ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 6

புதிய குடவோலை முறையின் மீட்சி – 6

 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் “ஜனநாயகம்” என்று அழைக்கப்படும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் கட்சிகளும் தாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் அனுபவித்து சலிப்படைந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நெருக்கமான உறவு இருப்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பெரும் தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபர்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள் என்பதையும் கண்ணாறக் கண்டுகொண்டே இருக்கிறார்கள்.

 

தேர்தல் என்பதே ஐந்தாண்டுகள் தம்மை யார் கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்பதற்கு எழுதிக்கொடுக்கும் பிரமாணப் பத்திரம் என்று உணர்ந்திருக்கிறார்கள். நிர்வாகச் சீர்கேடுகளும், லஞ்சமும், ஊழலும், கொலையும் கொள்ளையும் நிறைந்ததுதான் அரசியல் என்ற முடிவிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். புதிய நேர்மையான தலைவர்கள், அதிகாரிகள், படித்தவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் எவராவது இந்த சீரழிவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முன்வரமாட்டார்களா என்று ஏங்கித் தவித்துக்கிடக்கிறார்கள். ஆனால், தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையைத் தவிர வேறு மாற்றுகள் எதுவும் இருக்கிறதா என்பது தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.

 

தேர்தல் முறையால் உருவாகும் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை ஜனநாயகமும் அல்ல, மக்களாட்சியும் அல்ல, புதிய மேட்டுக்குடியினரின் ஆட்சிமுறைதான் என்பதை வரலாற்றிலிருந்து சுருக்கமான எடுத்துக்காட்டுகளோடு இக்குறுந்தொடர் விளக்க முயற்சி செய்திருக்கிறது. தமிழக வரலாற்றில் சோழர் காலத்தில், குலுக்கல் முறையும் சுழற்சி முறையும் இணைந்த குடவோலை முறை என்று அழைக்கப்பட்ட ஆட்சிமுறையே உண்மையான ஜனநாயகம் – மக்களாட்சி என்பதையும் இத்தொடரில் விளக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆட்சிமுறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏதென்ஸ் நகரத்தில் எவ்வாறு சிறப்புடன் செறிவாக செயல்பட்டது என்பதும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

 

அத்தகைய ஆட்சிமுறையை தற்காலத்தைய நிலைமைகளுக்கு ஏற்ப மீண்டும் உருவாக்க முடியுமா? நிலவும் ஆட்சிமுறையை அகற்றுவதற்கு பெரும் பிரயத்தனங்கள் எதையும் செய்யாமல், அவற்றுக்கு அருகிலேயே – அக்கம்பக்கமாக மக்களே நேரடியாக ஆட்சியில் பங்கேற்க வழிவகை செய்யும் புதிய நிறுவனங்களை உருவாக்க முடியுமா? அத்தகைய நிறுவனங்கள் எவ்வகையில் இருக்கும்? அவற்றில் மக்களை பங்குபெற செய்வது எப்படி? அவற்றின் பணிகள் எவ்வாறு இருக்கும்? இவ்வாறான கேள்விகள் பலவும் எழுவது இயல்பே.

 

இக்கேள்விகளுக்கு தீர்மானகரமான விடைகள் இன்னும் உருவாகவில்லை. என்றாலும் பல நாடுகளில் பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் அனுபவங்களை தொகுத்துக்கொண்டு, மேலும் செறிவான பல புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், மிகச் சிறந்ததும், நடைமுறையில் செயல்படுத்த சற்று எளிமையானதுமான ஒரு மாதிரியை அறிமுகம் செய்வதோடு இக்குறுந்தொடர் நிறைவுபெறுகிறது. இந்த மாதிரியை, சிறிய அளவுகளில் – கல்லூரி மாணவர் மன்றங்கள், தொழிற்சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், கிராம நிர்வாக சபைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், குடியிருப்புப் பகுதிகள் – போன்றவற்றில் முதற்கட்டமாக பரிசோதனை செய்து பார்க்கலாம். அனுபவங்களை சேகரித்துக்கொண்டு, படிப்படியாக பரந்த அளவுகளில் முன்னெடுக்க முயற்சிக்கலாம்.

 

பல் அடுக்கு குடவோலை முறை என்று இதை அழைக்கலாம்.

 

முதலாவதாக, இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்புகளின் அடிப்படைப் பண்புகள், நிபந்தனைகள், தேர்ந்தெடுக்கும் முறைகள் ஆகியவற்றை பார்த்துவிடுவது நலம்.

 

இந்த அமைப்புகள் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கானவை அல்ல. சாதனை புரியவேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ள துடிப்பானவர்களுக்கானதும் அல்ல. பல்துறை சார்ந்த வல்லுனர்களுக்கானதோ அறிவுத்துறையினருக்கானதோ தீவிர அரசியல் களப்பணியாளர்களுக்கானதோ அல்ல.

 

சாதாரண மக்களுக்கானது. எளிய மக்கள் தமது பிரச்சினைகளை தாமே முன்வந்து தீர்த்துக்கொள்வதற்கான அரசியல் – பொது நிர்வாகக் கட்டுமானங்களை உருவாக்குவதே இவற்றின் நோக்கம். அந்நோக்கில் முடிவுகளை எடுக்கவும் அவற்றை செயல்படுத்துவதற்குமான வழிமுறைகளை உருவாக்குவது. இவற்றில் வல்லுனர்கள், அறிவுத்துறையினர், தீவிர அரசியல் களப்பணியாளர்களின் பாத்திரம் தமது துறை சார்ந்த நுட்பமான அறிவு, அனுபவம், திறன்கள் ஆகியவற்றை சாதாரண மக்களுடன் பலா பலன்களை எதிர்பாராமல் பகிர்ந்துகொள்வது மட்டுமே. இறுதி முடிவுகள் எதுவானாலும் அவற்றை எடுக்கும் அதிகாரம் சாதாரணர்களுக்கு மட்டுமே உரியது.

 

இந்த அமைப்புகள் ஏற்கனவே இருக்கும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புகளுக்கு உடனடியான மாற்றுகள் அல்ல. நிலவும் அமைப்புகளால் பலன் பெறும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இவற்றை உடனே அங்கீகரித்துவிடப் போவதில்லை. ஒருவேளை அங்கீகரிக்க முன்வந்தால், அவற்றை தம் செல்வாக்குக்கு உட்பட்ட அமைப்புகளாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டுவார்கள். ஆகையால், இவ்வமைப்புகளை நிலவும் அமைப்புகளுக்கு எதிரானவையாக நிறுத்திக்காட்டுவதையும் தவிர்க்கவேண்டும். அவற்றுக்கு கீழ்ப்பட்டவையாக மாறிவிடாமலும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். நிலவும் அதிகார அமைப்புகளுக்கு இணையாக – அக்கம்பக்கமாக (parallel) இயங்கும் அமைப்புகளாகவே இவை துவக்கத்தில் செயல்படமுடியும்.

இவ்வமைப்புகள் அனைத்தும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையிலேயே தேர்ந்தெடுக்கப்படவேண்டும். கருத்தொருமிப்பை எட்டுவதற்காகவும், முடிவுகளை எடுப்பதற்காகவும் தேவைகளுக்கேற்ப இரகசிய வாக்கெடுப்பு, வெளிப்படையான வாக்கெடுப்பு ஆகிய இரண்டு முறைகளையும் கையாளலாம். குலுக்கல் முறையோடு சுழற்சி முறையும் இணைந்திருப்பது கட்டாயம்.

 

பாகுபாடுகள் நிறைந்துள்ள நமது சமூகத்தில், ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், இன்ன பிறருக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவது கட்டாயமாக இருக்கவேண்டும். மொத்த உறுப்பினர்களில் 50 விழுக்காடு பெண்களாக இருப்பதையும் கட்டாயம் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

 

பொது நிர்வாகத்திற்கு வாக்காளர் பட்டியல், தொழிற்சங்கம் போன்ற குறிப்பான நிறுவனங்களுக்கு உறுப்பினர்/பதிவுப் பெயர் பட்டியல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சீர்வாய்ப்பு தேர்வு முறையில் (random selection process) நபர்களை தேர்வு செய்வதிலிருந்து துவங்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளின் பணிச்சுமைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படும் எளியோர்க்கு ஊதியம் வழங்குவது சாலச் சிறந்தது. அவர்களது தனிப்பட்ட வாழ்விற்கான வருமானத்தை ஈடுசெய்யும் வகையில் அத்தகைய ஊதியங்கள் இருப்பது நல்லது.

 

இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனி விரித்துச் சொல்லப்படும் ”பல் அடுக்கு குடவோலை முறை” தமிழகம் என்ற பரந்த அளவில் செயல்பட தேவையான உறுப்பினர் எண்ணிக்கையை மனதில் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது. கிராம அளவிலான, குடியிருப்புகள் அளவிலான, பிற சிறிய அளவிலான அமைப்புகளுக்கு அவற்றுக்கே உரிய வகையில் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம். சூழல்கள், நிறுவனங்களின் செயல்பாட்டு எல்லைகளுக்கு ஏற்ப ஒரு சில அமைப்புகள் அவசியமில்லாமலும் போகலாம்.

 

நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு மன்றம்

தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள், தேவைகளின் பொருட்டு உருவாக்கப்படவேண்டிய திட்டங்கள், அவை குறித்து இயற்றப்படவேண்டிய சட்டங்கள் அல்லது தீர்மானங்கள் குறித்த பட்டியலை நிகழ்ச்சி நிரலாகத் தயாரிக்கும் மன்றம். 150 – 400 உறுப்பினர்களைக் கொண்டிருக்கவேண்டும். தேவைக்கேற்ப உபகுழுக்கள் அமைத்து செயல்படலாம். செயல்படுவதற்கு தாமாக முன்வரும் குடிமக்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

இம்மன்றம் தயாரிக்கும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட அம்சம் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புவோர், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கையெழுத்துகள் சேகரித்து மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான சாத்தியத்தையும் அனுமதிக்கலாம்.

 

நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது மட்டுமே இம்மன்றத்தின் பணி. அவற்றை நிறைவேற்றவோ நிறைவேற்றும்படி கட்டாயப்படுத்தவோ இம்மன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

 

துறைசார் குழுக்கள்

நிகழ்ச்சி நிரல் மன்றம் தயாரித்து அனுப்பும் பிரச்சினைகளைப் பரிசீலித்து அவற்றுக்கு சட்ட முன்வரைவு வடிவம் கொடுக்கும் குழுக்கள். ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்சினைக்கும் தனிக் குழுக்கள் அமைக்கப்படவேண்டும். தேவைக்கேற்ப குழுக்களை அமைத்துக்கொள்ளலாம். தமது துறை சார்ந்த குழுக்களில் செயல்பட விரும்புவோர் முன்வரலாம். ஒவ்வொரு குழுவிலும் 12 உறுப்பினர்கள் அவசியம். தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். தேவைக்கேற்ப இக்குழுக்கள் அடிக்கடி கூடி விவாதித்துக் கொள்ளலாம். கால வரம்பை நிர்ணயித்து குறித்த காலத்திற்குள் தமது பணியை முடிக்கவேண்டும். துறை வல்லுனர்கள், குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்து செயல்படும் களப்பணியாளர்களைக் கொண்டதாக இருக்கலாம். சட்ட முன்வரைவைச் சமர்ப்பிப்பதோடு இக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவுபெற்றுவிடும். ஊதியம் வழங்கவேண்டிய அவசியம் இல்லை. இம்மன்றத்திற்கு அதிகாரம் ஏதும் இல்லை.

 

பரிசீலனைக் குழுக்கள்

துறைசார் குழுக்கள் சமர்ப்பிக்கும் சட்ட முன்வரைவுகளைப் பரிசீலித்து அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் குழுக்கள். ஒவ்வொரு துறைசார்ந்த பிரச்சினைக்கும் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்படவேண்டும். மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 150. தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். துறைசார் குழுக்களைப் போன்று, இவர்கள் தமது விருப்பம் சார்ந்து குழுக்களை தேர்வு செய்ய அனுமதி இல்லை. செயல்படும் காலம் 3 ஆண்டுகள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

குறித்த சட்ட முன்வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை கூட்டி கருத்துக்களைக் கேட்டறிதல், துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டறிதல், பிரச்சினை குறித்து கள ஆய்வுகளும், கல்விசார் ஆய்வுகளும் மேற்கொள்ளல், தேவையெனில் அவற்றுக்குப் உதவியாளர்கள், பணியாளர்களை நியமித்துக்கொள்ளல், சேகரிக்கப்பட்ட கருத்துக்கள், கள ஆய்வுகள், கல்வி ஆய்வுகளைக் கொண்டு சட்டமுன்வரைவில் திருத்தங்களோ புதிய அம்சங்களோ சேர்த்தல், உறுப்பினர்களோடு கலந்து விவாதித்தல் ஆகியவற்றின் இறுதியில் சட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுத்தல் ஆகியவையே இக்குழுக்களின் பணிகள்.

 

சட்ட முன்வரைவுகளுக்கு இறுதி வடிவம் மட்டுமே தர இயலும். சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை.

 

கொள்கை முடிவெடுக்கும் சான்றாளர் (Jury) குழு

பரிசீலனைக் குழுக்கள் சமர்ப்பிக்கும் சட்டத்தின் இறுதி வடிவின் மீது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கும் குழு. ஒவ்வொரு சட்டத்தை இறுதி செய்வதற்கும் ஒரு தனிக் குழு கூட்டப்படவேண்டும். அனைத்து குடிமக்களில் இருந்தும் 400 உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். முன்மொழியப்பட்டுள்ள சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களை கூட்டப்படும் பொது சபை அமர்வில் கேட்டு, இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தீர்ப்பளிப்பதே இக்குழுவின் பணி. விவாதங்களில் ஈடுபடுவதோ, தமக்குள் கலந்தாலோசிப்பதோ கூடாது. பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் சட்டம் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். சட்டத்தின் தன்மையைப் பொறுத்து இக்குழுவின் பணிக்காலம், ஒரு நாளாகவோ சில நாட்களாகவோ இருக்கலாம். பயணப் படி, பிற படிகள் உட்பட குறித்த நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

விதிகள் உருவாக்கும் மன்றம்

அனைத்து மன்றங்கள், குழுக்களுக்குமான விதிமுறைகள், குலுக்கல் முறை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகள், துறை வல்லுனர்களின் கருத்துக்களை அறிவதற்கான வழிமுறைகள், விவாத நெறிமுறைகள், குறைந்தபட்ச உறுப்பினர்/வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை வடிவமைப்பதற்கான மன்றம். பிற மன்றங்கள், குழுக்களில் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்களில் இருந்து குலுக்கல் முறையில் இதற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது நலம். உறுப்பினர் எண்ணிக்கை 50. செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

மேற்பார்வை மன்றம்

அனைத்து மன்றங்கள், குழுக்களின் உறுப்பினர்கள், பரிந்துரை வழங்கிய துறை வல்லுனர்கள், பிற உதவியாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் அனைத்தும் நியாயமாகவும் நேர்மையாகவும் செய்யப்பட்டனவா என்பதையும், அவர்கள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுமானால் அவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கும் குழு. உறுப்பினர் எண்ணிக்கை 20. தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

இவ்வாறான பல் அடுக்கு குடவோலை முறையிலான அமைப்பு முறை, அதிகாரம் ஏதாவதொரு படிநிலையில் குவிந்துவிடாமல், ஒன்றை ஒன்று சரிபார்த்து சீர் செய்யும் (checks and balances) தன்மை கொண்டிருப்பதை மேலே விவரித்திருப்பதிலிருந்து உணரலாம். வெளிப்படைத் தன்மையும், பல தரப்பினரின் பங்களிப்பும், சாதாரண மக்கள் அனைவரது பங்கேற்ப்பையும் படிப்படியாக உறுதி செய்வதாக இருப்பதையும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மக்களுடையதாகவே இருப்பதையும் உணரலாம். பரந்த அளவில் செயல்படுவதற்கு ஏற்றதாகவும், உள்ளூர் அளவிலும் குறிப்பான அமைப்புகளுக்கு ஏற்பவும் இவற்றை வடிவமைத்துக்கொள்வதும் எளிதானது.

 

இவ்வமைப்பு முறையின் செயல்பாடுகள் அதிகரிப்பதைப் பொறுத்தும், மக்கள் இவற்றின் பால் ஆர்வம் செலுத்தி, பங்கேற்க முன்வருவதைப் பொறுத்தும், இவற்றின் செயல்பாடுகள் நிலவும் அதிகார அமைப்பின் மீது அழுத்தங்கள் செலுத்தலாம். படிப்படியாக இவற்றின் செல்வாக்கு கூடுவதும், இவற்றின் குரல்களுக்கு நிலவும் ஆட்சியமைப்பும் அதிகார வர்க்கமும் செவிமடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு.

 

பொது வாழ்வில் நேர்மை, அரசியலில் தூய்மை, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் கனவு கொண்ட இளம் தலைமுறையினர் இப்பரிசோதனையை சிறிய அளவில் மேற்கொண்டு, தாம் பெறும் அனுபவங்களில் இருந்து மேலும் மெருகேற்றலாம்.

(முற்றும்.)

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 3

ஏதென்ஸின் குடவோலை முறை – 3

 

சோழர் காலத்து குடவோலை முறையில் சொத்துடைமை வரையறையும், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற முடியும் என்ற வரையறையும் இருந்ததைப் போலவே ஏதென்ஸில் நிலவிய மக்களாட்சி முறையிலும், பெண்களும் அடிமைகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அத்தகைய எதிர்மறையான அம்சத்தைக் கவனத்தில் குறித்துக்கொண்டு அதன் சாதகமான அம்சங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியம்.

 

ஏதென்ஸ் ஜனநாயகத்தின் ஆதாரமாக இரண்டு அடிப்படைக் கொள்கைகள் இருந்தன. முதலாவது, தமது அரசியல் உரிமைகளைச் செயல்படுத்த அனைத்து குடிமக்களுக்குமான சம உரிமை (கிரேக்க மொழியில் isonomia). இரண்டாவது, மக்கள் சபையில் பேசுவதற்கும், தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமை (isogoria).

 

ஏதென்ஸின் மக்களாட்சியின் தனித்துவம் மிக்க அமைப்பாக இருந்தது மக்கள் சபை. மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கூடிய இந்த மக்கள் சபையில் 20 வயதிற்கு மேற்பட்ட ஏதென்ஸின் குடிமக்கள் அனைவருக்கும் தம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்கும் உரிமை இருந்தது. அவ்வாறு பேச முன்வருவோரை ஏதென்ஸின் மக்கள் “விருப்பத்துடன் முன்வருவோர்” என்று குறிப்பிட்டனர்.  என்றாலும், மக்கள் சபையில் எல்லாக் குடிமக்களும் பேச முன்வந்துவிடவில்லை.ஏதென்ஸின் மக்கள் தொகை அக்காலத்தில் 30,000 -லிருந்து அதிகபட்சமாக 60,000 வரை இருந்தது. இவர்களில் ஏறத்தாழ 6,000 பேர் மட்டுமே மக்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டனர். இந்த 6000 பேரிலும் அரசியலிலும் நிர்வாகத்திலும் ஆட்சி புரிவதிலும் விருப்பம் இருந்த சிலர் மட்டுமே சபையின் முன் பேசவும் ஆலோசனைகளை முன்மொழியவும் செய்த “விருப்பத்துடன் முன்வருவோராக” இருந்தனர். பெரும்பாலான மக்கள், வாதப் பிரதிவாதங்களைக் கவனிப்பவர்களாகவும், அவற்றின் முடிவில் தமது ஒப்புதலையோ, மறுப்பையோ வாக்குகள் மூலம் தெரிவிப்பவர்களாகவுமே இருந்தனர்.

 

ஏதென்ஸின் மக்களாட்சி முறையில் குடவோலை முறை போன்று “குலுக்கலில்” தேர்ந்தெடுக்கும் முறையோடு கூட, வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையும் நிலவியது. ஆனால், வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒரு சில பொறுப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.  குறிப்பாக படைத் தளபதிகள், இராணுவ நிதிக்கான பொருளாளர், நிதிநிலை கணக்குத் தணிக்கையாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கு மட்டுமே வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் பெரும்பாலும் ஏதன்ஸ் சமூகத்தின் மேட்டுக் குடியினராகவே இருந்தனர்.

 

இவை தவிர்த்து, மேலே குறித்துள்ளது போல, மக்கள் சபை போன்ற அமைப்புகளில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களின் முடிவில் தமது ஒப்புதலையோ மறுப்பையோ தெரிவிக்க கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறை நிலவியது. பெரும்பாலும், இந்த வாக்களிப்பில் உயர்த்தப்பட்ட கைகள் எண்ணப்படும் வழக்கம்கூட இருந்ததில்லை. கூடியிருந்த 6000 பேர்களில் எத்தனை பேர் கைகளை உயர்த்தினார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பது அதிக நேரம் எடுக்கக்கூடியது என்பதால் மட்டுமில்லை. ஏதென்ஸ் மக்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை சமூகத்தின் மேட்டுக்குடியினருக்கே உரிய முறையாகவும், அவர்களுக்கு சாதகமான முறையாகவுமே கண்டனர். ஆகையால், பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் நபர்களை தேர்ந்தெடுக்கும் முறையாக அதை பின்பற்றுவதை ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே வரையறுத்து வைத்தனர்.

 

மக்கள் சபை தவிர்த்து, ஏதென்ஸின் மக்களாட்சியில் மூன்று முக்கிய அரசியல் அமைப்புகள் இருந்தன. முதலாவது, ஐநூறுவர் மன்றம். மக்கள் சபையில் கூடிய 6000 பேரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேர் கொண்ட மன்றமே ஐநூறுவர் மன்றம் என்று அழைப்பட்டது.

 

இந்த 500 நபர்களில் ஏதென்ஸ் நகரத்தின் 139 இனக்குழுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழக்கப்பட்டிருந்தது. குலுக்கல் முறையிலேயே இந்த 500 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஒருவர் தம் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே இம்மன்றத்திற்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் வரையறுக்கப்பட்டிருந்தது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களே இம்மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

 

வெளியுறவுத் துறை விவகாரங்கள், இராணுவத்தின் நிர்வாகம், நிதி நிர்வாகம் மற்றும் பொது நிர்வாகம் ஆகியவை இந்த மன்றத்தின் பொறுப்பில் இருந்தன. இவை தவிர, மக்கள் சபையின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பொறுப்பும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பும் ஐநூறுவர் மன்றத்தின் முக்கிய பணிகளாக இருந்தன. நடைமுறையில் பாதியளவு தீர்மானங்களே ஐநூறுவர் மன்றத்தால் முன்மொழியப்பட்டன. பாதியளவு தீர்மானங்கள் மக்கள் சபையில் கூடியோரால் முன்மொழியப்பட்டன.

 

இரண்டாவது முக்கிய அரசியல் அமைப்பாகத் திகழ்ந்தது, மக்கள் நீதிமன்றங்கள். 30 வயதிற்கு மேற்பட்ட, அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட, தாமாக செயல்பட முன்வந்தவர்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 6000 பேர் இம்மன்றத்திற்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலும் வயது முதிர்ந்த, அனுபவம் மிக்கவர்களும் ஏழைகளுமே இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள், மக்கள் சபை மற்றும் ஐநூறுவர் மன்றத்தின் தீர்ப்பாணைகளுக்கு கட்டுப்பட்டும், சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்காத விஷயங்களில் நியாய உணர்வுடனும், வழக்காடுபவர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் வாய்ப்பளித்தும் நடப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றங்கள் கூடும் நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கூடிவிடுவார்கள். அவர்கள் மத்தியிலிருந்து வழக்குகளின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப, 501, 1001, 1501 நபர்கள் அடங்கிய நீதிபதிகளின் குழுக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்குகளின் விசாரணை நடைபெறும். இவ்வழக்குகளின் தீர்ப்புகளில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கருத்தொருமிப்பிற்கு வருவது வழக்கமாக இருந்தது.

 

மக்கள் நீதிமன்றங்கள், தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மன்றங்களாகச் செயல்படவில்லை என்ற விஷயம் இதில் முக்கியமானது. இவை விசாரித்த வழக்குகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே பெரும்பாலும் இருந்தன. குறிப்பாக, மக்கள் சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தீர்ப்பாணைகள், மற்றும் சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் மன்றங்களாக இவை செயல்பட்டன. இதன் மூலம், மக்கள் சபையில் ஒருவேளை தவறான சட்டம் இயற்றப்பட்டிருந்தால், அதைச் சரி செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பாக இந்நீதிமன்றங்கள் செயல்பட்டன எனலாம்.

 

படைத் தளபதிகளின் குற்றங்களையும் இம்மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்தன. அத்தகைய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மிகக் கடுமையானவையாகவும் இருந்தன. குடியுரிமையைப் பறிப்பது, நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற தண்டனைகள் குற்றம் இழைத்த படைத்தளபதிகளுக்கு வழங்கப்பட்டன. அவ்வகையில், ஏதென்ஸ் நகரின் மேட்டுக் குடியினரின் மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பணியையும் இந்த மக்கள் நீதிமன்றங்கள் செய்தன.

 

மூன்றாவதாக, கி.மு. நான்காம் நூற்றாண்டில், ஒரு குறுகிய காலத்திற்கு, மேட்டுக்குடியினரால் வீழ்த்தப்பட்ட மக்களாட்சி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டபோது, சட்டம் இயற்றுவதற்காகவென்றே தனியாக ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. மக்கள் சபைக்கு இருந்த சட்டம் இயற்றும் அதிகாரம் நீக்கப்பட்டு, தீர்ப்பாணைகள் மட்டுமே வழங்குமாறு வரையறுக்கப்பட்டது.  புதிதாக அமைக்கப்பட்ட சட்டம் இயற்றும் மன்றத்திற்கு, மக்கள் நீதிமன்றங்களைப் போலவே குலுக்கல் முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, சட்டங்களைத் திருத்துவது, புதிய சட்டங்களை இயற்றுவது ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட்டன. மக்களாட்சிக்கு விரோதமான சட்டங்கள் இயற்றப்படாமல் பாதுகாப்பதற்கான அமைப்பாக இந்தச் சட்டம் இயற்றும் மன்றம் செயல்பட்டது.

 

இம்மூன்று மன்றங்களின் முடிவுகளையும், மக்கள் சபையின் தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு என்றே தனியாக அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 600 பேர் குலுக்கல் முறையிலும், தேர்தல் முறையில் 100 மேட்டுக் குடியினரைச் சேர்ந்தவர்களும் ஆண்டிற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஒரு பதவிக்கு ஒரு முறைக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்ற வரையறுக்கப்பட்டது. மேலும், ஒரு பதவிக்காலத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைத்த பிறகே அடுத்த பதவிக்கு போட்டியிட முடியும். அதாவது, ஒருவர் ஒரு வருடம் பதவியில் இருந்தால், அடுத்த வருடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பித்திலேயே கழிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இந்த அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுவதாக குற்றச்சாட்டு எழுந்தால், அவற்றை மக்கள் நீதிமன்றங்கள் விசாரித்து கடும் நடவடிக்கை எடுத்தன.

 

இவ்வாறாக, ஏதென்ஸ் நகரத்தின் ஆட்சி அதிகார, நிர்வாக அமைப்புகள் அனைத்தும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையோடு, சுழற்சி முறையும் இணைக்கப்பட்டிருந்தது. நிர்வாக சீர்கேடுகள் நிகழாத வண்ணம், ஒன்றை ஒன்று கண்காணித்து கட்டுப்படுத்தும் மூன்றுவிதமான அமைப்புகள் சீராக செயல்படுத்தப்பட்டன. குலுக்கல் முறையோடு, தேர்தல் முறையும் நிலவியது. ஆனால், அது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பதவிகளுக்கு மேட்டுக்குடியினரை தேர்வு செய்வதற்காக மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. இதைத் தவிர்த்து, மக்கள் சபையிலும், மக்கள் நீதிமன்றங்களிலும் கருத்தொருமிப்பை எட்டுவதற்கான முறையாக மட்டுமே வெளிப்படையான வாக்கெடுப்பு முறையும், இரகசிய வாக்கெடுப்பு முறையும் பயன்படுத்தப்பட்டன.

 

இறுதியாக, ஏதென்ஸ் நகரின் குடிமக்கள், அரசியல் விவகாரங்களில் தனித் திறமையால் சிறப்பு பெற்றவர்களை எப்போது நம்பத் தயாராக இருக்கவில்லை. அத்தகையோர் அதிகாரத்தின் படிகளில் காலடி எடுத்துவைத்தால், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தம் வசப்படுத்திக்கொள்ளவே விழைவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகையால், அனைத்தையும் அறிந்திராத, எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ள கற்றுக்குட்டிகளின் (amateurs) கைகளிலேயே மக்களாட்சி பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினர். அத்தகைய கற்றுக்குட்டிகள் அசட்டுத்தனமான காரியங்களைச் செய்து ஆட்சியமைப்பை சீர்குலைத்துவிடாமலிருக்கும் வகையில் நிறுவன பொறியமைப்புகளை உருவாக்கிக்கொண்ட காரணத்தினாலேயே ஏதென்ஸின் மக்களாட்சி நிலைத்து நின்றது.

 

(தொடரும்… )

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 2

குடவோலை முறை எனும் மக்களாட்சி முறை – 2

கி. பி. பத்தாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியில் நிலவிய குடவோலை முறை குறித்த தகவல்கள் அடங்கிய உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தையும் பெரும் புகழையும் பெற்றிருந்தாலும், அவற்றில் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சிமுறை அரசியல் ஆய்வாளர்களின் உரிய கவனத்தைப் பெறவில்லை. குறிப்பாக, ஒரு ஆட்சிமுறை என்ற அளவில் தற்கால அரசியல் நெருக்கடிகளுக்கு அக்கெல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கிலிருந்து அவை அணுகப்படவே இல்லை.

தற்போது நிலவும் ஆட்சிமுறை வாக்குகளைச் செலுத்தி பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஆள்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கும் ஆட்சிமுறை என்பது அனைவரும் அறிந்ததே. இதை ஜனநாயக ஆட்சிமுறை என்று நாம் கருதுகிறோம். குடவோலை முறையையும் ஜனநாயக ஆட்சிமுறை என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறோம். ஆனால், குடவோலை முறை வாக்குகளை செலுத்தி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறையே அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம்.

உத்திரமேரூர் கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டிருக்கும் குடவோலை முறையின் நடைமுறை மிகவும் எளிமையானது. தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், நில வரி வாரியம், ஆண்டுக்கு ஒருமுறை கூடி மேற்பார்வை செய்யும் வாரியம் ஆகிய கிராம நிர்வாக சபைகளுக்கு, தகுதி உடைய நபர்களை தேர்வு செய்யும் முறை. ஊரில் இருந்த முப்பது பிரிவுகளுக்கு ஒருவர் என்ற விதத்தில் 30 நபர்கள் இவ்வாரியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

முதலில், ஒவ்வொரு ஊர் பிரிவிற்கும் தகுதியான நபர்கள் என்று கருதப்படுபவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு, இறுக மூடிவைத்துவிடுவார்கள். தேர்வு செய்யப்படும் நாளன்று, ஊரின் மகாசபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்க, பூசாரிகளும் ஒருவர் தவறாமல் கூடியிருக்கவேண்டும். கூடியிருக்கும் பூசாரிகளில் வயதில் மூத்தவர், பெயர்கள் எழுதப்பட்ட ஓலைகள் அடங்கிய பானையை, சபையினர் அனைவரும் பார்க்கும் வகையில் தூக்கி காட்டவேண்டும். பிறகு அப்பானையில் உள்ள ஓலைகளை வேறொரு பானைக்குள் இட்டு, அதை நன்றாக குலுக்கவேண்டும். அதன் பிறகு, ஏதுமறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு, பானையில் உள்ள ஓலைகளில் ஒன்றை எடுக்கச் சொல்லவேண்டும். சிறுவன் எடுக்கும் ஓலையை, மத்தியஸ்தர், தன் ஐந்து விரல்களையும் அகல விரித்து வாங்கிக்கொள்ளவேண்டும். வாங்கிய ஓலையில் உள்ள பெயரை அவர் உரக்க வாசிக்கவேண்டும். அவரைத் தொடர்ந்து சபையில் கூடியுள்ள மற்ற பூசாரிகள் அனைவரும் ஓலையில் உள்ள பெயரை உரக்க வாசிக்கவேண்டும். ஊரின் 30 பிரிவுகளுக்கும் இவ்வாறு 30 பானைகளில் பெயர்கள் இடப்பட்டு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எவ்விதமான முறைகேடுகளும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்வதற்கான நடைமுறை என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்விதமான அதிகாரப் போட்டிக்கும் பொறாமைக்கும் இடம் தராமலும், செல்வாக்கு பெற்றவர்கள் மறைமுகமாக அழுத்தம் தந்து தமக்கு சார்பானவர்களை தேர்வு செய்வதற்கான வழியும் இல்லாமல் தேர்தெடுக்கும் முறை என்பதும் புலனாகிறது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியானவர்கள் என்பதற்கான நிபந்தனைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. அவை பின்வருமாறு:

  • வரி செலுத்தக்கூடிய கால்வேலிக்கு அதிகமான நிலம் உடையவராக இருக்கவேண்டும்.
  • அந்நிலத்தில் சொந்தமான வீடு உடையவராக இருக்கவேண்டும்.
  • 35லிருந்து 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
  • மந்திர பிரமாணங்களைப் பிறருக்கு எடுத்துரைத்துச் சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும்.
  • வேலியில் 1/8 பங்கு நிலமுடையவராக இருந்தால், 1 வேதத்திலும் அதற்கான உரையிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கவேண்டும்.
  • செல்வத்தை நல் வழியில் சேர்த்தவராகவும், தூய்மையான மனத்தினராகவும் இருக்கவேண்டும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. நெருங்கிய உறவினர்கள் எவரும்கூட அவ்வாறு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது.
  • ஏதாவது வாரியத்தில் உறுப்பினராக இருந்து, கணக்குகளைக் காட்டாமலோ ஒப்படைக்காமலோ இருந்தால், குடத்தில் பெயரை இடுவதற்கான தகுதியற்றவராக கருதப்படுவார். அவருடைய நெருங்கிய உறவினர்களில் எவராவது உறுப்பினராக இருந்து கணக்குகளை காட்டாமலிருந்தாலும்கூட, தகுதியற்றவராகவே கருதப்படுவார்.
  • ஆகமங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள், கையூட்டு பெற்றவர்கள், பிறர் பொருளை அபகரித்தவர்கள், மக்களுக்கு விரோதமான காரியங்களை செய்தவர்கள், இன்னபிற பாதகங்களை செய்தோரும் தகுதியற்றவர்கள்.
  • பொய் கையெழுத்து இட்டவர்கள், கழுதை மேல் ஏறியவர்களும் தகுதியற்றவர்கள்.

இந்த நிபந்தனைகளின் பாதகமான அம்சங்களை முதலில் பார்த்துவிடுவது நல்லது. முதலாவதாக, வேதங்களிலும் ஆகமங்களிலும் வல்லவர்கள் – அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படத் தகுதியானவர்கள் என்ற வரையறை. இரண்டாவதாக, குறிப்பிட்ட அளவு சொத்துடைமை வரையறை. இவ்விரண்டும், ஆட்சி செய்யத் தகுதியானவர்களை ஒரு குறுகிய வரம்பிற்குள் நிறுத்திவிடுகின்றன.

இதற்கு அப்பாற்பட்டு, விதிகளின் சாதகமான அம்சங்கள் கவனத்திற்கு உரியவை. முதலாவதாக, முறைகேடுகளைத் தடுப்பதற்கான விதிமுறைகள். சமூகத்தின் பொது நன்மைக்கு எதிரானவர்களை மட்டுமின்றி, நிர்வாகத்தில் பொறுப்பின்றி நடந்துகொண்டவர்களையும் முறைகேடுகளைச் செய்தவர்களையும் விலக்கி வைக்கும் விதிமுறைகள். இவை நிர்வாகத் தூய்மையை உறுதி செய்பவை.

இரண்டாவதாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிர்வாக சபைகளுக்கு தேர்வு செய்யப்பட முடியும் என்ற நிபந்தனை. நெருங்கிய உறவினர்கள் எவரும்கூட இக்கால எல்லைக்குள் நிர்வாக சபையில் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது என்று துணை நிபந்தனை இதை மேலும் இறுக்கமாக்குகிறது.

அதிகாரம் ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு மிக்க நபரிடமோ செல்வாக்கு மிக்க குழுவிடமோ குவிந்துவிடாமல் இருப்பதை இந்த நிபந்தனை உறுதிசெய்கிறது. வேறு வகையில் சொல்வதென்றால், சுழற்சி முறையில் நிர்வாகத்திலும் ஆட்சிப் பொறுப்பிலும் ஊரில் இருக்கும் பலரும் பங்கேற்க வழிவகை செய்கிறது.

தற்கால அரசியல் சூழலுக்குப் பொருத்திக் கூறுவதென்றால், நிர்வாக முறைகேடுகள், ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை நிகழாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அடுத்து, அதிகாரம் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடமோ, செல்வாக்கு மிக்க தனி நபர்களிடமோ குவிந்துவிடாமல் தடுக்கப்படுவதோடு, அதிகாரத்திலும் ஆட்சிப் பொறுப்பில் அனைவரும் பங்கேற்பதை சுழற்சி முறை உறுதி செய்கிறது.

இவற்றோடு, குடத்தில் ஓலைகளை இட்டு பெயர்களை தேர்வு செய்யும் முறையின் மையமான பண்பு கவனத்திற்குரியது. இவ்வாறு தேர்வு செய்யும் முறையை random process – சீர்வாய்ப்பு முறை அல்லது அறவட்டு முறை என்று கூறுவர். இம்முறையில், குடத்தில் இடப்பட்டுள்ள பெயர்களில் இருந்து எவருடைய பெயரும் தேர்வு செய்யப்படலாம். எவரது பெயர் தேர்வு செய்யப்படுவதற்கும் நூறு சதவீதம் சமமான வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது.

ஆட்சி புரிவதில் அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யும் சீர்வாய்ப்பு/அறவட்டு முறையுடன் சுழற்சி முறையும் இணைந்த இத்தகைய குடவோலை முறை, அனைத்து மக்களும் அல்லது அவர்களின் பிரதிநிதிகளும் எந்த பாகுபாடும் இன்றி அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சி புரியவும், நிர்வாகம் செய்யவும் வழிவகை செய்யக்கூடியது. இதுவே மக்களாட்சி அல்லது ஜனநாயகம்.

இம்முறையில், தேர்தல் முறையில் நிலவும் போட்டியினால் உருவாகக்கூடிய பலப் பரீட்சை, மோதல், போட்டி, பொறாமை, பகைமை, செல்வாக்கு அழுத்தங்கள் போன்ற அனைவருக்கும் தீங்கை விளைவிக்கும் பண்புகளும் உருவாகாமல் தவிர்க்கப்படுகிறது.

ஆனால், சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை, சொத்துரிமை வரையறையுடன், சாதிய அடுக்கில் ஒரு பிரிவினரைத் தவிர பிறருக்கு வாய்ப்பை மறுத்த, மன்னராட்சிக்கு உட்பட்ட கிராம அளவிலான ஆட்சிமுறையாகவே இருந்தது கண்கூடு. இத்தகைய முறை, சோழர் ஆட்சி காலத்தில் மட்டுமல்லாது, பிற ஆட்சிக் காலங்களில் நிலவியதா, எவ்வளவு காலம் தொடர்ந்து நிலவியது என்ற கேள்விகள் எல்லாம் வரலாற்றுப் புலத்திற்குரிய விடை காணப்படாத கேள்விகள்.

இதற்கு மாறாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க சூழலில்,  ஏதன்ஸ் நகரத்திலும், பல கிரேக்க நகர அரசுகளிலும், மன்னராட்சி முறைக்கும் செல்வாக்கு மிக்க மேட்டுக்குடியினரின் குழு ஆட்சிக்கும் உண்மையான மாற்றாக விளங்கிய ஒரு மக்களாட்சி – குடவோலை முறையை ஒத்த ஆட்சிமுறை நிலவியது.   நகரக் குடிமக்கள் அனைவரும் பாகுபாடின்றி பங்கேற்க வழிவகை செய்யக்கூடியதாக, உண்மையான மக்களாட்சியாக, ஜனநாயக அரசாக ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் தழைத்தோங்கியிருந்தது. அவ்வாட்சி முறையின் நுணுக்கங்களைச் சற்றேனும் சுருக்கமாக புரிந்துகொள்வது, குடவோலை முறை எனும் மக்களாட்சி முறையை மேலும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

(தொடரும்… )

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 1

தேர்தல் என்பது ஜனநாயகமா? – 1

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகத் திகழ்ந்த பராசக்தி திரைப்படம், தமிழக அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பிய படமாக இருந்தது என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பர். நாத்திகக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிறது என்ற காரணத்தை காட்டி, படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளும் அப்போது முன்வைக்கப்பட்டன. ஆனால், அப்போதைய முதல் மந்திரி ராஜாஜி அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்தார் என்பது வரலாறு.

 

அந்த காலப்பகுதியில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜாஜியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்திருந்தார் அப்போதை கவர்னர் ஸ்ரீ பிரகாசம். 1952 ஜனவரியில் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் மார்ச் இறுதிவரை ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.

 

அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் 375 தொகுதிகளில் காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆந்திரப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருந்த சிபிஐ கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற சுயேச்சைகளின் எண்ணிக்கையும் 62. இந்நிலைமையில், 1953 இல் சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரான டி. பிரகாசம், சிபிஐ மற்றும் பிற சிறு கட்சிகளை ஒன்றிணைத்து 166 உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

 

கம்யூனிஸ்டுகள் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, கவர்னர் ஸ்ரீ பிரகாசம், ராஜாஜியை அழைத்து 1952 ஏப்ரல் 10 அன்று முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ராஜாஜி தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெறுமாறு வழங்கப்பட்ட ஆலோசனையையும் நிராகரித்தார். வேறு வழியில்லாமல், கவர்னர் அவரை அப்போதிருந்த தமிழக மேல்சபையின் உறுப்பினராக நியமித்தார். ஆனால், மேல்சபைக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கு மட்டுமே இருந்தது. அமைச்சரவையோ இன்னும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

 

ஆக, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று அறிவிக்கப்பட்ட முதல் தேர்தலின் முடிவில், இந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தில், ஜனநாயகத்திற்குப் புறம்பான வழியில் ஆட்சியமைக்கப்பட்டது. ஆனால், வாக்குரிமை என்பது ஒரு ஜனநாயக உரிமை என்றும், பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் முறை ஜனநாயக ஆட்சிமுறை என்றும் நாம் இன்றுவரையிலும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

 

மேலே விவரித்த ஜனநாயகப் படுகொலை முடிந்து, ஆறு மாதங்கள் கழித்து, 1952 அக்டோபரில் வெளியான “பராசக்தி” திரைப்படமும் அப்படித்தான் நம்பியது. படத்தில் முக்கால் பாகக் கதை போன பிறகு, எஸ். எஸ். ராஜேந்திரன் மீண்டும் கதைக்குள் வருவார். பர்மாவிலிருந்து உயிர் பிழைத்து வரும்போது ஒரு காலை இழந்து, உயிர் பிழைத்திருக்க பிச்சையெடுத்து, அகதி முகாமில் சேர வரும் தமிழர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவருக்கும் அவரோடு வந்த கூட்டத்தினருக்கும் அகதி முகாமில் இடம் கிடைக்காமல் போகும். அனைவரும் அருகில் இருக்கும் ஒரு மரத்தடியில் கூடி பேசுவார்கள்.

 

அப்போது எஸ். எஸ். ஆர் கூட்டத்தினரிடையே உரையாற்றுவார். பிச்சைக்காரர்கள் மாநாடு ஒன்றை கூட்டப்போவதாக அறிவிப்பார். பிச்சைக்காரர்களுக்கு வாக்குரிமை கோரி பெற்று, சமுதாயத்தைப் புரட்டிப்போடும் புரட்சியை செய்யப்போவதாகச் சபதமிடுவார்.

 

65 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. 15 சட்டமன்ற தேர்தல்களையும், 16 நாடாளுமன்ற தேர்தல்களையும் மக்கள் பார்த்துவிட்டார்கள். தேர்தல்கள் மீதான நம்பிக்கையும் ஜனநாயகத்தின் மீதான பார்வையும் இருக்கும் நிலை என்ன?

 

கடந்த வருடம் வெளியான “சர்க்கார்” திரைப்படமும், இவ்வருடத் துவக்கத்தில் வெளியான “எல் கே ஜி” திரைப்படமும் மக்களின் மனநிலையை ஓரளவு பிரதிபலித்திருக்கின்றன என்று கருதலாம்.

 

ஒரு வாக்கு – ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, அதை எக்காரணம் கொண்டும் இழக்கக்கூடாது என்று வலியுறுத்தியது “சர்க்கார்”. வாக்காளர்களை ஏமாற்ற எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளின் செயல் நுணுக்கங்களை விவரிக்கிறது “எல் கே ஜி”.

 

இரண்டு திரைப்படங்களும், இறுதியில் தவறு இழைப்பவர்கள் வாக்காளர்களே என்று குற்றம் சுமத்துகின்றன. வாக்காளர்கள் செய்யும் தவறுகளாக இரண்டைக் குறிப்பிடுகின்றன. ஒன்று, அரசியல்வாதிகள் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. மற்றது, மோசமான வேட்பாளர்கள் என்று தெரிந்தும் வாக்களிப்பது; படித்த, நேர்மையான, சமூக அக்கறை கொண்ட வேட்பாளர்களைப் புறக்கணிப்பது.

 

இவ்விரண்டு குற்றசாட்டுகளை வாக்காளர்கள் மீது சுமத்துவதோடு, வாக்களிக்கும் ஜனநாயக க் கடமையை, சரியான முறையைல் நிறைவேற்றத் தவறுபவர்களை நோக்கி, “நீ ஒரு மனுசன் தானா? ஆண் மகன் தானா?” என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.

 

ஒரு ஜனநாயக உரிமை என்ற நிலையில் இருந்து, கடமை, நேர்மை, மனித மாண்பு, ஆண்மை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக இவ்விரு திரைப்படங்களும் வாக்குரிமையை உருப்பெருக்கி காட்டுகின்றன. தேர்தல் = ஜனநாயகம் = வாக்குரிமை = கடமை = நேர்மை = மனித மாண்பு = ஆண்மை என்ற ஒரு சமன்பாட்டை பிரச்சாரம் செய்கின்றன.

 

1952 இல் பிச்சைக்காரர்களுக்கு வாக்குரிமை பெற்று சமுதாயப் புரட்சி செய்யபோவதாக கிளம்பிய தமிழ் சினிமாவின் அரசியல் புரிதல், 2019 இல் “காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுறியே உனக்கு வெட்கமா இல்ல?” என்று மக்களை கேவலப்படுத்தி கேள்வி கேட்கும் நிலைமைக்கு வந்து நின்றிருக்கிறது.

 

எந்தக் கட்சியையும் நம்ப முடியாது, எந்த அரசியல்வாதியும் நேர்மையானவர் இல்லை என்ற அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பார்த்து, இவ்வாறு கேள்வி கேட்டுவிட்டு, படித்தவர்கள், நேர்மையானவர்கள், சமூக சேவகர்கள், நேர்மையான ரிட்டையர்ட் ஐஏஎஸ் அதிகார்கள் போன்றவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று புத்திமதியும் சொல்கின்றன.

 

ஆனால், தேர்தல் = ஜனநாயகம் என்ற நம்பிக்கை மட்டும் மாறவில்லை.

 

தேர்தல்கள் மூலம் ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து, அதிகாரத்தில் அமர்த்தி, ஆட்சி செய்ய வழிவகுக்கும் ஆட்சிமுறை ஜனநாயக ஆட்சிமுறைதானா என்ற கேள்வியை நமது திரைப்படங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளோ, அரசியல் ஆய்வாளர்களோகூட எழுப்பிப் பார்க்கவே இல்லை.

 

இந்த சந்தர்ப்பத்தில், நமது “மண்ணின் ஜனநாயக பாரம்பரியம்” குறித்து எவரேனும் கேள்வி எழுப்பினால், சட்டென்று இடைக்கால சோழர் காலத்தில் நிலவிய “குடவோலை முறை”யை ஞாபகப்படுத்துவார்கள். நீண்ட நெடிய ஜனநாயக பாரம்பரியம் மிக்கது நமது நாடு என்று பெருமை பேசத் தொடங்கிவிடுவார்கள்.

 

ஆனால், அந்தக் “குடவோலை முறை”யில், வாக்குரிமை என்ற உரிமையோ, வாக்குகளை செலுத்தி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையோ இருக்கவில்லை என்ற முக்கிய அம்சத்தின் மீது மட்டும் கவனத்தைக் குவிக்கத் தவறிவிடுவார்கள்.

 

இந்தக் “குடவோலை முறை”க்கு ஒப்பான முறைகளில், வேட்பாளர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதிக்கும் ஆட்சிமுறைதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, ஏதென்ஸ் நகரத்திலும், பல கிரேக்க நகரங்களிலும் நிலவி வந்த ஆட்சிமுறை. அதைத்தான் ஜனநாயக ஆட்சிமுறை என்று வரலாற்று ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.

 

பண்டைய கிரேக்க உலகின் தலைசிறந்த தத்துவ அறிஞர்களில் ஒருவரான அரிஸ்டாட்டில், தேர்தல் என்பது மேட்டுக்குடியினரின் (aristocracy) குழு ஆட்சிக்கான (oligarchy) முறை; குலுக்கலில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களின் ஆட்சியான ஜனநாயகத்திற்கான முறை என்று வலியுறுத்தியிருப்பார். 65 ஆண்டுகால தேர்தல் ஆட்சி முறையின் மோசமான அனுபவங்களுக்குப் பிறகு, தேர்தல் = ஜனநாயகம் என்ற நம்பிக்கையைப் பரிசீலனை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாமும் ஆளாகியிருக்கிறோம்.

 

(தொடரும்… )

நன்றி: விகடன்

%d bloggers like this: