ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 3

ஏதென்ஸின் குடவோலை முறை – 3

 

சோழர் காலத்து குடவோலை முறையில் சொத்துடைமை வரையறையும், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற முடியும் என்ற வரையறையும் இருந்ததைப் போலவே ஏதென்ஸில் நிலவிய மக்களாட்சி முறையிலும், பெண்களும் அடிமைகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அத்தகைய எதிர்மறையான அம்சத்தைக் கவனத்தில் குறித்துக்கொண்டு அதன் சாதகமான அம்சங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியம்.

 

ஏதென்ஸ் ஜனநாயகத்தின் ஆதாரமாக இரண்டு அடிப்படைக் கொள்கைகள் இருந்தன. முதலாவது, தமது அரசியல் உரிமைகளைச் செயல்படுத்த அனைத்து குடிமக்களுக்குமான சம உரிமை (கிரேக்க மொழியில் isonomia). இரண்டாவது, மக்கள் சபையில் பேசுவதற்கும், தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமை (isogoria).

 

ஏதென்ஸின் மக்களாட்சியின் தனித்துவம் மிக்க அமைப்பாக இருந்தது மக்கள் சபை. மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கூடிய இந்த மக்கள் சபையில் 20 வயதிற்கு மேற்பட்ட ஏதென்ஸின் குடிமக்கள் அனைவருக்கும் தம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்கும் உரிமை இருந்தது. அவ்வாறு பேச முன்வருவோரை ஏதென்ஸின் மக்கள் “விருப்பத்துடன் முன்வருவோர்” என்று குறிப்பிட்டனர்.  என்றாலும், மக்கள் சபையில் எல்லாக் குடிமக்களும் பேச முன்வந்துவிடவில்லை.ஏதென்ஸின் மக்கள் தொகை அக்காலத்தில் 30,000 -லிருந்து அதிகபட்சமாக 60,000 வரை இருந்தது. இவர்களில் ஏறத்தாழ 6,000 பேர் மட்டுமே மக்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டனர். இந்த 6000 பேரிலும் அரசியலிலும் நிர்வாகத்திலும் ஆட்சி புரிவதிலும் விருப்பம் இருந்த சிலர் மட்டுமே சபையின் முன் பேசவும் ஆலோசனைகளை முன்மொழியவும் செய்த “விருப்பத்துடன் முன்வருவோராக” இருந்தனர். பெரும்பாலான மக்கள், வாதப் பிரதிவாதங்களைக் கவனிப்பவர்களாகவும், அவற்றின் முடிவில் தமது ஒப்புதலையோ, மறுப்பையோ வாக்குகள் மூலம் தெரிவிப்பவர்களாகவுமே இருந்தனர்.

 

ஏதென்ஸின் மக்களாட்சி முறையில் குடவோலை முறை போன்று “குலுக்கலில்” தேர்ந்தெடுக்கும் முறையோடு கூட, வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையும் நிலவியது. ஆனால், வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒரு சில பொறுப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.  குறிப்பாக படைத் தளபதிகள், இராணுவ நிதிக்கான பொருளாளர், நிதிநிலை கணக்குத் தணிக்கையாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கு மட்டுமே வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் பெரும்பாலும் ஏதன்ஸ் சமூகத்தின் மேட்டுக் குடியினராகவே இருந்தனர்.

 

இவை தவிர்த்து, மேலே குறித்துள்ளது போல, மக்கள் சபை போன்ற அமைப்புகளில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களின் முடிவில் தமது ஒப்புதலையோ மறுப்பையோ தெரிவிக்க கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறை நிலவியது. பெரும்பாலும், இந்த வாக்களிப்பில் உயர்த்தப்பட்ட கைகள் எண்ணப்படும் வழக்கம்கூட இருந்ததில்லை. கூடியிருந்த 6000 பேர்களில் எத்தனை பேர் கைகளை உயர்த்தினார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது அதிக நேரம் எடுக்கக்கூடியது என்பதால் மட்டுமில்லை. ஏதென்ஸ் மக்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை சமூகத்தின் மேட்டுக்குடியினருக்கே உரிய முறையாகவும், அவர்களுக்கு சாதகமான முறையாகவுமே கண்டனர். ஆகையால், பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் நபர்களை தேர்ந்தெடுக்கும் முறையாக அதை பின்பற்றுவதை ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே வரையறுத்து வைத்தனர்.

 

மக்கள் சபை தவிர்த்து, ஏதென்ஸின் மக்களாட்சியில் மூன்று முக்கிய அரசியல் அமைப்புகள் இருந்தன. முதலாவது, ஐநூறுவர் மன்றம். மக்கள் சபையில் கூடிய 6000 பேரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேர் கொண்ட மன்றமே ஐநூறுவர் மன்றம் என்று அழைப்பட்டது.

 

இந்த 500 நபர்களில் ஏதென்ஸ் நகரத்தின் 139 இனக்குழுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழக்கப்பட்டிருந்தது. குலுக்கல் முறையிலேயே இந்த 500 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஒருவர் தம் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே இம்மன்றத்திற்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் வரையறுக்கப்பட்டிருந்தது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இம்மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

 

வெளியுறவுத் துறை விவகாரங்கள், இராணுவத்தின் நிர்வாகம், நிதி நிர்வாகம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவை இந்த மன்றத்தின் பொறுப்பில் இருந்தன. இவை தவிர, மக்கள் சபையின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பொறுப்பும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பும் ஐநூறுவர் மன்றத்தின் முக்கிய பணிகளாக இருந்தன. நடைமுறையில் பாதியளவு தீர்மானங்களே ஐநூறுவர் மன்றத்தால் முன்மொழியப்பட்டன. பாதியளவு தீர்மானங்கள் மக்கள் சபையில் கூடியோரால் முன்மொழியப்பட்டன.

 

இரண்டாவது முக்கிய அரசியல் அமைப்பாகத் திகழ்ந்தது, மக்கள் நீதிமன்றங்கள். 30 வயதிற்கு மேற்பட்ட, அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட, தாமாக செயல்பட முன்வந்தவர்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 6000 பேர் இம்மன்றத்திற்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலும் வயது முதிர்ந்த, அனுபவம் மிக்கவர்களும் ஏழைகளுமே இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள், மக்கள் சபை மற்றும் ஐநூறுவர் மன்றத்தின் தீர்ப்பாணைகளுக்கு கட்டுப்பட்டும், சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்காத விஷயங்களில் நியாய உணர்வுடனும், வழக்காடுபவர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் வாய்ப்பளித்தும் நடப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றங்கள் கூடும் நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கூடிவிடுவார்கள். அவர்கள் மத்தியிலிருந்து வழக்குகளின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப, 501, 1001, 1501 நபர்கள் அடங்கிய நீதிபதிகளின் குழுக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்குகளின் விசாரணை நடைபெறும். இவ்வழக்குகளின் தீர்ப்புகளில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கருத்தொருமிப்பிற்கு வருவது வழக்கமாக இருந்தது.

 

மக்கள் நீதிமன்றங்கள், தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மன்றங்களாகச் செயல்படவில்லை என்ற விஷயம் இதில் முக்கியமானது. இவை விசாரித்த வழக்குகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே பெரும்பாலும் இருந்தன. குறிப்பாக, மக்கள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தீர்ப்பாணைகள், மற்றும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் மன்றங்களாக இவை செயல்பட்டன. இதன் மூலம், மக்கள் சபையில் ஒருவேளை தவறான சட்டம் இயற்றப்பட்டிருந்தால், அதைச் சரி செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பாக இந்நீதிமன்றங்கள் செயல்பட்டன எனலாம்.

 

படைத் தளபதிகளின் குற்றங்களையும் இம்மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்தன. அத்தகைய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. குடியுரிமையைப் பறிப்பது, நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற தண்டனைகள் குற்றம் இழைத்த படைத்தளபதிகளுக்கு வழங்கப்பட்டன. அவ்வகையில், ஏதென்ஸ் நகரின் மேட்டுக் குடியினரின் மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பணியையும் இந்த மக்கள் நீதிமன்றங்கள் செய்தன.

 

மூன்றாவதாக, கி.மு. நான்காம் நூற்றாண்டில், ஒரு குறுகிய காலத்திற்கு, மேட்டுக்குடியினரால் வீழ்த்தப்பட்ட மக்களாட்சி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டபோது, சட்டம் இயற்றுவதற்காகவென்றே தனியாக ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. மக்கள் சபைக்கு இருந்த சட்டம் இயற்றும் அதிகாரம் நீக்கப்பட்டு, தீர்ப்பாணைகள் மட்டுமே வழங்குமாறு வரையறுக்கப்பட்டது.  புதிதாக அமைக்கப்பட்ட சட்டம் இயற்றும் மன்றத்திற்கு, மக்கள் நீதிமன்றங்களைப் போலவே குலுக்கல் முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, சட்டங்களைத் திருத்துவது, புதிய சட்டங்களை இயற்றுவது ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட்டன. மக்களாட்சிக்கு விரோதமான சட்டங்கள் இயற்றப்படாமல் பாதுகாப்பதற்கான அமைப்பாக இந்தச் சட்டம் இயற்றும் மன்றம் செயல்பட்டது.

 

இம்மூன்று மன்றங்களின் முடிவுகளையும், மக்கள் சபையின் தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு என்றே தனியாக அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 600 பேர் குலுக்கல் முறையிலும், தேர்தல் முறையில் 100 மேட்டுக் குடியினரைச் சேர்ந்தவர்களும் ஆண்டிற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஒரு பதவிக்கு ஒரு முறைக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்ற வரையறுக்கப்பட்டது. மேலும், ஒரு பதவிக்காலத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைத்த பிறகே அடுத்த பதவிக்கு போட்டியிட முடியும். அதாவது, ஒருவர் ஒரு வருடம் பதவியில் இருந்தால், அடுத்த வருடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பித்திலேயே கழிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இந்த அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுவதாக குற்றச்சாட்டு எழுந்தால், அவற்றை மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்து கடும் நடவடிக்கை எடுத்தன.

 

இவ்வாறாக, ஏதென்ஸ் நகரத்தின் ஆட்சி அதிகார, நிர்வாக அமைப்புகள் அனைத்தும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையோடு, சுழற்சி முறையும் இணைக்கப்பட்டிருந்தது. நிர்வாக சீர்கேடுகள் நிகழாத வண்ணம், ஒன்றை ஒன்று கண்காணித்து கட்டுப்படுத்தும் மூன்றுவிதமான அமைப்புகள் சீராக செயல்படுத்தப்பட்டன. குலுக்கல் முறையோடு, தேர்தல் முறையும் நிலவியது. ஆனால், அது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பதவிகளுக்கு மேட்டுக்குடியினரை தேர்வு செய்வதற்காக மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. இதைத் தவிர்த்து, மக்கள் சபையிலும், மக்கள் நீதிமன்றங்களிலும் கருத்தொருமிப்பை எட்டுவதற்கான முறையாக மட்டுமே வெளிப்படையான வாக்கெடுப்பு முறையும், இரகசிய வாக்கெடுப்பு முறையும் பயன்படுத்தப்பட்டன.

 

இறுதியாக, ஏதென்ஸ் நகரின் குடிமக்கள், அரசியல் விவகாரங்களில் தனித் திறமையால் சிறப்பு பெற்றவர்களை எப்போது நம்பத் தயாராக இருக்கவில்லை. அத்தகையோர் அதிகாரத்தின் படிகளில் காலடி எடுத்துவைத்தால், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தம் வசப்படுத்திக்கொள்ளவே விழைவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகையால், அனைத்தையும் அறிந்திராத, எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள கற்றுக்குட்டிகளின் (amateurs) கைகளிலேயே மக்களாட்சி பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினர். அத்தகைய கற்றுக்குட்டிகள் அசட்டுத்தனமான காரியங்களைச் செய்து ஆட்சியமைப்பை சீர்குலைத்துவிடாமலிருக்கும் வகையில் நிறுவன பொறியமைப்புகளை உருவாக்கிக்கொண்ட காரணத்தினாலேயே ஏதென்ஸின் மக்களாட்சி நிலைத்து நின்றது.

 

(தொடரும்… )

நன்றி: விகடன்

%d bloggers like this: