ரிச்சர்ட் ரைட்

ரிச்சர்ட் ரைட் (1908 – 1960) “ஒரு குற்றவாளி எழுத்தாளரான கதை” என்பது ரிச்சர்ட் பற்றி எழுதப்பட்ட ஒரு விமர்சனக் கட்டுரையின் தலைப்பு. மிஸ்ஸிசிபி – யைச் சேர்ந்த நாட்சே பகுதியிலுள்ள பெருந்தோட்டம் ஒன்றில் மிகவும் ஏழ்மையான பின்னணியில் தோன்றியவர் ரிச்சர்ட். அம்மா பக்கவாத நோயில் வீழ்ந்த பின் சகோதரரோடு அனாதை இல்லத்தில் தஞ்சம். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நூலகங்களின் மூலம் எச். எம். மைன்கென், தியோடர் டிரெசியர், ஷெர்வுட் ஆண்டர்சன், சிங்னேர் லூயிஸ் ஆகியோரின் எழுத்துக்களை படித்துத் தீர்க்கிறார். அவரை மிகவும் பாதித்தது மென்கென். “வார்த்தைகளோடு போராடுகிற … போராடுகிற ஒரு மனிதன் … ஒரு தடியைப் பாவிப்பது போல … வார்த்தைகளை ஆயுதமாய்ப் பாவிக்கும் மனிதன்” என்பது மென்கனைப் பற்றிய ரிச்சர்டின் மதிப்பீடு. கிராமப்புற தென் அமெரிக்காவின் இனவெறி, ஏழ்மை, பொது இடங்களில் கருப்பர்களைக் கொல்லும் வழக்கம் ஆகியவற்றுக்குப் பயந்து ஏராளமான கருப்பர்கள் இடம் பெயர்ந்ததை ஒட்டி 1927 – ல் ரிச்சர்ட் சிகாகோ வருகிறார். கண்ணியமான வாழ்க்கை வடக்கிலும் சாத்தியமில்லை என உணர்ந்தபோது 1930 – களின் தொடக்கத்தில் அவர் பொதுவுடைமைச் சிந்தனைகள் மற்றும் இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுகிறார். எழுத்தாளர்களின் மென்னியைப் பிடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகள் அவரைக் கட்சியோடு முரண்பட வைக்கிறது. இரண்டாம் உலகப் போரில் படையில் கருப்பர்கள் மீது இன ஒதுக்கல் மேற்கொள்ளப்படுவதை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்காதபோது கட்சியிலிருந்து விலக முடிவெடுக்கிறார். “நான் கம்யூனிஸ்ட்டாக முயற்சித்தேன்” என்கிற கட்டுரைப் பகுதிகள் வெளிவந்தபோது கட்சிக்கும் அவருக்குமான உறவு முழுமையாகச் சிதைகிறது (1944). மார்க்சியத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவுகள் குறித்து ஆழமாகச் சிந்தித்திருந்த ரிச்சர்ட் அந்த அனுபவங்களின் பின்னணியோடு கருப்பு அமெரிக்க எழுத்துக்கள் குறித்த இலக்கியக் கோட்பாட்டுருவாக்க முயற்சிகளை மேற்கொள்கிறார். Blue Print for Negro Writing [என்ற அவரது கட்டுரை] இந்த வகையில் ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கம். ஹார்லெம் மறுமலர்ச்சியை “வெள்ளை அமெரிக்காவிடம் கையேந்தி நிற்கும் அலங்காரத் தூதுவர்களின் பணிவான நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் எனக் கேலி செய்து ஒதுக்கிய ரிச்சர்ட் எதார்த்தம் மற்றும் சமூகம் குறித்த ஒரு மார்க்சியக் கருத்தாக்கத்தைப் பரிந்துரைத்தார். இக்காலகட்டத்தில் அவரது முக்கிய ஆக்கம் Uncle Tom’s Children (1938). பெண்களின் நோக்கில் அவர் எழுதியது Long Black Song. அவரது புனைவுகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது Native Son. ”[இந்நாவல்] வெளிவந்ததோடு அமெரிக்கக் கலாச்சாரம் என்றென்றைக்குமாக மாறியது” என ஓர் விமர்சகர் குறிப்பிட்டார். ஒரு எதிர்ப்பு எழுத்தாளராக இலக்கிய வரலாற்றில் ஓர் அழுத்தமான இடத்தை இந்த நூல் அவருக்கு உருவாக்கித் தந்தது. “இந்த மாதப் புத்தகம்” என மாதம் ஒரு நூலைத் தேர்வு செய்கிற “Book of the Month Club” என்னும் அமைப்பு முதன் முதலாகத் தேர்வு செய்த கருப்பர் நாவல் Native Son. மூன்று வாரங்களில் இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனையாயின. 1945 – ல் வெளிவந்த அவரது தன் வரலாறு Black Boy இன்னொரு முக்கிய ஆக்கம். அடுத்த பதினைந்து ஆண்டுகள் – அவரது இறுதிக் காலம் வரை – பாரிசில் கழிந்தன. சார்த்தர், சிமோன் டி பாவே ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு. சார்த்தர், காம்யூ ஆகியோரின் இருத்தலியல் சிந்தனைகளின் செல்வாக்கில் எழுதப்பட்ட ரிச்சர்டின் The Outsider 1953 – ல் வெளிவந்தது. அவரது இளம் வயது துன்ப வாழ்க்கையின் விளைவாக அவர் இயல்பிலேயே ஒரு இருத்தலியற் சிந்தனையாளராக இருந்தார் எனவும் பாரிசுக்கு வருவத்ற்கு முன்பேகூட அவரது எழுத்துக்கள் சிலவற்றில் இருத்தலியற் கூறுகள் உண்டு எனவும் சில விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 1950 – களில் அய்ரோப்பா, அமெரிக்கா கண்டங்களைச் சுற்றிய ரிச்சர்ட் உலகளாவிய பின்னணியில் இன ஒடுக்குமுறை குறித்து சிந்தித்தார். Black Power (1954), White Men Listen (1957), The Long Dream (1958), முதலியன இக்காலகட்டத்தில் முக்கிய ஆக்கங்கள். இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது சிறுகதை Eight Men (Thunder’s Mouth Press, NewYork, 1987) என்கிற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.  

குறிப்பு: மேலுள்ள அறிமுகக் குறிப்பு அ. மார்க்சால் எழுதப்பட்டது. இலக்கியச் சிறப்பிதழுக்காக பல மாதங்கள் பல எழுத்தாளர்களை அணுகி படைப்புகளை பிரதியெடுத்துத் தந்து மொழியாக்கம் செய்து தரக் கேட்டு அலைந்து இறுதியில் அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றபோது எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே. கடைசியில், தஞ்சையில் அ. மார்க்சின் வீட்டில் இரு வாரங்களுக்கும் மேலாகத் தங்கியிருந்து, அவர்கள் தந்த மொழியாக்கங்களை திருத்த முனைந்ததிலும் பெரும் அயற்சியே மிஞ்சியது. ஒரு கட்டத்தில், அவர்களுடைய மொழியாக்கங்களை தூர வைத்துவிட்டு புதிதாக மொழிபெயர்க்க நேர்ந்தது. அவர்களிடம் கொடுத்த கடமைக்காக, அவரவர் பெயரிலேயே மொழியாக்கங்கள் வெளியாயின. ஒரு வழியாக அவசரகதியில் படைப்புகளை மொழிபெயர்த்து முடித்தபின் உண்டான சோர்வில் எழுதத் திட்டமிட்டிருந்த விரிவான அறிமுகத்தை எழுதும் மனநிலை முற்றிலுமாக மறைந்துபோனது. அனைத்தையும் அ. மார்க்சிடம் ஒப்படைத்துவிட்டு சென்னை திரும்பினேன். மூன்று மாதங்கள் கழிந்தும் இதழ் வெளிவருவது குறித்த எந்தத் தகவலும் அவரிடமிருந்து வராதுபோனதும், விசாரித்ததில் கருப்பர் இலக்கியம் குறித்த ‘விமர்சனக்’ கட்டுரை எழுதும் முயற்சியில் அ. மார்க்சுக்கு எதை வாசித்து எழுதுவது என்பது விளங்காததை அறிந்து கொண்டேன். சென்னை அமெரிக்க நூலகத்தில் இருந்து அவசியமான நூல்களை சேகரித்து அவருக்கு அனுப்பியும் வைத்தேன். இரு வாரங்களில் கட்டுரை தயார். இதழில் உள்ள “ஆப்ரோ – அமெரிக்க இலக்கிய விமர்சனம்: நடந்து வந்த பாதையும் கடக்க இருக்கும் தொலைவும்”. அப்புறம் ஒரு மூன்று மாதங்கள் பல இடங்களில் இதை வைத்தே ஒரு ரவுண்டு கூட்டம். மற்றபடி, அ. மார்சுக்கு ஆஃப்ரோ அமெரிக்க இலக்கியத்தோடு எந்த ‘ஸ்நானப் பிராப்தியும்’ கிடையாது என்பதை நன்கு அறிவேன். அத்தொகுப்பிற்காக நான் தேர்வு செய்து கொடுத்த படைப்புகளைத் தவிர வேறு எதையும் அதற்கு முன்னும் பின்னும் அவர் வாசித்ததில்லை; வாசிக்கப் போவதும் இல்லை. மேலுள்ள குறிப்புகளும் கூட Norton Anthology of Afro – American Literature – ல் உள்ள அறிமுகக் குறிப்புகளின் பிரதியாக்கமே தவிர வேறொன்றுமில்லை. அதிலும் கூட அவரது புரிதல் பல்லை இளிப்பதை இக்குறுநாவலை சிறுகதை என்று குறித்திருப்பதிலிருந்து அறியலாம். (பகர அடைப்புக் குறிகளில் உள்ளவை வாசகர்களுக்காக இப்போது நான் சேர்த்தவை.) அத்தொகுப்பை முழுமையாக சரிபார்த்து தனித் தொகுப்பாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. அது சாத்தியப்படும்போது விரிவான அறிமுகத்துடன் தமிழ் சூழலுக்கான பொருத்தப்பாடுகளையும் சுட்டி எழுதும் உத்தேசம் உண்டு.

%d bloggers like this: