இசையின் அரசியல்

 

கிரேக்கப் புராணக் கதைகளில் யுலிஸஸைப் பற்றிய கதை ஒன்று. பறவை பாதி மிருகம் பாதியான சைரன் என்ற புராணக் கற்பனை மிருகங்கள் வாழும் தீவை யுலிஸஸும் அவனது மாலுமிகளும் கடந்து செல்ல வேண்டும். அந்த மிருகங்கள் தமது இனிய இசையால் கடற்பயணிகளை மெய்மறக்கச் செய்து, தாம் வாழும் தீவுக்கிழுத்து பலிகொள்பவை. அவற்றிடமிருந்து தப்பிக்க, யுலிஸஸ் தன் மாலுமிகள் அனைவரது காதுகளையும் மெழுகு கொண்டு அடைத்து விடுவான். தன்னை பாய்மரக் கம்பத்தோடு இறுகப் பிணைத்துக் கட்டச் சொல்லி, தான் எவ்வளவு மூர்க்கமாகக் கதறி ஆணையிட்டாலும் தீவை நோக்கி கப்பலைச் செலுத்தக்கூடாது என்று ஆணையிட்டுவிடுவான். சைரன்களின் இசையிலிருந்து – மரணத்தின் அழைப்பிலிருந்து ஒரு வழியாக தப்பிப் பிழைத்து யுலிஸஸும் அவனது மாலுமிகளும் தீவைக் கடந்து சென்று விடுவார்கள்.

இன்னொரு கிரெக்கப் புராணக் கதை. கல்லையும் கசிந்துருகச் செய்யும் இசைத் திறன் கொண்டவன் ஆர்ஃபியஸ். அவன் மனைவி இறந்துவிட மீளாத் துயரில் மூழ்குகிறான். அவளை மீட்டுவர உறுதிகொண்டு மாண்டவர்கள் வாழும் பாதாள உலகிற்குச் செல்கிறான். அதன் கடவுள் ப்ளூட்டோவைத் தன் இசையில் மகிழ்வித்து, தன் மனைவியைத் தன்னோடு அனுப்பி வைக்க வேண்டுகிறான். பூமிக்குச் சென்று சேரும்வரை எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்து அவரும் அனுப்பி வைக்கிறார். மனைவி பின் தொடரச் செல்லும் ஆர்ஃபியஸ், பூமியில் காலடி வைக்க ஓரடி இருக்கும்போது திரும்பிப் பார்த்துவிட, அவன் மனைவி பாதாள உலகிற்குள் மீண்டும் சிக்கிக் கொள்கிறாள். மீண்டும் துயரில் மூழ்கும் ஆர்ஃபியஸ், தன் சோகத்தை ஓயாமல் இசைத்துக் கொண்டே இருக்கிறான். அவனுடைய இடையறாத சோக இசையால் எரிச்சலுறும் மேய்னாட்ஸ் என்கிற டயோனிஸஸின் பெண் பணியாளர்கள் அவனைக் கொன்று, அவனது உடலைப் பல பாகங்களாகக் கிழித்து திசையெங்கும் வீசிவிடுகிறார்கள். ஃஎப்ரஸ் நதியில் விழுந்த அவனது தலை மட்டும் ஓயாது இசைத்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு ஜெர்மானிய நாட்டுப்புறக் கதை. குழந்தைகள் கதையாக சற்றுப் பரவலாக அறியப்பட்டது. பைட் பைப்பர். எலித் தொல்லையால் அவதிப்படும் ஒரு சிறு நகரை அத்தொல்லையிலிருந்து விடுவிக்க அழைக்கப்படும் பைட் பைப்பர், தன் கருவி கொண்டு இசைக்க, நகரின் அத்தனை எலிகளும் அவனது இசைக்கு மயங்கி அவனைப் பின் தொடர்கின்றன. அவற்றை ஆற்றுக்குள் இறக்கி கூண்டோடு அழித்துவிட்டு தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை அவன் கேட்கும்போது, கள்ளத்தனம் மிகுந்த நகரின் மேயர் தர மறுக்கிறான். கோபமுறும் பைட் பைப்பர், மீண்டும் இசைக்க, நகரின் அத்தனைக் குழந்தைகளும் இசைக்கு மயங்கி அவனைப் பின் தொடர, ஒரு குகைக்குள் சென்று மறைந்துவிடுகிறான்.

இந்துப் பெருந்தெய்வ புராணக் கதை மரபில், யுகங்களின் முடிவை – பேரழிவை, பிரளயத்தை அறிவிக்கும் கருவி சிவனின் உடுக்கை.

நமது சமகால தலித் இசை வடிவமாக எழுந்துள்ள கானாப் பாட்ல்களும் மரணச் சடங்குகளின்போது நிகழ்த்தப்படுபவை.

புராணக் கதை மரபுகளிலிருந்து சமகால வாழ்வுவரை மரணத்தோடு இசை கொண்டிருக்கும் நெருக்கம் எதைக் காட்டுகிறது?

சைரன்களின் இசையும் ஆர்ஃபியஸின் ஓயாத புலம்பலிசையும் இரைச்சலை நெருங்குபவை. இரைச்சல் இசையின் எதிர்மை. வன்மை மிகுந்த ஒலித்திரள். தொடர்பாற்றலை – இருவருக்கிடையிலோ, சூழலுடனோ, சமூகத்துடனோ துண்டிப்பது இரைச்சல். கொலைச் செயலின் நிழலுருத்தோற்றம். வன்முறை நிகழ்வு.

இரைச்சல், ஒலிப்பரப்பில் மிதக்கும் ஒரு செய்தியலையை இடைமறிக்கும் அதிர்வொலிப் பெருக்கம் (resonance). அதிர்வொலிப் பெருக்கம் என்பது ஒரே சமயத்தில் குறிப்பிட்ட அலைவரிசையில், மாறுபட்ட செறிவுநிலைகளில் ஒலிக்கும் தூய ஒலிகளின் தொகுப்பு. இத்தகைய இரைச்சல் தன்னளவில் விளக்கம் பெறுவதில்லை. தகவலை வெளிப்படுத்துபவர், அதைக் கடத்திச் செல்பவர், பெறுபவர் என்ற அமைவிற்குள் வைத்தே, அத்தகைய அமைவுடனான உறவில் வைத்தே இரைச்சல் என்பது இரைச்சலாக எடுத்துக் கொள்ளப்படும்.

வேறுவகையில் சொல்வதென்றால், இரைச்சல் என்பது, ஒரு பெறுநருக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தியை இடைமறிக்கும் ஒரு சமிக்ஞை. அந்த இடைமறிக்கும் சமிக்ஞை பெறுநருக்கு வேறு எதோ விதத்தில், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அர்த்தமுள்ளதாக இருப்பினும். எந்த வடிவம் எடுக்கினும், இரைச்சல் என்பது எல்லாக் கலாச்சாரங்களிலும் அந்தந்த கலாச்சார அமைவு விதித்துத் தொகுத்திருப்பதன் நோக்கில், ஒழுங்கு குலைவாக, அழிவாற்றலாக, மாசாக, சுற்றுச்சூழல் கேடாக, விதிகளின் தொகுப்பைக் கட்டமைத்து இயங்கும் செய்திகளின் மீதான தாக்குதலாக கொள்ளப்படுவது வெளிப்படை.

உயிரியில் நோக்கில் இரைச்சல், வலியின், வேதனையின் காரணமாகவும் இருக்கிறது. ஒலியளவு 20,000 ஃஎர்ட்ஸ் அலைவரிசை அல்லது 80 டெசிபல் செறிவுநிலையைத் தாண்டினால் செவிப்புலனை இழக்க நேரிடும். ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறினால் மரணத்தை விளைவிக்கும் அருவமான ஆயுதமாகும்.

நேரடியான பொருளில் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறினால் கொலைக் கருவியாகும் இரைச்சல், இசையுடனான உறவில், கொலையின் நிழலுருத்தொற்றமாக முன்நிற்கிறது. அதை சடங்கு ரீதியான பலியின் நிழலுருத் தோற்றமாக கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் எழுவதே இசை.

யுலிஸஸ் பாய்மரக் கம்பத்தோடு கட்டப்படுவது பலியின் குறியீடாக. ஆர்ஃபியஸ் கிழித்தெறியப்படுவது ஒரு பலி. பைட் பைப்பர் நகரத்தைக் காப்பாற்றத் தருவதும் பலி, ஏமாற்றப்பட்டு அவன் கொள்வதும் பலி. நிஜமாகவோ குறியீட்டு ரீதியாகவோ ஒரு பலிகடாவை பலியாகத் தருவது, பொதிந்திருக்கும் சாத்தியமான வன்முறையை எதிர்நிலைப்படுத்தி, தணித்து, ஒழுங்கையும் நிலையான சமூக அமைவையும் உருவாக்குவதற்கு ஈடாகும்.

இந்நோக்கில், கொலையின் நிழலுருத் தோற்றமாக எழுந்து சமூக ஒழுங்கமைவை அச்சுறுத்தும் இரைச்சலை, கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, சடங்கு ரீதியான பலியின் நிழலுருத்தோற்றமாக எழும் இசை நிலையான சமுக வாழ்வின் சாத்தியத்தை அறிவிக்கும் ஒரு பிரகடனம் என்று சொல்லலாம். இரைச்சலைக் கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சமூகத்தில் உள்ளார்ந்திருக்கும் வன்முறையின் சாத்தியங்களை கொலைச் சடங்கின் வழியாக பதிலீடு செய்து, தணித்து, தனிநபர்களின் சாத்தியமான கற்பனைத்திறம் அத்தனையும் மேன்மை பெறுமானால் (பழிவாங்கும் உணர்வை விடுத்து) சமூகமும் சமூக ஒழுங்கும் சாத்தியம் என்பதை உறுதி செய்யும் நிகழ்வாகவே இசை முதலில் உருக்கொள்கிறது.

பெரும்பாலான கலாச்சாரங்களில், இரைச்சலுக்கு வடிவம் தந்து, அடங்கி ஒலிக்கச் செய்யும் கருத்தமைவே மதங்களின் உருவாக்கத்திலும் அடிநாதமாக ஒலிப்பதையும் கவனிக்கலாம். உதாரணமாக, பழைய ஏற்பாட்டில், ‘முதல் பாவத்திற்கு’ முன்பாக ஒரு சப்தமும் கேட்பதில்லை. அதன் பின்னரே, இறைவன் நடந்து வரும் சப்தமே முதல் ஒலியாகக் கேட்கிறது.

மனு தர்மத்தில்,

“இந்திரியங்களைப் பதினொன்றாகப் பெரியோர் வகுத்துரைத்த வாய்மையைக் கேளீர்.

செவி, தோல், கண், நாக்கு நான்கினையும் தொடர்ந்து ஐந்தாவதாக மூக்கு, ஆசனம், பால்குறி, கை, கால் இவற்றின் மூலமாக வாயுவுடன் ஐந்தும்”

என்று செவிப்புலனுக்கு முதல் இடமும்,

“பிரணவமாகிய ஓம் எனும் சொல் பரப்பிரும்ம வடிவமாகவும், மூச்சையடக்கி தியானித்திருத்தலின் மேலானதென்றும் கூறப்படுகின்றன” (மனுதர்ம சாஸ்திரம், தமிழாக்கம் – திருலோக சீதாரம், வெளியீட்டகம், ஜூன் 2003, பக்: 18 – 19, முறையே ஸ்லோகங்கள் 2: 89, 90, 83)

என்று அனைத்தையும் தன்னுள் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் “ஓம்” எனும் ரீங்காரச் சொல்லாகவும் வரையறை பெறுகின்றன.

ஆக, இசையின் தோற்றத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: இரைச்சலால் உருவான ஆதி மரண பயத்துடனான உறவில், பலி கொள்ளும் வழிபாட்டுச் சடங்கில் மந்திர உச்சாடனமாக உருவானதே இசை.

மரண பயத்தை விளைவிக்கும் கருவிகளுள் ஒன்றாக இருப்பதால் இரைச்சல் அதிகாரத்தின் கவனத்தையும் பெறுகிறது. அதிகாரம் வன்முறையை ஒட்டுமொத்த குத்தகை எடுத்துக் கொண்டு, மரண பயத்தைக் கிளர்த்தும் தனது வன்மையைக் காட்டி, சமூக ஒழுங்கை உருவாக்குவதில் வெற்றிபெறும்போது, இரைச்சலைத் தன்வயப்படுத்திக் கொள்கிறது. பலியை அங்கீகரித்து இசையை தனக்கு நியாயப்பாடு கற்பிக்கும் கருவிகளுள் ஒன்றாக்கிக் கொள்கிறது. எங்கு, யார், எதை, எப்படி இசைப்பது என்று விதிகளின் தொகுப்பை உருவாக்கிச் சுழற்சியில் விடுகிறது.

என்றாலும், மரண பயத்தைக் கிளர்த்தும் இரைச்சலுடன் தொடர்ந்து உறவு கொண்டிருப்பதால், எந்தக் கணத்திலும் அதிகாரத்தை, சமூக ஒழுங்கமைவைக் குலைத்து வீச்சுடன் வெளிப்பாடு கொள்ளும் சாத்தியமும் இசைக்குள் – இசைக் கலைஞனுக்குள் எப்போதும் பொதிந்திருக்கிறது.

பலிச் சடங்கின் மந்திர உச்சாடனமாகத் தோற்றம் கொள்ளும் இசையோடு பிறக்கும் இசைக் கலைஞன்?

பலிகடா!

மந்திரவாதி, மருத்துவன், பாடகன் (தமிழ் நிலப்பரப்பில் பாணர்கள்).

பண்டைச் சமூகங்களில், பெரும்பாலான கலாச்சாரங்களில் இசைக் கலைஞன் இந்த மூன்றுமாகவே இருந்திருக்கிறான். பலிகடா என்ற விதத்தில் பெருப்பாலும் சமூகத்தின் விளிம்புகளைச் சேர்ந்தவனாக அல்லது விளிம்பிற்குத் தள்ளப்பட்டவனாக, நாடோடியாக அலைந்து திரிபவனாக இருந்திருக்கிறான், அரச வன்முறையை எந்தக் கணத்திலும் எதிர்கொள்ள வேண்டியவனாகவும் இருந்திருக்கிறான். அடிபணிந்தும் இருந்திருக்கிறான். அரச செய்தியைப் பறைசாற்றுபனாகவும் இருந்திருக்கிறான். அரசப் பிரதிநிதியாக, தூதனாகவும் இருந்திருக்கிறான். மீறியும் இருக்கிறான். துர்ச்சகுணம் கண்டு, ஆவிகளை ஏவி, ‘மருந்து’ வைத்து, பா இசைத்து கொன்றுமிருக்கிறான்; அரசுகளைக் கவிழ்த்துமிருக்கிறான்.

இசைக்கும் இசைக் கலைஞனுக்கும் அதிகாரத்துடனான உறவு என்றும் இவ்வாறான இருநிலைத் தன்மையதாகவே இருந்து வந்திருக்கிறது. அதிகாரத்திற்கு அரணான கருவிகளில் ஒன்றாக அல்லது வருங்காலத்தை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசனமாக, தீர்க்கதரிசியாக.

குறிப்பு: இது எனது சமீபத்திய நூலான “இசையின் அரசியல்” – இன் முதல் அத்தியாத்திலிருந்து. நூலைப் பெற விரும்புவோர் வெளியீட்டாளர் திரு. செந்தில்நாதனை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: 9382853646.

அரசியல், இசை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: