ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 1

தேர்தல் என்பது ஜனநாயகமா? – 1

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகத் திகழ்ந்த பராசக்தி திரைப்படம், தமிழக அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பிய படமாக இருந்தது என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பர். நாத்திகக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிறது என்ற காரணத்தை காட்டி, படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளும் அப்போது முன்வைக்கப்பட்டன. ஆனால், அப்போதைய முதல் மந்திரி ராஜாஜி அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்தார் என்பது வரலாறு.

 

அந்த காலப்பகுதியில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜாஜியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்திருந்தார் அப்போதை கவர்னர் ஸ்ரீ பிரகாசம். 1952 ஜனவரியில் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் மார்ச் இறுதிவரை ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.

 

அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் 375 தொகுதிகளில் காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆந்திரப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருந்த சிபிஐ கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற சுயேச்சைகளின் எண்ணிக்கையும் 62. இந்நிலைமையில், 1953 இல் சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரான டி. பிரகாசம், சிபிஐ மற்றும் பிற சிறு கட்சிகளை ஒன்றிணைத்து 166 உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

 

கம்யூனிஸ்டுகள் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, கவர்னர் ஸ்ரீ பிரகாசம், ராஜாஜியை அழைத்து 1952 ஏப்ரல் 10 அன்று முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ராஜாஜி தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெறுமாறு வழங்கப்பட்ட ஆலோசனையையும் நிராகரித்தார். வேறு வழியில்லாமல், கவர்னர் அவரை அப்போதிருந்த தமிழக மேல்சபையின் உறுப்பினராக நியமித்தார். ஆனால், மேல்சபைக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கு மட்டுமே இருந்தது. அமைச்சரவையோ இன்னும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

 

ஆக, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று அறிவிக்கப்பட்ட முதல் தேர்தலின் முடிவில், இந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தில், ஜனநாயகத்திற்குப் புறம்பான வழியில் ஆட்சியமைக்கப்பட்டது. ஆனால், வாக்குரிமை என்பது ஒரு ஜனநாயக உரிமை என்றும், பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் முறை ஜனநாயக ஆட்சிமுறை என்றும் நாம் இன்றுவரையிலும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

 

மேலே விவரித்த ஜனநாயகப் படுகொலை முடிந்து, ஆறு மாதங்கள் கழித்து, 1952 அக்டோபரில் வெளியான “பராசக்தி” திரைப்படமும் அப்படித்தான் நம்பியது. படத்தில் முக்கால் பாகக் கதை போன பிறகு, எஸ். எஸ். ராஜேந்திரன் மீண்டும் கதைக்குள் வருவார். பர்மாவிலிருந்து உயிர் பிழைத்து வரும்போது ஒரு காலை இழந்து, உயிர் பிழைத்திருக்க பிச்சையெடுத்து, அகதி முகாமில் சேர வரும் தமிழர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவருக்கும் அவரோடு வந்த கூட்டத்தினருக்கும் அகதி முகாமில் இடம் கிடைக்காமல் போகும். அனைவரும் அருகில் இருக்கும் ஒரு மரத்தடியில் கூடி பேசுவார்கள்.

 

அப்போது எஸ். எஸ். ஆர் கூட்டத்தினரிடையே உரையாற்றுவார். பிச்சைக்காரர்கள் மாநாடு ஒன்றை கூட்டப்போவதாக அறிவிப்பார். பிச்சைக்காரர்களுக்கு வாக்குரிமை கோரி பெற்று, சமுதாயத்தைப் புரட்டிப்போடும் புரட்சியை செய்யப்போவதாகச் சபதமிடுவார்.

 

65 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. 15 சட்டமன்ற தேர்தல்களையும், 16 நாடாளுமன்ற தேர்தல்களையும் மக்கள் பார்த்துவிட்டார்கள். தேர்தல்கள் மீதான நம்பிக்கையும் ஜனநாயகத்தின் மீதான பார்வையும் இருக்கும் நிலை என்ன?

 

கடந்த வருடம் வெளியான “சர்க்கார்” திரைப்படமும், இவ்வருடத் துவக்கத்தில் வெளியான “எல் கே ஜி” திரைப்படமும் மக்களின் மனநிலையை ஓரளவு பிரதிபலித்திருக்கின்றன என்று கருதலாம்.

 

ஒரு வாக்கு – ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, அதை எக்காரணம் கொண்டும் இழக்கக்கூடாது என்று வலியுறுத்தியது “சர்க்கார்”. வாக்காளர்களை ஏமாற்ற எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளின் செயல் நுணுக்கங்களை விவரிக்கிறது “எல் கே ஜி”.

 

இரண்டு திரைப்படங்களும், இறுதியில் தவறு இழைப்பவர்கள் வாக்காளர்களே என்று குற்றம் சுமத்துகின்றன. வாக்காளர்கள் செய்யும் தவறுகளாக இரண்டைக் குறிப்பிடுகின்றன. ஒன்று, அரசியல்வாதிகள் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. மற்றது, மோசமான வேட்பாளர்கள் என்று தெரிந்தும் வாக்களிப்பது; படித்த, நேர்மையான, சமூக அக்கறை கொண்ட வேட்பாளர்களைப் புறக்கணிப்பது.

 

இவ்விரண்டு குற்றசாட்டுகளை வாக்காளர்கள் மீது சுமத்துவதோடு, வாக்களிக்கும் ஜனநாயக க் கடமையை, சரியான முறையைல் நிறைவேற்றத் தவறுபவர்களை நோக்கி, “நீ ஒரு மனுசன் தானா? ஆண் மகன் தானா?” என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.

 

ஒரு ஜனநாயக உரிமை என்ற நிலையில் இருந்து, கடமை, நேர்மை, மனித மாண்பு, ஆண்மை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக இவ்விரு திரைப்படங்களும் வாக்குரிமையை உருப்பெருக்கி காட்டுகின்றன. தேர்தல் = ஜனநாயகம் = வாக்குரிமை = கடமை = நேர்மை = மனித மாண்பு = ஆண்மை என்ற ஒரு சமன்பாட்டை பிரச்சாரம் செய்கின்றன.

 

1952 இல் பிச்சைக்காரர்களுக்கு வாக்குரிமை பெற்று சமுதாயப் புரட்சி செய்யபோவதாக கிளம்பிய தமிழ் சினிமாவின் அரசியல் புரிதல், 2019 இல் “காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுறியே உனக்கு வெட்கமா இல்ல?” என்று மக்களை கேவலப்படுத்தி கேள்வி கேட்கும் நிலைமைக்கு வந்து நின்றிருக்கிறது.

 

எந்தக் கட்சியையும் நம்ப முடியாது, எந்த அரசியல்வாதியும் நேர்மையானவர் இல்லை என்ற அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பார்த்து, இவ்வாறு கேள்வி கேட்டுவிட்டு, படித்தவர்கள், நேர்மையானவர்கள், சமூக சேவகர்கள், நேர்மையான ரிட்டையர்ட் ஐஏஎஸ் அதிகார்கள் போன்றவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று புத்திமதியும் சொல்கின்றன.

 

ஆனால், தேர்தல் = ஜனநாயகம் என்ற நம்பிக்கை மட்டும் மாறவில்லை.

 

தேர்தல்கள் மூலம் ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து, அதிகாரத்தில் அமர்த்தி, ஆட்சி செய்ய வழிவகுக்கும் ஆட்சிமுறை ஜனநாயக ஆட்சிமுறைதானா என்ற கேள்வியை நமது திரைப்படங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளோ, அரசியல் ஆய்வாளர்களோகூட எழுப்பிப் பார்க்கவே இல்லை.

 

இந்த சந்தர்ப்பத்தில், நமது “மண்ணின் ஜனநாயக பாரம்பரியம்” குறித்து எவரேனும் கேள்வி எழுப்பினால், சட்டென்று இடைக்கால சோழர் காலத்தில் நிலவிய “குடவோலை முறை”யை ஞாபகப்படுத்துவார்கள். நீண்ட நெடிய ஜனநாயக பாரம்பரியம் மிக்கது நமது நாடு என்று பெருமை பேசத் தொடங்கிவிடுவார்கள்.

 

ஆனால், அந்தக் “குடவோலை முறை”யில், வாக்குரிமை என்ற உரிமையோ, வாக்குகளை செலுத்தி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையோ இருக்கவில்லை என்ற முக்கிய அம்சத்தின் மீது மட்டும் கவனத்தைக் குவிக்கத் தவறிவிடுவார்கள்.

 

இந்தக் “குடவோலை முறை”க்கு ஒப்பான முறைகளில், வேட்பாளர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதிக்கும் ஆட்சிமுறைதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, ஏதென்ஸ் நகரத்திலும், பல கிரேக்க நகரங்களிலும் நிலவி வந்த ஆட்சிமுறை. அதைத்தான் ஜனநாயக ஆட்சிமுறை என்று வரலாற்று ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.

 

பண்டைய கிரேக்க உலகின் தலைசிறந்த தத்துவ அறிஞர்களில் ஒருவரான அரிஸ்டாட்டில், தேர்தல் என்பது மேட்டுக்குடியினரின் (aristocracy) குழு ஆட்சிக்கான (oligarchy) முறை; குலுக்கலில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களின் ஆட்சியான ஜனநாயகத்திற்கான முறை என்று வலியுறுத்தியிருப்பார். 65 ஆண்டுகால தேர்தல் ஆட்சி முறையின் மோசமான அனுபவங்களுக்குப் பிறகு, தேர்தல் = ஜனநாயகம் என்ற நம்பிக்கையைப் பரிசீலனை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாமும் ஆளாகியிருக்கிறோம்.

 

(தொடரும்… )

நன்றி: விகடன்

தொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்!

அமித் பகாரியா என்ற பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பார்கள்? தானுண்டு தன் பிழைப்புண்டு என்று வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருக்கும் சராசரி குடிமக்கள் பெரும்பாலானோரில் எவரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள் என்று உறுதிபட கூறிவிடலாம்.

 

ஆனால், அமித் பகாரியா எவரும் அறிந்திராத அல்லது ‘எல்லோரும் அறிந்த, எங்கும் நிறைந்த’ சராசரிக் குடிமகன்களில் ஒருவர் இல்லை. இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர். 1938 இல் இருந்து வணிகத்திலும் 1949 இல் இருந்து தொழில் துறையிலும் முதலீடு செய்து வெற்றிகரமாக இயங்கி வரும் வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். 1992 இல் குடும்பத் தொழிலை நிர்வகிப்பதிலிருந்து விலகிக்கொண்டு, சொந்தமாக மருத்துவத்துறை சார்ந்த தொழிலை ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் டாட்டா, ரிலையன்ஸ், பிர்லா, சகாரா, போன்ற பெரும் நிறுவனங்களுடன் 2000 கோடி வர்த்தகம் செய்தவர்.

அதிக விற்பனையை எட்டிய மருத்துவ கட்டுமான திட்டமிடுதல் குறித்த நூல் ஒன்றை எழுதியவர். இந்தியன் எக்ஸ்பிரஸ், இமேஜஸ் ரீடெய்ல், இமேஜஸ் மெயில் இயர்புக் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதியவர். இந்தியாவின் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் இவரைப் பற்றி கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. பிபிசி, சிஎன்பிசி, என்டிடிவி, ஸ்டார் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளிலும் இவரைப் பற்றிய செய்திகளும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. சுருங்கக் கூறினால், இந்தியாவின் மேட்டுக் குடியினர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அவர்களில் ஒருவர்.

 

அமித் பகாரியா தொழில் – வணிகம் என்ற வட்டத்தோடு தன்னைச் சுருக்கிக்கொள்பவரும் இல்லை. அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டி வருபவர். போர்த்திற வல்லுநர் – strategist என்று தன்னைப் பற்றி தானே சொல்லிக்கொள்பவர். அவருடைய வலைப்பக்கத்தில் தன்னை அவ்வாறே  அறிமுகம் செய்துகொள்கிறார். (பார்க்க:https://www.amitbagaria65.com/home/tag/1914%3A%20NaMo%20or%20MoNa). நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்.

 

இந்தியாவை காக்க கடவுள் எடுத்த அவதாரமே நரேந்திர மோடி என்ற பாஜக தீவிர தொண்டர்களின் நம்பிக்கையை அனுசரனையோடு பார்ப்பவர். இக்கருத்தை முன்மொழிந்து தொடங்கும் கட்டுரை ஒன்றை அவரது வலைப்பக்கத்தில் காணலாம். மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும் என்ற தீவிரமான விருப்பத்தை கொண்டிருப்பவர். அதன்பொருட்டு, கடந்த ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட நூல் தான் ‘1914 – நமோ ஆர் மோனா’ (1914: NaMo or MoNa).

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இந்நூலில் அலசும் இவர், அதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார். பாஜக-வின் செல்வாக்கு பல மாநிலங்களிலும் சரிந்திருப்பதையும் தென்மாநிலங்களில் பாஜக இன்னும் காலூன்றவே இல்லை என்பதையும் விலாவாரியாக அலசியிருக்கும் இந்நூலில், இந்நிலைமை தொடர்ந்தால், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எதிர்கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அவர்கள் மமதா பானர்ஜியை பிரதம மந்திரியாக தேர்தெடுப்பார்கள் என்றும் கணிக்கிறார்.

ஆனால், நூலின் சுவாரசியம் இந்தக் கணிப்பில் இல்லை. சரிந்திருக்கும் செல்வாக்கை மீட்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி  பெறுவதற்கு நரேந்திர மோடி அரசு செய்யவேண்டியவை என்ன என்று இவர் கூறும் ஆலோசனைகள் சுவாரசியம் மிக்கவை என்பதையும் மீறி அதிர்ச்சி தரக்கூடியவை.

 

அந்த ஆலோசனைகள் பின்வருமாறு:

1. தேர்தலுக்கு ஆறு அல்லது ஐந்து வாரங்களுக்கு முன்பாக, தாவூத் இப்ராஹீம் அல்லது ஹசீஃப் சையது (லக்‌ஷர் – இ – தய்பாவின் நிறுவனர்களில் ஒருவர்) ஆகிய இருவரில் ஒருவரை கொன்று இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும். அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்களின் மீது ஒரு ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ தாக்குதலை தேர்தலுக்கு முன்பாக தொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால், பாஜக சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடும்.

2. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகிய மூவரையும் ஊழல் வழக்குகளில் கைது செய்யவேண்டும். இவர்களோடு, ப. சிதம்பரத்தையும் ஊழல் வழக்கில் கைது செய்யவேண்டும். அதோடு, விஜய் மல்லய்யா அல்லது நீரவ் மோடி ஆகிய இருவரில் ஒருவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும். மேலே குறித்துள்ள முதல் ஆலோசனையோடு சேர்த்து இவற்றையும் செய்தால், பாஜக 350 -ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையை எட்டிவிடும்.

 

3. மேலுள்ள இரண்டு ஆலோசனைகளையும் ஒரு மாற்று வழியாகத்தான் அமித் பகாரியா முன்மொழிகிறார். அவர் சொல்லும் முதல் ஆலோசனை இன்னும் தீவிரமானது. பாகிஸ்தான் மீது 7 – 10 நாட்களில் முடியக்கூடிய குறுகிய கால போர் ஒன்றை தொடுத்து, பாகிஸ்தான் என்ற நாட்டை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடவேண்டும் என்பதுதான் அவர் சொல்லும் முதல் ஆலோசனை.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்று உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்பட்டு இருப்பதாலும், அதன் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டிப்பான நிலையை எடுத்திருப்பதாலும், இந்தப் போரை உலக நாடுகள் எதிர்க்கமாட்டார்கள் என்றும், 7 – 10 நாட்களில் போரை வெற்றிகரமாக முடித்துவிடலாம் என்றும் சர்வ சாதாரணமாக சொல்லிச் செல்கிறார் அமித் பகாரியா.

 

அமித் பகாரியாவின் இந்த ஆலோசனைகள் ஏதோ ஒரு பெரும் பணக்காரரின் அசட்டுத்தனமான பேச்சு அல்ல. பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிலிருந்து, உயர்மட்ட தலைவர்கள் வரை பலருக்கும் இருக்கக்கூடிய சிந்தனையை,  வெளிப்படுத்தியுள்ளார் அமித் பகாரியா என்றே சொல்லவேண்டும்.

காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் என்ற செய்தி வெளியானவுடன், “மக்களுடைய இரத்தம் கொதித்துக்கொண்டு இருக்கிறது” என்று நரேந்திர மோடி எதிர்வினை ஆற்றியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அண்டை நாட்டின் மீது போர் தொடுப்பதுதான் கடைசி ஆயுதம் என்றால் அதற்கு பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிலிருந்து உயர்மட்ட தலைவர்கள் வரை தயங்கமாட்டார்கள் என்பதை வெளிப்படையாக சொன்ன அமித் பகாரியாவின் ‘சிந்தனையை’ பாஜக தலைவர்கள் நடைமுறையில் பிரயோகம் செய்ய தயாராகிறார்களோ என்று எண்ணச் செய்கிறது அவருடைய எதிர்வினை.

அப்படி ஒரு போர் தொடுக்கப்பட்டால், அது அண்டை நாட்டின் மீதான போராக மட்டும் இருக்காது. சொந்த நாட்டில் தனது எதிரிகள் என்று கருதுவோர் மீதும் பாஜக தொடுக்கும் போராகவும் நீளும்.

 

நன்றி: நக்கீரன்

லேட்டஸ்ட்டா வந்தாலும் லேட்டா வந்த “பேட்ட”

குறிப்பு: எடிட் செய்யப்பட்டவை  – சேர்க்கப்பட்டவை நீல நிறத்திலும் விலக்கப்பட்டவை பகர அடைப்புக் குறிகளுக்குள் நீல நிறத்திலும்.

 

மாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன… – இனி ஒரு காளி சாத்தியமா?

 

 

‘பேட்ட’, ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட படம். அவ்வகையில் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நல்ல திரைப்படங்களைத் தரக்கூடியவர். இப்போது மசாலா மரணமாஸ் படங்களைத் தருவதிலும் வல்லவர் என்பதை காட்டியிருக்கிறார். ‘மரணமாஸ்… மரணமாஸ்’ என்கிறார்களே, அது என்ன என்பதையும் கச்சிதமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

 

மரணமாஸ் என்றால் என்ன? எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதுதான் என்று யாரும் வரையறுத்து சொன்னதாகத் தெரியவில்லை. சிலர் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவது மாஸ் என்று நினைக்கிறார்கள். சிலர், கதாநாயகன் பத்து ஆட்களை அடித்து தூள் பறத்துவது என்று நினைக்கிறார்கள். சிலர் அசத்தலான, அலட்டலான நடிப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அதன் நாடித்துடிப்பைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதோடு, படத்தின் ஒரு  காட்சியில் அதை மிகத் துல்லியமாக குறிப்பிட்டும் காட்டியிருக்கிறார்.

 

ரஜினியும் விஜய் சேதுபதியும் முதன்முதலாகச் சந்திக்கும் காட்சியில், ரஜினி  விஜய் சேதுபதியை மடக்கி நாற்காலியில் உட்கார வைக்கிறார். விஜய் சேதுபதி ரஜினியை நோக்கி, “மாஸு” என்கிறார். ‘மாஸ்’ எனப்படுவது என்ன என்பதை இக்காட்சியில்தான் கார்த்திக் சுப்புராஜ் கனகச்சிதமாக, இரத்தினச் சுருக்கமாக குறித்துக்காட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, ‘மாஸ்’ எனப்படுவது யாதெனின், கதாநாயகன் வில்லனை சாமர்த்தியமாக மடக்கி காட்டுவது – out smart செய்வது. அதைச் சற்று பெரிய அளவில் அட்டகாசமாக செய்தால் ‘மரணமாஸ்’. மாஸ், மரணமாஸ் குறித்த அறிவுப்பூர்வமான வரையறை இவ்வளவுதான். பஞ்ச் டயலாக் பேசுவது, பத்து பேரை அடித்து தூள் கிளப்புவது, ஸ்டைல் செய்து காட்டுவது, தங்கச்சி சென்டிமெண்ட், நண்பனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பது, நீதிக்குத் தலை வணங்குவது, இவை எல்லாமும் இதற்கு உட்பட்டதுதான்.
கதாநாயகன் வில்லனை out smart செய்யவேண்டிய தேவை என்ன? மரணமாஸ் ஏன் முளைக்கிறது?கதாநாயகன் பலசாலிதான். ஆனால் அவனிடத்தில் பலவீனங்கள் உண்டு. தங்கச்சி பாசம், காதல், நட்பு, நீதி – நியாயத்திற்குக் கட்டுப்படுவது போன்றவைதான் அவனுடைய பலவீனங்கள். வில்லன் கதாநாயகனை காட்டிலும் பலவீனமானவன்தான். ஆனால், அவனுக்கு மேலே சொன்ன பலவீனங்கள் எதுவும் கிடையாது. எந்த நியதிக்கும் கட்டுப்படாதவன் அவன். அதுவே அவனுக்கு அளவில்லாத பலத்தைத் தந்துவிடுகிறது. ஆகையால், அவன் கதாநாயகனை விட பலசாலியாக ஆகிவிடுகிறான். மூர்க்கமான பலத்தோடு, வெல்லமுடியாத சக்தியாக உருப்பெற்றுவிடுகிறான்.

 

வெல்லமுடியாத சக்தியாகத் தோன்றும் வில்லனை, தன்னைக் கட்டுப்படுத்தும் பலவீனங்களை இழந்துவிடாமல் முறியடித்து வெற்றி பெறவேண்டிய கட்டாயம் கதாநாயகனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஒன்று, கதாநாயகன் தன் முழு பலத்தையும் திரட்டி வில்லனோடு நேருக்கு நேர் மோதி அழிக்கவேண்டும். அது வாழ்வா சாவா போராட்டம். அல்லது, தனது புத்திசாலித்தனத்தால், சற்றும் எதிர்பாராத கோணத்தில் வில்லனை தாக்கி அழிக்கவேண்டும். பலம் அல்லது புத்திசாலித்தனம் ஏதாவது ஒன்றால், கதாநாயகன் வில்லனை out smart செய்தே ஆகவேண்டும். மாஸ் – மரணமாஸ் படங்கள் அனைத்திற்கும் இதுதான் பொது நியதி, அடிச் சரடு. “பேட்ட” படத்திலும் இந்த அடிச்சரட்டைக் கதையில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சுவாரசியமாக நகர்த்தி சென்று, மீண்டும் செய்துகாட்டியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

 

தன்னைவிட பலமடங்கு பலமான சக்தியாக உருவாகிவிட்ட வில்லனையும் அவனது மகன் கதாபாத்திரமாக வரும் விஜய் சேதுபதியையும் இந்த ‘மாஸ்’ ஃபார்முலாவின் மூலம் out smart செய்து முறியடிக்கிறார் கதாநாயகன் ரஜினி. விஜய் சேதுபதியை தன் மகன் என்று நம்ப வைக்கிறார். விஜய் சேதுபதியையும் நம்ப வைக்கிறார், பார்வையாளர்களையும் நம்ப வைக்கிறார். விஜய் சேதுபதியைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, வில்லனை அவன் கோட்டைக்குள் புகுந்தே தாக்கி அழிக்கிறார்.

 

க்ளைமாக்சில் தான் விஜய் சேதுபதியை தன் மகன் என்று சொன்னது, வில்லனை முறியடிக்கச் செய்த `ராஜ தந்திரம்` என்ற உண்மையை ரஜினி வெளிப்படுத்துகிறார். விஜய் சேதுபதி அதிர்ச்சியில் உறைந்து கல்லாய் சமைந்திருக்க, பார்வையாளர்களுக்கும் எதிர்பாராத திருப்பத்தினால் ஆச்சரியம். ஆனால், அந்த ஆச்சரியத்தை அதன் இயல்பான முடிவிற்கு கொண்டுசென்றுவிடாமல், அதாவது, ரஜினி விஜய் சேதுபதியை கொல்கிறாரா இல்லையா என்பதை  காட்டிவிடாமல், ரஜினி காமிராவை நோக்கி துப்பாக்கியை நீட்ட, படக்கென்று கட் செய்து, சாமர்த்தியமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். இப்படி “விட்ட குறை தொட்ட குறையாக” படத்தை முடித்திருப்பதால் பார்வையாளர்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக, முழுத் திருப்தியே கிடைத்திருக்கும்.

 

‘மக்கள் திலகம்’ என்று பெயரெடுத்த எம்ஜிஆருக்கு பிறகு, ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டப் பெயரைப் பெற்றிருப்பவர் விஜய் சேதுபதி. அவர் [தங்களின் அபிமான நட்சத்திரம்]  திரையில் கொல்லப்படுவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள [சகித்துக்கொள்ள] மாட்டார்கள் என்பதை தெளிவாக உணர்ந்தே இயக்குனர், படத்தை அப்படி முடித்திருக்கிறார் என்று கருதலாம். ஒருவேளை இயக்குனர் ‘பேட்ட 2’ என்று அடுத்த படத்தைத் தருவதற்கான முத்தாய்ப்பாகக் கூட அவ்வாறு முடித்திருக்கலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த ‘விட்ட குறை தொட்ட குறை’ முடிவு மற்றொரு திரைப்படத்தை நினைவிற்கு கொண்டுவந்துவிடுகிறது. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1979 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்ட ‘நான் வாழவைப்பேன்’ என்ற திரைப்படம். திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்களில்தான் ரஜினிகாந்த் படத்தில் தோன்றுவார். ஆனால், திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், ரஜினிகாந்த் வரும் அந்தக் கடைசி 20 நிமிடங்கள்தான் [நிமிடங்களுக்காகத்தான்]. இளையாஜாவின் அருமையான பின்னணி இசையில், நான்கு ஹிட் பாடல்களும் உண்டு.

 

அந்தக் கால கட்டத்தில், சிவாஜி கணேசன், தொப்பையை மறைக்க, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கோட் போட்டே நடித்துக்கொண்டிருந்தார். மார்க்கெட்டைத் தக்க வைக்க, இளம் கதாநாயகிகளான லட்சுமி, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து மரத்தைக் கட்டிப் பிடித்து டூயட் பாடல்களில் சிவாஜி கணேசன் நடித்துக்கொண்டிருந்த காலமது. இளம் கதாநாயகிகளோடு ஜோடி சேர்ந்து நடித்த பிறகு, அடுத்த கட்டமாக, வளர்ந்து கொண்டிருந்த புதிய கதாநாயகர்களைத் துணைக் கதாபாத்திரங்களாக நடிக்க வைக்கும் படலமும் சிவாஜி கணேசனுக்கு ஆரம்பமானது. அவ்வாறான முதல் படம் “ஜஸ்டிஸ் கோபிநாத்“. அதில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த்.

 

அடுத்த படம்தான் ‘நான் வாழவைப்பேன்’. 1978 -இல் ரஜினிகாந்தின் ஹிட் ‘ப்ரியா’. 1979 -இல் ரஜினிகாந்தின் மெகா ஹிட் படங்கள், ‘குப்பத்து ராஜா’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘தர்ம யுத்தம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘அன்னை ஓர் ஆலயம்’. அதே ஆண்டு ரஜினிகாந்தும் கமலும் சேர்ந்து கொடுத்த மெகா ஹிட், ‘நினைத்தாலே இனிக்கும்’. 1980 இல் ரஜினிகாந்த்தின் மெகா ஹிட் ‘பில்லா’.

 

40 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

 

இப்போது ரஜினிகாந்த் 1979-இல் சிவாஜி கணேசன் இருந்த நிலைக்கு வந்திருக்கிறார். தன்னை விட மிகவும் [30 – 40]  வயது குறைந்த இளம் கதாநாயகிகளோடு ஜோடி சேர்ந்து டூயட் பாடி முடித்து, அடுத்த கட்டமாக, வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களைத் துணைக் கதாபாத்திரமாக இணைத்துக்கொள்ளும்  கட்டத்திற்கு வந்திருக்கிறார். [அதன் ஆரம்பம்தான் விஜய் சேதுபதி.]  

 

1979 –இல் சிவாஜி கணேசனுக்கு ரஜினியை போல, 2019 -இல் ரஜினிகாந்துக்கு விஜய் சேதுபதி. அதனால்தானோ என்னவோ படத்தின் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி கணேசன் நடித்த “பாவ மன்னிப்பு” படத்திலிருந்து “வந்த நாள் முதல் இந்த நாள் வரை” பாடலை பின்னணி இசையாக கொண்டு படம் தொடங்குகிறது. “புதிய பறவை”-படத்திலிருந்து “உன்னை ஒன்று கேட்பேன்” பாடலும்கூட.

 

கடைசியாக, படம் ‘முள்ளும் மலரும்’ படத்திலிருந்து “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே“ என்ற பாடலை நினைவு கூர்ந்து முடிகிறது. அப்படத்தில் ரஜினி நடித்த ‘காளி’ கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு பாத்திரம். ஆனால், அதன் சிறப்பு முழுக்க முழுக்க, அப்படத்தின் இயக்குனர் மகேந்திரனுக்கே உரியது. அத்தகைய ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த மதிப்பு ரஜினிக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அக்காலத்தில், ரஜினிகாந்த் ‘சூப்பர் ஸ்டாராக’ உருப்பெற்றிருக்கவில்லை. நல்ல நடிகராக இருந்தார். நன்றாக நடித்துக்கொண்டிருந்தார். அவர் ‘சூப்பர் ஸ்டாராக’ உருமாறியது[தான்] ஒரு வகையில் தமிழ் சினிமாவிற்கு இழப்பு.

 

ரஜினிகாந்த் ‘சூப்பர் ஸ்டாராக’ மாறி 20 ஆண்டுகள் கழிந்து,  ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அதை தூக்கி நிறுத்த கார்த்திக் சுப்புராஜ் போன்ற திறம் மிக்க இயக்குனர் தேவைப்படுகிறார். என்றாலும் அது 100 சதவிகிதம் சாத்தியமில்லை, அதுதான் நிதர்சனம். மகேந்திரனே நினைத்தாலும் அது சாத்தியமில்லை. ‘காளி’, சூப்பர் ஸ்டாருக்கு முந்தையவன்.

 

[ரஜினிகாந்த் “சூப்பர் ஸ்டாராக“ மாறி 20 ஆண்டுகள் கழிந்து, அப்பட்டத்தை துறக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதை தூக்கி நிறுத்த கார்த்திக் சுப்புராஜ் போன்ற திறம் மிக்க இயக்குனர்களாலும் இனிமேலும் சாத்தியமில்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றில் சிறந்தவர்களில்  ஒருவராக மதிக்கத்தக்க இயக்குனர் மகேந்திரனே நினைத்தாலும் இனி ரஜினிகாந்தை “முள்ளும் மலரும்” காளியாக நடிக்க வைப்பது சாத்தியமில்லை.

“காளி“ காணாமல்போய் 40 வருடங்களாகிவிட்டது. அவ்விடத்தை நிரப்ப புதிய “காளி”கள் பலர் உருவாகியிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வது நலம். ]

நன்றி: நக்கீரன்

எதிமுக

குறிப்பு: பல வருடங்கள் கழித்து நல்ல முறையில் எடிட் செய்து வெளியிடப்படும் வாய்ப்பு இக்கட்டுரைக்குக் கிடைத்தது. “தினமணி கதிர்”-இல் எடிட்டராக இருந்த, சுகதேவ் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்த நண்பரிடம் முதலில் இத்தகைய அனுபவம் வாய்க்கப்பெற்றது. இப்போது மீண்டும் “நக்கீரன்” இணைய தளத்திற்கு பொறுப்பாக இருக்கும் எடிட்டர் அத்தகைய அனுபவத்தைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி. வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள நான் எழுதி அனுப்பி, எடிட் செய்யப்பட்டிருப்பவற்றை நீல நிறத்தில் பகர அடைப்புக் குறிகளுக்குள் இணைத்திருக்கிறேன். 

இப்போ இட்லி பில் இவ்வளவு, அப்போ ஸ்வீட் பில் அவ்வளவு… – எதற்கு ஆவேசம் அமைச்சரே?

 

சென்ற வருடத்தின் இறுதி நாளன்று, விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் ஆவேசம் பொங்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை உருவாக்கியிருக்கின்றன. ஆதரித்தும் மறுத்தும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பரபரப்பில் அமைச்சர் சி. வி. சண்முகம் குறிப்பிட்ட ஒரு முக்கிய தகவல் மட்டும் ஏனோ அதற்குரிய அலசலைப் பெறத் தவறிவிட்டது.

 

78 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றும் மரணமுற்ற [உச்சநீதிமன்றத்தால் “அக்யூஸ்ட் நம்பர் 1” என்று குற்றம்சாட்டப்பட்ட,]  முன்னாள் முதல்வர்   ஜெயலலிதா 1 கோடியே 17 லட்சம்  ரூபாய்க்கு இட்லி, தோசை, உப்புமா சாப்பிட்டார் என்று செலவுக் கணக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்தான் அந்த செய்தி.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆமோதித்திருக்கிறார். சசிகலா குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் அறை எடுத்து 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசாக இருந்ததால்தான் அவ்வளவு செலவு ஆகியிருக்கிறது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவேண்டியிருக்கிறது. என்ன ஆனாலும் அமைச்சர்களுக்கு வரலாறு முக்கியமல்லவா!

உச்சநீதிமன்றத்தால் “அக்யூஸ்ட் நம்பர் 1” என்று குறிப்பிடப்பட்ட முன்னாள் முதல்வர் “மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்” மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரது வரவு – செலவுக் கணக்குகளைப் பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், நீளமானதொரு செலவுக் கணக்குப் பட்டியலை பார்வையிட்டுத் தந்திருக்கிறது.

1.07.1991 முதல் 30.04.1996 வரையிலான அந்த செலவுக் கணக்கு, பிற்சேர்க்கை நான்காகத் தரப்பட்டுள்ளது. 570 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 30 பக்கங்களுக்கு நீளும் இந்த பிற்சேர்க்கையில் (பக்: 36 – 66) மொத்தம் 248 செலவினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இவற்றில் எண் 86-லிருந்து 115 வரை, சற்று தள்ளித் தரப்பட்டுள்ள எண் 128-ம் சேர்த்து, 3 பக்கங்களுக்கு நீளும் மொத்தம் 31 செலவினங்கள் இனிப்புக் கடைகள், ஓட்டல்களுக்கு செய்யப்பட்ட செலவுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு செய்யப்பட்ட எண் 86 செலவைத் தவிர மற்ற அனைத்தும் 1992 ஆம் ஆண்டு, பெரும்பாலும் மே மாதத்தில் செய்யப்பட்ட செலவுகள்.

அந்த செலவினங்கள் பின்வருமாறு:

86) அடையார் கேட் ஹோட்டலுக்கு (19.09.95)           ரூ. 1,75,246.25

87) அகர்வால் ஸ்வீட்ஸ் (23.05.92)                       ரூ. 12,000.00

88) விஜயலட்சுமி ஸ்வீட்ஸ் (29.05.92)                   ரூ. 12,320.00

89) கேஃப்டீரியா (21.05.97) (92) (97 அச்சுப்பிழை)         ரூ. 19,600.00

90) எக்மோர் பவன் (15.05.92)                           ரூ. 19,300.00

91) அரசன் ஸ்வீட்ஸ் (21.05.92)                         ரூ. 16,225.00

92) வசந்த பவன் (27.05.92)                             ரூ. 11,160.00

93) அர்ச்சனா ஸ்வீட்ஸ் (21.05.92)                       ரூ. 75,675.00

94) ஆரிய பவன் (22.05.92)                             ரூ. 77,580.00

95) வெல்கம் ஓட்டல் (09.05.92)                         ரூ. 22,000.00

96) அசோக் பவன் (03.06.92)                             ரூ. 21,250.00

97) பாம்பே மில்க் (25.5.92)                             ரூ. 7,500.00

98) பாம்பே ஸ்வீட் ஸ்டால் (25.09.92)                   ரூ. 15,000.00

99) சென்ட்ரல் கஃபே (30.05.92)                         ரூ. 48,645.00

100) காஃபி ஹவுஸ் (27.05.92)                           ரூ. 17,450.33

101) தேவநாதன் ஸ்வீட்ஸ் (23.05.97)/(2)                 ரூ. 18,042.00

102) கணபதி விலாஸ் (26.05.92)                         ரூ. 12,996.00

103) ஓட்டல் ஆகாஷ் (03.06.92)                         ரூ. 18,422.00

104) ஜோதி ஆனந்த பவன் (04.06.92)                     ரூ. 8,840.00

105) லட்சுமி விலாஸ் (04.06.92)                         ரூ. 1,880.00

106) மாஸ்டர் பேக்கரி (27.05.92)                         ரூ. 9,091.50

107) ஜெயராம் ஸ்வீட்ஸ் (01.06.92)                       ரூ. 10,224.00

108) மயில் மார்க் மிட்டாய்க் கடை (01.06.92)           ரூ. 39,000.00

109) நந்தினி (ஸ்வீட்ஸ்?) (15.05.92)                       ரூ. 21,000.00

110) நியூ ரமா கஃபே (26.05.92)                         ரூ. 74,342.25

111) நியூ அகர்வால் (26.05.92)                           ரூ. 14,000.00

112) நியூ பாம்பே ஸ்வீட்ஸ் (21.05.92)                   ரூ. 15,150.00

113) ராமலட்சுமி ஸ்வீட்ஸ் (03.06.92)                   ரூ. 16,637.40

114) ரொலாண்ட் பேக்கரி (18.06.92)                     ரூ. 13,302.90

115) சேலம் கஃபே (21.05.92)                             ரூ. 13,520.00

128) தமிழக இனிப்பகம் (01.06.92)                       ரூ. 27,000.00

மொத்த செலவு 8,64,399 ரூபாய் 63 காசுகள். இதன் இன்றைய மதிப்பு ஏறத்தாழ ரூ. 51,46,722 அதாவது அரை கோடியாகும்.

இந்த 31 செலவினங்களை எத்தனை நாட்களில் எப்படி செலவு செய்திருக்கிறார் என்று பார்த்தால் பிரமிப்பு தட்டிவிடும். 1995 ஆம் ஆண்டு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ. 1,75,246.25 செலவு செய்திருக்கிறார். 1992 மே மாதத்தில் மட்டும் 10 நாட்களில் ரூ. 5,17,597.08 செலவு செய்திருக்கிறார். 1992 ஜூன் மாதத்தில் 4 நாட்களில் ரூ. 1,56,556.30 – மும், செப்டெம்பர் மாதம் ஒரு நாள் ரூ. 15,000-மும் செலவு செய்திருக்கிறார்.

ஒரு மாதம் ஒரு நாள் (செப்டெம்பர் 1995) அதிகபட்சம் ரூ. 1,75,246.25 மும் ஒரு மாதம் ஒரு நாள் (செப்டெம்பர் 1992) குறைந்தபட்சம் ரூ. 15,000 மும், செலவு செய்திருக்கிறார் ஜெயலலிதா. 10 மடங்கு வித்தியாசம்.

அதாவது இன்றைய மதிப்பில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஏறத்தாழ 10 லட்சமும், குறைந்தபட்சமாக ஏறத்தாழ 1 லட்சமும் செலவு செய்யக்கூடியவர் அவர். இரண்டிற்கும் சராசரியை பார்த்தால்கூட நாளொன்றுக்கு 5 ½ லட்சம் செலவு செய்யக்கூடியவர்.

இது ஒரு நாளுக்கான அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியதன்று. இனிப்புப் பண்டங்களுக்காகவும் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிடுவதற்காகவும் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இனிப்புப் பண்டங்களுக்காகவும் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிடுவதற்காகவும் உடல்நிலை நன்றாக இருந்த நிலையில், நாளொன்றுக்கு சராசரியாக 5 ½ லட்சம். இதன்படி, மாதமொன்றுக்கு ஏறத்தாழ ஒரு கோடியே 65 லட்சம் செலவு செய்யக்கூடியவர் [மறைந்த “மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்”]. 78 நாட்களுக்கு 4 கோடியே 29 லட்சம் செலவு செய்திருப்பார் என்று கூட்டல் – வகுத்தல் – சராசரிக் கணக்கு சொல்கிறது. உடல்நிலை பாழ்பட்டு, வாழ்விற்காக போராடிக் கொண்டிருந்த 78 நாட்களிலோ [“மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்”,] 1 கோடியே 17 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பதாகக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இது அவருடைய சராசரி இனிப்புப் பண்ட, ஓட்டல் உணவு செலவை விட மூன்று மடங்கு குறைவு.

கணக்கு வழக்கு இப்படி இருக்க, சட்டத்துறை அமைச்சர் எதற்காக ஆவேசப்பட்டார் என்றுதான்  வியக்கவேண்டியிருக்கிறது. [எது எப்படியோ, எம் ஜி ஆர் ஆரம்பித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அதை “புரட்சி செல்வி” கைப்பற்றி, “அம்மா திராவிட முன்னேற்ற கட்சி”யாக ஆக்கிவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், கிடைக்கும் கணக்கு வழக்குகளை பார்த்தால், அது “அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” என்பதாக மாறிய பிறகு, வெகுசீக்கிரத்திலேயே “அம்மா தின்ற முன்னேற்றக் கழகம்” என்பதாக மாறி, “அம்மா” மறைந்த பிறகு, “அம்மாவால் தின்னும் முன்னேற்றக் கழகம்” என்பதாக மாறி, கடைசியில் “சும்மா தின்னும் முன்னேற்றக் கழகம்” அல்லது “எப்போதும் தின்னும் முன்னேற்றக் கழகம்” என்பதாக மாறிவிட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.]

ஒரு பக்கம் உண்மைகள் வெளிவர வெளிவர, இன்னொரு பக்கம் அமைச்சர்கள் ஆளாளுக்கு வாய் திறக்க, அதிமுகவுக்கு இப்போது எதிமுக தான். [எடிட்டரால் சேர்க்கப்பட்டிருக்கும் வரி]

எப்பக்கம் திரும்பினாலும் முட்டுக்கு கட்டைதான்.

நன்றி: நக்கீரன்

செத்தும் கொடுத்தான் சீதக்காதி

குறிப்பு: 22.12.18 மதியம் எழுதி ஒரு இதழுக்கு அனுப்பியது. இதுவரை வெளியிடுவது குறித்த தகவல் எதுவும் இல்லை. மேலும் காலம் தாழ்த்துவது சரியாக இருக்காது என்பதால் வலைத்தளத்தில் பதிவேற்றுகிறேன். 

 

மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தைத் தந்திருக்கிறார் பாலாஜி தரணீதரன். “செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்பதே படத்தின் கதைக் கரு.

 

சீதக்காதி என்ற பெயரில் எந்த ஒரு கதாபாத்திரமும் படத்தில் இடம் பெறவில்லை.  வள்ளல் சீதக்காதி யார் என்பதை பெரும்பாலான பார்வையாளர்கள் அறிந்திருப்பார்கள். அத்தகைய பெரும் வள்ளல் சீதக்காதி பற்றியும் படம் பேசவில்லை. பிறகு ஏன் படத்திற்கு சீதக்காதி என்ற பெயர்?

 

பெரும் கவிஞர்களை போற்றி வளர்த்த வள்ளல் சீதக்காதி போன்ற புரலவலர்கள் வாழ்ந்த காலம் முடிந்து நூற்றாண்டுகள் பல கடந்துவிட்டன. தெய்வங்களை போற்றும் காவியங்களையும், பாடல்களையும் இயற்றுவதே பெரும் பேறு என்று வாழ்ந்த கவிஞர்களின் காலமும் முடிந்துவிட்டது.

 

கலைஞர்கள் இனி மானுட வாழ்க்கையைப் பற்றித்தான் பேசியாகவேண்டும். அதன் வேடிக்கையை, விபத்தை, குரூரத்தை, அபத்தத்தை, பற்றிக்கொள்ள இருந்த ஒவ்வொரு நம்பிக்கையும் சிதைந்து போகும் அவலத்தை கூர்ந்து கவனித்து, இவை எல்லாவற்றையும் மீறி எந்த அடிப்படையும் ஆதாரமும் அர்த்தமும் அற்று தொடர்ந்துகொண்டிருக்கும் வாழ்வே ஒரு பெரும் பேறு என்பதைத் தம் படைப்புகளின் மூலம் பரந்துபட்ட வாசகர்கள் / பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதே கலைஞர்களின் பணி என்று ஆகிவிட்டது.

 

இத்தகைய ஒரு பணியைத் தம் தலை மீது சுமத்திக்கொண்ட கலைஞர்களுக்கு யார் புரவலர்களாக இருக்கத் துணிவார்கள்? கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கும் எந்தப் புதியப் பணக்காரர்கள் இத்தகைய கலைஞர்களை போற்றி வளர்க்க முன்வருவார்கள்?

 

ஆகையினால், கலைஞர்களே வள்ளல்களாக இருக்க ‘அருளப்பட்ட’ காலமிது. தாம் பெற்ற செல்வத்தை – அறிவு சேகரத்தை, கூர்மையான உணர்ச்சிமிக்க கலைப்படைப்புகளின் மூலம் பிறருக்கு அள்ளி வழங்கும் வள்ளல்களே இன்றைய உண்மையான கலைஞர்கள். (போலிச் சாமியார்கள் போல, போலிக் கலைஞர்களும் பெருகியிருக்கும் காலமிது. அவர்களை இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.)

 

அவ்வாறான ஒரு கலைஞன் – படத்தின் நாயகன் ஆதிமூலமே சீதக்காதி.

 

நாயகன் ஆதிமூலம் ஒரு நாடகக் கலைஞன். மிக இளம் வயதிலேயே நாடகத்தால் ஈர்க்கப்பட்டு, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன். சினிமாவிற்கான வாய்ப்புகள் வந்தபோதும், தான் விரும்பும் கலைக்காக, அதை விரும்பும் பார்வையாளர்களுக்காக அவற்றைத் துறந்தவன்.

 

‘காலத்தின் கோலத்தால்’ ஸ்மார்ட் ஃபோன்களில் தலையைக் கவிழ்த்து அமிழ்ந்திருக்கும், டாஸ்மாக் கடைகளில் வாழ்வை தொலைத்துவிட்டிருக்கும், பெரும் ‘மால்’களையும் அவற்றில் உள்ள திரையரங்குகளையும் மொய்த்துக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறை. இத்தலைமுறைக்கு நாடகக் கலை மீது நாட்டம் எப்படி வரும்?

 

ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நாடகக் கலைஞனான நாயகன், நடித்துக்கொண்டிருக்கும்போதே மேடையிலேயே இயற்கையாக சாகிறான். கலையும் நசிகிறது. கலைஞனும் சாகிறான்.

 

நாயகனின் மரணத்திலிருந்தே படத்தின் கதை நகரத் துவங்குகிறது. அவன் இறப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நீண்ட காலமே – 40 நிமிடங்கள் – பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.

 

நாயகனின் மரணத்திற்குப் பிறகு, அவனது நாடகக் குழுவினர் தொடர்ந்து நாடகங்களை நடத்த முடிவு செய்கிறார்கள். அவர்கள் நடத்தும் முதல் நாடகத்திலேயே, அதுவரை சாதாரணமாக நடித்துக்கொண்டிருந்த சிலருடைய திறமைகள் எதிர்பாராமல் சிறப்பாக வெளிப்படுகின்றன. இதைக் காணும் நாயகனின் நீண்டகால நண்பன் பரசுராம், நாயகனின் ஆன்மாவே அவர்களை அப்படி நடிக்க வைப்பதாக நம்புகிறார்.

 

இவர்களுடைய நாடகத்தை பார்க்க வரும் புதிய திரைப்பட இயக்குனர் ஒருவர், குழுவின் இளம் நடிகன் ஒருவனைத் தன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய முன்வருகிறார். அவரிடமும் நடிப்பது அந்த இளம் நடிகன் அல்ல, மறைந்த நாயகனின் ஆத்மாதான் என்று வலியுறுத்துகிறார் பரசுராம். நடிகனும் அதை நம்புகிறான். காரணம், அவன் சமீபமாகத்தான் குழுவில் சேர்ந்தவன். நடிப்பில் அவனுக்கு போதிய பயிற்சியும் கிடையாது.

 

இதை ஏற்றுக்கொள்ளும் புதிய இயக்குனர், இளம் நடிகனை ஒப்பந்தம் செய்துகொண்டு, நாயகனின் குடும்பத்தாருக்கே நடிப்பிற்கான தொகையை அளிக்கிறார். இளம் நடிகன் நடிக்கும் முதல் படம் பெரும் வெற்றி பெறுகிறது. புதிதாகக் கிடைத்த புகழின் மயக்கத்தில், இளம் நடிகன், பரசுராமை நிராகரிக்க தொடங்குகிறான்.

 

விஷயங்கள் வேடிக்கையும் விபரீதமும் கலந்த அபத்த நாடகமாக அரங்கேறத் தொடங்குகின்றன. தர்க்க ரீதியான காரண காரியங்கள், விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை அடையும் நோக்கில், கோடம்பாக்கத்துச் சினிமாத் தொழில், எந்தவிதமான முட்டாள்தனம் மூடத்தனத்தின் பின்னாலும் அலையத் தயாராக இருக்கும் அபத்தத்தின் சித்திரம் திரையில் விரியத் தொடங்குகிறது.

 

பரசுராமை நிராகரித்த கையோடு திரைப்பட காட்சியில் நடிக்கச்  செல்லும் இளம் நடிகனால், ஒரு சிறிய முகபாவனையைக்கூடச் சரியாக வெளிப்படுத்த முடியாமல் போகிறது. “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி நகைச்சுவையை தெறிக்கச் செய்த பாணியில், ஒரு முகபாவத்தை நடிக்க அந்த இளம் நடிகன் படும் பாட்டை, திரும்பத் திரும்ப செய்ய வைத்து, நகைச்சுவையால் அதிர வைத்திருக்கிறார் இயக்குனர்.

 

நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், இளம் நடிகனின் கவனச் சிதறலும் புகழ் மயக்கமும், என்பதாக இருக்க, அவனோ, தனக்கு நடிப்பில் போதிய பயிற்சி இல்லை என்பதால் பரசுராம் சொன்னதைப் போல, நாயகனின் ஆன்மாவே தன்னை நடிக்க வைத்தது என்று உறுதியாக நம்பத் தொடங்கிவிடுகிறான்.

 

விஷயம் காட்டுத் தீயைப் போலப் பரவுகிறது. தயாரிப்பாளர்கள் பரசுராமை நோக்கி படையெடுக்கத் தொடங்குகிறார்கள். ஒருவர், நாயகன் ஒரு நாடகத்தில் பெண் வேஷம் கட்டி நடித்ததைப் போல, தன் படத்தின் கதாநாயகியின் உடலில் புகுந்து நடிக்க கேட்கிறார். ஒருவர் இரட்டை வேட பாத்திரத்தில் நடிக்க கேட்கிறார். மற்றொருவர், குழந்தையாக நடிக்கவும் கேட்கிறார். நாயகனின் ஆன்மாவே பிறரை நடிக்க வைப்பதாக நம்பும் பரசுராமும் ஒப்புக்கொள்கிறார். அவரது ஒரே நிபந்தனை, நல்ல கதையுள்ள படமாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே.

 

நாயகனின் ஆன்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுத் தயாரிக்கப்படும் படங்கள் வெற்றி மேல் வெற்றி பெறுகின்றன. கதாநாயகப் பிம்பத்தை வழிபடும் “மாஸ் சினிமா” ரசிகர் பட்டாளம் இறந்து போன நாயகனுக்கும் “சூப்பர் ஸ்டார்” அந்தஸ்த்தை ஏற்றி வழிபடத் தொடங்குகிறது. இறந்து போன நாயகனின் ஆன்மா “அய்யா”வின் புகழ் பாடும்  பெரும் கும்பல் உருவாகிவிடுகிறது. சினிமாத் தொழில் தயாரிப்பாளர்களின் மூட நம்பிக்கை, “மாஸ் சினிமா” ரசிகர்களின் கதாநாயக வழிபாடு, இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தீனி போட்டு வளரும் அபத்தம் வெகு இலகுவாக சித்தரித்து காட்டப்படுகிறது.

 

சினிமாத் தயாரிப்பில் தகப்பனார் தொடங்கி 50 ஆண்டுகால அனுபவமுள்ள, கதாநாயகனாகும் கனவுள்ள ஒரு தயாரிப்பாளர், தன் சொந்தத் தயாரிப்பில் நாயகனின் ஆன்மாவை ஒப்பந்தம் செய்வதிலிருந்து விபரீதம் தொடங்குகிறது.

 

ஒப்பந்தம் செய்த கதைப்படி படத்தை எடுக்காமல், மசாலாத்தனமாக படத்தை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் பரசுராம். கதாநாயகனாக நடிக்கும் தயாரிப்பாளர் அவரை கேலி செய்து உதாசீனப்படுத்திவிட்டு அடுத்த காட்சியை நடிக்கச் செல்கிறார்.

 

நடிப்பில் கவனம் செலுத்தாமல், கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் அழகில் சொக்கி வழியும் கதாநாயகத் தயாரிப்பாளரால் ஒரு சிறிய முகபாவனையைக்கூட நடித்துக் காட்ட முடியாமல் போகிறது. இக்காட்சியிலும், ஒரு எளிய முகமாவனையைத் திரும்பத் திரும்ப நடிக்க வைத்து நகைச்சுவையால் அதிர வைத்திருக்கிறார் இயக்குனர்.

 

பரசுராமை நிராகரித்ததால்தான், நாயகனின் ஆன்மா, தன்னை நடிக்க வைக்கவில்லை என்று நம்பும் கதாநாயகத் தயாரிப்பாளர், பரசுராமிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். விரக்தியுற்ற மனநிலையில் இருக்கும் பரசுராம், இனி எதுவும் தன் கையில் இல்லை என்று கைவிரிக்கிறார்.

 

மீண்டும், நாயகனின் ஆன்மா, நடிக்க வரவில்லை என்ற செய்தியும், அதைத் தொடர்ந்து, நாயகனின் ஆன்மா இறந்துவிட்டதாகவும் காட்டுத்தீ போல் செய்தி பரவுகிறது. நாயகனின் ஆன்மாவை கொன்றது, கதாநாயக தயாரிப்பாளர்தான் என்று வழக்கு தொடுக்கிறார், உதவி இயக்குனர் ஒருவர். கோடம்பாக்கத்து சினிமா தொழிலின் அபத்தங்களை ஊதிப் பெருக்கிப் பிழைக்கும் ஊடகத் துறையினரின் ஒட்டுண்ணித்தனமும்கூட மிக இலகுவாக போகிற போக்கில் இடித்துக்காட்டப்படுகிறது.

 

நீண்ட வருடங்கள் கழித்து, நீண்டதொரு  கோர்ட் சீனை, சலிப்புத் தட்டிவிடாமல் நகர்த்திச் சென்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

 

திரைப்படத்தின் பிற்பாதியில் தொய்வு சிறிதும் இன்றி, விறுவிறுவென்று கதை நகர்ந்து செல்கிறது. திரும்பத் திரும்ப நடித்து காட்டப்படும் இரண்டு காட்சிகளில் அரங்கம் சிரிப்பலையால் அதிர்கிறது. இவ்விரண்டு காட்சிகள் தவிர்த்து, நுட்பமான முகபாவங்களிலும் வசனங்களிலும் வெளிப்படும் நகைச்சுவையையும் பார்வையாளர்கள் கவனிக்கத் தவறவில்லை.

 

இந்த நகைச்சுவை காட்சிகளின் அலையில், திரைப்படத்தின் மையக் கரு பார்வையாளர்கள் மனதில் பதிந்திருக்குமா என்பது மட்டுமே சிறிய சந்தேகமாக எழுகிறது. படத்தின் இறுதியில், நீதிபதியின் கூற்றாக அது வெளிப்படையாக சொல்லப்பட்டபோதிலும், பார்வையாளர்கள் அதை ஊன்றிக் கவனிக்கச் செய்யும் வலு சற்றே குறைவாக இருப்பதாக தோன்றுகிறது. கலையும் கலைஞர்களுமே வாழ்வின் நிதர்சனமான உண்மைகளை காட்ட வல்லவர்கள் என்பதே அது.

 

கோடம்பாக்கத்துச் சினிமா தொழிலின் அபத்தம் கலையையும் கலைஞர்களின் கூர்மையையும் எப்படியெல்லாம் புறக்கணிக்கிறது என்ற நுட்பமானச் சித்தரிப்பு பார்வையாளர்களின் மனதில் எந்த அளவிற்குப் பதிந்தது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

இறுதியாக, திரைப்படத்தின் பெரும் பலவீனம் அதன் முதல் 40 நிமிடங்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பார்வையாளர்களின் பொறுமையை சோதிப்பது என்ற அளவில் மட்டுமின்றி, அந்த 40 நிமிடங்களில் மையக் கருவைச் சொல்ல இயக்குனர் தேர்வு செய்திருக்கும் வடிவமும் பிழையானது.

 

நாடகக் கலையின் சிறப்பையும், நாடக நடிகர்களின் சிறப்பையும் சொல்ல “சபா நாடகங்கள்” சரியான தேர்வு அல்ல. நாடகக் கலை வடிவங்களிலேயே மிகவும் மலினமானது “சபா நாடகம்”. அதிலும் சென்னையை மய்யமாக கொண்டு செயல்பட்டுவந்த சபா நாடகங்கள் மிக மலினமான ரசனையும் கருத்துப் பிரச்சாரத்தையும் கொண்டவை. 1960 கள் வரை சென்னை தவிர்த்து, பிற சிறிய நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இயங்கிவந்த சபா நாடகக் குழுக்கள், கலையின் மீது பற்றும் பிடிப்பும் கொண்டிருந்தவை எனலாம். தமிழ் சினிமாவின் வரலாற்றை அறிந்தவர்கள், வாசித்து தெரிந்துகொண்டவர்கள், அத்தகைய சபா நாடகக் குழுக்கள், தமிழ் சினிமாவிற்கு அளித்த பெரும் கொடைகளை அறிவார்கள். 60 களோடு முடிந்துவிட்ட சகாப்தம் அது.

 

நாடகக் கலை, அதன் நடிகர்களின் சிறப்பு இரண்டையும் சினிமாவில் காட்டச் சிறந்த வடிவம், கூத்து மரபுதான். சபா நாடக மரபிற்கு மாறாக, கூத்துக் கலைஞர்களையும் நாடகங்களையும் கையாண்டிருந்தால், மேலும் உயிர்ப்புள்ளதாக படத்தின் முதல் 40 நிமிடங்கள் இருந்திருக்கும். கூத்தின் வடிவச் சிறப்புகளை காட்டி தொய்வில்லாமல் கதையை நகர்த்திச் சென்றிருக்கலாம்.

 

இப்பிழையையும் மீறி, தற்போதுள்ள வடிவத்திலேயே முதல் 40 நிமிடங்களில் இரக்கமின்றி வெட்டி எறிய நிறைய இடமிருக்கிறது. கருத்தைச் சிதைக்காமலேயே ஒரு 15 நிமிடங்களை எடிட் செய்ய இடமிருக்கிறது. பல திரைப்படங்கள் வெளியீட்டிற்குப் பின்னான ஒரு சில நாட்களில் அவ்வாறு எடிட் செய்யப்பட்டிருக்கின்றன. சொல்ல விரும்பும் மையக் கருத்து, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கவேண்டுமெனில், எந்த ஒரு கலைவடிவமும் நறுக்குத்தெறித்தார்போல இருக்கவேண்டியது அவசியம். செத்தும் கொடுத்த சீதக்காதி என்ற நிலைமை, அதன் துயர்மிக்க பொருளில் திரைப்படத்திற்கு ஏற்பட்டுவிடாமல் இருக்க அதைச் செய்வதில் பாதகம் எதுவும் இல்லை.

சினிமா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . செத்தும் கொடுத்தான் சீதக்காதி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2

ஜனகராஜ் குரலில் மிமிக்ரி செய்து, நடிகர் மயில்சாமி வெளியிட்ட பிரமாதமான காமெடி ட்ராக் ஒன்று உண்டு. இனிப்புக் கடைக்கு போகும் ஜனகராஜ், கடைக்காரரிடம் லட்டு ஒரு கிலோ போடு, ஜாங்கிரி ஒரு கிலோ போடு, என்று ஒவ்வொரு இனிப்பிலும் ஒரு கிலோ போடச் சொல்வார். கடைக்காரரும் மகிழ்ச்சியோடு போடுவார். கடைசியில், “கலக்கு” என்பார் ஜனகராஜ். “சார்…” என்று புரியாமல் விழிப்பார் கடைக்காரர். மீண்டும் “கலக்கு…” என்பார் ஜனகராஜ். கடைக்காரரும் புரியாமல் கலக்குவார். “அதுல இருந்து ஒரு 100 கிராம் போடு,” என்பார் ஜனகராஜ்.

 

சங்கரின் 2.0 படமும் அதுபோலத்தான் இருக்கிறது. கோஸ்ட் பஸ்டர்ஸ், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், டெர்மினேட்டர், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், எக்ஸ்பெண்டபில்ஸ், அவென்ஜர்ஸ், இரும்பு மனிதன் (Iron Man), எறும்பு மனிதன் (Ant Man), விஞ்ஞானப் புனைவிற்கு ஐசக் அசிமோவின் பெயர் உதிர்ப்பு, அஞ்ஞானத்துக்கு “aura” என்ற சொல் உதிர்ப்பு, திருக்கழுக்குன்றத்து கழுகு, என்று ஏகப்பட்ட விஷயங்களை உருவி, ஒரு கலக்கு கலக்கி, அவற்றிலிருந்து ஒரு 100 கிராமை தமிழ் சினிமா ரசிகர்களின் தலையில் கொட்டியிருக்கிறார்கள்.

 

மயில்சாமியின் காமெடி ட்ராக்கை இன்றைக்கு கேட்டாலும் ரசிக்க முடியும், சிரிக்க முடியும். இந்த “திருக்கழுங்குன்றத்துத் திருட்டுக் கழுகு” படத்தை பார்த்த பிறகும் சிரிப்பு வருகிறது. ஆனால், அச்சிரிப்பு பரிதாபமான ஒரு படத்தை பார்த்த சலிப்பை உதறுவதற்கான சிரிப்பாகவே இருக்கிறது.

 

படத்தின் கதை, வில்லனின் ஃப்ளாஷ் பேக் மட்டுமே. கதாநாயகனாக வரும் ரோபோ ஒரு கார்ட்டூன் காரக்டர் என்ற அளவிலேயே இருக்கிறது (கார்ட்டூன்களை திரைப்படமாக்கிய மேலே குறித்துள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் கார்ட்டூன் காரக்டர்களுக்கு கொஞ்ச நஞ்சமாவது உயிர்ப்பை ஊட்டியிருப்பார்கள் என்பதோடு இதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்). விஞ்ஞானியாக வரும் ரஜினியும் கதாநாயக பாத்திரமாக இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதல் காட்சியில் தோன்றி கடைசி காட்சியில் மீண்டும் வரும் “விஞ்ஞானி முருகன்” எம் ஜி ஆர் கதாபாத்திரம் போல தொட்டுக்க ஊறுகாயாக அவ்வப்போது தலைகாட்டி, நீதி போதனை செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 

திரைப்படத்தின் இறுதியில் சொல்லப்படும் நீதிபோதனைக்கு காரணமாக அமையும் வில்லனின் கதையோ வழக்கமான சங்கர் பாணிக் கதை. ஏதோ ஒரு ‘நியாயமான’ காரணத்திற்கான முயற்சியில் தோல்வியுற்ற அப்பாவியான கதாநாயகன், குறுக்கு வழியில் அதை நிறைவேற்ற போராடுவான், பழிவாங்குவான் (ஜென்டில்மேன், இந்தியன், அன்னியன்). இப்படத்தில் அது வில்லன் பாத்திரமாக ‘உல்டா’ செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவே. (ஒரே கதையை ‘உல்டா’ செய்து, மீண்டும் மீண்டும் எடுப்பதில் வல்லவரான பாலச்சந்தரின் வாரிசுகளாக மணிரத்தினம், கௌதம் மேனன், சங்கர் போன்றோரை சொல்லலாம்).

 

இப்படத்தின் வேடிக்கை என்னவென்றால், உல்டா செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாலோ என்னவோ, உண்மையிலேயே நல்லதொரு காரணத்திற்காக பாடுபட்டவனை சாகடித்ததோடு நிற்காமல், வில்லனாகவும், கொடூரமான தீய ஆவியாகவும் மாற்றியிருப்பதுதான். இந்தப் புள்ளியில்தான் விஞ்ஞானப் புனை கதை (science fiction), அஞ்ஞானத்தை ஊற்றாகக் கொண்ட அசட்டு மூட நம்பிக்கைக் கதையாக மாறுகிறது.  அது, படத்தின் மையகருவாக இருக்கும் “aura” என்ற மூடநம்பிக்கை.

 

மனிதர்களுக்கு “aura” என்பதாக ஒன்று இருக்கிறது என்பதெல்லாம் அசட்டு மூடநம்பிக்கை. தமிழில் இதை “ஒளிவட்டம்” என்பார்கள். சாமி படம் போட்ட காலண்டர்களில், சாமியின் தலைக்குப் பின்னால் தகதகக்கும் ஒரு வட்டம் இருக்குமே அது. அல்லது சிவாஜி கணேசனை வைத்து ஏ. பி. நாகராஜன் எடுத்த சாமி படங்களில் இந்த ஒளிவட்டம் சாமிகளின் தலைக்குப் பின்னால் சக்கரம் போலச் சுழலுவதை பார்க்கலாம்.

 

இந்த ஒளிவட்டம் தெய்வங்களுக்கும் “தெய்வப் பிறவிகளுக்கும்” இருக்கும் என்பது மத நம்பிக்கை. சில “மேதைகளை” தலைக்குப் பின்னால் தகதகக்கும் ஒளிவட்டத்தோடு சித்தரிக்கும் “நாத்திக மத நம்பிக்கையாளர்களும்” உண்டு. இந்த ஒளிவட்டம் புனிதத்தன்மையைக் குறிப்பது.

 

மத நம்பிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாதவையாக கலைகள் இருந்த நவீன காலம்வரை கலைப் பொருட்களும் இவ்வாறு ஒளிவட்டம் பொருந்திய புனிதமான படைப்புகளாகவே பார்க்கப்பட்டுவந்தன. சாதாரண மக்கள் பயபக்தியுடன் அணுகவேண்டிய புனிதமான பொருட்களாக பார்க்கப்பட்டன. அது இலக்கியமாகட்டும், நாடகமாகட்டும், ஓவியமாகட்டும், சிற்பக்கலையாகட்டும் அனைத்து படைப்புகளும் ஒளிவட்டம் பொருந்திய புனிதமான பொருட்களாகவே பார்க்கப்பட்டன.

 

கலைப் பொருட்களுக்கு இருப்பதாக நம்பப்பட்ட இந்த புனிதத்தன்மையைக் கலைத்துவிட்டு தோன்றிய முதல் கலையே சினிமாதான். சினிமா பார்க்கும்போது நொறுக்குத்தீனி திங்கலாம், சிகரெட் பிடிக்க எழுந்து போகலாம், விசில் அடிக்கலாம், நாராசமான கமெண்ட் அடிக்கலாம், காதலர்கள் முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளலாம், திரையில் தோன்றும் நாயக – நாயகிகளை மனசுக்குள் காதலிக்கலாம், இன்னும் விரும்பிய எதையும் செய்யலாம். நூற்றாண்டுகளாக கலைப்படைப்புகளை பிரமிப்போடும் பயபக்தியோடு பார்க்கும் அனுபவத்தை, அதன் நுகர்வு நிலையிலேயே தகர்த்து நொறுக்கிவிட்டு உருவானது சினிமா. கலைகளுக்கு இருப்பதாகக் கருதப்பட்ட ஒளிவட்டத்தை – “aura”வைக் கலைத்தது சினிமா.

 

சினிமா எவ்வாறு ஒளிவட்டத்தை தகர்த்த கலை என்பதைப் பற்றி தத்துவ ஆசிரியராகவும், பண்பாட்டு விமர்சகராகவும் அறியப்பட்ட வால்டர் பெஞ்சமின் என்பார் எழுதிய The Work of Art in the Age of Mechanical Reproduction என்ற புகழ் பெற்ற கட்டுரை இது தொடர்பில் கட்டாயம் வாசிக்கவேண்டியது. தமிழில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மொழியாக்கமும் செய்யப்பட்டிருக்கிறது.

 

அத்தகைய தன்மை பொருந்திய சினிமா என்ற கலைவடிவத்தில் “aura”-வைக் கருவாக கொண்டு ஒரு திரைப்படத்தை எடுத்தால், அந்த அபத்தத்தை என்னென்பது?

 

இந்த அபத்தம் போதாதென்று, ஒரு பேய் கதையை – ஒரு மீ-இயற்கைச் சக்திக் (super natural force) கதை என்றுகூட சொல்லமுடியாது – விஞ்ஞானப் புனை கதையின் முலாம் பூசி கொடுத்திருப்பது இன்னொரு அபத்தம். சரி அந்த பேய் என்னதான் செய்கிறது? சென்னையின் லட்சோப லட்சம் மக்களின் செல்ஃபோன்களைத் திருடுகிறது அல்லது பிடுங்கிக்கொள்கிறது அல்லது உருவிக்கொள்கிறது. செல்ஃபோன்களை உருவிக்கொள்வதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அவற்றைப் பயன்படுத்தும் மனிதர்களையும் கூண்டோடு கொல்லப் பார்க்கிறது. ஆகையால்தான் கதாநாயக ரோபோவும், விஞ்ஞானி வசீகரனும் அதை முறியடிக்கிறார்கள். இறுதியில் விஞ்ஞானி வசீகரன் நீதிபோதனையும் செய்கிறார். ரசிகர்களின் போதைக்கு தீனியாக, ஜிகினாக் கலர்களில் ரோபோ டூயட்டுடன் படம் முடிகிறது.

 

ஆனால், துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல, பல படங்களில் இருந்து உருவி உல்டா செய்திருக்கும் காட்சிகளுக்கு வசீகரனும் அவரது ரோபோவும் தண்டனை ஏதாவது தருவார்களா? 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைந்தது 100 படங்களாவது எடுத்திருக்கலாம். அதில் ஒரு 10 நல்ல தமிழ் படங்களாவது தேறியிருக்கலாம். அந்த வாய்ப்புகளை கூண்டோடு கொன்ற பாவத்திற்கு என்ன கழுவாய்?

 

இவற்றை அசைபோட்டால் பேசாமல் படத்திற்கு “திருக்கழுங்குன்றத்துத் திருட்டுக் கழுகு” என்று பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்திருந்தாலும், எவ்வளவு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதாக பெருமை பேசிக்கொண்டாலும், ஊர் குருவி எவ்வளவு உயரப் பறந்தாலும், ஒருநாளும் பருந்தாகிவிடமுடியாது.

 

நன்றி: தமிழ் இந்து

பல்லாண்டு

சின்னப் பல்

சிற்றரிசிப் பல்

 

சிணுங்கும் பல்

சிரிக்கும் பல்

 

சிங்கப் பல்

சிங்காரப் பல்

 

தங்கப் பல்

தனிப் பல்

 

கடைவாய்ப் பல்

கடும் பல்

 

குட்டிப் பல்

குறுகுறுக்கும் பல்

 

அக்காள் பல்

அழகுப் பல்

 

அப்பன் பல்

அதட்டும் பல்

 

அம்மா பல்

அன்புப் பல்

 

ஆயா பல்

ஆடும் பல்

 

தாத்தா பல்

தள்ளாடும் பல்

 

அத்தைப் பல்

சொத்தைப் பல்

 

மாமன் பல்

புலிப் பல்

 

மச்சான் பல்

நரிப் பல்

 

புலிப் பல்

புல் படாப் பல்

 

நரிப் பல்

புலப்படாப் பல்

 

நாய்ப் பல்

நயக்கும் பல்

 

பேய்ப் பல்

பெரும் பல்

 

உன் பல்

மயக்கும் பல்

 

என் பல்

மெல்லும் பல்

 

எனக்கும் பல்

உனக்கும் பல்

 

பல் பல்

பல்லாயிரம் பல்.

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »
%d bloggers like this: