கருப்பாய் இருக்கிறாய்! உள்ளே வராதே!

முன்னொரு காலத்தில் “பாப்லோ அறிவுக்குயில், பாப்லோ அறிவுக்குயில்” என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். ஒரு பாப்லோ அறிவுக்குயில்தான். இன்னும் இருக்கிறார். எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தொடர்பு அறுந்து பல வருடங்களாயிற்று.

சொந்த ஊர் திருவாரூர் பக்கம். தலித் சமூகத்தில் பிறந்தவர். தலித் எழுத்தாளராகவே அறியப்பட்டவர். 90 களின் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர். ஆள் “கொழுக் மொழுக்” என்று குண்டாகவும், நல்ல கருப்பு நிறத்தில் பார்க்க அழகாக இருப்பார். ஆனால், படு வெள்ளந்தி.

சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்துகொடுத்து பிழைப்பை ஓட்டி வந்தார். அங்கு ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்தும் வைத்திருந்தார்.

1999 ஆண்டு “விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ் கதையாடல்களும்” என்ற நூல் வெளியீட்டு விழா. ரூ. 10,000 வட்டிக்கு கடன் வாங்கி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன். நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்பென்சருக்கு எதிரில் இருந்த “புக் பாயிண்ட்” அரங்கில்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில், நண்பர்கள் சிலர் பரபரப்பாக வந்து அரங்கிற்கு வெளியே என்னை அழைத்துச் சென்றார்கள். என்ன விவரம் என்று கேட்டதற்கு, போலீஸ் கிராப்புத் தலை ஒன்றிடம் கொண்டு போய் நிறுத்தினார்கள். க்யூ பிராஞ் போலீஸ்.

புத்தக வெளியீட்டிற்கு எதற்கு க்யூ பிராஞ்ச் போலீஸ் என்று வியந்துகொண்டே என்ன வேண்டும் என்று கேட்டேன். “பாப்லோ அறிவுக்குயில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.

“இல்லையே! ஆள் வரவில்லையே!” என்றேன்.

“எங்கே இருக்கிறார் என்று தெரியுமா?”

“தெரியாது. என்ன விஷயம்? ஏன் கேட்கிறீர்கள்?”

“ஒரு கேஸ் விஷயமா அவரை விசாரிக்கணும்.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மனுசனுக்கும் கேசுக்கும் என்ன சம்பந்தம்! அநியாயத்திற்கு அப்பாவியாயிற்றே என்று வியப்பு.

ஆளுக்கு ஃபோனை போட்டால் எடுக்கவில்லை. அவரது நண்பர்கள் ஒவ்வொருத்தருக்காக ஃபோனை போட்டு எங்கே இருக்கிறார் என்று தேட ஆரம்பித்தோம். ஒருவழியாக ஆளைப் பிடித்தும்விட்டோம்.

அறிவுக்குயில் கோவாவில் ஒரு நண்பரோடு மப்பில் மிதந்து கொண்டிருந்தது.

“என்னய்யா விஷயம்? உன்னை க்யூ பிராஞ்ச் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று வந்து நிற்கிறது? உடனே கிளம்பி வா!” என்று தகவலை சொன்னோம்.

ஆள் வந்தால் போலீசிடம் கொண்டு ஒப்படைக்கவா முடியும்? என்ன சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று அந்த கியூ பிராஞ்ச் போலீஸ்காரரிடமே கேட்டோம்.

“ஒன்னுமில்லைங்க. ஒரு நாலைந்து மாசத்துக்கு முன்னாடி, பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்துல, பட்டப் பகல்ல, ஒரு வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு 33 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார்களே! அது சம்பந்தமா பாப்லோ அறிவுக்குயிலை விசாரிக்க வேண்டும்.”

எங்களுக்கு தூக்கி வாறிப்போட்டது. இந்த மனுசனுக்கும் அந்தச் சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? இது அநியாயத்திற்கு அசடாச்சே! இப்படி ஒரு பிரச்சினையில் எப்படி சிக்கிக்கொண்டது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தோம்.

பாப்லோ கோவாவில் இருந்து சென்னை வந்து சேர்வதற்கு முன்பாகவே பிரச்சினை என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது போலீஸ் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த எழுத்தாளர் திலகவதியைச் சந்தித்து, விஷயத்தை சொல்லி உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.

வழக்கு விசாரணை பூக்கடை போலீஸ் நிலையத்தின் பொறுப்பில் இருந்து உயர்நீதிமன்றத்தின் பின்புறமிருந்த போலீஸ் நிலையத்தின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டிருந்தது. ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து, சப் இன்ஸ்பெட்கரிடம் பேசி, பாப்லோ அறிவுக்குயில் சம்பந்தட்ட வழக்கு விவரங்களை வரும் நண்பரிடம் தெரிவியுங்கள் என்று கூறினார்.

துணைக்கு வழக்குரைஞர் பகவத்சிங்கை அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு போய்ச் சேர்ந்தேன். சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்று உட்கார வைத்தார் சப் இன்ஸ்பெக்டர்.

“அது ஒன்னுமில்லைங்க சார். பாப்லோ அறிவுக்குயிலுக்கும் இந்த கொள்ளைக்கும் சம்பந்தமில்லை என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். விஷயம் என்னன்னா, அவரோட அறையில்தான் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அது பாப்லோவுக்கும் தெரியாது. ஆனால், பாப்லோவுக்கு அந்த ஆட்களைத் தெரியும். அவர்களைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் பாப்லோவை தேடிக்கொண்டிருக்கிறோம். ஆள் வந்ததும் அழைத்து வாருங்கள். அவர் குறிப்பிட்ட ஆட்கள் யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்களைத் தெரிவித்தால் போதும். அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை,” என்று விஷயத்தை விளக்கினார்.

பெரிய நிம்மதிப் பெருமூச்சை விட்டுவிட்டு, நன்றி தெரிவித்துவிட்டு வந்தோம்.

ஒன்றிரண்டு நாட்களில் பாப்லோவும் சென்னை வந்து சேர்ந்தார். நான் ராஜன்குறை வீட்டிற்கு வரச்சொல்லி அங்கு சென்று காத்துக்கொண்டிருந்தேன். இப்படியொரு பிரச்சினையில் இவர் எப்படிச் சிக்கினார்? யார் அந்த நபர்கள்? அவர்களோடு இவருக்கு எப்படிப் பழக்கம்? என்றெல்லாம் யோசித்துக்கொண்டு அவரைக் கேலிசெய்து சிரித்துக்கொண்டிருந்தோம்.

அப்போது ராஜன்குறை வீடு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பின்புறம் இருந்தது. மெயின் ரோட்டிற்கு ஒரு புறம் ஏழெட்டு தெருக்கள் உள்ளே சென்றால் ராஜன்குறை வீடு. எதிர்ப்புறம் ஒன்றிரண்டு தெரு உள்ளே சென்றால் சாரு நிவேதிதாவின் வீடு.

வருவார் வருவார் என்று நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். மனுசன் வெகு தாமதமாக வந்து சேர்ந்தார். ஏங்க இவ்வளவு தாமதம் என்று கேட்டதற்கு “இல்ல. நேரா சாரு வீட்டிற்கு போயிருந்தேன்” என்று விவரிக்க ஆரம்பித்தார். அவர் சொன்ன விஷயம் மகா ஆத்திரத்தைக் கிளப்பியது. அதை இறுதியில் சொல்கிறேன்.

சப் இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயங்களை பாப்லோவிடம் சொல்லி, அப்படி யாரைய்யா உன் அறையில் தங்க வைத்தாய்? என்று கேட்டேன்.

மனுசன் தலையில் கையை வைத்து உட்கார்ந்துவிட்டார். ஐயோ! வளர்மதி என்று அழாத குறையாக விஷயத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

அவருடைய கதைகளை யாராவது பாராட்டி பேசினால் மனுசனுக்கு குதூகலம் வந்துவிடும். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருக்கிறார்கள்.

அப்படித்தான் அந்த நபர் அறிமுகமாகியிருக்கிறார். தோழர் உங்க கதைகளைப் படிச்சிருக்கேன். இந்தக் கதை நல்லாயிருந்தது. அந்தக் கதை அருமை. எனக்கு அ. மார்க்சை தெரியும். அவரைத் தெரியும். இவரைத் தெரியும் என்று பேசி அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்.

பாப்லோவுக்கு சந்தோஷம். வாங்க தோழர் என்று அறைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். கதை கதையாய் பேசியிருக்கிறார்கள். இப்படியாக நாலைந்து சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. உற்சாக மிகுதியில், நான் இல்லாத நேரத்தில் அறையில் தங்கிக் கொள்ளுங்கள் தோழர் என்று ஒரு சாவியையும் அவரிடம் கொடுத்துவிட்டிருக்கிறார்.

“தோழர்” ஒரு தமிழ் தேசிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இது பாப்லோவுக்குத் தெரியாது. தோழர் என்று மட்டும்தான் தெரியும்.

தோழருக்கு புரட்சி செய்ய பணம் தேவைப்பட்டிருக்கிறது. பாப்லோ இல்லாத நேரத்தில், சக தோழர்களை அவரது அறைக்கு வரவழைத்து, திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

“பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில், வியாபாரிக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு. 33 லட்சம் கொள்ளை” என்ற செய்தியை மட்டும்தான் நாம் பேப்பரில் படித்திருப்போம். நானும் படித்தேன். அது இப்படிச் சுற்றி அப்படிச் சுற்றி என் காலைச் சுற்றும் என்று எப்படித் தெரியும்?

பாப்லோ யோசித்து யோசித்து ஒவ்வொன்றாக விவரிக்க ஆரம்பித்ததும் எனக்கும் ராஜனுக்கும் சிரிப்பு தாளமுடியவில்லை. “என்னய்யா நீ! இப்படியா போய் மாட்டிக் கொள்வாய்!” என்று சிரித்து சமாதானப்படுத்தினோம்.

திலகவதி உதவி செய்திருக்கிறார். பிரச்சினை ஒன்றும் இல்லை என்று விளக்கி சொல்லி, மீண்டும் வழக்குரைஞர் பகவத்சிங்கை துணைக்கு வரச்சொல்லி பாப்லோவை அழைத்துக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்தோம்.

பிரச்சினை பிரச்சினயில்லாமல் முடிந்தது.

இதில், பாப்லோ சாரு நிவேதிதாவைச் சந்தித்த எபிசோட்தான் முக்கியமானது.

நானும் ராஜன்குறையும் இவர் வருவார் வருவார் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க, இவரோ நேராக சாரு நிவேதிதாவை பார்க்கப் போயிருக்கிறார்.

இருவருக்கும் அவ்வளவு நெருக்கம்.

இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்த கியூ பிராஞ்ச் பாப்லோ எங்கே என்று சாருவை ஏற்கனவே விசாரித்திருக்கிறார்கள்.

மனுசனுக்கு (சாருவுக்கு) ஏற்கனவே பீதி பிடுங்கிவிட்டிருக்கிறது.

பயத்தோடும் பதட்டத்தோடும் தன்னைப் பார்க்க வீடு தேடி வந்த நண்பனை – சக எழுத்தாளனை – பாப்லோ அறிவுக்குயிலை, அறிவழகன் என்ற சாருநிவேதிதா வீட்டிற்கு உள்ளே நுழையவே விடவில்லை.

வாசலில் நிற்க வைத்து, “நீ கன்னங்கரேல் என்று கருப்பாய் இருக்கிறாய். உன்னை பார்த்தால் என் மாமியார் வீட்டில் என்ன நினைப்பார்கள்?” என்று சொல்லி விரட்டி விட்டிருக்கிறார் உயர்ந்த உள்ளம் படைத்த அறிவழகன் என்ற சாரு நிவேதிதா.

அன்றிலிருந்து எனக்கு இந்த அறிவழகன் என்ற பெயரைக் கேட்டாலே குமட்டிக்கொண்டு வரும்.

%d bloggers like this: