கணக்குல நான் கொஞ்சம் வீக் என்று முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
எந்த அளவுக்கு ‘வீக்’ என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
1 2 3 4 5 6 7 8 9
அதற்கப்புறம் எண்ணச் சொன்னால் குண்டக்க மண்டக்கதான்.
“சார் 0 – க்குத்தான் மதிப்பே இல்லைன்னு சொல்றீங்களே; அப்புறம் அதச்சேத்து இன்னொரு நம்பர் சொல்லச் சொல்றீங்களே” என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுவேன்.
பொய் சொல்கிறேன் என்று தெரியும். ஆனால், நீட்டி முழக்கி எங்கோ கொண்டு போய் விட்டுவிடுவார்கள் என்ற பயம்.
வாய்ப்பாடு சொல்லித்தர ஆரம்பித்தபோதும் தகராறுதான். பதினாறாம் வாய்ப்பாடு வரைக்கும் சில எளிமையான குறுக்குவழிகளை கண்டுகொண்டு தப்பித்துவந்தேன். இடையில் இந்த 14 வது வாய்ப்பாடு ஒரு பெரிய இடறலான விஷயமாக எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்யக் கண்டு கொண்டிருந்த குறுக்கு வழிக்கு ஒரு உதாரணத்தையும் சொல்கிறேன். 13 ஆம் வாய்ப்பாட்டை எடுத்துக் கொண்டால் 13×2= 26 13×3=39 13×4=42 இப்படிப் போகும். ஆக, கடைசி எண்ணில் 3 கூட்டிக் கொண்டே போகவேண்டும்; முதல் எண்ணில் 1 கூட்டிக் கொள்ள வேண்டும். கடைசி எண் 7, 8, 9 வந்தால் முதல் எண்ணில் 2 கூட்டிக் கொள்ள வேண்டும். 13, 26, 39, 52, 65, 78, 91, 104, 117, 130 … இப்படி.
இப்படியாகத்தான் பெருக்கலோடு கூட்டலை ஒருமாதிரி கலந்துகட்டி எப்படியோ பள்ளிக்காலத்தை ஓட்டி விட்டேன்.
இந்த லட்சணத்தில் கட்சிக்குப் போய் வீடு திரும்பியபோது கல்லூரிக்குப் போக மனமில்லாமல் இருந்தது. பலரது வற்புறுத்தல் தாங்காமல் அஞ்சல் வழிக் கல்வியில் ‘மேற்படிப்பைத்’ தொடர ஒப்புக் கொண்டேன். ஆனால், “வினை” என்னை எப்படி விடும்! அஞ்சல் வழிக் கல்வியில் B. Sc Maths – ஐ ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன்.
கடைசி வரையில் முதலிரண்டு ஆண்டுத் தேர்வுகளில் ஆங்கிலம் – தமிழ் இரண்டு பாடங்களைத் தவிர எதையும் எழுதவே இல்லை. ஆனால், B. Sc Maths படிக்கிறார் என்று கதை பரவ, அதை வைத்தே 10 ஆம் வகுப்பு வரைக்கும் வீட்டில் டியூஷன் எடுத்து அதிகபட்சமாக மாதம் 1,500 வரை சம்பாதிக்க முடிந்ததை ஒரு சாதனை என்றல்லாமல் வேறு எப்படிச் சொல்வது!
சம்பாதித்த சாகச உணர்வு இரண்டு மூன்று வருடங்களுக்கு திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளில் கொண்டுபோய் விட்டது. எனது வழமையான தேடல்களுக்குத் தீனி போட்ட புத்தகங்கள் தவிர்த்து அவ்வப்போது உயர் கணிதம் குறித்த எளிமையான அறிமுகப் புத்தகங்களும் வாங்கி வைத்துக் கொள்வதுண்டு. டியூஷன் எடுக்க உதவும் என்ற காரணம் தவிர வேறு என்ன.
ஒரு சமயம் இரண்டு + 2 படித்த பிள்ளைகளுக்கு கணிதப் பாடம் டியூஷன் எடுக்க ஒப்புக் கொண்டபோது, இந்தக் கணிதப் புத்தகங்கள் கைகொடுத்ததை குருட்டு அதிர்ஷ்டம் என்று ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.
அப்படியான நூல் ஒன்றிலிருந்து கற்றுக் கொண்ட குறுக்கு வழிக் கணிதச் சூத்திரம் ஒன்றையும் அதன் சுவாரசியம் கருதி பகிர்ந்து கொள்கிறேன். இதுவும் மேலே சொன்ன பெருக்கலுக்கு கூட்டலைக் கலந்து கட்டி அடிக்கும் கதைதான். எண்கள் கொஞ்சம் பெருசு, கூட்டலுக்கு பதில் பெருக்கல். அவ்வளவுதான் வித்தியாசம்.
1 லிருந்து 100 வரையிலான எண்களைக் கூட்டினால் என்ன வரும் என்பது கேள்வி.
ஒவ்வொரு எண்ணாகக் கூட்டிக் கொண்டு போனால் கொஞ்ச நேரத்தில் தலை சுற்ற ஆரம்பித்துவிடும் (எனக்கு). நிச்சயம் எங்காவது பிழை விட்டுவிடுவேன்.
ஆனால், குறுக்கு வழிதான் இருக்கிறதே! அஃதாவது பின்வருமாறு:
1 2 3 4 … 97 98 99 100 என்று வரிசையாக எழுதி வைத்திருப்பதாக கற்பனை செய்துகொள்ள வேண்டும்.
அதேபோல 100 99 98 97 … 4 3 2 1 என்று தலைகீழ் வரிசையில் அதனடியில் இன்னொரு வரிசை.
1 2 3 4 … 97 98 99 100
100 99 98 97 … 4 3 2 1 என்பதாக.
இப்போது மேலுள்ள எண்ணையும் கீழுள்ளதையும் கூட்டிப் பாருங்கள். ஒவ்வொன்றும் 101 ஆக இருக்கும். (1+100, 2+99, 3+98 …)
ஆக 100 முறை 101. அதாவது 100 பெருக்கல் 101 (100 x 101). ஆனால், இது இரண்டுமுறை கூட்டுதலாகிவிடும் என்பதால் அதை இரண்டால் வகுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் 50 x 101=5050.
எப்படி இருக்கிறது! (கணக்கு வாத்தியார்கள் யாராவது வந்து என்னை உதைக்காமல் இருந்தால் சரி).
இதுவெல்லாம் கதையாக எழுத வைத்திருந்த விஷயங்கள். ஆனால், எவ்வளவுதான் பிரயத்தனம் செய்தாலும், நான் – ஃபிக்ஷன் ஆசாமிதான் என்று கழுதையாகக் கத்தினாலும் யார் ஒப்புக்கொள்ளப்போகிறார்கள். “இல்லை சாமி, நீங்க non – fiction ஆளுதான்,” என்று அடித்துப் பேச இங்கே ‘சதிகார’ நண்பர் கூட்டம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறதே 🙂
அது கிடக்கட்டும். மேலே சொன்ன குறுக்கு வழியை lateral thinking என்பதற்கான எளிமையான உதாரணமாக, Edward de Bono, தனது Serious Creativity என்ற நூலின் ஆரம்பப் பக்கங்களில் காட்டியபோது கொஞ்சம் அசந்துதான் போய்விட்டேன்.
அதுவும் கிடக்கட்டும்.
இதையெல்லாம் இங்கு பகிர்ந்து கொள்வதன் நோக்கம் முற்றிலும் வேறு. ‘நம்’ திருட்டு கம்யூனிஸ்ட் கட்சி (CPI) காம்ரேடுகளைப் பற்றி எங்கிருந்து தொடங்கிப் பேசுவது என்ற குழப்பத்தில் ஏதோ மனம் போன போக்கில் எழுதியது.
மேலே காட்டிய “குறுக்கு வழிக் கணக்குச் சூத்திரங்களால்” யாருக்கும் எந்தப் பாதகமும் வரப்போவதில்லை. திருட்டுக் கணக்கெல்லாம் இதை வைத்துக் காட்டிவிட முடியாது. ‘திருட்டு’ (Piracy என்பதைக் குறிப்பிடுகிறேன்) என்பதற்குக்கூட இன்றைய கணிணி – வலை உலக யுகத்தில் வேறு அர்த்தங்களும் பயன் மதிப்புகளும் உருவாகி இருப்பதை உணர்ந்தே இருக்கிறேன். Copy – right, Copy – left, Fair Use Principles, Shareware, Freeware போன்ற கருத்தாக்கங்களை ஓரளவிற்கு புரிந்தும் இருக்கிறேன். (விரிவான அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியிலும் இருக்கிறேன்).
ஆனால், இந்தப் பதிப்புரிமை (copyright) என்பது குறித்த அடிப்படை விஷயங்களைக் கூட அறிந்துகொள்ளாமல் பலர் சகட்டு மேனிக்கு உளறுவதைக் காதுகொடுத்துக் கேட்க முடியவதில்லை. Copyright என்று சொன்னாலே அது ஒரு ‘முதலாளியக் கருத்தாக்கம்’ என்று சில இணைய மேதாவிகள் சீறிப்பாய்வதை ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் கண்டும் இருக்கிறேன்.
விரிவாக தற்போது சாத்தியம் இல்லையென்றாலும் ஒரு சில புள்ளிகளை மட்டும் இங்கு பதிவு செய்ய விருப்பம் (இவற்றை “இசையின் அரசியல்” என்ற நூலிலும் சற்று விரிவாக விளக்க முயற்சி செய்திருக்கிறேன்).
1. பதிப்புரிமை என்ற கருத்தாக்கமும் அது குறித்த சட்டங்களும் முதலீட்டிய சமூகத்தின் செவ்வியல் காலப்பகுதியில் உருவாகி படிப்படியாக வளர்ச்சி பெற்றவை. முதலீட்டியத்தின் மிக ஆரம்பகாலப் பண்டங்களில் ஒன்று நூல்கள். முதலீட்டிய செவ்வியல் காலப்பகுதி உச்சத்தில் இருந்த காலங்களில் நூல்களோடு மற்றொரு முக்கிய பண்டமாக சேர்ந்துகொண்டது இசைக் குறிப்புத் தாள்கள் (music sheets).
2. தனிப்பட்ட ஆசிரியர்களின் ஆக்கங்களுக்கு செல்வாக்கு மிகுந்தபோது, அதன் விளைபயன்களைப் பகிர்ந்துகொள்வதில் நூல்களை அச்சிட்ட முதலீட்டு நிறுவனங்களும் அவ்வாக்கங்களை உருவாக்கிய ஆசிரியர்களும் அதைப் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக படிப்படியாக உருப்பெற்றதே copyright என்ற கருத்தாக்கமும் அது குறித்த சட்டங்களும் (இசைக்குறிப்புகள் எழுதியோருக்கும் இது பொருந்தும்).
3. ஒருவகையில் முதலீட்டு நிறுவனங்களே மொத்த பயனையும் அள்ளிக் கொண்டு போவதில் இருந்து தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள எத்தனித்த படைப்பாளிகளின் தொடர்ந்த முயற்சியில் உருவானவையே இச்சட்டங்கள். ஒரு படைப்பாளியின் ஆக்கங்களுக்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர் முதலீட்டு நிறுவனத்தின் லாபத்தை இதன் வழி கட்டுப்படுத்துபவராக இருக்கிறார். (முதலீட்டு நிறுவனம் இதை வேறு வழிகளில் ஈடுசெய்யலாம் – தொழிலாளர்களை அதிகம் சுரண்டுவது, ஆக்கங்களை அதிகப் பிரதியாக்கம் செய்வது, பண்டத்தின் விலையை அதிகமாக்குவது …)
4. இந்நோக்கில் நவீன படைப்பாளிகள் முதலீட்டியத்தோடு இணைந்து உருவான பாட்டாளி வர்க்கத்தின் நிலையிலிருந்து மாறுபட்டவர்கள். முதலாளிய வர்க்கத்தோடு இணைந்து உருவான பாட்டாளி வர்க்கம் அடிமைத் தளையுடனேயே உருவானது. தனது தளைகளை உடைக்க போராடுகிறது. முதலாளிய வர்க்கத்தின் உருவாக்கத்தோடு இணைந்தே உருப்பெற்ற நவீன படைப்பாளிகள் தமது படைப்பாக்கத்தின் மறு உருவாக்கத் திறனின் தன்மையைப் பொறுத்து – அது சமூகத்தில் உருவாக்கும் மதிப்பைப் பொருத்து முதலாளிய வர்க்கத்தின் தளைகளில் இருந்து விடுபட்டவர்களாக, ஏன் அவ்வர்க்கத்தின் நலன்களையும் அது பெறும் பலன்களையுமே கட்டுப்படுத்துபவர்களாக உருவாகிறார்கள்.
5. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தொடங்கிய ‘தொழில்நுட்பப் புரட்சிகள்’ சில, முதலாளிய உற்பத்தி முறையில் கொண்டு வந்தள்ள சில மாற்றங்கள் பொருளுற்பத்தி முறையிலும் அவற்றின் நுகர்ச்சியிலும் சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. ஒரு பண்டத்தின் அடிப்படை மாதிரியை பிரதியாக்கம் செய்வது (உற்பத்தி) அதற்கு முன்னர்வரை தொழிற்சாலை அமைப்பிற்குள்ளாக மட்டுமே நிகழமுடியும். ஆனால், இப்போது நுகர்வாளர்களும் பிரதியாக்கம் செய்ய முடியும் (டேப் ரிக்கார் காஸெட்டில் ஆரம்பித்து, சிடி, டிவிடி வரையிலான பண்டங்கள், நுகர்வாளர்களே இசை ஆக்கங்களை பிரதியெடுப்பதை சாத்தியப்படுத்தியுள்ளன. Xerox machine தொடங்கி மின்நூல்களின் வடிவங்கள், நூலாக்கங்களையும் நுகர்வாளர்களே பிரதியெடுத்துக் கொள்வதை சாத்தியப்படுத்தியுள்ளன.)
6. பண்டங்களின் பிரதியாக்கத்தில் நிகழ்ந்துள்ள இந்த நகர்வு அல்லது தளர்வு (தொழிற்சாலை அமைப்பிற்குள் இருந்து நுகர்வாளர்களின் இல்லங்களுக்கு அல்லது அடுத்த கட்ட சிறு வணிகத்திற்கு) இன்னும் முதலீட்டிய சந்தைப் பொருளாதார நுகர்வுச் சுழலில் இருந்து விடுபடவில்லை என்ற போதிலும், முதலீட்டியத்தின் கட்டுப்பாட்டு – கண்காணிப்பு அமைவில் மாற்றம் நிகழ்ந்திருப்பதையும் நமக்கு சுட்டிக் காட்டுபவை.
7. பண்டச் சுழற்சியில் நிகழ்ந்துள்ள இந்த பிரதியாக்கச் சுதந்திரமும் இதை உருவாக்கியுள்ள தொழில்நுட்ப நகர்வுகளும் piracy, napster, torrent, fair use principles, shareware, freeware இன்னபிற கருத்தாக்கங்களையும் நடைமுறைகளையும் சாத்தியமாக்கியிருக்கின்றன. ஆனால், இவை படைப்பாளிகளின் copyright என்ற கருத்தாக்கத்திற்கும் பலன்களுக்கும் எதிரானவை அல்ல. மாறாக, சரியான வழிகளில் முதலீட்டியத்திற்கு எதிராக இணைக்கப்படவேண்டியவை.
அதற்கான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் நடைமுறைகளையும் வகுக்க வேண்டியதும் ஒரு முக்கிய பணியாக இருக்க வேண்டும்.
இந்த மண்டைக் குடைச்சலான பணிகள் ஒரு பக்கம் இருக்க, தொழிலாளர்களின் நலன்களுக்கான (சும்மா வாய்ப்பேச்சுக்குத்தான்) கட்சியாக தம்பட்டமடித்துக் கொள்ளும் ஒரு கட்சியின் (CPI) வெளியீட்டு நிறுவனம் பல வருடங்களாக பல படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான உழைப்பைத் திருடி, படைப்பாளிகளுக்குச் சேரவேண்டிய ஒட்டுமொத்த பயனையும் அபகரித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே கி. ரா – வின் விஷயத்தில் அம்பலமானபோதும் அந்த நிறுவனத்துக்கோ அது சார்ந்த கட்சிக்கோ இது சம்பந்தமாக எந்தவிதமான கூச்ச நாச்சமும் இருக்கவில்லை. தமது பகற்கொள்ளையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நேர்மையான மனிதர் என்பதாக வேடமிடும் அதன் தலைவர் நல்லகண்ணுவின் கவனத்திற்கு பலமுறை இந்த விஷயங்கள் கொண்டு செல்லப்பட்ட போதும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இப்போது, மீண்டும் பிரபஞ்சன், எஸ். பொ உள்ளிட்ட பல மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருடியதில் “பலநாள் திருடர்கள்” மாட்டியிருக்கிறார்கள்.
ஆனால், இதன் பரிமாணங்கள் அவ்வளவு சாதாரணமானவை அல்ல.
பாவை பதிப்பகத்தின் நூல்களை NCBH வெளியீடுகளைப் போல விற்பனை நிலையங்களில் சாதாரணமாகப் பார்க்க முடியாது. பாவை பதிப்பகம் NCBH -ன் பினாமியைப் போன்றது. பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்படும் நூல்களை அச்சிட்டு விற்பதே இதன் பிரதான வேலை.
முதலில், ஒரு புத்தகத்தை 1000 அல்லது 2000 பிரதிகள் அச்சிடுவார்கள். இவர்களது துணை அமைப்புகளில் (ஆசிரியர் அமைப்புகள் அல்லது கலை இலக்கியப் பெருமன்றம்) உறுப்பினராக உள்ள அல்லது நெருக்கமாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு அந்த நூலை பல்கலைக் கழகத்தில் பாடமாக ஏற்கச் செய்வார்கள். அதன் பின் 20,000 பிரதிகள் 30,000 பிரதிகள் அச்சிட்டு விற்பார்கள்.
இதில் விற்பனைச் சிரமமும் இல்லை. பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளுக்கு நேராகச் சென்று மொத்த தொகையைப் பெற்றுக் கொண்டு புத்தகத்தை கொடுத்துவிட்டு வருவதுதான் வேலை. ஆக, இது ஒரு திட்டமிட்ட பகல் கொள்ளை. சில கேடுகெட்ட ஆசிரியப் பெருந்தகைகளும் சில பினாமிப் பதிப்பகங்களும் கடந்த பத்து வருடங்களாக இதுபோன்ற கொள்ளை வணிகத்தில் ருசி கண்டிருக்கின்றன என்பதே நிலவரம்.
திருட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் (CCPI – Cheat Communist Party of India) ‘நேர்மையான தலைவர்’ நல்லகண்ணுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இதை நான் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டினேன். ஆனால், மனுசன் அசரவில்லை.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் 90 கல்லூரிகள் இருக்கின்றன. திருடித் தொகுப்பட்ட, எமது படைப்புகளைக் கொண்ட “தெரிவு” தொகுப்பு, இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழ்த் துறை மாணவர்களுக்குமான பாடம் மட்டுமே அல்ல. அனைத்து பட்டப் படிப்பு மாணவர்களும் இத்தொகுப்பை வாங்கியாக வேண்டும். சராசரியாக ஒரு கல்லூரியில் 500 இளங்கலை மாணவர்கள் படிக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட (500 x 90) 45000 பிரதிகள் அச்சிடவேண்டும். தொகுப்பின் விலை 45 ரூ. அதன் தயாரிப்புச் செலவு 10 ரூ க்கு மேல் தாண்டாது. விநியோகம், இடைத்தரகர்களுக்குப் போகும் கமிஷன் (அதுவும் உண்டு) அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஒரு பிரதியில் உங்களுக்கு 25 ரூ இலாபம் இருக்கிறது. அப்படியென்றால் 45,000 பிரதிகளுக்கு எவ்வளவு என்று கேட்கவும் செய்தேன். (இத்தனைக்கும் இது முதல் ஆண்டுக்கான கணக்கு மட்டுமே. தொகுப்பு 3 ஆண்டுகள் பாடத்திட்டத்தில் கட்டாயமாக இருக்கும்.) ஆனால், திருடனுக்கு கணக்கு காட்டினால் என்னதான் நடக்கும். NCBH -ன் நிர்வாக இயக்குனர் துரைராஜின் முகத்தில் ஈயாடவில்லை. எரிச்சல்தான் பட்டார்கள். “இதையெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது” என்றார் துரைஜெயராஜ்.
எனக்காவது அவர்கள் கட்சியின் மீது எந்த நம்பிக்கையும் இருந்தது கிடையாது. பிரபஞ்சன் அக்கட்சியின் கலை இலக்கிய அமைப்பினரோடு நீண்ட காலம் இணைந்து பல காரியங்கள் செய்தவர். அவருக்குத்தான் ஜீரணித்துக் கொள்ள இயலாத அதிர்ச்சி.
நானும் பிரபஞ்சனும் இரண்டு மணிநேரம் பேசியும் அவர்களின் நிலை ஒன்றே ஒன்றாகத் தான் இருந்தது. “நாங்கள் 22,000 பிரதிகள்தான் அச்சிட்டிருக்கிறோம். பத்து சதவீதம் ராயல்டியைக் கொடுத்து விடுகிறோம்.”
நான் மீண்டும் தலையிட்டு, “அதுசரி. பத்து சதவீதம் ராயல்டி என்பதை எங்களிடம் ஒரு சிறு அனுமதி பெற்று வெளியிட்டிருந்தால் ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், இதற்குப் பின் இத்தனை தகிடுதத்தங்கள் இருக்கின்றன. இது அப்பட்டமான பகற்கொள்ளை. அதற்கான அபராதமாக நீங்கள் ஒரு தொகையை எங்கள் ஐவருக்கும் தரவேண்டும்,” என்றேன். அப்போதுதான் ‘நேர்மையான தலைவர்’ சீறிப்பாய்ந்து, “அதெல்லாம் முடியாது. அப்படித் தந்தால், நாங்கள் திருடியதை ஒப்புக் கொண்டோம் என்று ஆகிவிடும்,” என்றார்.
“நாங்கள் தவறு செய்திருக்கிறோம் என்பது உண்மை. ஆனால், இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது, ” என்றார் துரைராஜ்.
தொடர்ந்து பேசுவதில் ஒரு பயனும் எங்களுக்கு இருக்கவில்லை.
“அப்படியானால், இரண்டாவது பதிப்பை வெளிடக்கூடாது. இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நான் வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும்,” என்றேன்.
“தாராளமாகச் செய்து கொள்ளுங்கள்,” என்றார் துரைராஜ்.
ஒருவாரம் கழித்து, என் வீட்டிற்கு ராயல்டி தொகையுள்ள காசோலையுடன் எனது கையொப்பம் கேட்டு ஒரு கடிதத்தையும் கொண்டு வந்தார்கள் அந்நிறுவனத்தின் இரு ஊழியர்கள். கடிதம், பேச்சுவார்த்தையின்படி நான் பணத்தைப் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டதைப் போல இருந்தது. எனக்கு சீற்றம்தான் வந்தது.
“இதில் நான் கையொப்பமிட முடியாது. இதில் எந்த விபரமும் இல்லை. முதல் பதிப்புக்கு என் அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதையும் இரண்டாம் பதிப்பிற்கு அனுமதி இல்லை என்பதையும் குறிப்பிட்டு எழுதி வாருங்கள், கையொப்பமிடுகிறேன். காசோலையும் பெற்றுக் கொள்கிறேன்,” என்று காசோலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன். சென்றவர்கள் பதிவுத் தபாலில் காசோலையை மட்டும் அனுப்பி வைத்தார்கள். எனக்கு நியாயமாகச் சேர வேண்டியதை பெற்றுக் கொண்டேன். (கென், உண்மைத் தமிழன் இதுவே நிகழ்ந்தது.)
இப்போது, ஒரு வருடம் கழித்து, கடந்த வாரத்தில் ஒருநாள் காலை, அதே பகற்கொள்ளை நிறுவனத்தின் ஊழியர்கள் எனது வீடுதேடி வந்தார்கள். இரண்டாம் பதிப்பிற்கு அனுமதி கேட்டு. ஒரு வருடத்திற்கு முன்னரே எனது அனுமதி கிடையாது என்று தெளிபடுத்திவிட்டேனே என்று தெரிவித்தேன்.
அவர்களுக்குப் பேச எதுவும் இருக்கவில்லை. அமைதியாக திரும்பிச் சென்றவர்கள், ஒரு மணிநேரத்தில் தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்டர்கள். “எங்கள் நிறுவனத்தின் தலைவர் துரைராஜ் உங்களை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறார், வரலாமா?” என்று கேட்டார்கள். நானும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
அடுத்த இரண்டு மணிநேரத்தில், துரைராஜ் எனது வீட்டில்.
வந்தவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா!!!
“உங்களுக்குப் பூர்வீகம் சென்னைதானோ,” என்று குசல விசாரிப்புகளில் தொடங்கி,
“ஏன் தோழர் நீங்கள் மா – லெ இயக்கத்தில் இருந்திருக்கிறீர்களா? நான் கூட ஆரம்பத்தில் மா – லெ இயக்கத்தில்தான் இருந்தேன்.”
“ஏன் தோழர் நீங்கள் எங்களுக்கு ஒரு புத்தகம் எழுதித் தரக்கூடாது?”
(நீங்கள்தான் என்னைக் கேட்காமலேயே புத்தகம் போட்டிருக்கிறீர்களே. அப்படியே தாராளமாக செய்துகொள்ளாலாமே! என்று நான் கேட்கவில்லை).
“லத்தீன் அமெரிக்க அரசியல் சூழல் பற்றி எழுதித் தந்தால் ரொம்ப உதவியாக இருக்கும் தோழர்.”
“அது சம்பந்தமாக எதுவும் படிக்கலைங்க. ஈழ நிகழ்வுகளைத் தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்பாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். ” இது நான்.
“ஓ! அப்படீங்களா? சரி தோழர், பிராபகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
இப்போது எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. சினத்தை காட்டிக் கொள்ளாமல், எவ்வளவு நேரம்தான் இப்படி பேசிக் கொண்டிக்கிறார்கள் பார்க்கலாம் என்று பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு அரை மணி நேரத்திற்கு இப்படி கேள்வியும் பதிலுமாக நீண்டு கொண்டிருந்த பேச்சு அதிர்ஷ்டவசமாக ஒரு நண்பரின் வருகையால் நின்றது. நண்பரை எனது அறையில் அமர்த்திவிட்டு அவரையும் கூட வந்திருந்த மற்றொருவரையும் அழைத்துக் கொண்டு முகப்பு அறைக்குச் சென்றேன்.
இப்போது துரைராஜ், “சரிங்க தோழர். நான் வந்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். இரண்டாவது பதிப்பிற்கு உங்கள் அனுமதி வேண்டும். மாணவர்களின் நலன் கருதி நீங்கள் இதற்கு சம்மதிக்க வேண்டும்.”
“உங்களது உண்மையான அக்கறை மாணவர்களின் மீதல்ல. எனது அனுமதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பது மட்டும்தான். நீங்கள் செய்திருப்பது ஒரு திருட்டு என்பதையும், இரண்டாம் பதிப்புக்கு அனுமதி நிச்சயம் தரமுடியாது என்றும் ஒரு வருடத்திற்கு முன்பே தெரிவித்து விட்டேன். எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை,” என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.
“பாத்துங்க தோழர், பரிசீலனை செய்யுங்க தோழர், பரிசீலனை செய்யுங்க தோழர்,” என்று எழுந்து கொண்டே அவர் உதிர்த்த வார்த்தைகளை, அரைகுறையாக வாங்கிக் கொண்டே காத்திருந்த நண்பருக்காக எனது அறைக்குத் திரும்பிவிட்டேன்.
எந்த விதமான யோக்கியதையும் அற்ற உங்களைப் போன்ற பகற்கொள்ளைக்காரரோடு இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததே என் தவறு என்று மனதில் தோன்றிய சீற்றத்தை வெளிப்படுத்தவில்லை.
நட்பான வழுக்குரைஞர் ஒருவரை நாளை சந்திக்கவும் இருக்கிறேன்.