குடவோலை முறையின் வீழ்ச்சியும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் தோற்றமும் – 4
கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் இருந்து கி. மு. 1 ஆம் நூற்றாண்டு வரை ஏதென்ஸிலும், பல கிரேக்க நகர அரசுகளிலும் தழைத்திருந்த குடவோலை முறையிலான மக்களாட்சி, கி. மு. 146 இல் ரோமப் பேரரசின் ஆக்கிரமிப்போடு முடிவுக்கு வந்தது. என்றாலும், ஏதென்ஸின் மக்களாட்சி என்ற கனவு, தத்துவவாதிகளின் எழுத்துக்களிலும், அரசியல் கோட்பாட்டாளர்களின் கற்பனைகளிலும் தொடர்ந்து உலவிக்கொண்டிருந்தது. மறுமலர்ச்சி கால இத்தாலியில் வெனிஸ், ஃப்ளோரன்ஸ் நகரங்களில், மேட்டுக்குடியினரின் குறுகிய வட்டங்களில் குடவோலை முறையைப் பின்பற்றி அதிகாரக் குவிப்பைத் தவிர்க்கும் முயற்சி மீண்டும் முளைத்து, ஐரோப்பாவின் பல நகரங்களுக்கும் பரவியது. இறுதியாக, 1797 ஆம் ஆண்டில் வெனிஸ் நகரின் வீழ்ச்சியோடு குடவோலை முறை முற்றிலுமாக மறைந்துபோனது.
மத்திய கால உலகை முடிவிற்கு கொண்டு வந்து, நவீன காலத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட அமெரிக்கப் புரட்சியும், ஃப்ரெஞ்சுப் புரட்சியும், நாடாளுமன்ற ஆட்சியை நோக்கிய இங்கிலாந்தின் படிப்படியான முன்னேற்றமும் குடவோலை முறை நடைமுறையையும் அது குறித்த பேச்சையும் அரசியல் உலகில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தழித்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் உலகைக் குலுக்கிய இம்மூன்று மாற்றங்களும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையில் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறைக்குப் பதிலாக, தேர்தலின் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் முறையே தமக்குரிய ஆட்சிமுறை என்று மிகுந்த கவனத்துடன் தேர்ந்துகொண்டன.
முதலாவதாக, இம்மூன்று புரட்சிகளின் நாயகர்களும் அவர்கள் புதிதாக உருவாக்கிய ஆட்சியமைப்பை ஜனநாயம் – மக்களாட்சி என்று கருதவே இல்லை. அவ்வாறு அழைப்பதை மிகுந்த கவனத்துடன் தவிர்த்து வந்தனர். தமது அரசுகளை குடியரசுகள் (Republic) என்றே அழைத்தனர். ஃப்ரெஞ்சு அரசு குடும்பத்தில் இருந்து வந்தவரும், முடியாட்சியை வெறுத்தவரும், ஆனால், உருவாகிக் கொண்டிருந்த புதிய அரசுகளின் எல்லைகளை தீர்க்கத்தரிசனத்துடன் உணர்ந்தவருமான அலெக்ஸி டி டாக்யெவெல்லி என்பார், தனது அமெரிக்கப் பயணத்தை தொடர்ந்து 1835 இல் “அமெரிக்காவில் ஜனநாயகம்” என்ற நூலை எழுதும்வரை, இப்புதிய அரசமைப்புகளை குடியரசுகள் என்று அழைக்கும் வழக்கமே நிலவி வந்தது. டாக்யெவெல்லியின் நூலைக்குப் பிறகே, இப்புதிய அரசமைப்புகளை ஜனநாயகம் என்ற சொல் பீடித்துக்கொண்டது.
இரண்டாவதாக, பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சிகளின் நாயகர்கள் ஏதென்ஸில் நிலவிய ஆட்சியமைப்பை நன்கு அறிந்தே இருந்தார்கள். தமது சமகாலத்தில் இத்தாலிய நகரங்கள் சிலவற்றில் – குறிப்பாக வெனிஸில் – நிலவிய வரையறுக்கப்பட்ட வகையிலான குடவோலை முறையைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்கள். என்றபோதிலும், தாம் உருவாக்கிக் கொண்டிருந்த புதிய ஆட்சிக்கு அது உகந்ததல்ல என்றே முடிவு செய்தார்கள். ஏதென்ஸின் குடவோலை முறையிலான ஆட்சியமைப்பிற்குப் பதிலாக ரோமக் குடியரசில் நிலவிய தேர்தல் மூலமான குழு ஆட்சிமுறையே தமக்கு உகந்தது என்று தெளிவாக முடிவு செய்தார்கள்.
ஒரு அரசாங்கம் – ஆட்சி அமைப்பு எவ்வாறு அங்கீகாரம் பெறுகிறது என்பதைப் பற்றிய அவர்களுடைய புரிதலே இந்த தேர்வுக்கு காரணமாக அமைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சிகள் யாவும் முடியாட்சிக்கு எதிரானவை என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். முடியாட்சியில் அரசனின் ஆட்சிக்கான நியாயப்பாடு அவன் குறிப்பிட்ட அரச பரம்பரையில், “உயர் குடியில்” பிறந்தவன் என்ற காரணத்தினாலேயே உருவாகிறது. வேறு எந்த நியாயப்பாடும் ஆட்சிபுரியும் அரசனுக்கு அவசியமில்லை.
அத்தகைய முடியாட்சியை தூக்கி எறிந்தவர்கள் அவ்வாறான நியாயப்பாட்டையும் நிராகரித்தார்கள். எந்தவொரு அரசாங்கமும் குடிமக்களின் ஒப்புதல் – அங்கீகாரம் பெற்றே ஆட்சி புரியமுடியும் என்ற வரையறையே சரியாக இருக்கமுடியும் என்று நம்பினார்கள். அவ்வகையிலான அரசாங்கத்தை உருவாக்க பொருத்தமான முறை தேர்தலாக மட்டுமே இருக்கமுடியும் என்று கருதியதாலேயே, குடவோலை முறையை நிராகரித்து தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஆட்சிமுறையைத் தழுவிக்கொண்டார்கள்.
ஏதென்ஸின் குடிமக்களுக்கு அனைவரும் ஆட்சியில், சுழற்சி முறையில் பங்குபெறவேண்டும் என்பதே மையமான அம்சமாக இருந்தது. அத்தகைய ஜனநாயகக் கொள்கைக்கு உகந்த முறையாக குடவோலை முறையிலான குலுக்கல் முறை இருந்ததாலேயே அவர்கள் அதை தேர்வு செய்தனர். ஆட்சிக்கான நியாயப்பாடு குடிமக்கள் தரும் ஒப்புதல் – அங்கீகாரத்திலேயே அடங்கியிருக்கிறது என்று பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்கள் நம்பினார்கள். அதற்கு உகந்த முறையான தேர்தல் முறையை தேர்வு செய்துகொண்டார்கள். எவருடைய ஒப்புதலுமற்ற முடியாட்சியுடன் ஒப்பிடும்போது இம்முறை அவர்களின் கண்களுக்கு மேலானதாகத் தெரிந்ததில் வியப்பில்லை.
குடிமக்கள் ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கும் தேர்தல் முறையின் மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது. ஒப்புதல் தந்த குடிமக்கள், ஆட்சியில் அமர்ந்தவர்களுக்கு – அதாவது தாம் அளித்த ஒப்புதலுக்கு – அடங்கி நடந்துகொள்ளவேண்டும் என்ற கடமையும் உருவாகிவிடுகிறது. குடிமக்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய இத்தகைய கடமை உணர்வை தேர்தல் முறை உருவாக்குகிறது என்பதை நன்கு உணர்ந்த காரணத்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்கள் தேர்தல் முறையைத் தழுவிக்கொண்டனர்.
இறுதியாக, புரட்சியாளர்கள், புதிய ஆட்சியமைப்பில், தேர்ந்தெடுப்பவர்களுக்கும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் இடையில் தெளிவான வித்தியாசம் இருக்கவேண்டும் என்று நம்பினர். முடியாட்சியில் நிலவியதைப் போல, பிறப்பின் அடிப்படையில் “உயர்குடியினராக” இருக்கவேண்டும் என்ற கருத்தை அவர்கள் ஏற்கவில்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதாவது ஆட்சியில் அமர்பவர்கள், செல்வச் செழிப்பிலும், செயல்திறனிலும் தேர்ந்தெடுப்பவர்களைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருப்பதே ஆட்சிக்கு உகந்தது என்று நம்பினர். அத்தகையவர்களே நிர்வாக முறைகேடுகளில் ஈடுபடமாட்டார்கள் என்பதிலும் அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.
இதன் காரணமாகவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறிப்பிட்ட அளவு சொத்துடையவர்களாக இருக்கவேண்டும் என்ற வரையறை முதலில் உருவாக்கப்பட்டது. சில குடியரசுகளில், சொத்துடையவர்களில் இருந்து மட்டுமே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ள, வாக்களிப்பவர்களுக்கு குறிப்பிட்ட சொத்து மதிப்பு இருக்கவேண்டும் என்ற வரையறை உருவாக்கப்பட்டது. சில குடியரசுகளில் இரண்டு நிபந்தனைகளுமே முன்வைக்கப்பட்டன.
செல்வச் செழிப்பிலும் செயல்திறனிலும் உயர்வானவர்கள், சிலவேளைகளில் முறைகேடாக நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணராத அளவிற்கு புதிய அரசமைப்பை உருவாக்கியவர்கள் அசடுகளாக இருக்கவில்லை. அத்தகைய நிலை உருவானால், பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களுக்கான அங்கீகாரம் திரும்பப்பெறப்படும் என்ற எச்சரிக்கைப் பொறிமுறையாகவே, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்படவேண்டும் என்றும் வகுத்துக்கொண்டனர்.
ஆக, முதலாவதாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பிரதிநிதித்துவ அரசாங்கங்கள், முதலில் தம்மை ஜனநாயக அரசுகளாகவே கருதிக்கொள்ளவில்லை. குடியரசுகள் என்றே கருதிவந்தன. இத்தகைய அரசுகள் தோன்றி, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கழிந்தபிறகே அவற்றுக்கு “ஜனநாயகம்” என்ற பெயர் சூட்டப்பட்டது.
இரண்டாவதாக, முடியாட்சியிலிருந்து மாறுபட்ட ஆட்சியமைப்பை உருவாக்கவேண்டும் என்ற விழைவின்பாற்பட்டே, குடிமக்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் பெற்ற அரசாங்க அமைப்புகளே நியாயப்பாடுள்ள அரசமைப்புகளாக இருக்கமுடியும் என்ற கருத்தமைவின் காரணமாகவே தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை கையாளத் துவங்கினர். இதன் மறுபக்கமாக, தேர்வு செய்பவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் கடமைப்பாடு உடையவர்கள் என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மூன்றாவதாக, தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தேர்ந்தெடுப்பவர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருப்பதே ஆட்சிக்கும் அதிகாரத்திற்கு உகந்தது என்ற நம்பிக்கை. இதன் காரணமாக, செல்வச் செழிப்பும், செயல்திறனும் உள்ளவர்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான வரையறைகள் உருவாக்கப்பட்டன. இதன் மறுபக்கமாக, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தமது நிலையில் இருந்து தவறினால், அவர்களுக்கான அங்கீகாரம் திரும்பப்பெறப்படும் என்ற எச்சரிக்கையாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் மீண்டும் மீண்டும் நடத்தும் வழமை உருவாக்கப்பட்டது.
பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் தோற்றம் இவ்வாறாக இருந்ததென்றால், அவற்றின் ஆதாரமான அடிப்படைகளாக நான்கு அம்சங்கள் இருந்தன. அவை மூன்று அவதாரங்களை எடுத்துள்ளன. இந்த மாற்றங்களில், குடிமக்கள் அனைவரும் ஆட்சிப் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் சுழற்சி முறையில் பங்கேற்கவேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கையும் நடைமுறையும் காணாமல் போயின.
(தொடரும்… )
நன்றி: விகடன்