அரைமண்டைக் கடவுள் மறுப்பாளரின் முட்டாள்தனமான பகுத்தறிவும் மூர்க்கத்தனமான இஸ்லாமிய எதிர்ப்பும்

தில்லியில் இருக்கையில், சீக்கிய நண்பர்கள் சிலர் தமது வழிபாட்டுத் தலமான குருத்வாராவிற்கு என்னை அழைத்துச் சென்றதுண்டு. நான் கடவுள்/மத நம்பிக்கையற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். என்றாலும், தமது வழிபாட்டு வழக்கங்கள் குறித்து எதையும் அறிவுறுத்தாமலேயே குருத்வாராவிற்கு வரச் சொல்லியிருந்தார்கள்.

சென்ற தருணங்கள் பெரும்பாலும், அரசியல் சந்திப்புகள் தொடர்பானவை. சீக்கிய “தேசிய இனத்தின்” சமரசமற்ற தலைவராக விளங்கும் திரு. சிம்ரஞ்சித் சிங் மான் அவர்களையும் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள்.

முதல் முறை திரு. சிம்ரஞ்சித் சிங் மான் அவர்களைச் சந்திக்க தில்லி நாடாளுமன்ற நூலக வளாகத்திற்கு மிக அருகில் இருந்த பெரிய குருத்வாராவிற்கு வரச் சொல்லியிருந்தார்கள். 1984 ஆம் ஆண்டு “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்” என்ற பெயரில் துவக்கி வைக்கப்பட்ட சீக்கிய இனப் படுகொலை நினைவு நாள் கூட்டம் அக்குருத்வாரா வளாகத்திற்குள் நடந்தது. வளாகம் என்றால், அதற்குள் வழிபடும் இடம் தவிர்த்து, தங்கும் விடுதி, உணவு சமைக்கும் கூடம், உணவருந்தும் கூடம், கண்காட்சி அரங்கம், பரந்த புல் வெளி என்று பலவும் உள்ளடங்கியதாக இருந்தது.

புல் மேவிய சிறு மைதானத்தில் போடப்பட்டிருந்த சிறிய மேடையில், ஏழுட்டு தலைவர்கள் பஞ்சாபி மொழியில் ஏதேதோ பேசினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து, பேந்தப் பேந்த விழித்து புரியாததைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

கூட்டம் முடிந்ததும், அனைவரும் வழிபடும் தலத்திற்குள் சென்றுவிட்டார்கள். நான் குருத்வாராவை விட்டு வெளியே வந்து, சற்று தூரம் தள்ளிச் சென்று, நாடாளுமன்ற நூலக வளாகத்தை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இரண்டு வெண்குழல் வத்திகளை (சிகரெட்டுகளை) ஊதித் தள்ளினேன். சீக்கிய வழிபாட்டுத் தலங்களான குருத்வாராக்களுக்குள் வெண்குழல் வத்திகள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட தூரத்திற்குள் எவரும் வெண்குழல் வத்திகளைப் புகைப்பதும் இல்லை. வெண்குழல் வத்திகளை விற்பதும் இல்லை. பிற சமயத்தினரும் இவ்வழக்கத்திற்கு மதிப்பளிக்கிறார்கள். சீக்கியர்கள் பெரும்பான்மையினராக இல்லாத பகுதிகளிலும்.

வெண்குழல் வத்திகளைப் புகைத்துவிட்டு மீண்டும் குருத்வாராவிற்குள் நுழைந்தபோதும் வழிபாடு தொடர்ந்து கொண்டிருந்தது. காலாற வளாகத்தைச் சுற்றி நடைபோட்டுக் கொண்டு, வழிபட வந்தவர்களின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று வழிபாட்டை முடித்துவிட்டு தலைவர்களும் தொண்டர்களுமாக வெளியே வந்தார்கள். சரசரவென நாற்காலிகள் போடப்பட்டு, பத்திரிகையாளர் சந்திப்பு. அது முடிந்த உடனே, அனைவரும் உணவருந்தும் கூடத்தை நோக்கி தலைதெறிக்கப் பறந்தார்கள். பசி.

வரச்சொன்ன நண்பர்கள் பசியில் என்னை மறந்து போனார்கள். எல்லோரும் எங்கே ஓடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டு விசாரித்துத் தெரிந்துகொண்டு, உணவுக் கூடத்தை நோக்கி நானும் நடந்தேன்.

கைகால் கழுவிக் கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டுகளில் இருந்து ஒன்றை உருவிக்கொண்டு, வயது வித்தியாசம் பாராமல் எல்லோரும் வரிசையாக கூடத்தின் தரையில் அமர்ந்திருந்தார்கள். பஞ்சாபி மொழியில் பொது உணவுக் கூடத்தின்/சமையலறையின் பெயர் “லங்கர்”. அதிலிருந்து அங்கு பரிமாறப்படும் உணவையும் “லங்கர்” என்றே அழைக்கிறார்கள்.

நீண்ட கூடம். நாலைந்து நபர்கள் கூடைகளில் உணவைச் சுமந்து வந்தார்கள். வரிசையில் அமர்ந்திருந்தவர்களின் அருகில் வந்ததும் கைகளை ஏந்தினார்கள். ஏந்தியவர் கைகளில் கூடையைச் சுமந்து வந்தவர்கள், ரொட்டித் துண்டுகளைப் போட்டார்கள்.

எனக்கு அருகில் வந்ததும் நானும் வலது கையை ஏந்தினேன். ரொட்டி கிடைப்பதற்குப் பதிலாக பஞ்சாபியில் காச்சு மூச்சென்று சத்தம் கேட்டது. கூடையைச் சுமந்து கொண்டிருந்தவர் கோபமாக ஏதோ திட்டிக் கொண்டிருந்தார். என்னைத்தான் திட்டுகிறார் என்று புரிந்தது. ஆனால் என்ன திட்டிக் கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஏன் திட்டிக் கொண்டிருக்கிறார் என்று சுத்தமாகப் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

நல்லகாலமாக, அருகில் அமர்ந்திருந்த சீக்கியர், சட்டென்று என் இடது கையைப் பிடித்து உயர்த்தி, வலது கையோடு சேர்த்து வைத்தார். இருகைகளையும் சேர்த்துவைத்து உயர்த்தி ரொட்டியைக் கேட்க வேண்டும் என்று சைகை செய்தும் காட்டினார். ரொட்டி கைகளில் விழுந்தது.

அந்தக் கூட்டத்தில் தாடி வைக்காமல் இருந்த ஒரே நபர் நானாகத்தான் இருந்தேன். அருகில் அமர்ந்திருந்தவர், “மதராஸி?” என்று கேட்டார். “யெஸ்” என்று பதில் சொல்லிவிட்டு ரொட்டிக்குத் தொட்டுக்க என்ன தருவார்கள், எப்படித் தருவார்கள் என்று கொஞ்சம் பயத்தோடு காத்திருந்தேன். நல்ல காலமாக, அடுத்து சிலர், பாத்திரங்களில், உருளைக் கிழங்கு சப்ஜியை எடுத்துவந்து தட்டில் வைத்துப் பரிமாறிச் சென்றார்கள்.

சாப்பிட்டு முடித்து, கூடத்தைவிட்டு வெளியே வந்து, நண்பர்களை கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு, வளாகத்திற்குள் இருந்த தங்கும் விடுதியில் சந்தித்தோம். சிம்ரஞ்சித் சிங் மான் அவர்களுடனும் கலந்துரையாடல். பிறருடன் உசாவல்கள் என்று பொழுது கழிந்தது.

கலைந்து செல்லும்போது, என்னை வழியனுப்ப வந்த நண்பரிடம் மதியம் நடந்த சம்பவத்தைச் சொல்லி விளக்கம் கேட்டேன். அடர்ந்த சீக்கியத் தாடிக்குள்ளிருந்து 16 பற்களாவது என்னைப் பார்த்து கேலி செய்தன. “லங்கரில் சமைக்கப்படுவது பொது உணவு. அங்கு இறைவனின் முன் அனைவரும் சமம். அனைவரும் இறைவனின் உணவிற்காக இரு கைகளையும் ஏந்தி நிற்கத்தான் வேண்டும்,” என்றார்.

முதலும் கடைசியுமாக, எனது “சோத்தாங்கைப்” பழக்கத்தை நினைத்து வெட்கப்பட்டது அப்போதுதான். இந்த அனுபவம், மேற்கொண்டு இது குறித்து அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டிவிட்டது. சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் முடிந்தது.

“லங்கர்” – பொது உணவு சமைத்தல், வழிபாட்டுத் தலங்களில் பொது உணவு பரிமாறுதல் (பிற சமயத்தவருக்கும்) இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த முஸ்லீம்களால் அவர்களது வழிபாட்டுத் தலமான மசூதிகளில் கடைப்பிடிக்கப்பட்டது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக் இதைத் தமது வழிபாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டார் என்பன போன்ற விவரங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தாக்கம் இந்தியத் துணைக் கண்டத்தில் உருவான வைதீக சமயத்திற்கு முற்றிலும் புறம்பானது. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்த ஒரு சமயத்தால் அதைக் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது. வைதீக சமயத்திற்கு மறுப்பாக எழுந்த பௌத்த சமண சமயங்கள், “கர்மம்” – நன்நடத்தை, நற்சிந்தனை, நல்லொழுக்கம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, இவ்வுலக நல்வாழ்வை வலியுறுத்தி பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை மறுக்க முற்பட்டன. குப்தர் காலத்தில் மீண்டெழுந்த வைதீக சமயம், “கர்ம” சிந்தனையை “கர்ம பலனாக” உள்வாங்கிக் கொண்டு, பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை “கர்ம வினையாக” நியாயப்படுத்தின. நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியில் எழுந்த சிக்கலான சமயச் சிந்தனை மரபுகள் இவை.

இவை குறித்து அறிந்து கொள்ளும் ஆவலோ, தேடலோ அற்ற அரைமண்டைகள்தாம், ஆய்ந்தறியும் பகுத்தறிவுச் சிந்தனையற்று, முரட்டு நாத்திகவாதச் செருக்கோடு, மசூதிகளில் பிற சமயத்தினருக்கும் வழங்கப்படும் உணவுக் கொடையை “பிச்சை” என்று தூற்ற முடியும்.

“பிச்சை”யைக் கேவலமாகப் பார்க்கும் சிந்தனையே வைதீகச் சமயத்தோடு பிணைந்தது என்று சொன்னாலும் மிகையில்லை. மரணச் சடங்குகளைச் செய்யும் சவுண்டிப் பார்ப்பனர்களையும், வழிபடுவோர் காணிக்கையில் வாழும் பூசாரிப் பார்ப்பனர்களையும் இழிவான உட்பிரிவினராக “உயர்சாதி பார்ப்பனர்கள்” விலக்கி வைத்திருப்பது, அவ்விரு பிரிவினரும் வயிற்றுப் பிழைப்பிற்கு “பிச்சை” எடுத்து வாழ்பவர்கள் என்ற காரணத்தின் பொருட்டே.

மற்றொருபுறம், மேற்கத்திய கிறித்தவ மதிப்பீடுகளை உள்வாங்கிக் கொண்டு எழுந்த முதலாளிய மதிப்பீடுகளும் “பிச்சைக்காரர்களை” பாவாத்மாக்களாக வெறுத்து அருவருத்தது. “உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்” (ஆதியாகமம்: 3: 19) என்று தேவனானவர் ஆதாமிற்கு இட்ட கட்டளை முதலாளியச் சிந்தனையை அலைக்கழித்தது. தேவனானவர் இட்ட கட்டளைக்குக் கீழ்படியாது, “உழைக்காமல்” திரிந்த “சோம்பேறி”களையும், நாடோடிகளையும், குற்றம் புரிந்தவர்களையும் கட்டாய உழைப்பு முகாம்களில் அடைத்து பயனற்ற கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தியது. தொழில் முதலாளியத்தின் ஆரம்ப காலம் இத்தகைய கட்டாயக் கடும் உழைப்புச் சுரண்டலின் மீதே எழுந்தது.

உழைக்காமல் இருப்பது இறைவனின் கட்டளையை மீறுவது என்ற கிறித்தவ மதிப்பீட்டின் மீது எழுந்த அதே முதலாளியம்தான் உழைக்காதவர்களின் பெரும் திரளையும் உருவாக்கியது. மூன்று நபர்களுக்கு 4 மணி நேரமாகப் பிரித்துத் தரக்கூடிய வேலையை, ஒரு நபரை 12 மணி நேரம் உழைக்கச் செய்து சுரண்டியது. வேலையற்ற 2 நபர்களை உருவாக்கி, அவர்களைத் திறனற்றவர்கள், சோம்பேறிகள் என்று இழிவுபடுத்தி பிச்சைக்காரர்களாக அலையவும் விட்டது. வேலையற்ற 2 நபர்களைக் காட்டி, வேலையில் இருக்கும் ஒரு நபரைத் தனக்கு விசுவாச அடிமையாக உருமாற்றிக் கொண்டது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்காமல், சிலருக்கு மட்டும் வாய்ப்புகளைத் தந்து, பெரும்பாலானோரை வேலையற்றவர்களாகவும் “சோம்பேறிகளாகவும்” “பிச்சைக்காரர்களாகவும்” சமூகத்தின் விளிம்புகளில் அலையவிடுவது முதலாளியத்தின் இயக்கத்திற்கு அவசியமானது. அவ்வாறு அலைபவர்களையும், மசூதிகளில் வழங்கப்படும் உணவைப் பெற வரிசையில் நிற்பவர்களையும், 12 மணிநேரத்திற்கும் மேலாக கூலிக்கு மாரடித்து, முதலாளிய நுகர் பொருள் பண்பாட்டில் திளைக்கும் விசுவாச அடிமைகள், பிச்சைக்காரர்கள் என்று சாடுவதில் வியப்பில்லை.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க விழையாத மேற்குலக கிறித்தவச் சிந்தனை மரபின் ஒரு குறிப்பிட்ட சரடில் உருவான முதலாளியச் சிந்தனையும் இயக்கமும், இந்தியத் துணைக்கண்டத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாவதை வெறுக்கும், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்து சாதி ஒதுக்கலை வலியுறுத்தும் பார்ப்பனச் சிந்தனைக்கு மிகவும் அணுக்கமானது.

மூன்றே முக்கால் வீதமேயான பார்ப்பனர்கள் தமது கருத்தியலை, முக்கால்வாசி பெருந்தொகையினரின் சிந்தனையாக மாற்றியதுதான் அதன் வெற்றி. அதேவீதமுள்ள முதலாளிய அடிமைகளின் சிந்தனையை ஓடாய் தேயும் உழைப்பாளர்களின் சிந்தனையாக மாற்றியது முதலாளியத்தின் வெற்றி. எள்ளி நகைக்கத்தக்க சிறு கூட்டத்தின் கருத்தியல், ஆகப் பெரும்பான்மையினரின் கருத்தியலாக உருமாறுவதுதான் அடிமைத்தனத்தின் அடையாளம்.

இத்தகைய பெரும்பான்மைவாத அடிமைகள் உலகின் எந்த மூலை முடுக்குகளுக்குச் சென்றாலும், அங்கு காண நேரும் புதியனவற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளும் திறனற்றவர்களாகவே இருப்பார்கள். புதியன எதையும் காண மறுப்பார்கள். ஏற்கனவே கொண்டிருந்த கருத்தமைவுகளையே மறு உறுதி செய்து கொள்வார்கள்.

பெரும்பான்மைவாதம் பிறவற்றின் நியாயங்களைக் காண மறுக்கும் மூடத்தனம் மட்டுமன்று. பிறவற்றின் நியாயங்களை மறுக்கும் முரட்டுத்தனமும்கூட. அத்தகையோர், பகுத்தறிவையும் கடவுள் மறுப்பையும் மதமாக மாற்றிவிடும் பக்திமான்களாக இருக்கவே தகுதிபடைத்தவர்கள்.

இஸ்லாமிய விழிப்புணர்வின் இரண்டாவது அலை

குறிப்பு: “இரண்டாவது கொமேனி” என்று பரவலாக அறியப்பட்ட ஹசன் அல்-துராபி, மேற்குலகோடு சமரசம் செய்துகொள்ளும் முயற்சியில் உள்ள சூடானிய அரசால் 2001-ல் கைது செய்யப்படும்வரை, வடக்கு ஆப்ரிக்காவில் இஸ்லாமிய எழுச்சியை வழிநடத்தியவர். ஒசாமா பின் லேடன் சூடானிலிருந்து ஆஃப்கானிஸ்தானுக்குப் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்வரை, அவருடன் பலவருட காலம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். இக்குறிப்புகள், 1994 கோடையின்போது New Perspective Quarterly – தொகுப்பாசிரியர் நாதன் கார்டெல்சிற்கு அளித்த பேட்டியைத் தழுவியவை.

——————————

அல்ஜீரியாவிலிருந்து ஜோர்டான் வரையிலும், கார்டூமிலிருந்து கோலாலம்பூர் வரையிலும், இஸ்லாமிய நிலப்பரப்பெங்கும் ஒரு புதிய முதிர்ச்சி மிகுந்த இஸ்லாமிய விழிப்புணர்வு அலை இன்று வீசிக்கொண்டிருக்கிறது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களின் கடமையுணர்ச்சி மிகுந்த செயல்பாடாகவோ, வெறும் அறிஜீவித்தனமானதாகவோ, பண்பாட்டு ரீதியிலானதாகவோ, அரசியல் ரீதியிலானதாகவோ ஏதோ ஒரு புலத்திற்குள் சுருங்கிவிடாமல், இந்த விழிப்புணர்வு அலை, ஈரானியப் புரட்சியில் முதன்முறையாகக் கண்ணுற்றதைப்போல, மேற்சொன்ன அனைத்தையும் உள்ளடக்கியதாக, சமூகத்தைத் தலைகீழாக மறுநிர்மாணம் செய்யும் வகையிலானதாக, பரந்த நோக்குடையதாக இருக்கிறது.

ஆப்ரிக்க சோஷலிசமும் காலாவதியாகிப்போன ஒரு தேசியவாதமும் – குறிப்பாக அராபிய தேசியவாதமும் விட்டுச் சென்ற வெற்றிடம், இந்தப் பரந்துபட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. பின்-காலனிய தேசிய அரசுகளுக்கு ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிவதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிநிரலும் இருக்கவில்லை. தமது இலக்கை அடைந்ததும், மக்களுக்கு வழங்க அவற்றிடம் ஏதும் இருக்கவில்லை. அதனால், ஏகாதிபத்திய மேற்குலகிற்கு மாற்றாக, சோஷலிசத்தை நோக்கி அவை திரும்பின. இப்போது, எல்லோரையும் போல, இஸ்லாமிய உலகும் சோஷலிசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து நிற்கிறது.

1950களில், தெற்கு ஆசியாவிலும் அரேபியாவிலும் ஈரானிலும் இஸ்லாமிய விழிப்புணர்வு மெல்ல எழ ஆரம்பித்தது. 1970களில், சில அரசமைவுகளிலும் பங்கேற்றது. இஸ்லாமியச் சட்டங்களின் மூலங்களைப் பெறுவதில் இருந்த சிரமங்கள் காரணமாகவும் மொழித் தடைகளாலும் இந்த இஸ்லாமிய விழிப்புணர்வு இயக்கம் வடக்கு ஆப்ரிக்காவிற்கும் அதன் பிறகு, சஹாராவிற்குத் தெற்கேயும் வந்து சேர சற்றுத் காலதாமதமானது. சவுதி அரேபியாவில் உள்ள நமது புனிதத் தலங்களுக்கு மிக அருகாக வெளிநாட்டவர்களைக் கொண்டு வந்து சேர்த்த வளைகுடா யுத்தமே, வடக்கு ஆப்ரிக்காவில் சாதாரண மக்களிடையே மட்டுமின்றி, மேட்டுக்குடியினர் மத்தியிலும்கூட, இந்த இயக்கம் ஒரு புது வீச்சோடு பற்றிப்பரவுவதற்குக் காரணமானது.

சமீபத்திய இஸ்லாமிய விழிப்புணர்வின் புதிய, முக்கிய அம்சம் என்னவென்றால், அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உள்ள, ‘நாகரீகமயமான’ பிரிவினர் என்பதாகச் சொல்லப்படும் மேட்டுக்குடியினரும்கூட இஸ்லாமியமயமாகி வருகின்றனர் என்பதே.

சூடானில் இது ஏற்கனவே நடந்தேறிவிட்டது. அல்ஜீரியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 1985ல் இஸ்லாமியமயமாதலைத் தடுத்து நிறுத்த சூடானிய இராணுவம் முடுக்கிவிடப்பட்டது. ஆனால், இஸ்லாமியமயமாதலை ஆதரித்த இளம் அதிகாரிகளின் கிளர்ச்சிக்கே அது வித்திட்டது. அல்ஜீரியாவிலும் இது நடக்கும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நாகரீகமயப்பட்ட பிரிவினர் இஸ்லாமியமயமாவது, இன்று இப்பகுதி முழுக்க நிகழ்ந்து கொண்டிருக்கும் போக்கு.

இந்த இஸ்லாமிய விழிப்புணர்வு எடுக்கும் வடிவம், மேற்குலகு முன்வைக்கும் சவால்களின் தன்மையைப் பொருத்தே அமைந்து வந்திருக்கிறது. ஈரானில், சவால் மிககூர்மையாக இருந்ததால், இஸ்லாமிய இயக்கம் மேற்குலகை எதிரியாகக் கொண்டு அலைக்கழிந்தது. கிறித்துவத்திற்குப் பின்னான மேற்குலக வாழ்க்கைமுறையை – பொருள்மயமான, கட்டுப்பாடுகளற்ற பாலியல் உறவுகள் மிகுந்த, மதுவருந்தும் விஷயத்தில் மிகுந்த சுதந்திரம் பெற்றிருந்த வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்துவதில், அமெரிக்கா ஷாவுடன் தன்னை மிகவும் நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டதால், அயத்துலா கொமேனியும் அவருடைய சீடர்களும் அந்தப் “பெரும் சாத்தானை” எதிர்கொள்வதிலேயே தமது கவனம் முழுவதையும் குவித்தனர்.

இதற்கு முற்றிலும் மாறான ஒரு உதாரணமாக, மலேசியாவில் காலனிய நீக்கம் சற்று மென்மையாக நடந்தேறியது. அதனால், அங்குள்ள மக்கள், பொது எதிரியின் மீதல்லாமல், பொது இலட்சியங்களின்பால் தமது கவனத்தைக் குவித்தனர். இதனால், ஈரானின் எதிமறைத்தன்மையான புரட்சியில் நிகழ்ந்ததைப் போலல்லாமல், அங்கு இஸ்லாமிய விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது.

விழிப்புணர்வு பெற்ற இஸ்லாத் இன்று எம் மக்களுக்கு ஒரு சுயஅடையாளத்தையும் காலனியத்திற்குப் பிறகு ஆப்ரிக்காவில் சிதறுண்டுபோன வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டலையும் தருவதாக இருக்கிறது. குறிப்பாக, ஆப்ரிக்கச் சூழலில் தாம் அனைவரும் ஒரே மக்கள் என்ற உணர்வை அளிப்பதாகவும் அது இருக்கிறது.

ஆப்ரிக்காவில் மூர்க்கமாகத் தலைவிரித்தாடிய இனக்குழுவாதம், பிரதேசவாதம், இவற்றின் மத்தியில், ஒற்றுமைக்கான ஒரு குவிமையத்தையும் குறைந்தபட்ச கருத்தொருமிப்பையும் தருவதாக இஸ்லாத் இருக்கிறது. இந்த விஷயத்தில் “தேசம்” என்ற கருத்தமைவால் எதையும் தரமுடியவில்லை. ஆப்ரிக்கத் தேசங்கள் காலனிய நிலப்பட வரைவாளர்கள் விட்டுச் சென்ற எச்சங்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இஸ்லாமிய சிவில் சமூகம்:

மேலும், இஸ்லாத்தின் ஷரி-அத் சட்டத்தொகுப்பு, எம் மக்களுக்கு உயர்வான மதிப்புகளையும் வழிகாட்டுதல்களையும் தருவதாக இருக்கிறது. அவற்றை எம் மக்கள் நம்பிக்கையின்பாற்பட்டே பின்பற்றுகிறார்களே ஒழிய, அரசாங்கம் திணிப்பதால் அல்ல.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பொருள்முதல்வாத சர்வாதிகார ஆட்சியமைவுகள் சரிந்ததன் தொடர்ச்சியாக, அரசாங்கத்தின் தலையீட்டிற்கு அப்பாற்பட்ட இயங்குவெளியான “சிவில் சமூகம்” என்பதன் மறுபிறப்பு பற்றி மேற்குலகம் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், தம்மைக் கட்டுக்குள் வைத்திருந்த ஷரி-அத்தை, காலனிய நுகத்தடியின்கீழ் இழந்த பிறகே, சர்வாதிகார அரசுகளின் கொடூரமான அனுபவங்களை இஸ்லாமியர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

ஷரி-அத்தின் கீழ் எந்த ஒரு ஆட்சியாளரும் தமது சொந்த மக்களை ஒடுக்கமுடியாது. இதனால், தனிநபரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது, சமூகமும் சுயேச்சையாக இயங்கியது. சமூகத்தை ஒழுங்கு செய்த விதிகள் இறைவனின் கட்டளைகள் என்று நினைத்ததால் மக்கள் அவற்றைத் தமக்கான ஒழுங்கு விதிகளாகவே கருதினர்.

எமது மக்களுக்கேயுரிய தொன்மையான மதிப்புகள், ஒழுங்கு விதிகளோடு முற்றிலும் தொடர்பற்றிருந்த மதநீக்கம் செய்யப்பட்ட சட்டங்களின் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு அந்நியமான உணர்வை உருவாக்கி காலனியவாதிகள் இந்த ஒருங்கிணைவை அழித்தனர். காலனிய ஆட்சி விட்டுச் சென்ற மரபுச்சொத்தாக அந்த அந்நிய உணர்வு தங்கிவிட்டது. சட்டப்படியான தேர்தல்கள் நடந்தபோதிலும், மக்கள் தமது இனக்குழுவைச் சார்ந்த உறவினர்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். அல்லது, பணம் தந்தவர்களுக்கு வாக்களித்தனர். உண்மையான பிரதிநிதித்துவம் என்பது இருக்கவில்லை.

சூடானைப் போன்ற, வறுமை மேலோங்கியிருக்கும், பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கும் சமூகங்களில், ஷரி-அத் வழக்கொழிந்துபோன நிலையில், அரசாங்கத்திற்கு எந்தவிதமான கடப்பாடுகளோ, அறவியல் நெருக்கடிகளோ இல்லாமல் போனதால் ஊழலே ஆட்சி புரிந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் தமது ஆதாரவளங்கள் அனைத்தையும் வீணடித்து மக்களை நிர்க்கதியில் விட்டன. ஆகையால், பொது விவகாரங்களில் அனைவரும் இஸ்லாத்தின் அறவியல் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளும்போதே இத்தகைய ஊழலை ஒழித்துக்கட்ட முடியும்.

இறுதியாக, தேசியமும் சரி, சோஷலிசமும் சரி, நமது சமூகங்கள் முன்னேறுவதற்கு எந்த வகையிலும் உதவ முடியாது. இலாப நோக்கும் ஊதிய உயர்வும் சமூகத்தை முன்னோக்கிச் செலுத்தப் போதுமான ஊக்கம் தர இயலாது என்றிருக்கும் சமூகச் சூழல்களில் மதம் ஒன்றே சமூகம் முன்னேறுவதற்குரிய வலுவான ஊக்கத்தைத் தருவதாக இருக்கமுடியும்.

ஏழ்மை மிகுந்த சமூகங்களில், கல்விக்கூடங்களுக்குச் செல்லவோ அறிவைத் தேடவோ மக்களுக்குத் தூண்டுதல்கள் இருப்பதில்லை. தெய்வீக இலக்குகளை நோக்கிச் செல்ல வழிகாட்டுவதால் இஸ்லாத் அத்தகைய தூண்டுதலைத் தருவதாக இருக்கிறது. இறைவனின் அழைப்பு அவர்களுடைய இதயங்களைத் தொடுகிறது. அறிவுத்தேடலே இறைவணக்கமாகிவிடுகிறது.

விவசாயமே அவர்களுடைய ஜிகாத், புனிதப் போர் என்று கற்பித்தால், மக்கள்  முழுமனதோடு அதில் இறங்கிவிடுவார்கள். ”இறைவனிடம் உண்மையாக இருங்கள், விவசாயத்தை பெருக்குங்கள்!” இந்த முழக்கமே இன்று சூடானை கிட்டத்தட்ட பஞ்சத்திலிருந்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

பணக்கார மேற்குலகிற்கு இது புரியாத புதிராகத் தோன்றலாம். ஆனால், விரிந்திருந்த காட்டுப்பரப்பிலிருந்து இன்றைய மாபெரும் அமெரிக்காவை வார்த்தெடுத்ததில் ப்யூரிட்டானிசத்தின் பங்களிப்பு என்ன? ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ப்ரொட்டஸ்டண்ட் அறவியல் ஆற்றிய பாத்திரம் என்ன? மதம் முன்னேற்றத்தின் இயங்குசக்தி.

மேற்குலகுடனான மோதல்:

இஸ்லாமிய எழுச்சியால் ஒரு மோதல் உருவாகக்கூடும் என்று அஞ்சுவோர் (அல்லது அதை விரும்புவோர்?) பெண் உரிமை, முஸ்லிம் அல்லாதாரின் உரிமைகள், ஷரி-அத்தின்படியான குற்றவியல் சட்டங்கள், சல்மான் ருஷ்டி பிரச்சினை போன்ற மேற்குலகின் மதிப்புகளோடு முரண்படும் பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இவற்றுக்கு மறுமொழி கூற என்னை அனுமதியுங்கள். முதலில், பெண் உரிமை.  பெண்களை விலக்கி வைத்து, சமூகத்தில் அனைத்திலும் சமமாகவும் நியாயமாகவும் பங்குபெறுவதற்கான அவர்களுடைய உரிமைகளைப் பறித்த மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பாரம்பரியம் சில இஸ்லாமிய நாடுகளில் உருவானது என்பதென்னவோ உண்மைதான்.

ஆனால், இஸ்லாத்தின் தற்போதைய புதிய மறுமலர்ச்சியோடு சேர்ந்து பெண்கள் தமது உரிமைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். காரணம் எளிமையானது – உள்நாட்டுப் பாரம்பரியம், மரபுகளின் பெயரால் எவரும் குரானை மறுத்துவிட முடியாது. குறிப்பாக, சூடானில், இஸ்லாமிய இயக்கம், பெண்களுக்கு அவர்களுக்குரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற இயக்கத்தை முன்னெடுத்து நடத்தியது. இப்போது, பெண்கள் சமமான கல்வி வாய்ப்புகள் பெற்றிருப்பதோடல்லாமல், பொதுவாழ்வில் கணிசமான பங்காற்றவும் தொடங்கியிருக்கிறார்கள். சிலர் பாராளுமன்றத்திற்கும் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மசூதிக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆண்களின் கவர்ச்சி ஆர்வத்தைத் தூண்டுவோராக பெண்கள் இருந்துவிடக்கூடும் என்பதால், பெண்களின் பாதுகாப்பைக் கருதி, அவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று மரபு சொல்லி வைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், எமது சமயம் கற்றுக்கொடுத்தது அதையல்ல. பொது இடங்களில் தமது உடலையும் முகத்தையும் மறைத்து, அடக்கமாக உடுத்த வேண்டும் என்று எமது மதம் வலியுறுத்தியது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், ஆண்களும் நாகரீகமாக உடுத்தவேண்டும். இருவருமே ஒருவர் மற்றவரிடம் நயமாக நடந்துகொள்ள வேண்டும்.

பலநேரங்களில் மரணத்திற்குக் காரணமாகிவிடுகிற, பெண்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சுன்னத் (female circumcision), சூடானின் சில பாகங்களில் நிலவி வந்த இன்னொரு மரபுசார்ந்த வழக்கம். இப்போது, இஸ்லாமிய விழிப்புணர்வின் விளைவாக மறைந்தே போய்விட்டது. ஒரு அடையாள அளவில், குறியீட்டு ரீதியாக மட்டுமே இன்று அவ்வழக்கம் பின்பற்றப்படுகிறது. மேற்கைச் சேர்ந்த பலர், இத்தகைய கொடூரமான வழக்கத்தை இஸ்லாத்துடன் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உண்மையில், அது “ஃபாரோனிய சுன்னத்” (Pharaonic circumcision) [பண்டைய எகிப்து பாரம்பரியத்தில் வந்தது என்பதை உணர்த்தும் வகையில், எகிப்து மன்னர்களாகிய ஃபாரோக்களால் குறிக்கப்படுகிறது – மொழிபெயர்ப்பாளர்] என்றே அழைக்கப்பட்டு வந்தது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பொருத்தவரையில், முஸ்லிம் அல்லாதவர்கள் தமது மதத்தையும், வழிபாட்டு மரபுகளையும் பின்பற்றுவதற்கான முழுமையான சுதந்திரம் ஷரி-அத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கல்வி, குடும்பம் உள்ளிட்டு, தனிப்பட்ட வாழ்க்கை இஸ்லாமிய அரசுச் சட்டங்களின் தலையீட்டிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஷரி-அத்தின்படி, சிறுபான்மையினர் சேர்ந்து வாழும் பகுதிகளில் பெருமளவிலான நிர்வாகத் தன்னாட்சிக்கு உரிமையுடையவர்கள். முஸ்லீம் பெரும்பான்மையினருடனான உறவை, அச்சிறுபான்மையினர், இருவருக்குமான பொதுப்புலத்தையும் அவரவருக்குரிய தனிப்புலத்தையும் வரையறுத்து, பரஸ்பர உரிமைகளையும் கடமைகளையும் தெளிவாக விளக்கும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒழுங்கு செய்துகொள்ளலாம்.

இஸ்லாமிய வரலாற்றில் நிலவிய இத்தகைய ஒப்பந்தங்களுக்கு எடுத்துக்காட்டாக, முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளில் தடைசெய்யப்பட்டிருந்த மது, யூத அல்லது கிறித்தவப் பகுதிகளில் தடையின்றி அனுமதிக்கப்பட்டிருந்த்தைக் குறிப்பிடலாம்.

ஷரி-அத்தும்கூட உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுகிற, நிலையான ஒற்றை சட்டத் தொகுப்பு அல்ல. மாறுபட்ட பிரதேசங்களின் குறிப்பான நிலைகளுக்கேற்ப மையம் நீக்கிய விதத்தில் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாறுபட்ட பல இஸ்லாமியச் சமூகங்கள், தமக்கென்று மாறுபட்ட சட்டத் தொகுப்புகளை வைத்திருக்கின்றன. தெற்கு சூடானில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசாள்கைக்கான இந்த இஸ்லாமிய நெறிகள், துணையாகக் கொள்ளப்படுகின்றன.

முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கில் ஷரி-அத் நடைமுறையில் இருக்கும். ஆனால், கிறித்தவர்களும் பிற புறசமயத்தினரும் பெரும்பான்மையினராக இருக்கும் தெற்கில், ஷரி-அத்தின் குற்றவியல் சட்டங்கள் செல்லாது.

1980 களில், மேஜர் ஜெனரல் காஃபர் மொஹம்மது அல்-நுமேரி ஒரு அரசியல் தந்திரமாக, இஸ்லாத்தின்பால் தனக்குள்ள பற்றுதலைக் காட்டும் பொருட்டு, ஷரி-அத்தின் குற்றவியல் சட்டங்களைத் தனது விருப்பத்திற்கேற்ப பிரயோகித்தபோது, மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதிலும் எழுந்தன. அதன் விளைவாக, ஷரி-அத்தின் ஆட்சியில் ஒவ்வொரு சாதாரண சிறு திருட்டுக்கும், கைகளைத் துண்டிப்பது அல்லது மரண தண்டனையே கூட வழங்கப்படும் என்று மேற்கில் பலரும் கருதுகிறார்கள்.

அது உண்மையல்ல. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், அத்தகைய தண்டனைகள் அங்கு இரண்டே இரண்டுதான் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமியச் சட்டத்தில், குற்றத்தை நிறுவும் ஆதாரங்களின் நம்பகத்தன்மை மிகவும் உயர்ந்த அளவினதாக இருக்கவேண்டும். மேலும், திருடப்பட்ட பொருளின் மதிப்பு, வாழ்க்கை நிர்ப்பந்தத்தில் செய்த குற்றங்கள் என்று சொல்ல முடியாதவை, அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புகோரல், திருடிய பொருட்களைத் திருப்பிவிடுதல் போன்ற வேறு பல காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டே தண்டனைகள் வழங்கப்படும்.

பெரிய திருட்டுகள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவும், மக்களை நல்லொழுக்கத்தில் பயிற்றுவிக்கவுமே இத்தகைய கடுமையான தண்டனைகள் என்பதே இதன் மொத்தக் கருத்தும். சிறு குற்றங்களுக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகளுக்கு எந்தவகையிலும் கூடுதல் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இஸ்லாத்தின்கீழ் தண்டனைகள் கடுமையானவையாக இருக்கின்றன என்பதையும் மீறி, அமெரிக்காவில் நிலவுவது போன்ற வன்முறை மிகுந்த சூழலும், குற்றச் சம்பவங்கள் மிகுந்த சமூகமும் மோசமான மாற்றுகளாகவே இருக்கும்.

காலனிய காலத்தில் சூடானில் திணிக்கப்பட்ட ஆங்கிலேயச் சட்டங்களைவிட, ஷரி-அத்தில் கொலைக் குற்றம் தொடர்பான சட்டங்கள் மிகுந்த நெகிழ்வுத் தன்மையுள்ளவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, குற்றம் திட்டமிட்ட கொலையாக இருந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட தரப்பாரிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டால் அல்லது உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுவிட்டால், குற்றத்தைச் செய்தவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலையும் செய்யப்படுவார். சிறையிலடைப்பது ஒருவருடைய குணநலன்களைக் கெடுப்பதாகவும், அவரை மட்டுமல்லாமல், குற்றத்திற்குச் சம்பந்தமில்லாத அவருடைய குடும்பத்தாரையும் பாதிப்பிற்குள்ளாக்குவதாகவும் இருக்கிறது என்பதால் ஷரி-அத் அதற்கும் அதிக அழுத்தம் தருவதில்லை.

சமயக் கொள்கைகளை மீறியவர் என்று சல்மான் ருஷ்டிக்கு சூடானில் தீர்ப்பு  அளித்திருக்கவும் முடியாது. இஸ்லாத்தின் நெறிகள் அனைத்தும் தழுவியதாக இருந்தாலும், ஆட்சிப் பரப்பெல்லையை, சட்ட அதிகாரத்தின் எல்லையாக ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. ஆகையால், ஒரு இஸ்லாமிய அரசின் சட்ட  அதிகாரம் அந்த அரசின் எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இஸ்லாமியச் சட்டத்திற்கு ஆட்பட்டவர்கள் அல்லர். மாறாக, அரசுகளிடையே நிலவும் சர்வதேச ஒப்பந்தங்கள் விதிக்கும் கடப்பாடுகளுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

முஸ்லீம் அரசுகள் மத்தியில், சமய மீறலுக்கு, குற்றத்தைச் செய்தவரே தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கச் செய்யும் முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற கருத்து மரபாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்தின் தோற்றக் காலங்களில், போரிட்டுக் கொண்டிருந்த சமூகங்களின் அடிப்படை ஆதாரமாக மதமே இருந்த ஒரு சூழலில், ஒருவருடைய மதத்தை வெளிப்படையாகத் தாக்குவது என்பது, புறவயமான நோக்கில், எதிராளியோடு போய்ச் சேர்ந்துகொள்வதற்கு ஒப்பானதாக இருந்ததால், சமய மீறல் என்பது அரச துரோகச் செயலாகவும் இருந்தது.

சூடானில் இன்று, ருஷ்டியினுடையதைப் போன்ற அறிவுஜீவித்தனமான சமய மீறல், மரணதண்டனைக்குரிய குற்றமல்ல. அரசியலமைப்புச் சட்ட வழிப்படி அமைந்த ஆட்சியதிகாரத்தை கவிழ்க்கும் முயற்சிகளுக்கே அது பொருந்தும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக:

அராபிய மற்றும் ஆப்ரிக்க பாரம்பரியங்களின் இணைவு, நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள், கோட்பாட்டு வலிமை இவற்றின் காரணமாக, சூடானிய உதாரணம் பிரகாசமாக ஒளிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், புரட்சியை ஏற்றுமதி செய்ய எம்மிடம் பணமும் இல்லை, இராணுவ ஆக்கிரமிப்பால் அதைப் பரப்பவும் வழியில்லை. சூடானால் புரட்சியை ஏற்றுமதி செய்யவும் முடியாது. மற்ற தேசங்களில் குழப்பத்தை விளைவிக்கும் செயல்களில் சூடான் ஈடுபட்டிருக்கவும் இல்லை.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்ற பிரச்சினையைப் பொருத்த அளவில் இதைச் சொல்லிவிட விரும்புகிறேன். எங்களுக்குப் பயங்கரவாதத்தில் நம்பிக்கை இல்லை. தனிநபர் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக குரான் மிகவும் வெளிப்படையாகவே பேசுகிறது. ஒரு இஸ்லாமிய அரசை அமைக்கும் வரையில், எத்தனை ஒடுக்குமுறைகள் வந்தாலும் அவற்றைப் பொறுமையோடு எதிர்கொண்டு முன்னகர வேண்டும் என்கிறது. இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் கடப்பாடு அதற்கு உண்டு.

மத்தியக் கிழக்கில் உள்ள பெரும்பாலான பயங்கரவாத இயக்கங்களுக்கு இஸ்லாமிய பாரம்பரியத்தோடு உள்ள தொடர்பைவிட, ஐரோப்பிய தேசியவாததோடும் இடதுசாரி போக்குகளோடும்தான் நெருக்கம் அதிகம். அயர்லாந்து, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், போன்ற நாடுகளில் உள்ள குழுக்களிடமிருந்து ஊக்கம் பெற்றவை அவை. என்னைப் பொருத்த அளவில், இஸ்லாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது.

இஸ்லாமிய விழிப்புணர்வு இப்போது ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது. மேற்குலகோடு போரிடுவதிலோ, மோதுவதிலோ அதற்கு இனிமேலும் நாட்டங்கள் எதுவும் இல்லை. மேற்குலகம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. “பெரும் சாத்தான்களை” எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருப்பதல்ல எமது நோக்கம். எமது அறிவையும் ஆன்மாவையும் ஒருமுகப்படுத்தி, எமது சமூகங்களை ஆக்கப்பூர்வமாக புனர்நிர்மாணம் செய்வது எப்படி என்பதிலேயே எமது அக்கறைகள் குவிந்திருக்கின்றன. இஸ்லாத்திற்கு எதிரான, நேரடியான கொள்கை முடிவுகளை மேற்குலகு எடுக்கும் சந்தர்ப்பங்கள் தவிர்த்து அது எமக்கு எதிரியே அல்ல.

ஹசன் அல்-துராபி

நன்றி: கீற்று

நன்றி: கவிதாசரண்

நினைக்கத் தெரிந்த மனமே … 8

பொதுவில், ஆதி முதல் மொழி என்ற பிரச்சினைப்பாடு, மெல்ல மொழிக் குடும்பங்கள் என்பதாக மாறியது. ஒரு மொழிக் குடும்பத்திற்குள் உள்ள மொழிகள் யாவும் நெருங்கிய தொடர்புடையவை; ஆனால், மாறுபட்ட மொழிக் குடும்பங்களுக்கிடையிலான உறவுகளை நிறுவுவது கடினம் என்பது போன்ற கருதுகோள்கள் உருவாக ஆரம்பித்தன. மொழியியல் ஆய்வுகள் சற்றே அறிவியல் பூர்வமான திசையில் நகர ஆரம்பித்தன. பல்வேறு மொழிக்குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. பழமையான, சிறந்த மொழியமைப்பைக் கொண்ட மொழிகளாகக் கருதப்பட்டவை ஆர்வத்தை ஈர்த்தன. எழுதப்பட்ட இலக்கணமில்லாத மொழிகள், வளர்ச்சியடையாத, தேங்கிவிட்ட மொழிகளாக பார்க்கப்பட்டன. இதிலிருந்து, செம்மொழிகளைப் பேசிய ‘உயர்ந்த’ இனங்கள், இலக்கணமோ வரிவடிவமோகூட இல்லாத, வளர்ச்சியடையாத மொழிகளைப் பேசிய ‘கீழான’ இனங்கள் – ‘காயீனுடைய வழித்தோன்றல்கள்’ (31) – என்ற இனவாதக் கருத்துக்கள், மொழிக் குடும்பங்கள் இனப் பிரிவினைகளாவதற்கு வெகுகாலம் எடுத்துக் கொள்ளவில்லை.

இதே காலப்பகுதியில், ஐரோப்பிய சமூகங்களின் வளர்ச்சிப் போக்கின் தவிர்க்க முடியாத உடன்விளைவாக, தேசிய மொழிகளுக்கான வாதங்களும் எழத்தொடங்கின. பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில், வட்டார வழக்குகளாகக் கருதப்பட்டு வந்தவை, தேசிய மொழிகள் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தன. இறையாண்மை பொருந்திய பேரரசர்களின் கீழான வலுவான தேசிய அரசுகள் நிலைபெற்று விட்டிருந்தன. ஒவ்வொரு தேசிய மொழியின் தரப்பிலிருந்தும் அதுவே ஆதி முதல் மொழி என்பதற்கான வாதங்கள் வைக்கப்பட்டன. எபிரேயுவுடனான தொடர்புகள் இன்னமும் முற்றாக அறுத்துக் கொள்ளப்படவில்லை. ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளைப் பார்த்துவிடுவது நல்லது.

வணிக முதலாளியம் முதலில் எழுந்த டச்சு நாட்டைச் சேர்ந்த Goropius Becanus, 1569இல் வைத்த வாதம்: டச்சு மொழிதான், அதுவும் ஆண்ட்வெர்ப் முதலாளிகளின் வட்டார வழக்குதான் இறைவனால் அருளப்பட்டது. ஆண்ட்வெர்ப் முதலாளிகளின் முன்னோர்கள், யாப்பேத்தின் (நோவாவின் குமாரன்) குமாரர்களின் வழிவந்த சிம்ப்ரிக்கள். (32) இவர்களும் பாபேல் கோபுரத்தைக் கட்டுவதில் ஈடுபடாததால் அவர்களுடைய மொழி புனிதம் மாறாமல் இந்நாள் வரையில் அப்படியே இருந்து வருகிறது என்று வாதிட்டவர். தமது கருத்துக்களை ‘ஆதாரங்களோடு’ நிரூபிக்க, வேர்ச்சொல் ஆய்வுகளை முன்வைத்தார். மற்றெந்த மொழியில் இருப்பதைக் காட்டிலும் டச்சு மொழியில் தனியசைச் சொற்கள் (mono syllables) அதிகமிருப்பதே இதை நிரூபிக்கப் போதுமானது என்றார். எல்லாமே டச்சு மொழிக்குள் அடக்கம் என்பதை ‘நிரூபிக்க’ இவர் இட்டுக்கட்டிய வாதங்கள் போன்று பிற்காலத்தில் எழுந்தவை becanisms என்று கேலியாகக் குறிப்பிடப்பட்டன. (33)

ஸ்வீடன் ஐரோப்பிய சக்திகளில் பலம் மிகுந்ததாக இருந்த காலத்தில் வைக்கப்பட்ட வாதம் ஒன்று: 1688 இல் Andreas Kemp என்பார், தாம் எழுதிய நூலொன்றில், இறைவனும் ஆதாமும் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு காட்சியை சேர்த்தார். அதில், ஆதாம் டச்சு மொழியைப் பேச, இறைவனோ ஸ்வீடிஷ் மொழியைப் பேசுகிறார். இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, சற்றுத் தள்ளி, ஃப்ரெஞ்சு மொழி பேசும் பாம்பு ஒன்று, ஏவாளை ஆப்பிளைப் புசிக்கத் தூண்டிக் கொண்டிருக்கிறது. (34)

பதினெட்டாம் நூற்றாண்டளவில், எபிரேயுவின் மீதான கவனம் முற்றாக மறைந்தது. ஆதிமுதல் மொழிக்கான தேடல், பல்வேறு மொழிகளின் தோற்றம் குறித்த விளக்கங்களிலும் தேசிய மொழிகளுக்கான நியாயப்பாட்டு வாதங்களிலும் அடித்துக் கொண்டு போனது. பதினெட்டாம் நூற்றாண்டு, காலனிய அரசுகளை ஊன்றுவதற்காக இராணுவ ரீதியில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் ஐரோப்பிய சக்திகள் முட்டி மோதிக் கொண்ட காலம். மேற்குலகு உலகின் எந்த மூலையிலும் தன்னையொத்த ‘மேம்பட்ட’ நாகரிகம் இருக்கவில்லை என்ற பெருமிதத்தில் திரிந்தது. மத்திய காலத்தின் ஆரம்பந்தொட்டே உள்ளார்ந்திருந்த இனமேன்மைக் கருத்துக்கள் தலைதூக்கத் தொடங்கின.

காலூன்றிய இடங்களில் கண்ணுற்ற ‘இனங்களையும்’, ‘நாகரிகங்களையும்’, அவை பேசிய மொழிகளையும் ஆய்ந்து, வகைப்படுத்தி, உறவுகளை – தோற்ற மூலங்களை நிறுவி, ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வரும் திசையில் இப்போது கீழைத்தேய ஆய்வுகள் திரும்பின. 1786 இல் வில்லியம் ஜோன்ஸ், சமஸ்கிருதத்தைக் ‘கரைத்துக் குடித்து’, ஆரிய இன மொழிக்குடும்பத்திற்கும் அதற்குமான உறவைக் ‘கண்டுபிடித்தார்’. கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் மூன்றும் ஒரு தூய ஆரிய இன மொழியிலிருந்தே உருவாகிக் கிளைத்திருக்க வேண்டும் என்று முன்மொழிந்தார். (35)

தொகுப்பாக, மேற்குலகு கீழைத் தேயங்களை நோக்கி விரிய விரிய, தான் கண்ணுற்ற எண்ணற்ற, முற்றிலும் புதிய, மற்றமையான பண்பாடுகளை எதிர்கொண்ட விதத்தின் தன்மையை பொதுமைப்படுத்திச் சொல்வதென்றால், இரு முனைகளுக்கிடையிலான ஊடாட்டம் எனலாம்: முற்றிலும் புதியவை, ஏதாவது ஒரு விதத்தில் ஓரளவிற்கு அறிந்திருந்த பரிச்சயமானவையாக மாற்றப்பட்டு குறிக்கப் பெற்றன (codified). முற்றிலும் புதியவை, நன்கு அறிந்தவை என்று பகுத்து, அதனதனளவில் அவற்றை மதிக்கும் தன்மை எழாமல், ஒரு இடைப்பட்ட கருத்து வகையினம் உருப்பெற்றது. புதியவற்றை முதன்முதலாகக் கண்ணுற நேரும்போது, ஏற்கனவே அறிந்தவற்றின் மங்கலான சாயல்களாக, அவற்றின் திரிந்த வடிவங்களாக வகைப்படுத்தி, ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளும் மனப்போக்கு. (36)

அடிப்படையில் இந்த மன/சிந்தனைப் போக்கு, ஏற்கனவே கொண்டிருக்கும் ஒரு உலகப் பார்வையைக் கேள்விக்குட்படுத்துவதாக இருக்கும் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, தன்னைத் தானே மறு உறுதி செய்துகொள்ளும் சுய அரிப்பு முகுந்த ஒரு முறைமை. அதிகார மனப்போக்கின் நீட்சி. இதில், மற்றமை, ஒன்று அதிசயக்கத்தக்கது அல்லது அஞ்சத்தக்கது. கீழைத்தேயவாதம் என்ற கல்விப் புலத்தின் ஊடாக எழுந்த இந்த சிந்தனைப் போக்கு, ஐரோப்பாவின் முரட்டுத்தனமான தன்முனைப்பையும் மூடத்தனத்தையும் அதிகரித்து, எதிர்மறையான ஒரு அறிவுத் தொகுப்பை உருவாக்கியதே அல்லாமல், ஆக்கப்பூர்வமான அறிவை வளர்க்கவில்லை. இஸ்லாத்துடனான அதன் முதல் எதிர்கொள்ளலிருந்தே இப்போக்கு வளர்ந்து பேருருக்கொண்டது. (37) இன்றுவரையிலும், இஸ்லாத் அதற்கு அச்சுறுத்தலானதாக, தனது உட்பிரதேசத்திற்குள் தேவை எழும்போது, ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கக்கூடிய ஒரு வெளியாளாகவே வைத்திருக்க்கிறது.

தெற்காசியப் பகுதியில் அதிகாரத்தை ஊன்றியதில், காலனியத்தின் இந்த எதிர்மறையான அறிவின் பங்கை அலட்சியம் செய்து படைபலம், வணிகவளம், தந்திரம், உயர் தொழில்நுட்பம், அரசமைப்பு என்ற காரணிகளை மட்டுமே முன்வைப்பது அந்த அறிவுப்புலம் வரையறுத்து வைக்கும் கேள்விகளுக்குள் வரம்பிட்டுக்கொள்வது. இவற்றை மறுப்பதாக நினைத்துக் கொண்டு, எல்லா அம்சங்களிலும் தெற்காசியா வலிமை கூடியதாகவே இருந்தது என்பதற்கான ஆதாரங்களை அடுக்கத் தொடங்குவதும் அதற்குள் வரம்பிட்டுக் கொள்வதே. தர்மா குமார், சஞ்சய் சுப்பிரமணியம் போன்றவர்களின் முயற்சிகள் இத்தகையவை என்றே சொல்லத் தோன்றுகிறது.

பொருளாதார – அரசியல் கட்டமைப்புகளின்பால் மட்டுமே கவனத்தைக் குவித்து, காலனியம்தான் இங்கு இவற்றில் மாற்றங்களை விளைவித்தது என்று ஒரு தரப்பும், இந்தக் கட்டமைப்புகளின் தொடர்ந்த, சுயமான இயக்கத்தன்மையை வலியுறுத்தி ஒரு தரப்பும் எதிர் – எதிர் வாதங்களை வைத்துக் கொண்டிருப்பதில், இவற்றை இயக்கியும், இவற்றுள் இயங்கியும் வாழ்ந்த பரந்த மக்கட் பிரிவினரின் வாழ்வியல் பார்வைகள் முற்றிலுமாக துடைத்தழிக்கப்படுவதே நிகழ்கிறது. இவர்களது நோக்கிலிருந்து இந்தக் கட்டமைப்புகளையும் இன்னும் மற்ற காரணிகளையும் பரிசீலனைக்குள்ளாக்கும்போது புதிய பார்வைகள் கிடைக்கத் தொடங்குகின்றன. (38) மேலும், கடந்த காலங்களை நோக்கித் திரும்பிப் பார்ப்பது – வரலாறு எழுதுவதற்கான தேவையே – நிகழ் கால நோக்கிலிருந்து, மானுட வாழ்வின் வடிவங்களை, வருங்காலங்களில் சற்றேனும் ஆக்கப்பூர்வமான திசைகளில் நகர்த்திச் செல்வதற்காகத்தானே ஒழிய, கடந்தகாலங்களில் அல்லது நிகழில் உறைந்து இறுகிப் போவதற்காக அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இந்தப் புள்ளிகளையும், மேலே விரித்துக் காட்டிய விரிவான பின்புலத்தையும் கவனத்தில் இருத்தி, ‘இந்து’, ‘முஸ்லிம்’ சமூகங்களுக்கிடையிலான உறவுகளில் காலனிய வருகையைத் தொடர்ந்து ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தனவா, அப்படி நிகழ்ந்திருப்பின் அதில் முக்கிய வினையாற்றிய காரணிகள் என்னென்ன என்று பார்ப்பது அவசியம். முதலில், காலனிய ஆதிக்கவாதிகளின் பார்வைகளிலிருந்து தொடங்குவது நல்லது.

(தொடரும் … )

கவிதாசரண் மார்ச் – ஏப்ரல் 2004.

அடிக்குறிப்புகள்:

(31) பைபிளின்படி முதல் கொலைகாரன். ஏதேனுக்கும் கிழக்கான தேசத்திற்குக் குடிபோனவன். (பார்க்க: ஆதியாகமம் : 4). கிறித்தவ சமயப்பரப்பாளர்களின் எழுத்துக்களில் ஆசியா ‘காயீனின் பிரதேசம்’ என்று குறிக்கப் பெறுவது மிகச் சாதாரணம்.

(32) இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள் … (ஆதியாகமம் 10: 5). ஆங்கிலத்தில், From these the coastland peoples spread. These are the sons of Japheth … என்று தெளிவாகவே இருக்கிறது. வணிக முதலாளியத்தின் விளைவாக எழுந்த காலனியாதிக்கம், கடற்படை பலத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. முதலாளியம், காலனியாதிக்கம், கடற்படை பலம் எல்லாமும் இறையியல் வாதங்களினூடாக நியாயம் கற்பிக்கப்பட்டன.

(33) Umberto Eco, (1997) பக்: 96.

(34) மேற்குறித்த நூல், பக்: 97.

(35) மேற்குறித்த நூல், பக்: 103.

(36) ஒரு எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால், மார்கோ போலோ, ஜாவாவில் காண்டாமிருகங்களைக் கண்ணுற்றபோது, ஐரோப்பிய பண்பாட்டுக் கற்பனையில் வெகுகாலம் உலவிவந்த Unicorn (ஒற்றைக் கொம்புடைய தூய வெள்ளைக் குதிரைகளைப்) பார்த்துவிட்டதாகவே நம்பினான். அன்றும் இன்றும், ஐரோப்பியர்களின் உள்முகமான பண்பாட்டுப் பிரச்சினைப்பாடு, ஒருவேளை Unicorn களை உண்மையாகவே பார்க்க நேர்ந்தாலும்கூட, அவை காண்டாமிருகங்களாக இருக்கக்கூடுமோ என்று சிந்திக்கத் தலைப்படுவதுதான். (Umberto Eco 1999, பக்: 97). ஆனால், இது ஐரோப்பியப் பண்பாட்டிற்கு மட்டுமல்ல, எல்லா சமூகக் குழுமங்களுக்குமான பிரச்சினைப்பாடும்கூட. தனி மனிதர்கள் என்ற அளவிலும்கூட. அறிவியல் பூர்வமான எடுத்துக்காட்டொன்றைச் சொல்வதென்றால், மானுடரின் மிக நெருங்கிய உறவினரான சிம்பன்சிகளின் மூளை வளர்ச்சி, பெரும்பகுதி கருப்பைக்குள் இருக்கும்போதே நிறைவுற்றுவிடுகிறது. ஆனால், மானுடர்களின் மூளை வளர்ச்சியில், முக்கால் பங்கு, கருப்பையிலிருந்து வெளியேறிய பிறகே, புற உலகுடன் உறவுகொள்ளும்போதே வளர்ச்சியுறுகிறது. அதாவது, உயிரியல் அளவிலேயே, மானுடப் பிறவி என்பது புற உலகைத் திறந்த மனதுடன் எதிர்கொள்வது (Christopher Wills, The Runaway Brain – The Evolution of Human Uniqueness, Flamingo, 1995, பக்: 5 – 7)

(37) Edward W. Said (1979) பக்: 58 – 9.

(38) அதிகபட்சமாக, இந்த எதிர் – எதிர் வாதங்களில் வெளிப்படுவது ‘மேட்டுக்’ குடியினரின் பிரதிநிதிகளின் இயக்கம் மட்டுமே. காலனியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் பங்களிப்பை வலியுறுத்தியதற்கு மாற்றாக, சஞ்சய் சுப்பிரமணியம் சில வணிகர்களின் முயற்சிகளை முன்வைப்பதற்கு மேலாகச் சென்றுவிடவில்லை. ‘இந்திய’ சமூகத்தின் தொடர்ந்த இயக்கத்தன்மையை வலியுறுத்துவதில் இறங்கும் இவரைப் போன்றவர்கள் இந்த ‘இயக்கத்தில்’, சாதிய – சமய, வர்ணாஸ்ரம கருத்தியல், அவை சார்ந்த அதிகாரக் கட்டமைப்புகளை நியாயப்படுத்தும் ‘கோட்பாட்டுருவாக்கம்’ செய்யும் முயற்சிகளிலும் இறங்கிவிடுகின்றனர். இவர்களது தேர்வுகளே இந்தச் சாய்வின் வெளிப்பாடு என்றுகூட வாதிட முடியும்.

நினைக்கத் தெரிந்த மனமே … 7

இத்துறையின் வரலாற்று ரீதியான வளர்ச்சியில் அதன் இயங்குவிதியாக இருந்தது தெளிவான தேர்வுகளல்ல; தொடர்ந்து பெருகிய விரிவு. ஆசிய நிலப்பகுதி சார்ந்த எந்த ஒன்றின் மீதான – ஆசிய நிலப் பகுதி சார்ந்தவை என்றாலே புதிய, புதிரான, ஆழமான, மானுட குலத்தின் ஆதி நிலையிலுள்ள, அதனால் வளர்ச்சியடையாத நிலையில் உள்ள ஒன்று – கல்வித்துறை சார்ந்த, தொழில்முறையான ஆர்வமே அந்த ஒன்றை கீழைத்தேயத்திற்குரியதாக அடையாளப்படுத்தி விடுவதாக இருந்தது. புதியன புதிது புதிதாக தெரியவரவர இந்த விரிவு கூடிக்கொண்டே போனது. புரியாத புதிரான கீழைத்தேயங்களுக்குரிய ஒவ்வொரு புதிய பொருளும் வகைப்படுத்தப்பட்டு, விளக்கப்படுத்தப்பட்டு, குறிக்கப்பட்டு (codified) அவற்றுக்குரிய இடத்தில் கைக்(அறிவுக்)கடக்கமாக வைக்கப்பட்டன. அந்த வகையில், கீழைத்தேயவாதம் என்ற அறிவுப்புலமே புவியியற்பரப்பை வெற்றி கொள்வதற்கு இணையான, சொல்லப்போனால், காலனியாதிக்கத்திற்கான தயாரிப்பாக உருவான அறிவுக் காலனியமாக நிலைபெற்ற ஒன்று.

கீழைத்தேயவாதம் என்ற கல்விப்புலம் “கீழைத் தேயங்கள்” என்ற கருத்தாக்கத்தை, முழுக்க முழுக்க பிரதிகளின் தொகுப்பாலான ஒரு பிரபஞ்சமாகக் கட்டமைத்தது. பிரதிகளாலான இந்தப் பிரபஞ்சத்தில் உருவான கருதுகோள்கள் எந்தவிதமான நேரடியான அனுபவங்களாலும் அசைத்துவிட முடியாதவையாக இருந்தன. கருதுகோள்களிலிருந்து விலகிய நிலைமைகளை, ஆசியப் பகுதிகளுக்கு செல்ல நேரும் ஒரு கீழைத்தேயவாதி எதிர்கொள்ள நேர்ந்தால், அது கீழைத்தேய மக்களுக்கேயுரிய ‘தேங்கிய’ தன்மையாக, ‘திரிந்த’ நிலையாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மிக ஆரம்பகாலந்தொட்டே, ஐரோப்பாவில், ‘கீழை உலகு’ அனுபவம் சார்ந்த நேரடியான அறிதலுக்கும் விசாரணைக்கும் அவசியமற்ற ஒரு புலமாகவே கொள்ளப்பட்டு வந்தது. கிரேக்கத் துன்பியல் நாடகங்களில் ஆசியா குறித்து ஆங்காங்கே வரும் விவரணைகள் பலவும், ஒரு காலத்தில் ஐரோப்பாவையே வெற்றிகொண்ட (டாரியஸ்) வெல்ல முடியாத பலம் பொருந்திய அதிசயமாகவும், தற்(அக்)காலத்தில், தோல்வியைத் தழுவி (க்ஸெர்க்ஸெஸ்), கேடு சூழ்ந்து, சூன்யம் கவிந்த, கிரேக்கம் வெற்றிகொண்ட பரப்பாகவுமே ஐரோப்பியக் கற்பனைப் பரப்பில் மிதந்தது. டையோனிச மறை வழிபாட்டையும் ஐசிஸ் போன்ற கொடூரப் பெண் தெய்வங்களையும் ஏவி, ஐரோப்பாவை ஆட்கொள்ளச் சதி செய்யும், கொடூரங்கள் நிரம்பிய புதிர்ப் பிரதேசம் என்ற இன்னொரு கருத்துச் சாய்வும் நிலவி வந்திருக்கிறது.  வலுவான ஐரோப்பாவால் வெற்றிகொள்ளப்பட்ட, பலவீனமான தொலைப் பிரதேசம் என்று ஒரு முனை. ஐரோப்பியப் பகுத்தறிவை உடல் சார்ந்த மிகைகளால் சதி செய்து வீழ்த்தக் காத்திருக்கும் மறை பண்பாடுகள் நிரம்பிய புதிர்ப் பிரதேசம் என்று இன்னொரு முனை.

மேற்குலகு, கீழை உலகு என்ற இந்த அடிப்படையான பகுப்பிலிருந்து பயணங்கள், ஆக்கிரமிப்புகள் போன்ற புதிய அனுபவங்களிலிருந்து இன்னும் பல சிறிய பகுப்புகள். முதலாவதற்கு, இன்றைய நவீன மேற்கத்திய வரலாற்றெழுதியலின் முன்னோடி ஹெரோடட்டசும் அலெக்சாண்டரும் பயணித்து, ஆக்கிரமித்து, பார்த்து அறிந்து வந்த பிரதேசங்கள். அவர்கள் சென்றிராத, வென்றிராத, இன்னும் அறியப்பட வேண்டிய பல பகுதிகள், பிரதேசங்கள் என்று இன்னுமொரு பகுப்பு. நன்கு அறியப்பட்ட அண்மைக் கிழக்கு, முற்றிலும் புதிய தூரக் கிழக்கு. அறியப்பட்ட அண்மைக் கிழக்கு அதற்கு எப்போதும் ஏதேன் தோட்டம் அமைந்திருந்த பிரதேசம். (24) ‘இஸ்லாமியக் காட்டுமிராண்டிகளின்’ வசப்பட்டுவிட்ட அதை மீட்டு, அந்த ஆதித் தோட்டத்தை அல்லது குறைந்தது அதன் புதியதொரு வடிவத்தை உருவாக்கிவிட வேண்டும் (இன்றைய இஸ்ரேல்!).

இதோடு கிறித்தவக் கற்பனையில், பாபேல் கோபுரமும் (25) அண்மைக் கிழக்கின் எல்லையில் எழுப்பப்பட்டது. குறிப்பாக, பாபிலோனில் – பெர்ஷியாவில் – இன்றைய ஈரானில். (26) கர்த்தர், பாபேல் கோபுரத்தை அழித்து, “ஜனங்கள் ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கி, பூமியெங்கும் சிதறப் பண்ணினார்” அல்லவா. கர்த்தரின் கோபத்திற்கு ஆளாகி, அங்ஙனம் சிதறிப்போனவர்களை, ‘வழி தவறிய கறுப்பு ஆடுகளை’, தூரக்கிழக்கெங்கும் அது (கீழைத்தேயவாதம்) அடையாளம் காணத் தலைப்பட்டது. (27) கர்த்தர் “அவர்களது பாஷையைத் தாறுமாறாக்குவதற்கு” முன்னால், அவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு – ஒரேயொரு பாஷையைப் பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஆகையால், கீழைத்தேயவாதிகளின் கவனம் எப்போதும் அவர்கள் ‘கண்டுபிடிக்க’ நேர்ந்த புதிய மக்களினங்கள், நாகரிகங்களின் மொழிகள், அவற்றின் செழுமை, தோற்றம் பற்றியதாக அமைந்தது. கீழைத்தேயவாதிகளில் பெரும்பாலானோர் மொழியியல் ஆய்வாளர்களாகவும் இருந்தனர்.

இதற்கு இன்னொரு பரிமாணமும் இருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் கிறித்தவம் எதிர்கொண்ட இன்னொரு ‘தலைவலி’ பல்வேறு ‘வட்டார’ (பின்வந்த நூற்றாண்டுகளில் தேசிய) மொழிகளின் பெருக்கம். இலத்தீனின் செல்வாக்கு மெல்லச் சரிந்துகொண்டிருந்தது. இதற்கான எதிர்வினையாகவும் இந்த ஆதி மொழியை மீட்டெடுக்கும் முயற்சிகளைப் பார்க்கலாம். (28)

இதில் முதல் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர் தாந்தே. பைபிளின் பழைய ஏற்பாடு, எபிரேயுவில் எழுதப்பட்டது. ஆனால், இந்த எபிரேயு பாபேல் கோபுரம் அழிக்கப்படுவதற்கு முன்பாக, “ஏதேன் தோட்டத்தில் ஆதாம் பேசிய எபிரேயுவாக” இருக்க முடியாது. கோபுரத்தை தரைமட்டமாக்குவதற்கு முன்பாக, கர்த்தர் ‘அந்த’ எபிரேயுவைத் தாறுமாறாக்கி விட்டபடியால், ‘இந்த’ எபிரேயு, அதன் திரிந்த வடிவமாகவே இருக்க முடியும். என்றாலும், ஏதோவொரு எபிரேயுவே முதல் மொழியாக இருந்ததால், இருப்பதிலிருந்து, அதை அதன் தூய வடிவில் மீளுருவாக்கம் செய்யவேண்டும் என்பது அவரது முன்மொழிபு. இதைத் தொடர்ந்து, ஆரம்பகால கீழைத்தேயவாதிகளின் கவனங்கள், பைபிள் வாசிப்புகளில், செமிட்டிக் மொழிகளின் மீது, குறிப்பாக, எபிரேயுவின் மீது குவிந்தது.

மத்தியகால ஐரோப்பாவில் பைபிள் பெரும்பாலும் லத்தீன் மொழியிலேயே புழங்கி வந்தது (‘வட்டார’ மொழிகளில் புழக்கத்திற்கு வருவதற்கு அது பெரும்பாடு படவேண்டியிருந்தது). பழைய ஏற்பாடு எபிரேயுவில் எழுதப்பட்டது என்பதோ, புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதி கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதோ அரிய தகவலாகவே அறியப்பட்டிருந்தது. ஆதாம் பேசிய மொழி எபிரேயுதான் என்ற கருத்து முன்மொழியப்பட்டவுடன், அதன் கீழைத்தன்மை – புதிரான மறைபொருளான கீழைத்தன்மை – கீழைத்தேயவாதிகளை உடனடியாக ஈர்ப்பதாக இருந்தது. என்றாலும், சற்று முன்னர் குறிப்பிட்டது போல, ஐரோப்பிய சமூகத்தில் வேரூன்றியிருந்த செமிட்டிக் இன – யூத இன எதிர்ப்புணர்வு எபிரேயுவை நோக்கிய இந்த திரும்புதலை வெகுகாலம் சகித்துக் கொள்வதாக இருக்கவில்லை. பதினேழாம் நூற்றாண்டளவில், எபிரேயுவின் இந்த ‘அந்தஸ்தைக்’ கேள்விக்குள்ளாக்குவது தொடங்கியது. ஆதியாகமத்தின் பத்தாவது அதிகாரத்தின் மீது கவனம் குவிந்தது. (29) மக்களினங்கள் பல்வேறு சந்ததியினராய்ப் பிரிந்து சென்று தனித்து வாழ்ந்ததும் சிலர் தமக்குள் கலந்ததுமே பல்வேறு மொழிகள் உருவானதற்குக் காரணம் என்ற விளக்கங்கள் தரப்படத் தொடங்கின.

மானுட குலம் இப்படிப் பல்வேறு மொழிகள் பேசும் கூட்டத்தினராய் சிதறியது பாபேலின் அழிவோடு தொடங்கியது அல்ல, அதற்கு முன்பே, நோவாவின் காலத்திலேயே நிகழ ஆரம்பித்துவிட்டது என்றும் மொழிதல்கள் கிளம்பின. எடுத்துக் காட்டாக, 1699இல் ஜான் வெப் என்பவர், ஊழிப் பெருவெள்ளத்திற்குப் பிறகு நோவா நேராக சீனாவுக்குச் சென்று சில காலம் வாழ்ந்தார் என்றும், அதனால் சீன மொழியே மிகப்பழமை வாய்ந்தது என்றும், மேலும் சீனர்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டும் பணியில் ஈடுபடாததால், அவர்களுடைய மொழி கர்த்தரால் ‘தாறுமாறாக்கப்படாமல்’ அருளப்பட்டு அதன் தூய தன்மையிலேயே இருக்கிறது என்றும் வாதிட்டார். (30)

(தொடரும் … )

கவிதாசரண் மார்ச் – ஏப்ரல் 2004.

அடிக்குறிப்புகள்:

(24) “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி … (ஆதியாகமம், 2: 8).

(25) பார்க்க: ஆதியாகமம் (11: 1-9)

(26) மானுடர்களின் அறிவுக்கடங்காத, விளக்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைமையின் குறியீடான ஏதேனும் – இஸ்ரவேலும் கிழக்கில். கிரேக்க காலம் தொட்டே ஐரோப்பாவை அச்சுறுத்தி வந்த, கடவுளர்களைக் கட்டுக்குள் கொண்டு வரும், ஏவி விடும் மறைவழிபாடுகள் நிரம்பிய, “வானத்தை அளாவும் சிகரமுள்ள கோபுரத்தைக்” கட்டி, “தமக்குப் பேர்” உண்டாக்க, இறைமையை எட்டிப் பிடிக்கத் துணிந்தவர்களின் பாபேலும் கிழக்கில் – பாபிலோனி, பெர்ஷியாவில், ஈரானில்.

(27) எத்வர்த் சேத் இப்படியான கருத்தை வைக்கவில்லை. அவருடைய கீழைத்தேயவாதம் குறித்த ஆய்வு முடிவுகளோடு, உம்பர்டோ ஈக்கோவின் மொழியியல் ஆய்வுகளை இணைத்துப் பார்க்கும் முயற்சியில் எழுந்த, எனது சற்றே “துணிச்சலான ஊகம்” (wild guess அல்ல bold inference) இது. குறித்த நூல் – Umberto Eco, The Search for the Perfect Language. Trans. by James Fentres (Fontana, 1997).

(28) எடுத்துக்காட்டாக, பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த Guillaume Postel என்பார், எபிரேயு நோவாவின் மக்கள் வழியாக நேராக வந்தது என்றும், அதிலிருந்தே அரபி, சால்டியன், ஹிந்தி (!) கிரேக்கம் முதலிய கிளைத்தன என்றும் வாதிட்டார். தொடர்ந்து, அந்தப் பழைய எபிரேயுவை மீட்டெடுப்பதன் மூலம், பல்வேறு மொழிகளைப் பேசிய பல்வேறு இனமக்களையும் ஒருங்கிணைக்கவும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். போஸ்டெல் அக்காலப் பகுதியில் நன்கு அறியப்பட்டிருந்த இறைப்பணியாளர். திருச்சபைக்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததற்காக தண்டனைக்குள்ளானவரும்கூட. அவருடைய பங்களிப்புகள் கருதி ‘குற்றமற்றவர் ஆனால் பைத்தியம்’ என்று தீர்ப்பு கிடைத்து உயிர்பிழைத்தவர். மேற்குறித்த அவரது திட்டம், வாடிகனாலும் பல புரவலர்கள், அரசர்களாலும் நிராகரிக்கப்பட்டது. எபிரேயுவை ஆதிமொழியாக ஏற்றுக்கொள்வது கிறித்தவ உலகில் ஊறியிருந்த யூத இன எதிர்ப்புணர்வுக்கு கடைசிவரை இயலாததாகவே இருந்தது. அதோடுகூட ‘கர்த்தர் கைவிட்ட’ மக்களினங்களின் மொழிகளையும் இணைக்கச் சொன்னால் என்னாவது! (Umberto Eco வின் மேற்குறித்த நூல், பக்: 78)

(29) “இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறு வேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன” (10: 5) இது ஊழிப் பெருவெள்ளத்திற்குப் பிறகு நோவாவின் வம்சவரலாறாக சொல்லப்படுவது. ஆனால், பதினோறாவது அத்தியாயத்தின் தொடக்கமே, “பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது” என்கிறது. பிறகு பாபேல் கோபுரம் அழிக்கப்பட்டு “ஜனங்கள் சிதறிப்போகிறார்கள்”. பைபிளில் உள்ள இது போன்ற பல முரண்களிலிருந்து ஒரு பெரும் இறையியல் உரைத்தொகுப்பு உருவானது. இன்னமும் இது விடுதலை இறையியல், எதிர்மறை இறையியல் (Negative Theology) என்பன போன்ற வடிவங்களில் சற்றே ஆரோக்கியமான திசைகளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

(30) Umberto Eco (1997) பக்: 91.

நினைக்கத் தெரிந்த மனமே … 6

காலனியத் தலையீடு, இந்தியத் துணைக்கண்டப் பகுதியில், ஏன் உலகம் முழுக்க அடிமை கொள்ளப்பட்ட எந்த மக்களும்கூட எதிர்பார்த்திராத ஒன்று. குறைந்தது, 1498இல் வாஸ்கோடகாமா கோழிக்கோடு துறைமுகத்தை நெருங்கியபோது, புதிய நாவாய்களை எதிர்கொள்ள ஆர்வத்தோடு கூடி நின்றவர்கள், அவை சொல்ல இருந்த முதல் வார்த்தைகள் பீரங்கிக் குண்டுகளாக இருக்கும் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அடுத்து, சமுத்ரி துறைமுகத்தில், காவிரிப் பாசனப் பகுதியில் விளைந்த நெல்லைச் சுமந்து வந்த நாவாய்கள் பலவற்றை அவன் கைப்பற்றியபோதும், (17) அதிலிருந்தவர்கள், தொடர்ந்த நூற்றாண்டுகளில் நிகழவிருந்த பேரழிவுகளையும் படுகொலைகளையும் கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

சரியாகச் சொல்வதென்றால், வாஸ்கோடகாமாவின் பீரங்கிகள் குண்டுகளைக் கக்கிய முதலி இடம் கோழிக்கோடு அல்ல; கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை. இப்போது கென்யாவாக அறியப்படும் பிரதேசத்தின் மெலிந்தி என்ற கடற்கரைக் கிராமத்தில் பீரங்கிகளை முழக்கவிட்டபோது, ஆசிய நிலப்பரப்பெங்கும் காலனியத்தை ஊன்றச் செய்வதற்கு அங்கிருந்து ஒரு வழி கிடைக்கும் என்று அவனும்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். அன்றைக்கு முந்தைய நாள் வரையில் பீரங்கிகளையே பார்த்திராத, கேள்விப்பட்டும் இருக்காத அந்த சிறிய கடற்கரை கிராமத்தின் தலைவன், அவற்றின் வன்மையைக் கண்டு பயந்தும் வியந்தும் வாஸ்கோடகாமாவுக்கு அப்போது மிகவும் அவசியமாகத் தேவைப்பட்ட உதவியைக் கைகாட்டிவிட்டான். ஐரோப்பியர்கள் அதுநாள் வரையில் அறிந்திராத சமுத்திரப் பரப்பைக் கடப்பதற்கு, இந்துமகா சமுத்திரத்தையும், இந்திய மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகங்களையும் நன்கு அறிந்திருந்த, சிறந்த நிபுணனான ஒரு கடலோடியை ஒப்படைத்தான். அந்தக் கடலோடியின் பெயர் – அகமது இபின் மஜீத், ஒரு குஜராத்தி. (18)

என்ன ஒரு அற்புதத் தரவு! இனி காலச்சுவடு கண்ணனைப் போன்ற தடித்த தோல் படைத்த பார்ப்பன – இந்துத்துவ வெறியர்கள், ஒரு முஸ்லீம்தான், அதுவும் ஒரு குஜராத் முஸ்லீம்தான் இந்த ‘புனித பாரதத்தை, நம் தாய்த் திருநாட்டை’ அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்தான் என்று ‘களிபொங்கக்’ கூச்சலிடலாம். ரவிக்குமாரைப் போன்ற ‘தலித் ஹிஸ்டாரியன்கள்’ “குஜராத்தை விடவும் மோசமான நெருப்பு” என்று சுற்றி வளைத்து வாதிடுவதற்குப் பதிலாக, நரேந்திர மோடி மிகச் சரியாகவே குஜராத் முஸ்லீம்களைத் தண்டித்தார் என்று குஜராத் படுகொலைகளை எந்த வெட்கமுமின்றி நியாயப்படுத்தலாம்.

ஆனால், குறித்த நூல், காலனியம் ஏன் மேற்கு ஐரோப்பிய சக்திகளிடமிருந்து கிளம்பியது, ஐரோப்பாவைவிட பன்மடங்கு இயற்கை வளங்களும் மனித சக்தியும் படைபலமும் பேரரசுகள் பலவற்றின் எழுச்சியையும் கண்ட ஆசிய நிலப்பரப்பிலிருந்து ஏன் காலனிய சக்திகள் உருவாகவில்லை, கொலம்பசும் வாஸ்கோடகாமாவும் நகைக்கத்தக்க அளவிற்கு சிறியதொரு கடற்படை கொண்டு உலகைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டுவரக் கிளம்பியதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே சீன மிங் பேரரசின் கடற்படைத் தளபதி செங் ஹோ, நூற்றுக்கணக்கான பெரும் நாவாய்களில் ஆயிரக்கணக்கான மாலுமிகளுடன் ஏராளமான சிறு பீரங்கிகளுடனும் ஒரு பெரும் கடற்படையோடு கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை வரை கம்பீரமாக உலா வந்தபோதும், அன்றைக்கு உலகையே வெல்லும் சக்திமிக்க கடற்படையைக் கொண்டிருந்தபோதும், அது ஏன் நிகழவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு முற்றிலும் புதியதொரு நோக்கிலிருந்து – பல்லுயிர்ச் சூழல் (ecological) நோக்கிலிருந்து விடைகளைத் தேட முயற்சிக்கும் நூல்.

இந்நோக்கை விரித்துச் செல்வது இங்கு சாத்தியமில்லை என்பதாலும், எடுத்துக் கொண்டது வரலாற்றெழுதியல் சார்ந்த பிரச்சினைப்பாடு என்பதாலும், அதற்குள் நிறுத்திக் கொள்வது நல்லதெனப்படுகிறது.

மேற்கு ஐரோப்பா உலகின் பிற பகுதிகளை நோக்கித் தன் கரங்களை விரிக்கத் தூண்டிய காரணிகள் என்னென்ன? பரவலாக அறியப்பட்ட, இன்று ஓரளவிற்கு பொதுப்புத்தியில் ஏறிவிட்ட கருத்து – வணிக முதலாளியத்தின் எழுச்சி. கிழக்கிந்தியப் பிரதேசங்களில் குவிந்துள்ள அளவில்லாச் செல்வங்களை – மிளகு, வாசனை திரவியங்கள், பட்டாடைகள், இன்னும் வகைவகையான எண்ணற்ற ‘பண்டங்கள்’ – பற்றிய மார்கோபோலோ போன்ற பயணிகளின் விவரணைகள் தூண்டிய வணிகக் கனவுகள் இப்பகுதிகளுக்கான கடல்வழி மார்க்கங்களைக் கண்டுபிடிக்கும் உத்வேகத்தை ஐரோப்பியர்களுக்கு ஊட்டியது.

ஆனால், இந்த சாகசப் பயணங்களுக்குப் பின்னால், ஒரு ‘பரந்த மனம்’, ‘விரிந்த பார்வை’தான் இருந்ததா?அல்லது ஒரு ‘மூடுண்ட மனம்’தான் செயலாற்றியதா? ‘தேடல்களைக்’ கிளறுவது வெறும் உண்மைக்கான வேட்கை மட்டும்தானா? பொய்கள், புரளிகள், தவறுகள், முட்டாள்தனமான நம்பிக்கைகளும்கூட தேடல்களுக்கு காரணமாக இருக்க முடியுமா? வரலாற்றில் பொய்களின் பாத்திரமென்ன?

ஒரு பொய் அல்லது தவறான மொழிதல், (19) ‘உண்மையை’ நோக்கி இட்டுச் செல்வதை மொழியியலில் serendipity என்பர். நல்லதொரு எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால், மேற்குத் திசை வழியே பயணித்தால், கிழக்கிந்தியப் பகுதிகளைச் சேரமுடியும் என்ற நம்பிக்கையில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது. காலனியாதிக்க விரிவாக்கத்திலும் அப்படியொரு மொழிதல் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது – ஒரு அநாமதேயக் கடிதம்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பாதிகளில், ஐரோப்பாவுக்கு ஒரு அநாமதேயக் கடிதம் வந்து சேர்ந்தது. முஸ்லிம்கள் ஆதிக்கத்தில் இருந்த, சிலுவைப் போர் வீரர்கள் கைப்பற்றப் போராடிய நிலப்பகுதிகளுக்கெல்லாம் அப்பால், தூரக்கிழக்கில், அவர்கள் நிறுவ விரும்பிய பரந்து விரிந்த கிறித்தவ சாம்ராஜ்ஜியம் ஒன்று செழித்திருந்தது எனவும், அதை ஜான் என்ற பாதிரி ஆண்டு வருவதாகவும் அக்கடிதத்தில் இருந்தது. ‘பாதிரி ஜானின்’ அக்கடிதம் இப்படியாகப் போகிறது:

“பாதிரி ஜானாகிய நான் அரசர்க்கெல்லாம் அரசன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.  உறுதியாக நம்புங்கள். ஆகாயத்தின் கீழுள்ள அத்தனை செல்வங்களிலும், வலுவிலும் அதிகாரத்திலும், இப்புவி மீதுள்ள அத்தனை அரசர்களையும் மிஞ்சியவன் நான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். எழுபத்தியிரண்டு அரசர்கள் எமக்குக் கப்பம் கட்டுகிறார்கள் ….

எமது ஆளுகை மூன்று இந்தியப் பிரதேசங்களிலும் விரிந்திருக்கிறது. திருத்தூதர் தாமஸின் பூதவுடல் துயிலும் மாபெரும் இந்தியாவிலிருந்து, பாலைவனங்களினூடாக, கீழைத்தேயத்தின் எல்லை வரையிலும், பின் மேற்கு நோக்கித் திரும்பி, பாபேல் கோபுரம் அமைந்துள்ள பாபிலோனியப் பாலைவனம் வரையிலும் எமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசமொன்றில், சிந்து என்று அறியப்பெற்ற நதியொன்றும் பாய்கிறது … சொர்க்கத்தில் ஊற்று கொள்ளும் இந்நதி, பல கிளைகளாக விரிந்து, அப்பிரதேசம் முழுக்கப் பரவிப் பாய்கிறது. இரத்தினம், மரகதம், மாணிக்கம், வைரம், வைடூரியம், புஷ்பராகம், கோமேதகம், செவ்வந்தி இன்னும் இதுபோன்ற எண்ணற்ற, விலையுயர்ந்த கற்களும் மணிகளும் அப்பிரதேசத்தில் கிடைக்கின்றன ….” (20)

பின்வந்த நூற்றாண்டுகளில் – பதினேழாம் நூற்றாண்டு வரையில் – பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் பெற்று, பலராலும் மேற்கோள் காட்டப்பட்டும் சுழற்சியில் இருந்த இக்கடிதம், கிறித்தவ ஐரோப்பா, கீழைத்தேயத்தை நோக்கி விரிவதில் மிக முக்கியமான பங்காற்றியது. இஸ்லாமிய ஆளுகைக்குட்பட்ட பரப்பிற்கு அப்பால், ஒரு கிறித்தவ சாம்ராஜ்ஜியம் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை, எல்லாவிதமான விரிவாக்க நடவடிக்கைகளுக்கும் சாகசப் பயணங்களுக்கும் நியாயப்பாடாக அமைந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி, இந்தியாவைச் சேரும் முயற்சியில் பயணப்பட்ட வாஸ்கோடாகாமாவுக்கும் இன்னும் பல ஆரம்ப முயற்சிகளுக்கும், திருத்தூதர் தாமஸின் சமாதி இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் ‘திருப்பணியும்’ சேர்த்தே பணிக்கப்பட்டது. (21)

ஆக, தொடக்கம் முதலே, காலனியம் கிறித்தவ விரிவாக்கமாகவும் இருந்தது. இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், இஸ்லாமிய நாகரிகத்திற்கு எதிரான (எதிர்) வினையாகவும் இருந்தது. (22)

நபியின் மறைவிற்குப் பிறகு, ஏழாம் நூற்றாண்டின் பிற்பாதிகளில் இருந்து, இஸ்லாத் பண்பாட்டு ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பரந்து விரிந்து செழிக்கத் தொடங்கியது. பெர்ஷியா, சிரியா, எகிப்து, துருக்கி, வட ஆப்பிரிக்கா என்று அடுத்தடுத்து பரந்த நிலப் பகுதிகள் இஸ்லாத்தின் ஆளுகையின்கீழ் வந்தன, எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின், சிசிலி, ஃப்ரான்சின் சில பகுதிகளும்கூட அதன் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டன. பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் இந்தியா, இந்தோனீசியா, சீனா வரையிலும் இஸ்லாத் பரவியிருந்தது.

ரோமப் பேரரசு ‘காட்டுமிராண்டிகளின்’ தொடர்ந்த தாக்குதல்களினால் வீழ்ந்தபோது, ஐரோப்பாவின் எதிர்வினை ரோம – மத்தியத் தரைக்கடல் நாகரிகத்தோடு காட்டுமிராண்டுகளின் ‘வழமைகளை’ செரித்துக் கொள்வதாகவே இருந்தது. ஆனால், இஸ்லாமியப் படையெடுப்பின்போது, மத்தியத் தரைக்கடல் பகுதியில் செழித்த ஐரோப்பிய நாகரிகம், தன்னுள் சுருங்குவதாக, தனது நாகரிக மையத்தை வடமேற்கு நோக்கி நகர்த்திக் கொள்வதாக எதிர்வினை புரிந்தது. அப்போதிருந்து கீழைத் தேயங்கள், குறிப்பாக இஸ்லாமிய நாகரிகம், அவ்வப்போது வணிகத் தொடர்பு கொள்வது தவிர்த்து, பண்பாட்டு ரீதியாகவும் அறிவுப் புலத்திலும், ஆன்மீக ரீதியாகவும் ஐரோப்பாவிற்கும் அதன் நாகரிகத்திற்கும் புறத்தே நிலவும் புரியாத புரிந்துகொள்ள அவசியமில்லாத, காட்டுமிராண்டிகளின் கூட்டமாயின. மேற்கு, தன் ‘மேன்மையில்’ ‘தனிமைச் சுகத்தில்’ புரளத் தொடங்கியது. அறியாமை இருளைத் தன்மீது தானே கவித்துக் கொண்டது.

படைபலம் கொண்டு எதிர்கொள்ள அது செய்த அத்தனை முயற்சிகளும் தற்கொலை முயற்சிகளாகவே முடிந்தன. இஸ்லாமியப் படைகள், “தேனிக் கூட்டங்களைப் போல, ஆனால் வலுத்த கையுடையனவாக … எதிர்ப்பட்ட அனைத்தையும் அழித்துவிடும்” வலிமை மிக்கவையாக இருந்தன. தொடக்கத்தில் பெற்ற வெற்றிகளும் ஜெருசலேமைச் சுற்றிக் கைப்பற்றிய சிறு பகுதிகளும் தாக்குப் பிடித்து நின்று, ஒரு அரசை ஊன்றுவதற்கான பலத்தைத் தருபவையாக இருக்கவில்லை. அந்நிலப் பகுதியின் புவியியல் சூழலும் பல்லுயிர்ச் சூழலுமே அவர்களுக்கு எதிராக ‘சதி செய்வது’ போலிருந்தது. சுட்டெரிக்கும் வெயிலும் மலேரியுவுமே எஞ்சிய ஐரோப்பியர்களை விரட்டியடித்தன. (23)

‘தோள் வலி’ கொண்டு வெல்ல முடியாத எதிரணியை எப்படி எதிர்கொள்வது?

பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பிய ‘சிந்தனையாளர்கள்’ “இஸ்லாத் குறித்து ஏதாவது செய்தே ஆகவேண்டும்” என்று ‘சிந்திக்கத்’ தலைப்பட்டனர். அதற்கு முன்பாகவே, கி. பி. 1312இல் வியன்னாவின் கிறித்தவ திருச்சபை அரபி, கிரேக்கம், எபிரேயு முதலிய மொழிகளுக்கான தனித்த துறைகளை பாரீஸ், ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற முக்கிய கல்வி மையங்களில் நிறுவியிருந்தது. கீழைத்தேயவாதம் என்ற கல்வித்துறை மெல்ல உருப்பெற்று விரிந்தது.

(தொடரும் …)

கவிதாசரண் மார்ச் – ஏப்ரல் 2004.

அடிக்குறிப்புகள்:

(17) Sanjay Subrahmanyam, The Political Economy of Commerce – Southern India, 1500 – 1650 (CUP, 1990). பக்: 58.

(18) Alfred Crosby, Ecological Imperialism – The Biological Expansion of Europe, 900 – 1900 (CUP, 1986). பக்: 120.

(19) குறித்த ஆசிரியர்களுடையது என்று குறிப்பிடாதவரை அழுத்தங்கள் என்னுடையவை.

(20) Umberto Eco, Serendipities – Language and Lunacy, Trans. by William Weaver (Pheonix, 1999) அத்தியாயம் 1.

(21) Sanjay Subrahmanyam (1990) பக்கம்: 103.

(22) Edward W. Said, Orientalism (Vintage, 1979) இந்நூலில் கீழைத்தேயவியல் என்ற கல்விப்புலத்தின் தோற்றம் குறித்து எத்வர்த் சேத் தரும் விரிவான விளக்கத்தை, பின்வரும் பத்திகளில் பின்பற்றியிருக்கிறேன்.

(23) Alfred W. Crosby (1986) அத்தியாயம் 3.

இஸ்லாத்: நாகரீகத்தின் பின்னைய மனிதன் – ஹாரீஸ் சிலாய்த்ஸிக்

ஹாரீஸ் சிலாய்த்ஸிக் 1992 முதல் 1995 வரை போஸ்னியாவின் பிரதமராக இருந்தவர். இவருடைய தந்தையார் போஸ்னியாவிலேயே மிகப்பெரிய மசூதியின் தலைமையில் இருந்தவர். தாய்வழிப் பாட்டனார் சமய நீதிபதியாக இருந்தவர். சிலாய்த்ஸிக் லிபியாவில் பயின்றவர். முறையான சமயக் கல்வியும் பெற்றவர்.
————————–
இன்றைய இஸ்லாத் 50 வருடங்களுக்கு முன்பிருந்த இஸ்லாத் போன்றது இல்லை. போஸ்னியா, ஈரான், எகிப்து, மலேசியா, பாகிஸ்தான் என்று பல்வேறு மாறுபட்ட இஸ்லாமியச் சமூகங்கள் – ஒவ்வொன்றும் தனித்தனி உலகங்கள் – தமக்கேயுரிய வழிகளில் நவீனத்துவத்திற்குள் அடியெடுத்துவைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், பதட்டமும் நிலவுகிறது. கல்விப் பரவல், தகவல் தொடர்பு சாதனங்கள், நெடுந்தூரப் பயணங்கள், இவை விளைவித்த புரட்சிகள் சாதாரண முஸ்லீம்களுக்கு நவீனத்துவத்தின் பொருள் மயமான பகட்டுச் சின்னங்களை அவர்களது வாழ்வில் அறிமுகம் செய்து வைத்துள்ளன என்றாலும் இந்த யதார்த்தங்கள் மக்கட் பிரிவினரில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தினரைத் தவிர ஏனையோருக்கு எட்டாக்கனியாகவே உள்ளன என்ற நடப்பு உண்மையும் நிலவுகிறது.

இதனால், சலிப்பும் சோர்வும் சினமுமே எங்கும் பரவியிருக்கிறது. தமது கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த இடைவெளியை மக்கள் தமது பண்பாடு, மதம் போன்ற, தாம் நம்பிக்கை வைத்திருப்பவற்றை பற்றிக்கொள்வதன் வழி நிறைவு செய்துகொள்கின்றனர். ஒரு மதம் என்ற வகையில் பரந்த பண்புடையதாக இருப்பதாலேயே இஸ்லாத் இதம் தருவதாக உள்ளது. வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும் சூழல்களுக்கும் வழிகாட்டுவதாக, குறிப்பாக, மேற்கின் ஆன்மச் சூன்யத்திற்கு பதில் சொல்வதாக இஸ்லாத் இருக்கிறது.

இத்தகைய அனைத்தும் தழுவிய நம்பிக்கை, சோர்வும் கோபமும் மேலோங்க, வன்மை
தொனிக்க, சிலரால் முன்னிறுத்தப்படும்போது, மேற்கு அதை ஆபத்தான “அடிப்படைவாதமாகப்” பார்க்கிறது. கிழக்கின் முஸ்லீம்களைப் போல, மேற்கத்தியர்களின் மூளைகளும் இந்நாட்களில் முற்சாய்வுகளுக்குள் ஒளிந்துகொண்டும் முத்திரைகள் குத்தியும் மட்டுமே தங்களுடைய உலகங்களை ஒழுங்கமைத்துக்கொள்ள முடியும் என்ற அளவுக்கு, சூழல் அளவுக்கதிகமான தகவல்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரப் பிரதேசங்களின் நிழலுருவங்கள் அவற்றின் யதார்த்தங்களாகவே கொள்ளப்படுகின்றனமேற்கிலிருந்து கிழக்கைப் பார்ப்பதோ அல்லது கிழக்கிலிருந்து மேற்கை நோக்குவதோ, சிக்கல்களையும் செறிவுகளையும் கிரகித்துக்கொள்ள முயற்சிப்பது என்பது இன்றைய அவசரகதி உலகத்தில் சாத்தியமற்ற, தேவையற்ற ஊதாரித்தனமான செயலாகவே நோக்கப்படுகிறது. ஊடகங்களின் பெருக்கமும் வேகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களை இணைப்பதாக இருக்கிறது. ஆனால், மக்களோ மனதளவில் அதற்குத் தயாராக இல்லை. மானுட இயல்பு படிப்படியாக, மெதுவாக வளர்ச்சியடைவதாகவே உள்ளது. தன்னைச் செழுமைப்படுத்திக்கொள்ள, மாற்றத்தைக் கிரகித்துக்கொள்ள மனிதனுக்கு அவகாசம் தேவைப்படுகிறது.

தகவல்கள் உதவிகரமானவையாக இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில், ஊழிப்பெருவெள்ளமாக அவை பெருகும்போது, அதன் வேகம், பொய்யான கருத்துக்களையும் சந்தேகத்தையும் பதட்டத்தையும் உருவாக்குவதால் மிகவும் ஆபத்தானதாகவும் ஆகிவிடலாம். தகவமைத்து வாழவேண்டுமென்றால், நாம் அனைவருமே சற்று வேகத்தைக் குறைந்த்துக் கொண்டு, குறைவானவற்றோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒப்புரவாள்கை நெறி

எல்லா மாபெரும் மதங்களின் வரலாறுகளிலும் நாம் காண்பதைப் போலவே, மோசமான வாழ்நிலைகளில், எதிர்கால நம்பிக்கைகள் எதுவும் இல்லாத சூழலில் தள்ளப்பட்டவர்களிடையே நிலவியது போலவேஇஸ்லாமிய உலகிலும் ஒப்புரவாள்கையற்ற சூழல் நிலவுகிறது என்பதும் உண்மைதான். என்றாலும், இன்றைய சிக்கலான செறிவான உலகில், எந்த ஒரு மதத்தினரையும் சரியாக மதிப்பிடவேண்டுமென்றால், அவற்றின் அடிப்படையான அருளுரை என்ன என்பதையே காணவேண்டும். வரலாறு நெடுக, இஸ்லாத்தின் அருளுரை, அரவணைத்தல் என்பதே தவிர விலக்கிவைத்தல் அல்ல.

தனது இந்த அருளுரையால், மிகவும் மாறுபட்ட பல்வேறு பண்பாடுகளையும் இணைத்ததன் காரணமாக உருவான இஸ்லாத்தின் ஒப்புறவாள்கை நெறி, அதை “நாகரீகத்தின் பின்னைய மனிதன்” என்று அழைக்கப்பட வித்திட்டிருக்கிறது. கடுமையான பாலைவனத்தில் தோன்றியதாகவே இருந்தாலும் பாக்தாத், டமாஸ்கஸ், டாஷ்கண்ட், பகு, கெய்ரோ போன்ற மாபெரும் வணிக நகரங்களின் பலதரப்பட்ட மக்களைச் சேர்ந்த மதமாக அது மாறியது. ஐரோப்பிய மையப்பகுதியின் விவசாயத்தை மட்டுமே சார்ந்த மூடுண்ட நாகரீகத்தைப் போலல்லாமல் இஸ்லாத், மத்தியத்தரைக் கடல் பகுதியில், திறந்த மனப்பாங்குடைய நாகரீகமாகத் தோன்றி வலுப்பெற்றது.

இஸ்லாத்தின் இந்த ஒப்புரவாள்கை நெறி, போஸ்னியாவின் நீண்ட நெடிய வரலாற்றில் கலந்து பரிணமித்துள்ள ஒரே காரணத்தாலேயே, செர்பியர்கள், க்ரொயேசியர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனத்தூய்மைவாத “உயிரியல் அடிப்படைவாதத்தின்” சூழலிலும்கூட போஸ்னிய மக்கள், வன்மை மிகுந்த அடிப்படைவாதத்திற்குப் பலியாவார்கள் என்ற அச்சம் எனக்கு எழவே இல்லை. இன்று, போஸ்னியாவின் பெரும்பான்மையான மக்கள் அரசிலிருந்து விலகிய, முற்றிலும் சுயேச்சையான மதச் சமூகத்தையே விரும்புகிறார்கள். எனது விருப்பமும் அதுதான்.

போஸ்னியாவிற்கு இஸ்லாத் வருவதற்கு முன்பாகவே, நாங்கள் எங்களுடைய ஒப்புரவாள்கை நெறிக்காக மட்டுமல்லாமல் சமயத்திற்கு முரணானவர்களாகவும் கலகாரர்களாகவும்கூட அறியப்பட்டிருக்கிறோம்மார்டின் லூதர் “மூலமுதல் சீர்திருத்தவாத திருச்சபை” என்று அழைக்கும் அளவிற்கு போஸ்னிய திருச்சபை முரண்பட்டு நின்றது. பலரும் கருதுவதைப் போல, ஒட்டமான் துருக்கியர்களால் நாங்கள் இஸ்லாத்திற்கு வலுவில் மாற்றப்படவில்லை. கிறித்துவத்தின்பால் கொண்டிருந்த நம்பிக்கைகள் தகர்ந்து போனதாலேயே எமது மக்கள் தாமாகவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கு மாறினர்.
– ஹாரீஸ் சிலாய்த்ஸிக்

நன்றி: கீற்று
நன்றி: கவிதாசரண்
இஸ்லாம், மொழியாக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

ஒசாமா பின் லேடன்: ஒப்புரவாள்கை* நெறியற்ற “பாலைவன” இஸ்லாத்தின் நிதியாளர் – காபெர் அஸ்ஃபோர்

காபெர் அஸ்ஃபோர், எகிப்தின்பண்பாட்டு உயர் கழகம்” (Supreme Council of Culture) என்ற எழுத்தாளர் அமைப்பின் தலைவராக இருப்பவர். இக்குறிப்புகள் New Perspective Quarterly யின் சிறப்பாசிரியர் லைலா கானர்சிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து தொகுக்கப்பட்டவை.

————————————-
அடிப்படைவாதம் வேகம் பெற்றுவரும் சூழலில், எமது மரபுகளை திறந்த மனதுடையதாக வைத்திருப்பதற்கு நாங்கள் செய்துகொண்டிருக்கும் முயற்சிகளை மேற்குலகம் எமது உள்விவகாரமாகவே காணவேண்டும். இது இஸ்லாத்திற்கும் கிறித்தவத்திற்கும் இடையிலான நாகரீகங்களின் மோதல் அன்று; இஸ்லாத்தைப் பற்றிய இருவிதமான பொருள்கோடல் முயற்சிகளுக்கிடையிலான வரலாற்று ரீதியிலான மோதல்.
எப்போதும் போலவே, நாம் இன்று காணும் இந்த மோதல், நைல் நதியின் வளமான கழிமுகப் பகுதிகளில் செழித்து வளர்ந்த, ஒப்புரவாளும் நெறி மிகுந்த மக்களின்நதிகளின் இஸ்லாத்திற்கும்”, சவுதி அரேபியாவின் கட்டிடத்தொழில் பெரும்புள்ளி ஒருவரின் கோடீஸ்வரப் பிள்ளையான ஒசாமா பின் லேடன் பின்பற்றும் ஒப்புரவாளும் நெறியற்றபாலைவன இஸ்லாத்திற்கும்இடையிலான மோதலே.
பாலைவனப் பண்பாடு, நைல் பண்பாட்டிற்கும், பன்முகத்தன்மை நிரம்பிய, சலசலப்பு மிகுந்த நகரச் சந்தைகளின் உயிரோட்டமான வாழ்விற்கும் எதிரானது. அது மூர்க்கத்தனமானது. மாறுபட்ட கருத்துக்கள், அபிப்பிராயங்களை அது மதிப்பதில்லை. மக்களுக்கு ஒரே கருத்து, ஒரே சமயக்கொள்கை, மதம் குறித்த ஒரேயொரு விளக்கம் மட்டுமே இருக்கவேண்டும் என்று அது நம்புகிறது.
மற்றமையை அது எப்போதும் வெறுக்கிறது; எப்போதுமே அது அதற்கு எதிரிதான். குறிப்பாக, மேலை நாகரீகத்தை, சாத்தானின் அவதாரம் என்பதாகவே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறது; வெறுக்கிறது. பாலைவனத்தில் பெண்ஆண் சமத்துவம் மதிக்கப்படுவதில்லை. தீமைக்குள் இழுக்கும் ஒரு வடிவமாகவே பெண்கள் அங்கு பார்க்கப்படுகிறார்கள். ‘காளாபேயாஆண்களின் நீண்ட அங்கிகளும், ஏன் அவர்களது தாடிகளுமே இந்தப் பாலைவனத்தின் குறியீடுகள்தாம்.
இஸ்லாத்தில் எப்போதுமே இரண்டு விதமான போக்குகள் இருந்துவந்துள்ளன. எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நதிக்கரை நாகரீகங்களோடு தொடர்புடைய ஒப்புரவாள்கை நெறி ஓங்கியஅறிவுப் போக்கு”. வறண்ட பாலைவனத்தோடு தொடர்புடைய ஒப்புரவாள்கை நெறியற்றபிரச்சாரப் போக்கு”. சற்று விரிவாகப் பொருள்கொண்டால், “பிரச்சாரப் போக்கு” என்பது கடவுளின் குற்றமற்ற சொல்லாக அருளப்பட்ட ஒன்றாக குர்ஆனைக் கருதி அதன் வசனங்களை கண்மூடித்தனமாக நம்பும் போக்கு.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், நாகரீகங்கள் செழித்தோங்கிய காலங்களில் ஒப்புரவாள்கை நெறியுள்ள போக்கு நிலவியது. வீழ்ச்சிக் காலங்களில் ஒப்புரவாளுகையற்ற போக்கு எழுந்தது.
1967 –ன் ஆறு நாட்கள் போரில், இஸ்ரேலிடம் எகிப்து இராணுவம் தோல்வியுற்றதற்குப் பிந்தைய தலைக்குனிவு மிகுந்த சூழலில் ஒப்புரவாளுகையற்ற அடிப்படைவாதம் அரபு உலகில் வளரத் தொடங்கியது. எகிப்தில் இதனால் எழுந்த அடையாள நெருக்கடிக்கு இணையாக, அதே காலகட்டத்தில், எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளில், மிகப்பெருமளவிற்கு செல்வம் கொழிக்கத் தொடங்கியது. இது பாலைவன இஸ்லாத்திற்கு பணம் கிடைக்க வழி செய்தது. பணம் அதிகாரமும்கூட. பணத்தைக் கொண்டு உங்கள் பண்பாட்டை மற்றவர்கள் மீது வலிந்து திணிக்கமுடியும். நன்கு நிதியளிக்கப்பட்ட பாலைவன இஸ்லாத் எகிப்தின் வீழ்ச்சியால் உருவான வெற்றிடத்தை இட்டு நிரப்பியது.
இப்படியாக, வளைகுடா நாடுகளிலிருந்து, குறிப்பாக ஒசாமா பின் லேடனிடமிருந்து அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் குவிந்த பணம், பாலைவன அடிப்படைவாதத்தை எகிப்திற்கு ஏற்றுமதி செய்வதிலும், அதன் அபாயகரமான நடவடிக்கைகளை இங்கும் மற்ற இடங்களிலும் தூண்டிவிடுவதிலும் முக்கிய பங்காற்றியது. எகிப்தின் பண்பாட்டு அமைச்சகம், இந்த முயற்சியை முறியடிக்க மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுள் ஒன்றாக, அறிவொளிப் புத்தகங்கள் என்ற ஒரு நூல் வரிசையையையும் வெளியிட்டது. ஆனால், பின் லேடனுக்கு இருப்பதைப் போன்ற நிதியாதாரங்கள் எமக்கில்லை என்பதால், அவரைப் போல மிகக்குறைந்த விலையிலோ மிகவும் விரிவாக விநியோகம் செய்யவோ எங்களால் இயலாமற்போனது. சூடானில் இருந்தபோதே பின் லேடன் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இணையாக பயங்கரவாத நடவடிக்கைகளை உலகெங்கும் வலுப்படுத்தவும் முடிவு செய்தார்.
இன்று, எகிப்தில் உள்ள அடிப்படைவாத இயக்கங்களிலேயே மிகவும் வலுவானது, ”இஸ்லாமிய சகோதரத்துவம்என்ற அமைப்பு. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எழுச்சிக் காலத்தில் சூயஸ் கால்வாய்ப் பகுதியில் ஹசன் அல் பன்னா என்பவரால்இஸ்லாமிய சகோதரத்துவம்நிறுவப்பட்டது. காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது என்ற கருத்தாக்கத்தைதூய இஸ்லாத்திற்குத் திரும்புதல் என்பதோடு அவர்கள் கலந்தார்கள். ஹசன் அல் பன்னா, ஹன்பாலி அறிஞர்களிலேயே மிகவும் புகழ் பெற்றவராகத் திகழ்ந்த பின் தன்வீர்இவரும் ஒரு பாலைவனக்காரர்என்பாரின் கருத்துக்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்.
சிலுவைப் போர்களின்போது, ஐரோப்பாவிலிருந்து வந்த படையெடுப்பிற்கு எதிராக முஸ்லீம்கள் போரிட்டுக் கொண்டிருந்தபோது, தாக்குதலைத் தாக்குப்பிடித்து நிற்க, கருத்தியல் தீவிரத்தின் எல்லைகளுக்குச் செல்லவேண்டியிருந்ததன் விளைவாக எழுந்த ஒன்றேபிற்கால ஹன்பாலி இஸ்லாத்”. பின் தன்வீரின் மதச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே சவுதிக் குழு உருவானது. அந்தக் கருத்துக்களே சவுதி அரேபியாவில் அரசின் ஆதாரத் தூண்களாயின.
தொடக்கத்தில், எகிப்துச் சூழலின் செல்வாக்கின் காரணமாக, “இஸ்லாமிய சகோதரர்கள் சற்று ஒப்புரவாள்கை நெறியுள்ளவர்களாகவே இருந்தனர். ஆனால், காலப்போக்கில், கமால் அப்தெல் நாசரின் எழுச்சி, 1952 வாக்கில் எழுந்த அராபிய தேசியவாதத்தின் புதிய அலை, பாலைவனத்திலிருந்து ஒரு எதிர்வினையை உருவாக்கியது. சவுதி முடியாட்சி நாசரின் செல்வாக்கை அழிக்க விரும்பியது. அடிப்படைவாதத்துடனான எகிப்தின் போராட்டம் தொடங்கியதும் இதிலிருந்துதான். 1967 –ல் நாசர் தோற்கடிக்கப்பட்டதும், அராபிய தேசியவாதம் வீழ்ந்துபட்டதும், பாலைவன முஸ்லீம்கள்இஸ்லாத் ஒன்றே தீர்வுஎன்ற முழக்கத்தின் வழியாக தமது கருத்தியலை முன்வைக்கத் தொடங்கினர்.
கடுமையானதொரு இஸ்லாத்திற்குத் திரும்புவது மட்டுமே ஜியோனிசத்திற்கும் இஸ்ரேலிற்கும் எதிரான இறுதி வெற்றியைப் பெறுவதற்கான வலிமையைத் தரும் வழி என்பதே அவர்களது மிகப்பெரும் நம்பிக்கை.
இன்று, ஆக்கிரமித்து வரும் பாலைவன இஸ்லாத்தால் நைல் பண்பாடு ஆபத்திற்குள்ளாகியிருக்கிறது. நைல் பக்குவத்தை மறுஉறுதி செய்யும் பொருட்டு நாங்கள், ஒப்புரவாள்கை நெறி, வித்தியாசங்களை மதிக்கக் கற்றுக்கொள்வது போன்ற எகிப்திய கருத்தாக்கங்களில் குவிந்த பண்பாட்டுக் கல்வியை வலியுறுத்தி வருகிறோம். இந்த அறிவொளி இயக்கம், அடிப்படைவாதிகளின் தாக்குதல் இலக்குகளுள் ஒருவராக இருந்த, மறைந்த நாவலாசிரியர் நக்வீப் மஹஸ்பௌஸ் போன்ற கலைஞர்களால் வழிநடத்தப்படுவது.
இருபது வருடங்களாக, மக்களின் செல்வாக்கை மெதுமெதுவாகப் பெற்று இன்று வலுவடைந்துள்ள போக்கிற்கு எதிராக அலையைத் திருப்புவதற்கு எங்களுக்குக் காலம் தேவைப்படும். அது அவ்வளவு சுலபமான ஒன்றாகவும் இருக்காது. எங்களுடைய நீண்ட வரலாறு ஒரு வழிகாட்டியாக இருக்குமென்றால், நைல் பண்பாடு மீண்டும் ஒருமுறை ஒப்புரவாள்கை நெறி ஓங்கிய இஸ்லாத்தை செழிக்கச் செய்யும்.
– காபெர் அஸ்ஃபோர்


நன்றி: கீற்று


நன்றி: கவிதாசரண்

————————————————————
*Tolerance என்பதற்கு வழமையாகசகிப்புத்தன்மைஎன்ற சொல்லாட்சியே தமிழில் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லில் பொதிந்திருக்கும் அதிகாரத்தை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதற்கு மாற்றாகவே இங்குஒப்புரவாள்கைஎன்ற சொல்லைக் கையாண்டிருக்கிறேன். பொருத்தமான வேறு சொற்களையும் வாசகர்கள் பரிந்துரைக்கலாம்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பாக:


சென்னை அமெரிக்க நூலகத்தில் கிடைக்கும் New Perspective Quarterly என்ற இடது சார்புள்ள இதழின் Winter 2002 இதழ் இஸ்லாமியச் சிறப்பிதழாக வந்திருந்தது. சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் பலருடைய கட்டுரைகளைத் தாங்கி வந்திருந்த அச்சிறப்பிதழில் இருந்து சிலவற்றை கவிதாசரண் இதழுக்கு மொழியாக்கம் செய்து தந்தேன். முதல் கட்டுரைக்கு ஒரு அறிமுகக் குறிப்பும் தந்திருந்தேன். சில மாற்றங்களோடு அக்குறிப்பை இங்கும் வைக்கிறேன்.

இஸ்லாமியர்களிடையே அரசியல் விழிப்புணர்வும் புதிய இயக்கங்களும் அரும்பத் தொடங்கியிருக்கும் காலமிது. தி. மு. . வுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டிருந்த ஒரு தலைமுறை இஸ்லாமியர்கள் இப்போது அதன்பால் வைத்த நம்பிக்கைகள் சிதறி, கையறுநிலையில் தம்மை உணர்ந்திருக்கிறார்கள். ஒரு புதிய தலைமுறை இளைஞர்கள், தம்மைத் தனித்துவமாக இணைத்துக்கொள்ளும் முயற்சியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என்பது ஒருபுறமிருக்க, சில பலவீனமான அம்சங்களையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

புதிய, தனித்துவமான இஸ்லாமிய இயக்கங்களில் இணையத் தொடங்கியிருக்கும் இளைஞர்கள், இந்திய/தமிழக இடதுசாரி இயக்கங்களின் அனுபவங்களை முற்றிலும் அறியாதவர்கள். இதற்கு அவர்களைக் குற்றம் சொல்லவும் இயலாது. பொதுவில், நமது சூழலில் இருந்த/இருக்கும் இடதுசாரி இயக்கங்கள் எவையும் இஸ்லாமியர்களுக்கு ஒரு தனித்துவ அடையாளம் உண்டு என்பதையோ, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தனித்த அக்கறையோ செலுத்தியதில்லை, அங்கீகரித்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டை நிறுவுவது இங்கு எனது நோக்கமில்லை. இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது, இந்த இயக்கங்களின் சாதகமான, பாதகமான அனுபவங்கள் எதுவும் இஸ்லாமியர்களுக்குகுறிப்பாக தற்போதைய தலைமுறையினருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை மட்டுமே.

இந்த இயக்கங்கள் முன்வைத்த சமூகப் பார்வைகளிலிருந்து இஸ்லாமிய இளைஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதே நேரத்தில், இவற்றில் சிலவற்றின் வறட்டுத்தனமான நிலைப்பாடுகள், செயல்பாடுகள் (குறிப்பாக, மாலெ இயக்கங்களுடைய) எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவக்கூடும்.

ஒரேயொரு கோணத்தில் இருந்து மட்டுமே விஷயங்களை அணுகுவது என்பது, அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்பால் மாற்றமுடியாத நம்பிக்கையையும் இறுதியில் வெறியையும் அதைச் செயல்படுத்துவதற்காக எந்தவிதமான வழிமுறையையும் கையாளவும் இட்டுச் செல்லும். ஆர். எஸ். எஸ் தொடங்கி இடதுசாரி அமைப்புகள், தமிழ்த் தேசிய இயக்கங்களின் உதாரணங்கள் இதற்கு எடுப்பாகத் தெரிபவை.

முந்தைய தலைமுறைகளின் இந்தத் தவறுகளிலிருந்து விலகி, பல கோணங்களில் இருந்து விஷயங்களை அணுகக் கற்றுக்கொள்ள வேண்டியது இன்றைக்கு நம் எல்லோர் முன்னும் உள்ள சவால் என்பதே யதார்த்தம். அரசியல் விழிப்புணர்வும் வேகமும் பெற்று அரங்குக்கு வரத்தொடங்கியிருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள், இளைஞர்கள் இத்தகைய முயற்சியில், பயிற்சியில் தம்மை ஆழ்த்திக் கொள்ளவேண்டியதே இன்றைக்குத் தேவையான செயல்பாடு என்பதும் எனது துணிபு. அதன் பொருட்டே இந்த மொழியாக்கங்களைத் தரமுனைந்திருக்கிறேன். பல்வேறு நோக்குகளிலிருந்து வரும் இக்கட்டுரைகள் மேற்சொன்னது போன்றதொரு பயிற்சிக்கு ஒரு உதாரணமாகவும் இருக்கலாம்.

கவிதாசரண் இதழில் இது வேறு வரிசையில் தொடராக வந்தது. இப்போது சற்று எளிமையான வாசிப்பைக் கருத்தில் கொண்டு வேறு வரிசையில் சிறிய கட்டுரைகளில் இருந்து தொடங்குகிறேன்.

நன்றிகள்.

வளர்மதி.

இஸ்லாம், மொழியாக்கம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: