தேவதூதர்களும் தேவதைகளும்: குஷ்பு – எம். ஜி. ஆர். – ஒபாமா – கிறித்து

அய்ரோப்பிய – அமெரிக்க அரசியல் உலகில் தற்சமயம் உலாவந்து கொண்டிருக்கும் ஜோக் ஒன்று:

இளைஞன் ஒருவன் வெள்ளை மாளிகை வாயிற்காப்பாளரிடம்: புஷ் – ஷைப் பார்க்க வேண்டும். அனுமதி உண்டா?

வாயிற்காப்பாளர்: இல்லை. அவரை இங்கிருந்து வெளியே அனுப்பியாகிவிட்டது.

மறுநாள் அதே இளைஞர் மீண்டும் வாயிற்காப்பாளரிடம் “புஷ் திரும்ப வந்துவிட்டாரா?” என்று கேட்க அவர் மீண்டும் அதே பதிலைச் சொல்ல இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த விசாரிப்பும் பதிலும்.

நான்காம் நாள் சலிப்புற்ற வாயிற்காப்பாளர் “அதுதான் சொல்லிவிட்டேனே அவரை இங்கே இருந்து வெளியேற்றியாகிவிட்டது என்று. ஏன் திரும்பத் திரும்ப வந்து தொந்தரவு செய்கிறாய்” என்று எரிந்துவிழ, இளைஞர்: “இல்லை. அதை சொல்லக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காகத்தான் திரும்பத் திரும்ப கேட்கிறேன்” என்று சொல்லி குதூகலத்தோடு அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.

தற்கால உலக அரசியல் வரலாற்றில் இன்னும் சில வாரங்களில் பதவியை விட்டு விலக இருக்கும் புஷ்ஷைப் போன்று உலக மக்களின் கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்தவர் ஹிட்லருக்குப் பிறகு வேறு எவரும் இல்லை என்று சொல்வது எந்த வகையிலும் மிகையாகிவிடாது.

இதன் சிறு வெளிப்பாடே ஈராக்கில் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் புஷ் – ஷை நோக்கி ஷூக்களை எறிந்த சம்பவம்.

இதில் சுவாரசியமான மற்றொரு விஷயம் மிக வேகமாக இச்சம்பவம் ஊடகங்களால் பரப்பப்பட்டதும் இதை ஒளிபரப்பிய பலரும் மிகுந்த குதூகலத்தோடு இச்செய்தியை வெளிப்படுத்திய விதமும்.

அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் தெளிவுபட ஆரம்பிக்கும் சற்று முன் வரையிலும் புஷ்ஷுக்கு காவடி தூக்கிக் கொண்டிருந்த பெரும் ஊடகங்கள், காற்று வேறு திசையில் அடிப்பதை உணர்ந்தவுடன் காவடியை ‘இடது’ தோளுக்கு சர்வ சாதாரணமாக மாற்றிக் கொண்டு ஒபாமா புகழ் பாட ஆரம்பித்ததை ஒரு குரூர நகைச்சுவை என்றல்லாமல் வேறு எப்படி புரிந்துகொள்வது?

பூமிப் பந்தில் உள்ள சகலத்தையும் வியாபாரப் பொருளாக மாற்றும் வல்லமை படைத்த முதலீட்டியத்தின் மிக சக்தி வாய்ந்த வடிவமாக எழுந்திருக்கும் பெரும் ஊடக நிறுவனங்களை எங்ஙனம் எதிர்கொள்வது என்பது ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட எத்தனித்துக் கொண்டிருக்கும் அனைத்து தரப்பினர் முன் உள்ள ஆகப் பெரிய சவால் என்றே தோன்றுகிறது.

சென்னை டாக்டர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த வன்முறை, மும்பை நிகழ்வுகள், ஈழத் தமிழர் மீதான இன அழிப்பு தாக்குதல்கள், அமெரிக்க தேர்தல், என சகல நிகழ்வுகளிலும் ஊடகங்கள் ஆற்றும் சக்தி வாய்ந்த வலதுசாரி பிரச்சாரங்களை எதிர்கொள்வதும் இன்றைய அவசியத் தேவையாகப் படுகிறது.

இன்றைய உலகின் நெருக்கடிகளுக்கு மாற்றுகள் புலப்படாத நிலையில், வெகுமக்கள் மீண்டும் மீண்டும் சரணடைவது ஏதோவொரு வகையில் மதம் சார்ந்த நம்பிக்கைகளாகவே இருப்பதும் அதை புதிய வலதுசாரி சக்திகள் வெகு திறமையாகக் கையாள்வதும் நடந்தேறிக் கொண்டிருப்பதையும் கவனிக்க முடிகிறது.

விளைவு அடிப்படைவாத சக்திகள் பலம் பெறுவது.

இதன் அவல வெளிப்பாடாகவும் கேலிக்குரிய நிகழ்வாகவும் மிகச் சமீபமாக கவனிக்க நேர்ந்த விஷயங்கள்:

முன்னதின் வெளிப்பாடாக, சமீப மாதங்களில் அமெரிக்க தேவாலயங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதீத அளவில் அதிகரித்திருப்பது. தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் ‘கண்ணீரும் கம்பலையுமாக’ இருப்பது குறித்த பாதிரிமார்களின் உணர்ச்சி பெருகிய புல்லரிப்பு.

பின்னதின் வெளிப்பாடாக, இத்தாலியில் கிறித்துமஸ் பொம்மைகள் தயாரிப்பில் உள்ளூர் சந்தையில் புகழ்பெற்ற பொம்மை உருவங்களில் ஒபாமாவும் அவரது துணைவியாரும் கிறித்துவோடு சேர்ந்து இடம் பெற்றிருப்பது (மேலுள்ள படம்). ஒபாமாவின் இந்த ‘அவதாரம்’ இப்போது அமெரிக்கச் சந்தையிலும் பிரபலம் அடைந்திருப்பது.

இவற்றோடு, நேற்றோ முந்தைய தினமோ, உள்ளூர் செய்திப் பத்திரிகையில் வாசித்த ஒரு செய்தி: மறைந்த முதல்வர், ‘புரச்சித் தலைவர்’ எம். ஜி. ஆருக்கு அவரது ரசிகர் ஒருவர் சிலை வடிவமைத்து வழிபட்டு வருவதும், தனது மகளின் திருமணத்தை முடித்துவிட்டு எம். ஜி. ஆருக்கு கோயில் எழுப்பும் பணியில் முழுமையாக இறங்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருப்பது.

குஷ்பு – எம். ஜி. ஆர்: தமிழகம்.

கிறித்து – ஒபாமா: இத்தாலி/அமெரிக்கா.

வித்தியாசங்கள் எந்த அளவிற்கு?

ஏனோ தெரியாத்தனமாக இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. மன்னிக்க வேண்டுகிறேன். தமிழனின் “ஆதிமூலப்படிம உணர்வுக்கும்” இதற்கும் உறவு ஏதேனும் உண்டோ?!

அரசியல், சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »
%d bloggers like this: