தவளைப் பார்வைகள்

காலை 9 மணி. அவரவர் அலுவலகம் விரைந்து கொண்டிருக்கும் பரபரப்பான நேரம். நீங்கள் வசிக்கும் பெருநகரத்தின் மையப் பகுதி ஒன்றில், ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் இருக்கிறது. குரங்கு ஒன்று அந்த ட்ரான்ஸ்ஃபார்மரின் மேல் ஏறிவிட்டிருக்கிறது. அதை ட்ரான்ஸ்ஃபார்மரில் இருந்து கீழே இறக்க அல்லது விரட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். முயற்சி பலன் தரவில்லை. அதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்து விடுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. நாலா திசைகளிலும் ஹார்ன்கள் ஒலிக்கின்றன. மிரண்டு போன குரங்கு, ட்ரான்ஸ்ஃபார்மரில் இருந்து இறங்க மறுக்கிறது.

இத்தகைய ஒரு சூழலில், அவ்விடத்தில் அது குறித்து எத்தனை விதமான கருத்துக்கள் பரிமாறப்படும், தீர்வுதான் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு சிறிய “சிந்தனைப் பரிசோதனை” முயற்சியாக இக்கற்பனைப் பிரச்சினை.
வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் பின்வருவோர் இருப்பதாகக் கற்பனை செய்து அவர்களது பார்வைகள் என்னவாக இருக்கும், என்ன கமெண்ட் செய்வார்கள் என்பதை முதலில் பார்க்கலாம்.

1) தி. மு. க காரர்: இந்த “அம்மா” ஆட்சியில, மனுசனுக்கும் கரண்ட் கிடைக்கல்ல, குரங்குக்கும் கரண்ட் கிடைக்கல்ல. பாருங்க, குரங்குகூட ட்ரான்ஸ்ஃபார்மர்ல ஏறி போராட ஆரம்பிடுச்சிடுச்சு!

2) அ. தி. மு. க காரர்: ம்ம்ம் … அந்தாளு பேரன் மாதிரியே இதுவும் யார் கிட்டயும் சிக்க மாட்டாங்குதே! இன்னா ஆட்டங்காட்டுது!

3) காங்கிரஸ்காரர்: குரங்குகூட மின்சாரம் வேணுமின்னு கேட்குது. ஆனா, இந்த கூடங்குளம் ஆர்ப்பாட்டக்காரங்க, அணு உலை மின்சாரம் வேண்டாம்னு இந்த அட்டூழியம் பண்றாங்களே!

4) பி. ஜே. பி காரர்: அனுமாரே வந்து சொல்லிட்டார். மின்சாரத்தைக் கொடுங்கோன்னு! கூடங்குளம் அணுமின் நிலையத்தை  திறந்தே ஆகணும்!

5) சி. பி. ஐ காரர்: இந்தக் குரங்குக்கும் அணு உலை வேண்டாம் என்று போராடுகிறவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. கோலெடுத்தால் குரங்காடும் என்பதைப் போல, லத்தி எடுத்துத்தான் அங்கே போராடுகிறவர்களை அடித்துத் துரத்த வேண்டும்.

6) சி. பி. எம் காரர்: குரங்கு பயந்து கிடக்குங்க. பயத்தைப் போக்கி விட்டால் அதுவே தானாக இறங்கி வந்துவிடும். கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்திலேயும் நாங்க இதைத்தான் சொல்றோம். மக்களுடைய அச்சத்தைப் போக்குங்க என்கிறோம். மற்றபடி, எப்படி ட்ரான்ஸ்ஃபார்மரே வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அதே போல, அணுமின் நிலையம் வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. ட்ரான்ஸ்ஃபார்மரும் வேண்டும். அணுமின் நிலையமும் வேண்டும்.

7) ம. தி. மு. க காரர்: மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு மின்சாரமும் தரமாட்டேன்னு அடம்பிடிப்பதைப் போல, இந்தக் குரங்கும் இப்படி வம்பா அடம்புடிக்குதே!

8) மா – லெ தோழர்: தோழர்களே! மக்கள் சக்தி வெல்லப்பட முடியாதது. ஐந்தறிவு படைத்த ஒரு மிருகத்தின்  போராட்டத்தையே எதிர்கொள்ளத் திராணியற்ற அரசாங்கம் இது என்பதற்கு இதை விட மிகச் சிறந்த உதாரணம் வேறு என்ன வேண்டும். ஆகவே, புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவோம். மக்களின் அதிகாரத்தை நிறுவுவோம். புரட்சி ஓங்குக! பாராளுமன்ற ஜனநாயகம் போலி ஜனநாயகம்! பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே மக்கள் ஜனநாயகம்!

9) அதிதீவிர தேசியம் பேசும் ஃபாசிச நோக்கு உடையவர்: திராவிடக் கட்சிகளின் மோசடியே இந்த சீரழிவுகளுக்கெல்லாம் காரணம். ஒரு தமிழனாவது தமிழ்நாட்டை இதுவரை ஆண்டிருக்கிறானா? தமிழ்நாட்டு மின்சார வாரியத்தின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். உயர் பதவிகளில் இருந்தவனெல்லாம் மலையாளிகள்! கன்னடர்களும் தெலுங்கர்களும் மாறி மாறி ஆண்டு கொண்டிருப்பதுதான் தமிழ்நாட்டின் இழிநிலைக்குக் காரணம். தமிழரே தமிழ்நாட்டை ஆளவேண்டும். அப்போது, இந்தக் குரங்கு என்ன? எல்லாக் குரங்குகளையும் ஆட்டி வைப்போம்!

10) தமிழ்ப் பண்டிதர் மரபில் வந்த மரபான ஒரு தமிழ் தேசியவாதி: குரங்கு என்பது தூயத் தமிழ்ச் சொல் அன்று. (சுட்டிக் காட்டி) இது ஆண் பால் மிருகம் என்பது தெள்ளெனத் தெரிவதால், கடுவன் என்றே அழைத்தல் வேண்டும். இக்கடுவன் பார்ப்பன நடுவண் அரசைப் போன்றே எமது மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி தேடுகின்றது போலும்.

11) சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்: பாருங்க. வகைதொகை இல்லாமல், மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தோம் இல்லையா? காடுகளை அழித்தோம் இல்லையா? அதோட விளைவுதான் இது. மரத்தில் இருக்கவேண்டிய குரங்கு இப்படி ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படியே போனா, ஒரு நாள், மனுசங்களுக்கும் இதே கதிதான்.

12) என். ஜி. ஓ நபர் ஒருவர்: அரசாங்கம், மக்கள் நலப் பணிகளைச் சரியாக திட்டமிடாமல் இருப்பதுதான் இதுமாதிரியான பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம். கால்நடை வளர்ப்பு கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்ற வழிசெய்யும் என்பதைப் புரிந்து கொண்டது மாதிரி, இது போன்ற மிருகங்களினால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் இழப்புகள் பற்றியும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இதுக்குன்னு ஒரு ப்ராஜெக்ட் ப்ரபோஸலைத் தயார் பண்ணனுமே!

13) ப்ளூ க்ராஸ் உறுப்பினர் ஒருவர் (பெண்): ஐயோ! பார்த்தேளா! பார்த்தேளா! பாவம், வாயில்லாத ஜீவன். இந்தப்பாடு படுதே. மனுஷாளுக்கு சகஜீவராசிகளிட்ட இரக்கமே இல்லாம போயிடுத்து. இன்னும் ஆஃபீஸ் திறந்திருக்க மாட்டேளே! பெருமாளே! பெருமாளே! இரட்சிக்கக்கூடாதா!

14) கூட்டம் சேர்ந்ததைக் கண்டு அங்கு வந்து சேரும் காவலர் ஒருவர்: இன்னா இங்க கூட்டம்! நிக்காத! நிக்காத! நவுரு, நவுரு. மனுசனுங்கள மேய்கிறதே வேலையாப் போச்சுடா! இதுல கொரங்கு வேறயா! யோவ்! போய்யான்னேல்ல!

15) குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் ஒரு தாய்: (எரிச்சலோடு) இந்தக் குட்டிக் குரங்க வீட்டில இருந்து கிளப்பி வர்றதே பெரும்பாடு. இதுல இந்தக் குரங்கு வேறயா! சே!

16) அக்குழந்தை: அம்மா! அம்மா! அது அம்மாக் குரங்கா அப்பாக் குரங்காம்மா? பாப்பாக் குரங்க எங்கம்மா?

17) போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் ஒரு பேருந்தின் ஓட்டுனர்: இன்ஜினை அணைத்துவிட்டு, கொட்டாவி விட்டு, ஸ்டியரிங்க் மேல் கவிழ்ந்து இளைப்பாறத் தொடங்கிவிடுகிறார்.

18) அதன் நடத்துனர்: படியில தொங்கிட்டு வர்ற குரங்கனுங்க பத்தாதுன்னு,  காலங்காத்தால இதுவேறயா?

19) பேருந்தின் படிகளில் பயணம் செய்து, இறங்கி நிற்கும் இளைஞர் ஒருவர்: (தலையைக் கோதிக் கொண்டு) சப்ப மேட்டரு! ரெண்டு கல்ல வீசுனா எகிறிடும். தொம்மைங்க, வேடிக்கை பார்த்துட்டு இருக்கானுங்க.

20) அப்பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்து இந்நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்: (அருகில் அமர்ந்திருக்கும் தன் தோழியிடம்) ஏய்! அதப்பாருடி! உன்னை தினம் ஃபாலோ பண்ணிட்டு வர்றானே, அவனை விட நல்லா இல்ல?

21) ஒரு வெளிநாட்டு உல்லாசப் பயணி: (குரங்கைப் புகைப்படம் எடுத்துவிட்டு, தன்னை விநோதமாகப் பார்க்கும் நபர்களைப் பார்த்து, கட்டை விரலை உயர்த்தி புன்னகைத்து) இண்டியா! இண்டியா! குட் கன்ட்ரி. நைஸ் பீப்பிள்!

மேலும், பல நோக்குகளையும் கற்பனை செய்து பார்க்கலாம். எ – கா: அஜீத் ரசிகர் அல்லது விஜய் ரசிகர் ஒருவர் என்ன சொல்லியிருப்பார் என்று.

ஆனால், இங்கு கவனத்தை ஈர்க்க விரும்பும் விடயம், இத்தனை விதமான பார்வைகளை இத்தனை நபர்களும் சொல்லிக் கொண்டிருந்தாலும், குரங்கு, அந்த ட்ரான்ஸ்ஃபார்மரிலேயே இருக்கிறது. அதனால் உருவான பிரச்சினை தீரவில்லை. இத்தனை விதமான பார்வைகளும், ஒரு நிகழ்வு கிளர்த்திய சிந்தனைப் போக்குகள் என்று எடுத்துக் கொண்டால், எவையும் பிரச்சினையைத் தீர்த்து நகர்ந்து செல்வதற்கு உதவுபவையாக இருக்கப்போவதில்லை.

இக்கற்பனைச் சூழலின் பிரச்சினைக்கான தீர்வு மிகவும் எளிமையானது. யாரேனும் ஒருவர், முதலில் அப்பகுதி மின்சாரத்துறை அலுவலகத்திற்கு தொலைபேசி செய்து, அந்த ட்ரான்ஸ்ஃபார்மரை இயங்காமல் செய்யக் கோரி, குரங்கின் உயிருக்கு ஆபத்து விளையாமல் காப்பாற்ற வேண்டும். அடுத்து, தீயணைப்புத் துறைக்கு தொலைபேசி செய்து, பிரச்சினையைச் சொல்லி, அவர்களை வரவழைக்க வேண்டும். அல்லது, மிக எளிமையான மற்றொரு சாத்தியம், குரங்குக்குப் பிடித்தமான வாழைப்பழங்களை வாங்கி அதற்குக் காட்டி, அவ்விடத்தைவிட்டு அகலச் செய்யவும் முடியும்.

இங்கு எடுத்துக்காட்டியிருக்கும் கற்பனைச் சிக்கல் எளிமையானது. அதன் தீர்வும் எளிமையானது. ஆனால், சிக்கலான அரசியல் – சமூகப் பிரச்சினைகள் ஆழமான வரலாற்று – சமூகவியல் ஆய்வுகளைக் கோருபவை. தீர்வுகளும் சிக்கலானவையாகவே இருக்க முடியும். என்றாலும், ஆய்வுகளும் பிரச்சினைகளை அணுகும் முறையும், எதிர் எதிர் சிந்தனைப் போக்குகளுக்கிடையிலான மோதல்களால் தீர்ந்துவிடப் போவதில்லை என்பதே மனதில் கொள்ளவேண்டியது.

அத்தகைய எதிர் எதிர் சிந்தனைப் போக்குகளில் இருந்து சற்றே விலகி நின்று ஒரு சிக்கலான அரசியல் – சமூகப் பிரச்சினையில் எத்தனை விதமான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன என்பதை அடையாளம் கண்டுகொள்வதும், அவை பிரச்சினையைத் தீர்க்க உதவுமா என்று மதிப்பீடு செய்வதும், இவை அனைத்திலும் இருந்து மாறுபட்ட கோணம் – பிரச்சினையைத் தீர்க்கமாக அணுகித் தீர்க்க உதவும் கோணம் – ஏதேனும் உள்ளதா எனத் தேடுவதுமே சிந்தனை எனப்படுவதன் முன்நிற்கும் சவாலாக இருக்க வேண்டும்.

பிரச்சினைகள் தீர்வைக் கோருபவை. சிந்தனை என்பதன் தேவையும் முடிவற்று அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருப்பது மட்டுமேயன்று. ஆக்கப்பூர்வமான செயல் நோக்கியதும்கூட.

நன்றி: கீற்று

%d bloggers like this: