சம் துண்டறிக்கைகள், 5000 சுவரொட்டிகள், 15 – 20 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதாக எழுதுகிறார்.

 
“குடி அரசு” இதழில், இந்து, சுதேசமித்திரன், மெட்ராஸ் மெயில் போன்ற பத்திரிகைகளின் புரட்டையும், காங்கிரசாரின் புரட்டையும் அம்பலப்படுத்துவதோடு நின்றுவிடவில்லை. பார்ப்பனரல்லாத தலைவர்களான திரு. வி. க, ஷண்முகம் செட்டியார், வரதராஜுலு நாயுடு ஆகியோருடனும் கடும் விவாதங்கள் நிகழ்த்துகிறார். பெரும் தமிழ் அறிஞராக அவரே மதித்த மறைமலை அடிகளுடனும் கூட கடுமையான விவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார் (“சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் [சுயமரியாதை இயக்கத்தவர்களை] கொல்லாமல் இருக்கலாமா” என்று பல்லாவரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மறைமலை அடிகளார் பேசியதை ஒட்டிய விமர்சனமும் விவாதமும் சுவையானது). இந்தியத் துணைக் கண்டத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் பிரச்சினையையும் அலசி ஆராய்ந்து விமர்சித்து தெளிவுபடுத்தியிருக்கிறார். வரலாறு, இந்து சமயப் புரட்டு, காங்கிரசாரின் புரட்டு, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என்று சமூகத்தின் சகலப் பிரச்சினைகளையும் எப்படி அணுகவேண்டும் என்ற பார்வையை – சட்டகத்தை விரித்துக் காட்டியிருக்கிறார்.

 
1928 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் “சுயமரியாதை போதனாமுறை பாடசாலை” என்ற பெயரில் அரசியல் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறார்.
மேலே கோடிட்டுக் காட்டியுள்ளதுபோல, இதழ்கள் வழியான கருத்துப் பிரச்சாரம், விவாதம், விமர்சனம், விளக்கப்படுத்தல், அரசியல் பயிற்சி வகுப்புகள் என்று இடைவிடாது அரசியல் கல்வி புகட்டியே கருத்தாழமும் தெளிவும் உடைய தொண்டர்களைக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தை பெரியார் கட்டமைத்தார்.

 
பத்து வருடங்களுக்கும் மேலாக அரசியல் கல்வி புகட்டி வளர்த்த அவரது இயக்கத்தாலேயே ராஜாஜி இரும்புக்கரம் கொண்டு திணித்த இந்தியை விரட்டியடிக்க முடிந்தது. 1948 வரை, தள்ளாத வயதிலும் வலுவான, கட்டுக்கோப்பான பெரும் இயக்கத்தை கட்டியிழுத்துச் செல்ல முடிந்தது. பெரியார் அரசியல் கல்வி புகட்டிக் கட்டமைத்த சுயமரியாதை இயக்கத்திலோ, திராவிடர் கழகத்திலோ உணர்ச்சி மேலீட்டால் இளைஞர்கள் தம்மை மாய்த்துக் கொண்டார்கள் என்ற வரலாறு இல்லை.

 
நீதி வேண்டித் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளல், நவீன அரசியல் உருப்பெறுவதற்கு முன்பான காலத்தில், தமிழகத்திலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் ஒடுக்கப்பட்ட எளிய மக்கள் கைக்கொண்ட எதிர்ப்பு வடிவங்களில் ஒன்று. எதிர்த்துப் போராட வழிவகை இல்லாத, பலம் மிக்க ஆதிக்க சாதியினருக்கு அல்லது அரசனுக்கு எதிராக, அவரது உற்றாரும் ஊராரும் கடவுளரும் இழித்துப் புறந்தள்ளும்படியான தீராப்பழியை சுமத்தும் நோக்கில் எளிய மக்கள் கைக்கொண்ட வடிவம். நவீன ஜனநாயக அரசியல் புலத்திலும் இவ்வெதிர்ப்பு வடிவத்தின் தொடர்ச்சி ஆங்காங்கே தெறிப்பதை அவ்வப்போது காண முடியும். பெரும் பலம் பொருந்திய சக்திகளை எதிர்த்துப் போராட வழிவகைகள் இல்லாத சூழ்நிலைகளிலேயே இவ்வடிவம் தோன்றுவதையும் அவதானிக்க முடியும்.

 
1927 இல், நவீன ஜனநாயக அரசியல் உருவாகிக் கொண்டிருந்த காலத்தில், தீர்க்கமான அரசியல் நோக்கையும் வாழ்க்கை பார்வையையும் தந்து வழிகாட்டக்கூடிய அரசியல் இயக்கம் எதுவும் இல்லாத நிலையில், பலவீனமான அரசியல் சூழலில்தான், தனது மரணம் அரசியல் விழிப்புணர்வை – புது மலர்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் இளைஞர் சுப்பிரமணியன். அந்த இளைஞரின் உள்ளக்கிடக்கையை தனது தீர்க்கமான அரசியல் பார்வையினால் நடைமுறையில் சாத்தியமாக்கிக் காட்டினார் பெரியார்.

 
2009 இல் ஈழ இனப்படுகொலை நடந்து முடிந்திருந்த தருணத்தில், தமிழகத்தின் அரசியல் தேக்க நிலையை உடைத்து, புதிய அரசியல் அலை ஒன்று உருவாகத் தனது மரணம் வித்தாகும் என்ற உணர்வெழுச்சியில், அரசியல் தெளிவோடு தனது இன்னுயிரை ஈந்தவர் முத்துக்குமார்.

 
தமிழ்நாட்டைப் பீடித்திருக்கும் சாபமோ என்னவோ, அவரது தியாக நோக்கு நிறைவேறும் திசையில் ஒரு இம்மி கூட நாம் நகர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. தெளிந்த அரசியலையும், வரலாற்றுப் புரிதலையும், தத்துவ நோக்கையும், வாழ்க்கை பார்வையையும் வழிகாட்டுதலையும் தரும் புதிய இயக்கம் எதுவும் உருவாகவில்லை.

 
மாறாக, வாரத்திற்கு ஒரு அடையாளப் போராட்டம், தொலைக்காட்சி விவாதம், மாதத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தும் இயக்கங்களும், “முப்பாட்டன் முருகனின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளத் திருவிளையாடல் படத்தை பார்” என்று சுவிசேஷக் கூட்டம் நடத்தும் இயக்கங்களும்தான் முளைத்திருக்கின்றன.

 
இந்நிலை தொடரும்வரை விக்னேஷ் போன்ற உணர்வெழுச்சிமிக்க இளைஞர்கள் நியாயமின்றித் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

 

பின் குறிப்பாக:

 

விக்னேஷ் தனது உயிரை மாய்த்துக் கொண்டது, அரசியல் களப்பணி, அரசியல் கோட்பாடுகள், சமூக அரசியல் களத்தில் மாற்றங்களை நிகழ்த்தும் முறைகள் குறித்து இயக்கங்கள் எவ்வளவு தெளிவற்று இருக்கின்றன என்பதைச் சுட்டுவதாகவே இருக்கிறது. தமது அரசியல் தெளிவின்மையை உணராது, மக்கள் சுரணையற்று இருக்கிறார்கள் என்று பழிக்கும் திமிரும் சிலரிடத்தில் அதிகமாக வளர்ந்திருக்கிறது என்பதையும் அவரது மரணத்தை ஒட்டிய சில எதிர்வினைகள் காட்டுகின்றன. அவற்றுக்கான மறுப்பாகவும், பெரியாரின் இயக்கச் செயல்பாட்டில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய புள்ளிகளின் மீது கவனத்தைக் குவிக்கும் முகமாகவும் இக்குறிப்புகள்.

 

உள்ளும் வெளியும் – தமிழகமும் தில்லியும்

தமிழ் நாட்டை மையமாகக் கொண்ட அரசியலிலும் தில்லியை மையமாகக் கொண்ட அரசியலிலும் “மாற்றத்தை” உருவாக்குபவர்களாகப் பரிணமிப்பதில் உள்ளாள்/வெளியாள் (insider/outsider) என்ற ஆளுமைத் திறன் முக்கியமானதொரு வித்தியாசப்படுத்தும் புள்ளியாக இருக்கிறது என்பது என் துணிபு.

தில்லியை மையமாகக் கொண்ட அரசியலில், ஒரு கட்சியில் அல்லது இயக்கத்தில் “உள்ளாட்களாக” இருந்து விமர்சனங்களை வைத்து வெளியேறி “வெளியாட்களாக” உருமாறியவர்கள் நீடித்த செல்வாக்கையோ தீர்மானகரமான தாக்கங்களையோ ஏற்படுத்த இயலாத நிலையைக் காணலாம். “வெளியாட்களாகத்” தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டவர்களாலேயே செல்வாக்கு மிகுந்தவர்களாக உருப்பெற முடிந்திருக்கிறது.

காங்கிரசில் இருந்து வெளியேறியவர்களால் தலைமை தாங்கப்பட்ட ஜனதா கட்சி முதல் எடுத்துக்காட்டு. அடுத்தது ஜனதா தளம். மாபெரும் ஆளுமையாக உருவான வி. பி. சிங்.

ஜன சங்கம் பாஜக வாக புதிய அவதாரம் எடுத்த பின்னர், ஜன சங்கத்தின் உள்ளாட்களாக இருந்த அத்வானி, வாஜ்பாய் ஆகியோரின் செல்வாக்கு பாஜக வினுள்ளாகவே கேள்விக்கிடமில்லாத நிலையில் இருந்ததில்லை. ஆனால், ஜன சங்கம், பாஜக இவற்றின் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஏதும் செய்தவராக முன்னிறுத்தப்படாத நரேந்திர மோடி, தேநீர் விற்றவர் என்ற “வெளியாள்” அடையாளத்தை முன்னிலைப்படுத்தியே இன்று பாஜகவில் கேள்வி கேட்க முடியாத தலைமை என்ற நிலையை அடைந்திருக்கிறார்.

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் சாக்கடை அரசியலுக்கு வெளியே இருந்த “தூய்மையான” நபர் என்ற வகையில் “வெளியாள்” அடையாளத்தை முன்னிலைப்படுத்தியதே தில்லி அரசைக் கைப்பற்றிவதில் தீர்மானகரமான காரணியாக இருந்தது.

தமிழ் நாட்டை மைய்யமாகக் கொண்ட அரசியலில் மாற்றத்திற்கான அரசியலை முதன் முதலில் மொழிந்தவர் பெரியார். காங்கிரசில் “உள் ஆளாகக்” தொண்டாற்றிவிட்டு, அதைவிட்டு வெளியேறிய பின்னரும் தன்னைக் காங்கிரஸ்காரராகவே சில காலம் கருதியிருந்து செயல்பட்டு, அதன் பின்னரே முற்றிலும் “வெளியாளாகத்” தன்னைப் பிரகடணப்படுத்திக் கொண்டவர். உள்ளிருந்தான அவரது விமர்சனங்கள் வெளியேறிய பின்னர் கூர்மையடைந்தன. தமிழ் நாட்டு அரசியல் களத்தில் தீர்மானகரமானச் சக்தியாக அவர் உருப்பெற்றது இப்பயணத்தின் ஊடாகவே நிகழ்ந்தது.

அண்ணா, எம்ஜிஆர் இருவரும் இதே வழிமுறையைப் பின்பற்றியே தீர்மானகரமான சக்தியாக உருவெடுத்தனர். மு. க என்றும் “உள்ளாளாகவே” இருந்தவர். Political intrigues வழியாகவே ஆட்சியைக் கைப்பற்றியவர். மக்களின் செல்வாக்கு பெற்றத் தலைவராக அவர் ஒருபோதும் உருப்பெற்றதில்லை.

வைகோ உள் ஆளாக இருந்து வெளியாளாக மாறியவர் என்பது நிதர்சனமாயினும் அவரால் தீர்மானகரமான ஒரு சக்தியாக உருவாக முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தெளிவான. தீர்க்கமான மாற்று அரசியல் agenda எதையும் அவர் ஒருபோதும் முன்வைக்கவில்லை என்பதே அதற்கான பதில். வெளியாளாகவே நீண்ட காலம் நிலைத்துவிட்டதும், பல கட்சிகளுக்கு உள் ஆள் பாத்திரத்தை ஆற்றியதும் மற்ற காரணிகள்.

விஜயகாந்தோ வெளியாள் என்பது மட்டுமல்லாமல், தெளிவான மாற்று எதையும் முன்னிறுத்த முடியாதவர்.

தமிழக அரசியலில் வெளியாட்கள், தம்மை உள் ஆட்களாக அறிவித்துக் கொள்வதன் முதல் சமிக்ஞையாகத் தமது கட்சிகளின் பெயர்களில் “திராவிட” அல்லது “கழகம்” என்ற பெயர்களை ஒட்டுகளாக இணைத்துக் கொள்வதைக் குறிப்பிடலாம்.

எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்னிருந்தே தமிழ் நாட்டு அரசியல் களத்திற்கு தீர்க்கமான மாற்றம் தேவையாக இருந்து வருகிறது. ஆனால், அத்தகைய மாற்றம் இதுவரையில் உருவாகவில்லை. மாற்றத்தை முன்னெடுக்கும் தீர்க்கமான நோக்குடையோர் உருவாகவில்லை என்பதே துயரமான உண்மை.

சீரழிவின் பாதையில் தறிகெட்டு ஓடி, இப்போது முட்டுச் சந்தில் முடிந்திருக்கிறது தமிழக அரசியல்.

தெளிவான, தீர்க்கமான, ஆரோக்கியமான மாற்றம் மீண்டும் நிகழ, குறைந்தது 15 ஆண்டுகள் பிடிக்கும். அவ்வாறான தொலை நோக்கான இலக்கை வகுத்துக் கொண்டு, பல துறைகளிலும் திறன் மிக்கவர்களாகத் தயார்படுத்திக் கொள்ள விழைவதே நம்முன் நிற்கும் சவால். அது உள்ளிருந்தே உருவாக வேண்டும். பெரியாரின் வழிப்பட்டே உருவாக வேண்டும்.

அதிகாரமும் வன்முறையும் கருத்தியல் மேலாண்மையும் மாற்றமும் – 2

நாத்திகம் பேசி நாத்தழும்பேறியோர் நெருப்பூட்டி நர்த்தனமாடிய கதை

 

சென்னையில் நடைபெற்ற “தமிழன்பர் மகாநாடு” பார்ப்பனர்களின் நலன் நோக்கில் கூட்டப்பட்டதாக இருந்ததென்றால், அதற்கு முந்தைய ஆண்டு பழுத்த சைவப் பழங்கள் கூட்டிய மாநாடு ஒன்றும் அரங்கேறியிருந்தது. அன்றைய திருச்சி ஜில்லாவில் இருந்த துறையூரில் 1932 ஆகஸ்டு 6, 7 தேதிகளில் கூட்டப்பட்ட மாநாடு அது.

 

சரியாகச் சொல்வதென்றால், அவ்விரண்டு நாட்களில் மூன்று மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன – தமிழ்ப் புலவர் மாநாடு, தமிழ் மாணவர் மாநாடு, தமிழர் மாநாடு. சென்னைத் “தமிழன்பர் மகாநாட்டில்” நிகழ்ந்ததை ஒத்த சம்பவங்கள் இங்கும் அரங்கேறியிருக்கின்றன. கூடுதலாக ஒரு சிறிய “வன்முறை”ச் சம்பவமும்.

 

மாநாட்டுச் சம்பவங்கள் குறித்த செய்திகள், 14.08.1932 தேதியிட்ட குடி அரசுத் தலையங்கத்தில் (பெரியார் எழுத்தும் பேச்சும், 1932 – 2, தொகுதி 15) காணக் கிடைக்கின்றன. மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரங்கள், அதே இதழில் வெளிவந்துள்ள “தமிழர் மகாநாடு – தேவாரப் பாட்டு தடுக்கப்பட்டது மத சம்பந்தமில்லாத தமிழ்த் தீர்மானங்கள் ஹிந்திக் கண்டனம்” என்ற தலைப்பிலான கட்டுரையில் கிடைக்கின்றன. மேலும், 31.07.1932 தேதியிட்ட குடி அரசு இதழில், “தஞ்சை – திருச்சி மாவட்ட தமிழர் மகாநாடு” என்று தலைப்பில், குத்தூசி குருசாமியால் எழுதப்பட்டு பூவாளூர் அ. பொன்னம்பலனார் அவர்களால் அனுப்பப்பட்ட 12 தீர்மானங்கள், தீர்மானத்தை முன்மொழிபவர், வழிமொழிபவர் பெயர்களோடு வெளியிடப்பட்டிருக்கிறது (“தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – உண்மை வரலாறு” நூலில் இவ்விரண்டும் இடம் பெற்றிருக்கின்றன).

 

குடி அரசுத் தலையங்கம், மாநாடு நடைபெறப்போவது குறித்த செய்திகள் வெளிவந்தபோது தாம் மகிழ்ச்சியுற்றதாகத் தெரிவித்து தொடங்குகிறது. மாநாட்டு நிர்வாகிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில், தமிழர் சீர்திருத்தமும் தமிழ் மொழி வளர்ச்சியும் வலியுறுத்தப்பட்டிருந்ததே தமது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றும், மாநாடு சீர்திருத்த நோக்கங்களுடன் கூட்டப்படுகிறது என்று கருதிய சுயமரியாதை இயக்கத் தோழர்கள் பலரும் தமது நோக்கிலான பல தீர்மானங்களை எழுதி அனுப்பினார்கள் என்றும் குறிப்பிடுகின்றது.

 

ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மாநாடு நடைபெறுவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பாக, மாநாட்டு வரவேற்புத் தலைவர் த. வே. உமாமகேஸ்வரம் பிள்ளை, “தமிழர் மாகாநாடு தமிழ் வளர்ச்சியை மட்டும் கருதிய மாகாநாடேயன்றி சீர்திருத்த சம்பந்த மகாநாடுமன்று சமய சம்பந்தமான மகாநாடுமன்று” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும் தமது வரவேற்புரையில், “இம் மகாநாடுகளின் உண்மை நோக்கங்கள் யாதெனத் தெரியாதபடியால் மக்களின் சீர்திருத்தத்தில் கருத்துடைய நண்பர்கள் செய்தித் தாள்களிலும், துண்டுத் தாள்களிலும் தாம் நிறைவேற்ற வரும்படி முடிவுகளை வெளியிட்டு வருவதைப் பார்த்தேன்,” என்றும் பேசியிருக்கிறார்.

 

இவற்றைக் குறிப்பிட்டுக் காட்டும் தலையங்கம், இம்மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள், சைவ சமய பக்தர்கள் என்பதையும், இவர்கள் “சைவத்தை விட்டால் தமிழ் இல்லை; தமிழை விட்டால் சைவமில்லை” என்ற கொள்கையை உடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே என்றும், அதை முன்னிட்டே, “இத்தகையவர்கள் சீர்திருத்தத்தின் பெயரால் கூட்டும் மகாநாடு, சீர்திருத்தத்தின் பெயராலும் தமிழின் பெயராலும் சைவத்தை வளர்க்க முயலும் மகாநாடாக இருக்கும் என்று கருதியே பல சீர்திருத்தக்காரர்கள் மகாநாட்டினருக்கு எச்சரிக்கை செய்யவும், பல தீர்மானங்களை அனுப்பவும் முன்வந்தார்கள்” என்றும் தெளிவுபடுத்துகின்றது.

 

இத்தகைய கடுமையானக் கருத்து மாறுபாடு இருந்தபோதிலும், மாநாட்டை நடத்துவோர் யார் என்பதை நன்கு அறிந்திருந்தும், மொழி தொடர்பான தீர்மானங்கள் மட்டுமே மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று மாநாட்டை நடத்தியவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தினர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக, மாநாட்டை நடத்தியோர் மதம் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றாமல் “விட்டுக்கொடுத்திருக்கின்றனர்”. மாநாட்டின் இரண்டாம் நாள் கல்வி அமைச்சர் திவான் பகதூர் குமாரசாமியார் தலைமையில் நடைபெற்ற “தமிழர் மகாநாட்டில்” மட்டுமே அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

 

“தீர்மானங்களோடு ஒட்டிக் கொண்டிருந்த மத சம்பந்தமான விஷயங்களும் சீர்திருத்தக்காரர்களால் திருத்தப்பட்டு அவைகள் ஏகமனதாக நிறைவேறின” என்று குறிப்பிடும் தலையங்கம், மாநாடு அமைதியாக நடைபெற்றதற்கு இருதரப்பாரையும் பாராட்டுவதோடு, அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தலைமை வகித்தக் கல்வி அமைச்சர் என்பதையும் குறிப்பிடுகிறது.

 

ஆனால், உண்மையில் மாநாடு அவ்வளவு அமைதியாகவும் நடந்துவிட்டிருக்கவில்லை. “மகாநாட்டின் நிர்வாகத்தினர்களில் சில சில்லரைப் பேர்வழிகள் நடந்து கொண்ட வெறுக்கத் தகுந்த” விடயங்களைப் பற்றியும் தலையங்கம் கடுமையுடனே சுட்டிக்காட்டுகிறது.

 

1. மாநாடு தொடங்கும்போதும், இடையிலும் சமய சம்பந்தமான பாடலைப் பாடுவதில் பிடிவாதம் காட்டியது. “தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்” நூலில் உள்ள “தேவாரப் பாட்டு தடுக்கப்பட்டது” கட்டுரை இச்சம்பவத்தைச் சற்றே விவரித்திருக்கிறது.

 

“பிறகு அன்று மாலை (06.08.1932 – மாநாட்டின் முதல் நாள்) 4-30 மணிக்கு மகாநாட்டுப் பந்தலில் தமிழ் மாணவர் மகாநாடு ஆரம்பித்து. முதலில் தமிழ் வாழ்த்து பாடிய பின் ஒருவர் தேவாரம் பாட ஆரம்பித்தார். அப்பொழுது கூட்டத்தில் இருந்தவர்கள் மொழி சம்பந்தமான மகாநாட்டில் ஒரு குறிப்பிட்ட மதசம்பந்தமான பாடலைப் பாடக் கூடாதென்று ஆட்சேபனை செய்தனர். இதனால், பாடப்படாமல் நிறுத்தப்பட்டது.… அதன் பின் மகாநாட்டுத் தலைவர் திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் அவர்கள் தமது அச்சிட்டிருந்த தலைமைப் பிரசங்கத்தைப் படித்து முடித்தார். பிறகு தேவாரம் பாட ஒரு பையன் முன் வந்தான். அப்பொழுது மீண்டும் கூட்டத்தினரால் ஆட்சேபிக்கப் பட்டதும் இதனால் சிறிது நேரம் குழப்பமாக இருந்தது. பிறகு குழப்பம் அடங்கியபின், திரு. முதலியாருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப்பட்டதில் சுயமரியாதைக்காரர்களை கண்டிக்கும்படியான சில வாக்கியங்கள் இருந்தன. அவைகளை ஒப்புக் கொள்ளக் கூடாது என்று கூறி ஆட்சேபித்தனர். கடைசியில் குழப்பம் ஏற்படும் போலிருப்பதைக் கண்டு, திரு. கல்யாணசுந்தர முதலியார் அவர்களே அவ்வாக்கியங்களைத் தாம் ஒப்புக் கொள்ளவில்லையென்று கூறினார். இதற்குள் போலீசார் பிரவேசித்துக் கூட்டத்தைக் கலைத்து விட்டனர்.”

 

2. மாநாட்டில் பங்கேற்றோர் சாதாரணமாக வெளியே செல்ல எழுந்தாலும் போலீசார் அவர்களை “உட்கார், வெளியே போ” என்று அதிகாரம் செய்ய அனுமதித்தது.

 

3. சுயமரியாதைக்காரர்கள் கலகம் செய்தால் அவர்களை அடிப்பதற்காக அடியாட்களை ஏற்பாடு செய்திருந்தது. “நம்பிக்கையான இடங்களிலிருந்து கேள்வியுற்றோம்” என்று குறிப்பிடுகிறது தலையங்கம்.

 

4. ஹிந்தி மொழியைக் கண்டிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, சிலர் எதிர்த்தது. அவ்வெதிர்ப்புக்கு சுயமரியாதைக்காரர்கள் சரியான பதில் கூற, பெரும்பான்மையினரால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

5. சுயமரியாதைக்காரர்கள் மாநாட்டிற்கு வருவார்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களது மனம் புண்படும்படியான வாக்கியங்கள் எழுதிய “இரண்டொரு போர்டுகளை” வைத்திருந்தது. அவற்றை நீக்கும்படி மாநாட்டுத் தலைவர்களில் சிலர் சொல்லியும் எடுக்காமல் இருந்தது. கடைசியில், சுயமரியாதைக்காரர்களே மாநாட்டு நிர்வாகிகளுக்குத் தெரிவித்துவிட்டு அவற்றை நீக்கியது.

 

நிற்க.

 

இதுவரை கண்டவை 1933 ஆம் ஆண்டு பார்ப்பனச் சநாதனிகளால் நடத்தப்பட்ட மாநாட்டிலும், 1932 ஆம் ஆண்டு சைவத் தமிழர்களால் நடத்தப்பட்ட மாநாட்டிலும் கலந்துகொண்டு சுயமரியாதை இயக்கத்தவர்கள் செய்த வெற்றிகரமான, ஆரோக்கியமான அரசியல் இடையீடுகள் (political intervention/resistance என்று கருதத்தக்க) குறித்த விவரிப்பு மட்டுமே. ஆரோக்கியமான அரசியல் இடையீட்டிற்கான சிறந்த எடுத்துக் காட்டுகள் என்ற அளவில் அணுகினாலே இவை மதிப்புமிக்க, பின்பற்றத்தக்க பாடங்களாக நிற்பவை.

 

மேலாக, அதிகாரம்/ஆற்றல் (power), இசைவதிகாரம் (authority), கருத்தியல் மேலாண்மை/மேலாட்சி (ideological hegemony), மாற்றம்/புரட்சி (change/revolution), வன்முறை (violence) குறித்த மரபான மார்க்சியப் பார்வைகளுக்கு அப்பாற்பட்ட, செறிவான பார்வைகளை நோக்கி நகர்த்தும் புள்ளிகளாகவும் இவற்றைக் கொள்ள முடியும்.

 

அதற்கு, முதலில், இவ்விடையீடுகளை அக்கால அரசியல் சூழலில் வைத்து நோக்குவது அவசியமான நிபந்தனை. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய அரசியல் சூழலில் செயல்பட்ட ஒரு இயக்கத்திற்கு எவ்விதமான அரசியல் சூழலமைவு சாத்தியங்கள் திறந்திருந்தன, இயங்குவெளியை அடைத்திருந்த நிர்ப்பந்தங்கள் என்ன, தொழிற்பட்ட எதிர்பாராத காரணிகள் என்ன என்பனவற்றையும் புரிந்துகொள்வது அவசியம்.

 

அரசியல் புலம் நிலைத்த தன்மையே விதியாகக் கொண்டிருக்கும் மானுடர்களின் (மரணம், பண்பு நலன் என்ற இருபொருளிலும்) இயங்குவெளி என்பதால், எதிர்பாரா நிகழ்வுகளே அப்புலத்தின் விதி (law என்ற பொருளில் அன்று; fate என்ற பொருளில்) எனக் கொள்வதில் தவறில்லை.

 

மேலே ஐந்தாவது புள்ளியாகக் குறிப்பிட்டிருக்கும் “சில்லரைப் பேர்வழிகள்” சிலரது வெறுக்கத்தக்க நடவடிக்கையினால் துறையூர் “தமிழர் மகாநாட்டிலும் எதிர்பாரா நிகழ்வொன்று நடந்தேறியிருக்கிறது. குடி அரசுத் தலையங்கம் சம்பவத்தை மிகவும் நயமாகச் சொல்லியிருக்கிறது.

என்றாலும், “தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்” நூலில் இடம் பெற்றுள்ள “தேவாரப் பாட்டு தடுக்கப்பட்டது” கட்டுரைக்கு நூலின் தொகுப்பாளர்களில் ஒருவரான குருவிக்கரம்பை வேலு தந்திருக்கும் “அடிக்குறிப்பு” மூலம் அவ்வெதிர்பாரா நிகழ்வு தெரிய வருகிறது:

 

“இந்த மாநாட்டின் நுழைவாசலில் “நாத்திகம் பேசி நாத் தழும்பு ஏறியவர்கள் ஒழிக” என்று ஒரு வளைவு வைக்கப்பட்டிருந்தது. இந்த வளைவை தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் கீழே தள்ளி தீ மூட்டி விட்டார். அதனால் ஏற்பட்ட குழப்பத்தில், குருசாமியும், ஜீவாவும் வெற்றி கண்டனர்.”

 

(தொடரும்)

 

பகுதி 1

 

%d bloggers like this: