ஃஓக்கஸ் போக்கஸ்

ஒம் ரீம் க்ரீம், சூ மந்திர காளி!

அன்டா கா கசம், அபூ கா ஃஉகும், திறந்திடு சீசேம்!

இந்த “ரீம் க்ரீம்” “அண்டா கா கசம், அபூ கா ஃஉகும்”, என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

சின்ன வயசிலிருந்தே இது போன்ற ‘மந்திரச்’ சொற்களின் மீது எனக்கு ஒரு ஆர்வம். ஒரு நூறு பேரையாவது இவற்றுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருப்பேன். யாரும் இதுவரையில் சொன்னதில்லை.

இதே போல ஆங்கிலத்தில் ஃஒக்கஸ் போக்கஸ் (Hocus Pocus) என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றி சுவாரசியமான ஒரு விஷயத்தை புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த ஃஒக்கஸ் போக்கஸ் வெள்ளைக்கார ‘மந்திரவாதிகள்’ தந்திரங்கள் செய்து காட்டும்போது சொல்லும் கொச்சை இலத்தீன் மொழிச் சொற்றொடரின் முதலிரண்டு வார்த்தைகள்.

அந்த சொற்றொடர் இப்படிப் போகும்: ஒக்கஸ், போக்கஸ், டான்டஸ், டேலோன்டஸ், வேட் செலெரிடெர், ஜூபியோ (hocus, pocus,tontus, talontus, vade celeriter, jubeo.) இந்த வார்த்தைகளின் அர்த்தங்களை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.

ஃஒக்கஸ் போக்கஸ் – இது என் உடல்
டான்டஸ் – முழுமை
டேலோன்டஸ் – திறமை
வேட் செலரிடெர் – வேகமாக போ
ஜூபியோ – நான் கட்டளையிடுகிறேன்.

ஆக, இவற்றை சேர்த்துச் சொல்லும்போது, அர்த்தமற்ற வெறும் வார்த்தைக் குவியலாக, உளறலாக வந்து விழும். இதேபோல, கன்னியாகுமரி ஜில்லாவில், தக்கலை என்ற ஊரில் குடியிருக்கும் மலையாள மாந்த்ரீகர் ஒருவர், சில வருடங்களாக உதிர்த்து வரும் மந்திரம்: தமிழில் நாவலே இல்லை. என்னுடைய “விஷ்ணுபுரம்” தான் முதல் நாவல்.

வேறு எந்த மொழியிலாவது, எந்த ஒரு எழுத்தாளராவது இப்படி எழுதிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழுக்கு மட்டுமே இந்த பாக்கியம் நேர்ந்திருக்கிறது. அதற்காக நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அப்படி எழுதிய பெருமகனாரின் திருநாமத்தைச் சொல்லியே ஆகவேண்டும் இல்லையா: ஜெயமோகன்.

சரி, இந்த உளறலையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டியதுதான் என்று அமைதியாக இருக்க முயற்சித்தால், அதை, கேட்பதற்கு ஆளே இல்லை என்பதாக எடுத்துக் கொண்டு விடுகிறார் மேற்படியானவர்.

தெருவோரத்து செப்பிடு வித்தைக்காரன் கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும் “யாராவது இங்கே இருந்து நகர்ந்தால், வீட்டுக்குப் போனதும் ரத்த வாந்தி எடுத்து செத்துப் போவீர்கள்” என்று மிரட்டும் ரேஞ்சுக்கு இறங்கி விடுகிறார். எல்லோர் கவனமும் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவர் செய்யும் சில்லறைத் தந்திரங்களை இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

அப்படி சமீபமாக இவர் செய்த “சீப் ட்ரிக்” கடந்த மூன்று வாரங்களாக “ஃஆட் நியூஸாக” விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

5.10.03 அன்று எழுத்தாளரும் பதிப்பாளருமான இளையபாரதியின் நூல் வெளியீட்டு விழா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் அறிவாலயத்தில் நடைபெற்றது. மறுநாள் ஜெயமோகனின் நூல் வெளியீட்டு விழா சென்னை ஃபிலிம் சேம்பரில். கூட்டத்தின் இறுதியில் பேசிய ஜெயமோகன், முந்தைய நாள் நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, “கருணாநிதி இலக்கியவாதி அல்ல. மூத்த இலக்கியவாதிகள் எல்லாம் அவரைத் துதிபாடியது கேவலமாக இருந்தது. எழுத்தாளர்கள் இப்படியெல்லாம் சீரழியக்கூடாது” என்று பேச, ஜுரம் தொற்றிக் கொண்டுவிட்டது. ஊரெல்லாம் ஜெயமோகன் பேச்சு.

ஒரு எழுத்தாளன் எழுதுவதை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டவன். கவன ஈர்ப்புத் தந்திரங்களிலிருந்து விலகி நிற்பவன். உருப்படியான சாதனைகளைச் செய்திருக்கிற எழுத்தாளர்களெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். உலக அளவிலும் சரி, தமிழிலும் சரி, இதற்குப் பலரை உதாரணமாகக் காட்டமுடியும். ஜெயமோகன் தனது முன்னோடிகளில் ஒருவராகக் குறிப்பிடும் ஜெயகாந்தனும்கூட அப்படியானவர்தான்.

ஜெயகாந்தனைப் பற்றிக் குறிப்பிடும்போது, சமீபமாகக் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய முன்னாள் முதல்வர், முதல்வராக இருந்த சந்தர்ப்பத்தில், மறைந்த கண்ணதாசன் அவர்கள், திரு. கருணாநிதி கலந்து கொண்ட கூட்டமொன்றில் ஜெயகாந்தனையும் தந்திரமாக மேடையேற்றி விட்டிருக்கிறார்.

கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று ஆரம்பத்திலேயே மறுத்திருந்த ஜெயகாந்தன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அன்று, அந்த மேடையில், இலக்கியம் பேசமுடியாது, அரசியல் பேசுகிறேன், என்று அறிவித்து, அன்றைய முதல்வரின் அரசியல் கொள்கைகளை விமர்சித்துப் பேசினாராம்.

இது துணிச்சல், நேர்மை, பலா பலன் எதிர்பாராத – விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத செயல். ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய கர்வம், தன்மதிப்பு, அதாவது சுயமரியாதை.

ஜெயமோகன் செய்திருப்பது போலித்தனம். சில்லறைத்தனம். ஆணவத்தின் வெளிப்பாடு. “எனது முன்னோடிகளாக நினைத்த மூத்த எழுத்தாளர்களெல்லாம் துதிபாடி நின்றார்களே” என்று வடிப்பது போலிக் கண்ணீர். இவர் எங்கெங்கு, எதன் பொருட்டு, யாருக்கெல்லாம் துதிபாடினார், யாருடைய வேலைக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தோடு மொட்டைக் கடுதாசி போட்டார், ‘குரங்கு டைப் அடிப்பது போல இருக்கிறது’ என்று தன் சக எழுத்தாளரை வசைபாடிய கதையை எல்லாம் எழுதினால் நாறிவிடும்.

அந்த சாக்கடைக்குள் காலைவிட எனக்கு விருப்பமில்லை. அதைவிட, திராவிட இயக்கத்தின் இலக்கியம், பிரச்சார இலக்கியம், என்று அவர் தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரத்திற்கு பதில் சொல்வது உருப்படியான காரியமாக இருக்கும். முதலாவது பதில், சற்று சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது.

இலக்கியம் அப்படி ஒன்றும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடக்கூடிய பெரிய விஷயம் இல்லை. ஜெயமோகனின் கருத்துப்படியே இலக்கியத்தில் நாவலைவிட கவிதைதான் உயர்ந்த வடிவம். ஆனால், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, ஒரு கவிதையைக் கூட, இதுநாள் வரையில் அவர் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு சீட்டுக் கொடுத்து அனுப்பிவிடலாமா?

சினிமா, இசை, ஓவியம், நாடகம், கட்டிடக்கலை, போன்ற பல்வேறு கலைகளுள் (இதைப் பற்றியெல்லாம் ஜெயமோகனுக்கு என்ன தெரியும்?) நாவலும் கவிதையும் சேர்ந்த இலக்கியமும் ஒரு கலை. அவ்வளவுதான் அதற்கு முக்கியத்துவம். இங்கு, கலை என்பதுதான் முக்கியமான விஷயம். இப்படி, கலை என்ற விரிவான பார்வையிலிருந்து அணுகினால் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை புரிந்து கொள்ள முடியும்.

என்.எஸ். கிருஷ்ணன், எம்,ஆர், ராதா போன்ற சிறந்த கலைஞர்களை திராவிட இயக்கம்தான் உருவாக்கியது. திரு. கருணாநிதியின் திரை வசனங்கள் அவரைக் கலைஞர் ஆக்குபவை. அவற்றின் மொழித்திறனை யாரும் மறுத்துவிட முடியாது. அண்ணாவின் சிறுகதைகளில் பல, இலக்கியத் ‘தரத்தில்’ இருந்து இம்மியளவும் கூட இறங்கி விடாதவை.

திராவிட இயக்கம் மணிக்கொடி இயக்கத்தைப் புறக்கணித்தது என்று ஜெயமோகனைப் போல அசட்டுத்தனமான குற்றச்சாட்டை வைப்பவர்களால்தான் அவற்றைப் (எதையும்) படிக்காமலேயே பிரச்சாரம் என்று புறக்கணிக்க முடியும். மணிக்கொடி எழுத்தாளர்கள்தான் திராவிட இயக்கத்தை புறக்கணித்தார்களே தவிர திராவிட இயக்கம் அல்ல. புதுமைப் பித்தன் மறைந்தபோது “திராவிட நாடு” இதழில் அண்ணா வெளியிட்ட இரங்கல் குறிப்பு அவரது அக்கறைக்கு சாட்சியாக நிற்கும்.

இன்னமும், திராவிட இலக்கியம் பிரச்சார இலக்கியம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தால். ராஜாஜி தொடங்கி, மெளனி, சுந்தர ராமசாமி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோர், சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட இலக்கியம் என்ற பெயரில் மறைமுகமான, நுட்பமான இந்துத்துவ பிரச்சாரத்தைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒருவர் எதிர் – வாதம் வைக்க முடியும்.

ஜெயமோகன் மீதேகூட அவர் ஆர்.எஸ்.எஸ்,காரர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அவரும் அதைத் தொடர்ந்து மறுத்து வருகிறார். அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். ஆனால், அவரது விஷ்ணுபுரம் நாவலை விஜயபாரதம் ஸ்டாலில் வைத்து விற்றார்கள் என்பது ஊரறிந்த கதை. அதற்கு அவர் என்ன செய்வார் பாவம் என்று ஒருவர் ‘அப்பாவித்தனமாகக்’ கேட்கலாம்.

நாஜிக்களின் ஜெர்மனியில் வாழ நேர்ந்த துரதிர்ஷ்டசாலியான கலைஞர்களுள் ஒருவர் ஃப்ரிட்ஸ் லேங். மிகச் சிறந்த சினிமாக் கலைஞரான (இயக்குனர்) அவரது திரைப்படங்களை, ஃகிட்லர் தனது கொள்கைகளுக்கு நெருக்கமானவை என்று உச்சிமோந்து பாராட்டினான். மனிதகுல விரோதிகளுக்கு ஏதோ ஒரு வகையில் சாதகமாக அமைந்துவிட்ட படங்களை எப்படி தான் எடுக்க நேர்ந்தது என்று அதிர்ந்துபோன லேங், முதல் காரியமாக, தனது படங்களைத் தானே நிராகரித்தார். ஜெர்மனியைவிட்டே வெளியேறினார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தமக்குச் சாதகமானது என்று கருதிய ஒரு படைப்புடன், ஒரு கலைஞன் என்ற வகையில் ஜெயமோகனுக்கு என்ன உறவு இருக்க முடியும்? ஜெயமோகனின் பதில் இதுவரையில் கள்ள மெளனமாகத்தான் இருந்து வருகிறது.

பின் குறிப்பாக:

இக்கட்டுரை “நக்கீரன்” (அக்டோபர் 31, 2003) இதழில் வெளியானது. அவ்வருட சென்னை புத்தகக் கண்காட்சியின்போது பலருக்கும் பதில் சொல்லும் பொருட்டு (அவருக்கும் காலச்சுவடு குழுவினருக்கும் மோதல் உச்சத்திலிருந்தாக நினைவு) ஜெயமோகன் ஒரு நீண்ட துண்டறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், அவர் மீது ‘அவதூறு’ வீசியவர்களாக ஒரு நீண்ட பட்டியலைத் தந்திருந்தார். அதில் எனது பெயரும் சேர்க்கப்பட்டிருந்து. மற்றபடி, இக்கட்டுரையில் எழுப்பியுள்ள கேள்வி எதற்கும் அவர் பதில் அளிக்க முயற்சிக்கவில்லை. இனி அதற்கு அவருக்கு நேரமும் இருக்கப் போவதில்லை. சினிமாவைப் பற்றிய (மாற்று சினிமாவைப் பற்றி மறந்துவிடுங்கள்) எந்த அக்கறையும், எந்தத் தேடலும் அற்ற ஜெயமோகன் இப்போது கோடம்பாக்கத்தில் குப்பை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

%d bloggers like this: