ஆயிரம் லைக்குகள் வாங்கிய அபூர்வ விலாசினியும் மாடு மேய்த்துப் படித்தவர் கிரிமினலாக்கப்பட்ட கதையும் – 3

கேள்விக்கு இடமில்லாத ஆணை உரிமை (authority) எப்படிச் செயல்படுகிறது? தந்தை – மகன் உறவு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு (தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை). இவ்வுறவில், தந்தைக்கு மகனின் மீதான அதிகாரம் கேள்விக்கு இடமில்லாதது. மகன் தந்தைக்கு கீழ்ப்பட்டவர். அவர் சொல்படி நடக்கக் கடமைப்பட்டவர். (தற்காலத்தில், பெற்றோர் – பிள்ளைகள் உறவு ஜனநாயகப் பூர்வமானதாக இருக்க வேண்டும் என்ற புரிதல் உருவாகியிருப்பது இத்தகைய ஆணை உரிமைகள் சிதைவுற்றதன் விளைவு).

அதிகாரப் படிநிலை வரிசையில் மேல் நிலையில் இருப்பவரின் ஆணையை, அவருக்குக் கீழிருப்பவர்கள் கேள்விக்குட்படுத்தாமல் ”சிரமேற்கொண்டு” செய்துமுடிக்க வேண்டும். ஆணை உரிமை இயங்கும் விதம் இப்படியாகத்தான். ஆண்டான் – அடிமைச் சமூக அமைவுகள், நிலவுடைமைச் சமூகங்கள் பெரும்பாலானவற்றில் நிலவிய அரசதிகார முறை என்றும் சொல்லலாம்.

தந்தை – மகன், குடும்பத் தலைவன் – குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியன் – மாணவன், பூசாரி – பக்தன், எஜமான் – அடிமை எனப் பலநிலைகளில் கேள்விக்கு இடமின்றி செயல்படுவதே ஆணை உரிமை. ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகம் மற்றும் அரசமைப்பை  (authoritarian state) பொதுவில் ஒரு பிரமிட் வடிவில் உருவகிக்கலாம். இந்தப் பிரமிட்டின் உச்சியில் அமர்ந்திருப்பவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களின் ஊடாக, அதிகாரம் கீழ்நோக்கி பாய்கிறது.

என்றாலும், உச்சியில் அமர்ந்திருப்பவர், தமது விருப்பப்படி அதிகாரத்தைத் தன்னிச்சையாகச் செலுத்தவும் இயலாது. அவ்வாறு ஒரு தனிநபரின்  தன்னிச்சையான ஆணை அதிகாரம் செயல்படும் அமைப்பு எதேச்சதிகார (dictatorship) அமைப்பு. ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த ஒரு அரசமைப்பிலோ உச்சியில் அமர்ந்திருக்கும் நபருக்கும் மேலாக, அவரும் பின்பற்ற வேண்டிய நில நியதிகள் – சட்டத் தொகுப்பு, மரபுத் தொடர்ச்சி, கடவுளரின் ஆசி போன்ற ஒன்று இருக்கும். பிரமிட்டிற்கு மேலாக அந்தரத்தில் சுழலும் ஒரு ஒளிவட்டம் என்று உருவகிக்கலாம்.

இக்கருத்தமைவுகள் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்துள்ள ஹான்னா ஆரெண்ட் (Hannah Arendt) என்ற அரசியல் தத்துவவியலாளர், ரோமானிய அரசமைப்பை இவ்வாறானதொரு பிரமிட்டாக உருவகிப்பார். ரோமானிய அரசமைவில் பிரமிட்டுக்கு மேலாகச் சுழன்ற அந்த ஒளிவட்டம், ரோமானிய அரசை நிறுவியவர்கள் உருவாக்கிய மரபின் தொகுப்பாகக் கொள்ளப்பட்டது. தமிழக / இந்திய அரசமைவுகளில் அந்த ஒளிவட்டம் வர்ணாசிரம தர்மமாக இருந்தது எனலாம்.

(தொடர்புடைய கருத்துக்களை மிகச் சுருக்கமாக What is Authority? என்ற கட்டுரையிலும், On Violence மற்றும் On Revolution ஆகிய இரு நூல்களிலும் ஆரெண்ட் விளக்கியிருக்கிறார். மேலும் விரிவான புரிதலை விழைவோர், அவருடைய The Origins of Totalitarianism என்ற நூலை வாசிக்கலாம்).

நிலவுடமைச் சமூகங்களின் வீழ்ச்சியோடு, ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த அரசமைவுகளும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் நிலவிய ஆணை உரிமை அடிப்படையிலான உறவுகளும் படிப்படியாகச் சிதைவுற்றன. நவீன ஜனநாயக அரசுகளின் தோற்றத்தோடு, அதிகாரவர்க்க அரசு / அரசமைவு (bureaucratic state) எழுகிறது.

நவீன ஜனநாயக அரசமைவின் நான்கு தூண்களாகச் சொல்லப்படும் நாடாளுமன்றம், நீதித்துறை, அதிகாரவர்க்கம், பத்திரிகைத் துறை இந்த அரசமைவின் அதிகார எல்லைகளைப் பரஸ்பரம் கட்டுக்குள் வைத்திருக்கும் பொறியமைவாகக் (checks and balances) கொள்ளப்படுகின்றன. என்றாலும், நவீன ஜனநாயக அரசின் ஆட்சிமுறை அடிப்படையில் அதிகாரவர்க்க ஆட்சிமுறையே (bureaucratic governance).

இத்தகைய ஆட்சிமுறையில், அரச அதிகாரம் அருவமாகிவிடுகிறது. அதிகாரம் எந்த ஒரு மையத்திலும் குவிந்திருக்காமல், பரவலாகிவிடுகிறது. யாரும் எதற்கும் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிக்கலாம், இன்னொருவரை கைகாட்டலாம், அலையவிடலாம். எந்த ஒரு அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அலைக்கழிக்கப்படுவதை அன்றாட வாழ்வில் நாம் அனுபவிப்பது அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் இத்தகைய உள்ளார்ந்த இயல்பினாலேயே.

09.07.16 இரவு விலாசினியை போலீசார் அலைக்கழித்ததும் அதிகார வர்க்க ஆட்சிமுறையின் இந்த “இயல்பான” உள்ளார்ந்த இயங்குமுறையே. இது எங்கள் சரகத்தின் விசாரணை எல்லைக்குட்பட்டு வராது. கிண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்கள் என்று அலையவிட்டிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் இல்லை, காலை வாருங்கள் என்று கூறியும் அலைக்கழித்திருக்கலாம். வேறு பல காரணங்களையும் சொல்லியிருக்கலாம். பொறுப்பேற்காமல் தட்டிக் கழித்திருக்கலாம். அதிகாரவர்க்க ஆட்சிமுறை செயல்படும் விதம் அதுதான். அவ்வாறாக இல்லாமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்.

விலாசினி மறுநாள் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குப் போயிருந்தாலும் அவரை அலையத்தான் விட்டிருப்பார்கள். தொழில்முறையான ஒரு வக்கீலை வைத்து தொடர்ந்து அழுத்தம் தந்திருந்தால் ஒருவேளை வழக்குப் பதிவு செய்திருப்பார்கள். வழக்குப் பதிவு செய்திருந்தால், டிரைவரும் நமக்கேன் பிரச்சினை, பிழைப்புக்கு அலையவே தனக்கு நேரம் போதவில்லை என்று மன்னிப்பு கேட்டிருக்கலாம். அல்லது, அவரும் ஒரு வக்கீலை வைத்து வழக்கை எதிர்கொண்டிருக்கலாம். விஷயம் அடுத்து கோர்ட்டுக்கு போயிருக்கும். அங்கு நாற்பது வாய்தா வாங்கி அலைக்கழித்திருப்பார்கள்.

இதுதான் ஜனநாயக ஆட்சிமுறையின் – அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் நடைமுறை. ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட, இந்த ஆட்சிமுறையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதற்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும். யாரும் விதிவிலக்கில்லை.

இத்தகைய அதிகாரவர்க்க ஆட்சிமுறையில் நீதி / நியாயம் இவ்வாறு தள்ளிப்போடப்படுவதைக் கண்டு வெகுண்டெழுபவர்கள், மக்களைத் திரட்டி போராடலாம், அவர்களை அரசியல் மயப்படுத்தலாம், இந்த அதிகார வர்க்கப் பொறிமுறைகளை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது முற்றிலும் புதிய முறையில் மாற்றியமைப்பது என்பது குறித்துச் சிந்திக்கலாம், செயல்படலாம்.

ஜனநாயக அரசமைப்பின் அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் லேபிரெந்திற்குள் நுழைந்து, அலைந்து திரிந்து நீதியைப் பெறுவது அல்லது, அரசியல் விழிப்புணர்வூட்டும், இயக்கமாக்கும், எழுத்தாக்கும், சிந்திக்கும், சிந்தித்துச் செயல்படவைக்கும் நீண்ட நெடும்பாதையையோ விலாசினி தேர்வு செய்யவில்லை. மாறாக, கோடம்பாக்கத்து இயக்குனர்களில் சிலர் தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கும் அந்நியன் போலவும் ஜென்டில்மேன் போலவும் குறுக்கு வழியில் பாய்ந்திருக்கிறார்.

அந்நியனும் ஜென்டில்மேனும் ”கிரிமினல்களையும் பொறுக்கிகளையும்” வேட்டையாடிப் பழிவாங்குவதைப் போலத்தான் விலாசினியும் டாக்சி டிரைவரை “கிரிமினல்” என்றும் “பொறுக்கி” என்றும் சாடி, வேட்டையாடிப் பழிவாங்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை.

விலாசினி சொன்ன திகில் கதையை “உண்மையாக”வே எடுத்துக் கொண்டு பார்த்தாலும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தால், பின்பற்ற வேண்டிய நெறிகளின்படி அவர் மறுநாளே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்து விஷயத்தை நகர்த்திச் சென்றிருக்க வேண்டும். ஆனால் நடந்து முடிந்திருப்பது என்னவோ, காவல்துறையினர் இவரது வீடு தேடிச்சென்று புகாரை எழுதி / கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். தலைகீழாக நின்றிருந்தாலும், குட்டிக்கரணம் போட்டிருந்தாலும் ஓலா டாக்சி டிரைவரால் இப்படிச் செய்திருக்க முடியுமா?

ஜனநாயக ஆட்சிமுறையின் பொறிமுறைகளை, நிர்வாக எந்திரங்களை, அதன் ஊழியர்களைத், தமது ”உயர்ந்த பிறப்பு அந்தஸ்த்தால்” கிட்டும் ஆணை உரிமையைக் கொண்டு வளைப்பது சமத்துவத்திற்கும் சமத்துவமான நீதிக்கும் எதிரானது. விலாசினி செய்திருப்பது அத்தகைய அநீதியைத்தான்.

அந்நியனும் ஜென்டில்மேனும், விலாசினி போன்ற ஜென்டில் வுமன்களும் பிறரை இவ்வாறு வேட்டையாடும் மனநிலை எதிலிருந்து பிறக்கிறது?

1950 ஆம் ஆண்டு, ஜூன் 7 அன்று, ஸ்ரீமதி சம்பகம் துரைராஜன் என்ற “ஜென்டில் வுமன்” சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். தான் 1934 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ (இயற்பியல் மற்றும் வேதியியல்) முடித்திருப்பதாகவும், தனது குடும்பச்சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாதிருந்ததாகவும், தற்போது (அதாவது 16 ஆண்டுகள் கழித்து) சென்னை மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடர விரும்பி விசாரித்ததில், 1921 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, பிராமணர்களுக்கு இரண்டு இடங்களே ஒதுக்கப்பட்டிருப்பதால், தான் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் தனக்குக் கல்லூரியில் சேர இடம் கிடைக்காது என்பதை உணர்ந்து அவ்வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். ஆகையால், புதிதாக இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தில் தனி மனித உரிமைகளை பாதுகாக்கும் வலியுறுத்தும் பிரிவுகளின்படி, “writ of mandamus” (கீழ்நிலை அரசு அலுவலருக்குத் தமது கடமையை நிறைவேற்றுமாறு அல்லது தன்னிச்சையாகச் செய்த தவறைத் திருத்துமாறு ஆணை பிறப்பித்தல் – A (writ of) mandamus is an order from a court to an inferior government official ordering the government official to properly fulfil their duties or correct an abuse of discretion) உத்தரவிடும்படியும்  விண்ணப்பித்துக் கொண்டார்.

வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்குச் சென்றபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஸ்ரீமதி சம்பகம் துரைராஜன், மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பதை அறிந்து தமது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தீர்ப்பில் பதிவு செய்தனர். என்றாலும், சாதிரீதியான இடஒதுக்கீட்டை வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டம் இந்திய அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் தனிமனித உரிமைகளுக்கு எதிராக இருப்பதால் அதை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

இந்திய அரசியல் வரலாற்றில் பிரசித்தி பெற்ற இவ்வழக்குதான் இந்திய அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் செய்யப்படக் காரணமாக அமைந்தது என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும்.

என்றாலும், இவ்வழக்கில், ஸ்ரீமதி சண்பகம் துரைராஜனுக்காக வாதாடிய, அந்நாட்களில் பிரசித்தி பெற்ற வழக்குரைஞராக அறியப்பட்டிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வைத்த வாதங்கள் உரிய கவனத்தைப் பெறவில்லை. இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் வாசிக்கையில் இந்த வாதங்களில் ஓடிய முக்கியச் சரடு ஒன்று புலப்படுகிறது.

சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அமெரிக்காவின் கறுப்பு இனத்தவர்கள் அங்குள்ள கல்வி நிலையங்களில் அனுபவித்த இன ஒதுக்கல்கள் பாகுபாடுகளுக்கு இணையாக, தமிழகத்தில் பிராமணர்கள் சாதி ரீதியிலான பாகுபாட்டால் கல்வி நிலையங்களில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்ற வாதத்தை முன்வைத்திருப்பது தெரியவருகிறது.

50 ஆண்டுகள் கழித்து தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களில் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், தமிழகப் பிராமணர்கள் யூதர்கள் அனுபவித்தது போன்ற ஒடுக்குமுறையை அனுபவித்துள்ளார்கள் என்று புலம்பினார்.

இப்போது ஜென்டில் வுமனோ, ஒரு ”கிரிமினல்” டாக்சி டிரைவரால் தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தைப் பற்றி திகில் கதை எழுதுகிறார். ஆனால், அந்தப் “பயங்கர” டிரைவரோ அன்றாடம் 14 மணி நேரம் வேலை செய்து, ஒரு நாளுக்கு ரூ. 500 சம்பாதிக்கும் ஒரு கூலித் தொழிலாளி.

சமூகத்தின் மிக உயர் நிலைகளில் இருந்த / இருக்கும், அதன் சாதகமான பலாபலன்கள் அனைத்தையும் அனுபவித்த / அனுபவிக்கும் சம்பகம் துரைராஜன், அவருக்காக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அசோகமித்திரன், ஜென்டில் வுமன் விலாசினி ஆகிய நால்வரும் இத்தனை ஆண்டுகள் இடைவெளியிலும் இத்தனை தலைமுறை இடைவெளிகளுக்குப் பின்னரும், சொல்லி வைத்தார்போல, தம்மை பாதிப்பிற்கு உள்ளானவர்களோடு ஒப்பிட்டும், பாதிப்பிற்கு ஆளானவர்களாகவும் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

ஜனநாயக ஆட்சியமைப்பின் அதிகாரவர்க்க ஆட்சிமுறை அவர்களுக்கிருந்த ஆணை உரிமையை, முன்போலச் சுதந்திரமாக அனுபவிப்பதற்கு எப்போதும் இடம் கொடுப்பதில்லை என்பதுதான் இம்மனநிலைக்கான ஆதார ஊற்று. ஜனநாயக ஆட்சிமுறை திறந்து விடும் பொது வெளியில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இவர்களது ஆணை உரிமையை ஏற்றுக் கொள்ளாமல் இயங்குவதே தம்மைப் பாதிப்பிற்கு உள்ளானவர்களாகவும் பிறரை ஒடுக்குமுறையாளர்களாகவும் victim X oppressor உறவைத் தலைகீழாக இவர்கள் எடுத்துக்கொள்ளக் காரணமாக இருக்கிறது.

தாம் அனுபவித்து வந்த ஆணை உரிமை தளர்ந்து போகும்போதெல்லாம் சம்பகம் துரைராஜனைப் போன்றவர்களும் விலாசினியைப் போன்றவர்களும் தம்மை ஒடுக்கப்பட்டவர்களாகக் கற்பனை செய்துகொள்ளும் பரிதாபமும் நிகழ்கிறது.

இனிய முகங்களும் “பயங்கரமான” முகங்களாகக் காட்சி தர ஆரம்பித்து விடுகின்றன. சாதாரணக் கை அசைவும் ஆயுதம் எடுக்கிறதோ  என்று பதற வைத்துவிடுகிறது. தன் பாட்டுக்கு காரை ஓட்டிச் சென்றாலும், பின் தொடர்ந்து வருவதாக மனம் கற்பனை செய்துகொள்கிறது.

விஷயம் இப்படியாக இருக்க, விலாசினி “பெண் வெறுப்பென்னும் மகா சமுத்திரத்தில் கல்லெறியும்” திருப்பணியைச் செய்துவிட்டதாகத் திருப்திப்பட்டுக் கொள்வதெல்லாம் வேடிக்கையானது.

அவர் எறிந்த கல்பட்டு பாற்கடல் பரந்தாமன் புரண்டு படுத்துவிடவில்லை. பிரளயம் ஏற்பட்டுவிடவில்லை. கல்கி அவதாரம் எடுத்து இக்கலியுகத்தில் அவதரித்துவிடவும் இல்லை.

மாறாக, மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் அமர்ந்து தமது திருப்பாதக் கமலங்களால் உலகை அளந்து கொண்டிருக்கும் வாமனர்களே விழித்துக் கொண்டார்கள். தமது விரல்களை அசைத்து, கூலித் தொழிலாளியான ஒரு கால்டாக்சி டிரைவரை நசுக்கியிருக்கிறார்கள். விலாசினியும் அவர்களோடு ஊக்கமாக ஒத்துழைத்திருக்கிறார்.

பொது வெளி என்பது பல போராட்டங்கள், கருத்து மோதல்களின் ஊடாக, பல பிரிவு மக்களும் சந்திக்கும் ஒரு வெளியாக படிப்படியாக, உருவெடுப்பது. இவரைப் போன்றவர்களுக்கு பொது வெளியே ”கிரிமினல்கள்” உலவும் ஆபத்து நிறைந்த வெளியாக தோன்றுகிறது. அவ்வாறு கருதத் துணிவதற்கான காரணத்தையும் பார்த்துவிட வேண்டும்.

(தொடரும் … )

https://minnambalam.com/k/1470873612 

பாகம் – 1

பாகம் – 2 

இறுதிப் பகுதி

%d bloggers like this: