நிழலைக் கொன்றவன்

குறிப்பு: இக்குறுநாவல் நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4, மே 1998 – ல் எனது மொழியாக்கத்தில் வெளிவந்தது. சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க கறுப்பின எழுத்தாளரான ரால்ஃப் எல்லிசனின் Invisible Man மற்றும் Juneteenth இரு நாவல்களையும் மீண்டுமொருமுறை வாசித்தபோது, இதையும் தூசிதட்டி எடுத்து வாசிக்க நேர்ந்தது. பகிர்ந்துகொள்ளும் விருப்பத்தில் இங்கு. இக்குறுநாவலின் ஆசிரியர் ரிச்சர்ட் ரைட்(1908 – 1960) அமெரிக்க கறுப்பின எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். ரிச்சர்ட் ரைட் – டின் Eight Men (Thunder’s Mouth Press, New York, 1987) என்ற குறுநாவல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

அவன் சின்னஞ் சிறிய பையனாக இருந்தபோதே அது எல்லாம் ஆரம்பித்துவிட்டது. அப்போதிருந்தே அவன் நிழல்களைக் கண்டு பயப்பட ஆரம்பித்துவிட்டான். அவசரப்பட்டு விடாதீர்கள். அவன் பயந்தது தகதகக்கும் அந்தச் சூரியன் இந்த நிலத்தின் மீது படியவிட்ட அழகான நிழலுருவங்களைப் பார்த்து அல்ல. பாவம், அவை என்ன செய்யும். ஆபத்தில்லாதவை. அதோடு, கோடையின் கண்கூசச் செய்யும் வெயிலில் அவற்றைத் துரத்திப் பிடித்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், மற்ற எவர் கண்களுக்குமே படாத அவனுக்கு மட்டுமே தெரிகிற மர்மமான நிழல்கள் சில இருந்தன. அவை, அவனுடைய அச்சத்தின் நிழல்கள். ஆக, இந்தப் பையனுக்கு அப்படியான நிழல்கள் இருந்தன. அவற்றில் ஒன்றைக் கொல்வதற்கு அவன் வாழ்ந்திருந்தான்.

சால் சாண்டர்ஸ் தலைநகர் வாஷிங்டன் – னிலிருந்து சில மைல்கள் தொலைவிலிருந்த தெற்கின் சிறிய டவுன் ஒன்றில் கருப்பாக பிறந்தான். அதாவது, அவன் பிறந்த உலகம் இரண்டாக பிளவுண்டிருந்தது. ஒன்று வெள்ளை உலகம்; மற்றது கருப்பு உலகம். இரண்டு உலகங்களுக்கும் நடுவில் கோடி மைல்கள் உளவியல் இடைவெளி இருந்தது. ஆக, ஆரம்பத்திலிருந்தே சால் தனது கருப்பு உலகிலிருந்து எட்டிப் பார்த்தபோது அவனுக்குச் சொந்தமில்லாத அவனால் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு வெள்ளை உலகின் நிழற்கோடுகளே மங்கலாகத் தெரிந்தன.

அப்புறம் என்ன நடந்ததென்றால் சாலுக்கு அவனுடைய தாயே கூட உருவில்லாத ஒரு நிழலாகவே ஆகிப்போனாள். அவனுடைய நினைவில் அவளுடைய உருவத்தை பதித்துக் கொள்ளும் முன்னமே வெகுகாலத்திற்கு முன்னதாகவே அவள் மறைந்துவிட்டாள். அவனுடைய தந்தைக்கும் இதே கதி விதிக்கப்பட்டிருந்தது. அவனும் பையன் அவனுடைய உருவத்தை மூளையில் செதுக்கிக் கொள்வதற்கு முன்னதாகவே மாண்டு போனான்.
நெருங்கிப் பழகி அறிந்துகொள்வதற்கு முன்னமே, அவன் கண் முன்பாகவே நபர்கள் காற்றில் கரைந்து போனதால் உயிர்ப்புள்ள மனிதர்களை, ஆளுமை கொண்ட நபர்களை அறிந்துகொள்ள அவனுக்கு வாய்க்கவே இல்லை. மனிதர்கள் அவனுக்கு நிச்சயமின்மையின் குறியீடாக ஆகிப் போனார்கள். வாழ்வின் நிச்சயமற்ற தன்மை அவனுக்குள் பதிந்து போனது. உருவற்ற, தெளிவில்லாத நிகழ்வு ஒன்று அவன் மீது கவியக் காத்திருப்பது போன்ற ஒரு உணர்வு நிரந்தரமாக அவனைப் பிடித்துக் கொண்டது. தொடர்பற்ற அந்நியர்களாகவே ஆகிவிட்ட சகோதரர்கள் ஐந்து பேரும் இரண்டு சகோதரிகளும் அவனுக்கு இருந்தார்கள். அத்தனை பேரையும் காப்பாற்றிக் கரைசேர்க்க யாரும் இல்லாததால் உறவினர்கள் ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். சாலை அவனுடைய பாட்டி எடுத்துக்கொண்டாள். எப்போதும் ஒரு டவுனிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டே இருந்தவள் அவள். அதனால்தான் என்னவோ அழகிய நிலப்பரப்புகளும்கூட சாலுக்கு எந்த உணர்ச்சிப் பிடிப்பையும் தராமல் போயின.

கொஞ்சகாலத்திற்கு தங்கியிருந்துவிட்டு நகர்ந்துவிடவேண்டிய உயிர்ப்பற்ற வெளிகள் என்பதற்கு மேலாக தெற்கின் அந்த சிறிய டவுன்கள் அவனுக்கு பெரிய அர்த்தம், கிளர்ச்சி எதையும் தந்துவிடவில்லை. பன்னிரண்டு வயது இருக்கும்போதே எல்லா புறயதார்த்தமும் அவனுக்கு வெறும் நிழல்களாக ஆகிப் போயின. அவனுடைய பெற்றோர்கள், அவன் விழுந்துவிட்ட கருப்புத் தீவைச் சூழ்ந்திருந்த வெள்ளை உலகம், வரிசையாக நகர்ந்துகொண்டே இருந்த தூசிபடிந்த சின்னச் சின்ன டவுன்கள் என்று எல்லா யதார்த்தத்தையுமே உள்ளீடற்ற வெறும் பெயர்களாக, சாரமற்ற பொருட்களாக, ஒரு நொடிப்பொழுது நிகழ்ந்துவிட்டு ஆழங்காணமுடியாத சூன்யத்தில் கரைந்து போய்விடுகிற சிறு துகள்களாக பார்க்கத் தொடங்கினான்.

சால் சோம்பேறியோ மந்தமானவனோ அல்ல. என்றாலும் பள்ளியில் மூன்றாவது க்ரேடை எட்டுவதற்கு அவனுக்கு ஏழு வருடங்கள் பிடித்தது. அவனுடைய வாழ்க்கையில் வந்துபோனவர்கள் எவரும் படிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டவர்களில்லை. சாலும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை. பதினாலு வயது ஆனபோதும் மூன்றாவது க்ரேடிலேயே இருப்பது அவனுடைய சூழலில் சாதரணமான ஒன்று. சாலும் மற்ற எல்லோரையும் போலவே சாதாரணமானவனாக இருப்பதையே விரும்பினான்; சராசரியானவனாகவே இருந்தான்.

அப்புறம், சாலுடைய பாட்டி, எப்போதும் தன்னுடனேயே இருப்பாள் என்று அவன் நம்பியவள். திடீரென்று ஒருநாள் இறந்துபோனாள். அந்த நொடியிலிருந்து கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல அவனுக்கு எதுவும் புரியாமல் போனது. வெள்ளையர்களிடம் வேலைக்குப் போக ஆரம்பித்தான். திடீரென்று இப்படி வெள்ளை உலகத்துக்குள் போய் விழுந்தவனுக்கு அந்த உலகம் சுத்தமாக பிடிபடவில்லை. அவனுடைய நிழல்கள் இப்போது பயங்கர உருவங்கள் எடுத்து எங்கு சென்றாலும் அவனை சுற்றிச் சூழ்ந்து கொண்டன. அவனுக்கும் எங்கோ ஏதோவொரு இடத்தில் மறைந்திருந்த சூரியனுக்கும் இடையில் ஏதோவொரு பொருள் அந்த பயங்கரக் கரிய நிழலைக் கவித்து நின்றது.

வேலைக்குச் சேர்ந்த இடங்களில் விசித்திரமான அந்த வெள்ளையர்கள் அவனை ஏதோ இழிந்த பொருளைப்போல பார்ப்பதை சீக்கிரத்திலேயே உணர்ந்துகொண்டான். ஒருநாளும் அவன் தன்னைத் தாழ்ந்தவனாக கருதியதில்லை. ஆனால், இப்போது சுற்றிலும் ஒருமுறை பார்த்தபோது மற்ற கருப்பர்கள் எல்லோரும் தங்கள் மீது பதிக்கப்பட்ட இந்தத் தாழ்வான மதிப்பை சத்தமில்லாமல் ஏற்றுக்கொண்டிருப்பதைக் கண்டான். அப்படியிருக்கும்போது இவன் யார் அதை எதிர்க்க? வேறு எந்த வழியும் இல்லாததால், அவனோ மற்ற யாருமோ அறிந்திராத சக்திகளால் இயக்கப்பட்ட அவன் வாழ்வில் எப்போதும் வந்து போய்க் கொண்டிருந்த அந்தப் பரந்த நிழல் உலகின் ஒரு பகுதி என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டான்.

ஆனால், வெகு சீக்கிரமே அவனுடைய கவலைகள், அச்சங்கள், எரிச்சல்கள் அத்தனையும் அவனுடைய உழைப்பை உறிஞ்சிக்கொண்டு வெறும் ரொட்டியை வீசிய அந்த வெள்ளை நிழல் உலகின் மீது குவிய ஆரம்பித்தன. ஏனென்று தெரியாமலேயே குதூகலமிழந்து சோகமாகத் திரிந்தவன் இப்போது தன்னை அச்சம் கொள்ளவைத்த அந்த நிழல் உலகின் மீது தன்னுள் பொதிந்து கிடந்த துயரத்தனையும் இறக்கிவைத்தான். இதைச் செய்யாமல் விட்டிருந்தால், தன்னுடைய சுமையை இறக்கி வைப்பதற்கு ஒரு வழியைக் கண்டிருக்காமல் விட்டிருந்தால் எப்போதோ அவன் தற்கொலை செய்துகொண்டிருப்பான். கடைசியில் அந்த யோசனையையும் அவன் விட்டுவைக்கவில்லை.

ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. பதினைந்து வயதானபோது சால், தான் அப்போது வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கைதான் தனக்கு விதிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டான். அவனைச் சுற்றிலும் இருந்த பொருட்கள் அத்தனையும் வெறும் நிழல்கள் என்ற உணர்வை விரட்டியடிக்கவோ மறந்துவிட்டு நிம்மதியாக இருக்கவோ வழியே இல்லை என்பதை உணர்ந்துகொண்டான். ஆனால், தன் இனத்தவரோடு, கருப்பு மக்களோடு இருந்தபோது அவன் தன்னை மறந்திருந்தான். அந்த சமயங்களில்தான் அவன் ஓரளவு மகிழ்ச்சியோடு இருந்தான். ஆனால், வயது ஏற ஏற அவனது அச்சங்கள் கூடிக்கொண்டே இருந்தன. அவனுடைய நண்பர்கள் இதையெல்லாம் கவனிக்கவே இல்லை. சொல்லப்போனால், சாலுடைய நண்பர்கள் அவனை மிகவும் நேசித்தார்கள். சால் எல்லோரிடமும் அன்பாகவே இருந்தான். இனிமையாகப் பழகினான். அடுத்தவர் பேச்சை எப்போதும் காதுகொடுத்துக் கேட்டான். அவனுடைய இனிய முகம், அமைதி, பணிவு இதெல்லாமும் அவனுடைய அச்சத்தின் விளைவுகள் என்பதை ஒருவரும் சந்தேகிக்கக்கூட இல்லை.

வாழ்க்கை அப்படியே போய்க்கொண்டிருக்கவில்லை. கொஞ்ச நாளில் சாலிடமும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதை அதிர்ஷ்டம் என்பதா அல்லது துரதிர்ஷ்டம் என்று சொல்வதா தெரியவில்லை. சொல்வது சிரமம். சால் குடிக்கப் பழகிக்கொண்டான். ஒரு இரண்டு பெக் விஸ்கி உள்ளே போனதும் நரம்புகள் தளர்ந்து உளைச்சல்கள் குறைவது போல உணர்ந்தான். உலகம் இப்போது அதன் முப்பரிமாணத்தில் அழகாகத் தெரிந்தது. நிழல்கள் எங்கே போய் ஒளிந்தன என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. விஸ்கி செய்கிற மாயம்தான் என்ன!

சால் குடிப்பதை விரும்ப ஆரம்பித்தான். சனிக்கிழமை இரவு கையில் சம்பளம் கிடைத்ததும் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதை வழக்கமாக ஆக்கிக்கொண்டான். அந்த நேரங்கள் அவனுக்கு இதமாக இருந்தன. மகிழ்ச்சியும் தெம்பும் தந்த விஸ்கி இல்லாமல் வாழ்க்கை நிறைவாக இருக்காது என்று உணர ஆரம்பித்தான். ஆனால், உண்மையில் அது அப்படி இருக்கவில்லை. விஸ்கி அவனை மந்தமாக்கியது; சோர்வை அதிகரித்தது. அவனை அச்சுறுத்தி இறுக வைத்துக் கொண்டிருந்த நிழல்களைக் குறைத்து, அவற்றின் வெறியைத் தணித்தது.

நிதானத்தில் இருக்கும்போது வெள்ளை நிழல் உலகின் அருகாமையில் அவன் சிரித்ததே இல்லை. ஆனால், ஒன்றிரண்டு பெக் விஸ்கி உள்ளே போனதும் அங்கும்கூட தன்னால் சிரிக்க முடிவதை கண்டுகொண்டான். நீக்ரோக்களின் அவலமிக்க வாழ்க்கை பற்றி யாரவது பிரசங்கம் செய்தால் அவன் கவலையில் மூழ்கிவிடுவதில்லை. விஸ்கி எடுத்துக் கொள்வான். சோகத்தின் சுமை இறங்கிவிடும். ஒரு வெள்ளைப் பெண்ணோடு தனியாக இருக்கும்போது, அவள் வீறிட்டுக் கத்திவிட்டால் உனக்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது என்று அர்த்தம்; நீ ஒன்றுமே செய்திருக்கவில்லை என்றிருந்தாலும்கூட நிச்சயம் கொல்லப்படுவாய் என்றெல்லாம் சொல்லக் கேட்டபோதும்கூட அவன் அலட்டிக்கொள்வதில்லை. கருப்பர் பகுதியில் போலீஸ் கார்கள் சைரன்கள் அலற சீறிக்கொண்டு போவது, வெள்ளை போலீஸ்காரர்கள் நீக்ரோக்களை அடித்து இழுத்துச் செல்வது, எல்லாம் சாலுக்கு பார்த்துப் பார்த்து பழகிவிட்டன. ஒரேயொருமுறை அதை நினைத்து அவனுக்கு கடுமையான கோபம் வந்தது. அதே கதி தனக்கும் ஒருநாள் நேரக்கூடும்; நிழல்கள் தன்னையும் கொத்திச் சென்றுவிடக்கூடும் என்று உணர்ச்சிவசப்பட்டான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அந்த நினைப்பே ஆபத்தானது என்று அவனை பயமுறுத்தினார்கள். எப்போதும் கருப்பர்கள் தோல்வியடைவது எழுதிவைக்கப்பட்டுவிட்டது என்று புத்தி சொன்னார்கள். அவனும் புரிந்துகொண்டான். விஸ்கியை விழுங்கினான். சற்று நேரத்தில் எல்லோரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு இரவு லேசான போதையில் இருந்தபோது – அப்போது அவனுக்கு முப்பது வயது; வாஷிங்டனில் இருந்தான் – அவனுக்கு திருமணம் முடிந்தது. அந்தப் பெண் சாலுக்குப் பொருத்தமானவளாக இருந்தாள். சாலைப் போலவே அவளும் குடிப்பதை விரும்பினாள். பிணக்குகள் எதுவும் இல்லாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இப்போது நிலைமைகள் சற்று பரவாயில்லை என்பது போல சாலுக்குத் தோன்றியது. எப்போதும் சுற்றிவளைத்து நெருக்கப்பட்டது போன்ற உணர்வை உதறித் தள்ளிவிட முடிந்தவரைக்கும், எப்போது என்ன நடக்கும் என்கிற நிச்சயமின்மையை நசுக்கிவிட முடிந்தவரைக்கும், வாழ்க்கை துயரமில்லாமல் போனது.

சால் பார்த்த வேலைகள் எல்லாம் மிகவும் சாதாரணமானவை. அவன் முதலில் வேலைக்குச் சேர்ந்தது ஒரு பண்ணையில். அவனுடைய பாட்டி இறந்தபிறகு பதினாலு வயதில் வாஷிங்டனுக்கு போய்ச் சேர்ந்தான். ஒரு வேலையில் நிலையாக இருக்கவில்லை. பலவிதமான வேலைகளில் இருந்துவிட்டு கடைசியில் வயதான ஒரு வெள்ளைக் கொலெனலிடம் டிரைவராகவும் சமையல்காரனாகவும் சேர்ந்தான். இங்கு சராசரியாக வாரத்திற்கு இருபது டாலர்கள் தேற்ற முடிந்தது. கொலெனல் அவனுக்கு உணவும், சீருடையும் தங்குவதற்கு இடமும் தந்தான். சால் அங்கு ஐந்து வருடங்கள் வேலை செய்தான். கொலெனலும் மதுவை விரும்பினான். சில நேரங்களில் இருவரும் சேர்ந்தே குடித்தார்கள். ஆனால், கொலெனல் குடித்தாலும், தன்னிடம் நன்றாக நடந்துகொண்டாலும் அவன் நிஜமல்ல, நிழல்; எந்த நேரத்திலும் தன் மீது பாய்ந்துவிடக்கூடும் என்பதை மட்டும் சால் ஒருபோதும் மறந்துவிடவில்லை.

ஒருநாள், விஸ்கியின் போதையில் இதமாக உணர்ந்தபோது சால் கொலெனலிடம் சம்பளத்தை உயர்த்தச் சொல்லி கேட்டான். விலைவாசி ஏறிக்கொண்டே போவதையும் சம்பளம் போதவில்லை என்பதையும் சொன்னான். ஆனால், கொலெனல் அன்று விறைப்பாக இருந்தான். முடியாது என்று முகத்திலடித்ததுபோல சொல்லிவிட்டான். சால் இதை எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றத்தில், அதிர்ச்சியில் அந்த நிமிடமே வேலையை உதறிவிட்டான். விஸ்கி தந்த போதையில் ஒரு நிமிடம், ஒரேயொரு நிமிடம் நிழல்களின் உலகம் மறைந்துவிட்டது என்று நினைத்துவிட்டான். ஆனால் சம்பளத்தை உயர்த்திக்கேட்டு மறுக்கப்பட்டவுடன் தனது நினைப்பு எவ்வளவு தவறு என்பதை உணர்ந்துகொண்டான்.

அதிக சம்பளம் கேட்டிருக்கக்கூடாது. கொலெனல் நல்ல மனிதன் என்று நம்பியிருக்ககூடாது. அவன் ஒரு நிழல் என்பதை மறந்திருக்கக்கூடாது.

அடுத்து, ஒரு பெரிய மருந்து கம்பெனியில் சேர்ந்தான். வீடு வீடாகச் சென்று எலிகளுக்கும் கரப்பான்பூச்சிகளுக்கும் மருந்து வைக்கவேண்டியது அவன் வேலை. தன்னுள் இருக்கும் ஏதோ ஒரு இயல்புக்குப் பொருத்தமான வேலை என்று அவனுக்குத் தோன்றியது. செத்துப்போன எலிகளின் உடல்கள் நிழல்கள் அல்ல, நிதர்சனமான நிஜங்கள் என்பதைப் பார்த்தான். தான் செய்த வேலைக்குப் பருண்மையான விளைவுகள் உண்டானது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. சமூகத்தின் ஒப்புதலோடு கொலை செய்வது வாழ்க்கையில் என்றுமில்லாத திருப்தியைத் தந்தது. அதோடு, அவனுடைய முதலாளி கேட்டதும் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தான். இப்போது தன் இஷ்டப்படி குடிக்க ஆரம்பித்தான். யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை.

ஆனால், ஒருநாள் காலை, இரவு முழுக்கக் குடித்திருந்துவிட்டு எரிச்சலோடு விறைப்பாக இருந்தவனிடம் அவனுடைய முதலாளி அவனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டான். அந்தக் குற்றச்சாட்டை சால் உடனே மறுத்துப் பேசினான். ஒரு வாக்குவாதம் நடந்தது. சால் வேலையை விட்டுவிட்டான்.

இரண்டு வாரங்கள் வேலை தேடி வேட்டையாடியதில் நேஷனல் கதீட்ரல் என்ற மதநிறுவனத்தில், சர்ச்சில் ஜேனிட்டராக வேலை கிடைத்தது. எந்தத் தொந்தரவும், யாருடைய தொல்லையும் இல்லாது, அவன் விரும்பியது போன்றே அவனைத் தனிமையில் விட்ட வேலை அது. தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும். முதலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடையைத் துடைத்து சுத்தம் செய்யவேண்டும். அடுத்து நூலகம். கடைசியாக, பாட்டுப் பயிற்சி நடக்கும் அறையை சுத்தம் செய்யவேண்டும்.

ஆனால், வரிசை வரிசையாக புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த நூலகத்தை சுத்தம் செய்யும்போதுதான் அவனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. அங்கு ஒரு நிழல் – ஒரு வெள்ளைப் பெண், எப்போதும் அவனை ஒரு மாதிரியாக வெறித்துக் கொண்டிருந்தாள். நூலகம் தனியான ஒரு கட்டிடத்தில் இருந்தது. அவன் சுத்தம் செய்யப்போகும் போதெல்லாம் அவனும் அந்தப் பெண்ணும் தனியாகவே இருந்தார்கள். பொன்னிறம், நீலக் கண்கள், ஐந்து அடி மூன்று அங்குலம் இருந்த உருவத்தில் சிறிய அந்தப் பெண் தோராயமாக ஒரு 100 பவுண்டுகள் கனத்திற்கு இருப்பாள்.

சாலுடைய முதலாளி முதலிலேயே அவனை எச்சரித்திருந்தார். “அவள் ஒரு கிறுக்கி,” என்று சொல்லியிருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் நூலகத்துக்குப் பொறுப்பாக இருந்த அந்தப் பெண்ணோடு எந்தத் தகராறும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று எச்சரித்திருந்தார். சாலுக்கு மட்டும் எந்தச் சண்டையில் என்ன விருப்பம். அவளுடைய பெயர் என்ன என்பதைக்கூட அவன் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், பல சந்தர்ப்பங்களில் ஏதோ உறுத்த துடைப்பதை நிறுத்திவிட்டுத் தயங்கி நிற்பான். சற்று தெம்பை வரவழைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தால், அவள் அவனை வெறித்துக் கொண்டிருப்பாள். சட்டென்று, ஏதோ வெட்கம் வந்தவளைப் போல வேறு பக்கம் திரும்பிக் கொள்வாள். “அட சனியனே, என்னிடம் என்ன இருக்கிறது இவளுக்கு?” என்று சங்கடத்தில் நெளிவான். காலை வணக்கம் சொல்வதைத் தவிர அவள் அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அதையும்கூட ஏதோ வேண்டாவெறுப்பாக சொல்வதைப் போல சொல்வாள். சால், ஒருவேளை அவள் தன்னைக் கண்டு பயப்படுகிறாளோ என்றுகூட யோசித்தான். ஆனால், அவனைக் கண்டு பயப்பட என்ன இருக்கிறது? தன்னைக் கண்டு பயந்தவர்கள் என்று வாழ்க்கையில் ஒருவரைக்கூட அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதுவரையில் அவன் எந்தப் பெரிய தொந்தரவு எதிலும் மாட்டிக்கொண்டது இல்லை.

ஒருநாள் காலை, பெருக்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் அதே உறுத்தல் அவனைப் பிடித்து நிறுத்தியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தான். அவள் அவனை வெறித்துக் கொண்டிருந்தாள். அசையாமல் அப்படியே நின்றான். அவளும் பார்வையைத் திருப்பவில்லை. ஒரு பத்து நொடிகள் இருவரும் அப்படியே இருந்தார்கள். சட்டென்று அவள், ஏதோ பயத்தாலோ கோபத்தாலோ வெகுண்டுவிட்டவளைப் போல எழுந்து விறுவிறுவென்று நடந்து அறையைவிட்டு வெளியேறினாள். சால் அரண்டு போய்விட்டான். ஆனால், சீக்கிரத்திலேயே சம்பவத்தை மறந்துவிட்டான். “இந்தச் சனியனுக்கு என்ன வந்து தொலைத்தது?” என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை முதலாளி அவனைக் கூப்பிட்டனுப்பினார். மெதுவான குரலில், அமைதியான தொனியில் – அது அவனுக்கு எந்தப் பெரிய வித்தியாசமும் தந்துவிடவில்லை. எரிச்சலும் அச்சமுமாகவே இருந்தது – நூலகத்தில் இருந்த அந்தப் பெண், அவளுடைய மேசைக்கடியில் அவன் சுத்தம் செய்வதே இல்லை என்று புகார் செய்திருப்பதாகக் கூறினார்.

“அவளுடைய மேசைக்கு அடியிலா?” சால் திகைத்துவிட்டான்.

”ஆமாம்,” அவனுடைய திகைப்பைக் கண்டு ஆச்சரியத்தோடு சொன்னார்.

“ஆனால், நான் ஒருநாள்கூடத் தவறாமல் அவளுடைய மேசைக்கடியில் சுத்தம் செய்கிறேனே.”

“சரி சரி சால். நான் தான் முதலிலேயே சொல்லியிருக்கிறேனே. அவள் ஒரு கிறுக்கி,” முதலாளி அவனை சமாதானப்படுத்தினார். “அவளோடு எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளாதே. உன் வேலையை நீ சரியாகச் செய். அது போதும்.”

“சரி சார்.”

அவள் எப்போதும் தன்னையே வெறித்துக்கொண்டிருந்தாள் என்பதை அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு நிமிடம் அவனுக்குத் தோன்றியது. ஆனால், அவனுக்குத் தெம்பு வரவில்லை. அவனுடைய கருப்பு நண்பர்களாக இருந்திருந்தால் இந்நேரம் சாதாரணமாக சொல்லிவிட்டிருப்பான். ஆனால், ஒரு விசித்திரமான நிழலைப் பற்றி இன்னொரு நிழலிடம் எதற்குச் சொல்ல வேண்டும்?

அன்று சம்பளத் தேதியாகையால் அவனுடைய வாரக்கூலியை பெற்றுக்கொண்டான். அந்த இரவு அற்புதமாகக் கழிந்தது. நினைவில் இருந்த எல்லாமும் கரைகிற வரைக்கும் கிறுகிறுத்து தள்ளாடுகிற வரைக்கும் குடித்தான். இப்போதெல்லாம் கையில் பணம் கிடைக்கிற போதெல்லாம் குடிக்க ஆரம்பித்திருந்தான். குடிப்பது அவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. அப்போதுதான் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். ஆனால் யாரையும் தொந்தரவு மட்டும் செய்ய மாட்டான். ஆனால், விடியல் எப்போதும் சக்கையாக உலர்ந்துபோனவனையே எழுப்பியது. முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு இப்போது அவனை நிழல்கள் சுற்றி முற்றுகையிட்டிருப்பதைப் போல உணர்ந்தான். எழுந்து வேலைக்குப் போகவேண்டும் என்கிற நினைப்பே எரிச்சலாக இருந்தது. ஆழமான தூக்கத்திற்காக ஏங்கினான். ஆனால் என்ன செய்வது. இது நல்ல வேலை. எப்படியும் இதில் ஒட்டியிருக்க வேண்டும். ஆமாம், போய்த்தான் ஆகவேண்டும்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடையைத் துடைத்து முடித்ததும் – அதற்குள் சோர்ந்துவிட்டிருந்தான்; வெகுவாக வியர்த்துக் கொட்டியது – நூலகத்திற்குக் கிளம்பினான். அங்கு ஒருவரும் இருக்கவில்லை. தரையைத் துடைத்து முடித்து புத்தகங்களை தூசு தட்ட நகர்ந்தபோது அவள் அறைக்குள் வந்த காலடிச் சத்தம் கேட்டது. அரைத் தூக்கத்தில் சோர்ந்துபோய் இருந்தவனுக்கு ஒருவிதமான படபடப்பு தொற்றிக்கொண்டது. கைகள் நடுங்கின. அவனுடைய இயல்பான அசைவியக்கங்கள் வழக்கத்தைவிட வேகமாக இருந்தன. “என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகச் சொன்ன தேவடியா நீ தானே? ம்ம்ம்.” எரிச்சலோடு சொல்லிக் கொண்டான். கொஞ்ச நேரம் எந்த நினைப்பும் இல்லாமல் தூசு தட்டிக்கொண்டிருந்தான். திடீரென்று மறுபடியும் அவள் தன்னையே வெறித்துக் கொண்டிருப்பது போல உறுத்தியது. திரும்பிப் பார்க்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு சில நிமிடங்களுக்கு மேலாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியவில்லை. மெதுவாகத் திரும்பினான். அவளுடைய இடத்தில் உட்கார்ந்திருந்தவள் அவனை கண் கொட்டாமல் வெறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ சொல்ல வருவது போலத் தெரிந்தது. அவளைப் பார்த்துக்கொண்டு என்ன சொல்லப் போகிறாள் என்று காத்துக் கொண்டிருப்பதைத் தவிர அவனுக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

“என் மேசைக்கடியில் துடைக்க உனக்கு என்ன நோகிறதா?” கட்டுப்படுத்திக்கொண்ட சற்றே நடுங்கிய குரலில் கேட்டாள்.

“மேடம்,” மெதுவாகச் சொன்னான். “சற்று முன்பாகத்தான் அங்கு துடைத்தேனே மேடம்.”

“இங்க வந்து பார்,” விரலைக் கீழே காட்டி சொன்னாள்.

புத்தகத்தை அலமாரியில் திரும்ப வைத்தான். இதற்கு முன் அவள் அவனிடம் இத்தனை வார்த்தைகள் பேசியது இல்லை. அவள் முன்பாக போய் நின்றவன் அதிர்ந்துபோனான். அவனுடைய கண்கள் பார்த்ததை மூளை ஆட்சேபித்தது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. கால்களைப் பரத்தி இடுப்புக்குக் கீழிருந்த துணியை தொடைகளுக்கு மேலாக ஏற்றி உட்கார்ந்திருந்தாள். அவளுடைய வட்ட நீல விழிகளிலிருந்து இறங்கி வெள்ளை வெளேரென்றிருந்த கால்களை வெறித்தான். மேலே ஏற ஏற சதைப்பற்று கூடியிருந்த தொடைகள் செங்குத்தாக, இறுகியிருந்த இளஞ்சிவப்பு உள்ளாடை மறைத்த ஒரு V – யில் முடிந்தன. திரும்பவும் அவள் கண்களை நோக்கினான். அவளுடைய முகம் சிவந்திருந்தது. ஏதோ அவள் விரும்பாத ஒரு காரியத்தை வலுக்கட்டாயமாக செய்ய வைக்கப்பட்டவளைப்போல இறுக்கமாக உட்கார்ந்திருந்தாள். சால் அதிர்ந்துபோய் நின்றிருந்தான்.

“கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் உங்கள் மேசைக்கு அடியில் துடைத்தேனே.” சம்பந்தமில்லாமல் உளறுகிறோம் என்ற உறுத்தலுடனே முனகினான்.

“இப்போது இங்கே தூசு சேர்ந்திருக்கிறது.” வெடுக்கென்று சொன்னாள். அவளுடைய கால்கள் இன்னும் அகலமாக விரிந்ததைப் பார்த்தவனுக்கு அவள் நிர்வாணமாகக் கிடந்தது போலத் தோன்றியது.

என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. இந்த அளவுகு அவன் அவமானப்பட்டதில்லை. பயந்து திணறியது இல்லை. கோபம் மெதுவாக அவன் தலைக்கு ஏறிக்கொண்டு இருந்தது. ஆனாலும் வெளிப்படுத்துகிற தைரியம் வரவில்லை.

“பாருங்கள் மேடம்,” வெறுப்பையும் ஆத்திரத்தையும் அடக்கிய தொனியில் பேசினான். “என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.”

“சொன்ன வேலையைச் செய்யாமல் என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறாய்.” அவள் இப்போது அனல் கக்கினாள். “கருங்குரங்கே! அதற்குத்தானே உனக்கு சம்பளம் கொடுக்கிறோம்.” அவளுடைய கால்கள் இன்னும் விரிந்தே கிடந்தன. எந்த நிமிடமும் பாய்ந்து அவனுடைய உடல்மீது தொடைய அழுத்திவிடத் தயாராக இருப்பது போல உட்கார்ந்திருந்தாள்.

ஒரு நிமிடம் அவன் அசையாமல் அமைதியாக நின்றான். இதற்கு முன் வாழ்க்கையில் அவன் கருங்குரங்கு (nigger) என்ற வசவை வாங்கியதில்லை. கருப்பர்களை ஆகக் கீழாக அவமானப்படுத்த வெள்ளையர்கள் அந்தப் பதத்தை பயன்படுத்தினார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அந்த வசவுக்கு அவன் ஒருமுறைகூட ஆளானதில்லை. விரிந்து கிடந்த தொடைகளை வெறிக்க வெறிக்க அவமானம் அவனுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு பயங்கர ஆபத்து தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான்.

“இது எனக்குப் பிடிக்கவில்லை.” சொல்லி முடிக்கும் முன்பாகவே என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளும் முன்பாகவே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

எதிர்பாராத அடியில் ஒரு நிமிடம் அவளுக்கு மூச்சு நின்றுவிட்டது போலிருந்தது. துள்ளி எழுந்து பின்னே நகர்ந்து நின்றாள். அடுத்த நிமிடம் வீறிட்டு கத்தினாள். அவளுடைய அலறல் சாட்டையால் அவன் நெஞ்சைப் பிளந்தது போல இருந்தது. மறுபடியும் கத்தினாள். அவன் பயந்து பின்னால் நகர்ந்தான். என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அவன் செய்துவிட்ட காரியம், அதன் விளைவு என்ன என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவனால் வேறு என்ன செய்திருக்க முடியும்! அந்த அறையில் அவனுடைய இன்னொரு மனம் நின்றுகொண்டு செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் அவன் செய்துகொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றியது. மூச்சை நன்றாக இழுத்து விட்டான். ஒரு நிமிடம் நிற்கவே தெம்பில்லாமல் போனது போலத் தோன்றியது. எப்போதும் அவன் அஞ்சி நடுங்கிய நிழல்கள் எல்லாமும் சேர்ந்து அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டது போலத் தோன்றியது. ஒரு கருப்பன் அதிகபட்சம் எதிர்பார்க்கக்கூடிய மோசமான ஆபத்தில் அவன் சிக்கிக்கொண்டு விட்டிருந்தது புரிந்தது.

அவள் இப்போது நிறுத்தாமல் கத்திக்கொண்டு இருந்தாள். அவன் மாடிப்படிகளை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தான். படியில் காலை வைத்தவன் தயங்கி நின்று திரும்பிப் பார்த்தான். கத்துவதை நிறுத்தாமலேயே அவள் அறையின் கோடியில் திறந்திருந்த ஜன்னல் பக்கம் பின்னாலேயே நகர்ந்து கொண்டிருந்தாள். ஐயோ ஆண்டவனே! அவளுடைய அலறலில் கருப்பர் பகுதியில் கருப்பர்களை வேட்டையாடிய போலீஸ் கார்களின் சைரன்கள் கேட்டது. கருப்பர்களைத் துரத்திச் சென்ற வெள்ளை போலீஸ்காரர்களின் சில்லிடும் விசில்களின் அலறல் கேட்டது. ஒரு நிமிடம் அவன் உடலை ஊடுருவிப் பாய்ந்த அந்த உணர்ச்சியில் குற்றம் செய்த எந்த ஒரு கருப்பனையும் எப்படியும் வெள்ளையர்கள் பிடித்து விடுவதைப் பற்றிய அந்த பயங்கர கதைகளெல்லாம் திரும்பக் கேட்டது. இவளோ ஏதோ இவன் கற்பழித்து விட்டதைப்போல அலறிக்கொண்டு இருக்கிறாள்.

படிகளில் ஏறி ஓடினான். ஆனால், அவளுடைய அலறல்கள் சப்தம் கூடிக்கொண்டே போனது. கடைசிப் படியில் காலை வைத்தபோது அவனுடைய வேகம் குறைந்துவிட்டிருந்தது. அவளுடைய அலறல்கள் இனிமேலும் அவனை ஓடவிடாது போலிருந்தது. அவனைச் சோர்ந்துபோக வைத்தது. சட்டையைப் பிடித்து இழுத்தது. நெஞ்சு வெடித்துவிடும்போல இருந்தது. நின்று இலக்கில்லாமல் சுற்றிலும் பார்த்தான். குளிர்காயும் இடம் கண்ணில் பட்டது. அருகில் விறகுக் கட்டைகள் ஒழுங்காக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே மறுபடியும் அவளுடைய அலறல்கள். நெஞ்சு பிளந்துவிடும் போல இருந்தது. ஒரு நடுக்கம் உடலெங்கும் பரவியது. நடுங்கும் கைகளோடு குனிந்து கோடரியால் வெட்டுப்பட்ட, முனைகளில் கூராக இருந்த ஒரு கட்டையை இடது கையால் – அவன் இடதுகைப் பழக்கமுள்ளவன் – உருவினான். திரும்பி படிகளில் விறுவிறுவென்று இறங்கி அவள் நின்று அலறிக் கொண்டிருந்த இடத்திற்கு ஓடினான். நெருங்கி கட்டையை ஓங்கியவன் ஒரு நிமிடம் தயங்கி நின்றான். அவள் அலறுவதை நிறுத்தினால் போதும். அவள் நிறுத்தியிருந்தால் அவன் அங்கிருந்து ஓடிவிட்டிருப்பான். ஆனால், அவள் தொடர்ந்து அலறிக்கொண்டு இருந்தாள். அவனுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபம் எல்லை மீறிக்கொண்டு இருந்தது. அவளுடைய அலறலை நிறுத்த உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். அவள் இரப்பை நிறைய காற்றை இழுத்து முழு வேகத்தில் அலறிக் கொண்டிருந்தாள். இடது கையை வேகமாக இறக்கினான். அவள் தலையின் பக்கவாட்டில் அடி இறங்கியது. ஆனால், அவனுக்கு அவளைக் கொல்ல வேண்டும் என்பது நோக்கமில்லை. அவளைக் காயப்படுத்தவும் விருப்பமில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் ஒன்றுதான். அவளுடைய அலறலை நிறுத்தவேண்டும். அந்த அலறல்களுக்கு அர்த்தம் ஒன்றே ஒன்றுதான். மரணம். அவள் அலறுவதை நிறுத்தியாக வேண்டும்…

அவள் தரையில் சரிந்த அதே வேகத்தில் மண்டை பிளந்து கட்டை உள்ளே இறங்குவதை உணர்ந்தான்ஆனால்இன்னும் அவள் அலறிக்கொண்டிருந்தாள்உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனுக்கு நடுங்கியதுஅட சனியனே … இன்னமும் ஏன் இப்படி அலறிக்கொண்டிருக்கிறாள்மீண்டும் கையை உயர்த்தி ஓங்கி அடித்தவன் கட்டை அவள் மண்டை ஓட்டைப் பிளந்துகொண்டு உள்ளே இறங்குவதை உணர்ந்தான்ஆனால் இன்னமும் அவள் அலறிக்கொண்டிருந்தாள்திரும்பவும் அடிக்க ஓங்கியவன், கை லேசாக இருப்பதுபோல உணர்ந்தான்கட்டை பாதி உடைந்து தரையில் கிடந்ததுஅவள் ஆடையெங்கும் ரத்தம் வழிந்துகொண்டிருந்ததுகால்கள் பரப்பிக் கிடந்தனஆனால் அவள் இன்னமும் அலறிக்கொண்டிருந்தாள்கையிலிருந்த துண்டை வீசிவிட்டு அவள் தொண்டையைப் பிடித்து உலுக்கினான்அது அவளை அடக்கியது போல இருந்ததுமயங்கிவிட்டவளைப் போலக் கிடந்தாள்ஆனால் அவன் விட்டுவிடவில்லைவெகு நேரத்திற்கு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான்அவளைக் கொல்லவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லைஅவனுக்குள் புதைந்து கிடந்த அச்சத்தையும் கோபத்தையும் மீண்டும் மீண்டும் கிளறி அவனைப் பைத்தியமாக்கிய அந்த அலறலை நிறுத்திவிடவேண்டும் என்பதற்காகத்தான் நெரித்தான்அவளைப் பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லைஅந்த அலறல்கள் கிளறிவிட்ட உணர்ச்சிகளின் வேகத்திலேயே அப்படி நடந்துகொண்டான்.

இப்போது அவள் தொய்ந்து அமைதியாகக் கிடந்தாள்மெதுவாக கழுத்திலிருந்து கையை எடுத்தான்அவள் சத்தம் எதுவும் போடவில்லைகாத்திருந்தான்இன்னும் அவனுக்கு நம்பிக்கை வந்துவிடவில்லைஆமாம்கீழே கழிவறைக்கு இழுத்துக்கொண்டுபோய் போட்டுவிட வேண்டும்அங்கு அவள் கத்தினால்கூட யாருக்கும் கேட்காது … அவளுடைய கைகளை அவனுடையதுக்குள் எடுத்துக்கொண்டு ஜன்னலிலிருந்து தள்ளி அவளை இழுத்துக்கொண்டு போக ஆரம்பித்தான்அவனுடைய கைகள் வியர்த்து ஈரமாயிருந்தனநாலைந்து முறை அவளுடைய சிறிய விரல்கள் அவன் பிடிக்குள் இருந்து நழுவி விழுந்தனஅவள் கைகள் அத்தனை சிறியதாக மிருதுவாக இருந்தனஇன்னும் இறுக்கிப் பிடிக்க முயற்சித்து அவனுடைய நகங்கள்தான் பதிந்தனஇழுத்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய மோதிரம் நழுவி அவன் கைக்குள் விழுந்ததுஒரு நிமிடம் நின்றுதகதகத்த அந்த மெல்லிய வளையத்தை வெறித்துப் பார்த்தான்எந்த உணர்ச்சியும் இல்லாமல் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான்ஒருவழியாக அவளை படிகளில் கீழே இறக்கி இழுத்துக்கொண்டு கழிவறைக் கதவுவரை போய்ச் சேர்ந்துவிட்டான்.

உள்ளே அவளை இழுத்துப்போக இருந்தவன் தரையில் ரத்ததுளிகள் இருப்பதைப் பார்த்தான்இது ஒன்றும் சரியில்லையே… நிழல்களைப் பார்த்து பயப்பட பழக்கப்பட்டவனைப் போலவே தரையை சுத்தமாக வைத்திருக்கவும் பழக்கப்பட்டிருந்தவன் அவன்ஒரு சுவரில் அவளை மொத்தாக போட்டுவிட்டு கழிவறைக்குள் நுழைந்து கழிவறைக் காகிதங்களை கொத்தாக எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்சிகப்புத் துளிகளை துடைத்தெடுத்தான்மாடிக்கு ஏறிப்போய் அவளை முதலில் அடித்த இடத்தில் சிந்திக் கிடந்த ரத்தத் துளிகளை கவனமாக துடைத்தான்சட்டென்று அவன் உடல் இறுகியதுஅவள் மீண்டும் அலறிக்கொண்டிருந்தாள்வேகமாக கீழே இறங்கி ஒடிவந்தான்இந்த முறை அவன் சட்டைப் பைக்குள் ஒரு கத்தி இருந்தது ஞாபகத்திற்கு வந்ததுவெளியே எடுத்து பட்டனை அழுத்தித் திறந்தவன் அவளுடைய தொண்டைக்குள் சொருகினான்அவள் அலறலை நிறுத்தவேண்டும் என்பதில் அவனுக்கு வெறியே வந்துவிட்டிருந்தது… தொண்டைக்குள் இருந்து கத்தியை உருவினான்இப்போது அவள் அமைதியாக இருந்தாள்.

அறையை சுற்றிலும் நோட்டம் விட்டுக்கொண்டே எழுந்து நின்றான்நீராவிக் குழாய்கள் சென்ற உள்வழிக்கு இட்டுச் சென்ற கதவு ஒரு சுவரில் இருந்தது அவன் கண்ணில் பட்டதுஅதுதான் சரிஅவளை அதற்குள் போட்டுவிடுவதுதான் நல்லதுஅவள் திரும்ப கத்தத் தொடங்கினாலும் யார் காதிலும் விழாதுஅவன் அவளை ஒளித்துவைக்க முயற்சிக்கவில்லைஅவனுக்கு வேண்டியதெல்லாம் அவளுடைய அலறல் யாருக்கும் கேட்டுவிடக்கூடாதுஅதை உறுதி செய்துகொள்ளவேண்டும்அவ்வளவுதான்அவளை இழுத்தான்ஸ்கர்ட் உருவிக்கொண்டு அவளுடைய மார்புப் பக்கம் மேலாக வந்துவிட்டதுஇளஞ்சிவப்பு உள்ளாடை மீண்டும் அவன் கண்களில் பட்டதுஅவளை இழுப்பது இப்போது இன்னும் சிரமமாக இருந்ததுதூக்கி கைகளில் சுமந்துகொண்டு ஒரு சின்ன நடையே இருந்த படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தபோது அந்த இளஞ்சிவப்பு ஜட்டியை நனைத்து எடுத்துக்கொண்டால் சிதறியிருந்த ரத்தத்துளிகளை சுத்தமாக துடைத்தெடுக்க வசதியாக இருக்குமே என்று தோன்றியதுமீண்டும் அவளை ஒரு சுவரில் சாய்த்துஅவள் ஜட்டியை உருவினான்ஒரு நொடி நேரம்கூட அவள் பெண் உறுப்பை அவன் பார்க்கக்கூட இல்லைநனைத்து ரத்தம் சிந்தியிருந்த இடங்களை சுத்தமாக துடைத்தெடுத்தான்அப்புறம் குழாய்களுக்கு கீழே அந்த உள்வழியில் அவளைத் தள்ளிவிட்டான்முழுப் பார்வைக்கும் எளிதாகத் தெரியும்படி கிடந்தாள்ஈரப் பந்தாகியிருந்த ஜட்டியை அவளுக்குப் பின்னால் எறிந்தான்.

நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டு சுற்றிலும் பார்த்தான்தரை சுத்தமாகத் தெரிந்ததுதிரும்பவும் மாடிக்குப் போனான்அந்த உடைந்த விறகுக்கட்டை… இரண்டாக உடைந்திருந்த துண்டையும் இன்னும் மற்ற சிறிய துண்டுகளையும் பொறுக்கி எடுத்தான்உடைந்த முனைகளைச் சேர்த்துப் பொருத்தினான்முழுக் கட்டையைப் போலவே குளிர்காயும் இடத்தில் அடுக்கி வைத்திருந்த கட்டைகளோடு சேர்த்து கவனமாக வைத்தான்சற்று நின்று உற்றுக் கேட்டான்எந்தச் சத்தமும் இல்லைஅவள் மீண்டும் அலறவில்லைஅவளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணமோவலியால் துடித்திருப்பாள் என்றோ அவனுக்குத் தோன்றவேயில்லைஅவள் செத்துவிட்டிருப்பாள் என்பதுகூட அவனுக்குத் தோன்றவில்லைதொப்பியையும் கோட்டையும் எடுத்துக் கொண்டான்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ரொம்பவும் சோர்ந்துபோயிருந்தான்அவன் எப்போதும் செய்துவந்தஅவனுக்குப் பழகிப்போயிருந்த ஒரு வேலையைஅவனை எப்போதும் சுற்றிச் சூழ்ந்திருந்த அவனால் புரிந்துகொள்ளவே முடியாதிருந்த நிழல்களுக்கு போக்கு காட்டி ஏமாற்றும் வேலையை முடித்துவிட்டு வந்தது போல இருந்ததுஆடைகளைக் கழற்றி வீசினான்சட்டையிலும் பேண்டிலும் படிந்திருந்த ரத்தக் கறைகளை சட்டைகூட செய்யவில்லைமனைவி வேலைக்குப் போயிருந்தாள்அவன் மட்டும் தனியாக இருந்தான்பர்சை உருவியபோது மோதிரம் கண்ணில் பட்டதுமேசையின் ட்ராயரைத் திறந்து அதற்குள் அசட்டையாக வீசினான்அதை ஒளித்து வைக்கவேண்டும் என்ற யோசனையெல்லாம் அவனுக்கு இல்லைஅவள் பார்வையில் பட்டுவிடவேண்டாம் என்பதற்கு மேலாக அவன் யோசிக்கவில்லை.

களைத்து சலித்து கட்டிலில் விழுந்தவன் சட்டென்று நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்மறுநாள் மதியம்வரை எழுந்திருக்கவில்லைஇரத்தம் போலச் சிவந்திருந்த கண்களை சிமிட்டிக்கொண்டு அப்படியே மல்லாந்திருந்தான்முந்தைய நாள் நடந்த எதையும் அவனால் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லைஅப்புறம் மெதுவாக சம்பவங்களின் நிழல் போன்ற படங்கள் அவன் கண்களில் விரிந்தனஒரு நிமிடம் அவையெல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்தவைதானா அல்லது யாராவது சொன்ன கதையா என்பது புரியாமல் குழம்பினான்எதுவும் உறுதியாகச் சொல்லமுடியவில்லைஎன்றாலும் எந்தப் பயமும் வருத்தமும் எழவில்லை.

அப்புறம் கடைசியில் நடந்தது எல்லாம் நிஜம் என்ற நம்பிக்கை வந்தபோது உணர்ச்சிகளற்ற வெறும் நினைவுகளாகவே நின்றனசோர்ந்து தூக்கக் கலக்கத்தில் இருக்கும்போது சினிமாத் திரையில் விழுந்த ஒரு காட்சியைப் போல மங்கலாக இருந்ததுஎன்ன செய்வதென்று எதுவும் புரியவில்லைஅப்படியே படுக்கையிலேயே கிடந்தான்வேலை முடிந்து வெகுநேரம் கழித்து அவன் மனைவி வந்துசேர்ந்தபோது மறுபடியும் தூக்கம் அவனை அள்ளிச் சென்றுவிட்டது.

மறுநாள் காலை மனைவி செய்து வைத்த காலை உணவை உண்டுவிட்டு மேசையிலிருந்து எழுந்தான்அவளை முத்தமிட்டான்எதுவுமே நடக்காததுபோல கதீட்ரலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்சர்ச் படிகளை மிதிக்கும் வரைக்கும் எதுவும் தோன்றவில்லைபிறகுதான் நடுங்க ஆரம்பித்ததுஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் கதவுக்கு எதிரில் நின்றான்அதன் பிறகுதான் இனி தான் அதற்குள் நுழையவே முடியாது என்று உணர்ந்தான்அவனுக்கு கோபம் எதுவும் இல்லைஅந்த இடத்தின் மீது ஏதோ ஒரு இனம்புரியாத வெறுப்புஅவள் உயிரோடுதான் இருக்கிறாளா அல்லது செத்துவிட்டாளா என்ற கேள்வியே அவனுக்குள் எழவில்லைஎன்ன செய்வதென்று இன்னும் அவனுக்குப் பிடிபடவில்லைஅப்போது சட்டென்று அவன் மனைவி சில மளிகை சாமான்கள் வாங்கிவரச் சொன்னது ஞாபகத்திற்கு வந்ததுசரிஅதைச் செய்யவேண்டியதுதான்வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லைவேறு வழியில்லாமல் அதைச் செய்ய நினைத்தான்.

மளிகைச் சாமான்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்பிறகு நாள் முழுவதையும் ஒவ்வொரு பாராக கழித்தான்ஓடிப்போய்விட வேண்டும் என்ற எண்ணம் ஒருமுறைகூட அவனுக்குத் தோன்றவில்லைவீட்டுக்குப் போவதுரேடியோவை திருகிக்கொண்டிருப்பதுதிரும்பவும் தெருவுக்குப் போவதுகால்போன போக்கில் நடப்பதுகடைசியில் ஒரு பாருக்குள் நுழைவதுபோதை தலைக்கேறும் வரை குடிப்பது என்று கழித்துக் கொண்டிருந்தான்ஒருமுறைஉடைகளை மாற்றிக் கொண்டான்ரத்தம் படிந்திருந்த சட்டையையும் பேண்டையும் ஒரு மூட்டையாகக் கட்டி கறை படிந்த கத்தியை அதற்குள் திணித்து ஒரு மூலையில் எறிந்தான்துப்பாக்கியை எடுத்து சட்டைக்குள் வைத்துக்கொண்டான்ரொம்பவும் சோர்ந்துபோய் இருந்தான்.

ஆனால்இன்னமும் என்ன செய்வதென்று அவனுக்குப் பிடிபடவில்லைதிடீரென்று சில மாதங்களுக்கு முன்பாக மட்டமான விலைக்கு வாங்கி வைத்திருந்த கார் ஞாபகத்துக்கு வந்ததுரிப்பேருக்காக காரேஜில் விட்டிருந்தான்உடனே காரேஜுக்குப் போனான்இருபத்தைந்து டாலர்களுக்குப் பேசி அதன் உரிமையாளனிடமே அதை விற்றான்அப்போதுகூட தப்பித்துப் போகவேண்டும் என்றோ அதற்கு கார் பயன்படும் என்றோ அவனுக்குத் தோன்றவே இல்லைமாலைவரை பார்களில் குடித்துக் கழித்தான்வாழ்க்கை முழுக்க அவனை விரட்டிக்கொண்டிருந்த உணர்வுகள் அப்போதும்கூட அன்றுகூட அவனை விட்டுத் தொலைந்தது போல அவனுக்குத் தெரியவில்லை.

இரவு எட்டு மணி போலஎதிர்ப்பட்ட இரண்டு நண்பர்களை தன்னோடு குடிக்கவரும்படி அழைப்பு விடுத்தான்இப்போது நன்றாகக் குடித்திருந்தான்மேசையில் அவனுக்கு முன்பாக சாண்ட்விச்சும் ஒரு சிறிய க்ளாஸில் விஸ்கியும் இருந்ததுஇரண்டு நண்பர்களில் ஒருவன் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையை தூக்கக் கலக்கத்தில் முன்னே குனிந்து கேட்டுக் கொண்டிருந்தான்

அப்போது ஒரு குரல்:

நீ தானே சால் சாண்டர்ஸ்?”

நிமிர்ந்து பார்த்தவனுக்கு இரண்டு வெள்ளை நிழல்களின் வெளிறிய முகங்கள் தெரிந்தது.

ஆமாம்.” தயக்கமில்லாமல் சொன்னான்.

உன்னிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும்ஒழுங்காக எங்களோடு வந்துவிடுவது நல்லது.” ஒரு நிழல் சொன்னது.

எதற்காகஎன்ன விஷயம்?” சால் கேட்டான்.

அவர்கள் அவன் தோளைப் பற்றி இழுத்தார்கள்சால் எழுந்து நின்றான்குனிந்துகொஞ்சம் விஸ்கி மிச்சமிருந்த க்ளாஸை எடுத்து அதை காலி செய்தான்போலீஸ்காரர்கள் ஆளுக்கொரு பக்கம் வர தடுமாறாமல் நடந்தான்பாருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த காருக்கு வந்தார்கள்அவனுடைய மூளை சுத்தமாக துடைத்து எடுத்துவிட்டிருந்தது போல இருந்ததுகாருக்குள் அவர்கள் அவனைத் தள்ளுவதற்கு சற்று முன்பாகவரை அவனுக்கு எதுவும் தோன்றவில்லைஅப்போதுதான் அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்து அவனுக்குக் காத்திருந்த அபாயத்தை உணர்த்திய அது நடந்ததுஒரு போலீஸ்காரன் அவன் துப்பாக்கி எதுவும் வைத்திருக்கிறானா என்று இடுப்பைத் தடவிப் பார்த்தான்எதுவும் அகப்படவில்லைசால் துப்பாக்கியை மார்போடு சேர்த்து வைத்திருந்தான்அந்த நொடியில் திடீரென்று அந்த எண்ணம் அவன் மூளையில் உதித்ததுஅந்த எண்ணம் கிளப்பிய கிளர்ச்சியில் அவன் உடல் நடுங்கியது … ஆமாம்அவன் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவேண்டும்ஆனால்இது ஏன் முன்னமே மூளைக்கு எட்டவில்லை?

மெதுவாக தொப்பியைக் கழற்றிஇடது கையின் அசைவை மறைத்துக்கொள்ள நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டான்சட்டைக்குள் கையைவிட்டு துப்பாக்கியை வெளியே உருவினான்சடாரென்று ஒரு போலீஸ்காரன் பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டான்.

எங்களையும் கொல்லப் பார்க்கிறாயோ?”

இல்லைஎன்னையே சுட்டுக்கொள்ள நினைத்தேன்.” சால் ரொம்பவும் சாதாரணமாக சொன்னான்.

சனியனே!”

ஒரு முஷ்டி அவன் மோவாயில் இறங்கியதுமயங்கி சரிந்தான்.

இரண்டு மணி நேரம் கழித்துபோலீஸ் ஸ்டேஷனில்சால் நடந்தது ஒன்றையும் விடாமல் ஒப்புவித்தான்உணர்ச்சிகளின் எந்தத் தடயமும் இல்லாமல்விருப்பு வெறுப்பற்ற மெதுவான தொனியில் மெல்லிய குரலில் ஒவ்வொரு சிறு விவரத்தையும் தெளிவாக விளக்கிச் சொன்னான்ஆனால்என்ன விளக்கிச் சொன்னாலும் அவள் அலறல் தன்னை எப்படி நடுங்க வைத்தது என்பதை அவர்களுக்கு சுத்தமாக புரியவைக்கவே முடியாது என்பதை நன்றாக உணர்ந்திருந்தே சொன்னான்அவன் சொன்ன கதை மிகவும் கொடூரமாக இருந்திருக்கவேண்டும்அந்த போலீஸ்காரர்களுடைய முகம் வெளிறிப்போயிருந்தது.

சில வாரங்களுக்குப் பிறகு அவன் சோர்வாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கோர்ட்டில் அந்தக் குரல் இரைந்து கரைந்தது.

“…ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மரியாதைக்குரிய ஜூரிகள் மேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தின் பெயராலும் அதன் சார்பாகவும் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் பேரில் இதைப் படிக்கிறோம்.”

குற்றம் சாட்டப்பட்ட சால் சாண்டர்ஸ் என்ற இந்த நபர், 19__, மார்ச் முதல் தேதிமேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தில்அதன் எல்லைக்குள்மேபெல் ஈவா ஹவுஸ்மேன் என்கிற பெண்மணியைக் கொல்லும் நோக்கத்தோடுதிட்டமிட்டு…”

இதுதான் அவள் பெயரா!” சால் ஆச்சரியப்பட்டுக் கொண்டான்.

“…வேண்டுமென்றேஉள்நோக்கத்தோடுமுன்கூட்டியே யோசித்த இழிந்த நோக்கோடுதிட்டமிட்டுமேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனைதலையில் முன்பக்கமாகவும் வலது பக்கமாகவும் இரண்டு ஆழமான காயங்கள் விழும்படியும்மண்டை உடையும்படியும் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்மேலும் அவரது கையால் அல்லது இரண்டு கைகளாலும் – இரண்டு கைகளாலுமா அல்லது ஒரு கையால்தானா என்பதை தெளிவாக முடிவு செய்யமுடியவில்லை என்று மேற்சொன்ன ஜூரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள் – மேற்சொன்ன மேபெல் ஹவுஸ்மேனின் கழுத்தை இறுகப் பற்றி அழுத்தியிருக்கிறார்மேலும்மேற்சொன்ன சால் சாண்டர்ஸ்மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனின் கழுத்தைமேற்சொன்னவாறு ஒரு கையாலோ இரண்டு கைகளாலோ பிடித்து மூச்சுத்திணறும் வரை நெரித்திருக்கிறார்அதன் விளைவாகமேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேன் மூச்சுத் திணறிகழுத்து முறிந்துசரியாக 19__, மார்ச் மாதம் முதல் தேதியன்றுமேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தில் ,அதன் எல்லைக்குள் இறந்துவிட்டார் என்பது உறுதியாகிறது.

சால் குடிப்பதற்கு ஏங்கினான்ஆனால் இப்போது அது சாத்தியமில்லைமூச்சை நிம்மதியாக இழுத்துவிட்டான்அதே நிம்மதியோடு இத்தனை காலமும் பயந்து ஓடிக்கொண்டிருந்த அந்த நிழல்களின் உலகிடம் மண்டியிட்டு சரணடைந்தான்அவனுடைய உளைச்சல்கள் அத்தனையும் தொலைந்து அதுநாள் வரையில் அனுபவித்திராத அமைதியை உணர்ந்தான்நிழல்களின் உலகத்தோடு போராடுவதை நிறுத்திய அந்த நிமிடமே அவ்வளவு அமைதி கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது.

“…மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனுக்குச் சொந்தமான பத்து டாலர்கள் மதிப்புள்ள மோதிரத்தைஎதிர்ப்பை மீறிவன்முறையைப் பிரயோகித்துஅச்சுறுத்திஅந்த நேரத்தில்அந்த இடத்தில்மேற்சொன்ன நபரிடமிருந்து பிடுங்கிதிருடி எடுத்துச் சென்றுவிட்டார்.”

இப்போது எந்தக் கவலையும் இல்லாமல்ஆனால் இன்னும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் முறையிலும்இத்தகைய சூழல்களில் வாய்க்கிற சந்தர்ப்பங்களுக்குப் புறம்பாகவும்மேற்சொன்ன மேபெல் ஈவா ஜவுஸ்மேனை கொலை செய்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.”

பி.குஇதன்பேரில் டாக்டர்ஹெர்மென் ஸ்டீன் சாட்சியாக அழைக்கப்பட்டுமுறையான உறுதிமொழி எடுத்துக்கொண்டு அளித்த சாட்சி பின்வருமாறு:

“…பிறப்புறுப்புகளை ஆராய்ந்ததில் உராய்வுகளோகடுமையான காயங்களோ இல்லை என்பதோடு இறந்தவரின் கன்னிமைத்திரையும் கிழியாமல் இருப்பதுஇறந்தவர் தாக்கப்பட்டது கற்பழிக்கும் நோக்கத்தில் அல்ல என்பது உறுதியாகிறதுபுணர்வதற்கான முயற்சியும் நடைபெற்று இருக்கவில்லைஇறந்தவரின் வயது நாற்பது என்பது உறுதிசெய்யப்படுகிறது.”

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4, மே 1998.

%d bloggers like this: