இதை அரைவாசி மட்டும் படிப்பவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள். ஆழ்ந்த அர்த்தம் தேடுபவர்கள் வாந்தியிலே போவார்கள். அரசியல் அர்த்தம் கண்டுபிடிப்பவர்கள் பேதியிலே போவார்கள். குறியியல் குறிப்புகள் காண்பவர்கள் குரங்கு குரல்வளை கடித்து சாவார்கள். குடலாபரேஷன் செய்பவர்கள் குடல் வெந்து சாவார்கள். நீதியை தேடுபவர்கள் நரகத்திற்குப் போவார்கள். ஞானத்தை தேடுபவர்கள் கட்டையிலே போவார்கள்.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, வாசலுக்கு வெளியே தேங்கிக் கிடந்த சாக்கடையை தாவித் தாண்டி, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான். இருபது இருபத்தஞ்சு நிமிஷம் இருக்கும் கடை மூடுவதற்கு.
அம்மா அசந்த நேரத்தில் அவள் பர்சிலிருந்து நூறு ரூபாய் நோட்டை லவட்டிக்கொண்டு, அலமாரியில் சிதறியிருந்த சில்லறையிலிருந்து கணக்காய் பத்து ரூபாய் பொறுக்கி எடுத்துக்கொண்டு, வீட்டிலிருந்து நழுவுவதற்கு ஒரு மணி நேரம். ஒரு யுகமே கழிவது போலிருந்தது. பெரியம்மாவும் அம்மாவும் அங்கலாய்ப்பில் தம்மை மறந்திருந்திருந்தார்கள். காலார நடக்கப் போன அப்பனை இன்னும் காணோம். எந்தக் கிழத்தோடு வழியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறதோ.
ஓட்டமும் நடையுமாக ஒரு அரை கிலோ மீட்டரைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையை தாண்டி, கடை இருக்கும் திசை நோக்கி வேக வேகமாக நடந்து கொண்டிருந்தவனுக்கு சற்றுத் தொலைவிலேயே தூக்கி வாரிப் போட்டது. கடைப்பக்கம் நடமாட்டமில்லை. சாத்திவிட்டார்களோ? இன்னும் ஒரு அஞ்சு நிமிஷமாவது இருக்கணுமே. நெருங்க நெருங்க தெளிவாகிவிட்டது. இன்றைக்கு சிவராத்திரிதான்.
எரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. கிழடுகள் ரெண்டும் பேச ஆரம்பிச்சுதுன்னா ஊர் உலகமே மறந்துடும். சோத்தக்கூட மறந்துட்டு தம்பிமார்களைக் கரிச்சுக் கொட்டுறதும், அப்பன் பெருமையுமா மணிக்கணக்கில அங்கலாய்க்க ஆரம்பிச்சிடுங்க. “கெழட்டு மூதிங்க,” வசை தானாக விழுந்தது.
இதுங்க கண்ணுல மண்ணத் தூவி, காச லவட்டிட்டு வர்றதுக்குள்ள, ஒரு பத்து செகண்டுல கடைய அடச்சுப்புட்டானுங்களே. சலித்துக் கொண்டான். சில நிமிடங்கள் மசமசவென்று நின்று கொண்டிருந்தவனுக்கு டிரவசருக்குள் பதுக்கி வைத்திருந்த நோட்டுகள் நினைவுக்கு வந்தது. பரபரவென்று வேட்டியைத் தூக்கி, டிரவுசருக்குள் துழாவி, கசங்கிய நோட்டுக்களை எடுத்து, பிரித்து எண்ண ஆரம்பித்தான்.
ஒரு 50 ரூபாய் நோட்டு, 20 ரூபாய் நோட்டு, ரெண்டு 10 ரூபாய், நைந்துபோன பழைய 5 ரூபாய் நோட்டு ஒன்று. சட்டைப் பையில் சில்லறை 10 ரூபாய், லவட்டிய 100 ரூபாய். மொத்தம் 205 ரூபாய். ஆசுவாசம்.
ப்ளாக்கில் விக்காமலா போயிடுவானுங்க. மிஞ்சி மிஞ்சிப் போனா 170, 180 ரூபா. 200 ஆவே இருக்கட்டுமே. கொஞ்சம் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த நடுத்தர வயதுக்காரர்கள் இரண்டு பேரை பார்த்தாலே தெரிந்தது. அவர்களை நோக்கி நடந்தான்.
“சார், இங்க பக்கத்துல, ப்ளாக்கில எங்க கிடைக்கும்?”
சற்று தொலைவில் சிமிட்டிக் கொண்டிருந்த மின் விளக்குச் சரத்தைக் காட்டி, “அதோ லைட்டு எரியுதே, அங்க ஒரு தெரு பள்ளமா இறங்கி போகும். ஊர் மெயின் ரோடு. அதுல லெஃப்டுல ஆறாவது தெரு முனையில ஒரு பொட்டிக் கடை இருக்கும். அந்த தெருவுக்குள்ள ஒரு பத்து வீடு தள்ளி சின்ன சந்து போகும். அதுல நாலாவது வீடு. பழைய ஓட்டு வீடு. கதவை தட்டுனா நெடுநெடுன்னு ஒருத்தன் திறப்பான். அவன்கிட்டதான் 24 மணிநேர சர்வீஸ். ஊருக்குள்ள பூசை நடக்குது. பார்த்து போங்க.”
“ரொம்ப தேங்க்ஸ் சார்.”
நல்லா இருப்பீங்கடா சாமிகளா என்று மனதார வாழ்த்திக் கொண்டே, மின்னிக் கொண்டிருந்த விளக்குச் சரத்தை நோக்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தான். அரை கிலோமீட்டர் தொலைவு இருக்கும். மாசம் ஒருமுறை பெரியம்மா ஊருக்கு வந்து போனாலும், ஒன்றிரண்டு நாட்களுக்கு மேலாகத் தங்கியதில்லை. பகல் வேளைகளில்கூட இவ்வளவு தூரம் நடந்ததில்லை. டாஸ்மாக் கடைதான் அவனுக்கு பெரியம்மா ஊர் எல்லை. அடையாளச் சின்னம். பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியம்மா வீடு. வீட்டில் இருந்து டாஸ்மாக் கடை. கடையில் இருந்து வீடு. வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட். தாண்டி ஒரு அடி எடுத்து வைத்ததில்லை.
இடப்பக்கமாக சரிந்து சென்ற தெருவை நெருங்க நெருங்க, படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. இரவு 10 மணிக்கு மேல் வெளியே சுற்றியதில்லை. சீக்கிரம் வாங்கிக்கொண்டு வீடு போய் சேர வேண்டும். சிகப்பும் மஞ்சளுமாக மின்விளக்கு அலங்கார வளைவு தெருமுனையில் மினுக்கிக் கொண்டிருந்தது. ஊருக்குள் எங்கோ உடுக்கை அடிப்பது சன்னமாக காதில் விழுந்தது. “அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் திருவிழா” – அலங்கார மின்விளக்கு வளைவுக்கு கீழே பேனர். எந்த மாசத்துல எந்தக் கோயில்ல எதுக்கு திருவிழா வைக்கிறானுங்கன்னே தெரியல்ல. சலித்துக் கொண்டே அம்மனை வரைந்திருந்த பேனருக்கு ஒரு கும்பிடு போட்டு வணங்கிவிட்டு, தெருவுக்குள் இறங்கினான்.
சரிந்த தெரு, பள்ளம். அந்த இறக்கத்தில் நடை சிறு ஓட்டம்தான். 20 அடிக்கு ஒரு ட்யூப் லைட் கட்டியிருந்தது. பத்து ட்யூப் லைட்டுகளைத் தாண்டிவிட்டான். ஒரு தெருவும் தென்படவில்லை. உடுக்கைச் சத்தமும், இடைவெளி விட்டு தெளிவில்லாத பாட்டுச் சத்தமும், ஜெனரேட்டர் ஓடும் சத்தமும் சன்னமாக கேட்க ஆரம்பித்தது. சற்று தொலைவில் ஆள் நடமாட்டம். யாரோ இரண்டு பேர் தோன்றி இடப்பக்கமாகத் திரும்பி மறைந்தார்கள்.
ஊர் ஆரம்பிச்சிட்டுது போல இருக்கு. நடையை ஓட்டமாக மாற்றினான். அந்த இரண்டு பேரை பிடித்துவிட வேண்டும். இடத்தைப் பிடித்தபோது ஆட்களைக் காணவில்லை. மெயின் ரோட்டின் இருபக்கமும் தெரு குறுக்காக வெட்டிச் சென்றது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் வீடுகள் பளிச்செனத் தெரிந்தன. வீடுகளுக்குள் விளக்குகள் எரிந்தபடிதான் இருந்தன. குறுக்கு வெட்டுத் தெருவில் தெருவிளக்கு ஒன்றும் எரியக் காணோம். இருட்டியிருந்தது. என்ன ஊர் இது. பத்து – பத்தரைக்கெல்லாம் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல். சென்னை போல வருமா?
ஆனால், ஏதோ ஆள் நடமாட்டம் இருப்பது போலத்தான் இருந்தது. ஜெனரேட்டர் சத்தம் சீராகக் கேட்க ஆரம்பித்தது. தெம்பை வரவழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். ஜெனரேட்டர் சத்தம் எதிரே இருந்து வந்து கொண்டிருப்பது தெளிவாகக் கேட்டது. சத்தம் வந்த திசையில் கவனத்தைக் குவித்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தான். ஆறாவது தெரு. எத்தனை தெருவை தாண்டினேன்?
சட்டென்று உடுக்கைச் சத்தமும் பாட்டும் கொஞ்ச நேரமாக கேட்கவில்லை என்பது உறைத்தது. என்னவென்று யோசிப்பதற்குள் ஜெனரேட்டரின் சீரான சத்தத்தைக் கிழித்துக் கொண்டு உடுக்கை ஒலிக்க ஆரம்பித்தது. கட்டையான குரலொன்று பாடியது தெளிவாக கேட்கவில்லை. எந்தப் பக்கத்தில் இருந்து வருகிறது என்றும் தெரியவில்லை. ஒருமாதிரியான அரற்றல்.
நடையை நிறுத்தினான். பின்னே இருந்து யாரோ உற்றுப் பார்ப்பது போல ஒரு உணர்வு. விசுக்கென்று திரும்பிப் பார்த்தான். ஒரு வீட்டு மொட்டை மாடியில் இருந்து தலையொன்று இழுத்துக் கொண்டது. இன்னொரு பக்கம் இன்னொரு தலை இழுத்துக் கொண்டது போன்ற உணர்வு. அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கலாமா வேண்டாமா? தயக்கமாக இருந்தது. ஒரு வீட்டிலும் டிவி சத்தம் கேட்கவில்லை. சே! என்ன இது, திரும்பிப் போய்விடலாமா?
“தம்பி!”
எதிர்ப் பக்கம் இருந்து அதிகாரத் தோரணையில் ஒரு குரல். நாலைந்து வீடு தள்ளி, ஒரு வீட்டு வாசலில் இருந்து பெரியவர் ஒருவர்.
“இங்க வாங்க!”
விறுவிறுவென்று நடந்ததில் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. குரலைக் கேட்டு குளிர்ச்சியானது. குரல் வந்த வீட்டை நோக்கி நடந்தான். நரைத்த தலையும் மீசையுமாக ஒரு பெரியவர். கம்பீரமான தோற்றம்.
“யாரு? எந்த ஊரு? இந்த நேரத்துல இங்க என்ன வேலை?”
“ஒன்னுமில்லைங்க. அந்தப் பக்கம் மேலூரு. பெரியம்மா வீடு…“ இழுத்தான்.
“அது சரி. இந்தப் பக்கம் எங்க?”
உண்மையை சொல்லிடுறது நல்லது. திருடன்னு நெனச்சு கட்டி வச்சு உதைச்சிடப் போறானுங்க.
“இல்லைங்க. கடை மூடிடுச்சு. இங்க ஆறாவது தெருவுல கிடைக்கும்னு சொன்னாங்க…”
“இதே பொழப்பா போச்சு இவனுங்களுக்கு. சரி சரி, மணி பத்தரையாகப் போவுது. சீக்கிரம் நடையக் கட்டுங்க.”
முகத்தைச் சுளித்துக் கொண்டு, வேகமாக வீட்டிற்குள் சென்று கதவை அறைந்து சாத்திக் கொண்டார்.
அப்போ இருக்கு. உனக்கு கும்பிடுடா சாமி. வந்த வழியைத் திரும்பிப் பார்த்தான். எத்தனை தெருக்களைத் தாண்டியிருக்கிறேன். ஒன்னு, ரெண்டு, மூனு. அதோ நாலாவது தெரு. பத்துப் பன்னிரண்டு வீடுகள் தள்ளி ஒரு தெரு. இன்னும் ரெண்டு தெருதான். அஞ்சு நிமிஷத்தில போய் பிடிச்சுடலாம்.
தெருவில் இறங்கி மீண்டும் வேகமான நடை. சீரான ஜெனரேட்டர் சத்தம். உடுக்கையும் பாட்டும் நின்றிருந்தது. ஆறாவது தெரு முனையில் பெட்டிக் கடை. சாத்தியிருந்தது. திரும்பி சந்து எங்கே என்று கண்களால் துழாவிக் கொண்டு நடையை மேலும் வேகப்படுத்தினான். ஐந்து வீடுகள் தாண்டியதும், நாலைந்து வீடு தள்ளி சந்திலிருந்து இரண்டு இளைஞர்கள் வேகமாக வெளியே வந்தார்கள்.
இவனை தாண்டிச் செல்லும்போது, “சீக்கிரமா போயிடுங்க சார்,” ஒருவன் எச்சரித்தான். போலீஸ் கெடுபிடியா என்ன? இப்படி பயப்படுறானுங்க?
சந்துக்குள் நுழைந்து, வீட்டுக் கதவைத் தொட்டவுடன், சரேலென்று கதவு திறந்து நெட்டை உருவம் வெளிப்பட்டது.
“175.”
பரபரவென்று எண்ணிக் கொடுத்தான். பாட்டில் கைவந்தது. டிரவுசர் பாக்கெட்டிற்குள் சொருகிக் கொண்டான்.
கதவைச் சாத்துவதற்கு முன் நெட்டை உருவம் உற்றுப் பார்த்தது.
“பக்கத்து ஊரா? புதுசா?”
“ஆமாங்க.”
“நிக்காத. ஓடு. பாட்டு வர்ற திசையில நேரா போகாத. குறுக்கு மறுக்கா ஓடு. கெழட்டுத் திருட்டுத் தாயோலிங்க. மாட்டிக்காத.” படாரென்று கதவை சாத்திக் கொண்டது.
குப்பென்று வியர்த்தது. என்ன எழவு இது. ஆளாளுக்கு பீதியக் கிளப்புறானுங்க?
சரி. வழி ஒன்னும் குழப்பமில்ல. திரும்பி, நடையை ஓட்டமாக்கினான்.
நடுவீதி.
ஐந்தாவது தெரு.
முதுகுக்குப் பின்னால், ஜெனரேட்டர் சத்தம் சீராக கேட்டது.
நாலாவது தெரு.
திரும்பவும் முதுகுக்குப் பின்னால் யாரோ உற்றுப் பார்க்கும் உணர்வு. திரும்பிப் பார்க்கக் கூடாது.
லேசான கிசுகிசு பேச்சுக்கள். ஒரு குழந்தையின் வாயை யாரோ பொத்துகிறார்கள். ஒரு சிரிப்புச் சத்தம் அடக்கப்பட்டது போல ஒரு உணர்வு. வீடுகளில் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன. ஒரு வீட்டிலும் டிவி சத்தம் கேட்கவில்லை.
மூன்றாவது தெரு.
திடீரென்று இரண்டாவது தெரு வலப் பக்கத்தில் இருந்து உடுக்கைச் சத்தம் அதிர ஆரம்பித்தது.
நடுத்தெருவில் உறைந்து நின்றுவிட்டான்.
உடுக்கை அடித்து, கட்டைக் குரல் கணீரென்று பாடத் தொடங்கியது.
“நாடாறு மாசம் காடாறு மாசம்
ஆயிரம் ஆயிரம் வருசம் ஆண்ட ராசா
ஆனான ராசா பேரான ராசா
பொன்னான ராசா
பேயை வென்ற ராசா
பிசாசை கொன்ற ராசா.”
உடுக்கை.
“ஆனான ராசா பேரான ராசா
பொன்னான ராசா
ஆசைக்கு இணங்காத ராசா
வேசைக்கு இணங்காத ராசா.”
உடுக்கை.
“தாய்க்கு தலை தந்த ராசா
சினம் வென்ற ராசா
சிரம் தந்த ராசா
வரம் வென்ற ராசா
ஆனான ராசா பேரான ராசா
பொன்னான ராசா.”
உடுக்கை.
அசைய முடியவில்லை. இன்னும் ரெண்டு தெருதான் இருக்கு. நேரா ஓட முடியாது. எதிர்ல வந்துட்டா?
“குறுக்கு மறுக்கா ஓடு.”
வேட்டியை மடித்து இறுக்கிக் கட்டிக் கொண்டான். வியர்வையை வழித்து உதறிவிட்டு, பாட்டிலைத் தடவிப் பார்த்துக் கொண்டான். ஒரு நொடி கண்களை இறுக மூடித் திறந்தான். குரல் வந்த இரண்டாவது தெருவிற்கு எதிர்ப்பக்கமாக வளைந்து இடப்பக்க குறுக்குத் தெருவிற்குள் பாய்ந்தான்.
ஆளைப் பார்த்துவிடக் கூடாது. நேருக்கு நேர் பார்த்துவிடவே கூடாது. இருட்டுத் தெருவுக்குள் கண் மண் தெரியாமல் ஓடினான். பத்துப் பதினைந்து வீடுகள்தான் இருக்கும். முட்டுச் சந்து. குப்பையும் முள்வேலியுமாக அடைத்திருந்தது. அதற்கப்பால் என்ன இருக்கிறதோ தெரியாது. குப்பைக் குவியலுக்கு முன்பாக பேந்தப் பேந்த விழித்தபடி நின்றுவிட்டான்.
எதாச்சும் ஒரு வீட்டுக்குள்ள நுழஞ்சு, அந்தப் பக்கம் முதல் தெருவுல பாஞ்சு ஓடிடலாமா? திருடன்னு பிடிச்சிட்டா? நாலு வீடு தள்ளி, பின்னால் ஒரு வீட்டில் யாரோ வராந்தா விளக்கை போட்டார்கள். யாரும் எட்டிப் பார்த்த மாதிரி தெரியவில்லை. இந்த நேரம் பார்த்தா விளக்கை போடுவான். எழவெடுத்தவன்.
உச்சி வெய்யில்ல வெளியே போகக்கூடாது. ராத்திரி 10 மணிக்கு மேல வெளியே தலைகாட்டக்கூடாது. ஏதாச்சும் காத்துக் கருப்பு பட்டுடும். தலைச்சன் பிள்ளை, ஒத்தப் பிள்ளை என்று பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். ரத்த வாந்திக் கதையை எந்த மூதி சொன்னது?
உடம்பு தொப்பலாக நனைந்திருந்தது. திரும்பிப் பார்க்கத் தைரியம் வரவில்லை. கை தானாக பாட்டிலைத் தடவிப் பார்த்துக் கொண்டது. ஒளிய ஏதாச்சும் இடமிருக்குமா? குப்பைக் குவியலுக்கும் முள்வேலிக்கும் இடையில் கொஞ்சம் இடம் இருப்பது போலத் தோன்றியது. எழவு! என்னக் கருமம் இது! இப்படியா வகைதொகை இல்லாம மாட்டிக்கணும்!
வேறு வழியே இல்லை. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, குப்பைக் கூளத்தைச் சுற்றிக் கொண்டு அடிமேல் அடி எடுத்துவைக்க ஆரம்பித்தான். நாற்றம் சகிக்க முடியவில்லை. சின்ன இடைவெளிதான். குப்பையோடு உரசிவிடாமல் விலகி பக்கவாட்டில் திரும்பியபோது முள்வேலி உரசியது. அப்படியே குத்துக்காலிட்டு உட்கார்ந்தபோது நரவரவென்று சத்தமிட்டது. தொடையில் ஏகத்துக்கும் உரசியது. சத்தம் காட்டாமல் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான்.
உடுக்கை தெருவுக்குள் நுழைய ஆரம்பித்தது. சீராக முன்னோக்கி வந்தது. பாட்டு இல்லை. உடுக்கை முன்னேறி வர வர, ஒவ்வொரு வீடாக வராந்தா விளக்கு எரிய ஆரம்பித்தது. தலை சுற்றியது. தடுமாறி பின்புறமாகச் சரிந்தான். முள்வேலி சரிந்து நரநரவென சத்தம். கையை தரையில் ஊன்றி சமாளிக்க முயன்றான். வழுக்கிக் கொண்டு போனது. வியர்வைப் பிசுபிசுப்பு. கால்கள் பரத்தி உயர்ந்து உதைத்து விழுந்தன. இடது கால், குப்பையை உதைத்து சலசலப்புச் சத்தம். சில நொடிகள் மல்லாக்கக் கிடந்து, முழங்கையை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான். தொடைகள் தடதட வென நடுங்கிக் கொண்டிருந்தன. கண்கள் இருட்டுவது போலிருந்தது. தலையை உலுக்கி கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டான். உரசிய முட்களால் உடம்பெல்லாம் எரிந்தது. வலது காலை முன்னே வைத்து ஊன்றி, இடது முன்னங்காலை பின்வைத்து பாய்ந்து ஓடுவதற்குத் தயாரானான்.
உடுக்கை அதிர்ந்தது. சீராக, நேராக நிதானமாக முன்னேறி வந்தது. பேரொலியில் ஊரே நிசப்தமாகியிருந்தது. இவனுக்கு நேராக, ஒரு பத்து அடி தள்ளி நின்று இன்னும் வேகமாக அதிரத் தொடங்கியது. கடைசி இரண்டு வீடுகளின் வராந்தா விளக்குகள் எரிந்தன. இடப்பக்க வீட்டின் பால்கனியில் ஒரு விளக்கு.
உடுக்கை மௌனித்தது.
“ஆத்தா கூப்புடறா! வா ராசா!” பெருங்குரல் அலறியது.
சீறிக்கொண்டு பாய்ந்தான். எதிரே உடுக்கையோடு நின்றிருந்தவனைக் கண்டு வளைந்து, முழு வேகத்தில் மின்கம்பத்தில் மோதி, பின் மண்டையை சுவற்றில் இடித்துக் கொண்டு விழுந்தான். பாட்டில் நொறுங்கி தொடையில் சில்லுகள் குத்தியது உறைத்தது. புரண்டு எழ முயற்சி செய்தான். கிறுகிறுவென்று சுற்றியது. சோர்ந்து தளர்ந்து மல்லாக்கக் கிடந்தான். வேட்டி தளர்ந்தது.
சடசடவென விளக்குகள் எரிந்தன. ஆட்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள். எக்களிப்புச் சிரிப்பும் பேச்சுமாய் கூட்டம் கூடிவிட்டது.
“சிக்குனான்டா!” எகத்தாளமாக ஒரு குரல்.
நாலைந்து இளைஞர்கள் இவனைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு, கைகொடுத்து எழுப்பி நிற்க வைத்தார்கள். இளகியிருந்த வேட்டியை ஒருவன் இறுக்கிக் கட்டினான். ஒருவன், தொடையில் வழிந்திருந்த ஈரத்தைத் துடைத்துவிட்டான். ஒதுக்குப்புறமாக கூட்டிப்போய், டிரவுசர் பாக்கெட்டிற்குள் இருந்த கண்ணாடிச் சில்லுகளைக் கவனமாக எடுத்துத் தட்டிவிட்டார்கள். லேசாகக் கசிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டான் ஒருவன். எல்லோரும் சிரிப்பும் சந்தோஷமும் பரம திருப்தியுமாக பூரித்திருந்தது தெரிந்தது.
கட்டி வச்சு உதைக்கிற கூட்டம் மாதிரி தெரியலையே!
உடுக்கையோடு நின்றிருந்தவனிடம் இழுத்துக் கொண்டு போனார்கள்.
“நல்ல சகுனம் ராசா!” தலை மீது கை வைத்து வாழ்த்தினான்.
“பெண்டு பிள்ளைங்க வீட்டுக்குள்ள போங்க,” என்று அதிகாரத் தொனியில் சொல்லிவிட்டு, திரும்பி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டான்.
“தம்பிய தயார் செஞ்சு கூட்டிட்டு வாங்கய்யா.” அவனைச் சூழ்ந்துகொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து பெரியவர் ஒருவர் சொல்லிவிட்டு பூசாரியைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டார்.
நடக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு இளைஞன் இவன் தோள் மீது கைபோட்டு அணைத்தான்.
“சாரு, யாரு, என்ன வெவரம்?”
“பழனிச்சாமிங்க. சொந்த ஊரு மெட்ராசு. இங்க பெரியம்மா வீடு. எதுத்தாப்பல… மேலூரு.”
“எந்த வீடு?”
சொன்னான்.
“ஏ, அந்த அக்காவா! அது ஒண்டிக் கட்டையில்ல…”
“ரொம்ப நல்லதாப் போச்சு. சார கேக்க நாதி கிடையாது.” இன்னொருவன் சொல்லிச் சிரித்தான்.
“ஒன்னும் பயப்படாத. காலையில வீட்டுக்கு போயிரலாம்.” முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான் ஒருவன்.
குறுக்குச் சந்தில் இருந்து நடுத் தெருவுக்கு வந்தார்கள். வீடுகளில் விளக்குகள் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தன. பெண்களும் குழந்தைகளும் வீட்டு மாடிகளிலும் படிகளிலும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளுக்கு அவனைக் காட்டி குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள்.
இவனை விசாரித்த பெரியவர் வீட்டு மொட்டை மாடியில் விளக்கு பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. வயதான பெண் ஒருத்தியின் தோள்மீது சாய்ந்தபடி இளம் பெண்ணொருத்தி இவனை கைகாட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சாய்ந்த தலையை நிமிர்த்தியபோது பிரகாசமான விளக்கொளியில் அவள் முகம் துலக்கமாகத் தெரிந்தது. ஒரு மாதிரியான களிப்போடு தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது. எங்கோ பார்த்த முகம போல.
“வேகமா நடங்கப்பா. சீக்கிரம் ஆரம்பிக்கணும்,” ஒருவன் துரிதப்படுத்தினான்.
பெட்டிக் கடையைத் தாண்டி நாலைந்து தெருக்கள் போனதும், ஒரு மைதானத்தின் நடுவே அரைஆள் உயரத்தில் பத்ரகாளியம்மன் சிலை. கல்மேடையின் பக்கவாட்டிலும் பின்புறமும் ட்யூப் லைட்டுகள். பின்புறம் ஜெனரேட்டர் உறுமிக் கொண்டிருந்தது. மேடையின் முன்னே பூசை ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆண்கள் ஊருக்குள் இருந்து வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள்.
மேடையை நெருங்காமல், பக்கவாட்டாக பின்புறமாக இவனை இழுத்துச் சென்றார்கள். சற்று தள்ளி, ஒரு ஓரத்தில் பெரிய கல் ஒன்றுக்குப் பக்கத்தில் தொட்டியில் தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளிச்சம் மங்கலாகத்தான் இருந்தது.
“வேட்டி சட்டைய எல்லாம் கழட்டு,” மிதமான அதிகாரத் தோரணையில் சொல்லி, கட்டிக்கொள்ள துண்டு ஒன்றைக் கொடுத்தான் ஒருவன். எல்லாவற்றையும் களைந்து அவனிடம் கொடுத்துவிட்டு துண்டைக் கட்டிக் கொண்டான். கல் மீது உட்கார வைத்தார்கள். ஒருவன், தண்ணீரை மொண்டு இவன் தலை மீது ஊற்ற ஆரம்பித்தான். இன்னொருவனும். ஐந்து நிமிஷங்கள். லேசாகக் குளிர ஆரம்பித்தது.
சட்டென்று நிறுத்தினார்கள். இன்னொரு துண்டைக் கொடுத்து துவட்டிக் கொள்ளச் சொன்னார்கள். புது வேட்டியைக் கொடுத்தார்கள். கட்டிக்கொண்டான். மீண்டும் கல் மீது உட்கார வைத்தார்கள். பூசாரி விறுவிறுவென்று வந்து இவன் முன் நின்றான். கையில் தாம்பூலத் தட்டில் சந்தனமும் குங்குமமும். ஒருவன் அதை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டான்.
கைநிறைய சந்தனத்தை அள்ளி, கண்களை மூடி ஏதோ முனுமுனுத்தான். அன்னாந்து பார்த்து கும்பிட்டு, இவனை நெருங்கி சந்தனத்தைப் பூச ஆரம்பித்தான். மார்பு, முதுகு, கைகள், முழுக்க வழிய வழியப் பூசிவிட்டு முகத்திலும் பூசினான். “சூட்டத் தணிக்கும் ராசா,” என்றான். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டையும் வைத்தான். தாம்பூலத் தட்டை வைத்திருந்தவன் ஒரு துண்டைக் கொடுக்க, அதை வாங்கி, புருவத்திற்கு மேலாகவும், கண்களுக்குக் கீழாகவும் அரை அங்குலத்திற்கு வளைவாக சந்தனத்தைத் துடைத்து வழித்தெடுத்தான். தட்டில் இருந்து ஒரு கிண்ணத்தை எடுத்து குழைத்த ஈரத்தை புருவத்திற்கு மேலாகவும் கண்களுக்கு கீழாகவும் வாகாகத் தீட்டினான். இன்னொரு சின்ன கிண்ணத்திலிருந்து இன்னொரு குழைவை அதற்குக் கீழாகத் தீட்டினான்.
“என்னங்க? என்றவனுக்கு, “செவப்பு சாயம். கருப்பு மய்யி, மஞ்ச மஞ்சேன்னு சந்தனம். தொரைக்கு அலங்காரம் பண்ண வேணாமா.” கெக்கலித்தார்கள்.
“இன்னும் சரியா ஒன்னரை மணிநேரம் இருக்கு. தம்பிய குளிர்ச்சியாக்கி தயார் செஞ்சு கூட்டியாந்துடுங்க,” கட்டளை போட்டுவிட்டு பூசாரி நகர்ந்துவிட்டான்.
சற்றுத் தள்ளியிருந்த சின்ன மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள். “வேட்டி அழுக்காயிடாம.” ஒருவன் இவனுக்குத் துண்டை விரித்தான். பையில் இருந்து ஒருவன் ஃபுல் பாட்டிலை எடுத்தான். வெளிநாட்டு சரக்கு போலத் தெரிந்தது.
“சார், எவ்வளவு தாங்குவீங்க?”
“குவாட்டர் போதும்.”
எவர்சில்வர் டம்பளர்களும் தண்ணீர் பாட்டில்களும் பைக்குள்ளிருந்து வந்தன. இரண்டு கொய்யாப் பழங்களை கையில் திணித்தார்கள்.
“இளநீர் பாட்டிலை சாருக்கு குடுடா. பெருசு குளுகுளுன்னு வச்சிருக்கச் சொல்லியிருக்கில்ல.” இவனுக்கு இளநீரில் கலந்து கொடுத்தார்கள்.
மூன்று ரவுண்டுகளில் பாட்டில் காலியானது. உடம்பு தளர்வானது. முள் உரசிய எரிச்சலும், இடித்து விழுந்த வலியும் மெல்ல மரத்துக் கொண்டிருந்தது. தூணில் உடம்பை சாய்த்தான்.
ஒருவன் எழுந்து சற்று தள்ளி நிற்க, இன்னொருவன் எதிர் தூணில் சாய்ந்து, சட்டைப் பையில் இருந்து சிகரெட்டை எடுத்து, உள்ளங்கையில் தூளைக் கொட்டி பாதியை ஊதித் தள்ளினான். டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பொட்டலத்தை எடுத்துப் பிரித்து, வஸ்துவை சிகரெட் துகளோடு கலந்து கசக்க ஆரம்பித்தான்.
“சாருக்குப் பழக்கமிருக்கா?”
“ம்ம்ம்… காலேஜ் படிக்கறப்ப. அப்புறம் எப்பவாச்சும் ஒரு ஃபெரெண்டு வந்தா.”
“தொர எல்லாத்தையும் கத்துக் கரச்சுக் குடிச்சிருக்காரு போல இருக்கே.”
மூன்று சிகரெட்டுகள். சரசரவெனப் பிரித்துக் கலந்தான். ஒன்று இவன் கைக்கு வந்தது.
“நல்லா அனுபவிச்சுக் இழுங்க. ராத்திரி பூரா தாங்கணும்ல.” சிரித்தார்கள்.
பேண்ட் சட்டை போட்ட நடுத்தர வயதுக்காரன் ஒருவன் பின்னாலிருந்து செருமினான்.
“வாங்கண்ணே! எப்ப வந்தீங்க. சந்தடியில்லாம?”
“சும்மா, தொரைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்,” சொல்லிக்கொண்டே இவன் முன்னால் வந்து நின்றான். இவன் டாஸ்மாக் கிட்ட வழி சொன்ன ஆளு மாதிரி தெரியுதே. கண்களைத் தீட்டிக் கொண்டு உற்றுப் பார்த்தான். அவனேதான். என்ன நடக்குது இங்க?
“என்ன தம்பி, ப்ளாக்கில வாங்கிட்டீங்க போல இருக்கு?” சற்று சத்தமாகச் சிரித்தான்.
“ஸ்ஸ்ஸ்… அண்ணே!.”
“சரி, சரி. தொரைய பதப்படுத்தி கூட்டி வாங்க. எப்ப வரணும்னு ஞாபகமிருக்கில்ல?”
“எல்லாம், கரெக்டா நடக்கும்ணே. கன்னுக்குட்டி மிரண்டுடப்போது. நீங்க கிளம்புங்க.”
வந்தவன் லேசாகச் சிரித்துக் கொண்டே நடையைக் கட்டினான்.
வஸ்து சுவாசத்தோடு கலந்து தலைக்கு ஏறியது. உடம்பு லேசாக முறுகி தெம்பு கூடியது. எதிர் தூணில் சாய்ந்து புகையை இழுத்துக்கொண்டிருந்தவனை பார்த்து லேசாக சிரித்தான்.
“அண்ணே!”.
அண்ணாந்து புகையை விட்டுக்கொண்டிருந்தவன், தலையை தாழ்த்தி, “என்னாங்க தம்பி?” என்றான்.
“என்னங்க நடக்கப்போவுது?”
“ராசா உனக்கு பூசை செய்யப் போறாங்க தம்பி!” சொன்னவன் சிரித்தான்.
“என்ன பூசை அண்ணே?”
சொன்னவன் நின்றிருந்தவனை பார்த்து, “பார்றா, தம்பி வெவரம் கேக்குது!” குரலில் எகத்தாளம் மிதமிஞ்சி தொனித்தது.
நின்றிருந்தவன், “அதுக்கென்ன, சொல்லு சொல்லு,” என்று அசட்டையாக சொன்னான்.
எதிர் தூணில் சாய்திருந்தவன், பக்கவாட்டில் திரும்பி கால்களைப் பரத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டான். வஸ்துவை உறிஞ்சி புகையை இழுத்து ஊதினான்.
“தம்பிக்கு விக்கிரமாதித்த ராசா கதை தெரியும்ல?”
“சின்ன வயசுல கேட்டிருக்கேண்ணே. காலேஜ் படிக்கும்போதும் படிச்சிருக்கேன். ”
“ம்ம்ம்… விக்கிரமாதித்த ராசா வேதாளத்த அடக்குன கதைய படிச்சிருக்கியா?”
“படிச்சிருக்கேண்ணே.”
“அது சரி. ராசா ஒரு சுடுகாட்டுல, வேதாளம் போட்ட புதிருக்கெல்லாம் பதில் சொல்லி அடக்குனாருல்ல, அது எந்த ஊரு சுடுகாடுன்னு தெரியுமா?”
தலைக்கு ஏறியிருந்த வஸ்து சுழற்ற ஆரம்பித்திருந்தது. இது என்னடா புதுக்கதைய கட்டுறானுங்க. லேசாகச் சிரித்தான்.
“தம்பிக்கு தெரியல. ம்ம்ம்… இதுக்குதான் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்லுறது. அது இந்த ஊரு சுடுகாடுதான் தம்பி. எங்க ஊரு சுடுகாடு.”
கிறுகிறுப்பில் இவனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. “என்னண்ணே இப்படி சொல்றீங்க!” வாய்விட்டு சிரித்துவிட்டான்.
பின்னால் நின்றிருந்தவன் சரேலென்று இவன் மயிற்றைக் கொத்தாகப் பிடிக்க, எதிர் தூணில் சாய்ந்திருந்தவன், பாய்ந்து எழுந்து எதிரில் வந்து நின்றான். கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. நிலைகுலைந்து பின்னால் நின்றிருந்தவன் கால்களில் சரிந்தான்.
மயிர்ப்பிடி தளர்ந்தது. கைகளை ஊன்றி எழுந்து ஒடுங்கி உட்கார்ந்தான். மேலும் அடிவிழுமோ என்ற பயத்தில் உடல் நடுங்கியது. மிச்சமிருந்த வஸ்து எங்கேயோ போய் விழுந்திருந்தது.
அடித்தவன் மீண்டும் தன் தூணில் போய் சாய்ந்தான். ஆசுவாசமாக வஸ்துவை இழுத்து முடித்து தூணில் நசுக்கி தூர எறிந்தான்.
“இந்த நக்கல்லாம் இங்க ஆகாது தம்பி. சொன்னா கம்முனு கேட்டுக்கணும். புரிஞ்சுதா?”
தலையை வேகமாக ஆட்டினான். கிர்ர்ரென்று இருந்தது. ஆட்டியது வஸ்துவா அடியா என்று தெரியவில்லை.
“எங்க ஊரு சுடுகாட்டுலதான் அடக்கினாரு. என்ன?”
“ம்ம்ம்…”
எதிரில் இருந்தவன் செருமிக்கொண்டு தொடர்ந்தான்.
“அடக்குன ராசாவுக்கு கடைசிவரை விசுவாசமா இருந்துச்சு வேதாளம். இந்த மண்ணு விசுவாசத்தோட மண்ணு. சர்வ சக்தி படைச்சவனா இருந்தாலும் இங்க விசுவாசம்தான் முக்கியம். ஆனா, காலம் போக போக, விசுவாசம் மண்ணோட மண்ணா மறைஞ்சு போச்சு. என்ன காரணம் தெரியுமா?” நிறுத்தி இவனை முறைத்தான்.
வாயைத் திறக்கப் பயமாக இருந்தது. தெரியாது என்று தலையை ஆட்டினான்.
“ஏன்னா, வேதாளத்தோட கடைசிக் கதைக்கு விக்கிரமாதித்த ராசாவால பதில் சொல்லமுடியல. வேதாளமும் பதில் என்னன்னு சொல்லல. ராசாவோட வீரத்துக்கும் விவேகத்துக்கும் கட்டுப்பட்டு, தானாவே அவருக்கு அடிமையா ஆயிடுச்சு. அதுக்குப்பேர்தான் விசுவாசம். புரிஞ்சுதா?”
புரிந்ததுபோல ஆட்டினான்.
“அந்தக் கதைக்கு பதிலை சொல்லாம போனதுனாலதான் இந்த மண்ணுல அநீதியும் அக்கிரமும் தலைவிரிச்சு ஆடுது. அந்தக் கதை என்னான்னு தெரியுமா? உனக்கெங்க தெரியப் போவுது. அது ஆணும் பெண்ணும் முறை தவறிய கதை. விக்கிரமாதித்த மகாராசாவாலேயே பதில் சொல்லமுடியாத கதை. வேதாளமும் பதிலைச் சொல்ல மறந்துபோன கதை. அந்தக் கதையாலதான் நாடு இப்படிக் குட்டிச் சுவரா கெட்டுக் கெடக்கு. அதுக்குப் பிராயச்சித்தமாத்தான் வருஷா வருஷமா இந்த பூசை இங்க நடக்குது.”
நெசமாத்தான் சொல்றானா? போதையில ஏதாச்சும் கலந்துகட்டி விடறானா? இல்ல இது கிறுக்குப் பயலுங்க ஊரா? இதுல வந்து மாட்டிட்டு பத்திரமா வீடு போய் சேருவோமா? என்ன கருமம் இது?
“ஒரு காலத்துல நரபலி கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப முடியறதில்ல. பூசையோட முடிச்சுக்கறோம். தலை கீழா கட்டித் தொங்கவிட்டு, வேதாளத்த வரவழைக்க ராத்திரி முழுக்க பூசை நடக்கும். ரத்த விளாறுதான். பல ராத்திரி வேதாளம் வந்து தொலைக்க மாட்டேங்குது. வந்தாலும் பதிலை சொல்லித் தொலைக்க மாட்டேங்குது. நாங்களும் விடறதா இல்ல. என்னைக்காச்சும் ஒருநாள் சொல்லாமலா போயிடும்.”
உடுக்கை ஒலிக்க ஆரம்பித்தது.
“சரி சரி, இன்னும் பத்து நிமிஷத்துல ஆரம்பிச்சிடும். இன்னொரு சிகரெட்ட போடு. தம்பி தாங்கணும்ல,” நின்றிருந்தவன்.
எதிரே இருந்தவன் சிரித்துக்கொண்டே தூளை எடுத்து விறுவிறுவென்று கசக்கத்தொடங்கினான். அது என்ன கதை? இவன் மூளையைக் கசக்கத் தொடங்கினான்.
நன்றி: ஆனந்த விகடன் 24.07.2019