அமெரிக்க தீர்மானம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

தமிழ் நாடு எங்கும் மாணவர் போராட்டங்களையும் அனைத்து அரசியல் வட்டாரங்களிலும் பலத்த சர்ச்சைகளையும் உருவாக்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கமிஷனின் 22 வது அமர்வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 13 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, 8 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்க்க, 26 நாடுகளின் ஆதரவு ஓட்டுக்களைப் பெற்று ஒருவழியாக நிறைவேறி முடிந்தது.

அரசு வட்டாரங்களில், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானமாக சொல்லப்பட்டாலும், இதன் அம்சங்களைக் கூர்ந்து கவனித்த அரசியல் பார்வையாளர்கள் பலதரப்பினரும் அமெரிக்காவின் இத்தீர்மானம், உண்மையில் இலங்கை அரசு சீனாவின் பக்கம் மேலும் சாய்வதைத் தடுத்து,  தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு மென்மையான மிரட்டல் முயற்சி என்பதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மற்றொரு புறம், இத்தீர்மானம் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விகளும் பலமாக எழுந்து கொண்டிருந்தன. இந்திய அரசு வட்டாரங்களில் இருந்து கிடைத்த பதில்கள் அனைத்திலும் ஒரு சில அம்சங்கள் மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டன. ”தமிழ் மக்களின் ஆதங்கங்களைப் புரிந்து கொள்கிறோம். என்றாலும், இலங்கை நமது நட்பு நாடு. இறையாண்மையுள்ள நமது அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை” என்பவையே அவை.

இருவாரங்களுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருந்த குழப்பம் மிகுந்த சூழலில், மார்ச் 19 அன்று, அமெரிக்க தீர்மானத்தின் திருத்தப்பட்ட வரைவு வெளியானது. அதில், தீர்மானத்தின் பல முக்கிய அம்சங்கள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருந்தன. நீர்க்கச் செய்ததில் இந்தியாவின் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

ஆனால், தீர்மானம் நிறைவேறிய பிறகு, இலங்கை அரசின் அமைச்சரவைப் பிரதிநிதி கெஹெலியா ரெம்புக்வேலா, (Keheliya Rembukwella, Cabinet spokesman, Sri Lanka) தீர்மானத்தில் ஒரு முக்கியமான அழுத்தம் நீக்கப்பட்டதற்கு தமது அரசு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று அறிவித்தார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அரசு துணைச் செயலாளர் ராபர்ட் ப்ளேக்கும், இத்தீர்மானத்தின் அம்சங்களை வடிவமைப்பதில் அமெரிக்காவுடன் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒத்துழைத்தது என்று கூறியுள்ளார். (http://www.lankanewsweb.com/english/index.php?option=com_content&view=article&id=3714%3Aus-warns-of-international-mechanism-if-sl-fails-impartial-probe&catid=1%3Ageneral&Itemid=29)

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் முதல் வரைவு வலியுறுத்திய அம்சங்கள் என்ன? எவ்வாறு அவை நீர்த்துப் போகச் செய்யப்பட்டன? இலங்கை அரசு, இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்கு இந்தியா செய்த முக்கிய உதவிதான் என்ன?

அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் வரைவு பிப்ரவரி 18 ஆம் தேதி ஐநா மனித உரிமைக் கமிஷனில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளிடையே சுற்றுக்கு விடப்பட்டது. அதில் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு இரண்டாவது வரைவு மார்ச் 7 ஆம் தேதி மீண்டும் சுற்றுக்கு விடப்பட்டது.

மூன்றாவது திருத்தப்பட்ட வரைவு, மார்ச் 12 ஆம் தேதி சுற்றுக்கு வந்தது. அதில்தான் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் மாற்றங்கள் தலைகாட்டியிருந்தன. மார்ச் 19 ஆம் தேதி நான்காவது திருத்தப்பட்ட வரைவு சுற்றுக்கு வந்தது. அதன் மீதுதான் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த வரைவே இறுதித் தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஐநா மனித உரிமைக் கமிஷனின் 22 ஆவது அமர்வில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் முதல் வரைவில் இருந்து இறுதி வரைவு வரையில் அப்படி என்ன என்ன அம்சங்கள் படிப்படியாக மாற்றப்பட்டன அல்லது நீர்த்துப் போகச் செய்யப்பட்டன?

பிப்ரவரி 18 ஆம் தேதி சுற்றுக்குவிடப்பட்ட முதல் வரைவு வலியுறுத்திய முக்கிய அம்சங்கள் இவை:

 1. தீர்மானத்தின் முகவுரைப் பகுதியின் முதல் வரி “ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் படியும் (இன்ன பிற) பொருத்தமான அம்சங்களின் படியும் வழிநடத்தப்பட்டு” என்று துவங்குகிறது.
 2. மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் தனது மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.
 3. எல் எல் ஆர் சி அறிக்கையின் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை நிறைவேற்ற அமைக்கப்பட்ட தேசிய செயல் திட்டம், அறிக்கையின் அனைத்து அம்சங்களையும் திருப்திகரமான முறையில் நிறைவேற்றும் வகையில் இல்லை என்பதை கவலையோடு குறித்துக் கொள்கிறோம்.
 4. சர்வதேச சட்டத் தொகுப்பின் விதிமுறைகளை இலங்கை அரசு மீறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை எல் எல் ஆர் சி அறிக்கை மற்றும் தேசிய செயல் திட்டம் இரண்டுமே திருப்திகரமான முறையில் எதிர்கொள்ளவில்லை என்பதையும் கவலையோடு குறித்துக் கொள்கிறோம்.
 5. அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, தான் அளித்திருந்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறித்து கவலை கொள்கிறோம்
 6. எல் எல் ஆர் சி அறிக்கையின் ஆக்கப்பூர்வமானப் பரிந்துரைகளை (இன்னபிற அம்சங்களையும்) விரைவாகவும் செம்மையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
 7.  ஐநா வின் சிறப்பு செயல்முறை உரிமைப் பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தடைகளற்ற அனுமதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
 8. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதற்கு உதவியாக, ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம், இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டு, ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க ஊக்குவிக்கிறோம்.
 9. சர்வதேச சட்டங்களை மீறியுள்ளதாக இலங்கை அரசாங்கம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை உள்ளிட்டு, இப்பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மனித உரிமை ஆணையர் அலுவலகம் இம்மன்றத்தின் 25 ஆவது அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவற்றில், இலங்கை அரசாங்கத்தின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அம்சம் நேரடியாக வலியுறுத்தப்படவில்லை. ஆனால், ஐநாவின் ”சிறப்பு செயல்முறை உரிமைப் பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தடைகளற்ற அனுமதியை வழங்க வேண்டும்” என்ற வலியுறுத்தல், மிக மறைமுகமாக, சுற்றி வளைத்து அதற்கான வாய்ப்பைக் கேட்பதாக இருக்கிறது. மேலும், தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டிய ஏழு சிறப்பு செயல்முறை உரிமை ஆணைத் துறைகள் பெயர் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்து, இலங்கை அரசாங்கத்தின் எல் எல் ஆர் சி அறிக்கை சமர்ப்பித்த ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் அமைத்த தேசிய செயல் திட்டம் குறைபாடுள்ளதாக இருந்த போதிலும், அதைச் செம்மையாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கு மேலான கோரிக்கையும் இல்லை.

மார்ச் 7 ஆம் தேதியன்று, இவ்வறிக்கையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் சுற்றுக்கு விடப்பட்டது.

இணைக்கப்பட்ட அம்சங்களில் முக்கியமானவை”

 1. தீவிரவாதத்திற்கு எதிராக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டத் தொகுப்பின் விதிமுறைகளின் கடப்பாடுகளுக்கு – குறிப்பாக, சர்வதேச மனித உரிமைகள், அகதிகள் மற்றும் மனித நேயச் சட்டங்களுக்கு உட்பட்டவையாகவே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
 2. மேலும், எல் எல் ஆர் சி மற்றும் தேசிய செயல் திட்டம் இரண்டுமே இலங்கையில் சர்வதேசச் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் திருப்திகரமாக எதிர்கொள்ளவில்லை என்பது குறித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டு அம்சங்களும் முகவுரையில் சேர்க்கப்படுகின்றன.

 

 1. ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையை வரவேற்று, அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் மனித நேய சட்டங்களை மீறும் வகையில் இலங்கை நடந்து கொண்டுள்ளது என்பதின் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் குறித்துக் கொள்கிறோம்.
 2. மனித உரிமை ஆணை அலுவலகத்தின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் செயல்முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
 3. மன்றத்தின் 24 ஆவது அமர்வில் இது குறித்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 25 ஆவது அமர்வில் முழுமையான அறிக்கையும் அதன் மீதான பரஸ்பர உரையாடலும் (interactive dialogue) நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆணை அலுவலகத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இரண்டாவது அறிக்கையிலேயே, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மனித உரிமை ஆணை அலுவலகத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டு சுட்டிக் காட்டப்படுகிறது. அதை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நேரடியாகவே வலியுறுத்தப்படுகிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதன் பெயரால், சர்வதேசச் சட்டங்களின் வரைமுறைகளை எந்த அரசும் மீறிவிட முடியாது என்பதும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.

மேலும், முதல் வரைவில் பட்டியலிடப்பட்டு குறிப்பிடப்பட்டிருந்த  செயல்முறை உரிமை ஆணைத் துறைகளில் ”சித்திரவதை”க்கான துறை நீக்கப்பட்டு, சிறுபான்மையினர் பிரச்சினைகள் மற்றும் பெண்கள் மீதான

பாகுபாடுகள் ஆகிய துறைகள் சேர்க்கப்பட்டு எண்ணிக்கை எட்டாக உயர்த்தப்படுகிறது.

மொத்தத்தில், இந்த அறிக்கையை மேற்கு நாடுகளின் சதி என்று தொடர்ந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்த இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வர  அழுத்தம் அதிகரிக்கப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது.

அடுத்து, மூன்றாவது வரைவு அறிக்கை, சுற்றுக்கு விடப்பட்டு, அதில் செய்யப்பட்ட மாற்றங்களோடு, அடித்தல் திருத்தல்களோடு மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அதில் செய்யப்படும் முக்கிய திருத்தங்கள், மாற்றங்கள் பின்வருமாறு:

 1. முகவுரையின் முதல் அம்சமாக இருந்த ”ஐநா சபையின் சாசனத்தின் படி வழிநடத்தப்பட்டு” என்ற பகுதி அடிக்கப்பட்டு, ”ஐநா சபையின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளையும் நோக்கங்களையும் மீண்டும் வலியுறுத்தி” என்பதாக மாற்றப்படுகிறது.

அறிக்கை நீர்த்துப் போகச் செய்யப்பட்டது குறித்து எழுதிய பலரும் கவனத்தில் எடுக்கத் தவறிய அல்லது சுட்டிக் காட்டத் தவறிய மிக முக்கியப் புள்ளி இது. அந்த அளவிற்கு இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

ஐநா சபையின் சாசனம் 111 பிரிவுகளை உள்ளடக்கிய 19 அத்தியாயங்களைக் கொண்டது. மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, சர்வதேசச் சட்டங்களின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மிகப் பொதுவான வழிகாட்டு நெறிகளாக அவை மீண்டும் மீண்டும் அர்த்தப்படுத்தப்பட்டு வருகின்றன. உறுப்பு நாடுகள் அனைத்தும் அவற்றுக் கட்டுப்பட்டவை.

மிக முக்கியமாக, பிரிவு 99 ஐநா சபையின் பொதுச் செயலாளருக்கு அரசியல் ரீதியான செயல்பாடுகள் இருப்பதை அங்கீகரிக்கிறது. தான் முக்கியமாகக் கருதும் எந்த ஒரு பிரச்சினை குறித்தும் பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தும் அதிகாரத்தையும் அது அவருக்கு வழங்குகிறது. மிக அவசரமான நடவடிக்கை தேவை எனக் கருதும் பட்சத்தில் பொதுச் செயலாளரே நேரடியான செயலில் இறங்குவதற்கான உரிமையை வழங்குவதாகவும் சில சந்தர்ப்பங்களில் அப்பிரிவு அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய சம்பவங்கள் ஐநாவின் வரலாற்றில் நடந்தும் இருக்கின்றன.

”ஐநா சாசனத்தின் வழிகாட்டுதலின் படி” என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்ட அறிக்கை, இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால், அதை வழிக்குக் கொண்டுவர, சாசனத்தின் எந்த ஒரு அம்சத்தையும் காட்டி நடவடிக்கை எடுக்க வழி வகுப்பதாக அமைந்துவிடும். முக்கியமாக, பிரிவு 99 ஐக் காட்டி, பொதுச் செயலாளரின் நேரடி நடவடிக்கையை எதிர்காலத்தில் வலியுறுத்த வழிவகுத்துவிடும்.

அதற்கு இடம் கொடுத்துவிடாமல் இருக்கவே, அச்சொற்றொடர் நீக்கப்பட்டு, அத்தகைய நிர்ப்பந்தத்தை – அழுத்தத்தைத் தர வாய்ப்பு இல்லாத ”ஐநா சபையின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளையும் நோக்கங்களையும் மீண்டும் வலியுறுத்தி” என்ற பொதுவான வாசகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக, வலுவான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதற்கு அணை போடும் வகையில், அறிக்கையில் செய்யப்பட்ட மாற்றங்களிலேயே மிக பாரதூரமான மாற்றம் இது.

 1. இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை வரவேற்றும் அங்கீகரித்தும் புதிதாக ஒரு பகுதி சேர்க்கப்படுகிறது. முதல் இரண்டு வரைவறிக்கைகளில் இந்தச் சம்பிரதாயமான பாராட்டுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 2. எல் எல் ஆர் சி மற்றும் தேசிய செயல் திட்டம் இரண்டும் திருப்திகரமாக இல்லை என்ற குறிப்பில் “கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்பது நீக்கப்படுகிறது.
 3. ”அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, தான் அளித்திருந்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறித்து கவலை கொள்கிறோம்” என்பதில் ”தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறித்த கவலை கொள்கிறோம்” என்பது நீக்கப்பட்டு, “அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, இலங்கை அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஊக்குவிக்கிறோம்” என்று மாற்றப்படுகிறது.

 

அதாவது, இலங்கை அரசாங்கம் தனது கடமையில் தோல்வி அடைந்திருக்கிறது என்பதே மறைக்கப்படுகிறது.

 1. அடுத்த முக்கியமான திருத்தம், எல் எல் ஆர் சி அறிக்கையின் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளையும் இன்னபிற கடப்பாடுகளையும் “விரைவாகவும் செழுமையாகவும் நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்பதில் “விரைவாக என்ற வார்த்தை மிகக் கவனமாக நீக்கப்படுகிறது.

அதாவது எந்த வரைமுறையும் இல்லாத, அழுத்தம் தராத, கால அவகாசத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

 1. மனித உரிமை ஆணை அலுவலகம், தனது 24 ஆவது அமர்வில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக “வாழ் மொழி அறிக்கை” சமர்க்க வேண்டும் என்றும் 25 ஆவது அமர்வில் முழுமையான அறிக்கை சமர்ப்பித்து பரஸ்பர உரையாடல்  (interactive dialogue) நடத்தப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, பொதுவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் மாற்றம் செய்யப்படுகிறது.

இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பது என்பது இலங்கை அரசாங்கம் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாகவும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் தருவதாக இருக்கும். பரஸ்பர உரையாடல் உறுப்பு நாடுகள் தீவிரமான பரிசீலனை செய்ய வழிவகுக்கும். இரண்டு நிர்ப்பந்தங்களுமே மிகக் கவனமாக நீக்கப்படுகின்றன.

மேலும் இரண்டு அம்சங்களில் இலங்கை அரசாங்கத்தை “வற்புறுத்துகிறோம்” என்பது நீக்கப்பட்டு, “ஊக்குவிக்கிறோம்” என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவரை திருத்திக் கொள்ள வற்புறுத்தலாம். குற்றமற்றவரை எந்த வகையிலும் வற்புறுத்த முடியாது. ஊக்குவிக்கவே முடியும். அதாவது, இந்தச் சிறிய வார்த்தை மாற்றம், இலங்கை அரசாங்கம் குற்றம் புரிந்திருக்கிறது என்று சொல்வதற்குக்குட இடம் கொடுக்காமல், அதைக் குற்றமற்ற அப்பாவியை உற்சாகப்படுத்துவதைப் போல “ஊக்குவிக்க” கோருகிறது.

மார்ச் 19 ஆம் தேதி, மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்ட நான்காவது வரைவறிக்கை வெளியாகிறது. மிச்சம் இருந்த ஒன்றிரண்டு கூரான பற்களும் பிடுங்கப்பட்ட பொக்கைக் கிழடாக வந்து விழுகிறது.

பிடுங்கப்பட்ட கடைசி கூர் பற்கள்:

 1. ஐநா மனித உரிமை ஆணை அலுவலகத்தின் அறிக்கை கேட்டுக் கொள்ளும் சர்வதேச விசாரணைக்கான வலியுறுத்தல் நீக்கப்படுகிறது.
 2. பெயர் குறித்து பட்டியலிடப்பட்டிருந்த செயல்முறை உரிமை ஆணைத் துறைகள் நீக்கப்பட்டு, பொதுவாக செயல்முறை உரிமை ஆணையர்களுக்கு அனுமதி வழங்கப்பட இலங்கை அரசாங்கம் “ஊக்குவிக்கப்படுகிறது”. அவர்களுக்குத் ”தடைகளற்ற அனுமதி”யும் நீக்கப்படுகிறது.

அதாவது, இந்தச் சிறப்பு ஆணையர்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களுக்கு மட்டுமே சென்று பார்வையிட முடியும்.

இவை அனைத்தும் போதாதென்று, செப்டம்பர் 2013 –இல் வட மாவட்டத்தின் மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்கும் பத்தி ஒன்றும் அறிக்கையின் முகவுரையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

நம்புங்கள்.

இலங்கை அரசாங்கம் எந்தக் குற்றமும் புரியவில்லை. எந்த விசாரணையும் தேவையில்லை.

அதைச் சர்வதேச நாடுகள் “வற்புறுத்துவது” அநியாயம். ஒரு அப்பாவியை ஊக்குவிப்பதே நாகரீகம் மிகுந்த ஜனநாயக நாடுகளின் பெருந்தன்மை.

நன்றி: தமிழ் ஆழி, ஏப்ரல் 2013.

அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »
%d bloggers like this: