விர்ஜினியாவை அவள் சேகரித்து வைத்திருந்த கதைகளுக்காக நான் விரும்பினேன். பால் ஃப்ராஸ்ட் அவற்றுக்கு முழுமுதல் உரிமையும் கொண்டாடியதால் அவனை வெறுக்கவும் செய்தேன். அவளிடமிருந்த அந்தப் புதையலை அவன் விற்றுத் தீர்த்துவிடுவான் என்று பயந்தேன். விர்ஜினியா அப்படி ஒன்றும் பிரமாதமான அழகியில்லை. ஆரம்பத்தில் அவன் எப்படி அவளை விரும்பினான் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சிறிய முலைகளோடு அவள் சற்றே பருமனாக இருந்தாள். எப்போதும் லெவி ஜீன்ஸ்களையும் நாற்பதுகளில் ஹாலிவுட் கொள்ளையர் படங்களில் பிரபலமான விரிந்த ஓரம் வைத்த தொப்பிகளையும் அணிந்தாள். ஆனால், அவளுடைய உடுத்தும் பாங்கை இன்னும் கூர்ந்து கவனித்த பிறகு அவள் ஒளித்து வைத்திருந்த நானை யாரும் கண்டுகொண்டுவிடக் கூடாது என்பதற்காக, கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் அப்படி அணிந்தாள் என்பதைப் புரிந்துகொண்டேன். உரக்கச் சிரிப்பாள். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ரகசியமாக கீழே இறங்கி ஆடைகளை சரிசெய்துகொண்ட ஒரு கையின் அசைவுகளைக் கேட்டேன். அவளுடைய பிடிவாதமான வீறாப்பு மென்மையான இதயத்தை தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக இருந்தது. அவள் சிரிப்பின் குரலில் பிசைந்த தொண்டை நார்கள், மிக நுட்பமாக பிண்ணப்பட்டிருந்த அவளுடைய கூருணர்வுகள் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு மிகுந்த பிரயத்தனப்படுவதைக் கண்டுகொண்டேன். மிகவும் செறிவான, சிக்கலான ஒரு தற்காப்பு முரண்நகையை அவள் பிரயோகித்து வந்தாள். “கருப்பனே! என்னிடம் விளையாடாதே!” என்று அவள் குரல் அதிர்ந்தபோது, அதன் நயத்தின் ஆழத்தில் “ரொம்பவும் நெருங்கி வந்துவிடாதே, எளிதில் உன்னை புண்படுத்திவிடுவேன்,” என்று சொல்வது போலிருந்தது. அல்லது, “இங்கே வா. இவன்தான் நான் மணந்துகொள்ளப் போகிறவன்; உனக்குப் பிடிக்கவில்லையெனில் செத்து நரகத்துக்குப் போய்த் தொலை!” என்று அவள் குரல் சொன்னபோது, துறுதுறுவென்று அந்தக் கரிய விழிகள், எதிர்வினைகளைக் கூர்ந்து எதிர்பார்த்துக் கொண்டே, தமது மௌன மொழியில் “கண்ணே, காயப்படுத்திவிடாதே! காயப்படுத்திவிடாதே!” என்று கெஞ்சின. இதே முரண்நகை கலந்து அவள் தன் கதைகளைச் சுவையாகத் தந்தாள். விர்ஜினியா வேலென்டைன் பல நாடுகளைச் சுற்றி கண்ட அனுபவங்களின் சுவை கூட்டி கதைகளைச் சொன்ன ஒரு நாட்டுப்புற நாடோடிக் கதைசொல்லி. அவற்றைச் சொல்வதன் ஊடாக அவள் தன் மொத்த இருப்பையுமே சிக்கலான முறைகளில் பேசினாள். அவள் தனித்தன்மை சுடர்விட்டவள். அருமையான கதைசொல்லி. ஒரு அற்புதமான மந்திர மங்கை. தேவதை.
பால் ஃப்ராஸ்ட் அவள் இப்படி மேலுக்காக வெளிக்காட்டி விளையாடிய தைரியத்தைப் பார்த்து மயங்கிவிட்டான். இந்தக் காலத்த்தில் வெறும் ஈர்ப்பைத் தாண்டி உள்ளே ஊடுருவிக் காதலிக்கும் முதிர்ச்சியை அவன் பெற்றுவிட்டிருந்தான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வியாபாரத்தில் வெற்றிகரமாக நிலைகொண்டுவிட்ட ஒரு கான்ஸாஸ் குடும்பத்தில் இரண்டாவது தலைமுறையாகப் பிறந்தவன் அவன். அதனால்தான் என்னவோ வாழ்க்கை மதிப்புகள் குறித்த தேடல் அவனுக்கு இருந்தது. ஆனால், இந்தக் காரணத்தாலோ அல்லது அவனுக்கே இன்னமும் விளங்காத ஏதோ சில காரணங்களால், தன் குடும்பத்தையும் பரந்த மேய்ச்சல் நிலங்களையும் கடந்த காலத்துக்குரியவையாக தள்ளி வைத்துவிட்டான். காலத்தால் அழியாத கலைப் படைப்புகளைத் தந்து, வெறிச்சோடிக்கிடந்த மொட்டையான டவுன்களின் பிடியிலிருந்து தன் குடும்பத்தை விடுவிக்க அவன் கனவு கண்டான் என்று நினைக்கிறேன். அவனுடைய விழிகளின் ஆழத்தில் கூட்டங்கூட்டமாக கொன்று குவிக்கப்பட்ட செவ்விந்தியர்களின் ஆவிகள் அலைக்கழிவதைப் பார்த்ததுபோல எனக்கு ஞாபகமிருக்கிறது. அதே நேரத்தில் ஒளிக்கத் தெரியாத அவன் விழிகளில் அறிவுத்தாகம் சுடர்விட்டுக் கொண்டிருந்ததும் தெரிந்தது. எந்த நொடியிலும் விழுந்துவிட, விரல் நுனியில் இருந்த நியாயமான கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கும் பேராசைமிக்க ஆவல் தெரிந்தது. தணியாத ஒரு தாகம் ஒளி உமிழும் மேகத்திரள் போல, இன்னும் அவனோடு கலந்துவிட முடியாமல் உறுத்திக் கொண்டிருந்த பளிச்சிடும் இரண்டாவது தோல் போர்வையைப் போல அது அவனுடைய முகத்தில் எப்போதும் தொக்கிக் கிடந்தது. எதிரே யார் வந்து நின்றாலும் அவர்களிடம் “நான் யார்?” என்று கேட்கக் காத்திருப்பது போலத் தோன்றியது. என் கவனம் முழுக்க இதிலேயே குவிந்திருந்ததால் அந்த முகத்தில் தோன்றி மறைந்த மற்ற உணர்ச்சிகளெல்லாம் கவனத்திலிருந்து தப்பிவிட்டன என்பதை ஒப்புக்கொள்கிறேன். இப்படி என் கவனத்தை சுருக்கிக்கொண்டு, கறாராக வரையறுத்த ஒரு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை உணரத் தொடங்கியபோது குற்ற உணர்ச்சியும் வெட்கமும் என்னை சற்று சங்கடத்திற்குள்ளாக்கின. ஏனென்றால் அவனுடைய தேடலைத் தூண்டிவிட்ட அந்தப் புதிரான ஆரமபம், வெறுமனே சாதாரணமான ஒரு குற்றவுணர்ச்சியாகவோ அல்லது அதிகாரத்திற்கான விருப்பமாகவோ அல்லது வெட்கக்கேடான காம வெறியாகவோ, அவனால் வெற்றிகொள்ள முடியாத, அவன் அஞ்சி நடுங்கிய ஒரு பொருளிடம் சரணடைந்து விடுவதற்கான நிர்ப்பந்தமாகவோ இப்படி ஏதோ ஒன்றாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எதுவாக இருந்தாலும் இத்தகைய எல்லா காரணங்களும் காதல் என்கிற அந்த வழக்கமான விஷயத்தில் போய் முடிந்துவிடுவது உண்மை.
என்றாலும், சில நேரங்களில் விர்ஜினியாவின் கண்கள் அவன் முகத்தில் படிந்தபோது மென்மை பூத்ததைக் கவனித்தபோது, அவனுக்குள் கட்டுக்குள் இருந்த, ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்வதற்குக் கூச்சப்படாத அளவுக்கு தன்னம்பிக்கை பதிந்திருந்த, வழக்கத்திற்கு மாறான ஆன்ம வேகம் இருந்ததை, அந்தப் பார்வை அங்கீகரித்ததை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால், அவன் தன் குழந்தைமை தொனித்த அறியாமையை உணர்ந்திருக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அதனால்தான் என்னவோ முற்றிலும் அறிமுகமில்லாத, ஆன்மா நொறுங்கிப் போயிருந்த ஒருவனை அவன் கள்ளங்கபடமில்லாமல் அணுகியபோதெல்லாம் அவளுடைய கண்கள் – அவளது குரல் உறுமிக் கொண்டிருந்தாலும், கேலி பேசிக்கொண்டிருந்தாலும் அல்லது உரக்கச் சிரித்துக்கொண்டிருந்தாலும் – “கண்ணே, காயப்படுத்திவிடாதே! காயப்படுத்திவிடாதே!” என்று கெஞ்சின. தனது கிராமத்துக் கூர்மதியை நுட்பத்தோடு பிரயோகித்த கிராமத்து தேவதை அவள். அப்புறம், நான் அவர்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்த பிறகு, அவர்களுடைய உறவின் பிணைப்பு பற்றியிருந்த கண்ணியை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். மேன்மையான ஆன்மா வாய்க்கப் பெற்றிருந்த அந்த கிராமத்துப் பையனுக்கு நிழல் தர தன் முறிந்த சிறகுகளை – சற்றுக் குழப்பத்தோடுதான் என்றாலும்கூட – விரித்த பருந்து அவள். அவனுடைய ஆன்மாவை சேர்த்து அணைத்துக்கொண்டது அவனை இன்னும் பலவீனமாக்கியது. ஆனால், எத்தனை உயரத்தில் பறந்திருந்தாலும், நிறைய காயப்பட்டிருந்தாலும் இன்னமும் காய்ந்துவிடாமல் இருந்த காயங்களின் மீது எந்த முரட்டு உரசலும் பட்டுவிடாமல் தன்னைக் காத்துக்கொள்கிற அளவுக்கு இந்த உலகத்தைப் பற்றியும் இதில் யாரையும் எக்காலத்திலும் நம்பிவிட முடியாது என்பது பற்றியும் முழுமையாகப் புரிந்திருந்தாலும், அதையும் மீறி அளவில்லாத அன்பைத் தனக்குள் பொதித்து வைத்திருந்தாள். பால் ஃப்ராஸ்ட் ஒரு அப்பாவி. ஆனால் கொடுத்து வைத்தவன். விர்ஜினியா வாலென்டைன் தன்னைக் குணப்படுத்திக்கொள்ள அவனைப் பாதுகாத்தாள்.
அவர்களுடைய திருமணம் ஒரு நீதிபதியின் அலுவலக அறையில் ஆரவாரமில்லாமல் நடந்தேறியது. பாலுடைய சகோதரன் மாப்பிள்ளைத் தோழனாக நின்றான். நல்ல உயரமாக, கட்டான உடல் வாகோடு இருந்த அவன் தன் சகோதரனின் அருகில் நிற்பதற்காக கான்ஸாஸிலிருந்து பறந்து வந்திருந்தான். கண்ணியத்தோடு மென்மையாக மோதிரத்தைப் பிடித்திருந்தான். பாலின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரவில்லை. வழக்கமான கெஞ்சல்களைக் கூவி ஒருமுறையாவது வந்துபோகும்படி பலமுறை அவனை அவர்கள் அழைத்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்காமல் போகவே வாழ்த்து சொல்லி தந்தி அனுப்பி வைத்தார்கள். ஆனால், விர்ஜினியாவின் பெற்றோர்கள் டென்னெஸெவிலிருந்து வந்திருந்தார்கள். இனிமையான கிராமத்தவர்கள் அவர்கள். நீண்ட காலமாக அவளை வீட்டுக்கு வந்துபோகும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவளுடைய மனதை மாற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டபிறகு, பதப்படுத்திய நாட்டுப் பன்றிக் கறியும், வீட்டிலேயே தயாரித்த கேக் ஒன்றையும், டென்னெஸெவின் காடுகளுக்குள் வாழ்ந்துவந்த, இரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஒரு செரோகீ – யாக இருந்த அவளுடைய பாட்டி அவளுக்காகவே தயாரித்த மெத்தையையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். நலம் விரும்பிய சுற்றத்தார்களிடமிருந்து கைநிறைய பரிசுகளும் கொண்டுவந்திருந்தார்கள். தாயார் இளநீல உடையும் வெள்ளைத் தொப்பியும் அணிந்திருந்தாள். நல்ல கருப்பாக இருந்த அந்தச் சிறிய பெண்மணி ஞாயிற்றுக்கிழமை சர்ச் சேவையில் வந்த கட்டியம் சொல்பவனைப் போல பணிவாக நீதிபதியின் தோல் நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். தந்தை திரு. டானியல் வாலென்டைன் எல்லோரிடமும் சாதாரணமாகக் கலந்து பேசினார். நீதிபதி உரிய சடங்குகளை முடித்ததும் லேசான படபடப்போடு சிரித்துக்கொண்டே எல்லோருடனும் கைகுலுக்கிக் கொண்டார். கருத்த சுருள் முடிகளும், எழும்பிய கன்ன எலும்புகளோடும் ஒரு செவ்விந்தியனைப் போன்ற சாயல் அவர் முகத்தில் தெரிந்தது. விர்ஜினியா ஆழ்ச்சிவந்த பழுப்பு நிறம், சிவப்பு ஓரம் வைத்த எளிமையான வெள்ளை ஆடையை அணிந்திருந்தாள். மருகிக் கொண்டிருந்த தாய்க்கு, “நான்தான் முன்னமே சொன்னேனே, கவலைப்பட ஒன்றுமேயில்லை,” என்கிற தொனியில் சமாதானம் செய்கிற புன்னகையை படரவிட்டிருந்தாள். கருப்பு சூட்டில் இருந்த பால் மேட்டுக்குடி தனியார் க்ளப்பில் இருந்த பணியாளனைப் போல பொறுப்பாகவும் பணிவாகவும் தெரிந்தான்.
கோல்டன் கேட் பார்க்கின் ஒரு வெளிச்சமான் மூலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் டானியல் வாலென்டைன் எல்லோருக்கும் சுருட்டுகள் தந்துகொண்டிருந்தார். பின்னர், பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு புல்வெளியில் மெதுவாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். அவருடைய உடலின் தாக்குப்பிடிக்கும் சக்தியைச் சோதித்த நல்ல நவம்பர் மதியம் அது. அவர் பழகிய சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சூழல் அது. அவருக்குச் சற்று சங்கடமாக இருந்தது நன்றாகவே தெரிந்தது. அவருடைய சங்கடத்தைத் தணிக்க என்னுடைய சுருட்டைப் புகைத்துக்கொண்டே அவரோடு சேர்ந்துகொண்டேன். அவருடைய பழுப்பு முகத்தில் அச்சமும் பெருமையும் புதிரும் கலந்திருந்தது. கடைசிவரை உலகில் நிச்சயமாக மாறவே மாறாது என்று அவர் நம்பிக் கொண்டிருந்த விஷயமும்கூட அவரை ஏமாற்றிவைட்டதைப் புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். உலகத்திலேயே மாற்றமுடியாத உறுதியான பிணைப்பு நிறம்தான் என்று நம்பியிருந்தார். ஆனால், இப்போது எதையோ யாரையோ நினைத்து வெட்கப்பட்டதைப் போலத் தெரிந்தது. “ஒருமுறையாவது வந்துபோகும்படி பலமுறை கேட்டோம்.” நடையை நிறுத்தாமலேயே பேச்சை ஆரம்பித்தார். காலந்தாழ்ந்து பூத்துக் கொண்டிருந்த பூக்களையும், பழுத்துக் கொண்டிருந்த பச்சை மரங்களையும், சட்டையில்லாமல் ஃப்ரிஸ்பீக்களை வீசிக் கொண்டிருந்த இளைஞர்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். “இந்த உலகத்தை முழுமையாக புரிந்துகொண்டுவிட்டதாக நடிக்க இனிமேலும் எனக்கு விருப்பமில்லை. ஆனால், அவனுக்கு நல்ல அறிவுரை சொல்லக்கூடிய அளவுக்கு எனக்கு ஓரளவு உலக அனுபவம் இருக்கிறது. அதைச் சரியாகச் செய்யவும் எனக்குத் தெரியும். என் குழந்தை நீண்ட பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் வந்தவள். அதில் அவள் அம்மாவுக்கும் எனக்கும் நிறைய பெருமிதம் உண்டு. அங்கு, தெற்கில் என் பின்னால் அலைந்த வெள்ளைப் பெண்கள் நிறைய பேரை எனக்குத் தெரியும். அதனால், இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று எனக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், நான் யாருக்கும் விளையாட்டுப் பொம்மை இல்லை. என் குழந்தையும் அப்படியில்லை.” புல்லின் பசுமையையும் மரங்களின் அடர்த்தியையும் நோட்டம் விட்டபடி நுரையீரலை நிரப்பி ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்தார். டென்னெஸெவின் குளிர்ந்த இலையுதிர் காலத்தை நினைவுக்குக் கொண்டுவர அவரது உடல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது போலத் தெரிந்தது. லேசாக வியர்த்துக் கொண்டிருந்தது. தொடர்ந்தார், “அவனுடைய குடும்பம் எக்கேடு கெட்டுப்போனாலும் எனக்குக் கவலையில்லை. நரகத்திற்கே போனாலும் எனக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால், என் குடும்பத்தைப் பற்றி மிகுந்த அக்கறை எனக்குண்டு. நேற்று இரவு அவனிடம் தெளிவாகச் சொல்லிவிட்டேன். “என் குழந்தையை எந்த காரணத்திற்காவது துன்புறுத்தினால், அவளுடைய பெண்மைத்தனமான இயல்புகளுக்குச் சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு தவறுக்காக அவளை அழவைத்தால், உன்னை சும்மா விட்டுவிடமாட்டேன்.” அவனுக்காக ஒரு தடியை செய்து வைத்திருக்கிறேன் என்று எச்சரித்து வைத்திருக்கிறேன்.” ஒரு கருப்பன் இன்னொரு கருப்பனிடம் மனம்விட்டு பகிர்ந்துகொள்கிற முறையில் என்னிடம் பேசினார். நான் அவருக்கு நம்பிக்கையளித்து பொறுப்பேற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் இதையெல்லாம் என்னிடம் சொன்னார். ஆனால், அவருடைய செல்ல மகள், மரபான அபிப்பிராயங்களுக்கு மட்டுமே மதிப்பிருந்த அவருடைய வீட்டிலிருந்து வெகு காலத்திற்கு முன்னமே பல உலகங்கள் தாண்டி போய்விட்டதை, தனக்கென ஒரு உலகத்தை எடுத்துக்கொண்டு அதில் தனது நானை இரகசியமாக போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்ததை எப்படி விளக்கிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. “அவனுக்கு அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன்,” அழுத்தமாக தலையை அசைத்துச் சொன்னார். பிறகு, என் கண்களைத் தவிர்த்துவிட்டு, சுருட்டை இழுத்து, ஒரு யூக்கலிப்டஸ் மரத்துக்கடியில் கூடியிருந்த மற்ற எல்லோரையும் பார்த்து தலையசைத்தார். திருமதி வாலென்டைன் கொண்டுவந்திருந்த மதிய உணவைப் பிரித்துக் கொண்டிருந்தார். பால் சின்னப் பையனைப் போல சிரித்துக் கொண்டு, வாலென்டைனுடன் கோர்த்துக் கொண்டு கைகளை வீசிக் கொண்டிருந்தான். “என்றாலும் அவர்கள் ஒரு நல்ல ஜோடியாக இருப்பார்கள். என்ன, அப்படித்தானே தெரிகிறார்கள்?” என்னைக் கேட்டார்.
(தொடரும் … )
ஆசிரியர்: ஜேம்ஸ் ஆலன் மெக்ஃபெர்சன் (1943 – ). 1960 களின் முக்கிய சிறுகதை எழுத்தாளராக வெளிப்பட்டவர். ஜார்ஜியாவில் சவானா பகுதியில் பிறந்த மெக்ஃபெர்சன் ஒரு சட்டப் பட்டதாரி. படித்துக் கொண்டிருக்கும்போதே பரிசுகளை வென்ற பல சிறுகதைகளை எழுதினார். பல்வேறு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஆக்க இலக்கியப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார்.
தனி மனிதர்களுக்கிடையிலான கடக்க முடியாத வேறுபாடுகளை மையமாகக் கொண்ட அற்புதமான சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். அவரது பல கதைகள் ரயில்களைச் சுற்றியுள்ள பண்பாட்டு வாழ்வை விவரிப்பவை. புலிட்சர் பரிசு உட்பட பல பரிசுகளை வென்றவர்.
Elbow Room என்ற இச்சிறுகதையும் “நிறப்பிரிகை” கருப்பர் இலக்கியச் சிறப்பிதழுக்காக (மே 1998) மொழியாக்கம் செய்தது. ஆங்கிலப் பிரதி தற்போது கைவசம் இல்லை. எந்தத் தொகுப்பில் இருந்து எடுத்தது என்பது நினைவில் இல்லை. “நிறப்பிரிகை”யிலும் இத்தகவல் தவறிவிட்டிருக்கிறது. மன்னிக்க வேண்டுகிறேன்.
சற்றே நெடிய சிறுகதை என்பதால் 5 பகுதிகளாகப் பிரித்து இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றிகள்.
– வளர்மதி.
———————————-
இந்தக் கதை சொல்லி கட்டுக்களில்லாமல் திரிபவன். பிறழ்வு நிலையை தொட்டுக்கொண்டு வடிவம் என்பதையே சட்டை செய்யாத ஒரு மனநிலையைக் காட்டுகிறான். விடாமல் கேட்டதில் மரபுவழிப்பட்ட கதைசொல்லல் உத்திகளுக்கு தான் வெளிப்படையான எதிரி என்று அறிவித்துக்கொள்கிறான். என்ன காரணம் என்று அழுத்திக்கேட்டதில் “எல்லைகள்”, “கட்டமைப்புகள்”, “சட்டகங்கள்”, “ஒழுங்கு”, ஏன் “வடிவம்” என்று எல்லாவற்றையுமே தான் சந்தேகிப்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஒழுங்கீனத்தை ஒரு ஒழுக்கமாகவே வலியுறுத்துகிறான். மரபு வழிப்பட்ட கதைசொல்லல் முறைகளில் வருகிற புதிரான புராதன ஒழுக்கங்கள், ஒருமுகத்தன்மைகள் மீது ஏறக்குறைய ஒரு காட்டுத்தனமான வெறுப்பை தம்பட்டமடித்துக் கொள்கிறான். அவன் தேர்வு செய்துகொண்டிருக்கிற இந்தத் துறையில் அவனுடைய இந்தக் குறை இங்கு எடுப்பாகவே படிந்திருக்கிறது. தணிக்கை செய்கிற எந்த எண்ணமும் இல்லாமல் இந்தக் கதையைக் காப்பாற்றும் நோக்கில் குறைந்தபட்சம் ஒரு ஒழுங்கு இருப்பது போன்ற தோற்றத்தையாவது தரும் பொருட்டு சில இடங்களில் சில விளக்கங்களைத் தரும் நிர்ப்பந்தம் தொகுப்பாளருக்கு நேர்ந்துவிட்டது. ஒரு தொழில்நுட்ப ரீதியிலான ஒழுக்கத்தைப் பேணும் முயற்சி இது. கட்டுக்குள் வராமல் மீறுகிற பிரதிக்கும் இறுதிப் படியை உருவாக்குவதில் இறுதி முக்கியத்துவம் வாய்ந்த – அந்த, எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குகிற பார்வைக்கும் இடையில் இருக்கவேண்டிய அவசியமான பொருத்தத்தை, ஒரு ஒழுக்கத்தின் ஒழுக்கத்தைப் பற்றியே தொகுப்பாளர் இங்கு குறிப்பிடுகிறார்.
அவன் சொன்னதின் சாரம் இதுதான்:
கான்சாஸின் அந்தச் சிறிய டவுன்களை விட்டு அந்தக் காலத்தில் பெயர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களில் பால் ஃப்ராஸ்டும் ஒருவன். திரும்பிப் போகாத மிகச் சிலரில் அவனும் ஒருவன். அவன் வெளியேறிய காலத்தில் போருக்குச் செல்லாமல் தப்பித்துக்கொள்வது எளிதான காரியமாகவே இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அதில் சிரமம் கூடிக்கொண்டே போனது. சிகாகோவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தான் பயணிக்க வேண்டிய பாதை எதுவென்று பால் தீர்மானித்துவிட்டிருந்தான். வருவது எதுவானாலும் எதிர்கொள்ளத் தயாராகவும் இருந்தான். ஒரு சிறிய விடுமுறையில் வீட்டிற்கு வந்தவன் குடும்பத்தவர்களையும் போருக்கு ஆட்களைத் தேர்வு செய்த கமிட்டியையும் எதிர்கொண்டான். அவனைக் குழந்தையாக இருந்தது முதல் பார்த்தவர்கள் அவர்கள். அவனுடைய மறுப்பு அவர்களைக் கடுங்கோபம் கொள்ள வைத்தது. அவர்களுடைய கோபத்தைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தவன் உள்ளுக்குள் அழுதான். சிகாகோவிற்குத் திரும்பி ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மாற்றுச் சேவை செய்தான். ஆஸ்பத்திரியில் ஒரு குவேக்கர் வட்டத்தின் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தான். வரலாறு, இலக்கியம், ஒழுக்கவியல், தத்துவம் இவற்றில் ஆழமாக படிக்க ஆரம்பித்தான். வெகு சீக்கிரத்திலேயே அங்கு அடைக்கப்பட்டிருந்தவர்களில் நிறைய பேர் உண்மையில் பைத்தியங்கள் இல்லை என்பதைக் கண்டு கொண்டான். இதனால் அவன் கொண்ட அச்சம் மெல்ல மெல்ல அவன் பேச்சைக் குறைத்தது. அதிகம் கவனிக்க ஆரம்பித்தான். இந்த சமயத்தில் கார்ஃபீல்டு பார்க்குக்கு அருகில் ஒரு வாடகை அறையில் தங்கியிருந்தான். சாப்பாடு, வேலை, புத்தகங்கள் எடுத்துவர நூலகம் இவற்றுக்கு மட்டுமே வெளியே போய் வந்தான். பெண்களின் வாசனையே தெரியாமல் கிடந்தான். அவனுக்கு அதில் நாட்டமும் இருக்கவில்லை. அவனுக்குள்ளாகவே சுருங்கி வாழ்ந்து கொண்டிருந்ததால் சீக்கிரத்திலேயே சுற்றியிருந்தவர்கள் அவனை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய இந்த நினைப்பு அவனுக்கு ஒரு வகையில் வசதியாகிப் போனது. அவனுடைய இரகசியமான நானை தீனிபோட்டு வளர்த்தான். இரவுகளில் தனிமையில் அவன் அறையில் அதனுடன் உரையாடிக் கொண்டிருந்தான். பல மாதங்களுக்குப் பிறகு பொது இடத்தில் அவன் பேசியது ஆஸ்பத்திரியின் விளையாட்டு அறையில் ஒரு செஸ்போர்டுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு மூளைக் கோளாறுக்காக வந்திருந்த ஒருவனோடு நிகழ்ந்தது. “நீ பைத்தியமில்லை”, அவன் காதருகில் கிசுகிசுத்தான். “இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” அந்த நோயாளி பாலை கூர்ந்து நோக்கிவிட்டு மெலிதாகச் சிரித்தான். வாழ்க்கையை உதறிவிட்ட ஞானிகளுக்கே உரிய ஆழ்ந்த அர்த்தம் தொனிக்கிற முறுவல் அவன் உதடுகளில் படிந்திருந்தது. குனிந்து, பலகைக்குக் குறுக்காக சாய்ந்து பாலுடைய கரிய பழுப்புக் கண்களுக்குள் நேராகப் பார்த்தான். “நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” இந்தக் கேள்வி பாலை நிலைகுலைய வைத்தது. அதை நினைக்க நினைக்க அவனை படபடப்பு துரத்தியது. ஓய்வு நேரங்களில் லாசேல் தெருவில் முற்றிலும் அறிமுகமில்லாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டு உலா வர ஆரம்பித்தான். ஆனால், எல்லோரும் ஏதோ அவசரத்தில் இருப்பது போல பரபரத்துக் கொண்டிருந்தார்கள். மாற்றுச் சேவையின் இரண்டாவது வருடத்தில் கடற்கரையில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு மாற்றுதல் பெற்றுக்கொண்டான். அங்கு ஓக்லாந்தில், பைத்தியக்காரத்தனமான காரியங்களை செய்துகொண்டு சுற்றி வந்தான். ஆனால் நல்ல காலமாக தொடர்ந்து குவிந்திருந்த வேலைகள் அவன் பைத்தியமாகி கான்சாஸிற்குத் திரும்புவதைத் தடுத்து நிறுத்தியது. அவனுடைய கடைசி பைத்தியக்காரத்தனம் டென்னெஸெ – வில் இருந்த க்ளாக்ஸ்வில்லெ – வுக்கு வெளியே இருந்த வாரென் என்ற சிறிய டவுனிலிருந்து வந்திருந்த விர்ஜினியா வாலென்டைன் என்ற கருப்புப் பெண்ணை சான்ஃப்ரான்ஸிஸ்கோ – வில் வைத்து மணம் செய்துகொண்டது.
விர்ஜினியா வாலென்டைன் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக தெற்கில் விவசாயிகள் அலை அலையாக ஜெயில்களை உடைத்துக் கொண்டு வெளியேறிய அந்தப் பெரும் அலையில் வாரனை விட்டு வெளியேறியவள். தலைமுறை தலைமுறையாக அடிமைகளாகக் கிடந்த அவளைப் போன்றவர்களுக்கு வெளியே விரிந்திருந்த இந்தப் பரந்த உலகம் இனிமையான வாய்ப்புகளை அள்ளித் தயாராக வைத்திருந்தது போன்ற தெளிவான ஒரு கோட்டோவியம் போலத் தெரிந்தது. ஆனால் எல்லோருக்குமே இந்தச் சுதந்திரம் இஷ்டம் போலத் திரியப் பயன்படவில்லை. நீண்ட சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த செல்லப் பிராணிகள் எந்த நேரமும் சங்கிலியின் முனையில் இழுத்துப் பிடிக்கப்படுவதை உணர்ந்திருப்பது போல ஒரு எல்லை அவர்களைச் சுற்றி எப்போதும் வரையறுக்கப்பட்டிருந்தது. என்றாலும், விர்ஜினியாவைப் போன்ற மிகச் சிலர் கர்வம் மிக்க பருந்துகள் ஆளில்லாத சிகரங்களின் மேலாக உயர உயரப் பறந்து தங்கள் கூடுகளைக் கட்ட விழைவது போல எழுந்து, பரந்து விரிந்து கிடந்த உலகின் மேலாகப் பறந்தார்கள்.
விர்ஜினியாவின் கனவு ஒரு இலட்சியக் காவியமாக இருந்தது. பத்தொன்பது வயதில் சால்வேஷன் ஆர்மியில் சேர்ந்தவள் ஏழைகளுக்கே உரித்தான உலகப் பயணத்தை மேற்கொண்டாள். நாட்டுப்புற மக்களுக்கே உரிய ஒரு முரட்டுத்தனமான காட்டு வாழ்வின் இயல்பைப் பெற்றவள் அவள். மனிதர்களிடம் புதைந்து கிடந்த மனிதத்தன்மையை சட்டென்று கண்டுகொள்ளும் திறன் அவளுக்கு இருந்தது. நல்ல நகைச்சுவை உணர்வும் வாய்க்கப் பெற்றிருந்தாள். இருபது வயதில் இலங்கையில் குழந்தைகளுக்கு செவிலித் தாயாக வேலை செய்து கொண்டிருந்தாள். இருபத்தொன்றில், இந்தியாவில், ஜாம்ஷெட்பூரில் ஒரு சந்தையில் நின்றுகொண்டு போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு சாதிகளை எண்ணப் பழகிக் கொண்டிருந்தாள். தனது சொந்த மக்களைவிட இந்துக்கள் “கருப்பாக” இருக்கிறார்கள் என்று முடிவு செய்தவள் ஒரு முரண்நகை தொனியில் சற்றுப் பெருமையாகவே தன்னை “கருப்பி” என்று அழைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். நுட்பமான ஒரு நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டாள். செனீகலில் மீனவர்களோடு சேர்ந்து வெறுங்கையால் உண்ணப் பழகிக்கொண்டாள். கென்யாவில் ஒரு விடுமுறை நாளில் கிளிமஞ்சாரோவின் சிகரத்தில், கிராமத்தவளைப் போல இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு இன்னும் கால் பதிக்க வேண்டிய சிகரங்களைத் தேடி பார்வையை வீசினாள். கெய்ரோ, செய்த் துறைமுகம், டமாஸ்கஸ் நகரங்களின், நறுமணப் பொருட்களின் வாசம் மூக்கைத் துளைத்து வியர்க்க வைக்கிற சந்தைகளில், சாராயம் குடித்துவிட்டு களித்திருந்த வியாபாரிகளோடு பேரம் பேசி பொருட்களை வாங்குவதில் தேறினாள். பெண்களும் அடிமைகளும் இன்னும் சந்தைகளில் விலைபேசப்படுவதைக் கண்டு அராபியர்களை வசைபாடும் நல்ல பழக்கத்தையும் வளர்த்துக்கொண்டாள். லீக்கி என்ற ஒரு வயதான கிழவனைப் பற்றி நிறைய கதைகளை வைத்திருந்தாள். வடக்கு டான்சானியாவில் ஒரு மாட்டுப் பண்ணையில் அவனோடு சேர்ந்து குடித்துவிட்டு இரவு முழுக்க கதைகள் பேசி உட்கார்ந்திருந்ததைப் பற்றியும், பசுவின் பாலை அப்படியே மடியில் வாய் வைத்தும் பசுவின் இரத்தத்தையும் குடிக்கப் பழகியதைப் பற்றியும் நிறைய பேசினாள். கிழவன் எப்போதும் சிடுசிடுத்தாலும் தன் திறமையைக் காட்டும் வாய்ப்பு வரும்போது எவ்வளவு துடிப்பாக இருந்தான் என்பதைச் சொல்வாள். பால் மோசமில்லை என்றாள். பசுவும் உதைக்கவில்லை என்று சொன்னாள். அராபியர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், இந்தியர்களுடைய மரியாதை நிமித்தமான பணிவான புன்னகைகளுக்குப் பின்னால் இருந்த அவர்களுடைய உண்மையான உலகில் பிரவேசித்து வந்தாள். அவர்கள் சொன்ன கதைகளில் வாழ்க்கையைப் பற்றிய மாறுபட்ட பல பார்வைகள் பல விதங்களில் படிந்திருப்பதைக் கண்டுகொண்டாள்.
இருபத்தியிரண்டு வயதில் சொந்த ஊருக்குத் திரும்பியபோது ஏராளமான கதைகளைச் சொல்ல வைத்திருந்தாள். அவளைப் போலவே அப்போது நிறையபேர் இருந்தார்கள். பாஸ்டன், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா, சிகாகோ என்று கலிஃபோர்னியாவின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் கூடிக்கூடி இது போன்ற ஏராளமான கதைகளைப் பேசினார்கள். அவர்களுக்கே புரியாத ஒரு மொழியில் இனிக்க இனிக்க பேசினார்கள். அவர்களுடைய பேச்சுக்களில் உலகின் நான்கு மூலைகளிலும் ஒன்றே போல இருந்த அரிய விஷயங்களைப் பற்றி நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டார்கள். மேட்டுக்குடியினருக்கேயுரிய மட்டமான செயற்கைப் பாசாங்கைத் தொற்றிக் கொள்ளவிடாத அந்த விவசாய மக்கள் உண்மையிலேயே மேன்மைமிக்க மனிதர்கள். வாழ்க்கையின் சாரத்தை சாதாரணமாக புரிந்துகொள்கிற கலை அவர்களுக்குக் கைவந்திருந்தது. அவர்கள் ஒரு புது இனமாக உருவாகியிருந்தார்கள்; தங்களை அப்படி கருதிக்கொண்டார்கள்.
ஆனால், மெதுவாக – மிக மெதுவாக, அவர்களுடைய எண்ண ஓட்டங்கள மாற ஆரம்பித்தன. ஆரம்பத்தில் இது மிகவும் நுட்பமாகவே இருந்தது. உரையாடலின்போது ஒருவர் சாதாரணமாகக் கேட்பார், “என்ன புரிந்துவிட்டதா?” சற்று தயக்கத்திற்குப் பிறகு மறுப்பு மெதுவாக வரும். இந்தக் காலத்தில் விழுந்த நீண்ட மௌனங்களைப் பற்றிய வேதனை ததும்பும் கதைகளை வாலென்டைன் நிறைய வைத்திருக்கிறாள். மக்கள் குற்ற உணர்ச்சியோடும் தங்களைப் பற்றிய கூருணர்வோடும் தவித்தார்கள். கொஞ்சம் நிர்ப்பந்தித்தால், அவளுடைய குழுவில் நடந்த தற்கொலையைப் பற்றி சொல்லிவிடுவாள். மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது மெல்ல மெல்லக் குறைந்தது. சீக்கிரத்திலேயே அவர்கள் தமக்குள்ளாகவே பேசிக்கொண்டும் தெருக்களில் நடக்கும்போது தலையை ஆட்டிக்கொண்டும் நடந்தார்கள். வேறுவழியில்லாமல் உரையாடல்களின்போது இப்போது பலரும் “இல்லை, எனக்குப் புரியவில்லை!” என்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்கள். முதலில் இதில் ஒரு தயக்கம், சந்தேகத்தின் சாயல் இருந்தது. ஆனால், போகப்போக மறுக்க முடியாத, ஆணித்தரமான தொனியில் பதில் வந்தது. வெறுப்பும் பகையுணர்ச்சியும் வெளிப்படையாகத் தெரிய சில மாதங்கள் எடுத்துக்கொண்டது. சண்டையில் இறங்க முயற்சித்தவர்கள் குழம்பி எல்லாவற்றையும் வெறுத்தார்கள். இதனால்தான் மற்ற எல்லா உறுதிமிக்கவர்களையும் போல விர்ஜினியாவும் கிழக்கை விட்டு வெளியேறினாள். அடிபட்ட பறவை இறக்கைகளை விரித்துக் கொண்டே தரையிறங்க பயப்படுவதுபோல, காயம்பட்ட தன் மனதுக்கு இதம் தரக்கூடிய ஒரு மென்மையான வெளியை, தனிமையைத் தேடி ஓடிப்போனாள்.
புதிய கதைகளைத் தேடி அந்தப் பிரதேசத்திற்கு நான் போயிருந்தேன். கிழக்கை விட்டு நான் கிளம்பிய அந்தக் காலத்தில் அங்கு புதிய கதைகள் எதுவும் இருக்கவில்லை. கருத்துக்களும் வழக்குகளும் கலந்து கரடுதட்டிப்போன மரபுகளாகிவிட்டிருந்தன. பழைய கதைகளே திரும்பத் திரும்ப பேசப்பட்டன. சொன்னவர்களுக்கே அவற்றில் நம்பிக்கை போய்விட்டிருந்தது தெரிந்தது. வார்த்தைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான பிணைப்பு அறுந்து காதலுணர்ச்சியின் வேகத்தோடு பாய்வது நின்று போயிருந்தது. பழமையான நல்ல புராணங்களும்கூட அவற்றுக்கேயுரிய சடங்குகள் கொண்டாட்டங்களிலிருந்து விலகி தனித்து மிதந்தன. கலைகளை உள்ளூர வெறுத்த வியாபாரிகள் அவற்றை நாட்டுப்புறக் கதைகள் என்று சொல்லி விற்றார்கள். உற்சாகமான சிரிப்பு என்பதே இல்லாமல் போனது. அப்புறம், செல்வச் செழிப்பான புரவலர்களைத் திருப்தி செய்ய மொழியை, தாய்மொழியை அதன் சிறந்த மகன்களே போட்டி போட்டுக்கொண்டு புணர்ந்தார்கள். புதிய கதைகள் ஒன்றுகூட இருக்கவில்லை. புணர்ச்சியின் தொழில்நுட்பத்தை விளக்கப் பெரும் உழைப்பு விரயமாக்கப்பட்டது. காலத்தால் மாற்ற முடியாத, விதிக்கப்பட்டுவிட்ட பாத்திரங்களை திரும்பவும் ஏற்றுக்கொண்டு கருப்பு மக்கள் மற்றவர்களை மகிழ்வித்தார்கள். மாப்பஸானின் தேவடியாக்கள் தொழிற்சங்கத் தலைவர்களின் இரும்புக் கரங்களில் மயிர்சிலிர்த்தார்கள். செக்கோவ், கொகலுடைய உயிர்ப்புமிக்க விவசாயிகள் எல்லோரும் சோர்ந்து, ஆர்வமிழந்து, தம் இரத்ததின் தாளங்களைப் புறந்தள்ளிவிட்டு திண்ணைகளில் உட்கார்ந்து கிடந்தார்கள். புஷ்கினுடைய பெருமைமிக்க கொள்ளைக்காரர்களும் கலகக்காரர்களும், ஒளிமங்கிய கண்களோடு சோர்ந்து வீழ்ந்து கிடப்பதை விரும்பியது போலத் தெரிந்தது. அவர்கள் தமக்குள்ளாகவே ஒருவரையொருவர் கொலை செய்துகொண்டு, வயதான பெண்களை உறிஞ்சிக்கொண்டு, வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து சில்லறைகளைத் திருடிக்கொண்டு, வெட்டி வீறாப்புப் பேச்சில் மயங்கி அடிமையாகிக் கிடந்தார்கள். பெரிய மனிதர்கள் தொலைபேசியிலும் தனிப்பேச்சுகளிலும் வெற்று வார்த்தைகளை, ஏதோ அவை தமக்காகவே காத்திருக்கிற டேப் ரிக்கார்டருக்குள் பத்திரமாக போய்ச் சேர்ந்துவிடும் என்பது போல கேட்பவர்கள் காதுகளில் திணித்துக் கொண்டிருந்தார்கள். எங்கும் எதிலும் நிஜமான கண்ணீர் இல்லாமல் இந்த அகோரமான சோகம் படிந்திருந்தது.
கருப்பர்கள் எல்லோரும் மறுபடியும் தனியே பிரித்து வைக்கப்பட்டு நிற வெறியின் திரைகள் இழுத்து விடப்பட்டன. உணவகங்களில், விமானங்களில், சாதாரணமாக நாகரீகமாக நடந்துகொண்டவர்களின் வீடுகளிலும்கூட அச்சமும் பதுங்கிக்கொள்வதும், பாராமுகமாக திரும்பிக் கொள்வதும் மீண்டும் தலையெடுத்தன. அச்சத்தைப் பற்றிய ஒப்புதல்கள், பிரார்த்தனைகளாக வெளிப்பட்ட வெறுப்பின் கூச்சல்கள், மலரவேண்டிய காதல்கள், நம்பிக்கைகள், தேவைகள், கொலைகள், வஞ்சகங்கள், பரிகாரங்கள், ஒளிக்காமல் வெளிப்படுத்திய கோபங்கள் இப்படி எண்ணற்ற விஷயங்களைப் பற்றிய கதைகள், கோடிக்கணக்கான கதைகள் அந்தக் காலத்தில் கிழக்கில் மடிந்துபோயின. அறிமுகமில்லாத ஒரு நபரை அணுகி, “நண்பரே, எனது நானை நிறைவு செய்துகொள்ள உங்களுடைய கதையும் கொஞ்சம் தேவை”, என்று கேட்டிருந்தால் அவரை அலறவிட்டு என்னைக் கொலைகாரன் என்று பழிக்க வைத்த பரிதாபத்திற்குத் தள்ளிவிட்டவனாகியிருப்பேன். ஆனால், இதைச் செய்யாமலிருப்பதும் எனக்குச் சிரமமாக இருந்தது. கதைசொல்லி என்ற கடமையில் இருந்து தவறுவது பெரிய கொடுமை. புதிய பார்வைகள், பரிமாணங்கள் தேவைப்படுகிற காலங்களில் சுற்றிலும் கூர்ந்து கவனிப்பதோடு நின்றுவிடாமல் பேசப்பட வேண்டிய கதைகளையும் கட்டாயம் சொல்லிவிட வேண்டும். ஆனால், அந்தக் காலத்தில், கிழக்கில், இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் யாருக்கும் இருக்கவில்லை. புதிய பார்வைகள், வடிவங்கள், புத்துயிர்ப்பு தேவையாயிருந்தது. அவற்றைத் தேடி கிழக்கை விட்டு வெளியேறினேன்.
ஒரு சிறிய விளக்கம். நிறவெறிக் கட்டுப்பாடுகளுக்கும் வடிவத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
எல்லாவிதமான தொடர்புகளும் இருகிறது.
வெள்ளையனாக மாறிவிட விரும்புகிறாயா?
ஒரு கதைசொல்லிக்கு அவன் பேசுகிற உலகத்தைப் பற்றிய புனைவுகளுக்கு மட்டுமல்ல, அந்த உலகத்திற்குமே வாய்ப்புகள் வேண்டும்.
அப்படியென்றால், கருப்பனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறாயா?
மற்றவர்கள் கிழித்து வைத்திருக்கிற எல்லைகளை மீறுவதில் என்னிடம் கூடுதல் வேகம் இல்லை என்பது குறித்தே வெட்கப்படுகிறேன்.
ஒருங்கிணைப்பின் மீது உனக்குக் காதல் இருக்கிறது. அப்படித்தானே?
ஆரோக்கியமான கற்பனையால் சபிக்கப்பட்டவன்.
கற்பனைக்கும் நிற வரையறுப்புகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
எல்லாவிதமான தொடர்புகளும்.
இன்னும் ஒரு சிறிய விளக்கம். தனி மனித சுதந்திரம் பற்றிய உனது அபிப்பிராயம் என்ன?
புதிய கதைகளைக் கட்டுவதற்கு, தேடுவதற்கு எந்தத் தடைகளும் இருக்கக்கூடாது.
இந்தக் கதைக்கு நீ போதிய கவனம், உழைப்பு செலுத்தினாயா?
முன்னொரு காலத்தில் சான்ஃப்ரான்சிஸ்கோ – வில் ஒரு திருமணம் நடந்தேறியது.
(தொடரும் … )
குறிப்பு: இக்குறுநாவல் நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4, மே 1998 – ல் எனது மொழியாக்கத்தில் வெளிவந்தது. சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க கறுப்பின எழுத்தாளரான ரால்ஃப் எல்லிசனின் Invisible Man மற்றும் Juneteenth இரு நாவல்களையும் மீண்டுமொருமுறை வாசித்தபோது, இதையும் தூசிதட்டி எடுத்து வாசிக்க நேர்ந்தது. பகிர்ந்துகொள்ளும் விருப்பத்தில் இங்கு. இக்குறுநாவலின் ஆசிரியர் ரிச்சர்ட் ரைட்(1908 – 1960) அமெரிக்க கறுப்பின எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். ரிச்சர்ட் ரைட் – டின் Eight Men (Thunder’s Mouth Press, New York, 1987) என்ற குறுநாவல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
அவன் சின்னஞ் சிறிய பையனாக இருந்தபோதே அது எல்லாம் ஆரம்பித்துவிட்டது. அப்போதிருந்தே அவன் நிழல்களைக் கண்டு பயப்பட ஆரம்பித்துவிட்டான். அவசரப்பட்டு விடாதீர்கள். அவன் பயந்தது தகதகக்கும் அந்தச் சூரியன் இந்த நிலத்தின் மீது படியவிட்ட அழகான நிழலுருவங்களைப் பார்த்து அல்ல. பாவம், அவை என்ன செய்யும். ஆபத்தில்லாதவை. அதோடு, கோடையின் கண்கூசச் செய்யும் வெயிலில் அவற்றைத் துரத்திப் பிடித்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், மற்ற எவர் கண்களுக்குமே படாத அவனுக்கு மட்டுமே தெரிகிற மர்மமான நிழல்கள் சில இருந்தன. அவை, அவனுடைய அச்சத்தின் நிழல்கள். ஆக, இந்தப் பையனுக்கு அப்படியான நிழல்கள் இருந்தன. அவற்றில் ஒன்றைக் கொல்வதற்கு அவன் வாழ்ந்திருந்தான்.
சால் சாண்டர்ஸ் தலைநகர் வாஷிங்டன் – னிலிருந்து சில மைல்கள் தொலைவிலிருந்த தெற்கின் சிறிய டவுன் ஒன்றில் கருப்பாக பிறந்தான். அதாவது, அவன் பிறந்த உலகம் இரண்டாக பிளவுண்டிருந்தது. ஒன்று வெள்ளை உலகம்; மற்றது கருப்பு உலகம். இரண்டு உலகங்களுக்கும் நடுவில் கோடி மைல்கள் உளவியல் இடைவெளி இருந்தது. ஆக, ஆரம்பத்திலிருந்தே சால் தனது கருப்பு உலகிலிருந்து எட்டிப் பார்த்தபோது அவனுக்குச் சொந்தமில்லாத அவனால் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு வெள்ளை உலகின் நிழற்கோடுகளே மங்கலாகத் தெரிந்தன.
அப்புறம் என்ன நடந்ததென்றால் சாலுக்கு அவனுடைய தாயே கூட உருவில்லாத ஒரு நிழலாகவே ஆகிப்போனாள். அவனுடைய நினைவில் அவளுடைய உருவத்தை பதித்துக் கொள்ளும் முன்னமே வெகுகாலத்திற்கு முன்னதாகவே அவள் மறைந்துவிட்டாள். அவனுடைய தந்தைக்கும் இதே கதி விதிக்கப்பட்டிருந்தது. அவனும் பையன் அவனுடைய உருவத்தை மூளையில் செதுக்கிக் கொள்வதற்கு முன்னதாகவே மாண்டு போனான்.
நெருங்கிப் பழகி அறிந்துகொள்வதற்கு முன்னமே, அவன் கண் முன்பாகவே நபர்கள் காற்றில் கரைந்து போனதால் உயிர்ப்புள்ள மனிதர்களை, ஆளுமை கொண்ட நபர்களை அறிந்துகொள்ள அவனுக்கு வாய்க்கவே இல்லை. மனிதர்கள் அவனுக்கு நிச்சயமின்மையின் குறியீடாக ஆகிப் போனார்கள். வாழ்வின் நிச்சயமற்ற தன்மை அவனுக்குள் பதிந்து போனது. உருவற்ற, தெளிவில்லாத நிகழ்வு ஒன்று அவன் மீது கவியக் காத்திருப்பது போன்ற ஒரு உணர்வு நிரந்தரமாக அவனைப் பிடித்துக் கொண்டது. தொடர்பற்ற அந்நியர்களாகவே ஆகிவிட்ட சகோதரர்கள் ஐந்து பேரும் இரண்டு சகோதரிகளும் அவனுக்கு இருந்தார்கள். அத்தனை பேரையும் காப்பாற்றிக் கரைசேர்க்க யாரும் இல்லாததால் உறவினர்கள் ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். சாலை அவனுடைய பாட்டி எடுத்துக்கொண்டாள். எப்போதும் ஒரு டவுனிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டே இருந்தவள் அவள். அதனால்தான் என்னவோ அழகிய நிலப்பரப்புகளும்கூட சாலுக்கு எந்த உணர்ச்சிப் பிடிப்பையும் தராமல் போயின.
கொஞ்சகாலத்திற்கு தங்கியிருந்துவிட்டு நகர்ந்துவிடவேண்டிய உயிர்ப்பற்ற வெளிகள் என்பதற்கு மேலாக தெற்கின் அந்த சிறிய டவுன்கள் அவனுக்கு பெரிய அர்த்தம், கிளர்ச்சி எதையும் தந்துவிடவில்லை. பன்னிரண்டு வயது இருக்கும்போதே எல்லா புறயதார்த்தமும் அவனுக்கு வெறும் நிழல்களாக ஆகிப் போயின. அவனுடைய பெற்றோர்கள், அவன் விழுந்துவிட்ட கருப்புத் தீவைச் சூழ்ந்திருந்த வெள்ளை உலகம், வரிசையாக நகர்ந்துகொண்டே இருந்த தூசிபடிந்த சின்னச் சின்ன டவுன்கள் என்று எல்லா யதார்த்தத்தையுமே உள்ளீடற்ற வெறும் பெயர்களாக, சாரமற்ற பொருட்களாக, ஒரு நொடிப்பொழுது நிகழ்ந்துவிட்டு ஆழங்காணமுடியாத சூன்யத்தில் கரைந்து போய்விடுகிற சிறு துகள்களாக பார்க்கத் தொடங்கினான்.
சால் சோம்பேறியோ மந்தமானவனோ அல்ல. என்றாலும் பள்ளியில் மூன்றாவது க்ரேடை எட்டுவதற்கு அவனுக்கு ஏழு வருடங்கள் பிடித்தது. அவனுடைய வாழ்க்கையில் வந்துபோனவர்கள் எவரும் படிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டவர்களில்லை. சாலும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை. பதினாலு வயது ஆனபோதும் மூன்றாவது க்ரேடிலேயே இருப்பது அவனுடைய சூழலில் சாதரணமான ஒன்று. சாலும் மற்ற எல்லோரையும் போலவே சாதாரணமானவனாக இருப்பதையே விரும்பினான்; சராசரியானவனாகவே இருந்தான்.
அப்புறம், சாலுடைய பாட்டி, எப்போதும் தன்னுடனேயே இருப்பாள் என்று அவன் நம்பியவள். திடீரென்று ஒருநாள் இறந்துபோனாள். அந்த நொடியிலிருந்து கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல அவனுக்கு எதுவும் புரியாமல் போனது. வெள்ளையர்களிடம் வேலைக்குப் போக ஆரம்பித்தான். திடீரென்று இப்படி வெள்ளை உலகத்துக்குள் போய் விழுந்தவனுக்கு அந்த உலகம் சுத்தமாக பிடிபடவில்லை. அவனுடைய நிழல்கள் இப்போது பயங்கர உருவங்கள் எடுத்து எங்கு சென்றாலும் அவனை சுற்றிச் சூழ்ந்து கொண்டன. அவனுக்கும் எங்கோ ஏதோவொரு இடத்தில் மறைந்திருந்த சூரியனுக்கும் இடையில் ஏதோவொரு பொருள் அந்த பயங்கரக் கரிய நிழலைக் கவித்து நின்றது.
வேலைக்குச் சேர்ந்த இடங்களில் விசித்திரமான அந்த வெள்ளையர்கள் அவனை ஏதோ இழிந்த பொருளைப்போல பார்ப்பதை சீக்கிரத்திலேயே உணர்ந்துகொண்டான். ஒருநாளும் அவன் தன்னைத் தாழ்ந்தவனாக கருதியதில்லை. ஆனால், இப்போது சுற்றிலும் ஒருமுறை பார்த்தபோது மற்ற கருப்பர்கள் எல்லோரும் தங்கள் மீது பதிக்கப்பட்ட இந்தத் தாழ்வான மதிப்பை சத்தமில்லாமல் ஏற்றுக்கொண்டிருப்பதைக் கண்டான். அப்படியிருக்கும்போது இவன் யார் அதை எதிர்க்க? வேறு எந்த வழியும் இல்லாததால், அவனோ மற்ற யாருமோ அறிந்திராத சக்திகளால் இயக்கப்பட்ட அவன் வாழ்வில் எப்போதும் வந்து போய்க் கொண்டிருந்த அந்தப் பரந்த நிழல் உலகின் ஒரு பகுதி என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டான்.
ஆனால், வெகு சீக்கிரமே அவனுடைய கவலைகள், அச்சங்கள், எரிச்சல்கள் அத்தனையும் அவனுடைய உழைப்பை உறிஞ்சிக்கொண்டு வெறும் ரொட்டியை வீசிய அந்த வெள்ளை நிழல் உலகின் மீது குவிய ஆரம்பித்தன. ஏனென்று தெரியாமலேயே குதூகலமிழந்து சோகமாகத் திரிந்தவன் இப்போது தன்னை அச்சம் கொள்ளவைத்த அந்த நிழல் உலகின் மீது தன்னுள் பொதிந்து கிடந்த துயரத்தனையும் இறக்கிவைத்தான். இதைச் செய்யாமல் விட்டிருந்தால், தன்னுடைய சுமையை இறக்கி வைப்பதற்கு ஒரு வழியைக் கண்டிருக்காமல் விட்டிருந்தால் எப்போதோ அவன் தற்கொலை செய்துகொண்டிருப்பான். கடைசியில் அந்த யோசனையையும் அவன் விட்டுவைக்கவில்லை.
ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. பதினைந்து வயதானபோது சால், தான் அப்போது வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கைதான் தனக்கு விதிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டான். அவனைச் சுற்றிலும் இருந்த பொருட்கள் அத்தனையும் வெறும் நிழல்கள் என்ற உணர்வை விரட்டியடிக்கவோ மறந்துவிட்டு நிம்மதியாக இருக்கவோ வழியே இல்லை என்பதை உணர்ந்துகொண்டான். ஆனால், தன் இனத்தவரோடு, கருப்பு மக்களோடு இருந்தபோது அவன் தன்னை மறந்திருந்தான். அந்த சமயங்களில்தான் அவன் ஓரளவு மகிழ்ச்சியோடு இருந்தான். ஆனால், வயது ஏற ஏற அவனது அச்சங்கள் கூடிக்கொண்டே இருந்தன. அவனுடைய நண்பர்கள் இதையெல்லாம் கவனிக்கவே இல்லை. சொல்லப்போனால், சாலுடைய நண்பர்கள் அவனை மிகவும் நேசித்தார்கள். சால் எல்லோரிடமும் அன்பாகவே இருந்தான். இனிமையாகப் பழகினான். அடுத்தவர் பேச்சை எப்போதும் காதுகொடுத்துக் கேட்டான். அவனுடைய இனிய முகம், அமைதி, பணிவு இதெல்லாமும் அவனுடைய அச்சத்தின் விளைவுகள் என்பதை ஒருவரும் சந்தேகிக்கக்கூட இல்லை.
வாழ்க்கை அப்படியே போய்க்கொண்டிருக்கவில்லை. கொஞ்ச நாளில் சாலிடமும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதை அதிர்ஷ்டம் என்பதா அல்லது துரதிர்ஷ்டம் என்று சொல்வதா தெரியவில்லை. சொல்வது சிரமம். சால் குடிக்கப் பழகிக்கொண்டான். ஒரு இரண்டு பெக் விஸ்கி உள்ளே போனதும் நரம்புகள் தளர்ந்து உளைச்சல்கள் குறைவது போல உணர்ந்தான். உலகம் இப்போது அதன் முப்பரிமாணத்தில் அழகாகத் தெரிந்தது. நிழல்கள் எங்கே போய் ஒளிந்தன என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. விஸ்கி செய்கிற மாயம்தான் என்ன!
சால் குடிப்பதை விரும்ப ஆரம்பித்தான். சனிக்கிழமை இரவு கையில் சம்பளம் கிடைத்ததும் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதை வழக்கமாக ஆக்கிக்கொண்டான். அந்த நேரங்கள் அவனுக்கு இதமாக இருந்தன. மகிழ்ச்சியும் தெம்பும் தந்த விஸ்கி இல்லாமல் வாழ்க்கை நிறைவாக இருக்காது என்று உணர ஆரம்பித்தான். ஆனால், உண்மையில் அது அப்படி இருக்கவில்லை. விஸ்கி அவனை மந்தமாக்கியது; சோர்வை அதிகரித்தது. அவனை அச்சுறுத்தி இறுக வைத்துக் கொண்டிருந்த நிழல்களைக் குறைத்து, அவற்றின் வெறியைத் தணித்தது.
நிதானத்தில் இருக்கும்போது வெள்ளை நிழல் உலகின் அருகாமையில் அவன் சிரித்ததே இல்லை. ஆனால், ஒன்றிரண்டு பெக் விஸ்கி உள்ளே போனதும் அங்கும்கூட தன்னால் சிரிக்க முடிவதை கண்டுகொண்டான். நீக்ரோக்களின் அவலமிக்க வாழ்க்கை பற்றி யாரவது பிரசங்கம் செய்தால் அவன் கவலையில் மூழ்கிவிடுவதில்லை. விஸ்கி எடுத்துக் கொள்வான். சோகத்தின் சுமை இறங்கிவிடும். ஒரு வெள்ளைப் பெண்ணோடு தனியாக இருக்கும்போது, அவள் வீறிட்டுக் கத்திவிட்டால் உனக்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது என்று அர்த்தம்; நீ ஒன்றுமே செய்திருக்கவில்லை என்றிருந்தாலும்கூட நிச்சயம் கொல்லப்படுவாய் என்றெல்லாம் சொல்லக் கேட்டபோதும்கூட அவன் அலட்டிக்கொள்வதில்லை. கருப்பர் பகுதியில் போலீஸ் கார்கள் சைரன்கள் அலற சீறிக்கொண்டு போவது, வெள்ளை போலீஸ்காரர்கள் நீக்ரோக்களை அடித்து இழுத்துச் செல்வது, எல்லாம் சாலுக்கு பார்த்துப் பார்த்து பழகிவிட்டன. ஒரேயொருமுறை அதை நினைத்து அவனுக்கு கடுமையான கோபம் வந்தது. அதே கதி தனக்கும் ஒருநாள் நேரக்கூடும்; நிழல்கள் தன்னையும் கொத்திச் சென்றுவிடக்கூடும் என்று உணர்ச்சிவசப்பட்டான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அந்த நினைப்பே ஆபத்தானது என்று அவனை பயமுறுத்தினார்கள். எப்போதும் கருப்பர்கள் தோல்வியடைவது எழுதிவைக்கப்பட்டுவிட்டது என்று புத்தி சொன்னார்கள். அவனும் புரிந்துகொண்டான். விஸ்கியை விழுங்கினான். சற்று நேரத்தில் எல்லோரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு இரவு லேசான போதையில் இருந்தபோது – அப்போது அவனுக்கு முப்பது வயது; வாஷிங்டனில் இருந்தான் – அவனுக்கு திருமணம் முடிந்தது. அந்தப் பெண் சாலுக்குப் பொருத்தமானவளாக இருந்தாள். சாலைப் போலவே அவளும் குடிப்பதை விரும்பினாள். பிணக்குகள் எதுவும் இல்லாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இப்போது நிலைமைகள் சற்று பரவாயில்லை என்பது போல சாலுக்குத் தோன்றியது. எப்போதும் சுற்றிவளைத்து நெருக்கப்பட்டது போன்ற உணர்வை உதறித் தள்ளிவிட முடிந்தவரைக்கும், எப்போது என்ன நடக்கும் என்கிற நிச்சயமின்மையை நசுக்கிவிட முடிந்தவரைக்கும், வாழ்க்கை துயரமில்லாமல் போனது.
சால் பார்த்த வேலைகள் எல்லாம் மிகவும் சாதாரணமானவை. அவன் முதலில் வேலைக்குச் சேர்ந்தது ஒரு பண்ணையில். அவனுடைய பாட்டி இறந்தபிறகு பதினாலு வயதில் வாஷிங்டனுக்கு போய்ச் சேர்ந்தான். ஒரு வேலையில் நிலையாக இருக்கவில்லை. பலவிதமான வேலைகளில் இருந்துவிட்டு கடைசியில் வயதான ஒரு வெள்ளைக் கொலெனலிடம் டிரைவராகவும் சமையல்காரனாகவும் சேர்ந்தான். இங்கு சராசரியாக வாரத்திற்கு இருபது டாலர்கள் தேற்ற முடிந்தது. கொலெனல் அவனுக்கு உணவும், சீருடையும் தங்குவதற்கு இடமும் தந்தான். சால் அங்கு ஐந்து வருடங்கள் வேலை செய்தான். கொலெனலும் மதுவை விரும்பினான். சில நேரங்களில் இருவரும் சேர்ந்தே குடித்தார்கள். ஆனால், கொலெனல் குடித்தாலும், தன்னிடம் நன்றாக நடந்துகொண்டாலும் அவன் நிஜமல்ல, நிழல்; எந்த நேரத்திலும் தன் மீது பாய்ந்துவிடக்கூடும் என்பதை மட்டும் சால் ஒருபோதும் மறந்துவிடவில்லை.
ஒருநாள், விஸ்கியின் போதையில் இதமாக உணர்ந்தபோது சால் கொலெனலிடம் சம்பளத்தை உயர்த்தச் சொல்லி கேட்டான். விலைவாசி ஏறிக்கொண்டே போவதையும் சம்பளம் போதவில்லை என்பதையும் சொன்னான். ஆனால், கொலெனல் அன்று விறைப்பாக இருந்தான். முடியாது என்று முகத்திலடித்ததுபோல சொல்லிவிட்டான். சால் இதை எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றத்தில், அதிர்ச்சியில் அந்த நிமிடமே வேலையை உதறிவிட்டான். விஸ்கி தந்த போதையில் ஒரு நிமிடம், ஒரேயொரு நிமிடம் நிழல்களின் உலகம் மறைந்துவிட்டது என்று நினைத்துவிட்டான். ஆனால் சம்பளத்தை உயர்த்திக்கேட்டு மறுக்கப்பட்டவுடன் தனது நினைப்பு எவ்வளவு தவறு என்பதை உணர்ந்துகொண்டான்.
அதிக சம்பளம் கேட்டிருக்கக்கூடாது. கொலெனல் நல்ல மனிதன் என்று நம்பியிருக்ககூடாது. அவன் ஒரு நிழல் என்பதை மறந்திருக்கக்கூடாது.
அடுத்து, ஒரு பெரிய மருந்து கம்பெனியில் சேர்ந்தான். வீடு வீடாகச் சென்று எலிகளுக்கும் கரப்பான்பூச்சிகளுக்கும் மருந்து வைக்கவேண்டியது அவன் வேலை. தன்னுள் இருக்கும் ஏதோ ஒரு இயல்புக்குப் பொருத்தமான வேலை என்று அவனுக்குத் தோன்றியது. செத்துப்போன எலிகளின் உடல்கள் நிழல்கள் அல்ல, நிதர்சனமான நிஜங்கள் என்பதைப் பார்த்தான். தான் செய்த வேலைக்குப் பருண்மையான விளைவுகள் உண்டானது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. சமூகத்தின் ஒப்புதலோடு கொலை செய்வது வாழ்க்கையில் என்றுமில்லாத திருப்தியைத் தந்தது. அதோடு, அவனுடைய முதலாளி கேட்டதும் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தான். இப்போது தன் இஷ்டப்படி குடிக்க ஆரம்பித்தான். யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை.
ஆனால், ஒருநாள் காலை, இரவு முழுக்கக் குடித்திருந்துவிட்டு எரிச்சலோடு விறைப்பாக இருந்தவனிடம் அவனுடைய முதலாளி அவனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டான். அந்தக் குற்றச்சாட்டை சால் உடனே மறுத்துப் பேசினான். ஒரு வாக்குவாதம் நடந்தது. சால் வேலையை விட்டுவிட்டான்.
இரண்டு வாரங்கள் வேலை தேடி வேட்டையாடியதில் நேஷனல் கதீட்ரல் என்ற மதநிறுவனத்தில், சர்ச்சில் ஜேனிட்டராக வேலை கிடைத்தது. எந்தத் தொந்தரவும், யாருடைய தொல்லையும் இல்லாது, அவன் விரும்பியது போன்றே அவனைத் தனிமையில் விட்ட வேலை அது. தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும். முதலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடையைத் துடைத்து சுத்தம் செய்யவேண்டும். அடுத்து நூலகம். கடைசியாக, பாட்டுப் பயிற்சி நடக்கும் அறையை சுத்தம் செய்யவேண்டும்.
ஆனால், வரிசை வரிசையாக புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த நூலகத்தை சுத்தம் செய்யும்போதுதான் அவனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. அங்கு ஒரு நிழல் – ஒரு வெள்ளைப் பெண், எப்போதும் அவனை ஒரு மாதிரியாக வெறித்துக் கொண்டிருந்தாள். நூலகம் தனியான ஒரு கட்டிடத்தில் இருந்தது. அவன் சுத்தம் செய்யப்போகும் போதெல்லாம் அவனும் அந்தப் பெண்ணும் தனியாகவே இருந்தார்கள். பொன்னிறம், நீலக் கண்கள், ஐந்து அடி மூன்று அங்குலம் இருந்த உருவத்தில் சிறிய அந்தப் பெண் தோராயமாக ஒரு 100 பவுண்டுகள் கனத்திற்கு இருப்பாள்.
சாலுடைய முதலாளி முதலிலேயே அவனை எச்சரித்திருந்தார். “அவள் ஒரு கிறுக்கி,” என்று சொல்லியிருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் நூலகத்துக்குப் பொறுப்பாக இருந்த அந்தப் பெண்ணோடு எந்தத் தகராறும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று எச்சரித்திருந்தார். சாலுக்கு மட்டும் எந்தச் சண்டையில் என்ன விருப்பம். அவளுடைய பெயர் என்ன என்பதைக்கூட அவன் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், பல சந்தர்ப்பங்களில் ஏதோ உறுத்த துடைப்பதை நிறுத்திவிட்டுத் தயங்கி நிற்பான். சற்று தெம்பை வரவழைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தால், அவள் அவனை வெறித்துக் கொண்டிருப்பாள். சட்டென்று, ஏதோ வெட்கம் வந்தவளைப் போல வேறு பக்கம் திரும்பிக் கொள்வாள். “அட சனியனே, என்னிடம் என்ன இருக்கிறது இவளுக்கு?” என்று சங்கடத்தில் நெளிவான். காலை வணக்கம் சொல்வதைத் தவிர அவள் அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அதையும்கூட ஏதோ வேண்டாவெறுப்பாக சொல்வதைப் போல சொல்வாள். சால், ஒருவேளை அவள் தன்னைக் கண்டு பயப்படுகிறாளோ என்றுகூட யோசித்தான். ஆனால், அவனைக் கண்டு பயப்பட என்ன இருக்கிறது? தன்னைக் கண்டு பயந்தவர்கள் என்று வாழ்க்கையில் ஒருவரைக்கூட அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதுவரையில் அவன் எந்தப் பெரிய தொந்தரவு எதிலும் மாட்டிக்கொண்டது இல்லை.
ஒருநாள் காலை, பெருக்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் அதே உறுத்தல் அவனைப் பிடித்து நிறுத்தியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தான். அவள் அவனை வெறித்துக் கொண்டிருந்தாள். அசையாமல் அப்படியே நின்றான். அவளும் பார்வையைத் திருப்பவில்லை. ஒரு பத்து நொடிகள் இருவரும் அப்படியே இருந்தார்கள். சட்டென்று அவள், ஏதோ பயத்தாலோ கோபத்தாலோ வெகுண்டுவிட்டவளைப் போல எழுந்து விறுவிறுவென்று நடந்து அறையைவிட்டு வெளியேறினாள். சால் அரண்டு போய்விட்டான். ஆனால், சீக்கிரத்திலேயே சம்பவத்தை மறந்துவிட்டான். “இந்தச் சனியனுக்கு என்ன வந்து தொலைத்தது?” என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.
மறுநாள் காலை முதலாளி அவனைக் கூப்பிட்டனுப்பினார். மெதுவான குரலில், அமைதியான தொனியில் – அது அவனுக்கு எந்தப் பெரிய வித்தியாசமும் தந்துவிடவில்லை. எரிச்சலும் அச்சமுமாகவே இருந்தது – நூலகத்தில் இருந்த அந்தப் பெண், அவளுடைய மேசைக்கடியில் அவன் சுத்தம் செய்வதே இல்லை என்று புகார் செய்திருப்பதாகக் கூறினார்.
“அவளுடைய மேசைக்கு அடியிலா?” சால் திகைத்துவிட்டான்.
”ஆமாம்,” அவனுடைய திகைப்பைக் கண்டு ஆச்சரியத்தோடு சொன்னார்.
“ஆனால், நான் ஒருநாள்கூடத் தவறாமல் அவளுடைய மேசைக்கடியில் சுத்தம் செய்கிறேனே.”
“சரி சரி சால். நான் தான் முதலிலேயே சொல்லியிருக்கிறேனே. அவள் ஒரு கிறுக்கி,” முதலாளி அவனை சமாதானப்படுத்தினார். “அவளோடு எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளாதே. உன் வேலையை நீ சரியாகச் செய். அது போதும்.”
“சரி சார்.”
அவள் எப்போதும் தன்னையே வெறித்துக்கொண்டிருந்தாள் என்பதை அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு நிமிடம் அவனுக்குத் தோன்றியது. ஆனால், அவனுக்குத் தெம்பு வரவில்லை. அவனுடைய கருப்பு நண்பர்களாக இருந்திருந்தால் இந்நேரம் சாதாரணமாக சொல்லிவிட்டிருப்பான். ஆனால், ஒரு விசித்திரமான நிழலைப் பற்றி இன்னொரு நிழலிடம் எதற்குச் சொல்ல வேண்டும்?
அன்று சம்பளத் தேதியாகையால் அவனுடைய வாரக்கூலியை பெற்றுக்கொண்டான். அந்த இரவு அற்புதமாகக் கழிந்தது. நினைவில் இருந்த எல்லாமும் கரைகிற வரைக்கும் கிறுகிறுத்து தள்ளாடுகிற வரைக்கும் குடித்தான். இப்போதெல்லாம் கையில் பணம் கிடைக்கிற போதெல்லாம் குடிக்க ஆரம்பித்திருந்தான். குடிப்பது அவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. அப்போதுதான் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். ஆனால் யாரையும் தொந்தரவு மட்டும் செய்ய மாட்டான். ஆனால், விடியல் எப்போதும் சக்கையாக உலர்ந்துபோனவனையே எழுப்பியது. முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு இப்போது அவனை நிழல்கள் சுற்றி முற்றுகையிட்டிருப்பதைப் போல உணர்ந்தான். எழுந்து வேலைக்குப் போகவேண்டும் என்கிற நினைப்பே எரிச்சலாக இருந்தது. ஆழமான தூக்கத்திற்காக ஏங்கினான். ஆனால் என்ன செய்வது. இது நல்ல வேலை. எப்படியும் இதில் ஒட்டியிருக்க வேண்டும். ஆமாம், போய்த்தான் ஆகவேண்டும்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடையைத் துடைத்து முடித்ததும் – அதற்குள் சோர்ந்துவிட்டிருந்தான்; வெகுவாக வியர்த்துக் கொட்டியது – நூலகத்திற்குக் கிளம்பினான். அங்கு ஒருவரும் இருக்கவில்லை. தரையைத் துடைத்து முடித்து புத்தகங்களை தூசு தட்ட நகர்ந்தபோது அவள் அறைக்குள் வந்த காலடிச் சத்தம் கேட்டது. அரைத் தூக்கத்தில் சோர்ந்துபோய் இருந்தவனுக்கு ஒருவிதமான படபடப்பு தொற்றிக்கொண்டது. கைகள் நடுங்கின. அவனுடைய இயல்பான அசைவியக்கங்கள் வழக்கத்தைவிட வேகமாக இருந்தன. “என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகச் சொன்ன தேவடியா நீ தானே? ம்ம்ம்.” எரிச்சலோடு சொல்லிக் கொண்டான். கொஞ்ச நேரம் எந்த நினைப்பும் இல்லாமல் தூசு தட்டிக்கொண்டிருந்தான். திடீரென்று மறுபடியும் அவள் தன்னையே வெறித்துக் கொண்டிருப்பது போல உறுத்தியது. திரும்பிப் பார்க்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு சில நிமிடங்களுக்கு மேலாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியவில்லை. மெதுவாகத் திரும்பினான். அவளுடைய இடத்தில் உட்கார்ந்திருந்தவள் அவனை கண் கொட்டாமல் வெறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ சொல்ல வருவது போலத் தெரிந்தது. அவளைப் பார்த்துக்கொண்டு என்ன சொல்லப் போகிறாள் என்று காத்துக் கொண்டிருப்பதைத் தவிர அவனுக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.
“என் மேசைக்கடியில் துடைக்க உனக்கு என்ன நோகிறதா?” கட்டுப்படுத்திக்கொண்ட சற்றே நடுங்கிய குரலில் கேட்டாள்.
“மேடம்,” மெதுவாகச் சொன்னான். “சற்று முன்பாகத்தான் அங்கு துடைத்தேனே மேடம்.”
“இங்க வந்து பார்,” விரலைக் கீழே காட்டி சொன்னாள்.
புத்தகத்தை அலமாரியில் திரும்ப வைத்தான். இதற்கு முன் அவள் அவனிடம் இத்தனை வார்த்தைகள் பேசியது இல்லை. அவள் முன்பாக போய் நின்றவன் அதிர்ந்துபோனான். அவனுடைய கண்கள் பார்த்ததை மூளை ஆட்சேபித்தது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. கால்களைப் பரத்தி இடுப்புக்குக் கீழிருந்த துணியை தொடைகளுக்கு மேலாக ஏற்றி உட்கார்ந்திருந்தாள். அவளுடைய வட்ட நீல விழிகளிலிருந்து இறங்கி வெள்ளை வெளேரென்றிருந்த கால்களை வெறித்தான். மேலே ஏற ஏற சதைப்பற்று கூடியிருந்த தொடைகள் செங்குத்தாக, இறுகியிருந்த இளஞ்சிவப்பு உள்ளாடை மறைத்த ஒரு V – யில் முடிந்தன. திரும்பவும் அவள் கண்களை நோக்கினான். அவளுடைய முகம் சிவந்திருந்தது. ஏதோ அவள் விரும்பாத ஒரு காரியத்தை வலுக்கட்டாயமாக செய்ய வைக்கப்பட்டவளைப்போல இறுக்கமாக உட்கார்ந்திருந்தாள். சால் அதிர்ந்துபோய் நின்றிருந்தான்.
“கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் உங்கள் மேசைக்கு அடியில் துடைத்தேனே.” சம்பந்தமில்லாமல் உளறுகிறோம் என்ற உறுத்தலுடனே முனகினான்.
“இப்போது இங்கே தூசு சேர்ந்திருக்கிறது.” வெடுக்கென்று சொன்னாள். அவளுடைய கால்கள் இன்னும் அகலமாக விரிந்ததைப் பார்த்தவனுக்கு அவள் நிர்வாணமாகக் கிடந்தது போலத் தோன்றியது.
என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. இந்த அளவுகு அவன் அவமானப்பட்டதில்லை. பயந்து திணறியது இல்லை. கோபம் மெதுவாக அவன் தலைக்கு ஏறிக்கொண்டு இருந்தது. ஆனாலும் வெளிப்படுத்துகிற தைரியம் வரவில்லை.
“பாருங்கள் மேடம்,” வெறுப்பையும் ஆத்திரத்தையும் அடக்கிய தொனியில் பேசினான். “என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.”
“சொன்ன வேலையைச் செய்யாமல் என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறாய்.” அவள் இப்போது அனல் கக்கினாள். “கருங்குரங்கே! அதற்குத்தானே உனக்கு சம்பளம் கொடுக்கிறோம்.” அவளுடைய கால்கள் இன்னும் விரிந்தே கிடந்தன. எந்த நிமிடமும் பாய்ந்து அவனுடைய உடல்மீது தொடைய அழுத்திவிடத் தயாராக இருப்பது போல உட்கார்ந்திருந்தாள்.
ஒரு நிமிடம் அவன் அசையாமல் அமைதியாக நின்றான். இதற்கு முன் வாழ்க்கையில் அவன் கருங்குரங்கு (nigger) என்ற வசவை வாங்கியதில்லை. கருப்பர்களை ஆகக் கீழாக அவமானப்படுத்த வெள்ளையர்கள் அந்தப் பதத்தை பயன்படுத்தினார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அந்த வசவுக்கு அவன் ஒருமுறைகூட ஆளானதில்லை. விரிந்து கிடந்த தொடைகளை வெறிக்க வெறிக்க அவமானம் அவனுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு பயங்கர ஆபத்து தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான்.
“இது எனக்குப் பிடிக்கவில்லை.” சொல்லி முடிக்கும் முன்பாகவே என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளும் முன்பாகவே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
எதிர்பாராத அடியில் ஒரு நிமிடம் அவளுக்கு மூச்சு நின்றுவிட்டது போலிருந்தது. துள்ளி எழுந்து பின்னே நகர்ந்து நின்றாள். அடுத்த நிமிடம் வீறிட்டு கத்தினாள். அவளுடைய அலறல் சாட்டையால் அவன் நெஞ்சைப் பிளந்தது போல இருந்தது. மறுபடியும் கத்தினாள். அவன் பயந்து பின்னால் நகர்ந்தான். என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அவன் செய்துவிட்ட காரியம், அதன் விளைவு என்ன என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவனால் வேறு என்ன செய்திருக்க முடியும்! அந்த அறையில் அவனுடைய இன்னொரு மனம் நின்றுகொண்டு செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் அவன் செய்துகொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றியது. மூச்சை நன்றாக இழுத்து விட்டான். ஒரு நிமிடம் நிற்கவே தெம்பில்லாமல் போனது போலத் தோன்றியது. எப்போதும் அவன் அஞ்சி நடுங்கிய நிழல்கள் எல்லாமும் சேர்ந்து அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டது போலத் தோன்றியது. ஒரு கருப்பன் அதிகபட்சம் எதிர்பார்க்கக்கூடிய மோசமான ஆபத்தில் அவன் சிக்கிக்கொண்டு விட்டிருந்தது புரிந்தது.
அவள் இப்போது நிறுத்தாமல் கத்திக்கொண்டு இருந்தாள். அவன் மாடிப்படிகளை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தான். படியில் காலை வைத்தவன் தயங்கி நின்று திரும்பிப் பார்த்தான். கத்துவதை நிறுத்தாமலேயே அவள் அறையின் கோடியில் திறந்திருந்த ஜன்னல் பக்கம் பின்னாலேயே நகர்ந்து கொண்டிருந்தாள். ஐயோ ஆண்டவனே! அவளுடைய அலறலில் கருப்பர் பகுதியில் கருப்பர்களை வேட்டையாடிய போலீஸ் கார்களின் சைரன்கள் கேட்டது. கருப்பர்களைத் துரத்திச் சென்ற வெள்ளை போலீஸ்காரர்களின் சில்லிடும் விசில்களின் அலறல் கேட்டது. ஒரு நிமிடம் அவன் உடலை ஊடுருவிப் பாய்ந்த அந்த உணர்ச்சியில் குற்றம் செய்த எந்த ஒரு கருப்பனையும் எப்படியும் வெள்ளையர்கள் பிடித்து விடுவதைப் பற்றிய அந்த பயங்கர கதைகளெல்லாம் திரும்பக் கேட்டது. இவளோ ஏதோ இவன் கற்பழித்து விட்டதைப்போல அலறிக்கொண்டு இருக்கிறாள்.
படிகளில் ஏறி ஓடினான். ஆனால், அவளுடைய அலறல்கள் சப்தம் கூடிக்கொண்டே போனது. கடைசிப் படியில் காலை வைத்தபோது அவனுடைய வேகம் குறைந்துவிட்டிருந்தது. அவளுடைய அலறல்கள் இனிமேலும் அவனை ஓடவிடாது போலிருந்தது. அவனைச் சோர்ந்துபோக வைத்தது. சட்டையைப் பிடித்து இழுத்தது. நெஞ்சு வெடித்துவிடும்போல இருந்தது. நின்று இலக்கில்லாமல் சுற்றிலும் பார்த்தான். குளிர்காயும் இடம் கண்ணில் பட்டது. அருகில் விறகுக் கட்டைகள் ஒழுங்காக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே மறுபடியும் அவளுடைய அலறல்கள். நெஞ்சு பிளந்துவிடும் போல இருந்தது. ஒரு நடுக்கம் உடலெங்கும் பரவியது. நடுங்கும் கைகளோடு குனிந்து கோடரியால் வெட்டுப்பட்ட, முனைகளில் கூராக இருந்த ஒரு கட்டையை இடது கையால் – அவன் இடதுகைப் பழக்கமுள்ளவன் – உருவினான். திரும்பி படிகளில் விறுவிறுவென்று இறங்கி அவள் நின்று அலறிக் கொண்டிருந்த இடத்திற்கு ஓடினான். நெருங்கி கட்டையை ஓங்கியவன் ஒரு நிமிடம் தயங்கி நின்றான். அவள் அலறுவதை நிறுத்தினால் போதும். அவள் நிறுத்தியிருந்தால் அவன் அங்கிருந்து ஓடிவிட்டிருப்பான். ஆனால், அவள் தொடர்ந்து அலறிக்கொண்டு இருந்தாள். அவனுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபம் எல்லை மீறிக்கொண்டு இருந்தது. அவளுடைய அலறலை நிறுத்த உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். அவள் இரப்பை நிறைய காற்றை இழுத்து முழு வேகத்தில் அலறிக் கொண்டிருந்தாள். இடது கையை வேகமாக இறக்கினான். அவள் தலையின் பக்கவாட்டில் அடி இறங்கியது. ஆனால், அவனுக்கு அவளைக் கொல்ல வேண்டும் என்பது நோக்கமில்லை. அவளைக் காயப்படுத்தவும் விருப்பமில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் ஒன்றுதான். அவளுடைய அலறலை நிறுத்தவேண்டும். அந்த அலறல்களுக்கு அர்த்தம் ஒன்றே ஒன்றுதான். மரணம். அவள் அலறுவதை நிறுத்தியாக வேண்டும்…
அவள் தரையில் சரிந்த அதே வேகத்தில் மண்டை பிளந்து கட்டை உள்ளே இறங்குவதை உணர்ந்தான். ஆனால், இன்னும் அவள் அலறிக்கொண்டிருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனுக்கு நடுங்கியது. அட சனியனே … இன்னமும் ஏன் இப்படி அலறிக்கொண்டிருக்கிறாள்? மீண்டும் கையை உயர்த்தி ஓங்கி அடித்தவன் கட்டை அவள் மண்டை ஓட்டைப் பிளந்துகொண்டு உள்ளே இறங்குவதை உணர்ந்தான். ஆனால் இன்னமும் அவள் அலறிக்கொண்டிருந்தாள். திரும்பவும் அடிக்க ஓங்கியவன், கை லேசாக இருப்பதுபோல உணர்ந்தான். கட்டை பாதி உடைந்து தரையில் கிடந்தது. அவள் ஆடையெங்கும் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. கால்கள் பரப்பிக் கிடந்தன. ஆனால் அவள் இன்னமும் அலறிக்கொண்டிருந்தாள். கையிலிருந்த துண்டை வீசிவிட்டு அவள் தொண்டையைப் பிடித்து உலுக்கினான். அது அவளை அடக்கியது போல இருந்தது. மயங்கிவிட்டவளைப் போலக் கிடந்தாள். ஆனால் அவன் விட்டுவிடவில்லை. வெகு நேரத்திற்கு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான். அவளைக் கொல்லவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. அவனுக்குள் புதைந்து கிடந்த அச்சத்தையும் கோபத்தையும் மீண்டும் மீண்டும் கிளறி அவனைப் பைத்தியமாக்கிய அந்த அலறலை நிறுத்திவிடவேண்டும் என்பதற்காகத்தான் நெரித்தான். அவளைப் பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. அந்த அலறல்கள் கிளறிவிட்ட உணர்ச்சிகளின் வேகத்திலேயே அப்படி நடந்துகொண்டான்.
இப்போது அவள் தொய்ந்து அமைதியாகக் கிடந்தாள். மெதுவாக கழுத்திலிருந்து கையை எடுத்தான். அவள் சத்தம் எதுவும் போடவில்லை. காத்திருந்தான். இன்னும் அவனுக்கு நம்பிக்கை வந்துவிடவில்லை. ஆமாம். கீழே கழிவறைக்கு இழுத்துக்கொண்டுபோய் போட்டுவிட வேண்டும். அங்கு அவள் கத்தினால்கூட யாருக்கும் கேட்காது … அவளுடைய கைகளை அவனுடையதுக்குள் எடுத்துக்கொண்டு ஜன்னலிலிருந்து தள்ளி அவளை இழுத்துக்கொண்டு போக ஆரம்பித்தான். அவனுடைய கைகள் வியர்த்து ஈரமாயிருந்தன. நாலைந்து முறை அவளுடைய சிறிய விரல்கள் அவன் பிடிக்குள் இருந்து நழுவி விழுந்தன. அவள் கைகள் அத்தனை சிறியதாக மிருதுவாக இருந்தன. இன்னும் இறுக்கிப் பிடிக்க முயற்சித்து அவனுடைய நகங்கள்தான் பதிந்தன. இழுத்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய மோதிரம் நழுவி அவன் கைக்குள் விழுந்தது. ஒரு நிமிடம் நின்று, தகதகத்த அந்த மெல்லிய வளையத்தை வெறித்துப் பார்த்தான். எந்த உணர்ச்சியும் இல்லாமல் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். ஒருவழியாக அவளை படிகளில் கீழே இறக்கி இழுத்துக்கொண்டு கழிவறைக் கதவுவரை போய்ச் சேர்ந்துவிட்டான்.
உள்ளே அவளை இழுத்துப்போக இருந்தவன் தரையில் ரத்ததுளிகள் இருப்பதைப் பார்த்தான். இது ஒன்றும் சரியில்லையே… நிழல்களைப் பார்த்து பயப்பட பழக்கப்பட்டவனைப் போலவே தரையை சுத்தமாக வைத்திருக்கவும் பழக்கப்பட்டிருந்தவன் அவன். ஒரு சுவரில் அவளை மொத்தாக போட்டுவிட்டு கழிவறைக்குள் நுழைந்து கழிவறைக் காகிதங்களை கொத்தாக எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். சிகப்புத் துளிகளை துடைத்தெடுத்தான். மாடிக்கு ஏறிப்போய் அவளை முதலில் அடித்த இடத்தில் சிந்திக் கிடந்த ரத்தத் துளிகளை கவனமாக துடைத்தான். சட்டென்று அவன் உடல் இறுகியது. அவள் மீண்டும் அலறிக்கொண்டிருந்தாள். வேகமாக கீழே இறங்கி ஒடிவந்தான். இந்த முறை அவன் சட்டைப் பைக்குள் ஒரு கத்தி இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. வெளியே எடுத்து பட்டனை அழுத்தித் திறந்தவன் அவளுடைய தொண்டைக்குள் சொருகினான். அவள் அலறலை நிறுத்தவேண்டும் என்பதில் அவனுக்கு வெறியே வந்துவிட்டிருந்தது… தொண்டைக்குள் இருந்து கத்தியை உருவினான். இப்போது அவள் அமைதியாக இருந்தாள்.
அறையை சுற்றிலும் நோட்டம் விட்டுக்கொண்டே எழுந்து நின்றான். நீராவிக் குழாய்கள் சென்ற உள்வழிக்கு இட்டுச் சென்ற கதவு ஒரு சுவரில் இருந்தது அவன் கண்ணில் பட்டது. அதுதான் சரி. அவளை அதற்குள் போட்டுவிடுவதுதான் நல்லது. அவள் திரும்ப கத்தத் தொடங்கினாலும் யார் காதிலும் விழாது. அவன் அவளை ஒளித்துவைக்க முயற்சிக்கவில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் அவளுடைய அலறல் யாருக்கும் கேட்டுவிடக்கூடாது; அதை உறுதி செய்துகொள்ளவேண்டும்; அவ்வளவுதான். அவளை இழுத்தான். ஸ்கர்ட் உருவிக்கொண்டு அவளுடைய மார்புப் பக்கம் மேலாக வந்துவிட்டது. இளஞ்சிவப்பு உள்ளாடை மீண்டும் அவன் கண்களில் பட்டது. அவளை இழுப்பது இப்போது இன்னும் சிரமமாக இருந்தது. தூக்கி கைகளில் சுமந்துகொண்டு ஒரு சின்ன நடையே இருந்த படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தபோது அந்த இளஞ்சிவப்பு ஜட்டியை நனைத்து எடுத்துக்கொண்டால் சிதறியிருந்த ரத்தத்துளிகளை சுத்தமாக துடைத்தெடுக்க வசதியாக இருக்குமே என்று தோன்றியது. மீண்டும் அவளை ஒரு சுவரில் சாய்த்து, அவள் ஜட்டியை உருவினான். ஒரு நொடி நேரம்கூட அவள் பெண் உறுப்பை அவன் பார்க்கக்கூட இல்லை. நனைத்து ரத்தம் சிந்தியிருந்த இடங்களை சுத்தமாக துடைத்தெடுத்தான். அப்புறம் குழாய்களுக்கு கீழே அந்த உள்வழியில் அவளைத் தள்ளிவிட்டான். முழுப் பார்வைக்கும் எளிதாகத் தெரியும்படி கிடந்தாள். ஈரப் பந்தாகியிருந்த ஜட்டியை அவளுக்குப் பின்னால் எறிந்தான்.
நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டு சுற்றிலும் பார்த்தான். தரை சுத்தமாகத் தெரிந்தது. திரும்பவும் மாடிக்குப் போனான். அந்த உடைந்த விறகுக்கட்டை… இரண்டாக உடைந்திருந்த துண்டையும் இன்னும் மற்ற சிறிய துண்டுகளையும் பொறுக்கி எடுத்தான். உடைந்த முனைகளைச் சேர்த்துப் பொருத்தினான். முழுக் கட்டையைப் போலவே குளிர்காயும் இடத்தில் அடுக்கி வைத்திருந்த கட்டைகளோடு சேர்த்து கவனமாக வைத்தான். சற்று நின்று உற்றுக் கேட்டான். எந்தச் சத்தமும் இல்லை. அவள் மீண்டும் அலறவில்லை. அவளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணமோ, வலியால் துடித்திருப்பாள் என்றோ அவனுக்குத் தோன்றவேயில்லை. அவள் செத்துவிட்டிருப்பாள் என்பதுகூட அவனுக்குத் தோன்றவில்லை. தொப்பியையும் கோட்டையும் எடுத்துக் கொண்டான். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ரொம்பவும் சோர்ந்துபோயிருந்தான். அவன் எப்போதும் செய்துவந்த, அவனுக்குப் பழகிப்போயிருந்த ஒரு வேலையை, அவனை எப்போதும் சுற்றிச் சூழ்ந்திருந்த அவனால் புரிந்துகொள்ளவே முடியாதிருந்த நிழல்களுக்கு போக்கு காட்டி ஏமாற்றும் வேலையை முடித்துவிட்டு வந்தது போல இருந்தது. ஆடைகளைக் கழற்றி வீசினான். சட்டையிலும் பேண்டிலும் படிந்திருந்த ரத்தக் கறைகளை சட்டைகூட செய்யவில்லை. மனைவி வேலைக்குப் போயிருந்தாள். அவன் மட்டும் தனியாக இருந்தான். பர்சை உருவியபோது மோதிரம் கண்ணில் பட்டது. மேசையின் ட்ராயரைத் திறந்து அதற்குள் அசட்டையாக வீசினான். அதை ஒளித்து வைக்கவேண்டும் என்ற யோசனையெல்லாம் அவனுக்கு இல்லை. அவள் பார்வையில் பட்டுவிடவேண்டாம் என்பதற்கு மேலாக அவன் யோசிக்கவில்லை.
களைத்து சலித்து கட்டிலில் விழுந்தவன் சட்டென்று நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். மறுநாள் மதியம்வரை எழுந்திருக்கவில்லை. இரத்தம் போலச் சிவந்திருந்த கண்களை சிமிட்டிக்கொண்டு அப்படியே மல்லாந்திருந்தான். முந்தைய நாள் நடந்த எதையும் அவனால் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. அப்புறம் மெதுவாக சம்பவங்களின் நிழல் போன்ற படங்கள் அவன் கண்களில் விரிந்தன. ஒரு நிமிடம் அவையெல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்தவைதானா அல்லது யாராவது சொன்ன கதையா என்பது புரியாமல் குழம்பினான். எதுவும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. என்றாலும் எந்தப் பயமும் வருத்தமும் எழவில்லை.
அப்புறம் கடைசியில் நடந்தது எல்லாம் நிஜம் என்ற நம்பிக்கை வந்தபோது உணர்ச்சிகளற்ற வெறும் நினைவுகளாகவே நின்றன. சோர்ந்து தூக்கக் கலக்கத்தில் இருக்கும்போது சினிமாத் திரையில் விழுந்த ஒரு காட்சியைப் போல மங்கலாக இருந்தது. என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. அப்படியே படுக்கையிலேயே கிடந்தான். வேலை முடிந்து வெகுநேரம் கழித்து அவன் மனைவி வந்துசேர்ந்தபோது மறுபடியும் தூக்கம் அவனை அள்ளிச் சென்றுவிட்டது.
மறுநாள் காலை மனைவி செய்து வைத்த காலை உணவை உண்டுவிட்டு மேசையிலிருந்து எழுந்தான். அவளை முத்தமிட்டான். எதுவுமே நடக்காததுபோல கதீட்ரலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சர்ச் படிகளை மிதிக்கும் வரைக்கும் எதுவும் தோன்றவில்லை. பிறகுதான் நடுங்க ஆரம்பித்தது. ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் கதவுக்கு எதிரில் நின்றான். அதன் பிறகுதான் இனி தான் அதற்குள் நுழையவே முடியாது என்று உணர்ந்தான். அவனுக்கு கோபம் எதுவும் இல்லை. அந்த இடத்தின் மீது ஏதோ ஒரு இனம்புரியாத வெறுப்பு. அவள் உயிரோடுதான் இருக்கிறாளா அல்லது செத்துவிட்டாளா என்ற கேள்வியே அவனுக்குள் எழவில்லை. என்ன செய்வதென்று இன்னும் அவனுக்குப் பிடிபடவில்லை. அப்போது சட்டென்று அவன் மனைவி சில மளிகை சாமான்கள் வாங்கிவரச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சரி, அதைச் செய்யவேண்டியதுதான். வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. வேறு வழியில்லாமல் அதைச் செய்ய நினைத்தான்.
மளிகைச் சாமான்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். பிறகு நாள் முழுவதையும் ஒவ்வொரு பாராக கழித்தான். ஓடிப்போய்விட வேண்டும் என்ற எண்ணம் ஒருமுறைகூட அவனுக்குத் தோன்றவில்லை. வீட்டுக்குப் போவது, ரேடியோவை திருகிக்கொண்டிருப்பது, திரும்பவும் தெருவுக்குப் போவது, கால்போன போக்கில் நடப்பது, கடைசியில் ஒரு பாருக்குள் நுழைவது, போதை தலைக்கேறும் வரை குடிப்பது என்று கழித்துக் கொண்டிருந்தான். ஒருமுறை, உடைகளை மாற்றிக் கொண்டான். ரத்தம் படிந்திருந்த சட்டையையும் பேண்டையும் ஒரு மூட்டையாகக் கட்டி கறை படிந்த கத்தியை அதற்குள் திணித்து ஒரு மூலையில் எறிந்தான். துப்பாக்கியை எடுத்து சட்டைக்குள் வைத்துக்கொண்டான். ரொம்பவும் சோர்ந்துபோய் இருந்தான்.
ஆனால், இன்னமும் என்ன செய்வதென்று அவனுக்குப் பிடிபடவில்லை. திடீரென்று சில மாதங்களுக்கு முன்பாக மட்டமான விலைக்கு வாங்கி வைத்திருந்த கார் ஞாபகத்துக்கு வந்தது. ரிப்பேருக்காக காரேஜில் விட்டிருந்தான். உடனே காரேஜுக்குப் போனான். இருபத்தைந்து டாலர்களுக்குப் பேசி அதன் உரிமையாளனிடமே அதை விற்றான். அப்போதுகூட தப்பித்துப் போகவேண்டும் என்றோ அதற்கு கார் பயன்படும் என்றோ அவனுக்குத் தோன்றவே இல்லை. மாலைவரை பார்களில் குடித்துக் கழித்தான். வாழ்க்கை முழுக்க அவனை விரட்டிக்கொண்டிருந்த உணர்வுகள் அப்போதும்கூட அன்றுகூட அவனை விட்டுத் தொலைந்தது போல அவனுக்குத் தெரியவில்லை.
இரவு எட்டு மணி போல, எதிர்ப்பட்ட இரண்டு நண்பர்களை தன்னோடு குடிக்கவரும்படி அழைப்பு விடுத்தான். இப்போது நன்றாகக் குடித்திருந்தான். மேசையில் அவனுக்கு முன்பாக சாண்ட்விச்சும் ஒரு சிறிய க்ளாஸில் விஸ்கியும் இருந்தது. இரண்டு நண்பர்களில் ஒருவன் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையை தூக்கக் கலக்கத்தில் முன்னே குனிந்து கேட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது ஒரு குரல்:
“நீ தானே சால் சாண்டர்ஸ்?”
நிமிர்ந்து பார்த்தவனுக்கு இரண்டு வெள்ளை நிழல்களின் வெளிறிய முகங்கள் தெரிந்தது.
“ஆமாம்.” தயக்கமில்லாமல் சொன்னான்.
“உன்னிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும். ஒழுங்காக எங்களோடு வந்துவிடுவது நல்லது.” ஒரு நிழல் சொன்னது.
“எதற்காக, என்ன விஷயம்?” சால் கேட்டான்.
அவர்கள் அவன் தோளைப் பற்றி இழுத்தார்கள். சால் எழுந்து நின்றான். குனிந்து, கொஞ்சம் விஸ்கி மிச்சமிருந்த க்ளாஸை எடுத்து அதை காலி செய்தான். போலீஸ்காரர்கள் ஆளுக்கொரு பக்கம் வர தடுமாறாமல் நடந்தான். பாருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த காருக்கு வந்தார்கள். அவனுடைய மூளை சுத்தமாக துடைத்து எடுத்துவிட்டிருந்தது போல இருந்தது. காருக்குள் அவர்கள் அவனைத் தள்ளுவதற்கு சற்று முன்பாகவரை அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அப்போதுதான் அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்து அவனுக்குக் காத்திருந்த அபாயத்தை உணர்த்திய அது நடந்தது. ஒரு போலீஸ்காரன் அவன் துப்பாக்கி எதுவும் வைத்திருக்கிறானா என்று இடுப்பைத் தடவிப் பார்த்தான். எதுவும் அகப்படவில்லை. சால் துப்பாக்கியை மார்போடு சேர்த்து வைத்திருந்தான். அந்த நொடியில் திடீரென்று அந்த எண்ணம் அவன் மூளையில் உதித்தது. அந்த எண்ணம் கிளப்பிய கிளர்ச்சியில் அவன் உடல் நடுங்கியது … ஆமாம். அவன் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவேண்டும். ஆனால், இது ஏன் முன்னமே மூளைக்கு எட்டவில்லை?
மெதுவாக தொப்பியைக் கழற்றி, இடது கையின் அசைவை மறைத்துக்கொள்ள நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டான். சட்டைக்குள் கையைவிட்டு துப்பாக்கியை வெளியே உருவினான். சடாரென்று ஒரு போலீஸ்காரன் பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டான்.
“ஓ, எங்களையும் கொல்லப் பார்க்கிறாயோ?”
“இல்லை. என்னையே சுட்டுக்கொள்ள நினைத்தேன்.” சால் ரொம்பவும் சாதாரணமாக சொன்னான்.
“சனியனே!”
ஒரு முஷ்டி அவன் மோவாயில் இறங்கியது. மயங்கி சரிந்தான்.
இரண்டு மணி நேரம் கழித்து, போலீஸ் ஸ்டேஷனில், சால் நடந்தது ஒன்றையும் விடாமல் ஒப்புவித்தான். உணர்ச்சிகளின் எந்தத் தடயமும் இல்லாமல், விருப்பு வெறுப்பற்ற மெதுவான தொனியில் மெல்லிய குரலில் ஒவ்வொரு சிறு விவரத்தையும் தெளிவாக விளக்கிச் சொன்னான். ஆனால், என்ன விளக்கிச் சொன்னாலும் அவள் அலறல் தன்னை எப்படி நடுங்க வைத்தது என்பதை அவர்களுக்கு சுத்தமாக புரியவைக்கவே முடியாது என்பதை நன்றாக உணர்ந்திருந்தே சொன்னான். அவன் சொன்ன கதை மிகவும் கொடூரமாக இருந்திருக்கவேண்டும். அந்த போலீஸ்காரர்களுடைய முகம் வெளிறிப்போயிருந்தது.
சில வாரங்களுக்குப் பிறகு அவன் சோர்வாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கோர்ட்டில் அந்தக் குரல் இரைந்து கரைந்தது.
“…ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மரியாதைக்குரிய ஜூரிகள் மேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தின் பெயராலும் அதன் சார்பாகவும் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் பேரில் இதைப் படிக்கிறோம்.”
“குற்றம் சாட்டப்பட்ட சால் சாண்டர்ஸ் என்ற இந்த நபர், 19__, மார்ச் முதல் தேதி, மேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தில், அதன் எல்லைக்குள், மேபெல் ஈவா ஹவுஸ்மேன் என்கிற பெண்மணியைக் கொல்லும் நோக்கத்தோடு, திட்டமிட்டு…”
“ஓ, இதுதான் அவள் பெயரா!” சால் ஆச்சரியப்பட்டுக் கொண்டான்.
“…வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, முன்கூட்டியே யோசித்த இழிந்த நோக்கோடு, திட்டமிட்டு, மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனை, தலையில் முன்பக்கமாகவும் வலது பக்கமாகவும் இரண்டு ஆழமான காயங்கள் விழும்படியும், மண்டை உடையும்படியும் அடித்து காயப்படுத்தியிருக்கிறார். மேலும் அவரது கையால் அல்லது இரண்டு கைகளாலும் – இரண்டு கைகளாலுமா அல்லது ஒரு கையால்தானா என்பதை தெளிவாக முடிவு செய்யமுடியவில்லை என்று மேற்சொன்ன ஜூரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள் – மேற்சொன்ன மேபெல் ஹவுஸ்மேனின் கழுத்தை இறுகப் பற்றி அழுத்தியிருக்கிறார். மேலும், மேற்சொன்ன சால் சாண்டர்ஸ், மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனின் கழுத்தை, மேற்சொன்னவாறு ஒரு கையாலோ இரண்டு கைகளாலோ பிடித்து மூச்சுத்திணறும் வரை நெரித்திருக்கிறார். அதன் விளைவாக, மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேன் மூச்சுத் திணறி, கழுத்து முறிந்து, சரியாக 19__, மார்ச் மாதம் முதல் தேதியன்று, மேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தில் ,அதன் எல்லைக்குள் இறந்துவிட்டார் என்பது உறுதியாகிறது.
சால் குடிப்பதற்கு ஏங்கினான். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. மூச்சை நிம்மதியாக இழுத்துவிட்டான். அதே நிம்மதியோடு இத்தனை காலமும் பயந்து ஓடிக்கொண்டிருந்த அந்த நிழல்களின் உலகிடம் மண்டியிட்டு சரணடைந்தான். அவனுடைய உளைச்சல்கள் அத்தனையும் தொலைந்து அதுநாள் வரையில் அனுபவித்திராத அமைதியை உணர்ந்தான். நிழல்களின் உலகத்தோடு போராடுவதை நிறுத்திய அந்த நிமிடமே அவ்வளவு அமைதி கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது.
“…மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனுக்குச் சொந்தமான பத்து டாலர்கள் மதிப்புள்ள மோதிரத்தை, எதிர்ப்பை மீறி, வன்முறையைப் பிரயோகித்து, அச்சுறுத்தி, அந்த நேரத்தில், அந்த இடத்தில், மேற்சொன்ன நபரிடமிருந்து பிடுங்கி, திருடி எடுத்துச் சென்றுவிட்டார்.”
இப்போது எந்தக் கவலையும் இல்லாமல், ஆனால் இன்னும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.
“ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் முறையிலும், இத்தகைய சூழல்களில் வாய்க்கிற சந்தர்ப்பங்களுக்குப் புறம்பாகவும், மேற்சொன்ன மேபெல் ஈவா ஜவுஸ்மேனை கொலை செய்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.”
பி.கு: இதன்பேரில் டாக்டர். ஹெர்மென் ஸ்டீன் சாட்சியாக அழைக்கப்பட்டு, முறையான உறுதிமொழி எடுத்துக்கொண்டு அளித்த சாட்சி பின்வருமாறு:
“…பிறப்புறுப்புகளை ஆராய்ந்ததில் உராய்வுகளோ, கடுமையான காயங்களோ இல்லை என்பதோடு இறந்தவரின் கன்னிமைத்திரையும் கிழியாமல் இருப்பது, இறந்தவர் தாக்கப்பட்டது கற்பழிக்கும் நோக்கத்தில் அல்ல என்பது உறுதியாகிறது. புணர்வதற்கான முயற்சியும் நடைபெற்று இருக்கவில்லை. இறந்தவரின் வயது நாற்பது என்பது உறுதிசெய்யப்படுகிறது.”
நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4, மே 1998.
குறிப்பு: இந்த அறிமுகக் குறிப்பு ஆஃப்ரோ அமெரிக்க இலக்கியத்தை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4, மே – 1998 ற்காக எழுதப்பட்டது.
இந்த அறிமுகக் குறிப்புகளோடு இணைத்து வாசிக்க: கருப்பு இலக்கியம்: மொத்ததிலிருந்து கொஞ்சம் சிதறல்கள்
இலக்கியப் புனிதங்களும் புனிதத் தொகுதிகளும் நொறுங்கிக் கொண்டிருக்கும் காலமிது. காலத்தை மீறிய படைப்புகள், எல்லோருக்கும் பொதுவான, அருவமான ‘அழகியல்‘ மதிப்பீடுகள் என்று சொல்லப்பட்டவை ஒவ்வொன்றும் ஒன்றொன்றாக நம் கண் முன்பாகவே உளுத்து, உலர்ந்து, உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
அதே நேரத்தில், இதுவரை கவனிப்பாரற்றுக் கிடந்த, மெளனத்தால் இருப்பே மறுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் உயிர்பெற்று எழுந்து இலக்கிய அதிகார பீடங்களின் அஸ்திவாரத்தை மெல்ல மெல்ல அசைத்து ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கின்றன. பழைய அணிசேர்க்கைகள் குலைந்து, புதிய இணைவுகள் – ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், இருப்பே துடைத்து அழிக்கப்பட்டவர்கள், மனிதர்களாகவே மதிக்க மறுக்கப்பட்டவர்கள் தமது தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தமக்கிடையிலான ஒற்றுமைகளைத் தேடி அடையாளம் கண்டு அணி சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். நீர் எங்கே இருக்கப் போகிறீர் என்பதை சீக்கிரமே முடிவு செய்து கொள்ளூங்கள்.
* * *
கண்களை மூடிக் கொள்ளுங்கள். உமது ஆட்காட்டி விரலை நெற்றியில் அழுத்திக் கொள்ளுங்கள். எங்கே சட்டென்று உமது நினைவுக்கு வருகிற, உமக்குப் பிடித்த ஐரோப்பிய – வேண்டாம், ஆங்கில இலக்கிய ‘மேதைகள்‘ ஒரு ஐந்து பேரை வரிசையாகச் சொல்லுங்கள் … ஷேக்ஸ்பியர், பைரன், வேர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், விட்மேன் (உமது நண்பருக்கு சற்று வித்தியாசப்படலாம்: ஹெமிங்வே, வாலேஸ் ஸ்டீவன்ஸ், டி. எஸ். எலியட், டி. எச். லாரன்ஸ், ஜாய்ஸ் … இப்படி) இப்போது கொஞ்சம் யோசிப்போம். ஏன் ஒரு பெண் எழுத்தாளர் கூட உமது நினைவின் நுனிக்கு வரவில்லை? (ஜேன் ஆஸ்டின், விர்ஜினியா வுல்ஃப், சில்வியா ப்ளாத்). ஏன் ஒரு கருப்பர்கூட தோன்றவேயில்லை?
டோனி மாரிசன், வாலே சோயின்கா ஆகியோர் நோபல் பரிசுகளை பறித்திருக்காவிட்டால் நீர் இவர்களது பெயர்களைத் தெரிந்துகொள்ளும் சிரமமாவது எடுத்திருப்பீரா!
* * *
டிசம்பர் 8, 1986; நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு வோலே சோயின்கா அங்கே, அந்த மேடையில் நின்று கேட்கிறார்: “கருப்பர்கள் நாங்கள் இப்போது தெளிவாகவே இருக்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் நான் எங்களவர்களை நோக்கி பேசவேண்டிய எந்த அவசியமும் இல்லை. எங்களுடைய இலக்கு, நாங்கள் பயணிக்க வேண்டிய பாதை எதுவென்று எங்களுக்குத் தெரியும். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பேசவேண்டியது, அந்த மற்றதை நோக்கி – நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பதிலை மெதுவாகவே சொல்லுங்கள். இந்த நொடி, இப்படியொரு நிகழ்வு, வரலாற்றில் எந்தக் காலத்திலும் சாத்தியமேயில்லை என்பதை நிரூபிப்பதற்காக, அவசரத்தில், ஆத்திரத்தில், இதோ, இதே கருப்புத் தோல் போர்த்திய, மெல்லிய சுருண்ட மயிர் கொண்ட எத்தனை ஆயிரம் மனித உயிர்களைக் கண்டம் விட்டுக் கண்டம் பெயர்த்து கடத்திக் கொண்டு போயிருப்பீர்கள்,கொன்று குவித்திருப்பீர்கள், சித்திரவதை செய்திருப்பீர்கள், முடமாக்கியிருப்பீர்கள், நாக்கை இழுத்து வைத்து அறுத்திருப்பீர்கள், மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தியிருப்பீர்கள்.” *
* * *
எலியட்டையும் எஸ்றா பவுண்டையும் சில்வியா ப்ளாத்தையும் தேடிப் பிடித்து எடுத்த அதே சென்னை அமெரிக்க நூலகத்தில்தான் கருப்பு (ஆஃரோ – அமெரிக்க) இலக்கியமும் குவிந்து கிடக்கிறது. அது இந்திரன் கண்ணில் மட்டும்தான் பட்டிருக்கிறது. இந்திரனுக்கு உரிய மரியாதை இந்த இடத்தில்தான் இருக்கிறது. மற்றவர்கள் இதற்கு என்ன பொறுப்பு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்!
இப்பொது, ஹென்றி லூயிஸ் கேட்ஸ். Jr, நெல்லி Y. மெக்கே இருவரையும் பொதுத் தொகுப்பாளர்களாகக் கொண்டு, ராபர்ட் G. ஓ‘ மெய்லி, வில்லியம் L. ஆண்ட்ரூஸ், பிரான்ஸஸ் ஸ்மித் ஃபாஸ்டர், ரிச்சர்ட் யார்பரோ, ஆர்னால்ட் ராம்பர்செத், டெபோரா E. மெக்டெளவல், ஹோர்டென்ஸ் ஸ்பில்லர்ஸ், ஹவுஸ்டன் A. பேக்கர், பார்பரா T. கிறிஸ்டியன் (அனைவரும் ஆஃப்ரோ – அமெரிக்கர்கள்) ஆகிய ஒன்பது பேர் பத்து ஆண்டுகள் கடுமையாக உழைத்து Norton Anthology of African American Literature என்கிற மாபெரும் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 3000 பக்கங்களில், 120 எழுத்தாளர்களுடைய 52 சிறந்த படைப்புகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கிறது. தொகுப்போடு ஒரு CD – யும் உண்டு. ஆஃப்ரோ அமெரிக்க ஆங்கிலத்தை தாளில் இறக்கி வைக்கும்போது அதன் உயிர்துடிப்பு மடிந்துவிடுவதைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு. இதில் முக்கியமான பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் உண்டு.
வழக்கு மரபு
அடிமைத்தனத்திலிருந்து அரசியல் விடுதலை பெற்ற காலம் வரை (1746 – 1865),
புனரமைப்பிலிருந்து புதிய நீக்ரோ அதாவது மறுமலர்ச்சி காலம் வரை (1865 – 1919)
ஹார்லெம் மறுமலர்ச்சி (1919 – 1940)
யதார்தவதம், நேச்சுரலிசம், நவீனத்துவம் (1940 – 1960)
கருப்பு அழகியல் (1960 – 1970)
70 – களுக்குப் பிந்தைய இலக்கியம்
என்று இரண்டரை நூற்றாண்டு காலத்துக்கு விரிந்திருக்கிற ஆஃப்ரோ அமெரிக்க இலக்கியத்தை ஏழு காலகட்டப் பகுதிகளாகப் பிரித்துத் தொகுத்திருக்கிறார்கள்.
இந்த விரிந்த காலப்பகுதியில், இந்த இலக்கியத்தில் எழுந்த தனித்துவமான வடிவங்கள், ஊடுருவியிருக்கிற தனித்துவமான பண்புகள், ஒவ்வொரு எழுத்தாளரும் தமக்கு முந்தைய தலைமுறை அல்லது சமகால எழுத்தாளருடைய எழுத்துக்களை மறுவாசிப்பு செய்யும் விதத்தில் எழுதியிருக்கும் தனிச்சிறப்பு, இன்னும் இது தொடர்பான பிற அம்சங்களை இந்தத் தொகுப்பு கண்டுகொள்ள உதவுமானால் அதுவே அதன் வெற்றி என்று தமது இலக்கைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக கருப்பு இலக்கியத்தின் தனித்துவமான கூறுகளிலிருந்து, தனித்துவமான கருப்பு விமர்சனக் கோட்பாட்டை உருவாக்கும் முயற்சியில் கருப்பு விமர்சகர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஹென்றி லூயிஸ் கேட்ஸ், ஹவுஸ்டன் பேக்கர், இவர்களில் முக்கியமானவர்கள். இந்த இரண்டு விமர்சகர்களும் மேற்கத்திய விமர்சனக் கோட்பாடுகளைக் கட்டுடைத்து (கட்டுடைப்பையும் சேர்த்து) தனித்துவமான கருப்பு இலக்கிய விமர்சனத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்திருக்கிறார்கள். வரும் காலங்களில் ஆங்கில இலக்கியத்தின், இலக்கிய விமர்சனத்தின் போக்கையே தீர்மானிக்கக்கூடிய இந்த எழுத்துக்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
* Henry Louis Gates Jr. – ன், Canon Formation and the Afro – American Tradition என்ற கட்டுரையிலிருந்து இந்த மேற்கோள். நூல்: Afro – American Literary Study in the 1990s, ed by: Houston A. Baker and Patricia Redmond, University of Chicago Press, 1986.