ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 2

குடவோலை முறை எனும் மக்களாட்சி முறை – 2

கி. பி. பத்தாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியில் நிலவிய குடவோலை முறை குறித்த தகவல்கள் அடங்கிய உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தையும் பெரும் புகழையும் பெற்றிருந்தாலும், அவற்றில் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சிமுறை அரசியல் ஆய்வாளர்களின் உரிய கவனத்தைப் பெறவில்லை. குறிப்பாக, ஒரு ஆட்சிமுறை என்ற அளவில் தற்கால அரசியல் நெருக்கடிகளுக்கு அக்கெல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கிலிருந்து அவை அணுகப்படவே இல்லை.

தற்போது நிலவும் ஆட்சிமுறை வாக்குகளைச் செலுத்தி பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஆள்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கும் ஆட்சிமுறை என்பது அனைவரும் அறிந்ததே. இதை ஜனநாயக ஆட்சிமுறை என்று நாம் கருதுகிறோம். குடவோலை முறையையும் ஜனநாயக ஆட்சிமுறை என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறோம். ஆனால், குடவோலை முறை வாக்குகளை செலுத்தி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறையே அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம்.

உத்திரமேரூர் கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டிருக்கும் குடவோலை முறையின் நடைமுறை மிகவும் எளிமையானது. தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், நில வரி வாரியம், ஆண்டுக்கு ஒருமுறை கூடி மேற்பார்வை செய்யும் வாரியம் ஆகிய கிராம நிர்வாக சபைகளுக்கு, தகுதி உடைய நபர்களை தேர்வு செய்யும் முறை. ஊரில் இருந்த முப்பது பிரிவுகளுக்கு ஒருவர் என்ற விதத்தில் 30 நபர்கள் இவ்வாரியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

முதலில், ஒவ்வொரு ஊர் பிரிவிற்கும் தகுதியான நபர்கள் என்று கருதப்படுபவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு, இறுக மூடிவைத்துவிடுவார்கள். தேர்வு செய்யப்படும் நாளன்று, ஊரின் மகாசபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்க, பூசாரிகளும் ஒருவர் தவறாமல் கூடியிருக்கவேண்டும். கூடியிருக்கும் பூசாரிகளில் வயதில் மூத்தவர், பெயர்கள் எழுதப்பட்ட ஓலைகள் அடங்கிய பானையை, சபையினர் அனைவரும் பார்க்கும் வகையில் தூக்கி காட்டவேண்டும். பிறகு அப்பானையில் உள்ள ஓலைகளை வேறொரு பானைக்குள் இட்டு, அதை நன்றாக குலுக்கவேண்டும். அதன் பிறகு, ஏதுமறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு, பானையில் உள்ள ஓலைகளில் ஒன்றை எடுக்கச் சொல்லவேண்டும். சிறுவன் எடுக்கும் ஓலையை, மத்தியஸ்தர், தன் ஐந்து விரல்களையும் அகல விரித்து வாங்கிக்கொள்ளவேண்டும். வாங்கிய ஓலையில் உள்ள பெயரை அவர் உரக்க வாசிக்கவேண்டும். அவரைத் தொடர்ந்து சபையில் கூடியுள்ள மற்ற பூசாரிகள் அனைவரும் ஓலையில் உள்ள பெயரை உரக்க வாசிக்கவேண்டும். ஊரின் 30 பிரிவுகளுக்கும் இவ்வாறு 30 பானைகளில் பெயர்கள் இடப்பட்டு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எவ்விதமான முறைகேடுகளும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்வதற்கான நடைமுறை என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்விதமான அதிகாரப் போட்டிக்கும் பொறாமைக்கும் இடம் தராமலும், செல்வாக்கு பெற்றவர்கள் மறைமுகமாக அழுத்தம் தந்து தமக்கு சார்பானவர்களை தேர்வு செய்வதற்கான வழியும் இல்லாமல் தேர்தெடுக்கும் முறை என்பதும் புலனாகிறது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியானவர்கள் என்பதற்கான நிபந்தனைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. அவை பின்வருமாறு:

  • வரி செலுத்தக்கூடிய கால்வேலிக்கு அதிகமான நிலம் உடையவராக இருக்கவேண்டும்.
  • அந்நிலத்தில் சொந்தமான வீடு உடையவராக இருக்கவேண்டும்.
  • 35லிருந்து 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
  • மந்திர பிரமாணங்களைப் பிறருக்கு எடுத்துரைத்துச் சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும்.
  • வேலியில் 1/8 பங்கு நிலமுடையவராக இருந்தால், 1 வேதத்திலும் அதற்கான உரையிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கவேண்டும்.
  • செல்வத்தை நல் வழியில் சேர்த்தவராகவும், தூய்மையான மனத்தினராகவும் இருக்கவேண்டும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. நெருங்கிய உறவினர்கள் எவரும்கூட அவ்வாறு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது.
  • ஏதாவது வாரியத்தில் உறுப்பினராக இருந்து, கணக்குகளைக் காட்டாமலோ ஒப்படைக்காமலோ இருந்தால், குடத்தில் பெயரை இடுவதற்கான தகுதியற்றவராக கருதப்படுவார். அவருடைய நெருங்கிய உறவினர்களில் எவராவது உறுப்பினராக இருந்து கணக்குகளை காட்டாமலிருந்தாலும்கூட, தகுதியற்றவராகவே கருதப்படுவார்.
  • ஆகமங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள், கையூட்டு பெற்றவர்கள், பிறர் பொருளை அபகரித்தவர்கள், மக்களுக்கு விரோதமான காரியங்களை செய்தவர்கள், இன்னபிற பாதகங்களை செய்தோரும் தகுதியற்றவர்கள்.
  • பொய் கையெழுத்து இட்டவர்கள், கழுதை மேல் ஏறியவர்களும் தகுதியற்றவர்கள்.

இந்த நிபந்தனைகளின் பாதகமான அம்சங்களை முதலில் பார்த்துவிடுவது நல்லது. முதலாவதாக, வேதங்களிலும் ஆகமங்களிலும் வல்லவர்கள் – அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படத் தகுதியானவர்கள் என்ற வரையறை. இரண்டாவதாக, குறிப்பிட்ட அளவு சொத்துடைமை வரையறை. இவ்விரண்டும், ஆட்சி செய்யத் தகுதியானவர்களை ஒரு குறுகிய வரம்பிற்குள் நிறுத்திவிடுகின்றன.

இதற்கு அப்பாற்பட்டு, விதிகளின் சாதகமான அம்சங்கள் கவனத்திற்கு உரியவை. முதலாவதாக, முறைகேடுகளைத் தடுப்பதற்கான விதிமுறைகள். சமூகத்தின் பொது நன்மைக்கு எதிரானவர்களை மட்டுமின்றி, நிர்வாகத்தில் பொறுப்பின்றி நடந்துகொண்டவர்களையும் முறைகேடுகளைச் செய்தவர்களையும் விலக்கி வைக்கும் விதிமுறைகள். இவை நிர்வாகத் தூய்மையை உறுதி செய்பவை.

இரண்டாவதாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிர்வாக சபைகளுக்கு தேர்வு செய்யப்பட முடியும் என்ற நிபந்தனை. நெருங்கிய உறவினர்கள் எவரும்கூட இக்கால எல்லைக்குள் நிர்வாக சபையில் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது என்று துணை நிபந்தனை இதை மேலும் இறுக்கமாக்குகிறது.

அதிகாரம் ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு மிக்க நபரிடமோ செல்வாக்கு மிக்க குழுவிடமோ குவிந்துவிடாமல் இருப்பதை இந்த நிபந்தனை உறுதிசெய்கிறது. வேறு வகையில் சொல்வதென்றால், சுழற்சி முறையில் நிர்வாகத்திலும் ஆட்சிப் பொறுப்பிலும் ஊரில் இருக்கும் பலரும் பங்கேற்க வழிவகை செய்கிறது.

தற்கால அரசியல் சூழலுக்குப் பொருத்திக் கூறுவதென்றால், நிர்வாக முறைகேடுகள், ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை நிகழாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அடுத்து, அதிகாரம் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடமோ, செல்வாக்கு மிக்க தனி நபர்களிடமோ குவிந்துவிடாமல் தடுக்கப்படுவதோடு, அதிகாரத்திலும் ஆட்சிப் பொறுப்பில் அனைவரும் பங்கேற்பதை சுழற்சி முறை உறுதி செய்கிறது.

இவற்றோடு, குடத்தில் ஓலைகளை இட்டு பெயர்களை தேர்வு செய்யும் முறையின் மையமான பண்பு கவனத்திற்குரியது. இவ்வாறு தேர்வு செய்யும் முறையை random process – சீர்வாய்ப்பு முறை அல்லது அறவட்டு முறை என்று கூறுவர். இம்முறையில், குடத்தில் இடப்பட்டுள்ள பெயர்களில் இருந்து எவருடைய பெயரும் தேர்வு செய்யப்படலாம். எவரது பெயர் தேர்வு செய்யப்படுவதற்கும் நூறு சதவீதம் சமமான வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது.

ஆட்சி புரிவதில் அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யும் சீர்வாய்ப்பு/அறவட்டு முறையுடன் சுழற்சி முறையும் இணைந்த இத்தகைய குடவோலை முறை, அனைத்து மக்களும் அல்லது அவர்களின் பிரதிநிதிகளும் எந்த பாகுபாடும் இன்றி அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சி புரியவும், நிர்வாகம் செய்யவும் வழிவகை செய்யக்கூடியது. இதுவே மக்களாட்சி அல்லது ஜனநாயகம்.

இம்முறையில், தேர்தல் முறையில் நிலவும் போட்டியினால் உருவாகக்கூடிய பலப் பரீட்சை, மோதல், போட்டி, பொறாமை, பகைமை, செல்வாக்கு அழுத்தங்கள் போன்ற அனைவருக்கும் தீங்கை விளைவிக்கும் பண்புகளும் உருவாகாமல் தவிர்க்கப்படுகிறது.

ஆனால், சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை, சொத்துரிமை வரையறையுடன், சாதிய அடுக்கில் ஒரு பிரிவினரைத் தவிர பிறருக்கு வாய்ப்பை மறுத்த, மன்னராட்சிக்கு உட்பட்ட கிராம அளவிலான ஆட்சிமுறையாகவே இருந்தது கண்கூடு. இத்தகைய முறை, சோழர் ஆட்சி காலத்தில் மட்டுமல்லாது, பிற ஆட்சிக் காலங்களில் நிலவியதா, எவ்வளவு காலம் தொடர்ந்து நிலவியது என்ற கேள்விகள் எல்லாம் வரலாற்றுப் புலத்திற்குரிய விடை காணப்படாத கேள்விகள்.

இதற்கு மாறாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க சூழலில்,  ஏதன்ஸ் நகரத்திலும், பல கிரேக்க நகர அரசுகளிலும், மன்னராட்சி முறைக்கும் செல்வாக்கு மிக்க மேட்டுக்குடியினரின் குழு ஆட்சிக்கும் உண்மையான மாற்றாக விளங்கிய ஒரு மக்களாட்சி – குடவோலை முறையை ஒத்த ஆட்சிமுறை நிலவியது.   நகரக் குடிமக்கள் அனைவரும் பாகுபாடின்றி பங்கேற்க வழிவகை செய்யக்கூடியதாக, உண்மையான மக்களாட்சியாக, ஜனநாயக அரசாக ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் தழைத்தோங்கியிருந்தது. அவ்வாட்சி முறையின் நுணுக்கங்களைச் சற்றேனும் சுருக்கமாக புரிந்துகொள்வது, குடவோலை முறை எனும் மக்களாட்சி முறையை மேலும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

(தொடரும்… )

நன்றி: விகடன்

%d bloggers like this: