அம்பலத்திற்கு வந்துள்ள தேவதூதர்களின் ஆயுத வியாபாரம்

கடந்த மே 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் சிறப்புக் கூட்டத்தில் சிறீலங்கா அரசு ஈழ மக்களைப் படுகொலை செய்து ஈட்டிய இராணுவ வெற்றிக்குத் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகளில் ஸ்லோவாக்கியாவும் பிரிட்டனும் அடங்கும். அதற்கு முன்னதாக 19 – ஆம் தேதியன்று இலங்கை நிகழ்வுகள் குறித்து மனித உரிமைக் கவுன்சில் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்ததில் இந்த நாடுகள் முக்கியப் பங்காற்றின.

இந்நாடுகள் முன்மொழிந்த தீர்மானமும் இலங்கை அரசுக்கு சிறு கண்டனமும் தெரிவிப்பதாக இருக்கவில்லை. இலங்கை அரசின் உள்விவகாரங்களில் பிறநாடுகளின் தலையிடுவதை மறுத்து இலங்கை அரசின் கைகளிலேயே அடுத்த கட்ட ‘அமைதி’ நடவடிக்கைகளுக்கான முழு பொறுப்பையும் வழங்குவதாகவே அத்தீர்மானமும் இருந்தது. அதைக்கூட ஒப்புக்கொள்ளாத இலங்கை அரசு கொண்டு வந்த தீர்மானமே வெற்றியும் பெற்றது.

இன்று டைம்ஸ் இதழ் மீண்டும் மற்றொரு அநீதியை அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கையில் அமைதியை வலியுறுத்திக்கொண்டே இந்த ‘தேவதூதர்கள்’ இலங்கை அரசுக்கு ஆயுத விற்பனையும் செய்துள்ள கொடூரத்தை பிட்டு வைத்திருக்கிறது டைம்ஸ் இதழ்.

இலங்கைக்கு செய்யப்பட்ட ஆயுத விற்பனை விபரம் பின்வருமாறு:

பிரிட்டன் 13. 6 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை இலங்கை அரசுக்கு விற்பனை செய்துள்ளது. இவற்றில் கவச வாகனங்களும் அடங்கும்.
ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ராக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. பல்கேரிய அரசு 1.75 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்கள்.

மூன்று நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பவை என்பது இதில் கவனத்திற்கு உரியது. ஐரோப்பிய யூனியன் 1998 ஆம் ஆண்டு இயற்றிய ஆயுத விற்பனை குறித்த நடத்தை விதிகளின் (Code of Conduct on the Export of Arms) இரண்டாவது வரையறையின் முதல் பிரிவு உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளுக்கு ஆயுத விற்பனையைத் தெளிவாகவே தடைசெய்கிறது. அதன் இரண்டாம் பிரிவு மனித உரிமை மீறல்கள் நிகழும் நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்வதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

இலங்கை விஷயத்தில் இந்த இரண்டு வரையறைகளையுமே மேற்குறித்த நாடுகள் மீறியிருக்கின்றன. ஒருவேளை சிங்கள அரசு இந்த நாடுகளிடமிருந்து வாங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை என்று அறிக்கை விட்டால் அதற்கு தலையாட்டக் காத்திருக்கிறார்களோ என்னவோ 😦

ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: